சோழியன் குடுமி வெறுமனே ஆடுவதில்லை
தமிழ்நாட்டின் முதன்முதலில் தோன்றிய பிராந்தியக் கட்சியான தி.மு.க. பல காலம் தேசிய அரசியலில் எந்த முனைப்பும் காட்டியதில்லை. ஏனெனில் பிராந்திய முதலாளிகளுக்காக பிராந்தியவாதத்தை அதிக அளவில் எழுப்பி அவர்களின் பேரம்பேசும் வாய்ப்பை அதிகப்படுத்துவதையே தனது தலையாயப் பணியாக இக்கட்சி கொண்டிருந்தது. அதற்காகவே இக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயல்பட்டனர்.
மத்தியில் தனிக்கட்சி ஆட்சி இன்றி கூட்டணி ஆட்சிதான் என்ற நிலைமை ஏற்பட்டதற்கு பின்பு இன்னும் கூடுதல் பங்கினை மாநில முதலாளிகளுக்காக பேரம்பேசி பெறும் வாய்ப்பு இக்கட்சிக்கு ஏற்பட்டது. தேசிய அரசியலில் கூடுதல் ஆர்வம் காட்டும் போக்கு இக்கட்சியில் உற்சாகத்துடன் தழைத்தோங்கத் தொடங்கியதற்கு வேறொரு காரணமும் உண்டு. அதாவது தி.மு.க.வின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் தற்போதய முதலமைச்சரின் மருமகன் மறைந்த முரசொலி மாறனின் குடும்பம் இச்சூழ்நிலையில் தானே ஒரு தொழில் நிறுவனமாக வளர விரும்பியது. அதன் விளைவாக அக்கட்சி அதன் இந்தி மற்றும் பிராமண எதிர்ப்பு போன்ற அடிப்படைக் கோட்பாடுகளைக் கூட தூக்கிஎறிந்து விட்டு அது இந்து, இந்தி, இந்துஸ்தான் பேசும் பி.ஜே.பி. கட்சியுடனும் கூட்டுச் சேர்ந்து அரசு அதிகாரத்தில் அமர்ந்தது, அமைச்சர் பொறுப்புகளையும் பெற்றது.
அப்போது நிலவிய தகவல் தொழில் நுட்பப் புரட்சிப் பின்னணியில் அகலத் திறந்திருந்த தனியார் தொலைக்காட்சி நிறுவனத் தொழிலில் துரிதகதியில் தனது குடும்பத்தினரை முதலமைச்சரின் மருமகனும் அப்போதய மத்திய அமைச்சருமான முரசொலி மாறன் ஈடுபடுத்தினார். தற்போது தென் மாநிலங்கள் அனைத்திலும் உள்ள பெரும்பாலான தனியார் தொலைக்காட்சிகள் அக் குடும்பத்தினருடையவைகளாகிவிட்டன. இதனால் முன்பெல்லாம் நாடாளுமன்ற அரசியலில் மிகுந்த அக்கறை காட்டாத தி.மு.க. தற்போது மிதமிஞ்சிய அக்கறையினை அதில் காட்டிவருகிறது. அதாவது பெயரில் அனைத்திந்திய என்ற வாசகத்தைக் கொண்டுள்ள அ.இ.அ.தி.மு.க.வைக் காட்டிலும் அனைத்திந்திய அரசியலில் ஆர்வம் காட்டுவதாக அத்தகைய வாசகத்தை தன் பெயரில் கொண்டிராத தி.மு.க. உள்ளது.
அரசியல் கட்சிகள் தொழில் நிறுவனங்கள் போல
அரசியல் குடும்பம் ஒன்று இவ்வாறு தாங்கள் நடத்தும் தொழில்களுக்கு தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்திக் கொண்டிருப்பது ஒரு புறம் இருக்க, அரசியலே ஒரு தொழிலாக ஆகிவிட்டதன் விளைவாக அரசியல் கட்சிகளும் தொழில் நிறுவனங்கள் போல் ஆகிவிடுகின்றன. தனியார் தொழில் நிறுவனங்கள் இந்த முதலாளித்துவ அமைப்பில் இலாபம் ஈட்டுவதற்காக செயல்படுகின்றன. தொழில் நிறுவனங்கள் போல் ஆகிவிட்ட அரசியல் கட்சிகளும் அரசியல் ஆதாயத்திற்காக அக்கட்சிகளை நடத்துகின்றன. ஆதாயத்திற்காக நடத்தப்படும் எந்த நிறுவனமும் அடிப்படையில் பொதுநல எண்ணத்தை பிரதிபலிப்பதில்லை. அதன் காரணமாக அவை மக்களின் நன்மதிப்பையும் பெறுவதில்லை. மக்களின் நன்மதிப்பு இல்லாத ஒரு அமைப்பு ஆக்கபூர்வமாக மக்களின் ஆதரவினைப் பெற முடியாது. அந்நிலையில் மக்களின் ஆதரவினை பல்வேறு இலவசத் திட்டங்களை அறிவித்தும் தேர்தல் சமயங்களில் கண்மண் தெரியாத அளவில் பொருட்செலவு செய்தும் வெற்றிகளை அக்கட்சிகள் சம்பாதிக்க வேண்டியுள்ளது. அதற்கான பணத்தை கட்சி என்ற பெயரில் செயல்படும் அந்தத் தனியார் நிறுவனங்களை ஒத்த நிறுவனங்கள் ஈட்டவேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
துறைகளைத் தேர்ந்தெடுத்ததின் பின்னணி
