பன்றிக்குப் பூணுால் போடும் போராட்டத்தை த.பெ.தி.க  அறிவித்துள்ளது. பார்ப்பனக்கூட்டம் அலறுகிறது. இப்போராட்டம் இந்துக்களின் மனதைப் புண்படுத்துவதாகச் சில அறிவாளிகள் எழுதுகின்றனர். திடீர் இந்துக் கம்பெனிகள் இலசவ விளம்பரங்களைச் செய்து வருகின்றன. பன்றிக்குப் பூணுால் போடுவதால், இந்துக்களின் மனது புண்படும் என்று சொல்வதற்கு முன், பார்ப்பனர் பூணுால் போடுவது என் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

பார்ப்பன இனத்தில், பார்ப்பனச் சிறுவர்களுக்கு அவர்களது 8 வது வயதில் ‘உபநயனம்’ என்ற சடங்கை நடத்துகிறார்கள். அதுவரை வெறும் முதுகோடு இருந்த சிறுவன், அன்றைய நாளில் பூணூல் அணிந்து பிராமணனாக ‘இரண்டாவது பிறவி’ எடுக்கிறான். அப்படி ‘பிராமணனாக’ மாறியதன் அடையாளமாகத் தான் ‘பூணூல்’ அணிவிக்கப்படுகிறது. ஆவணி மாத அவிட்ட நட்சத்திரத்தில் வரும் இந்த நாளுக்கு ‘ஆவணி அவிட்டம்’ எனப்படும்.

இப்படி வெளிப்படையாகத் தன்னை ‘பிராமணன்’ என்று அறிவித்துக்கொள்வதற்கு ஒரு விழாவே நடத்துவது தவறு என எந்தப் பார்ப்பானும் இதுவரை சொல்லவில்லை. எந்தத் தமிழனும் சொல்வதில்லை. இப்படிப் பூணூல் அணிந்து தங்களை அவர்கள் ‘பிராமணர்கள்’ என்று அடையாளப்படுத்திக் கொண்டால், பார்ப்பனர் அல்லாத நாம் அனைவரும் ‘சூத்திரர்கள்’. என்று ஏற்றுக்கொள்வதாகப் பொருள்.

‘சூத்திரர்’ என்றால் ‘பிராமணர்களின் வைப்பாட்டி மக்கள்’ என்று பொருள். ஆம். அப்படித்தான் இந்து மனுசாஸ்திரம் கூறுகிறது. (அத்தியாயம் 8; ஸ்லோகம் 415) இந்திய அரசியல் சட்டத்தில் 372 வது பிரிவு இதற்குப் பாதுகாப்பாக உள்ளது.

அதனால்தான் தோழர் பெரியார் “ஒரு தெருவில் ஒரு வீட்டில் மட்டும் இது பத்தினியின் வீடு என எழுதினால் மற்ற வீடுகள் என்ன வகையான வீடுகள்?” எனக் கேட்டார். அதாவது, ஒருவர் தன்னை ‘பிராமணர்’ என்று அறிவித்துக் கொண்டால் மற்றவர்கள் ‘சூத்திரர்கள்’ என்று தானே பொருள் எனக் கேட்டார்.

ஒரு பார்ப்பனரைப் பூணுால் அணிய அனுமதித்தாலே, நம்மைச் ‘சூத்திரன்’ என்று, ‘பார்ப்பானின் வைப்பாட்டி மக்கள்’ என்று நம்மை நாமே ஒத்துக்கொள்வதாகத்தான் பொருள். இது இந்துக்களின் மனதைப் புண்படுத்தாதா?

இந்துக்களுக்காகப் போராடுவதாகச் சொல்லிக்கொள்ளும் அமைப்புகள், பன்றிக்குப் பூணுால் போடும் போராட்டத் தடை செய்! என கூறுவதற்கு முன்பு, இந்து மதத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தும் ‘ஆவணி அவிட்டத்தைத் தடைசெய்’ என்று தான் கோரிக்கை வைத்திருக்க வேண்டும்.

இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்து இயக்கங்களில் தீவிரமாகப் பணியாற்றும் அனைத்து பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாயத் தொண்டர் களையும்கூட ‘பார்ப்பானின் வைப்பாட்டி மக்கள்” என்று தான் சட்டமும், இந்து சாஸ்திரங்களும் கூறியுள்ளன. முதலில் அதை எதிர்த்து இந்து இயக்கங்கள் எதையாவது செய்துவிட்டு, அதன் பிறகுதான், பன்றிக்குப் பூணுால் போடுவது பற்றிப் பேச வேண்டும். அதுதான் நேர்மை.

பன்றிக்குப் பூணுால் போடுவதும் ‘உபநயனம்’ தானே?

“ஒரு பிராமணன் வயிற்றில் சூத்திரன் கொடுத்த உணவுடன் இறப்பின், அவன் அடுத்த பிறவியில் நாட்டுப்புறப் பன்றியாகப் பிறப்பான்.” ( வசிஷ்ட தர்மம்: இயல் 6, பா. 27-29)

‘சூத்திரர்களின் நிலை பற்றிய பிராமணியக் கொள்கை’ என்ற தலைப்பில் தோழர் அம்பேத்கர் எழுதியது. (அம்பேத்கர் நூல் தொகுப்பு 13 - இயல் 3)

ஆக, உங்கள் இந்து தர்மங்களின் படியேகூட, நாட்டுப்புறப் பன்றிகள் எல்லாம், பார்ப்பனர்களின் முன்னோர்கள்தானே? பித்ருக்கள் தானே? நியாயமாக, நீங்கள் உண்மையிலேயே இந்து மத தர்மங்களைப் பின்பற்றுவதாக இருந்தால், ஒவ்வொரு ஆண்டும், ஆவணி அவிட்டத்தன்று, நீங்களே உங்கள் முன்னோர்களான பன்றிகளுக்குப் பூணுால் அணிவித்திருக்க வேண்டும். உங்கள் நன்றி மறந்த செயலை தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் நினைவூட்டுகிறார்கள். அதற்கு ஏன் கோபம்?

த.பெ.தி.க தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள்:

நல்ல சுத்தமான, கலப்பு இல்லாத நாட்டுப்பன்றியாகப் பார்த்து பூணுால் போடுங்கப்பா.. இல்லேனா... ஆச்சாரம் கெட்டுப்போயிரும்...

Pin It