அம்மணக்குண்டி இந்திய அரசின் அடுத்த ஹாரர் மூவி ரிலீஸாகயிருக்கிறது. இம்முறை இந்திய மண்ணிலேயே இந்தத் திரைப்படம் அரங்கேறும். ஆளைப் பார்த்தால் அம்மாஞ்சியாக இந்த பூனையும் பீர் குடிக்குமோ என்று இருக்கும் நம்மூரு சிவகங்கைச் சின்னப்பய (கருணாநிதியின் வார்த்தைகள்தான், தேர்தல் காலம் என்பதால் அவர் மறந்து போயிருக்கலாம், நமக்கு ஞாபக சக்தி ஜாய்ஸ்தியப்பூ..) ப(டுபாவி).சிதம்பரம்தான் இந்தத் திரைப்படத்தின் தளகர்த்தர் மற்றும் சண்டைப்பயிற்சி இயக்குநர். சண்டை எப்படியென்றால் சும்மா பெருங்கூட்டமாய் வில் அம்பு போன்ற அதிபயங்கர நவீன ஆயுதங்களோடு திரண்டிருக்கும் நூறுபேரை வெறும் ஆயிரம் பேர் சாதாரணமான பழங்கால ஆதிகுடிகள் பயன்படுத்தும் ஏகே 47 மற்றும் இன்சாஸ் போன்ற ஆயுதங்களால் வெல்வதுதான். என்னத்த சொல்லி அழுவது? காலக்கொடுமைக்கு பெருச்சாளி காவடி எடுத்தமாதிரி நம்மள பிடிச்ச எளவுக்கு அந்த அமெரிக்காவின் செப்ட‌ம்பர் 11 விவகாரத்தால இந்த சிவகங்கை சின்னப்பயலெல்லாம் ராஜதந்திரியாயிட்டார். உன்னச்சொல்லி குத்தமில்ல என்ன சொல்லி குத்தமில்ல காலம் செய்த கோலமடி… சரி விடுங்க மீண்டும் சண்டைப்ப‌டத்தைப் பற்றிப் பேசுவோம்.

paresh_baruahஇந்த சண்டைப்படம் எப்படிப்பட்டதென்றால் சுமார் நான்கு அய்ந்து நாடுகள் ஒன்றுசேர்ந்து மக்களுக்காக போராடுகிற பயங்கரவாதிகளை (மக்களுக்காக போராடினால் பிறகென்ன பாரத ரத்னா அவார்டா தரமுடியும்) உருத்தெரியாமல் அழிப்பதுதான். என்னடா இந்த சண்டைப்படத்தையும் அண்ணன் கௌதம் மேனன் மாதிரி ஈழத்திலிருந்து நம்ம சிதம்பரம் ஆட்டையைப் போட்டுட்டாரா என்று வியந்திருந்து வாயில் விரலை வைக்கும் அப்பாவிகளுக்கும் அடப்பாவிகளுக்கும் ஒரு சிறிய விளக்கம். ஈழத்தில் மேற்சொன்ன கதைப்படி ஓடிய திரைப்படமும் இப்போது இந்தியாவில் அதன் புத்தம்புதிய காப்பியாக ஓடவிருக்கும் திரைப்படத்தின் புரொடியூசரும் அன்னை சோனியா (தூரத்தில் வாழ்க கோஷம் கேட்குதா… சோனியா பேரைக் கேட்டாலே விடுதலைச்சிறுத்தைகள் வாழ்கனு நரம்பு புடைக்க கோஷம் போட்டிருராய்ங்கப்பா) மற்றும் மன்மோகன் சிங்தான். என்ன சொல்வது என்னதான் தமிழகத்தின் முன்னாள் மாவோவியர்கள் புதிய போராளி கோஷங்களாக வரலாறு திரும்பாது என்றாலும் பாட்ஷா ரஜினி மாதிரி வரலாறு மூன்று முறை சும்மா சர் சர்னு திரும்பும் போலிருக்கிறதே.

       அசோமைச் சேர்ந்த இந்திரா கோஸ்வாமி (மமோனி ராய்சம் கோசுவாமி) கடுமையான உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆங்கில இலக்கியங்களில் இவரின் எழுத்துக்கள் மிகவும் பிரபலமானவை. ஆனால் அதைப்பற்றி பேச இது நேரமில்லை. அதைப்பற்றி நான் தமிழர்களிடம் இந்நேரத்தில் பேசினால் மமோனி அக்காவிற்கு கோபம் வந்துவிடும். ஏனென்றால் அவரின் இனமே அழியும் தருவாயில் இருக்கும்போது இலக்கியம் என்ன புண்ணாக்கு என்று என்னை அடிக்க வந்தாலும் வருவார் எம் அருமை மமோனி. ஆம் தோழர்களே நினைவில் வையுங்கள். இன்னும் ஒன்று அல்லது இரண்டு வருடங்களில் பெரும்பான்மையான அசோமியர்கள் பயங்கரவாதிகள் என்று கொல்லப்படுவார்கள். மேலும் பலபேர் நிவாரணமுகாமில் அடைக்கப்படுவார்கள். இந்த முறை இந்து ராம் நிவாரண முகாம் சூப்பருப்பு என்று எழுதமாட்டார். நான் சஞ்சய் ராமசாமிய லவ் பண்ணலப்பபா என்று சொல்லும் கஜினி அசின் மாதிரி சண்டையே நடக்கல என்று ஒரே போடாக போட்டுவிடுவார். அப்பால இஸ்டரி அல்லது ஜாக்ரபி அதை இடதுசாரித்தனம் என்று சொல்லும் (இஸ்டரி வாத்தியார் நம்ம பிரகாசு காரத் என்பதை நான் சொல்லித்தெரிய வேண்டியதில்லை).