இந்த பின்னணியில் தான் பலரின் எதிர்பார்ப்புகளுக்கு விரோதமாக மத்திய அரசில் தி.மு.கழகம் தங்கள் கட்சிக்கென தேர்ந்தெடுத்த அமைச்சரவைத் துறைகள் அமைந்தன. தமிழ்நாட்டு விவசாயிகளின் ஒரு மிக முக்கியப் பிரச்னையே நதிநீர்ப் பங்கீடாகும். தமிழ்நாட்டின் விவசாயத்திற்கு நீர்வளம் ஊட்டும் முக்கிய நதிகளில் பல தமிழ்நாட்டில் உருவாவதில்லை. அதனால் நதிநீர் பங்கீட்டில் தன்னை சுற்றியுள்ள மாநிலங்கள் அனைத்தோடும் தி.மு.க அரசிற்கு பிரச்னைகள் இருந்தன. அந்நிலையில் நீர்வளத்துறை அமைச்சகத்தை அமைச்சர் அவையில் பங்கேற்ற இக்கட்சியினர் அப்போது காங்கிரஸ் கட்சிக்கு இருந்த நிர்ப்பந்த சூழ்நிலையை பயன்படுத்தி கோரிப்பெறுவர் என்ற எதிர்பார்ப்பு பலரிடம் இருந்தது. அந்த எதிர்பார்ப்பிற்கு மாறாக தி.மு.கழகத்தினர் நெடுஞ்சாலை மற்றும் கடல்வழிப் போக்குவரத்து, தொலைத்தொடர்பு போன்ற அமைச்சகங்களைப் பெற்றனர். அதாவது ஏற்கனவே நிறைய பெரிய பெரிய மீன்பிடிப் படகுகளுக்கு உரிமையாளராக இருக்கும் திரு.டி.ஆர்.பாலு அவர்கள் கடல்வழி மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்து அமைச்சராக ஆக்கப்பட்டார். தொலைகாட்சியோடு தொடர்புடைய தொலைத் தொடர்புதுறை முதலமைச்சர் அவர்களின் பேரனான தயாநிதி மாறனுக்கு வழங்கப்பட்டது.
இது போன்ற தங்களது அமைச்சரவையோடு நெருங்கிய தொடர்பினைக் கொண்டிருக்கக்கூடிய தொழில்களை தாங்களே சொந்தமாகவும் நடத்திக் கொண்டிருப்பவர்கள் நிச்சயம் எவ்வளவு அதிகபட்சம் தங்களது சொந்த தொழில்களின் வளர்ச்சிக்கு தங்களது துறையை பயன்படுத்த முடியுமோ அத்தனை தூரம் பயன்படுத்தவே செய்வர். இதற்கு பெரிய விசாரணை கமிசன்களோ விளக்கங்களோ தேவையில்லை. இது போன்ற அரசியல் சாதகம் பெறும் அமைச்சர்களின் குடும்பத்தினருக்குச் சொந்தமான நிறுவனங்கள் கட்சி என்ற பெயரில் தங்கள் நிறுவனங்கள் அனைத்தும் வளர்வதற்கான வசதிகள் செய்து தரும் தாய் நிறுவனத்திற்கு பொருள் உதவிகள் செய்ய கடமைப்பட்டவையாகவே உள்ளன. அத்தகைய உதவிகள் மக்கள் செல்வாக்கை இழந்த நிலையிலும் கட்சியை வெற்றி பெற செய்ய பயன்படுகின்றன.
உண்மைகளை வெளிக்கொணர்ந்த குடும்பச் சண்டை
இத்துடன் தயாநிதி மாறன் அவர்கள் குடும்பப் பத்திரிக்கையில் முதல்வரின் ஒரு பையனுக்கு எதிராக மக்களின் அபிப்ராயம் இருப்பதாகக் கருத்துக் கணிப்பு வெளியிட்டதைத் தொடர்ந்து மதுரையில் அவரது குடும்பப் பத்திரிக்கையான தினகரன் அலுவலகம், மதுரை தி.மு.க.வினால் ஏவிவிடப்பட்ட குண்டர்களால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் அமைச்சர் பொறுப்பில் இருந்தும் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்ட வேளையில் கட்சிக்கும் முதல்வர் குடும்பத்திற்கும் மிகவும் நம்பகமான வேறொருவர் அத்துறைக்கு அமைச்சராக நியமிக்கப்பட்டார். முறைகேடாக சம்பாதிப்பவர்களுக்கு இடையில் சண்டை வந்தால் உண்மைகள் வெளிவரும் என்பர். அவ்வாறு புது அமைச்சர் பொறுப்பேற்றவுடன் அவர் தயாநிதி மாறன் தொலைதொடர்புத் துறையில் பலகோளாறுகளை செய்திருப்பதாக புகார்கள் கூறினார். அதைப்போலவே ஸ்பெக்ட்ரம் விற்பனையில் 25000 கோடி வரை அரசிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக தயாநிதிமாறன் குடும்பத்தின் பத்திரிக்கை உள்பட அனைத்து பத்திரிக்கைகளும் செய்தி வெளியிட்டன. ஆனால் ஏற்கனவே கடைப்பிடித்த விதிமுறைகளின் படிதான் அந்த விற்பனை நடந்துள்ளது என்று கூறி அது ஒட்டுமொத்த மத்திய காங்கிரஸ் அரசால் மூடிமறைக்கப்பட்டது. எத்தனை மூடிமறைத்தாலும் இதனால் பலனடைந்த நிறுவனங்களின் நிதி ரீதியான ஆதரவு தேர்தல் சமயங்களில் சம்பந்தப்பட்ட கட்சிகளுக்கு பயன்படவே செய்யும். இந்த உதவியும் தேர்தலை சந்திக்க அக்கட்சிக்கு கூடுதலாக பயன்படும்.
