I

சூத்திரர்களது தோற்ற மூலத்தைக் கண்டுபிடிப்பதும், அவர்கள் இழிநிலைக்குத் தள்ளப்பட்டதற்கான காரணங்களை ஆராய்வதுமே இந்த ஆய்வுக்கட்டுரையின் நோக்கமாக இருந்தது. வரலாற்று ஆதாரங்களையும், முற்காலத்தையும் தற்காலத்தையும் சேர்ந்த பல்வேறு எழுத்தாளர்கள் முன்வைத்திருக்கும் கோட்பாடுகளையும் பரிசீலித்த பிறகு நான் ஒரு புதிய கோட்பாட்டை முன் வைத்திருக்கிறேன்.

ambedkar periyarமுந்தைய அத்தியாயங்களில் இந்தக் கோட்பாடு பகுதி பகுதியாக முன்வைக்கப்பட்டிருக்கிறது; ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியாக அடித்தளமிடும் பொருட்டே இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கோட்பாடு என்ன என்பதை முற்றிலுமாகவும், பூரணமாகவும் புரிந்துகொள்ளும்பொருட்டு இங்கு இப்பகுதிகள் ஒன்று கூடிச் சேர்க்கப்பட்டுள்ளன. அதனைப் பின்கண்டவாறு சுருக்கமாகக் கூறலாம்:

1)  சூத்திரர்கள் சூரிய வம்சத்தைச் சேர்ந்த ஆரிய இனங்களில் ஓர் இனத்தினராக இருந்தனர்.

2) சூத்திரர்கள் இந்தோ – ஆரிய சமுதாயத்தில் சத்திரிய வருணத்தினர் அந்தஸ்தைப் பெற்றிருந்தனர்.

3) பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள் ஆகிய மூன்று வருணத்திரை மட்டும் ஆரிய சமுதாயம் அங்கீகரித்த ஒரு காலம் இருந்தது. அப்போது சூத்திரர்கள் ஒரு தனி வருணமாக இல்லாமல் சத்திரிய வருணத்தின் ஒரு பகுதியாக இருந்து வந்தனர்.

4) சூத்திர மன்னர்களுக்கும் பிராமணர்களுக்கும் இடையே தொடர்ந்து பகைமையும், சச்சரவும், மோதலும் இருந்து வந்தன. இவற்றில் பிராமணர்கள் பல கொடுமைகளுக்கும் அவமதிப்புக்கும் ஆளாயினர்.

5) சூத்திரர்களின் அடக்குமுறைகளாலும் ஒடுக்குமுறைகளாலும் அவர்கள் பால் வெறுப்பும் பகைமையும் கொண்ட பிராமணர்கள் சூத்திரர்களுக்குப் பூணூல் சடங்கு நடத்தித்தர மறுத்துவிட்டனர்.

6) பூணூல் அணியும் உரிமையை இழந்ததன் காரணமாக சூத்திரர்கள் சமூக ரீதியில் இழிவுபடுத்தப்பட்டனர். வைசியர்களுக்குக் கீழ்நிலைக்குத் தள்ளப்பட்டு நான்காவது வருணமாயினர்.

இந்தக் கோட்பாடு எந்த அளவுக்குச் செல்லுபடியாகத்தக்கது என்பதை இப்போது மதிப்பிட வேண்டும். பொதுவாக எப்போதுமே ஆசிரியர்கள் இதனை மற்றவர்கள் செய்யும்படி விட்டுவிடுவார்கள். ஆனால் நான் இந்த நடைமுறையிலிருந்து விலகிச்சென்று, என் கோட்பாட்டை பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்த முன் வந்துள்ளேன். இவ்வாறு நான் செல்வதற்கு என் கோட்பாட்டை நிலைநாட்ட அது எனக்கு வாய்பளிப்பதே காரணமாகும்.

