கர்நாடகா ஸ்ரீரங்கபட்டிணம், காவிரி உருவாக்கி வைத்த அற்புதத் தீவு. திப்பு சுல்தான் தன் அரசாங்கத்தை இந்த ஊரை தலைமையிடமாகக் கொண்டு அமைத்திருந்தார். நூற்றாண்டுகளை கடந்த பழமையும், நவீனமும் ஒரே புள்ளியில் சந்திக்கிற தீவு. ஊரின் வடமேற்கில் காவிரி இரண்டாகப் பிரிந்து மீண்டும் இணைகிறாள். நகரம் முழுக்க இடிந்து போன கோட்டைச் சுவர்களால் நிரம்பி இருக்கிறது. ஊரின் எந்த திசையில் சென்றாலும் கோட்டை சுவர்களின் மிச்சம் தென்படுகிறது. தன் தலைநகரை சுற்றி கோட்டைகள் அமைத்து, நடுவில் தன்னுடைய அரண்மனையை அமைத்துக் கொண்டது தெரிய வந்தது. இந்து, முஸ்லிம் ஒற்றுமைக்கு இன்று வரை இந்த ஊர் மிகப்பெரிய சாட்சி. ஊரை சுற்றி ஓடுகிற காவிரி நகரை எப்போதும் குளிர்ச்சியுறச் செய்கிறது. மிகப் பழமையான ஊர் என்ற போதிலும் கிராமத்து மணமே அதிகம் வீசுகிறது. ஊருக்குள் எங்கு பார்த்தாலும் கிளிகள் பறந்து கொண்டே இருக்கிறது. கிளிகளின் சத்தம் மனதை எளிதாக்குகிறது. திருவரங்கபட்டிணத்தின் வடமேற்கில் காவிரியின் மணல் திட்டுகளில் மையம் கொண்டிருக்கிறது ரங்கன்திட்டு பறவைகள் சரணாலயம். பல வெளிநாட்டு பறவைகள் வந்து குவிந்துள்ளன. காவிரியின் பரப்பை பறவைகள் மேலும் அழகாக்குகின்றன.

காவிரி ஆற்றில் படகில் சென்று கொண்டே பறவைகளை அருகில் சென்று காண முடிகிறது. பறவைகள் மனிதர்களை கண்டு அச்சம் கொள்ளாமல் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. பொதுவாக பறவையின் அருகில் சென்றாலே அவை பயந்து பறந்துவிடுவது, மனதில் அவமானத்தை கீறிச் செல்வது போல இருக்கும். ஆனால் ரங்கன்திட்டு கொஞ்சம் விசித்திரமாக இருந்தது. பறவைகள் பயம் கொள்ளவில்லை. ஆற்றில் இறங்கி நம்மை சீண்ட மாட்டார்கள் என உணர்ந்திருக்குமா எனத் தெரியவில்லை.

படகுகளுக்கு இணையாக ஆற்றில் முதலைகள் நீந்திக் கெண்டு வந்தன. ஆனால் என்னுடன் படகில் பயணித்த யாரும் முதலைகளைக் கண்டு அச்சம் கொள்ளவில்லை. முதலைகளை ஒரு ஆச்சர்யப் பொருளாகவேப் பார்த்தார்கள். முதலைப் பண்ணைகளில் அவற்றை ஒரு சடப்பொருள் போல பார்த்து பழகியவர்களுக்கு முதலையின் இயல்பான ஆக்ரோஷம் புரியாமல் இருப்பது வியப்பாக இருந்தது.

காவிரிக் கரையோர மரங்களில் வெளவால்கள் தொங்கிக் கொண்டிருந்தன. தூரத்தில் இருந்து பார்ப்பதற்கு தூக்கணாங் குருவிக் கூடுகள் போலவே இருந்தன. பகல் பொழுதில் அசைவற்று இருப்பதால் அவை வெளவால்கள் என்று உணரவே முடியாமல் இருந்தன. அரிதாக ஒன்றிரண்டு வெளவால்கள் இடமாற்றம் அடைந்தது. பறவைகளைப் போல வெளவால்கள் ரசிக்கப்படுவதில்லை. ஆனால் உண்மையில் மரங்களின் உற்பத்திக்கு அவை மிகப்பெரிய உறுதுணையாக இருக்கிறது.

