கேரளாவில் உள்ள யாரும் அதிகம் பயணப்பட்டிருக்காத கேள்விப்படாத ஒரு மலைக் கிராமத்திற்குச் சென்று தங்கி வரலாம் என்றுதான் திட்டம். சுமார் 1 மாதத்திற்கு முன்பே திட்டமிட்டாயிற்று. பயணத்தின் காலையில் அருந்திய ஒரு கப் தேநீர் அந்த திட்டத்தை மாற்றியது.
சனிக்கிழமை காலையில் வண்டியை எடுத்துக் கொண்டு, தேநீர் அருந்திக் கொண்டிருந்தபொழுது, கேரளாவில் பரவிக் கொண்டிருந்த நிஃபா வைரஸ் நோயின் செய்திகள் வந்து காதில் விழ, வாகனத்தை கன்னியாகுமரி சாலைக்குப் பதிலாக, தூத்துக்குடி சாலை வழியாக திருப்பினோம். ஒரு இடதுக்கும் வலதுக்கும் திருப்புகின்ற அந்த விநாடிதான் மலைக் கிராமத்திற்குப் பதிலாக இந்தியாவின் கடை கிராமத்திற்குச் செல்ல முடிவெடுத்தோம். ஒரு தேநீருக்கு ஒரு பயணத்தையே மாற்றுகின்ற சக்தியுண்டு.
இராமேஸ்வரம் நோக்கி சென்று கொண்டிருக்கின்றோம். தூத்துக்குடி - சாயல்குடி- இராமநாதபுரம் - இராமேஸ்வரம் சுமார் 225 கிமீ தொலைவில் 4.30 மணிநேர பயணம் திருநெல்வேலியிலிருந்து.
இராமநாதபுரம் மாவட்டம் என்பதை விடவும் இந்தியாவைத் தாண்டியிருக்கின்ற தனித்தீவு என்பதே பொருத்தமாகும்.
சாலையெல்லாம் தண்ணீர் குடங்களின் வண்டிகள் - சுட்டெரிக்கும் வெயிலில் மக்கள் தண்ணீருக்காக அலைந்து கொண்டிருக்க, கடந்து செல்லும்போதே அதன் தாக்கம் தெரிந்தது, தாகமும் தெரிந்தது.
கடற்கரை சாலையில் நாங்கள் இராமநாதபுரம் வழியாக சென்று கொண்டிருக்கின்றோம், கடல் காற்றின் அனல் சூட்டில், உப்பளங்களிலிருந்து உப்புகளும் மணல் துகள்களும் கண்களை மறைக்க, நீங்கள் நினைப்பது போல கடற்கரை சாலையின் அழகிய வழித்தடமல்ல இது.
நாங்கள் பயணத்துக் கொண்டிருப்பது கிழக்கு கடற்கரை சாலை என்றாலும் தூரத்தில் தெரிவதெல்லாம், ஆலைகளும் புகைகளும் புழுதிகளும் அந்த மக்களின் மீதுண்டான சாபமும் தான்.
சென்று கொண்டிருக்கும்பொழுது திடீரென்று சாலையின் இருபுறமும் தண்ணீர் சூழ ஆரம்பிக்கின்றது.
இருபக்கமும் கடல் சூழ நடுவினில் உள்ள அந்த சாலை வழியாக, மண்டபம் இரயில் நிலையத்தைக் கடந்து, தொப்புள் கொடி உறவாய் இணைத்திருக்கும் அந்த பாம்பன் பாலத்தின் வழியே இந்தியாவின் கடைசி கிராமமான அந்த இராமேஸ்வர தீவுக்குள் நுழைகின்றோம்.
இது கிளம்பும்பொழுதுதான் திட்டமிட்ட பயணம் என்பதால், திட்டமிட்டு செல்வதற்கு என்று எந்த திட்டமும் இல்லை.
திட்டமிடாமல் பயணிப்பது என்பது எப்பொழுதுமே ஏமாற்றத்தை தராது சாலையை ரசிப்பவர்களுக்கும் எதிர்பார்ப்பு இல்லாதவர்களுக்கும்.
ஆகவே இந்த பயணம் திட்டமிட்ட பயணத்தைவிடவும் அதிகமான சுவாரசியத்தை தரும் என்கிற நம்பிக்கையில் பயணித்தோம். எங்களை இயற்கை ஏமாற்றி விடவில்லை.
பாம்பன் பாலம் - தமிழ்நாட்டையும் இராமேஸ்வரத்தையும் இணைக்கும் இரயில் பாலத்திற்குத்தான் பாம்பன் பாலம் என்று பெயர்.
இது சுமார் 146 தூண்களுடனும் 2.3 கிமீ நீளத்திலும் கட்டப்பட்டிருக்கிறது. ஆங்கிலேய பொறியாளர் ஷெர்சர் என்பவரால் கட்டப்பட்டு 1904 ம் ஆண்டு மக்கள் போக்குவரத்திற்காக திறக்கப்பட்டது.