மாதக் கணக்கில் நீடித்துக் கொண்டிருக்கும் மின்வெட்டு, மிகக் கடுமையான அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, மின்வெட்டு போன்றவற்றால் முழு அளவில் தொழில் நிறுவனங்கள் இயங்காது அதன் விளைவாக நிலவும் வேலை இழப்பு போன்றவற்றால் அல்லாடிக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டு மக்கள் அவர்களுடைய உண்மை மனநிலையை பிரதிபலிக்கும் விதத்தில் வாக்களித்தார்கள் என்றால் நிச்சயமாக தற்போதைய ஆளும் கட்சிக்கு எதிரானதாகவே அது இருக்கும். அவர்களுடன் உறவு கொண்டிருந்த சி.பி.ஐ., சி.பி.ஐ(எம்), பா.ம.க. போன்றவையும் அக்கூட்டணியை விட்டு விலகிவிட்ட நிலையில் தேர்தல் நியாயமாக நடைபெற்றால் நிச்சயம் தற்போதைய ஆளும்கட்சி வெற்றிபெறாது என்பது உறுதி. எனவே தான் தற்போதைய தேர்தலில் பணம் என்பது மிகப்பெரிய பங்கினை வகிக்கப்போகிறது என்ற கருத்து மறுக்க முடியாத விதத்தில் முன்னெழுந்து நிற்கிறது.
தேர்தலில் பணம் ஆற்றும் பங்கு:அன்றும் இன்றும்
காலங்காலமாக பணம் நம் நாட்டில் தேர்தல்களில் ஒரு பங்கினை ஆற்றியே வந்திருக்கிறது. ஆனால் அது ஆடம்பரமான பிரச்சார ஏற்பாடுகள் செய்வது, ஓடி ஆடிப் பணியாற்றுவதற்கு தொண்டர்களுக்கு வழங்குவது, வாக்களிக்க வருபவர்களுக்கு சாப்பாடு மற்றும் வாகன வசதிகள் செய்து தருவது போன்ற வகைகளிலேயே பெரும்பாலும் செலவிடப்பட்டது. ஆனால் இந்த வழிமுறைகளில் செலவிட்டு தேர்தல்கள் சுதந்திரமாக நடப்பதை தடுக்கும் போக்கை கணக்கில் கொண்டே தேர்தல் ஆணையத்தின் நடத்தை நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. ஆனால் தற்போது நேரடியாக வாக்கிற்கே பணம் கொடுப்பது என்ற போக்கு அறிமுகம் செய்யப்பட்டு அது விஞ்ஞானபூர்வமாக நடைமுறைப் படுத்தப்படுகையில் என்ன செய்வதென்று அறியாது தேர்தல் ஆணையமும் கையைப்பிசைந்து கொண்டு நிற்கவேண்டிய நிலையில் உள்ளது.