மமோனி அக்கா உல்பாவின் தீவிர ஆதரவாளர். உல்பா முன்பு அமைத்த அமைதிப்பேச்சுவார்த்தைக்கான குழுவில் தலைமை வகித்தவர். அந்த பேச்சுவார்த்தை ஆரம்பித்த சிறிது நாட்களிலேயே முடிவுக்கு வந்தது. பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்ததற்கு காரணம் ஒரே ஒருவர்தான் என்று இந்திய வெள்ளையரசின் ஊடகங்கள் கூக்குரல் போடுகின்றன. அந்த ஒருவர் யாரென்று தெரிய ஆவலாகயிருக்கிறதா? அவர்தான் பரேசு பரூவா. அத்தனைபேரும் பேச்சுவார்த்தைக்கு தயாராகயிருந்ததாகவும் அப்படி தயாராகயிருந்த அந்த லட்சக்கணக்கான அசோமியர்களை பரேசு பரூவா என்ற ஒற்றை மனிதன் தனது 9 எம்எம் கைத்துப்பாக்கியால் சுட்டுவிடுவேன் என்று பயமுறுத்தி பேச்சுவார்த்தையை நிறுத்திவிட்டதாகவும் இப்போது அசோம் பயங்கரவாதத்தினால் தவிப்பதாகவும் அண்ணன் சிதம்பரம் கண்ணீர்விடுகிறார். வாசகர்களுக்கு கோபம் வரலாம். என்னடா பேச்சுவார்த்தைக்கு இந்திய அரசு தயாராகயிருந்தாலும் ஏன் இந்த பரேசு பரூவா என்ற ஒற்றை மனிதர் ஏன் தடுக்கிறார் என்று கோபம் வரலாம். ஆனால் உண்மை எப்போதும் இந்து போன்ற ஆங்கில பத்திரிக்கைகளில் வருவதில்லை (வடிவேலு காமெடி மாதிரி ஆங்கிலப்பத்திரிக்கை பொய்சொல்லாது என்ற நம்பிக்கை இன்னும் நம் நடுத்தர மக்களுக்கு இருக்கிறது).

நடந்தது என்னவெனில் உல்பா இயக்கம் அசோமின் விடுதலைக்காக ஆரம்பிக்கப்பட்ட இயக்கம். இந்திய துணைஏகாதிபத்தியத்தின் மரணப்பிடியிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்வதற்காக அசோமிய மக்களால் 1979ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இயக்கமே உல்பா. ஆனால் பேச்சுவார்த்தையில் இந்தியா உல்பாவை நானும் முன்நிபந்தனையின்றி பேச்சுவார்த்தைக்கு வருவேன் நீயும் முன்நிபந்தனையின்றிதான் வரவேண்டும் என்று அறைகூவல் விடுத்தது. அதாவது நீங்கள் அசோமிய விடுதலை பற்றி பேசக்கூடாது. நானும் பேசமாட்டேன் என்பதுதான் அந்த முன்நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை. இந்த இந்தியா சங்காத்தம் வேண்டாம் என்று பிரிந்து போகும் உரிமைக்காகத்தான் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டதே. ஆனால் உல்பாவிடம் இந்த கொழுப்பெடுத்த முன்நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கான அறைகூவல் இந்திய அரசால் விடுக்கப்பட்டது.

இது எப்படியிருக்கிறதென்றால் நானும் அம்மணக்குண்டியா வருவேன் நீயும் அம்மணக்குண்டியா வரணும் என்பதுபோல் இருக்கிறது. ஆனால் பரேசு பரூவா என்ற அசோமியத்தலைவன் அதை மறுத்தான். ஆடை அணிவதற்காகத்தான் நாங்கள் போராடுகிறோம். எனவே ஆடை அணிவது என்பதை நோக்கியே எங்கள் முன், பின் மற்றும் பக்க நிபந்தனை அமையும் என்று உரக்க முழங்கினான். அசோமிய விடுதலையே பேச்சுவார்த்தையின் முன்நிபந்தனை என்று உரக்க முழங்கினான். ஆனால் இந்திய அரசின் ஊடகங்கள் பாருங்க பாருங்க பரூவா முன்நிபந்தனையை பேச்சுவார்த்தைக்குத் தடையாக வைக்கிறார் என்று ஆரம்பித்து ராக்கம்மா எவனையோ வச்சிருக்காளாம் என்ற கதையாக பரூவா பாசிஸ்டு என்றும் அவர் ஆயுதபாணி அரசியலைத் தொழுகிறார் என்றும் கதை கட்ட ஆரம்பித்தன‌. பேச்சுவார்த்தையை முறித்தது உல்பாதான் என்று கதைகட்ட ஆரம்பித்தார்கள் இந்த கோயபல்சுகள்.

சமாதானம் வேண்டி ஈழப் போராளிகளோடு பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என்று ஏதோ இலங்கை அரசியல்வாதிகள் 'உங்கா உங்கா' என்று பச்சைக்குழந்தையாய் கதறி அழுததாகவும், தேசியத்தலைவர் அதை மறுத்து ம்ஹூம் நான் சண்டைதான் போடுவேன் எனக்கு சண்டை ரொம்பப் பிடிக்கும் என்று சொன்னதாகவும் இந்து ராம் ஊளையிட்டாரே, அதே கதைதான் இங்கும். அதன்பின்பாக ஈழத்திற்கெதிராக என்னவெல்லாம் நடந்தததோ அதேதான் இங்கும் நடந்தது. அந்தக் கதையை தெரிந்துகொள்வதற்கு முன்பாக நாம் அசோம் நாட்டின் பூகோள எல்லைகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