இந்தப் பாலத்தின் சிறப்பே, பெரிய பெரிய கப்பல்கள் வரும்பொழுது பாலம் இரண்டாகப் பிளந்து, கப்பல்களுக்கு வழிவிடுவதுதான்.
அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படத்தில் வரும் "அண்டாக்கா கஸம்" குகைகளை திறக்கும் ஊழியர்களைப் போல, இந்த பாலத்தைப் பிரிக்கும் பணியில் 16 ரெயில்வே ஊழியர்கள் இருபுறமும் நின்று பற்சக்கரத்தை சுற்ற ஆரம்பிப்பார்கள்.
பக்கத்தில் இருக்கின்ற 2 கிமீ நீளமுள்ள தரைவழிப்பாலம், 1974 ல் ஆரம்பித்து 1988 அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களால் திறக்கப்பட்டது.
இராமன் வனவாசம் சென்ற 14 ஆண்டுகள், இந்த பாலத்தை கட்டிய தொழிலாளர்கள் இதனை முடிக்க எடுத்துக் கொண்டனர்.
சிலர் இந்த தரைவழிப் பாலத்தைதான் பாம்பன் பாலம் என்று நினைத்திருக்கின்றார்கள். இது அன்னை இந்திரா காந்தி பாலம்
பாம்பன் பாலத்தில் இரயில் செல்ல - வங்காள விரிகுடாவில் கப்பல்கள் செல்ல - தரைவழிப்பாலத்தில் வாகனங்கள் செல்ல, இவற்றை ஒருமித்து காண்பது மிகவும் அரிது.
கப்பல்கள் வரும்பொழுது பாலம் பிரிவதை காண்பதற்காகவும், தரைவழிப் பாலைத்தை கடக்கும்பொழுது தண்டவாளத்தில் இரயில் கடக்கும் அழகை காண்பதற்காகவும், சுற்றுலாப் பயணிகள் தவமிருப்பார்கள்.
இந்திய இலங்கை வர்த்தகத்திற்காகவும், இராமேஸ்வரத்தையும் தமிழ்நாட்டையும் இணைப்பதற்காகவும், ஆங்கிலேயர்கள் இந்த பாலத்தை கட்டினர்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் வர்த்தகம் நடந்ததோ இல்லையோ இலங்கை கடற்படையினர் நமது மீனவர்களின் மீன்களைப் பிடித்து அவர்களது வர்த்தகத்தை உயர்த்திக் கொண்டனர்.
=======================
இராமேஸ்வரத்தில் பார்க்க வேண்டிய இடங்கள் மிகவும் குறைவுதான். ஆனால் இதன் வரலாறுகளை தெரிந்து கொள்ள நினைப்பவர்களுக்கு, 50 ஆண்டுகள் வேண்டும் அந்த தனுஷ்கோடியின் வரலாற்றை மீனவர்கள் பார்வையில் இருந்து அப்புறமாய் தருகிறேன்.
பொதுவாய் எல்லாரும் செல்கின்ற பகுதிகள்.
பாம்பன் பாலம் - இராமேஸ்வர கோயில் - தனுஷ்கோடி - அப்துல்கலாம் சமாதி
ஆனால் பெரும்பாலும் வெளியில் தெரியாத இதன்பிறகு தெரியப்போகின்ற இந்த பகுதிகளுக்கு நாங்கள் சென்றோம்.
அரியமான் அல்லது குஷி பீச் - சீனியப்பா தர்கா பீச்
இராமேஸ்வரம் செல்கின்ற அந்த கிழக்கு கடற்கரைச் சாலையில், பாம்பன் பாலத்திற்கு சுமார் 27 கிமீ முன்பாகவே அமைந்திருக்கிறது இந்த குஷி பீச்.
விளம்பரப் பலகைகள் போர்டுகள் வழிகாட்டிகள் எதுவும் இருக்காது. ஒருவேளை பெரும்பாலானோர் வருகை புரியாததற்கு இதுவும் காரணமாக இருக்கலாம்.
வெளி மாநிலங்களிலிருந்து வருகின்ற சுற்றுலாப் பயணிகள் மிகவும் குறைவுதான் என்றாலும், சுற்றுப்புர மாவட்டத்திலிருந்து வருகின்ற உள்ளுர் மக்கள் குடும்பத்துடன் வந்து செல்கின்றார்கள்.
மிகவும் அமைதியான, பந்தல்களைப் போன்று பரந்து நிற்கின்ற உயரமான மரங்கள், பரந்த அந்த பீச்சில் குடும்பத்துடன் வந்து அமந்து உண்டு களித்து செல்ல அருமையான இடம்.
நாங்கள் அங்கே மாலையில் சென்று, சாமியானாக்களாய் மாறிப்போன பசுமையான மரங்களின் நிழலில் அமர்ந்து, அங்கேயே மதிய உணவினை உண்டு, மர நிழலில் மனதைக் கிடத்தி, நிழலை உலர்த்தி, மாலையில் கடற்கரை கடல்நீரில் கிடந்து ஊறினோம் குலோப்ஜாமூன்களைப்போல.