தனது தொண்டர்களை அணியணியாகத் திரட்டி பகுதிவாரியாகப் பிரித்து வாக்காளர்களிடம் சென்று தங்கள் கட்சிகளின் சாதனைகளையும், கொள்கைகளையும் விளக்கிக் கூறி வாக்கு கேட்கும் பழைய முறை இப்போது மாறிவிட்டது. தற்போது தொண்டர்களை அணிதிரட்டி பகுதிவாரியாக பிரித்து பகுதிப் பொறுப்பாளர்களை நியமித்து அவர்களிடம் பணம் மொத்தமாக கொடுத்து, அதனை 100 அல்லது 200 வாக்காளர்களுக்கு ஓரிரு தொண்டர்கள் என்ற வகையில் தொண்டர்களை நியமித்து அவர்கள் மூலம் வாக்காளர்களுக்கு வழங்கி, அதே கையோடு வாக்காளர்களின் செல்போன் எண்களையும் வாங்கிக்கொள்வது என்ற புதுமுறை அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது. வாக்குப்பதிவு தினத்தன்று மாலை 3 மணி வரை வாக்களிக்க வராத பணம் வாங்கிய வாக்காளர்களை செல்போனில் தொடர்பு கொண்டு அவர்களை வாக்களிக்க வற்புறுத்தி வாக்களிக்கச் செய்வது என்ற முற்றிலும் புதிய விஞ்ஞானபூர்வ அணுகுமுறை தற்போது வந்துவிட்டது. இனிமேல் மாதிரி சர்வே நடத்தி யார் வெற்றிபெறுவர் என்று தீர்மானிப்பது வாக்குப்பதிவு தினத்தன்று கருத்துக்கணிப்பு நடத்தி யார் வெற்றி பெறுவார் என்பதை முன்கூட்டியே அறிவிப்பது போன்றவற்றை செய்ய வேண்டிய அவசியமே இல்லை. இந்த முறை முழுமை பெற்ற ஒன்றாக ஆகிவிடும் வேளையில் வெற்றி பெறுவது யார் என்பது மட்டுமல்ல எத்தனை வாக்குகளில் ஒருவர் வெற்றிபெறுவார் என்பதையும் கூட துல்லியமாகத் தீர்மானித்துவிடலாம்.
மதுரை: புது ஊழல் முறைகளின் சோதனைச் சாலை
வடமாநிலங்களில் இது அத்தனை பிரபலமாக ஆகாத சூழ்நிலையில் தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழகத்தில் மதுரையில் சமீபத்தில் நடந்த இரண்டு சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் திருமங்கலத்தில் மிக சமீபத்தில் நடந்த இடைதேர்தலிலும் இது முழுமையாக அமுல்படுத்தப்பட்டது. இந்தப் போக்கினை அம்பலப்படுத்தவும் முறியடிக்கவும் பிற முதலாளித்துவ எதிர்க்கட்சிகளும் முழுமனதுடன் முன்வரவில்லை. ஏனெனில் இப்போக்குகளை இப்போதிருப்பதைக் காட்டிலும் சிறிய அளவில் அக்கட்சிகள் கடந்த காலத்தில் செய்தே உள்ளன. எனவே இதனை முழுவீச்சில் எதிர்கொள்ள வேண்டுமென்றால் ஆளும் கட்சியினர் எவ்வளவு செலவு செய்கிறார்களோ அதனைஒத்த விதத்தில் தாங்களும் செலவு செய்ய பணம் திரட்டுவதே ஒரே வழி என்ற மனநிலையே அவர்களிடமும் காணப்படுகிறது.
அதனால்தான் புதிதாக கட்சிகள் தொடங்கியுள்ள திரைப்பட நடிகர்களும் கூட அக்கட்சிகளின் சார்பாக போட்டியிட வாய்ப்புக் கேட்டுவரும் விண்ணப்பதாரர்களிடம் எவ்வளவு செலவு செய்வீர்கள் என்பதையே முதல் மற்றும் முக்கியக் கேள்வியாக முன்வைப்பதாகக் கூறப்படுகிறது. இந்த மூச்சுமுட்டும் சூழ்நிலையில் பணத்திற்கு விலைபோகாத மக்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் இது இடைத்தேர்தல் அல்ல பொதுத்தேர்தல் எனவே இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுத்ததைப் போல் அத்தனை அதிக தொகையை பரவலாக மாநிலம் முழுவதிலும் உள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் ஆளும் கட்சியினர் கொடுக்க முடியாது என்பதே.
நுணுக்கமாக திட்டமிட்டு கட்டப்படும் தேர்தல் எந்திரம்
தேர்தலுக்கு ஒரு கட்சி தன்னைத் தயார் செய்வது என்பதும் தற்போதைய ஆட்சியாளர்களால் முழு நேர்த்தியாகச் செய்யப்படுகிறது. தேர்தலை ஒரு கட்சி எதிர்கொள்ளும் போது அது ஒரு எந்திரத்தை சந்திக்கவேண்டும்; மற்றொரு எந்திரத்தை தயார்படுத்த வேண்டும். அதாவது அது அரசின் தேர்தல் எந்திரத்தை சந்திக்க வேண்டும். அரசின் தேர்தல் எந்திரம் தேர்தல் ஆணையம் பல அரசு ஊழியர்களை தற்காலிகமாக தன்பொறுப்பில் எடுத்து கொள்வதன் மூலம் உருவாக்கப்படுகிறது. அவ்வாறு தேர்தல் பணியாற்ற வரும் அரசு ஊழியர்களில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் அரசுப்பள்ளிகளின் ஆசிரியர்களே . அவர்களை முழு திருப்தியுடன் வைத்திருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தற்போதைய தமிழக அரசு மிகுந்த திறமையுடன் செய்து வருகிறது. அதாவது மற்ற அரசு ஊழியர்கள் அனைவரிடமும் அவர்கள் கடமை தவறியிருப்பதை சுட்டிக்காட்ட பல்வேறு வாய்ப்புகள் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக அரசு ஊழியர்களிடம் கோப்புகள் நகரவில்லை என்பதைக் கொண்டு அவரைக் கடமை தவறியவர் என்று எளிதில் குறை கூறிவிடலாம்.