அசோம் நாடு (மாநிலம் என்று இந்திய மேலாதிக்க அரசால் அழைக்கப்பட்டாலும் அதை முற்போக்காளர்கள் தனிநாடு என்றே கருதுகிறார்கள்) இந்திய இணைப்பிற்கு பின்பு பூகோள ரீதியில் ஒரு முக்கியமான இடத்தில் அமைந்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களுக்குள் (ஒரே ஒரு மாநிலமான சிக்கிமைத்தவிர, மற்ற மாநிலங்களான அருணாச்சல் பிரதேசம், திரிபுரா, மணிப்பூர், நாகாலாந்து மற்றும் மேகாலயா) இந்தியாவிலிருந்து தரைமார்க்கமாக நுழையவேண்டுமானால் நீங்கள் அசோமின் எல்லையைத் தொடாமல் நுழைய முடியாது. இந்த ஓர் உதாரணமே போதும் இந்தியாவிற்கு அசோம் ராணுவரீதியில் எவ்வளவு முக்கியமானது என்று. அந்த அசோமை தனியாகக் கேட்டால் இந்தியாவுக்கு கோபம் வராதா பின்னே. அதுபோக கனிம வளங்களும், இயற்கை வளங்களும் (தேயிலை உற்பத்தியில் முதலிடம்) இன்னபிற வளங்களோடும் அந்த பூமி இருப்பதும் அப்படிப்பட்ட கனிமவளங்கள் நிறைந்த பூமியின்மீது அதன் மதிப்புத் தெரியாமல் இந்த முட்டாள் அசோமியர்கள் ஆய்போவதும், குடியிருப்பதும்… ச்சீய்… பொறுப்பார்களா நமது பன்னாட்டு கம்பெனிகள்? படையெடுக்கச் சொல்லவிட்டார்கள். இப்போது சத்தீஸ்கரில் பேயாட்டம் ஆடி பின்பு டவுசர் கிழிபட்டு கட்டத்துரையிடம் அடிபட்ட கைப்புள்ள கணக்காக மாவோவியர்களிடம் அடிபட்டு ஓடிய கோப்ரா படையினர் உல்பாவின் மீதாவது பாய்ந்து 'டேய் நாங்களும் ரௌடிதாண்டா' என்பதை நிரூபிக்க ஆயத்தமாக உள்ளார்கள்.

அதுபோக அசோமிற்கும் நம் ஈழத்திற்கும் சிலபல ஒற்றுமைகள் உண்டு. பூகோள ரீதியில் இவையிரண்டும் மிகமுக்கியமான இடத்தில் அமைந்துள்ளன. அசோமிலிருந்து பூடான் மற்றும் வங்காளதேசத்திற்கும் ஒருசில மாநிலங்களைக் கடந்தால் (மிசோராம், மணிப்பூர், நாகாலாந்து) பர்மாவிற்கு சென்றுவிடமுடியும். மேலும் சீனாவிற்குள் நுழைய வேண்டுமானால் பூட்டானையும், அருணாச்சலப்பிரதேசத்தையும் கடக்கவேண்டும். அவ்வளவுதான். கடவுச்சீட்டு போன்ற எந்த வகையறாவும் தேவையில்லை. முழுவதும் காடுகள்தான். ஏலேலோ அய்லசா, ஏலேலம்மா அய்லசா என்று பாடிக்கொண்டு சோத்துமூட்டையை கட்டிக்கொண்டு கடந்துவிடலாம்.

விடுதலைப்புலிகளும் உல்பாவினரும் தேசியவிடுதலைக்காக ஆயுதமேந்தி போராடுபவர்கள். ராணுவ ரீதியில் உலகின் எந்த இயக்கத்தைவிடவும் புலிகள் மிக மிக வலுவோடு இருந்தவர்கள் என்றாலும் தெற்காசிய பிராந்தியத்தில் புலிகளுக்கும் நேபாள மாவோவியர்களுக்கும் அடுத்தபடியாக தளப்பகுதிகளை நோக்கி முன்னேறியவர்கள் என்ற முறையில் உல்பாவிற்கு மூன்றாமிடம் அளிக்கலாம் (நாகாலாந்து தேசிய விடுதலைப்படை மற்றும் மணிப்பூர் விடுதலைப் படையினரின் ராணுவரீதியிலான படைவலிமையில் எனக்கு மிகுந்த அறிவில்லை).

அதுபோக உல்பாவின் 28ம் பட்டாலியனைக் கண்டு முழுக்கால்சட்டையில் ஆய்போன இந்திய ராணுவவீர சூரப்புலிகளைப்பற்றி நான் கேள்விப்பட்டுள்ளேன். புலிகள் அளவிற்கு பரந்தளவில் வெளிநாட்டுத்தொடர்பு உல்பாவின் வெளியுறவுத்துறைக்கு இல்லையென்றாலும் பூடான், வங்காளதேசம் மற்றும் பர்மா போன்ற நாடுகளில் அவர்கள் வலுவாகயிருந்தார்கள். இப்போது முன்புபோல் இல்லை என்றாலும் ஓரளவிற்கு வலுவாகயிருக்கிறார்கள். மேலும் புலிகள் மீது என்ன முத்திரையெல்லாம் (பயங்கரவாத இயக்கம், தேசியத்தலைவர் பிரபாகரன் பாசிஸ்டு, அப்பாவிகளைக் கொன்றவர்கள்) போன்ற அத்தனை முத்திரைகளும் உல்பாவின் மீதும் உண்டு. அந்த குற்றச்சாட்டுக்களையும் அதற்கான விளக்கங்களையும் நாம் பின்வரும் பத்திகளில் காண்போம். அதுபோக முக்கியமாக எப்படி ஈழத்தின் சிறப்புமிக்க எழுத்தாளர்கள் ஈழ தேசியப்போரை உலகெங்கும் தமது எழுதுகோல்களால் கொண்டு சென்றார்களோ, அதுபோல அசோமிய எழுத்தாளர்களும் தம்மால் முடிந்தளவிற்கு உலகத்தின் குருட்டைக்கண்ணை தமது எழுதுகோலின் நெப்பால் நெம்மித்திறக்க முற்பட்டார்கள். இன்னொரு கொடூரமான ஒற்றுமையாக ஈழப்போரின்போது புலிகள் எப்படி இரண்டாம் மட்ட முக்கிய தலைவர்களை இழந்து தவித்ததோ அதுபோல உல்பாவும் இரண்டாம் மட்ட தலைவர்களின் மறைவாலும், ஆதரவாளர்களின் (இந்திரா கோசுவாமி)கடுமையான உடல்நலக்குறைவால் செயல்படாமின்மையாலும் தவிக்கிறது.

