ஆகம விதிகளை மீறக் கூடாது என்று நீதிமன்றத்தில் வழக்குப் போடும் சிவாச்சாரி யார்களே, இப்போது ஆகமவிதிகள் முறை யாகத் தான் நடக்கிறதா? (சென்ற இதழ் தொடர்ச்சி)
• ஒவ்வொரு கோயிலும் இப்போது பின்பற்றப் படும் ஆகம முறையைத்தான் பின்பற்ற வேண்டும் என்று பார்ப்பனர்கள் கூறுகிறார்கள். அப்படியானால் ஒரு கேள்வி. ஒவ்வொரு கோயிலிலும் இப்போதுள்ள ஆகமமுறை எப்போது தொடங்கியது? அதற்கு ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா? பழனி முருகன் கோயிலிலும் கருமாரியம்மன் கோயிலிலும் பார்ப்பன அர்ச்சகர்கள் ஆகமத்துக்கு எதிராக உள்ளே புகுந்ததுபோல் வேறு கோயில்களிலும் மாற்றங்கள் நிகழ்ந் திருக்காதா? ஒரு அர்ச்சகர் கோயிலுக்கு வர முடியாத நிலையில் வேறு கோயில் அர்ச்சகர் அவருக்கு பதிலாக வந்து பூஜைகள் செய்கிறார்.
• இந்தக் கோயிலின் ஆகம வழிபாடு முறை அவருக்கு தெரியுமா? அந்த முறைப்படிதான் பூஜை நடத்துகிறார் என்பதற்கு ‘சோதனை’கள் உண்டா? எல்லாவற்றுக்கும் ‘அத்தாரிட்டி’ - அய்யர், அய்யங்கார், சர்மா, சாஸ்திரிகள்தானா? அவர்கள் கூறுவதுதான் வழிபாட்டு முறையா? இதுதான் ஆகமங்களைப் பின்பற்றும் ஒழுங்குமுறையா?
• ஆகமம் ‘சூத்திரர்’கள் (அதாவது - மனு சாஸ்திரப்படி “பிராமணர்”களின் வைப் பாட்டி மக்கள்) கோபுரத்துக்கு வெளியே நின்றுதான் தரிசிக்க முடியும் என்று கூறுகிறது. நடு மண்டபம் வரை ‘ஸ்மார்த்த பிராமணர்களும்’ மகாமண்டபம் வரை சத்திரியரும் வைசியரும் செல்லலாம். சிவாச்சாரிகள் மட்டுமே ‘கர்ப்பகிரகம் வரை’ செல்லலாம் என்று கூறுகிறது. (இது பிற்காலத்தில் பார்ப்பனர்கள் நுழைந்த இடைச்செருகல் என்பாரும் உண்டு. ஆனாலும் இப்போதும் இந்த இழிவு ஆகமத்தின் பெயரால் நீடிக்கிறது) சமூகத்தில் தீண்டாமை சட்டப்படி குற்றம் என்கிறது சட்டம். ஆனால், பார்ப்பன மதத்தின் ஆகமம் கூறும் ‘தீண்டாமை’ மட்டும் குற்றமில்லை யாம்!
• அனைத்து ஜாதியினரும் கோயில்களுக்குள்ளேயே நுழையக் கூடாது என்பதுதான் ஆகமம் விதித்த கட்டளை. இதை மீறித்தான் 1947ஆம் ஆண்டு அனைத்து ‘இந்து’க்களும் கோயிலுக்குள் நுழையவும் கோயில் குளத்தில் குளிக்கவும் உரிமை வழங்கப்பட்டது.
• ஆகமத்துக்கு எதிராக பல மாற்றங்களை செய்தவர்தான் இராமானுஜர். திருவரங்கம் கோயிலில் ‘வைகாசன’ பூஜைகளை நிறுத்தி விட்டு ‘பஞ்சராத்திர பூஜை’ முறையை அறிமுகப்படுத்தியது இராமானுஜர்தான். திருவரங்கம் ‘ரெங்கநாதனிடம்’ அன்பைக் காட்டிய இஸ்லாமிய பெண், துலுக்க நாச்சியாரை திருவரங்கம் கோயிலுக்குள் அழைத்து வந்து வழிபாடு செய்யும் முறையைத் தொடங்கி வைத்தவர் இராமானுஜர் தான். (இந்த சடங்கு இப்போதும் தொடருகிறது) வைணவத் துறவியாக பார்ப்பனர்கள் கொண்டாடும் இராமானுஜரே ஆகமங்களை காலத்துக் கேற்ப மாற்றிக் காட்டியிருக்கிறார். ஆனால், அவர் வழிவந்ததாகக் கூறும் தென்கலையினர் ஆகமத்தை மாற்றாதே என்று நீதிமன்றத்துக்கு ஓடுகிறார்கள். பார்ப்பன இனவெறி மதத்தைத் தாண்டி நிற்கிறது.
• ஒவ்வொரு நாளும் பூஜையின்போது கடவுள் சிலை முன் காட்டப்படும் 12 உபச்சாரங்களில் இறுதி உபச்சாரமான ‘நிருத்தியம்’ உபச்சாரத்தை ‘தேவதாசிகள்’தான் செய்ய வேண்டும் என்பது ஆகம முறை. தேவதாசி ஒழிப்புச் சட்டம் வந்த பிறகு இந்த முறையும் ஒழிந்தது. இப்படி ஆகமங்கள் மாற்ற மடைந்து வந்திருக்கும் வரலாறுகள் உண்டு.
• “நாங்கள் எங்கள் நலனுக்காக எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்வோம்; எதை வேண்டுமானாலும் செய்வோம்; நாங்கள் சொல்வதே ஆகமம்; நாங்கள் விதிப்பதே வழிபாட்டு முறை. அட, சூத்திரப் பசங்களா! உங்களை மட்டும் ஒதுக்கியே வைப்போம். எங்கள் குடுமியைக்கூட உங்களால் அசைக்க முடியாது” என்று பார்ப்பனர்கள் இந்தத் தீர்ப்பைக் கொண் டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
பார்ப்பனப் பிறவி இறுமாப்பு - ‘பழக்க வழக்கம்’ மதச் சுதந்திரம் என்ற அரசியல் சட்டப் பிரிவுகளாலும் இவை எல்லாவற்றையும்விட அதிகாரம் படைத்த ‘ஆகமங்களாலும்’ இன்று வரை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது.
இது ‘பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்’ இந்த இழிவை ஒழிப்பதற்கே இறுதி மூச்சு அடங்கும் வரை பெரியாரின் போராட்டக் குரல் ஒலித்தது.
தி.மு.க. ஆட்சி அந்த முள்ளை அகற்றியிருக்கிறது!
தகவல்கள்: நீதியரசர் மகாராஜன் குழு பரிந்துரை
- விடுதலை இராசேந்திரன்