II

என் கோட்பாட்டை ஆட்சேபிப்பவர்கள் பின்கண்டவாறு வாதிக்கின்றனர். மகாபாரதத்தில் பைஜவான் ஒரு சூத்திரன் என்று வருணிக்கப்பட்டிருக்கிறது; இந்த ஒரே ஒரு சான்றின் அடிப்படையில் தான் உங்கள் கோட்பாடு முழுவதுமே அமைந்துள்ளது; பைஜவனன் சுதாசனின் வம்சத்தில் வந்தவன் என்பது ஐயத்துக்கிடமற்றமுறையில் நிரூபிக்கப்படவில்லை.

பைஜவான் ஒரு சூத்திரன் என்று வருணிக்ககப்படுவது மகாபாரதத்தில் ஒரே ஓர் இடத்தில் மட்டும்தான் வருகிறது. வேறு எந்த இடத்திலும் அது இடம்பெறவில்லை. அப்படியிருக்கும்போது இத்தகைய பலவீனமான ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு கோட்பாட்டை எப்படி ஏற்க முடியும் என்று கேட்கின்றனர். சங்கிலியின் ஒரு கண்ணி பலவீனமாக இருந்தால் சங்கிலி முழுவதுமே பலவீனமாகத்தானே இருக்கும் என்பது அவர்களது வாதம். இத்தகைய எளிதான வாதங்களின் மூலம் என் கோட்பாட்டை அலட்சியப்படுத்தவோ, அழித்திடவோ முடியாது என்ற திடநம்பிக்கை எனக்கு உண்டு.

முதலாவதாக, ஒரே ஒரு சான்றை வைத்து மட்டும் ஒரு கோட்பாட்டை ஆதாரப்படுத்த முடியாது, நிலைநாட்டமுடியாது என்பதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. சாட்சியம் மதிப்பிடப்பட வேண்டுமே தவிர எண்ணப்படக்கூடாது என்பது சான்றுச் சட்டத்தின் பிரசித்தமான சித்தாந்தம். ஒவ்வொரு தனிப்பட்ட சாட்சியத்தின் அல்லது எல்லா சாட்சியங்களது ஒட்டுமொத்த மதிப்பைவிட சாட்சிகளின் எண்ணிக்கை என்பது குறைந்த முக்கியத்துவமுடைய அம்சமேயாகும். ஐயப்படுவதற்குக் காரணம் ஏதுமில்லை.

மகாபாரதத்தின் ஆசிரியர் ஒரு தவறான வருணனையை அளிக்க வேண்டிய அவசியமில்லை. இவ்வாறு நீண்டகாலத்திற்கு முன் அவர் எழுதியதற்கு எத்தகைய உள்நோக்கமோ அல்லது பாரபட்சமோ கற்பிக்க வேண்டியதில்லை. ஆசிரியர் உண்மையைத்தான் பதிவு செய்துள்ளார் என்ற ஒரே முடிவுக்குத்தான் எவரும் வரமுடியும்.

ரிக் வேதத்தில் பைஜவனன் சூத்திரன் என்று குறிப்பிடப்படாதது மகாபாரதத்தில் அவன் சூத்திரன் என்று கூறப்பட்டிருப்பதை எவ்வகையிலும் பொய்யாக்கிவிடாது. ரிக்வேதத்தில் பைஜவனன் பற்றிய வருணனையில் சூத்திரன் என்ற சொல் இடம் பெறாததற்குப் பல விளக்கங்கள் அளிக்க முடியும். முதல் விளக்கம் ரிக்வேதத்தில் இத்தகைய வருணனையை எதிர்பார்ப்பது தவறு என்பதாகும். ரிக்வேதம் ஒரு சமயநூலில் எதிர்பார்க்க முடியாது. இந்நூலுக்கு இது சம்பந்தமில்லாதது. ஆனால் அதேசமயம் இத்தகைய வருணனையை மகாபாரதம் போன்ற ஒரு வரலாற்று நூலில் எதிர்ப்பார்க்கலாம்; இதில் தவறு ஏதும் இல்லை;