நான் படகு இல்லம் அருகில் அமர்ந்திருந்தேன். ஒரு தனியார் தொலைகாட்சியின் ஒளிப்பதிவாளர் என் அருகில் வந்து அமர்ந்தார். அவரின் உதவியாளர்கள் நான்கு பேரும் உடன் வந்து அமர்ந்தார்கள். பறவைகளை பற்றிய நிகழ்ச்சியை பதிவு செய்ய வந்திருப்பதாக சொன்னார். பறவைகள் ஆங்காங்கே மரத்தில் அமர்ந்திருந்தன. ஒன்றிரண்டு பறவைகள் மட்டுமே பறக்கவும், பின் மீண்டும் மரங்களில் அமரவுமாக இருந்தன. ஒளிப்பதிவு செய்ய வந்தவருக்கு அது அழகாக தெரியவில்லை. தன் உதவியாளரிடம் கற்களை கொண்டுவரும்படி சொன்னான். தன்னுடைய ஒளிப்பதிவு நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக பறவைகளின் மீது கல் எறிகிறானே என ஆதங்கமாக இருந்தது.

நான் வேண்டாம் என்று சொன்னேன். ஆனால் அவன் உதவியாளரிடம் மேலும் கற்கள் வேண்டுமென்றான். பறவைகளின் கூட்டம் நோக்கி தன்னிடமிருத கல் ஒன்றை எறிந்தான். அது பறவைகளை அடையவில்லை. அதற்கு முன்னதாகவே ஆற்று நீரில் விழுந்தது. மீண்டும் ஒரு முயற்சி செய்தான். அதுவும் நீருக்குள் விழுந்து மூழ்கிப் போனது. பறவைகள் பயம் கொள்ளாதது அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது. கற்களோடு சேர்ந்து அவன் எண்ணமும் ஆற்று நீரில் மூழ்கிப்போனது. ஆனால் கரையில் இன்னமும் கற்கள் மீதம் இருக்கின்றன. பறவைகள் மனிதர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையின்மையின் சாட்சிகளாகக் கிடந்தன கற்கள்.

திப்பு சுல்தான் உருவாக்கியிருந்த சிறைச்சாலையை பார்க்க நேர்ந்தது. இன்று அது ஒரு காட்சிப்பொருள் மட்டுமே. அங்கிருந்த சுற்றுலாப்பயணிகள் அனைவரும் சிறைச்சாலையின் மேல் தளத்தில் இருந்து காவிரியாற்றை ரசித்துக்கொண்டிருந்தனர். அருகில் இருந்த தென்னை மரங்களில் கிளிகள் அமர்வதும் பறப்பதுமாக இருந்தன. காவிரியின் பரந்த அழகை அங்கிருந்து ரசிக்க முடிந்தது.

சம்மர் மஹால். திப்பு சுல்தான் ஆங்கிலேயருடன் போரிட்டதை சித்திரங்களாக பதிவு செய்து வைத்திருக்கிறது. எல்லா சுவர்களிலும் போர் சித்திரங்கள் . திப்பு தன் கடைசி மூச்சு வரை ஆங்கிலேயருடன் போரிட்டிருக்கிறார். எத்தனையோ குறுநில மன்னர்கள் ஆங்கிலேயரின் படையெடுப்பை தாக்குப் பிடிக்க முடியாமல் சரணடைந்திருக்கிறார்கள். ஆனால் திப்புவின் வீரமும் நம்பிக்கையும் நிச்சயம் பாராட்டுக்குரியது. திப்பு அணிந்திருந்த உடைகளை ஒரு கண்ணாடி பெட்டிக்குள் வைத்திருந்தார்கள். பட்டு வேலைப்பாடுகள் நிறைந்த ஆடை. ஆடையின் சில பகுதிகள் கிழிந்திருந்தன. அந்த ஆடைகளுக்கு திப்புவின் நினைவுகள் மிச்சமிருக்குமா? வரலாற்றின் சாட்சியங்களே வரலாற்றை உயிர்ப்போடு வைத்திருக்கிறதோ என்று தோன்றியது. திப்புவின் தேகத்தை மூடியிருந்த ஆடை திப்புவின் மூச்சுக்காற்றை எத்தனை முறை உணர்ந்திருக்கும்.