ஆனால் ஆசிரியர்களைப் பொறுத்தவரையில் அவ்வாறு குறைகூறுவது எப்போது சாத்தியம் என்றால் பத்தாவது வகுப்பு மற்றும் மேல்நிலைப்பள்ளி தேர்வு முடிவுகள் வெளிவரும்போது மட்டும்தான். அதிலும் அந்த வகுப்புகளுக்கு பாடம்புகட்டும் ஆசிரியர்களை மட்டும்தான் கடமை தவறியவர்கள் என்று-அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் குறைவாக இருக்கும் போது-குற்றம் சாட்ட முடியும். அதுபோன்ற குற்றம் சுமத்துதல் நடந்துவிடக் கூடாது என்பதற்காக ஆசிரியர்களின் தொழிற்சங்கமாக செயல்படும் ஆசிரியர் அமைப்புகள் தேர்வுமுடிவுகள் வருவதற்கு முன்பே இந்தப்பாடத்தில் கேட்கப்பட்ட இந்த இந்த கேள்விகள் கடினமானவைகளாக இருந்தன. எனவே கருணை மதிப்பெண்கள் தேர்ச்சி விகிதத்தை பராமரிப்பதற்காக மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து விடுகின்றன. அப்படிப்பட்ட கருணை மதிப்பெண்கள் வழங்கப்படுவதன் மூலம் தேர்ச்சி விகிதம் ஆசிரியர்கள் மேல் குற்றம் சுமத்தப்படமுடியாத அளவிற்கு அரசால் பராமரிக்கப்படுகிறது.
இது குறுகிய கால அடிப்படையில் ஆசிரியர்களை பொது விமர்சனத்தில் இருந்து காப்பாற்றுவதற்காக செய்யப்படும் செயல். இதைத் தவிர நீண்டகால அடிப்படையிலும் அரசுப் பள்ளி ஆசிரியர் சமூகத்திற்கு ஆதரவாக அரசால் பல செயல்கள் செய்யப்படுகின்றன. அதாவது எந்தெந்தப்பாடங்களை தாங்கள் தங்களை சிரமப்படுத்திக் கொண்டு தயார் செய்து கற்பிக்க வேண்டியுள்ளதோ அந்தப் பாடங்களை எல்லாம் இவை கடினமானவை பாடத்திட்டத்தில் இருந்தே நீக்கிவிடுங்கள் என்று ஆசிரியர் அமைப்புகள் மூலமாக கோரிக்கை வைத்து நிறைவேற்றிக் கொள்வதும் நடைபெறுகிறது.
இதன் விளைவாக இன்று தமிழக மாணவர்களின் கல்வித்தரம் தரைமட்டமாகிக் கொண்டிருக்கிறது. அதாவது கல்வியில் தமிழகம் முன்னேறிய மாநிலங்களில் ஒன்று என்று காட்டப்படும் சூழ்நிலை தனியார் துறையில் கற்பிக்கப்படும், அதாவது பணம் செலவு செய்து பெறப்படும் கல்வியினாலேயே ஏற்படுகிறது. ஏழை, எளிய மக்கள் அணுக முடிந்த அரசுப் பள்ளிக் கல்வி எத்தனை மோசமானதாக இருக்கிறது என்பதை வெளிப்படுத்த தற்போது வெளிவந்துள்ள மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தின் முன்னாள் துணைவேந்தர் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு குழு வெளிப்படுத்திய புள்ளி விபரங்களே பொருத்தமான எடுத்துக்காட்டுகளாக உள்ளன. அவர் கொடுத்துள்ள அறிக்கையில் எவ்வாறு கணிதத்திலும், வாசிப்புத் திறனிலும் 5ம் வகுப்பிற்கு உட்பட்ட தமிழ்நாட்டு மாணவர்கள் அனைத்து மாநில மாணவர்களை காட்டிலும் பின் தங்கியவர்களாக உள்ளனர் என்பதை வெளிப்படுத்துகிறது.
அதாவது ஏழை எளிய மக்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு சில இலவசத் திட்டங்களை அறிவித்து அரைவயிற்று உணவு உண்ண வழி செய்துவிட்டால் போதும்; அவர்களது குழந்தைகள் பள்ளிக்கு சென்று படிப்பதைக் காட்டிலும் மதிய உணவு பெறுவதே முக்கியமானதாக ஆக்கப்பட்டுவிட்டால் போதும்; அவர்களுக்கு இதுபோன்ற இலவச திட்டங்களை எல்லாம் அளித்திருக்கிறோம் அது தவிர தேர்தல் சமயங்களில் அவர்கள் அளிக்கப்போகும் வாக்கிற்கு பணம் கொடுத்தால் போதும் அதை வைத்து அப்போதைக்கு அவர்களின் உண்மையான பிரச்னைகளை மறக்கச் செய்துவிடலாம் என்ற நிலை ஆளும் கட்சியால் திட்டவட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.
