டோக்கியோவிற்கு தெற்கில் 1,200 கிலோமீட்டர் தொலைவில் கடலுக்கு அடியில் இருக்கும் எரிமலை வெடித்து புதியதொரு நிலப்பகுதி உருவானதால் ஜப்பான் தனது கவர்ச்சிகரமான தீவுகளின் கூட்டத்தில் ஒன்றைச் சேர்த்துக் கொண்டுள்ளது. அக்டோபர் 2023ல் தொடர்ச்சியாக நிகழ்ந்த வெடிப்புகளால் மேற்கு பசுபிக்கில் உள்ள அகஸவாரா (Ogasawara எரிமலைத் தொடரின் பகுதியாக) இருக்கும் இவோட்டோ தீவுக்கு (Iwoto island) அருகில் இந்த சின்னஞ்சிறிய தீவு தோன்றியுள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

எரிமலைக் குழம்பு (magma) நீருடன் சேர்ந்து வினை புரிவதால் ஏற்படும் ஃப்ரீடமெக்மாட்டிக் (phreatomagmatic) வெடிப்புகளால் இந்த புதிய தீவு உருவாகியுள்ளது என்று டோக்கியோ பல்கலைக்கழகத்தின் நில நடுக்கங்கள் பற்றிய ஆய்வுக் கழக இணைப் பேராசிரியர் ஃபுகாஷி மீனோ (Fukashi Maeno) கூறுகிறார். புதிய தீவு, இவோட்டோ தீவுக்கு ஒரு கிலோமீட்டர் தொலைவில் 100 மீட்டர் குறுக்களவில் தோன்றியுள்ளது.

volcanic island

(Image credit: ESA/USGS)

ஐம்பது மீட்டர் உயரம் வரை பொங்கி எழுந்த சாம்பல்

அக்டோபர் 2023 கடைசியில் எரிமலை வெடித்த சமயத்தில் மீனோ இப்பகுதியின் மீது பறந்து ஆய்வுகளை மேற்கொண்டார். அப்போது சில நிமிட இடைவேளையில் புகைமூட்டங்களும், ஐம்பது மீட்டர் உயரத்திற்கு சாம்பலும் ஏற்பட்டது என்று அவர் கயோடோ செய்தி நிறுவனத்திடம் (Kyodo news agency) கூறியுள்ளார்.

காற்றின் வழியாக சடசடவென்ற ஓசையுடன் பறந்து மேலெழும்பி வந்த பாறாங்கற்கள், பழுப்பு நிற நுரை கற்கள் (pumice stones) ஆகியவை கடல் மீது விழுந்தன.

கடல் நீரின் நிறத்தை மாற்றி மிதந்தன என்று கயோடோ நிறுவனம் கூறுகிறது. இவோட்டோ ஒருகாலத்தில் பசுபிக்கில் மிக மோசமான போர் நடந்த இடம். ஜப்பானில் இப்பகுதியில் மட்டும் 111 எரிமலைகள் இன்னமும் உயிர்ப்புடன் செயல்படுகின்றன. இந்தத் தீவு 2021ல் புதிதாக தோன்றிய மற்றொரு தீவுக்கு அருகில் அமைந்துள்ளது.

முன்பு இவோ ஜிமா (Iwo Jima) என்று அழைக்கப்பட்ட இந்தத் தீவு 2007ல் ஜப்பானிய அதிகாரிகளால் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இது அடிக்கடி எரிமலை வெடிப்புகள் நிகழும் இடம் என்று ஜப்பான் வானிலை ஆய்வு அமைப்பு கூறுகிறது.

இந்தத் தீவு அமைந்திருக்கும் இதே பகுதியில் 2022 ஜூலை டிசம்பருக்கு இடைப்பட்ட காலத்திலும், 2023 ஜூனிலும் இதே போன்ற வெடிப்புகள் நடந்தன. இப்பகுதியில் எரிமலை நடவடிக்கைகள் மீண்டும் சுறுசுறுப்படையத் தொடங்கியுள்ளன என்பதையே இது காட்டுகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எரிமலை வெடிப்புகள் தொடர்ந்தால் இந்த புதிய தீவின் பரப்பு பெரிதாகும். அதன் வடிவமைப்பு மாறும். ஆனால் அலைகளுக்கடியில் இது மறைந்தும் போகும். 1904, 1914 மற்றும் 86ம் ஆண்டுகளில் இதே போல இப்பகுதியில் உருவான புதிய நிலப்பரப்புகள் மண் அரிப்பினால் மறைந்து போய்விட்டன.

