ஆபத்துதவி என்றே சொல்லலாம் இந்தப் பருப்புப் பொடியை.

அவ்வப்போது பருப்புப் பொடியைப் போட்டு சோறு சாப்பிட்டிருந்தாலும்... ஒரு நிகழ்வுக்காக பட்டுக்கோட்டை சென்றிருந்த போது... அங்கே சாப்பிட வாய்ப்பு கிடைத்தது. முதன் முதலாக பருப்புப் பொடிக்கு கவனம் கொடுத்த நாள் அது. கரண்டி சோற்றை கவர் செய்யும் படி மேலே தூவின பருப்புப்பொடி கூடவே விழுந்த நெய்... சட்டென அந்த வாசமும்... வசீகரமும் என் கவனத்தை ஈர்த்து விட்டது. நிகழ்வு நல்லபடியாக நடந்த திருப்தியில் இருக்க.. கூடவே பசியும் இருக்க.. இந்த கூட்டணி கனக்கச்சிதமாக இலையில் கிளை பரப்பி ருசியை விருட்சமாக்கி விட்டது.

அதன் பிறகு பருப்புப்பொடி மீது ஒரு துருப்பு சீட்டு விழுந்தபடி இருக்க.. இதோ வண்ணப்பொடி கொண்டு தீட்டி விட்டேன். எண்ணப்பொடி எழுத்தில் இருக்க... சுவை கூட்டும்படி சுவையும் இழுக்க.... சுடுசோற்று சொக்குப்பொடி இதோ... இதோ படி.

சுடு சோற்றுக்கு பருப்புப் பொடி கூடவே நெய் அல்லது நல்லெண்ணெய் என்று பிசையும் போதே பசி பிளிறும். சட்டென சிறுவனாகும் தருணத்தை இந்த பருப்புப்பொடி சோறு தருவதாக நம்புகிறேன். சோறுண்ணுகையில் எவரும் சிறுவர் தான். பருப்புப்பொடி போட்டு தின்னுகையில் கன்பார்ம்.paruppu podi with riceஇந்தப் பருப்புப் பொடியை ஆபத்துதவி என்றே சொல்லலாம் என்று ஏன் சொன்னேன் என்றால்... சட்டென உறவினர் வந்து விட்டால்.. படபடவென எமர்ஜென்சி ரோலை பிளே பண்ணுவதில் பருப்புப்பொடி சொக்குப் பொடி. பருப்புப்பொடி என்று சாதாரணமாக எடுத்துக் கொள்ள கூடாது. புரதம் நிறைந்தது, உடலை மேய்க்கும் புரதம் இல்லை என்றால் வாழ்வு கதம் கதம் என்று அறிவோம் தானே. இட்லி பொடி.. தோசைப் பொடி...காரப்பொடி என பருப்புப் பொடியின் கிளைகள் ஏராளம். ஆனாலும் விதை நான் போட்டது என்பதாக பருப்புப்பொடி எப்போதும் பவளப்பொடிதான் சுடுசோற்று தட்டில். நெய்யூற்றி பிசையும் போதே கடுங்கோவக்காரனுக்கும் கண்களில் வாசம் ஏறும். நெற்றியில் கனிவு சூடும். நாவினில் நாசூக்கு ஓடும். ஒரு பிடி வாங்கி தின்று விட்டால்... மறுபிடிக்கு தானாக தணியும் எந்த தட்டு பிடிவாதமும். துவரம் பருப்பு அதிகமாக போட்டு செய்தாலும் சரி.. பூண்டெல்லாம் போட்டு தனி வகைமையாக செய்தாலும் சரி. அதன் வசீகரத் தன்மையை அது இழப்பதில்லை. ருசிகரத் தன்மையை அது சேர்த்துக் கொண்டே போகும்.