சுதாசன் சம்பந்தமாக சூத்திரன் என்ற சொல் அடிக்கடி பயன்படுத்தப்படாமலிருப்பதற்கு அவ்வாறு அடிக்டி பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்பதுதான் அதற்குக் காரணம் என்று கருதுகிறேன். குலம், கோத்திரம், இனம் முதலான வருணனைகள் சராசரியான மனிதர்கள் விஷயத்தில்தான் அவசியமானவை; புகழ்பெற்ற மனிதர்கள் விஷயத்தில் அவை அவசியமற்றவை. சுதாசன் தன் காலத்தில மிகப் பிரபலமானவனாகத் திகழ்ந்தான் என்பதில் ஐயமில்லை. இதனை வெறும் யூகம் என்று தள்ளிவிட முடியாது. இது சம்பந்தமாக எத்தனை எத்தனையோ வரலாற்று நிகழ்ச்சிகளைக் கூறமுடியும்.

புத்தர்காலத்தில் வாழ்ந்த பிம்பிசாரன், பாசெனதி ஆகிய இரு மன்னர்களை எடுத்துக்கொள்வோம். அவர்களது காலத்தில் ஆட்சிபுரிந்துவந்த இதர எல்லா மன்னர்களும் அந்நாளைய நூல்களில் அவர்களது கோத்ரப் பெயரால் குறிப்பிடப்பட்டிருக்கின்றனர். ஆனால் இந்த இரு மன்னர்கள் மட்டும் அவர்களது சொந்தப் பெயரால் குறிப்பிடப்பட்டிருக்கின்றனர். இதனைக் கவனித்த ஓல்டன்பர்க் அவர்கள் மிகவும் புகழ்பெற்றவர்கள், எனவே அவர்களது கோத்திரப் பெயர்களால் அவர்களை இனம் காட்டவேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்று இதற்கு விளக்கம் தந்திருக்கின்றார்.

III

மகாபாரதத்தில் இடம்பெற்றிருக்கும் ஒரே ஒரு வாசகத்தையோ அல்லது சுதாசனுடன் பைஜவனுக்குள்ள உறவையோ அடிப்படையாகக் கொண்டுதான் என் கோட்பாடு அமைந்துள்ளது என்பது நினைப்பது தவறாகும். அப்படி ஒன்றுமில்லை. எனது கோட்பாட்டுக்கு ஒரே ஒரு சங்கிலி மட்டும் ஆதாரமாக இல்லை. எனவே பலவீனமான கண்ணிகொண்ட சங்கிலி வலுவாக இருக்காது என்ற வாதம் என் கோட்பாட்டுக்குப் பொருந்தாது. எனது கோட்பாடு பல இணை சங்கிலிகளில் ஒன்றிலுள்ள கண்ணி பலவீனமடைவதால் எனது கோட்பாடு வலுவிழந்துவிடாது. ஒரு சங்கிலியிலுள்ள ஒரு கண்ணி பலவீனமடையும்போது முழுப்பளுவும் சிதைந்துவிட்டது என்று முடிவுக்கு வருவதற்கு முன்னர், மற்ற சங்கிலிகளால் பளுவைத் தாங்க இயலவில்லை என்பதை நிரூபித்தாக வேண்டும்.

பைஜவனன் சூத்திரன் என்று வருணிக்கப்பட்டிருப்பதும், பைஜவன ரிக்வேத சுதாசுடன் இணைக்கப்பட்டிருப்பது மட்டுமே எனது கோட்பாட்டைத் தாங்கி நிற்கும் சங்கிலி அல்ல. வேறுபல சங்கிலிகளும் இருக்கின்றன. ஆதியில் மூன்று வருணங்கள் மட்டுமே இருந்தன என்பதையும், சூத்திரர்கள் ஒரு தனி வருணமாக இருக்கவில்லை என்பதையும் சதபத பிராமணமும் தைத்ரீய பிராமணமும் ஒப்புக்கொண்டிருப்பது இந்த சங்கிலிகளில் ஒன்றாகும். சூத்திரர்கள் மன்னர்களாகவும் அமைச்சர்களாகவும் இருந்தனர் என்பது இரண்டாவது சான்றாகும். மூன்றாவது சான்று உபநயனம் செய்துகொள்ள சூத்திரர்கள் ஒரு சமயம் உரிமை பெற்றிருந்தனர் என்பதாகும். இவை எல்லாம் முதல் சங்கிலி உடைத்தால் அதனால் ஏற்படக் கூடிய சகல கூடுதல் சுமையையும் தாங்கவல்ல வலுவான சங்கிலிகளாகும்.