செய்திகளை தயாரித்து வழங்கும் ஊடகங்கள்
இவ்வாறு அரசின் தேர்தல் எந்திரத்தையும் பணப்பட்டுவாடா செய்யும் விதத்தில் தங்களது கட்சியின் தேர்தல் எந்திரத்தையும் தயார்படுத்தி வைத்திருப்பதன் மூலம் தமிழக நாடாளுமன்ற தேர்தலை ஆளும்கட்சி திட்டவட்டமாக எதிர்கொள்ளும் முனைப்புடன் உள்ளது. தங்கள் வசமுள்ள அரசு மற்றும் தனியார் பிரச்சார சாதனங்களின் மூலமாக நடந்ததை நடவாதது போலவும் நடவாததை நடந்ததாகக் காட்டும் விதத்திலும் முக்கியமான நிகழ்வுகளை முக்கியமற்றதாக காட்டவும், எந்த முக்கியத்துவமும் இல்லாதவற்றை முக்கியமானதாக காட்டவும் தற்போதைய ஆட்சியாளர்களால் முடிகிறது.
எந்த நோயாலும் எங்கும் எந்த உயிரிழப்பும் நடைபெறவில்லை என்று காட்ட அரசு மேற்கொண்ட முயற்சி சிக்கன் குனியா நோயினால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் அல்லாடிய வேளையில் வெளிப்பட்டது. மின் வெட்டின் கொடூரத்தை மக்கள் அனுபவித்துக் கொண்டிருந்த வேளையிலும் கூட அதிகாரப்பூர்வமாக மின்வெட்டு அறிவிக்கப்படாமல் மின்வெட்டு இல்லை என்று பலகாலம் மின்துறை அமைச்சர் அறிவித்துக் கொண்டிருந்தார். பேருந்து கட்டண உயர்வு தாழ்தளப் பேருந்து என்ற வகையில் பல புதிய பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டு மிகப்பெரும் அளவில் அமுலுக்கு வந்த பின்பும் அதிகாரப்பூர்வமாக கட்டண உயர்வின் வேதனையை சாதாரண மக்கள் தாங்கமுடியாது அனுபவித்துக் கொண்டிருந்த வேளையிலும் கட்டண உயர்வு அறிவிப்பு எதுவும் இல்லை. சமீபத்தில் உயர்நீதிமன்றத்திற்குள் நடந்த நீதிதுறையின் மீதான காவல்துறையின் தாக்குதலும் ஊடகங்கள் மூலமாக அவை விரும்பிய விதத்தில் திரித்துக் கூறப்பட்டன.
இச்சூழ்நிலையில் தேர்தல்கள் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எவ்வளவு தூரம் நியாயமற்றதாகவும் சுதந்திரமற்றதாகவும் நடைபெறுவதற்கான வாய்ப்புகளைக் கொண்டுள்ளன என்பதை ஜனநாயக அமைப்புகளும், சக்திகளும் நினைவிற்கொள்ள வேண்டும். இந்நிலையில் தேர்தலை சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடத்த பல நியதிகளைத் கொண்டு வருகிறோம் என்ற பெயரில் தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதாவது நகருக்குள் போஸ்டர்கள் ஒட்ட கூடாது; அலங்கார வளைவுகள் பேனர்கள் போன்றவை கூட்டம் நடத்தப்படுவதற்கு மூன்று மணிநேரத்திற்கு முன்பே அமைக்கப்பட வேண்டும்; கூட்டம் முடிந்தவுடன் உடனடியாக அவை அகற்றப்பட வேண்டும்; தேர்தலுக்குப் பயன்படுத்தும் வாகனங்களில் விளம்பரத் தட்டிகள் வைக்கப்பட கூடாது; தேர்தல் கூட்டங்கள் ஒவ்வொன்றிற்கும் ஆன அனுமதிக்கான விண்ணப்பம் மூன்று நாட்களுக்கு முன் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பது போன்ற நியதிகளை தேர்தல் ஆணையம் வலியுறுத்துகிறது. உண்மையில் இது தேர்தல் சுதந்திரமாக நடப்பதற்கு எவ்வகையிலாவது உதவுவதாக இருக்குமா?
இன்றைய நிலையில் வாக்குகளுக்கு பணம் கொடுப்பதே முறைகேடுகள் அனைத்திற்கும் சிகரமாக விளங்கும் தேர்தல் முறைகேடாக உள்ளது. அது ஒன்றே தேர்தல்கள் சுதந்திரமாக நடப்பதை தடுக்கும் மிக முக்கியமானதும் கேவலமானதுமான நடைமுறையாக அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டுள்ளது. அதைத் தடுப்பதற்கான உறுதியான நியதி எதுவும் தேர்தல் ஆணையத்தால் கொண்டுவரப்படவில்லை. மிக முக்கியமான அதைச் செய்வதை விட்டுவிட்டு மேலே கூறியவை போன்ற பல காலம் கட்சிகளால் கடைப்பிடிக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட பிரச்சார நடைமுறைகளுக்கு முட்டுக்கட்டை போடும் நியதிகள் உண்மையில் ஒன்றே ஒன்றைத்தான் செய்யவல்லவையாக இருக்கும். அதாவது இனிமேல் பணம்படைத்தோர் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும் என்பதையே அவை எழுதப்படாத சட்டமாக ஆக்கும். அதாவது குறைந்த பணச்செலவில் கொள்கை ரீதியாக போட்டியிடுவோரை முடக்கும் தன்மை வாய்ந்தவையே தற்போது தேர்தல் ஆணையம் புகுத்தியுள்ள நியதிகள். இந்த நோக்குடனேயே வேட்பாளர் வைப்புத் தொகையையும் சில ஆண்டுகளுக்கு முன்பு அது கர்ணகடூரமாக உயர்த்தியது.