துவரம் பருப்பை நன்றாக வறுப்பதிலேயே... பொடிக்கான கர்ப்பம் தரித்து விடும். நெருப்பு சூடு கொஞ்சமாக இருக்க.. பருப்பு சூடு பதமாகும். பிறகு அரைபடுகையில் அனுபவ கைகளில் துகளாகும் பருப்புப் பொடியை சரியாக பதனப்படுத்தி நீண்ட நாட்களுக்கு வைத்துக் கொள்ள முடியும். நெகிழும் சுவையையும் தக்க வைக்கும். கூட வறுபடும் உளுந்தின் மூலம் எழும் கமகம வாசனை... அது சொல்லொணா யோசனை. மணக்க மணக்க மனம் நிறைக்கும் வாணலி கோலம் அது. சமைக்கும் போதே சாப்பிடத் தோன்றும் துறுதுறு தாளம் அது. இன்னும் கொஞ்சம் பின்னோக்கி போனால் கிராமத்தில்... உலக்கையில் இடிக்கும் வழக்கம் இருக்கும். அப்போது எழும் வாசனை அப்போதே சுடு சோற்றை போட்டுகொண்டு தட்டை நீட்ட சொல்லும்.... இப்படி நீளும் இதன் வர்ணனை.

கொஞ்சம் பொரு பொருவென இருப்பது கல்லும் உலக்கையும் கொண்ட காதலின்பால். இதுவே மிக்சியென்றால் மய மயவென மையமாய் ஆகி விடும்.

தட்டு நிறைய சுடு சோறு போட்டு ஒரு ரெண்டு மூணு கரண்டி பருப்புப் பொடியை எடுத்து தூவி... கொஞ்சமா நெய் விட்டு கூடவே தேவைக்கு நல்லெண்ணெய் ஊத்தி... ஒரு பக்கமிருந்து பள்ளம் தோண்டுகிற மாதிரி... கோழி பரபரவென பட்டும் படாமல் மண்ணை பறிக்கற மாதிரி.... ஆவி பறக்கற சோத்தை பறிச்சு பறிச்சு பிசைஞ்சு வாய்க்குள்ள போட்டா... அதல்லவா அமிர்தம். வயிறு நிறையறது அப்புறம். முதல்ல வாய் நிறையும். வாய் முழுக்க சுவை கூடி இருக்கையில்.. கண்களில் ஆவல் பொங்க முகமே பொலிவாவதை உணரலாம். விரல்ல சூடு பரபரக்கனும். பேச்சு இருக்கக் கூடாது. மூச்சு கனமாகும். பசியும் ருசியும் போட்டி போடுகையில்... நிம்மதி எனும் பொருளின் தீவிரம் நம்மை சுற்றி நிகழ்வதை உணர முடியும்.

சுட்ட அப்பளமோ... பொரிச்ச அப்பளமோ கூட வெச்சுக்கறது பருப்புப்பொடி சோற்றை வெச்சு செய்யும். அப்பளத்தை அந்த சோத்துக்கு நடுவே வெச்சு வெச்சு தின்னு பாருங்க. அப்புறம் தெரியும். வாழ்வதின் சுவை வாயிலிருந்தே தொடங்குகிறது என்று. எங்காவது ஊருக்கு சென்று திரும்பும் நாளில் வீட்டில் அவசரமாக சோறு மட்டும் வைத்து விட்டு மற்றவைக்கு பசி... நேரம் தராத போது... பாட்டிலில் இருக்கும் பருப்புப்படி தான் உற்ற மேட்ச். எடுத்து போட்டு முன் சொன்ன நெய்யோ நல்லெண்ணையோ.. பிசைந்து விட்டால்... அந்த இரவில் ஆஹா என்றொரு அமைதி வீட்டில் உலவும். சாப்பிட்டு முடியும் வரை பேச்சு இருக்காது. அத்தனை மும்முரத்துக்கு நம்மை ஆட்படுத்தும் அதன் சுவை.