கால்களில் மீன்கள் வந்து விளையாடி, நம் வலி உணராமல் கடித்துக் கொண்டிருந்தது.
அவ்வளவு தூரம் பயணித்து வந்த களைப்பு, அந்த உப்புக்காற்றில் துருப்பிடித்தும், நீரில் கரைந்தும் போனது.
இராமேஸ்வரம் செல்பவர்கள் நிச்சயமாக தவற விடக்கூடாத இடம். ஒரு வேன் பிடித்து, குடும்பத்துடன் அந்த பீச் சென்று, அங்கே மர நிழலில் அமர்ந்து, காலை முதல் மாலை வரையிலும் அங்கேயே கூட தங்கி, உடல் அரிக்கும்பொழுது மீனுடன் நீரில் விளையாடி, கடல் நீரில் குளித்து, பசிக்கும்பொழுது அதே மீனுக்கு துரோகம் செய்து பொறித்து சாப்பிட்டுவிட்டு வாருங்கள்.
உங்கள் குடும்பத்திற்குள் ஏதேனும் பிரச்சனைகள் கவலைகள் மனஸ்தாபங்கள் இருந்தால் எல்லாவற்றையும் இந்த ஒரு பயணம் துடைத்து எறிந்துவிடும்.
பின்னர் அங்கிருந்து சீனியப்பா தர்கா பீச்சுக்கு சென்றோம். அப்படி என்ன இருக்கிறது அந்த தர்கா பீச்சில்?
==============
சுந்தரமுடையான் அல்லது சீனியப்பா தர்கா பீச் - சனிக்கிழமை இரவு 7 மணி.
மின் விளக்குகள் இல்லாத, கடலை ஒட்டிய இந்தியாவின் கடேசி நிலத்துண்டின், கடல் அலைகளின் சப்தத்தை கேட்டுக்கொண்டே நின்று கொண்டிருக்கின்றோம்.
இப்படி அந்தப் புறமும் ஒருவன் நின்று கொண்டிருக்கலாம்.
வழிகாட்டி பலகைகள் எதுவும் பெரிதாயில்லாததால் இங்கு செல்வதில் குழப்பம் ஏற்படலாம். குஷி பீச்சிலிருந்து வெளியே வந்து, சுமார் 2 கிமீ தொலைவில், மண்டபம் நோக்கி செல்லும் பாதையில், வலதுபுறம் ஒரு சிறிய சந்து ஒன்று இருக்கிறது. அதில் சுமார் 1 கிமீ தொலைவில் இருக்கிறது இந்த கடற்கரை.
காதுகளுக்குள் அலைகளின் துளிகள் காற்றில் எழும்பி சாரலாய் விழுந்து கொண்டிருந்தது. நம்மள சுத்தி ஒரு 100 காற்றாடியை வைத்துக் கொண்டு, நடுவில் நீரில் நின்று கொண்டிருப்பது போல ஒரு உணர்வு.
காற்றின் சப்தமா? கடலின் சப்தமா? காற்று மோதி வரும் அலையின் சப்தமா? இருளின் சப்தமா? உயரமாய் நீண்டிருக்கும் சவுக்கு மரத்தின் சப்தமா? இல்லை இந்த இடம் விட்டு போகவே கூடாது என்று கதறும் மனசின் சப்தமா?
அப்படியே பிரமை பிடித்தது போல நின்று கொண்டிருக்கின்றோம். எல்லாருமே மௌனமாய் இருக்கின்றோம் இல்லை கடலோடு பேசிக் கொண்டிருக்கின்றோம்.
எல்லாருடைய மௌனங்களும் பேசிக் கொண்டன மறுநாள் அதிகாலையில் இதே இடத்திற்கு மறுபடியும் வரவேண்டும் என்று இது நிச்சமாய் மிகைப்படுத்துதல் அல்ல. அந்த கடல் காற்றை, எழுத்தில் மொழிப்படுத்தும் கருவி ஒன்று இருந்திருந்தால், நீங்கள் தேவதூதுவனாய் மாறி அங்கேயே நிரந்தரமாய் தங்கிவிடக்கூடும்.
நாங்கள் செல்லும் சமயம் கரண்ட் இல்லை. அந்த இருட்டில், அலைகள் அடித்துக் கொண்டிருக்கும் சப்தம் காதில் விழுந்து கொண்டிருக்க, முன்னேறிக் கொண்டிருந்தோம்.
வாகனத்தையே அசைத்து திருப்பி விடும் அளவுக்கு காற்று பயங்கரமாய் வீசிக் கொண்டிருக்க, அந்த காற்றின் வேகத்தில் அலைகள் கொந்தளித்துக் கொண்டிருந்தது.
