மகாத்மா காந்தி “தீண்டாமை ஒழிய வேண்டும், மதத்திலும், சமுதாயத்திலும் சீர்திருத்தம் ஏற்பட வேண்டும்” என்கிற கொள்கை உடையவர் என்று ஜனங்கள் நம்பி வந்தாலும், அவரது எண்ணத்திலும் பேச்சிலும் அதற்கு நேர் விரோதமான கொள்கையை உடையவராகவே காணப்படுகிறார். இம்மாதிரி எண்ணத்தோடும் பேச்சுகளோடும் மகாத்மா காந்தியின் பிரசாரம் நடைபெற நடைபெற தீண்டாமையும் மூடக் கொள்கைகளும் நாட்டில் வலிமையோடு நிலைபெற இடம் ஏற்படுமே அல்லாமல் ஒருக்காலும் இவை ஒழிக்கப்படவே முடியாது. எந்த தீண்டாமையை ஒழிக்க வேண்டுமென்று வெளிப்படையாய் பேசுகிறாரோ அதே தீண்டாமையை நிலைநிறுத்த அதே பேச்சை வியாக்கியானம் செய்வதில் பாடுபடுகிறார்.
இதைப்பற்றி முன் ஒரு தடவை கூட எழுதி இருக்கிறோம். உண்மையான தீண்டாமையை நமது நாட்டை விட்டு வெளிப்படுத்த வேண்டுமானால் மகாத்மா காந்தியையும் எதிர்த்து போராடித்தான் தீர வேண்டியிருக்கிறது.
தீண்டாமை இன்னது என்பது மகாத்மாவுக்கு இன்னமும் சரியாய் புலப்பட இல்லை என்பதே நமது அபிப்பிராயம். அவர் மதத்தின் பெயரைச் சொல்லிக் கொள்வதனால் பொது ஜனங்களிடம் உண்டாக்க கூடிய செல்வாக்கையும் உபயோகப்படுத்திக் கொள்ள நினைப்பதால் உண்மைத் தீண்டாமை தத்துவம், அவருக்கு புலப்பட மார்க்கமில்லாமல் போய்விடுகிறது. ஆதலால் மகாத்மாவினது தீண்டாமை விலக்கு கொள்கையைப் பின்பற்றுவோமானால் மறுபடி தீண்டாமை சேற்றிலே சறுக்கி விழுக வேண்டி வரும் என்றே நாம் பயப்படுகிறோம். வெகு காலம் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தும், மூடி மூடி வைத்தும் கூட உண்மையான தீண்டாமை விலக்கையும், சுயமரியாதையையும் உத்தேசித்து வெளிப்படையாய் இப்போது அவரை தாக்கித் தீர வேண்டியதாய் ஏற்பட்டு விட்டதற்கு வருந்துகிறோம்.
ஏனென்றால் சமீபத்தில் தமிழ்நாட்டிற்கு மகாத்மா காந்தி வரப்போகிறார். தீண்டாமையைப் பற்றி பேசும்போது அவரது வழக்கப்படியே தான் பேசித் தீருவார். அதன் மூலம் நமது எதிரிகளுக்கு அதிகமான பலம் ஏற்பட்டு நமது முயற்சியை ஒழிக்க அதை அவர்கள் உபயோகித்துக் கொள்ளுவார்கள். ஆதலால் அதை இப்போதே நாம் வெளிப்படுத்திவிடுவது மேலானதென்றே கருதுகிறோம். அதாவது மகாத்மா காந்தி நமது பார்ப்பனர்கள் சொல்லுவது போலவே நமது சமூக வாழ்வில் வருணாசிரம தர்மம் உண்டு என்றும், அது பிறவியிலேயே ஏற்பட்டது என்றும் அடிக்கடி சொல்லி வருகிறார். சமீபத்தில் மைசூரில் ஒரு கூட்டத்தில் தீண்டாமையைப் பற்றி பேசும் போதும் இந்து சமூகத்தில் வருணாச்சிரம தர்மம் உண்டு என்றும், அது நமது சமூகத்திற்கு அவசியம் என்றும், ஒவ்வொரு வர்ணத்தாருக்கு ஒவ்வொரு தர்மம் விதிக்கப் பட்டிருக்கிறதென்றும், அந்தந்த வர்ணத்தார் அந்தந்த தர்மத்தை செய்யும்போது அவரவர்கள் அம்மட்டிலுயர்ந்தவர்கள் என்றும், பிராமணன் அவன் தர்மத்தைச் செய்யும் போது உயர்ந்தவனாகிறதுபோலவே மற்ற வர்ணத்தானும் அவனவன் தர்மத்தைச் செய்யும்போது தான் உயர்ந்தவனாகிறான் என்பதாகவும் பேசியிருக்கிறார். இதைத்தான் பார்ப்பனர்களும் தாங்கள் பிறவியிலேயே உயர்ந்தவர்கள் என்பதற்கு காரணங்களாக சொல்லி வருகிறார்கள்.