ரங்கநாத சுவாமி கோயிலுக்கு அந்த ஊரின் தெருக்கள் வழியாக நடந்து சென்றேன். இருநூறு வருடங்கள் கடந்த பழமையான வீடுகளும், அருகிலேயே புத்தம் புதிய வீடுகளும் மாறி மாறி இருந்தன. பசு மாடுகளின் போக்குவரத்தும், சாலைகளில் ஆங்காங்கே சாணமும் கிராமத்தை உணர வைத்தது. பெண்கள் மாலை நேரங்களில் தங்கள் வீட்டுத் திண்ணையிலோ படிகளிலோ அமர்ந்து பக்கத்துக்கு வீட்டு பெண்களிடம் அரட்டை அடித்துக் கொண்டிருதனர். தமிழ் நாட்டில் கிராமங்களில் கூட பெண்கள் சின்னத் திரையின் நெடுந் தொடர்களுக்குள் மூழ்கிப் போனது வருத்தமாக இருந்தது. திண்ணைகள் எவ்வளவு அற்புதமான இடம். மாலை நேரங்களில் திண்ணைகள் உயிர்ப் பெறுகின்றன. ஆனால் இன்று திண்ணை வைத்த வீடுகள் கட்டப்படுவதே இல்லை.

கோயிலின் வெளியே குதிரை சவாரிக்காக நிறைய குதிரைகள் நிறுத்தப்பட்டிருந்தன. திப்புவின் ஆட்சியில் குதிரைப் படையே இருந்தது. இன்றும் குதிரைகள் இருக்கின்றன. ஆனால் அவற்றின் பயன்பாடு முற்றிலும் மாறிப் போய்விட்டது. கோயிலை நோக்கிச் செல்லும் அந்த சாலையில் வாகனங்கள் வருவதும் போவதுமாக இருந்தன. ஒரு காலத்தில் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்ட குதிரைகள் இன்று வாகனங்களுக்கு வழி விட்டு சவாரிக்காக காத்துக்கொண்டிருந்ததன. எல்லா ஊர்க் கோயிலையும் போல அங்கும் காவி உடையில் சாமியார்கள் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார்கள். கோயிலைச் சுற்றிலும் காவிரி ஓடிக்கொண்டிருக்கிறது. காவிரியில் இருந்து பிரிந்த ஓடை கோயிலின் அருகே ஓடிக்கொண்டிருந்தது. ஓடையின் கரையில் சிறிது தூரம் நடந்து சென்றேன். ஓடையின் இரு புறமும் கருங்கற்கலாக இருந்தன. மனிதர்களின் நடமாற்றம் எதுவும் இல்லாமல் அமைதியாக இருந்தது. கற்களின் ஊடாக ஓடை எழுப்புகிற ஓசை மட்டுமே அந்த பகுதியில் நிறைந்திருந்தது. அடர்ந்த புதர்களும் மரங்களும் அந்தப் பகுதியை பசுமை கொள்ளச் செய்தன. ஒரு பாறையின் மேல் பெரிய சிவலிங்கம் வைக்கப்பட்டிருந்தது. அதன் அருகில் ஒருவர் தியானத்தில் அமர்ந்திருந்தார். நானும் சிவலிங்கத்தின் அருகில் அமர்ந்து கெண்டு ஓடையின் போக்கை கவனித்துக்கொண்டிருந்தேன். நான் அமர்ந்திருந்த பாறையின் அருகில் பச்சை நிறத்தும்பிகள் பறந்து கொண்டிருந்தன. கற்களின் மீது மோதி சுழன்றடித்த படி தண்ணீர் ஓடிக் கொண்டே ஒலி எழுப்பிக் கொண்டே இருந்தது. தண்ணீரின் மொழி இதுதானோ எனத் தோன்றியது. நீரின் போக்கைப் பொருத்து ஒலியும் மாறுபடும் எனில் தண்ணீரின் மொழியை அதன் கரைகளே முடிவு செய்யும் போலும்.