கடல் காற்று வீசியது என்று சாதாரணமாய் சொல்லிவிட்டு கடந்து சென்று விடமுடியாத அளவுக்கு காற்று வீசிக் கொண்டிருக்க, காற்றும் அலையும் மோதி, கடல் நீர் வெகுண்டெழுந்து, கரையில் நின்று கொண்டிருந்த எங்கள் காதுகளில் மழை பொழிந்து கொண்டிருந்தது.
அந்த இரவும், நிசப்தமும், கடலின் அலைகளும், காற்றும், தெறித்து விழுகின்ற சாரலும், உடலை குளிர்வித்துக் கொண்டிருந்தது. நகர்வதற்கு மனம் வரவில்லை.
அந்த காட்சியை புகைப்படத்தில் படம் பிடிக்க நினைத்தாலும் கடல் மறைந்து இருள் மட்டுமே விழுந்தது.
குஷி பீச் - அலைகள் இல்லாத உறங்கிக் கொண்டிருக்கும் கடல்
சீனியப்பா தர்கா பீச் - ஆர்ப்பரித்து உசுப்பிக் கொண்டிருக்கும் கடல்
உறங்கும் கடலில் குளித்து, உசுப்பும் கடலை ரசித்துவிட்டு கிளம்பினோம்.
===============
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணி...சீனியப்பா தர்கா பீச்சை நோக்கி பயணம்...
இரவு முழுவதும் முழித்துக் கொண்டே இருந்தோம் மறுபடியும் காலையில் அந்த காற்று தெறித்து உடல் சிலிர்க்க வைக்கும் தர்கா பீச்சுக்கு செல்வதை பற்றி கனவு கண்டபடியே.
உறக்கத்திலும் அந்த கடல் காற்று முகத்தில் குளிரவைத்துக் கொண்டிருந்தது. அவசர அவசரமாய் அதிகாலையில் அலாரம் வைத்து எழுந்து மறுபடியும் தர்கா பீச்சுக்கு வந்தோம்.
பயணக் களைப்பில் தூக்கம் வந்தாலும், அதையெல்லாம் உதறிவிட்டு,அதிகாலையில் இங்கு வரவேண்டும் என்று எங்களை உந்தி எழுப்பியது அந்த கடல் காற்றின் சாரலும் கால் தொட்ட அலையும்.
இரவில் நாங்கள் கற்பனை செய்து வைத்திருந்த அதே கடல், அதே காற்று, அப்படியே ஒரு முனிவரின் தவம் போல சென்று கடற்கரையில் சென்று அமர்ந்து காற்று வாங்கினோம்.
அந்த கடற்கரை கிராமத்தில் ஒரு பேருந்து வந்து நின்றது. அந்த அதிகாலையின் கடல் அலைகளின் சப்தங்களை கேட்டுக்கொண்டே, கிராமத்து மக்கள் வேலைக்காக, பேருந்தில் ஏறிச் சென்று கொண்டிருகின்றார்கள்.
கடல் அலை, காற்று, சவுக்கு மரங்களின் காட்சிகளெல்லாம் இந்தியாவைத் தாண்டி உள்ள ஒரு பிரதேசத்தில் இருப்பது போல தோன்றியது.
எங்கோ பெயர் தெரியாத தேசத்தில், பெயர் தெரியாத கிராமத்தில், பெயர் தெரியாத தீவில், பெயர் தெரியாத கடலில், தனித்து விடப்பட்டதைப் போன்ற உணர்வு.
நாங்கள் அனுபவித்த அந்த உணர்வில், ஒரு சதவிகிதத்தைக் கூட என்னால் எழுத்தில் விவரிக்க முடியவில்லை. அதனை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும்.
இராமேஸ்வரம் வருபவர்கள் இங்கு வராமல் சென்றீர்கள் என்றால் நிச்சயமாக துரதிஷ்டவாதிகளாகிவிடுவீர்கள்.
சொர்க்கமும் இப்படி இருந்தால்தான் என்ன? என்று கடவுளிடம் கூட நீங்கள் பரிந்துரைச் செய்யும் அளவுக்கு, பரந்து விரிந்த அந்த நீலக் கடலும், அதன் அழகும், உயரமான சவுக்கு மரங்களின் நிழலும், குளிர்ச்சியும் அடங்கிய, கடல் தோப்பாக காட்சியளித்தது சீனியப்பா தர்கா பீச்.
திரும்பிச் செல்லும்பொழுது அந்த கிராமத்து வீட்டில் முதியவர்கள் எங்களை அலட்சியமாய் பார்த்ததைப் போல ஒரு உணர்வு.
அந்த கடல் காற்று அவரவர் வீட்டுத் திண்ணைகளில் வந்து ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றது.
===============
ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி அந்த பாம்பன் பாலத்தின் தரைப்பாலத்தில், வாகனத்தை நிறுத்திவிட்டு அந்த மிதமான குளிரில் நடந்து கொண்டிருக்கின்றோம்.