வாக்குகளுக்கு பணம் கொடுப்பதை தடுக்க எந்த தீவிர நடவடிக்கையும் இல்லாமல் இது போன்ற கண்துடைப்பு நியதிகளை புகுத்துவது தேர்தலை பணம்படைத்தோருக்கான ஒரு கருவியாக பயன்படுத்தும் சூழ்நிலையை உருவாக்குமே தவிர கொள்கை ரீதியிலான போட்டிகளை ஊக்குவித்து தேர்தல்கள் நேர்மையாகவும் சுதந்திரமாகவும் நடைபெற அது எள்ளளவும் உதவாது. தேர்தல்கள் அடிப்படை மாற்றங்களை கொண்டு வருவதற்கு உதவக் கூடியவை அல்ல என்பது நிரூபணமான ஒன்று. இருந்தாலும் தங்களது அடிப்படையான பிரச்னைகளை தீர்ப்பதற்கான மக்கள் இயக்கங்கள் இடதுசாரி ஜனநாயக முற்போக்கு சக்திகளால் தட்டி எழுப்பப்படுவதற்கு முன்பு இத்தனை மோசமானதாக அது ஆவதை அனுமதிப்பது என்பது மிகவும் கேவலமான விசயமாகும்.
இன்று முதலாளித்துவ உலகம் முழுவதையும் சூழ்ந்துள்ள மிகக்கடுமையான பொருளாதார நெருக்கடி இந்தியாவையும் மிகக் கடுமையாகப் பாதித்துள்ளது. முன்பு உலகமயம், அந்நிய மூலதனத்தின் தங்குதடையற்ற வருகை போன்றவை தேசிய அளவிலான சிறுதொழில்களை பாதித்து வேலைவாய்ப்புகளை பெருமளவு குன்றச் செய்தது. அந்நிலையில் அதே உலகமயம் தகவல் தொழில்நுட்பம் போன்ற சில துறைகளில் உருவாக்கிய புது வேலைவாய்ப்புகளும் இப்போதைய இந்த நெருக்கடியினால் பறிக்கப்பட்டுள்ளன. இச்சூழ்நிலையில் பாடுபடும் மக்களின் வாழ்க்கை நிலையே முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல அவர்களின் எதிர்காலம் முற்றிலும் இருண்டதாக ஆகியுள்ளது.
பாடுபடும் மக்களைப் பொறுத்தவரையில் அரசாங்கங்கள் அவர்கள் கொதித்தெழுந்துவிடாது இருப்பதற்காக என்.ஆர்.ஜி.இ.ஏ வேலைத் திட்டம், பொதுவிநியோக முறையில் வழங்கப்படும் உணவுப்பொருட்கள் போன்றவற்றின் மூலம் அவர்களின் பிரச்னைகளை சிறிதளவு மட்டுப்படுத்தி வைத்திருக்கின்றன. ஆனால் இதுபோன்ற திட்டங்களின் பயன்களை பெறமுடியாத நிலையில் இருக்கும் மத்தியதர வர்க்கத்தை பொறுத்தவரையில் தாக்குதல் பன்மடங்கு கடுமையானதாக ஆகியுள்ளது. பொது சந்தையில் உயர்ந்துவரும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு அவர்களது வருவாயில் பெரும்பகுதியை கபளீகரம் செய்துவிடுகிறது. கல்வியில் தோன்றியுள்ள தனியார்மயம் நல்ல கல்வியைக் கொடுத்து தங்களது பிள்ளைகளை வேலைக்கு அனுப்பியே அவர்களது வாழ்க்கையை உத்திரவாதப்படுத்த முடியும் என்ற நிலையில் உள்ள மத்தியதர வர்க்கத்தை கூன்விழச் செய்துள்ளது.
உலகமயத்தின் விளைவாகத் தோன்றிய வேலை வாய்ப்புகள் நெருக்கடியினால் கடுமையாகச் சுருங்கியுள்ள நிலை இத்தனை செலவு செய்து படித்தும் தங்கள் பிள்ளைகள் வேலையில்லாமல் அலையும் நிலை உருவாகிவிடுமோ என்ற பரிதவிப்பில் அவர்களை ஆழ்த்தியுள்ளது. ஓரளவு வாங்கும் சக்தியுள்ளவர்களாக இருக்கும் அவர்களின் மீது அடுத்தடுத்து வரிச்சுமைகளை ஏற்றி அவர்களை பொருளாதார சிரமத்தில் ஆழ்த்தி அவர்களையும் பாட்டாளிகளாக ஆக்கும் போக்கு வெகுவேகமாக வளர்ந்து வருகிறது.