சரி. நாம் இப்போது உல்பாவின் மீதான குற்றச்சாட்டுக்களைப் பார்ப்போம். நமது புலிகள் மீது கொட்டும் மழையில் வர்ணம் பூசிவிட்டு 'ஆகா ராசாவேசம் கலைஞ்சு போச்சு டும் டும் டும், புலிதான் பூனையாயிருச்சு டும்டும்டும்' என்று டுமுக்கு தட்டினார்களோ, அவர்கள்தான் உல்பாவினர் மீதும் குற்றச்சாட்டுகள் வைத்தனர். அவைகளில் ஒன்று இந்தி மொழிபேசும் மக்களை அவர்கள் அசோமிலிருந்து விரட்டியதாக மற்றும் அவர்களை கொன்று குவித்ததாக. இந்த குற்றச்சாட்டுக்களும் உண்மைதான். அதை நாம் மறுப்பதற்கொன்றுமில்லை. ஆனால் அதற்கு முன்பாக நாம் தேசிய போராட்டத்தின் வரலாற்றையும் பார்க்க வேண்டும். பிரெஞ்சு புரட்சியின் மூலம் எப்படி பாட்டாளிவர்க்கம் பாடம் கற்றுக்கொண்டு ரசியாவில் புரட்சியை செம்மையாக நடத்தி முடித்ததோ, அதுபோலவே உடமை வர்க்கங்களும் தமது தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொண்டே நடைபோடுகின்றன.

உதாரணமாக பிரெஞ்சில் நடந்த பாரிஸ் கம்யூனில் பாட்டாளிவர்க்கத்தால் நெஞ்சில் குத்துப்பட்ட நிலவுடமை வர்க்கமும், முதுகில் குத்துப்பட்ட முதலாளி வர்க்கமும் தாம் பட்ட தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு நிலவுடமை வர்க்கம் முதலாளி வர்க்கத்தின் எதிரியாக இருந்தாலும் அதைவிட பெரிய எதிரியான பாட்டாளி வர்க்கத்தை அழித்தொழிக்க கூட்டுச்சேர்ந்து செயல்பட ஆரம்பித்தன. அதன் விளைவே இந்தியா ஒரு அரைநிலவுடமை மற்றும் அரைக்காலனிய நாடு. அதைப்போலவேதான் எப்படி தேசிய இனத்தின் போராட்டங்கள் பல்வேறு தோல்விகளிலிருந்தும் வெற்றிகளிலிருந்தும் பாடம் கற்றுக்கொண்டு இன்று நடைபோட்டுக்கொண்டிருக்கிறதோ (நாடு கடந்த தமிழீழம் ஓர் உதாரணம்) அதேபோல ஒடுக்குமுறை அரசுகளும் தமது நடைமுறைத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு போராடும் மக்களை அவர்களின் இயக்கங்களை அழிக்கத் தலைப்படுகிறார்கள்.

உதாரணமாக ஸ்காட்லாந்து தேசிய இனப்போராட்டத்தை ஒடுக்க இங்கிலாந்து பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டது. அதில் ஒன்றுதான் பிரிமா நோக்டிஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் நிலப்பிரபுக்களுக்கான பாலியல் உறவு உரிமை. அதாவது அந்த நிலப்பிரபுவின் கட்டுப்பாட்டில் இருக்கும் குடியானவப்பெண் திருமணம் செய்துகொண்டால் அவள் தனது திருமணத்திற்குப் பின்பு முதலில் படுக்கையை நிலப்பிரபுவிடம்தான் பகிர்ந்து கொள்ளவேண்டும். அதன்பின்புதான் அவள் தனது கணவனுடன் பாலியல் உறவு கொள்ளவேண்டும். தேசியப்பிரச்சனை மேலோட்டமாகப் பார்த்தால் மிகவும் பிற்போக்கானதாகவே தோன்றும். அது ஒரு முதலாளித்துவ கோரிக்கையாக தோன்றும். ஆனால் அப்படி யாரும் எடுத்துவிடக்கூடாது. இக்காலச்சூழலில் அப்படி எடுத்தால் அவர்களை இரண்டாம் பொதுவுடமை அகிலத்தின் தலைவர்களின் வாரிசுகள் என்று தோழர் ஸ்டாலினின் மொழியில் அழைக்கலாம்.

prabaharan_262அதுபோக தேசிய இனம் ஒரு குருதியின் மீது கட்டப்பட்டுள்ள ஒரு நிறுவனம் (ஆனால் இது ஒரு சற்று கொச்சையான புரிதலே)போன்று தெரியும். உதாரணமாக நான் தமிழனுக்குப் பிறந்தததால், தமிழ் மொழியைப் பேசுவதால் அதன் பண்பாட்டோடு ஒன்றிக் கலந்தததால் அந்த பொருளாதார அமைப்பிற்குள் ஒன்றி வாழ்வதால் நான் தமிழன். கூர்மையாகப் பார்த்தால் இது குருதிதேசியம்போல் தோன்றும். ஆனால் அது வரலாற்றில் மிகவும் முற்போக்கு பாத்திரத்தை பெற்றுள்ளது. இந்த குருதி தேசியக்கருத்துக்களை உடைத்ததில் விடுதலைப்புலிகளுக்கு வரலாற்றில் மிகப்பெரிய பாத்திரம் உண்டு. அவர்கள் தோழர்கள் அடேல் மற்றும் விஜிதா ஆகியோர் வேறு தேசிய இனங்களைச் சேர்ந்தவர்கள் என்றாலும் (அதிலும் தோழர் நடேசனின் வாழ்க்கை இணையான தோழர் விஜிதா சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்) அவர்களை தமிழர்களாக ஏற்றுக்கொண்டவர்கள்.

