கிராமங்களை விழுங்கி உழவர்களை வெளியேற்றி "நாட்டு வளர்ச்சித் திட்டங்கள்" என்ற பெயரால் உலகமயம் கோலோச்சுவது இந்தியாவில் வாடிக்கையாகிவிட்டது. பெருந்தொழிற்சாலைகளுக்கான சரக்குந்துகளும் மகிழுந்துகளும் அதிவிரைவாகச் செல்ல சாலை விரிவாக்கங்கள் விளைநிலைகளை விழுங்கி வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக புதுதில்லிக்கு அருகில் உத்திரப்பிரதேசத்தின் நொய்டா பெருமாவட்டத்தில் உள்ள பட்டாபர்சோல் கிராம உழவர்களின் நிலங்கள் யமுனா அதிவிரைவுச் சாலை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்டன. வெள்ளைக்காரர்கள் காலத்தில் பிறப்பிக்கப்பட்ட நிலக் கையகப்படுத்தும் சட்டம் பொது நலனுக்காக என்ற பெயரால் தனியார் பெருமுதலாளிகள் கொள்ளைக்கு, விளைநிலங்களைக் கட்டாயமாகக் கைப்பற்றும் வாய்ப்பை வழங்குகிறது.

இச்சட்டத்தைப் பயன்படுத்தி, மாயாவதி அரசு பட்டாபர்சோல் உழவர் நிலங்களை குறைந்த விலையில் கட்டாயமாக வாங்கியது. சாலை விரிவாக்கம் என்ற பெயரால் வாங்கப்பட்ட இந்நிலங்களில் கணிசமான பரப்பு தனியார் மனை வணிகர்களிடம் பன்மடங்கு விலைக்கு விற்கப்பட்டது.

அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்ட தங்கள் நிலம், கண்முன்னாலேயே பன்மடங்கு விலைக்கு கைமாற்றப்படுவதைக் கண்டித்தும் தங்களுக்கு உரிய இழப்பீடு கோரியும் உழவர்கள் முற்றுகை, சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

உத்திரப்பிரதேச அரசு காவல்துறையை ஏவி, உழவர்களைத் தாக்கியது. உழவர் தலைவர் மன்வீர்சீங் தேவாட்டியா தலைமையில் ஒன்றுதிரண்ட உழவர்கள் காவல்துறையோடு மோதினர். காவல்துறை கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தி 2 உழவர்களைக் கொன்றதோடு, வீடு வீடாகத் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றது. இம்மோதலில் இரண்டு காவலர்கள் கொல்லப்பட்டனர். தேவாட்டியா மீது 20 வழக்குகள் பதிவு செய்து அவரைப் பிடித்துக் கொடுப்போருக்கு ரூ.50,000 பரிசு என்றும் உ.பி. அரசு அறிவித்துள்ளது. உத்திரப்பிரதேசத்தின் அனைத்து எதிர்க்கட்சிகளும் உழவர் போராட்டத்திற்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளன
Pin It