சாம்பல் மற்றும் பாறைத் துண்டுகளால் உருவாகும் இது போன்ற தீவுகள் அலைகளின் தொடர் தாக்குதலை சமாளித்து நிற்கப் போராடுகின்றன. ஆனால் தொடர்ச்சியாக நிகழும் எரிமலை வெடிப்புகள் லார்வாவைத் தொடர்ந்து வெளியேற்றும்போது கடினமான, நீண்ட காலம் நிலைத்து நிற்கக்கூடிய தரைப்பரப்பு உருவாகிறது. 2013ல் வாரக் கணக்கில் தொடர்ந்த எரிமலை வெடிப்புகள் புதிய தீவு ஒன்றை உருவாக்கியது.

இணையும் தீவுகள்

இது இப்பகுதியில் ஏற்கனவே இருந்த தீவுடன் இணைந்து டாஃப்க் ஸ்னூப்பி (dog Snoopy) என்ற கார்ட்டூன் கதாபாத்திரத்தில் சித்தரிக்கப்படும் நாய் போன்ற வடிவத்துடன் அமைந்த புதிய நிலப்பரப்பை தோற்றுவித்தது. 2023 ஆரம்பத்தில் புவியியலாளர்கள் ஜப்பான் தீவுக்கூட்ட முன்பு நான்கு முக்கிய தீவுகளையும், சுமார் ஆறாயிரம் சிறிய, பெரும்பாலானவற்றில் மனிதர்கள் வசிக்காத தீவுகளையும் கொண்டிருந்தது என்று கருதினர்.

ஆனால் டிஜிட்டல் வரைபடத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆய்வு செய்தபோது ஜப்பான் முழுவதும் மொத்தம் 14,125 தீவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று ஜப்பான் புவி தகவல் ஆணையம் (Geospatial Information Authority) கூறுகிறது. இது முன்பு கணக்கிடப்பட்டதை விட 7,273 தீவுகள் கூடுதலானது. புதிய தீவுகள் உருவானாலும் ஜப்பான் அவ்வப்போது அவற்றை இழக்கவும் செய்கிறது.

ஹக்கேட்டோ (Hokkaido) கடற்கரைப் பகுதிக்கு 500 மீட்டர் தொலைவில் அமைந்திருந்த எஸந் ஹனக்கீட்டா காஜிமா (Esanbe Hanakita Kojima) என்ற தீவு 2018ல் யாரும் அறியாமல் அலைகளோடு அலையாக கடலுக்கடியில் மூழ்கி காணாமல் போனது. “ஜப்பானின் மறையும் தீவுகள்” என்ற தன்னுடைய புதிய படப் புத்தகத்திற்காக ஜப்பானிய எழுத்தாளர் ஹிரோஷி ஷிமிஜூ (Hiroshi Shimizu) இப்பகுதிக்கு வருகை தந்தபோதுதான் இது கண்டுபிடிக்கப்பட்டது.

இயற்கையின் அற்புதப் படைப்பில் புதியன உருவாதலும் பழையன மறைதலும் தீவுகளுக்கும் பொருந்தும் என்பதை புதிய தீவின் கண்டுபிடிப்பு எடுத்துக் காட்டுகிறது.

** ** **

மேற்கோள்கள்: https://www.theguardian.com/world/2023/nov/09/japan-gets-a-new-island-after-undersea-volcano-erupts?

&

https://www.deseret.com/2023/11/10/23954558/japan-volcano-eruption-2023-iwo-jima

&

https://www.livescience.com/planet-earth/volcanos/new-island-that-emerged-from-the-ocean-off-japan-is-now-visible-from-space

சிதம்பரம் இரவிச்சந்திரன்