பாம்பன் பாலத்தில் இரயில் வரும் சப்தம் கேட்டு, நின்று இறங்குவதற்குள், ஒலி எழுப்பிவிட்டு தூரத்தில் சென்று மறைந்து விட்டது அந்த இரயில்.
பாலத்திலிருந்து கடலைப் பார்க்கும்பொழுது, கடலும் வானமும் நீல நிறத்தில் ஒன்றுக்கொண்டு மோதிக்கொண்டு, அந்த தீப்பொறியில் கிளம்பிய புகைகள், மேகங்களாக மாறிச் செல்வதைப் போல காட்சியளித்து. அந்த காற்றின் வேகத்தில் மேகங்கள் பறவைகளைப் போல பறந்து கொண்டிருக்கிறது.
சில சுற்றுலாப் பயணிகள், பாலத்தின் ஓரத்தில், கைக்குழந்தையுடன் நின்று கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டிருப்பது பயத்தை வரவழைக்கிறது. காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் நடப்பதே சிரமம். இதில் ஆங்காங்கே சின்ன சின்ன குழிகள் வேறு.
பாலத்தில் கம்பிவலை போட்டு, அரசாங்கம் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும்.
இரு பாலங்களுக்கு இடையே நடைபெறும் மீன் வியாபாரங்கள் -நகர சாலைகளின் வாகன நெருக்கத்தைப் போலவே படகுகளின் நெருக்கத்தில், தத்தமது பணிகளுக்கு சென்று கொண்டிருக்கும் மீனவர்கள் - பாம்பன் பாலத்தின் தண்டவாளத்தின் முனைகளில் நின்று கொண்டு, கடலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் சில மனிதர்கள் என்று அந்த இராமேஸ்வர கிராமத்தின் அதிகாலையை, அந்த பாலம் அவ்வளவு அற்புதமாய் வரவேற்றது.
ஆனால் இதே உணர்வு அங்கு வாழும் அகதிகளுக்கு நிச்சயமாய் இருந்திருக்காது.
அதன் பிறகு தனுஷ்கோடியை நோக்கி செல்ல ஆரம்பித்தோம். 50 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிப் போன அந்த கிராமத்திற்குள் நுழைந்தோமா இல்லை 1914 ல் பிரிட்டிஷ்காரர்கள் உருவாக்கிய அந்த தனுஷ்கோடிக்குள் நுழைந்தோமா என்று தெரியவில்லை.
ஒருமணி நேரத்துக்குள் எப்படி ஒரு ஒட்டுமொத்த கிராமமும் அழிந்து போனது? மனிதர்கள் வாழ தகுதியற்ற பிரதேசமாக அரசாங்கம் அறிவித்தன் அரசியல் என்ன? பார்ப்போம்....
=================
இந்தியாவின் கடைசி சாலை வழியாக கடைசி நிலப்பரப்பில் எங்கள் கார் பயணித்துக் கொண்டிருக்கின்றது.
இரண்டு பக்கமும் கடல் சூழ்ந்திருப்பது அழகிய காட்சி போல தெரிந்தாலும், பயமாய் இருக்கிறது.
கடலுக்கு நடுவே ஓர் ஒற்றைப் பாதையில் நடந்து செல்லும் அளவுக்கு உள்ள ஒரு ஒற்றையடிப் பாதையில், அலைகள் கால்கள் நனைக்க, நடைபயிலும் பயத்தைக் கொடுத்தது.
காரை விட்டு இறங்கிச் சென்றால் கடலில் சென்று கால் நனைக்கும் தொலைவில்தான் இரண்டு பக்கமும் கடல் நீர். இது இரவு நேரமாக இருந்தால், கார் கடல் மீது சென்று கொண்டிருக்கும், திகிலான உணர்வைத் தந்திருக்கும். இதோ இந்தியாவின் அந்த கடைசி "U" வளைவில் வந்து நிற்கிறோம்.
இதே கடல்தான் இதே அலைதான் சுமார் 55 வருடங்களுக்கு முன்பு கொந்தளித்து, 280 கிமீ வேகத்தில் அடித்த புயல் காற்றில், சுமார் 24 அடி உயரத்தில் எழும்பி, இந்த பகுதியைத் தின்றுவிட்டுச் சென்ற அந்த கடல் அலையின் காலடியில் நாங்கள் இப்போது நின்று கொண்டிருக்கிறோம்.
இந்த பாதை மிகவும் அபாயகரமானதுதான். குடும்பத்துடன் செல்லும்பொழுது, கடல் அலைகளை கருத்தில் கொண்டு, புயல் காற்றின் நிலையை அறிந்து கொண்டுதான் வரவேண்டும். எப்பொழுது கடல் தண்ணீர் இந்தப் பாதையை மறைக்கும் என்று தெரியாது.