ஆனால் அசோம் போன்ற சில் தேசிய இனங்கள் சில நேரங்களில் கறாரான குருதி தேசியம் பேசக்காரணம் அவர்களை ஒடுக்குகின்ற ஆளும் வர்க்கங்களே. இங்கிலாந்து தேசிய இன ஆளும் வர்க்கத்தினர் ஸ்காட்லாந்து தேசிய இனப்போராட்டத்தை ஒடுக்கவியலாமல் திணறியபோது மேற்சொன்ன பிரிமா நோக்டிஸ் என்ற நிலப்பிரபுக்களின் தேசிய உரிமைகளை கையிலெடுத்தது. இதன்மூலம் வரும் சந்ததி ஸ்காட்லாந்தினராக இல்லாமல் ஸ்காட்லாந்து அம்மா,  இங்கிலாந்து அப்பா (ஆளும் வர்க்கம் என்ற கலவை ஆணாதிக்கம் என்பதானாலும் ஆனது என்று பேராசான் ஏங்கெல்ஸின் வார்த்தைகள் இங்கே மெய்ப்படும்) எனும் கலவையாக இருக்குமாறு பார்த்துக்கொண்டதன்மூலம் போராட்டங்களை குருதியின் மூலம் தோற்கடிக்க முயற்சித்தது. இதைக் கண்ணுற்ற ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் சிலசமயங்களில் குருதி தேசியம் பேசவேண்டிய நெருக்கடியான நிலைக்கு வேறுவழியின்றித் தலைப்பட்டன, தள்ளப்பட்டன. இந்த அடிப்படையில் தான் உல்பா பீகார் மற்றும் இதர இந்தி பேசும் அப்பாவி மக்களை அடித்தும் கொன்றும் தமது இனத்தூய்மையைக் காக்கவேண்டிய சங்கடமான நிலைக்கு ஆளாயின. இந்த வரலாறை விட்டுவிட்டு ஏதோ இது உல்பாவின்மீது காயும் நண்பர்களுக்கு 'நாம் ஏந்த வேண்டிய ஆயுதங்களை எதிரியே தீர்மானிக்கிறான்' என்ற மார்க்சிய பேராசானின் வார்த்தைகளை காணிக்கையாக்கலாம்.

அதுபோக உல்பாவினர் இந்திய அரசின் ஆயுதங்தாங்கிய பன்முனை ஒடுக்குமுறையை ஆயுதப்போராட்டம் என்ற பதிலால் எதிர்த்தார்கள். இதுபோதாதா நமது அ.மார்க்சின் அசோம் ஜெராக்ஸ் காப்பி கும்பலுக்கு. அய்யய்யோ அம்மா என்று கதறி அழுது உல்பாவின் போராட்டம் வெற்றிபெறாது. லீனா மணிமேகலை கவிதைமூலமாகத்தான் புரட்சி சாத்தியம் (எந்தப் புரட்சியென்றெல்லாம் கேட்கக்கூடாது, கருத்துக்களை கச்சிதமாக கவ்விக்கொண்டால் உங்களுக்கும் ஒரு ககக போதான்) என்று கதறி அழுது, ஆயுதப்போராட்டம் என்பது ஒரு குழப்பமான சூழலை இன்று எதிர்கொண்டுள்ளது. எனவே ஆயுதங்களைப் போட்டுவிட்டு, அசோமிய பெண்கள் ஒரு செக்சு கவிதை எழுதி இந்திய ராணுவத்திடம் தரவேண்டும். அதைப் படித்துவிட்டு அப்படியே இந்திய ராணுவம் இந்தாப்பா உங்க அசோம் என்று சொல்லி சோபாசக்தியை பார்த்த பெண்பிள்ளைகள் மாதிரி ஓடிப்பதுங்கிவிடும் என்று அறிவுரைகளை வாரிவழங்க ஆரம்பித்துவிட்டார்கள். இந்த அவரைக்காய் கூட்டெல்லாம் ஏற்கனவே அவித்து தொங்கி நாறியதுதான். ஆனால் உலகெங்கும் பேராசான் மாவோ விரட்டியடித்த பூதங்கள் புதிய நிறத்தில் வெளிவர ஆரம்பித்துவிட்டன.