கோயிலின் வெளிப் பிரகாரம் அகலமானதாக இருந்தது. பழமையான கல் சுவரின் ஊடாக நிறைய மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டிருந்தன. கோயிலை கட்டும் போது, கால மாற்றம் கோயிலின் ஊடாக மின்சாரத்தை பாய்ச்சும் என யாரேனும் நினைத்துப் பார்த்திருக்க முடியுமா?கோவிலில் இருந்து சற்று தொலைவில் படித்துறை இருந்தது. இரவு மெல்ல கசியத் தொடங்கியது. படியில் அமர்ந்துகொண்டு ஆற்றை கவனித்து வந்தேன். ஆற்றின் மறு கரையில் இருந்த மரங்கள் மெல்ல மறையத் தொடங்கின. ஆற்றின் போக்குக்கு இணையாக வெளவால்கள் பறக்கத்தொடங்கின. அவை கூட்டம் கூட்டமாக பறந்து கொண்டிருந்தன. இத்தனை வெளவால்கள் கூட்டமாக பறப்பதை இங்குதான் பார்க்க நேர்ந்தது. பின் நாளில் கோவையிலும் மாலை நேரங்களில் இது போல வெளவால்கள் கூட்டமாக பறப்பதை பார்த்திருக்கிறேன். ஆறு இருளை விழுங்கத் தொடங்கியது. மனிதர்கள் நடமாட்டம் குறையவே ஆற்றின் பேரிரைச்சல் அதிகமானது. மனிதர்கள் உறங்கும் போது இயற்கை பேசத் தொடங்கிவிடும் போல. அல்லது இயற்கையின் பேச்சை மனிதர்கள் கேட்பதில்லையா? ஆறு எப்போதும் போல ஒலி எழுப்பிக் கொண்டே இருக்கிறது. ஆறு ஒரு போதும் உறங்குவதில்லை. அதன் உறக்கத்தை மழையே முடிவு செய்கிறது. ஆனால் ஆற்றின் மரணத்தை மனிதன் முடிவு செய்கிறான். இரவு நேரங்களில் ஆற்றில் இறங்க பயமாக இருக்கிறது. அதுவே ஆற்றின் பலமாகவும் இருக்கக் கூடும்.

மறுநாள் விடிந்தவுடன் அதே இடத்திற்கு வந்தேன். ஆற்றில் நிறைய பேர் குளித்துக் கொண்டிருந்தார்கள். ஆறு எல்லோரையும் தன்னுள் ஈர்த்துக் கொண்டது. ஆற்றோடு சேர்ந்து எல்லோரும் விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஆறு எல்லோருடைய கவலைகளையும் மறக்கச் செய்வதாக இருந்தது. ஆற்றோடு சேர்ந்து எல்லோரும் குழந்தைகளாகிப் போனார்கள். ஆனாலும் ஆறுகளை பாதுகாக்க வேண்டும் என்று ஏன் யாரும் மெனக் கெடுவதில்லை? ஆறு இவர்களுக்கு ஒரு விளையாட்டு பொருள் ஆகிவிடுமோ என பயமாகவும் இருந்தது. ஆற்றை கடக்கும் ரயிலின் படிகளில் நின்றபடி ஆற்றை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள் பயணிகள். ரங்கன்திட்டு பறவைகளில் ஒன்றிரண்டு ஆற்றின் மேலே பறந்து கொண்டிருந்தது. நான் ஆற்றில் இறங்கினேன். ஆற்றின் நடுவில் இருந்த பாறையின் நடுவில் வந்தமர்ந்த கொக்கு மீண்டும் பறக்கத் தொடங்கியது. நான் ஆற்று நீரில் மூழ்கியிருந்தேன்.
(இளைஞர் முழக்கம் ஜூலை 2011 இதழில் வெளியானது)
Pin It