இரண்டு வருடங்களுக்கு முன்பு திருநெல்வேலியிலிருந்து சுற்றுலா வந்த 17 பேர் இங்கு மாட்டிக்கொண்டு திடீரென்று தண்ணீர் சூழ ஆரம்பித்ததால், அங்குள்ளவர்களை உதவிக்கு அழைத்துள்ளார்கள். சாலை கடலாகும் கடல் சாலையாகும் வித்தியாசமான நிலப்பரப்பு இது
==================
சர்வதேச அளவில் கடல் நிலப்பரப்பில் நெருக்கமாயிருக்கும் எல்லைகளில் இந்த தனுஸ்கோடியும் ஒன்று. 15 கிமீ தொலைவில்தான் இலங்கையின் தலை மன்னார்.
அஸ்தியை கரைக்க வந்திருப்பவர்களுக்கு தெரிந்திருக்குமா என தெரியவில்லை அந்தக் கடலே, 2000 குடும்பங்களின் அஸ்திதான் என்று.
அங்கிருந்து திரும்பி வரும்வழியில் கடலில் மூழ்கி, இப்பொழுது எழுந்து நிற்கும் அந்த சர்ச் - சிதைந்து போய் நிற்கும் தனுஸ்கோடி இரயில்வே ஸ்டேஷன் - அஞ்சலகம் - மருத்துவக்கல்லூரி - கடை வீதிகள் - பள்ளிகள் எல்லாம், கடல் துப்பிவிட்டுச் சென்றிருக்கும் நினைவுச் சின்னங்களாக அந்த மக்களின் வலிகளாக நின்று கொண்டிருக்கிறது.
நாங்கள் நின்று கொண்டிருப்பது, 1914ல் பிரிட்டிஷ்காரர்கள் உருவாக்கிய தனுஸ்கோடியா இல்லை 1964ல் இந்த கடல் தின்று துப்பிவிட்டுச் சென்ற தனுஸ்கோடியா என்று தெரியவில்லை?
அந்த கடை வீதியில் சென்று கொண்டிருக்கும் பொழுதுதான் அந்த வியாபாரியைச் சந்தித்தோம். வலியுடன் தனுஸ்கோடியின் நினைவுகளை எங்களுடன் பகிர்ந்து கொண்டிருந்தார்.
" நீங்கள் நின்று கொண்டிருக்கும் இந்த இடத்திலிருந்து குதிரையில் சென்று நாங்கள் கடல் பார்ப்போம்..இப்பொழுது நீங்கள் நிற்கும் இந்த கடற்கரையில் எங்களுடைய பள்ளிக்கூடம் இருந்தது. கடை வீதிகள் இருந்தது. எங்கள் கிராமமே இன்னமும் இந்த கடலில்தான் மூழ்கியிருக்கிறது. இதற்கு இந்தியா வைத்த பெயர் மனிதர்கள் வாழ தகுதியற்ற பிரதேசம்... பேய்களின் பூமி ".
உங்களோடு அந்த பேய்தான் பேசுகிறேன்.
சென்னையிலிருந்து தனுஸ்கோடிவரை போட் மெயில் என்கிற ரெயிலில் பயணம் செய்து பின்னர் தனுஸ்கோடியிலிருந்து இலங்கை தலைமன்னாருக்கு கப்பலில் சென்று வியாபாரம் செய்து வந்தனர்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் பயணத் தொடர்பும் வியாபாரத் தொடர்பும் அழகிய முறையில் இருந்து வந்தது. அங்குள்ள மீனவர்கள் எல்லாம் மீன் பிடித்து செழிப்பாக வாழ்ந்து வந்தனர். இது மிகப்பெரிய சர்வதேச தொடர்புடைய துறைமுகமாக மாற வேண்டிய தனுஸ்கோடியை அந்த ஒரு மணி நேர சுனாமி வந்து அழித்துவிட்டு சென்றது எங்கள் கனவுகளை என்று அந்த மீனவர் புலம்பிக் கொண்டிருந்தார்.
அந்த டிசம்பர் 22 ம் தேதி 1964ம் ஆண்டு என்னதான் நடந்தது?
==============
Dec 22- 1964 - இரவு 9 மணி. தனுஷ்கோடி இரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரின் 5 வயது மகன், இரவு சாப்பிட அடம்பிடித்து வழக்கத்திற்கு மாறாக முறைத்துக் கொண்டிருந்தான்.
வெளியில் கடல் அலைகளின் ஆக்ரோஷமான சப்தம், புயல் காற்று வீசிக்கொண்டிருக்க, ஆங்காங்கே தண்ணீர் ஒழுகிக் கொண்டிருந்தது. அவன் அன்று சாப்பிடாமல் அடம்பிடித்து நடுநிசியில் பெற்றேர்களை எழுப்பியிருக்கின்றான்.
அவன் சாப்பிட அடம்பிடித்ததும் தற்செயல்தானா? நடுநிசியில் எழுப்பியதும் தற்செயலாகத்தான் நடந்ததா?