சான்றுகளைப் பொறுத்தவரையில், கண்கூடாக மெய்ப்பித்துக் காட்டும் வகையிலான முழு நம்பகத் தன்மையை எதிர்பார்ப்பது கடினம். எனது கோட்பாடு முழு நம்பகத்தன்மை வாய்ந்தது என்று நான் உரிமை கொண்டாடவில்லை. எனினும் என் கோட்பாட்டுக்கு ஆதரவாக நான் முன்வைக்கும் சான்று நேரடியானதும், கால இடச்சூழல் சம்பந்தப்பட்டதுமாகும் என்பதைக் கூறிக் கொள்ள விரும்புகிறேன்; இதில் முரண்படும் இடங்களில் வலுவான சாத்தியக் கூறுகள் அதற்கு ஆதாரமாக இருக்கும்.

IV

நான் முன்வைத்திருக்கும் கோட்பாடு எத்தகைய வலிமைவாய்ந்தது என்பதைக் காட்டியிருக்கிறேன். இந்தக் கோட்பாடு ஏற்கத்தக்கது என்பதை இப்போது காட்டுகிறேன். ஒரு கோட்பாடு ஏற்கத்தக்கதுதானா என்பதை மதிப்பிடுவதற்கு ஒரு சோதனை இருக்கிறது என்று கருதுகிறேன். ஏற்கத்தக்கது என உரிமை கொண்டாடும் ஒரு கோட்பாடு ஒரு தீர்வை கூறுவதோடு அது முன்வைக்கும் தீர்வு அது சிக்கறுத்து விட்டதாகக் கூறும் பிரச்சினையைச் சுற்றியுள்ள புதிர்களுக்குப் பதிலிறுப்பதாகவும் இருக்க வேண்டும். இத்தகைய சோதனையைத்தான் என் கோட்பாடு விஷயத்தில் கையாளப்போகிறேன்.

1) சூத்திரர்கள் ஆரியரல்லாதோர் என்றும், ஆரியர்களிடம் பகைமை கொண்டவர்கள் என்றும், ஆரியர்கள் அவர்களை வென்று அடிமைகளாக்கிவிட்டார்கள் என்றும் கூறப்படுகிறது. அப்படியானால் யஜூர்வேத, அதர்வண வேத ரிஷிகள் எவ்விதம் அவர்களை வாழ்த்தினார்கள், அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார்கள்?

2) வேதங்களைக் கற்கும் உரிமை சூத்திரர்களுக்கு இல்லை என்று கூறப்படுகிறது. அப்படியானால் சூத்திரனான சுதாசன் எங்ஙனம் ரிக் வேதப் பாசுரங்கள் இயற்றினான்?

3) வேள்விகள் நடத்தும் உரிமை சூத்திரர்களுக்கு இல்லை என்று கூறப்படுகிறது. அப்படியானால் சுதாசன் எவ்விதம் அசுவமேத யாகம் நடத்தினான்? சதபத பிராமணம் யாகம் நடத்த உரிமை படைத்தவனாக சூத்திரனை ஏன் பாவிக்க வேண்டும்? அவன் எவ்வாறு அழைக்கப்பட வேண்டும் என்பதற்கான விதிமுறையை ஏன் வகுத்துத் தர வேண்டும்?