இரவின் பொழுதுக்கு பசியின் வலிமைக்கு எதிரே மையமாய் சோற்றுக்கூட்டில் குவிந்து கிடக்கும் பருப்புப்பொடி ஒரு பரவச பொடி என்கிறேன். சந்தேகமெனில் இன்றிரவே உண்டு பாருங்கள். நாளை இரவுக்கும் மிச்சம் இருக்கும் பருப்புப் பொடியின் தரப்பு நியாயம். மதிய உணவுக்கு கூட சில நாட்களில் பருப்புப்பொடி கொடுத்தனுப்பும் சூழல் அமையும். குறையொன்றும் இல்லை. பொறுமையாய் பிசைய பொருள் கொள்ளப் பழக வேண்டும். அவ்வளவே. பேச்சிலர் அறையில் ஊறுகாய் பாட்டில் எப்படி இருக்கிறதோ அப்படி பருப்புப்பொடி பாட்டிலும் இருக்கும். அவசரத்துக்கு அரவணைக்கும் அதன் ஆற்றல். அணு அணுவாய் விரல்களில் அலைபாயும் அதன் ஊற்று.

நன்கு வறுத்த சுண்டைக்காய் பொடியை பருப்புப் பொடியோடு கலந்தும் வைத்துக் கொள்ளலாம். அது ஒரு தனி சுவை. மழைக்காலங்களில் இந்தப் பொடி உடலுக்கு இன்னும் வலு சேர்க்கும். மருத்துவத்துக்கு மருத்துவம். மகத்துவத்துக்கு மகத்துவம். அதே போல கறிவேப்பிலையைக் காய வைத்து அரைத்து அதையும் பருப்புப் பொடியோடு சேர்த்துக் கொள்ளலாம். அதுவும் மகத்தான மருத்துவம் தான். அவ்வாறே தண்டு தவிர்த்த கொத்தமல்லியையும் வறுத்து அரைத்து பருப்புப் பொடியோடு சேர்த்துக் கொள்ளலாம். புரதத்தின் விரதம் முடிக்கும் பருப்புப் பொடியின் தத்துவம் இன்னும் இன்னும் கிளை விரிக்கும்.

உடம்பு சரியில்லாத போது... அதாவது வாய்க்கு எதுவும் பிடிக்காத போது... சிலர் பன்னு சாப்பிடுவார்கள்... இல்லையா.. அப்படி சிலர் இந்தப் பருப்புப் பொடியை சுடு சோற்றில் பிசைந்து கொஞ்சம் ரசம் போட்டுகொண்டு கலந்து சாப்பிடுவார்கள். கொஞ்சமாக சாப்பிட்டாலும்... சுருக்கென்று இருக்கும். சுகமாகவும் இருக்கும். சில சுவைகளை சொல்லவும் முடியாது. எழுதவும் முடியாது. அது உணர மட்டுமே முடிந்த சுவை லயம். அப்படி ஒரு சுவையை காய்ச்சலின் வழியே கண்டறிந்திருக்கிறது...இந்தப் பருப்புப் பொடியின் பளீர் மாயம்.

வெளியே கடைகளில் சாப்பிட வேண்டிய தேவையும் இல்லை. உடம்புக்கும் ஒன்னும் பண்ணாது. சுவையும் சொக்கும். பிறகென்னே பருப்புப்பொடி ஒரு டப்பாவில் வீட்டுக்கு வீடு இருக்கும் ஆபத்துதவி என்றால் தகும் தானே. வேலையினிமித்தம் வேறு வழியின்றி தொடர்ந்து வெளியே சாப்பிட்டு நாக்கு செத்து வீடு வருகையில்... ரெண்டு கரண்டி சோறு பருப்புப் பொடியோடு நான் சொன்ன மேற்கூறுகளோடு பிசைந்து சாப்பிட்டு பாருங்கள்.

பிறகு மறுபடியும் இக்கட்டுரையை படித்து பார்ப்பீர்கள். சுடுசோற்று சொக்குப் பொடி - இந்தப் பருப்புப் பொடி....!

- கவிஜி