உலகெங்கிலுமுள்ள முன்னாள் ஆயுதப்போராட்ட பயந்தாங்கொள்ளிகள் மற்றொரு மாபெரும் விவாதம் என்ற பெயரில் ஒரு புண்ணாக்கு விவாதத்தை துவக்கியுள்ளன. ஆனால் அது தோழர் லெனினின் மொழியில் சொல்வதென்றால் மஞ்சள் பூதம் பச்சை நிறத்தில் வந்த கதைதான். அதாவது சமூக சனநாயகவாதிகளும் வலது சந்தர்ப்பவாதிகளும் முன்பே முன்வைத்து தோற்றோடிய கருத்துக்கள். 'ஆயுதப்போராட்டம் இந்தச் சூழலுக்குப் பொருந்தாது.' அகப்பை சட்டிக்கு பொருந்தாது கதைதான். இவர்கள் ஆயுதப்போராட்டம் மற்றும் மாவோவின் நீண்டகால மக்கள் யுத்தத்தை நடைமுறைச் சூழலுக்குப் பொருந்தி அதன்மூலம் இந்த முடிவுக்கு வந்தவர்களல்ல. மாறாக புரட்சியை தமது ஆயுளுக்குள் பார்த்துவிடவேண்டும் என்று புரட்சிக்கு ஒரு நேரம் வரித்து அதற்குள் வராது என்று காலச்சூழல் உணர்த்தினால் ஆயுதப்புரட்சிக்கு டாட்டா அவரைக்காய் கூட்டா கதைபாடியவர்கள். தமிழக மாவோவியர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்திய கும்பல் தனது விளக்க(குமாறு)வுரையில் நீண்டகால மக்கள் யுத்தத்தை 'நீண்டடடடடட' என்று பகடி செய்தது தமிழக மக்களுக்கு நினைவிருக்கும்.

ஆம் இந்திய அல்லது தெற்காசிய சூழலில் நீண்டகால மக்கள் யுத்தமும் அக்கம்பக்கமான ஆயுதப்போராட்டமுமே சரி என்பதை தோழர்கள் பிரசந்தாவும் பிரபாகரனும் பல தளப்பகுதிகள் கண்டு நிரூபித்தார்கள். ஆனால் இந்த ஆயுதப்போராட்டம் ஒத்துவராது அது வெறும் சமமான (வெள்ளையரசுப்படைகளும் சிவப்புப்படைகளும்) பலத்திலேயே நின்றுபோகும் என்று, காத்மாண்டு சுற்றி வளைப்பு வெற்றிபெறாத போது நேபாள மாவோவியர்கள் முடிவெடுத்து பன்றித்தொழுவத்தில் நுழைந்து அதற்கு அய்நாவையும் துணைக்கழைத்து இன்று முட்டுச்சந்தில் நிற்கிறார்கள் நம் நேபாள மாவோவிய தோழர்கள். ஆனால் வடிவேலுவின் புல்லட் பாண்டி கதையாக இதை வெற்றி வெற்றி என்று குரலெழுப்பிக்கொண்டு சில சில்லறைகளும், உண்மையிலேயே புரட்சியின்மேல் மாறாத அன்பு கொண்ட சில தோழர்களும் ஈழம் பின்னடைவிற்குள்ளானதற்கு காரணம் ஆயுதப்போராட்டத்தை புலிகள் கைவிடாததே என்று இன்னமும் கதைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஒன்றை மறக்கிறார்கள். எதிரியே நமது ஆயுதத்தை தீர்மானிக்கிறான். மற்றொன்று ஆயுதப்புரட்சியை நாம் செய்யாதபோது அரசியலே போராட்டம். அரசியல் போராட்டத்திற்கான சூழல் இல்லாதபோது ஆயுதப்போராட்டமே அரசியல். இதைத்தான் புலிகளும் ஈழத்தில் செய்தார்கள். இதைத்தான் உல்பாவும் அசோமில் செய்கிறார்கள்.

வடகிழக்கு மற்றும் காசுமீர் போன்ற மாநிலங்களின் அமைதிவழியான போராட்டங்களை   இந்திய அரசு ஆயுதங்களால் எதிர்கொண்டது. மேலும் வடகிழக்கு மாநிலங்களில் நிலவும் ஆட்தூக்கி சட்டங்களும், ராணுவத்தின்  அடாவடிகளும் ஊரறிந்த செய்தி. இதற்கு மேலும் உதாரணங்களாக மணிப்பூரின பெண்களின் நிர்வாணப் போராட்டங்களும் ஐரோம் சர்மிளாவின் கடுமையான தொடர் உண்ணாவிரதம் இந்தியாவால் மயிரளவும் மயிரின் நுனியளவும் மதிக்கப்படவில்லை. இதுபோன்ற நீண்ட நெடிய அறப்போராட்டங்கள் அசோமிய விடுதலைப் போராட்ட வரலாறு முழுவதும் நிரம்பிக் கிடக்கின்றன. ஆனால் அசோமியாகளின் இதர அறவழிப்போராட்டமுறைகளும் அவைகளின் கோரிக்கை மனுக்களும் இந்திய அரசின் மலந்துடைக்க மட்டுமே பயன்பட்டன என்பது நான் சொல்லத் தெரியவேண்டியதில்லை. எனவேதான் உல்பா ஆயுதங்களை கையில் எடுத்து தமது விடுதலைக்கு போராடவேண்டிய சூழலுக்கு ஆட்பட்டது.

ஆனால் இந்த ஆயுதப் போராட்டங்களின் வீரியத் தாக்குதல்களையும், அதற்கான மக்கள் ஆதரவையும் கண்டு அஞ்சி நடுங்கிய இந்த ஆளும் வர்க்க காகிதப்புலிகள் ஆயுதப்போராட்டம் வெற்றி பெறாது என்பதை எப்படியேனும் நிரூபித்துக்காட்ட வேண்டும் என்பதற்காக, காத்மாண்டு சுற்றிவளைப்பு தோல்வியுற்றதற்குப் பின்பாக அதுபற்றி விவாதங்களில் இருந்த நேபாள மாவோவியர்களை எப்படியேனும் பாராளுமன்ற பன்றிதொழுவத்தில் அய்க்கிய்ப்படுத்தி விடவேண்டும் என்பதற்காக சமூகசனநாயகவாதிகளின் மூத்த தளபதியான சீத்தாராம் யெச்சூரியை அனுப்பி தரகுவேலை பார்த்தார்கள். ஆனால் இதுபோன்ற எந்த நடவடிக்கைகளும் புலிகளின் தீரமிக்க தலைமையிடம் ஒத்துவரவில்லை. இடைக்கால நிவாரணங்கள் (பிரபாகரனுக்கு முதலமைச்சர் போன்ற பிச்சை பதவிகள்) ஈழத்தைப் பெற்றுத்தரா என்ற உறுதியான தொலைநோக்கு கண்ணோட்டத்தோடு செயல்பட்ட புலிகளை அழித்து ஒழித்திட அத்தனை நாடுகள் செய்த கூட்டுச்சதியை நாம் கண்ணாறக் கண்டோம். நன்றாக நினைவில் நிறுத்திப் பாருங்கள். ஈழத்தில் புலிகளை அழித்த அத்தனை நாடுகளிலும் அந்த நாடுகளின் ஆளும் வர்க்கங்களை எதிர்த்து நீண்டகால மக்கள்யுத்தம் ஏதோ ஒருவடிவில் (பாட்டாளிவர்க்க தலைமையிலோ அல்லது தேசிய விடுதலைப் போராட்ட வடிவிலோ) நடந்து கொண்டிருக்கிறது.