இரவு 11. 55 மணி. இதோ நாங்கள் நின்று கொண்டிருக்கும், தனுஷ்கோடியின் பழைய இரயில்வே ஸ்டேஷன் நோக்கி, அந்த டிசம்பர் மாதத்தின் குளிரான இரவில், பாம்பன் இரயில்வே நிலையத்திலிருந்து, 115 பயணிகளுடனும், 5 இரயில்வே ஊழியர்களுடனும், வந்து கொண்டிருந்தது 653 எண் கொண்ட அந்த இரயில்.
திடீரென்று மின் விளக்குகள் எல்லாம் அணைந்து, இருட்டான அந்த தீவில், கடல் அலைகளின் சப்தம் மட்டுமே காதில் வாங்கிக்கொண்டு, அந்த இரயில் முன்னேறிச் சென்று கொண்டிருக்க, திடீரென்று உருவான அந்த புயலின் சீற்றம், கடலை கொந்தளிக்க வைத்து, பெரிய அலை ஒன்று அந்த இரயிலை நோக்கி வந்து கொண்டிருக்க,
என்ன நடந்ததென்று சுதாரிப்பதற்குள், அந்த இரயிலுடன் தொடர்புள்ள அனைத்து சிக்னல்களும் நின்றுவிட, அந்த அலை வந்து தின்று போனது அந்த இரயிலை.
இரயிலுக்குள் கடல் புகுந்துவிட்டதா? இல்லை கடலுக்குள் இரயில் புகுந்து விட்டதா? இது கரையா? கடலா? கனவா? என்று அத்தனை பேர்களும் தவித்துக் கொண்டிருக்க, அந்த இருட்டில் எவரும் உதவிக்கு வரவில்லை.
உதவிக்கு வர நினைத்திருந்தவர்களும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட, தனுஷ்கோடி ஸ்டேஷன் மாஸ்டர் சுந்தரராஜ் இரவில் வந்து சேர்ந்திருக்க வேண்டிய இரயில் இன்னமும் வரவில்லை என்ன ஆயிற்று என்று தனது வீட்டில் இருந்து கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்.
அவரது வீட்டுக்குள் கடல் நீர் புக ஆரம்பித்தது. தனது 5 வயது மகன், 3 வயது மகள் மற்றும் ஒரு கைக்குழந்தையுடன் அவர் தனது வீட்டை விட்டு வெளியே வரும்பொழுது திகைத்து போய் நிற்கிறார். அவர் நிற்பது கடலுக்கு நடுவே.....
கழுத்து வரை நீரில், மனைவி குழந்தைகளுடன் தனுஷ்கோடி இரயில்வே ஸ்டேஷனுக்கு அதிகாலை 4.30 மணிக்கு வந்து சேர்கிறார். அப்புறம்தான் அவருக்கு புரிகிறது தனுஷ்கோடிக்கு வந்த இரயில் கடலுக்குள் சென்று விட்டது என.
எவரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. 2 நாட்களுக்குப் பிறகுதான் இரயில் கவிழ்ந்த செய்தி வெளி உலகத்திற்கு தெரிய வருகிறது.
மூழ்கிச் செத்தவர்களை விடவும் சுதாரித்து மீண்டு நீந்தி வந்தவர்களும் மிதந்து கொண்டிருந்தவர்களும் பசியிலும் தாகத்திலும் செத்துப் போனார்கள்.
மிதந்து வருகின்ற பயணிகளின் உடல்களைக் கண்டும், ஊரே கடலாகிப் போன காட்சியைக் கண்டும், எதுவும் செய்யமுடியாமல் அந்த இரயில்வே ஸ்டேஷனில் தங்கியிருந்த அந்த குடும்பம் ஒரு வாரத்திற்குப் பிறகு மீட்பு கப்பலில் மண்டபம் வந்தடைந்தார்கள்.
தனுஷ்கோடியின் கடைசி இரயில்வே மாஸ்டர் சுந்தரராஜ், 2013 மே மாதத்தில்தான் இறந்தார்
========================
ரெயிலில் இருந்த அவ்வளவு பேரும் பலியாகிவிட்டார்கள். என்ஜினுக்கு கீழே டிரைவரின் பிணம் கிடந்திருக்கின்றது. கடல் எல்லாம் பிணங்கள். காப்பாற்றச் சென்றவர்கள், பிணங்களை எண்ணியபடி இருந்தார்கள்.
"வாவ் ஆவ்சம்" என்று நாங்கள் ரசித்து, புகைப்படங்கள் எடுத்த இந்த தனுஷ்கோடி சாலையில், பிணங்களை கழுகுகள் கொத்தித் தின்று கொண்டிருந்தன.
நறுமணம் தடவிக்கொண்டு பிரார்த்தனைக்கு வந்த மக்கள், இதோ இந்த பழைய சர்ச் அருகே அழுகிக் கிடந்தார்கள் எங்கு போனாலும் பிண நாற்றம்.