4) உபநயனம் செய்துகொள்ளும் உரிமை சூத்திரர்களுக்கு இல்லை எனக் கூறப்படுகிறது. இவ்வாறு ஆரம்பத்திலிருந்தே இருந்திருக்குமானால் இதுகுறித்து ஏன் சர்ச்சை எழவேண்டும்? உபநயனம் செய்து கொள்ளும் உரிமை சூத்திரனுக்கு உண்டு என பாதரியும் சங்கர கணபதியும் எதற்காகக் கூற வேண்டும்?

5) சொத்துகள் சேகரிக்க சூத்திரர்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. அவ்வாறாயின் சூத்திரர்கள் செல்வ வளமுடையவர்களாக இருக்கிறார்கள் என்று மைத்ராயணி, கதக சம்ஹிதைகள் எப்படிக் கூறுகின்றன?

6) சூத்திரன் நாட்டின் ஓர் அதிகாரியாக வருவதற்குத் தகுதியற்றவன் என்று கூறப்படுகிறது. அப்படியானால் சூத்திரர்கள் மன்னர்களுக்கு அமைச்சர்களாக இருந்த விவரங்களை மகாபாரதம் எதற்காகத் தர வேண்டும்?

7) மூன்று வருணத்தாருக்கும் குற்றேவலனாக ஊழியம் செய்வதே சூத்திரனின் கடமை என்று கூறப்படுகிறது. அப்படியானால் சுதாசன் போன்ற சூத்திர மன்னர்களும், சாயனர் குறிப்பிடும் ஏனைய சூத்திர மன்னர்களும் எங்கனம் தோன்றினார்கள்?

8) சூத்திரனுக்கு வேதங்கள் கற்க உரிமையில்லை, உபநயனம் செய்து கொள்ள உரிமை இல்லை, வேள்வி நடத்த உரிமை இல்லை என்றால் அவ்வாறு வேதங்கள் கற்கும் உரிமை அவனுக்கு ஏன் இல்லை, உபநயனம் செய்து கொள்ளும் உரிமை அவனுக்கு ஏன் வழங்கப்படவில்லை, வேதங்கள் கற்கவும் வேள்விகள் நடத்தவும் அவனுக்கு ஏன் உரிமை அளிக்கப்படவில்லை?

9) சூத்திரர்கள் உபநயனம் செய்துகொள்வதோ, வேதங்கள் கற்றுக் கொள்வதோ, வேள்விகள் நடத்துவதோ ஆகிய இவற்றால் சூத்திரனுக்குப் பலன் இருக்கிறதோ இல்லையோ, இவற்றால் நிச்சயமாக பிராமணர்களுக்கு ஆதாயம் இருக்கிறது, ஏனென்றால் சமயச் சடங்குகள் நடத்தும், வேதங்கள் கற்றுத்தரும் ஏக உரிமை அவர்களுக்கு மட்டுமே உண்டு.

10) எனவே, சூத்திரர்கள் உபநயனம் செய்து கொள்வதற்கும் வேள்விகள் நடத்துவதற்கும், வேதங்கள் கற்றுக் கொள்வதற்கும் உரிமை அளிப்பதன் மூலம் பிராமணர்கள் ஏராளமாகக் கட்டணங்களை வசூலிக்க முடியும். இவ்வாறு இந்த உரிமைகளை சூத்திரர்களுக்கு அளிப்பதால் பிராமணர்களுக்கு எத்தகைய தீங்கும் நேராத போது, அவர்களது வருமானம் அதிகரிக்கும்போது இவற்றை சூத்திரர்களுக்கு மறுப்பதில் பிராமணர்கள் ஏன் மிகவும் பிடிவாதமாக இருக்க வேண்டும்?