முன்தீர்மானிக்கப்பட்ட ஆளும்வர்க்கங்களின் கண்ணோட்டம் ரத்தமும் சதையும் ஓலமுமாக ஈழத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆளும் வர்க்க கருத்து செயல்வடிவம் பெறவைக்கப்பட்டது. ஆனால் இந்த கருத்துமுதல்வாதத்தை (சாய்பாபா மந்திரத்தை-எல்லா இடத்திலும் பலிக்காது. வினவு சொன்னதுபோல் சில இடங்களில் பேஸ்மேக்கர்தான் சாய்பாபாவிற்கும் சாமியாகிவிடும்) மிகச்சரியாக விளங்கிக் கொள்ளாமல் இங்கேயிருக்கும் பொருள்முதல்வாதிகளும் 'ஆம் ஆயுதப்போராட்டம் ஒத்துவராது, ஈழத்தைப் பாருங்கள் என்னவாயிற்று' என்று பிலாக்கணம் பாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது உண்மையில்லை என்பதை மாவோவின் வரிகளைப் படித்தவர்களுக்கு நன்றாக விளங்கும். மேலும் பேராசான் லெனின் (லெனின் தேர்வு நூல்கள் 23 பக்கம் 342) சொல்கிறார். “முதலாளிய வர்க்க அரசு இயந்திரத்தை பலாத்காரமாக உடைத்துத் தவிடு பொடியாக்கி ஒரு புதிய அரசை உண்டாக்காவிட்டால், தொழிலாளர் வர்க்கப்புரட்சி சாத்தியமில்லை”. ஆனால் போதாத காலத்துக்கு இத்தகைய கருத்துமுதல்வாதங்களுக்கு உல்பாவின் முக்கிய தலைவர்களும் ஆளானதுதான் பெருங்கொடுமை.

உல்பாவை ஆரம்பித்தவர்களில் ஒருவரான அரவிந்தோ ராஜ்கோவாவும் இன்னபிற முக்கியதலைவர்களில் ஒரு பகுதியினரும் இந்த கருத்துமுதல்வாதத்தால் ஆட்பட்டு இன்று சிவகங்கை சின்னபப்யலின் பேச்சுவார்த்தை நாடகத்தில் (அசோம் விடுதலை பேச்சுவார்த்தையின் முன்நிபந்தனையாகயிருக்காது) நடிக்கத் தலைப்பட்டுள்ளார்கள். முன்பே இந்த பேச்சுவார்த்தை நாடகங்களுக்கு வர பரூவா மறுத்தார். அசோமிய விடுதலையையே பேச்சுவார்த்தைக்கு முன்நிபந்தனையாக வைத்தார். பல ஆசைவார்த்தைகளை இந்திய அரசு வாரி வழங்கியபோதும் அவர் உன் பொங்கச்சோறும் வேண்டாம், உன் பூசாரித்தனமும் வேண்டாம் என்று மறுத்தார். இந்திய உளவுத்துறை உல்பாவை பிளவுபடுத்தி எதிர்த்தரப்பைக்கொண்டு அவரின் பதின்ம வயது மகனை கடத்தச்செய்து துன்புறுத்தி அவரின் இருப்பிடத்தை அறிய முற்பட்டபோதும் பேச்சுவார்த்தைக்கு வரவைக்க முயற்சிசெய்தபோதும் லட்சக்கணக்கான அசோமியர்களைப்போல தனது மகனும் தன் தேசிய இனவிடுதலைக்காக போராடி வீரச்சாசெய்தினால் தான் அதற்குத் தயாராக இருப்பதாக சொல்லி இந்திய அரசின் முகத்தில் அசோமிய செருப்பால் அடித்தார். அதுபோக சிதம்பரத்தின் பேச்சுவார்த்தை விளக்குமாத்தையெல்லாம் தோழர்கள் நடேசன் மற்றும் ஆசாத்தின் பிணங்கள் விளக்கமாகச் சொல்லும்.

rajkhowaசிதம்பரத்தின் பேச்சுவார்த்தை என்பதே தலைமைத்தோழர்களை வெளியில் நிராதயுதபாணிகளாக வரவைத்து கொலைசெய்யும் திட்டம்தான் என்பதை சிதம்பரத்தின் பேச்சுவார்த்தை கோமணத்திற்குள் இருக்கும் ஆயுதத்தை உருவி சுவாமி அக்னிவேஷ் வெளிப்படுத்தினார். முதலில் ராஜ்கோவா மற்றும் இதர தலைவர்களின் பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் முடிவென்பது முதலில் ஒரு நடைமுறைதந்திரம்போல் முன்பு தோன்றினாலும் இப்போது அது பட்டவர்த்தமான சுய சரணடைதல் மற்றும் அசோமியர்களின் இறையாண்மையை அடகுவைப்பதுதான் (ஆனாலும் அவர்களின் நீண்டகால தியாகங்களைக் கருத்தில் கொண்டு நான் என் வார்த்தைகளை மிகவும் கட்டுப்பாட்டிலேயே வைக்க விரும்புகிறேன். மேலும் அவர்களிடம் இந்திய அரசின் பேச்சுவார்த்தை தந்திரங்களை அறிந்து புரிந்துகொள்ளுமாறும் உண்மையான அசோமிய விடுதலையே அசோமிய மக்களின் விமோசனத்திற்கு வழிவகுக்கும் என்பதையும் அசோம் மக்களின் சார்பாக நினைவூட்டுகிறோம்).