வருணாசிரம தர்மத்தின் மூலமாகத்தான் நமது நாட்டில் தீண்டாமை கொள்கை அமுலில் இருந்து வருகிறதே ஒழிய வருணாசிரமம் இல்லாவிட்டால் தீண்டாமை கொள்கை பரவ மார்க்கமே கிடையாது. வருணாச்சிரம தர்மம் என்கிற ஒரு உடல் இல்லாவிட்டால் தீண்டாமை என்கிற உயிருக்கு ஆட்டம் இல்லை. யோசித்துப் பார்த்தால் இந்த கொள்கைத் தத்துவம் எவருக்கும் விளங்காமல் போகாது. அந்தந்த வருணத்தானுக்கு ஏற்பட்ட தர்மப்படி அவனவன் நடக்க வேண்டும் என்று மகாத்மா சொல்லுவதைத்தான் தூவார் மகாநாட்டு “பிராமண சம்மேளனமும் ஏகமனதாய் தீர்மானம் செய்திருக்கிறது.
மகாத்மா சொல்லும் வருணாச்சிரம தர்மம் அதுவல்ல என்பதற்கு வேறு ஆதாரம் என்ன? மகாத்மாவும் வருணாச்சிரமம் நான்கு என்று சொல்லுகிறார். அதாவது பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன் என்கிறார். தூவார் பிராமணச் சம்மேளனத்தாரும் மகாத்மா சொல்லும் ஆதாரத்தைக் கொண்டே க்ஷத்திரியனும், வைசியனும் உலகத்தில் இப்போது காணப்படவில்லை. ஆதலால் பிராமணன், சூத்திரன் ஆகிய இரண்டு வருணத்தார் மாத்திரம்தான் இருக்கிறார்கள் என்கிறார்கள். மறைந்துவிட்ட இரண்டு வருணத்தாரைப் பற்றி நமக்கு கவலை இல்லை. இருக்கிற இரண்டு வருணத்தாரைப் பற்றிய வரையிலாவது இவர்களுக்கு ‘மகாத்மா’ கற்பிக்கும் தர்மங்கள் என்ன? என்பதுதான் நமது கேள்வி.
வருணாசிரமத்தையும், அதன் தர்மத்தையும் ஒப்புக்கொள்ளுகிற ஒருவர் - அதுவும் வருணாசிரமமும், அதனதன் தர்மமும் மக்களுக்கு பிறவியிலேயே உண்டு என்று ஒப்புக்கொள்ளுகிற ஒருவர் - தீண்டாமை இல்லை என்று எப்படிச் சொல்ல முடியும். மகாத்மா கூறும் வருணாசிரமத்திற்கு பார்ப்பனர் கூறும் தர்மத்தைவிட வேறு ஏதாவது தர்மம் கற்பிக்க ஆதாரம் இருக்கிறதா? என்று பார்த்தால் நாளது வரை மகாத்மா அது வேறு என்று சொன்னதாகவே தெரியவில்லை. மைசூர் உபந்நியாசத்தில் ஜன சேவையே பிராமணர்களுடைய தர்மம் என்று சொல்லியிருக்கிறார். அது போலவே பிராமண சேவையே சூத்திரனுடைய தர்மம் என்றுதான் அவர் சொல்லி ஆக வேண்டும். பொது ஜன சேவைதான் பிராமண தர்மம் என்று சொன்ன சாஸ்திரங்களில்தான் “பிராமண சேவையே சூத்திர தர்மம்” என்று சொல்லப்பட்டிருக்கிறது.