சூழ்நிலை இத்தனை கடுமையாக இருந்தாலும் அவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டி நிமிர்ந்து நிற்கச் செய்யும் சக்திகள் என்று எவையும் இல்லாத நிலையே நிலவுகிறது. இன்றைய முதலாளித்துவத்தின் மிகப்பெரும் வெற்றி எதுவென்றால் அது அதற்கு மாற்று ஒன்று உள்ளது என்ற நம்பிக்கையை ஏற்படுத்தவல்ல அமைப்புகளையும் கருத்துக்களையும் வெற்றிகரமாக இருட்டடிப்பு செய்துள்ளதுதான்.
இச்சூழ்நிலையில் நடைபெறவுள்ள இந்த நாடாளுமன்ற தேர்தல் மேலே நாம் விவரித்த பிரச்னைகளின் விளிம்பினைக் கூட தொட இயலாவண்ணமே நம் பார்வைக்கு எட்டியவரையில் உள்ளது. பிரச்னைக்கு காரணமான முதலாளிவர்க்கச் சுரண்டலை மூடிமறைக்கும் விதத்திலும் வர்க்க வேறுபாடு, நிலவும் வர்க்க ஆட்சி ஆகியவை மக்களின் கண்ணுக்கு தெரியாத வகையிலும் நாடு முழுவதும் பிராந்தியவாத, மதவாத, ஜாதியவாதப் போக்குகள் மக்கள் ஒற்றுமையை கூறுபோடும் விதத்தில் வளர்த்துவிடப்படுகின்றன. தேர்தலின் போக்குகளை தீர்மானிப்பது மேற்கண்ட பிளவுவாத அம்சங்களாகவே இருக்கப்போகின்றன என்பதை பறைசாற்றும் விதத்திலேயே ஹிந்திபேசும் மாநிலங்களில் நிலவும் அரசியல் சூழ்நிலை உள்ளது. பணபலம் மட்டுமே தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் என்பதையே கர்நாடகம், தமிழ்நாடு, ஆந்திரா போன்ற மாநிலங்களில் நிலவும் சூழ்நிலை வெளிப்படுத்துகிறது. இது ஜனநாயக அம்சங்கள் மங்கிமறைந்து தேர்தல்கள் மக்கள் விருப்பத்தை பிரதிபலிப்பவையாக இருக்கப் போவதில்லை என்பதையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
நமது கடமை
எனவே இன்றைய நிலையில் மக்கள் ஆதரவு இடதுசாரி ஜனநாயக சக்திகளின் கடமை மக்களை அவர்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் வாழ்க்கை பிரச்னைகள் அடிப்படையில் ஒன்று திரட்டி இயக்கம் கட்டுவதே ஆகும். அத்தகையை இயக்கப் பின்பலமே பாராளுமன்ற ஜனநாயகத்தின் எஞ்சியுள்ள சில ஜனநாயக சுவடுகளையும் காக்கவல்லதாகும். அதனை செய்வதன் மூலமே தேர்தலில் தொடங்கி சமூக வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் உழைக்கும் வர்க்க ஒற்றுமையை துண்டாடும் விதத்தில் கொண்டு வரப்படும் பிராந்திய, ஜாதி, மத வாதங்களை ஆக்கப்பூர்வமாக ஒழித்து கட்ட முடியும்.
இத்தகைய இயக்கப் பின்னணியே வாக்கிற்குப் பணம் கொடுத்து உழைக்கும் மக்களை களங்கத்திற்கு ஆட்படுத்தும் போக்கினை போக்கவல்லதாகும். இன்றைய நிலையில் இத்தகைய இயக்கங்களுக்கு உருக்கொடுக்க கூடியதாக எந்த இடதுசாரி கம்யூனிஸ்ட் அமைப்பும் இல்லை. அப்பெயர்களில் செயல்படும் கட்சிகள் அனைத்தும் இன்றுள்ள அரசியல் வர்க்கத்தின் பங்கும் பகுதிகளாக ஆகிவிட்டன. உண்மையில் அத்தகைய சக்தியாக ஆக விரும்பும் எந்த ஒரு லட்சிய பூர்வ அமைப்பும் அது ஒரு குறிப்பிடத் தக்க சக்தியை எட்டும்வரை தேர்தல் உள்பட கிடைக்கும் அனைத்து அரசியல் வாய்ப்புகளையும் பயன்படுத்தவே வேண்டியிருக்கும்.
வாசகர் கருத்துக்கள் |
rajank |
2009-08-07 05:16:00 இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
|
இன்றைய நிலையில் இத்தகைய இயக்கங்களுக்கு உருக்கொடுக்க கூடியதாக எந்த இடதுசாரி கம்யூனிஸ்ட் அமைப்பும் இல்லை. அப்பெயர்களில் செயல்படும் கட்சிகள் அனைத்தும் இன்றுள்ள அரசியல் வர்க்கத்தின் பங்கும் பகுதிகளாக ஆகிவிட்டன. thi. mu.ka kalakam ipothu worst aka irukirathu
|
|