11) உபநயனம் செய்து கொள்வதற்கும், வேள்விகள் நடத்துவதற்கும், வேதங்கள் கற்றுக் கொள்வதற்கும் சூத்திரனுக்கு உரிமை இல்லையென்றாலும் கூட பிராமணர்கள் அந்த உரிமையை அவனுக்குத் தாராளமாக வழங்கலாம். அப்படியிருக்கும்போது இந்த விஷயங்கள் தனிப்பட்ட பிராமணர்களின் விருப்பத்துக்கு ஏன் விடப்படவில்லை? இந்த தடைசெய்யப்பட்ட காரியங்களை ஒரு பிராமணன் செய்தால் அவனுக்கு ஏன் தண்டனை அளிக்கப்பட வேண்டும்?

இந்தப் புதிர்களுக்கு என்ன விளக்கம் அளிக்க முடியும்? வைதிக இந்துவோ அல்லது தற்கால ஆராய்ச்சியாளரோ, இந்தப் புதிர்களை விடுவிப்பதற்கு எந்த முயற்சியும் எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. இத்தகைய புதிர்கள் இருக்கின்றன என்பதை உண்மையில் அவர்கள் அறிந்திருப்பதாகவே தெரியவில்லை. வைதிக இந்து இதைப் பற்றி எவ்வகையிலும் கவலைப்படவில்லை. சூத்திரன் புருஷனின் பாதத்திலிருந்து பிறந்தவன் என்ற புருஷ சூக்தத்தின் தெய்வீக விளக்கத்துடன் அவன் திருப்தியடைந்து விடுகிறான்.

இதேபோன்று இன்றைய ஆராய்ச்சியாளனும் சூத்திரன் அவனது பிறப்பில் ஆரியனல்லாத பூர்வீக குடிமகன்; எனவே, ஆரியன் அவனுக்கு வேறுபட்டதொரு சட்டத் தொகுப்பை வழங்கியிருப்பது முற்றிலும் இயல்பே என்ற அனுமானத்துடன் மனநிறைவடைந்து விடுகிறான். இந்த வகுப்பாரில் எவரும் சூத்திரன் சம்பந்தப்பட்ட பிரச்சினையுடன் பிணைந்த புதிர்களைப் புரிந்து கொள்வதற்கோ, இந்தப் புதிர்களைச் சிக்கறுக்கும் வகையில் சூத்திரர்களின் நிலை குறித்த ஒரு கோட்பாட்டை உருவாக்குவதற்கோ எத்தகைய அக்கறையும் எடுத்துக் கொள்ளாதது வருந்தத்தக்கதாகும்.

எனது ஆய்வுக்கட்டுரையைப் பொறுத்தவரையில் இந்தப் புதிர்களுக்கு அது விடை காணுவதைப் பார்க்கலாம்: (1)முதல் (4)ஆவது இனங்கள் சூத்திரர்கள் எவ்வாறு அரசர்களாகவும், அமைச்சர்களாகவும் இருக்க முடியும் என்பதையும், ரிஷிகள் அவர்களை ஏன் போற்றிப் புகழ்கிறார்கள் என்பதையும், அவர்களது நல்லெண்ணத்தைப் பெற எதற்காக விரும்புகிறார்கள் என்பதையும் விளக்குகின்றன.

இனங்கள் (5)ம், (6)ம் சூத்திரர்களின் உபநயனம் பற்றி ஏன் சர்ச்சை எழுந்தது என்பதையும், சட்டம் ஏன் இந்த உரிமையை சூத்திரனுக்கு வழங்க மறுத்ததோடு, அவனுக்கு உபநயனம் செய்ய முன்வரும் பிராமணனுக்குத் தண்டனை வழங்கியது என்பதையும் விளக்கிக் கூறுகின்றன. இந்த ஆய்வுக் கட்டுரை சிக்கறுக்காத எந்தப் புதிருமே உண்மையில் இல்லை எனலாம். இதனை ஒரு முழுநிறைவான ஆய்வு எனக் கூறுவேன். எனவே இதனைவிடச் சிறந்த ஆவணங்கள், ஆய்வுக் கட்டுரைகள் மிக மிகக் குறைவாகவே இருக்க முடியும்.

 (பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்பு 13 - இயல் 12)