நாங்கள் தாகம் தாங்க முடியாமல் சர்பத் குடித்துக்கொண்டிருந்த இந்த வீதியில், உயிர் தப்பியவர்கள் கதறி அழுது கொண்டிருந்தார்களாம். சோறு, தண்ணீர் இல்லாமல் தவித்திருந்திருக்கின்றார்கள். பலர் குடும்பத்தோடு ராமேசுவரத்தை நோக்கி நடந்தே சென்றிருக்கின்றார்கள்
இதோ நாங்கள் கடந்து வந்த, இந்த ராமேசுவரம் தெருக்களில் உடைந்த படகுகள் கிடந்திருக்கின்றன. மழையில் உடைமைகள் அனைத்தையும் இழந்த ஒருவர், கட்டிக்கொள்ள வேட்டி இல்லாமல் இறந்து போன தன் மனைவியின் சேலையால் உடம்பை மூடி மறைத்துக்கொண்டு அழுது கொண்டிருந்திருக்கின்றார்.
மீன்பிடிக்கச் சென்றவர்கள், காற்று திசை தெரியாமல் எல்லை தாண்டிவிட்டால், சிறைபிடித்து சித்திரவதை செய்கின்ற இலங்கை அரசாங்கம், அப்பொழுது இங்கும் அங்கும் மாறிச் சென்று கரை சேர்ந்த பிணங்களையெல்லாம் அப்படியே புதைத்திருக்கின்றார்கள்.
எங்கள் கண் முன்னால் அந்த 1964 வந்து நின்றது. நாங்கள் அந்தக் காட்சிகளையெல்லாம் பார்த்துக் கொண்டே கடந்து சென்று கொண்டிருக்கின்றோம்.
எல்லாமும் அந்த 1 மணி நேரத்தில் முடிந்துவிட்டது. 2000 கிராம மக்கள், 150 பயணிகள் என்று பாதி கிராமமே அழிந்த நிலையிலும், அப்போது வந்து, உயிர் தப்பிய ஜெமினி கணேசன் - சாவித்திரி பற்றியும்தான் பரபரப்பாய் பேசிக் கொண்டார்களாம்.
கடலில் மூழ்கிப் போன 2000 பேர்களின் குடும்பங்கள், வாரிசுகள், உயிரை மிச்சம் பிடித்து வைத்திருப்பவர்களின் கனவுகளெல்லாம் இங்கு மீண்டும் ஒரு துறைமுகம் வராதா தங்கள் முன்னோர்கள் தங்கிய அந்த இடத்திலேயே அந்த ஆன்மாக்கள் திரிந்த அந்த மணலில் கடலில் தங்களது வாழ்நாளும் கழியாதா? என்று
சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீன் பிடித்துக் கொண்டும், முத்து மாலைகள் விற்றுக் கொண்டும், மீன்களைச் சுட்டு, சுற்றுலாப் பயணிகளுக்கு விற்றுக் கொண்டும் அந்த கனவு துறைமுகத்திற்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.
அவர்களிடம் கொஞ்சம் பேச்சுக் கொடுத்துப் பாருங்கள். தங்களையறியாமல் அந்தக் கதைகளை உங்களுக்கு சொல்ல ஆரம்பித்து விடுவார்கள்.
கடற்கரை சாலை - கடல் அலைகளின் காட்சிகள் - அழகிய கடலோர கிராமம் என்று கற்பனையில்தான் நாங்கள் இந்த பயணம் மேற்கொண்டோம். மிச்சத்துண்டுகளாய் நிற்கும் கட்டிடங்கள், கடற்கரையில் புயல் வீசியது என்று சொல்லிவிட்டு, சாதாரணமாய் கடந்து செல்ல முடியாத அளவுக்கு வலிகள் நிறைந்தது.
தனுஷ்கோடி சென்றால், சேதமடைந்த ஒவ்வொரு பகுதியையும் பாருங்கள். செழிப்பாய் வாழ்ந்த அந்த துறைமுகக்கிராமத்தில், நம்மைப் போன்ற மக்கள்தான் வாழ்ந்திருக்கின்றார்கள்.
அழகாய் வாழ்ந்து, தலைமுறைகளின் வளர்ச்சியை கண்டு, இந்த கடல்கரையின் அந்த நினைவுகளோடு வயது முதிர்ந்த ஒரு மரணத்தை அடைந்து, உற்றார் உறவினர்கள் சூழ, இவ்வுலக வாழ்வை விடைபெற்றுச் செல்லலாம் என்றுதான் நினைத்திருப்பார்கள் நம்மைப்போலவே...
அவர்கள் கடலில் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த உறக்கத்தின் அமைதியிலிருந்து வெளிக்கிளம்பும் அலைகள், உங்கள் கால்களை வந்து நனைக்கும்போது, உங்கள் வாழ்க்கை எவ்வளவு அழகானது என்று ஞாபகப்படுத்தும்.
பயணம் செய்யுங்கள். இந்த கணத்தை மகிழ்வாய் கடந்து செல்லுங்கள்.
- ரசிகவ் ஞானியார்