பிராமணருக்குப் பொது ஜன சேவை செய்வதினால் மாத்திரம் உயர்வு உண்டாகுமானால் சூத்திரனுக்கு பிராமணசேவை செய்வதினால் மாத்திரம் தான் உயர்வு உண்டாகுமேயன்றி அதை விட்டு வேறு வேலை செய்வானானால் சூத்திரன் கண்டிப்பாய் தாழ்ந்தவனாகிறான் என்றுதான் மகாத்மாவின் தத்துவத்திற்குப் பொருள் ஏற்படுகிறது. இந்தப்படியானால் எந்த விதத்தில் பிராமணனுக்கு சம அந்தஸ்தாக சூத்திரன் இருக்க முடியும் என்று மகாத்மா கருதுகிறார் என்பது நமக்கு விளங்கவில்லை.
அன்றியும் “அந்தந்த வருணத்தார் அந்தந்த தருமத்தைச் செய்து வருகையில் ஒருவருக்கொருவர் உயர்வு தாழ்வு சொல்லிக் கொள்ள இடமேது” என்றும் பேசியிருக்கிறார். அப்படியானால், அந்தந்த வருணத்தாருக்குத் தனித்தனி தர்மம் ஏற்பட வேண்டிய அவசியம் என்ன என்பதைப் பற்றியாவது ஒரு வருணத்தான் மற்ற வருணத்தானுடைய தர்மத்தைச் செய்வதானால் கெடுதி என்ன என்பதைப் பற்றியாவது ஒரு வார்த்தையாவது இதுவரை மகாத்மா சொன்னதேயில்லை. “பொது ஜன சேவை என்பது பிராமணர்களுக்கு மாத்திரம் சொந்தமானது, அதற்காகவே அவர்கள் பிறந்திருக்கிறார்கள்” என்றும் மகாத்மா சொல்லுவாரானால் மகாத்மா அவர்கள் நான்கு வருணத்தில், தான் எந்த வருணத்தைச் சேர்ந்தவர் என்று சொல்ல முடியும்? மகாத்மா சொல்லுகிற கொள்கைப்படி பார்த்தால் அவர் பிறவியில் ஒன்று சூத்திரராயிருக்க வேண்டும் அல்லது வைசியராயிருக்க வேண்டும். எனவே சூத்திரனுக்கும் வைசியனுக்கும் ஏற்பட்ட தர்மத்தைச் செய்வதை விட்டுவிட்டு பிராமணனுக்கு ஏற்பட்ட தர்மமாகிய பொது ஜன சேவையை செய்வதற்கு மகாத்மாவுக்கு உரிமையேது? தன்னாலேயே நடத்திக் காண்பிக்க முடியாத வருணாசிரம தர்மத்தை மற்றவர்களை ஏற்று நடத்தும்படி சொல்வதில் ஏதாவது பொருளுண்டா?
இவைகளைப் பற்றி இவ்வளவு தூரம் எழுதினது தீண்டாமை விஷயத்தில் மகாத்மாவுக்கு உள்ள குழப்பத்தை காண்பிக்கவும், அவரும் குருட்டு நம்பிக்கையில் ஈடுபட்டவரே அல்லாமல் பகுத்தறிவுக்கு மதிப்புக் கொடுப்பவராகப் புலப்படவில்லை என்பதையும் காட்டுவதற்குமே எழுதுகிறோமே அல்லாமல் அவர் மீது குறை கூறுவதற்காக அல்ல. அன்றியும் மகாத்மா நாட்டிற்கும், மக்களுக்கும் செய்திருக்கும் அநேக நன்மைகளைப் பற்றி நமக்கும் மகாத்மாவின் அந்தரங்க சிஷியர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கட்கும் யாதொரு வித்தியாசமும் இல்லை. எனினும் இத் தீண்டாமை விஷயத்திலும், வருணாசிரம விஷயத்திலும் மகாத்மாவுக்கு தெளிவு ஏற்பட்டிருக்குமானால் நமது சமூகத்திற்கு எவ்வளவோ நன்மை உண்டாகும் என்கிற ஆசையே இதைப் பற்றி மேலும் மேலும் எழுதி வரவும் தூண்டுகிறது.
(குடி அரசு - தலையங்கம் - 07.08.1927)