ஆனால் உல்பா இப்போது மிகவும் சிக்கலான சூழலில் இருக்கிறது. அவர்கள் பூட்டானில் மிகவும் வலுவாகயிருந்தார்கள். திம்பு அருகிலேயே இரு முகாம்களை வைத்திருக்கும் அளவிற்கு அவர்கள் வலுவோடு இருந்தார்கள். ஆனால் இந்திய அரசின் அடிமை நாயான சிக்மே ஷிங்கே வாங்சுங் அரசு (தனியா போனா டங்குவார் அந்துரும்) இந்திய ராணுவத்தின் துணையோடு அவர்களை வெளியேற்றுகிறேன் என்ற பெயரில் பல அப்பாவி பொதுமக்களைக் கொன்று குவித்தது. இப்போது வங்காளதேசத்தின் ராணுவமும் இந்திய அரசின் காலை நக்கியபடி உல்பாவின் பல முகாம்களை காலிசெய்யச்சொல்லி அச்சுறுத்தல் விடுக்கிறது. பர்மாவும் கூடிய சீக்கிரம் அதையே செய்யும் என்பதையும் நாம் எதிர்பார்க்கலாம்.

வடகிழக்கு மாநிலங்களின் வீரஞ்செறிந்த போராட்டங்களின் தாயான நாகலாந்து விடுதலைப்போராட்டத்தை முன்னெடுத்துச்சென்ற என்எஸ்என்எம்மும் பேச்சுவார்த்தைமூலம் நாகலாந்து விடுதலை என்னும் மாயமானை துரத்த ஆரம்பித்துவிட்டது (பேச்சுவார்த்தைக்கு செல்வது ஒரு ராணுவ உத்தியாகயிருந்தாலும், தோழர்கள் அய்சக்கும் மொய்வாவும் இந்தியஅரசுப்பிரஜைகளாக கடவுச்சீட்டு வாங்கிக்கொண்டது உறுத்துகிறது). உல்பா உருவான காலகட்டங்களில் நாகாலாந்து விடுதலைப்படையினர் அவர்களுக்கு செய்த உதவிகள் என்றென்றும் அசோமின் நீண்ட நெடிய விடுதலைப் போராட்ட வரலாற்றில் நீங்கா இடம்பெற்றிருக்கும். ஆனால் இப்போது உல்பா அவர்களிலிருந்து எந்த உதவியும் பெற முடியாத நிலையிலும் அவர்கள் இந்திய அரசின் பேச்சுவார்த்தை மாய உலகத்தில் இருப்பதால் உதவி செய்யமுடியாத நிலையிலும் இருக்கிறார்கள்.

ஈழத்தில் ஒரு மாபெரும் இயக்கம் எப்படி அனைத்து நாடுகளாலும் சுற்றிவளைக்கப்பட்டு ராணுவரீதியில் அழிக்கப்பட்டதோ அதுபோலவே இப்போது அசோமின் இதயத்துடிப்பான உல்பாவும் சுற்றிவளைக்கப்பட்டிருக்கிறது. அன்புத்தோழர்களே, தமிழர்களே நமக்கு கடமையிருக்கிறது. உலகின் அனைத்து ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களை விடவும் இந்த அசோமிய தேசிய விடுதலைப்போராட்டத்திலே நமக்கு மிகப்பெரிய கடமையிருக்கிறது. ஈழப்போராட்டத்தில் சர்வதேச நாடுகளின் சதிகள் பற்றியும் சோசலிச முகாம் இல்லாததுபற்றியும் நாம் வருத்தந்தோய்ந்திய குரல்களில் பேசிக்கொண்டோம். அதுபோக சர்வதேச நாடுகள் நாம் செத்து விழுந்ததை கண்டுங்காணாததுபோல் இருந்ததற்காய் அவர்களின் முகங்களில் காறித்துப்பினோம். இன்று காலம் கடமையை நம்முன்னே நகர்த்தியிருக்கிறது. இன்று அசோமிய மக்களின் இந்திய சிறைக்கூடத்திலிருந்து விடைபெறும் போராட்டத்தில் நாம் சர்வதேச சமூகம். எந்த சர்வதேச சமூகம் தமது கடமையைச் செய்ய வில்லையென்று நாம் காறி உமிழ்ந்தோமோ இன்று அந்தக்கடமையை நாம் செய்யவேண்டும். இல்லையேல் நாம் கேட்ட கேள்வி நம்மைப்பார்த்துக் கேட்கப்படும்.

இன்று நாம் நாடிழந்து நிற்கிறோம். ஆயினும் உலகெங்கிலும் நாம் கிளை பரவி வாழ்ந்து வருகிறோம். ஆயுத உதவிகள் செய்யும் நிலையில் நாம் இல்லை. ஆனால் அசோமிய தேசிய இனத்திற்கும் அதன் தலைவன் பரூவாவிற்கும் நாம் சொல்வோம், எம் தமிழினத்தின் ஆத்மார்த்த ஆதரவு உங்களுக்கு உண்டு. தோழன் சாரு மசூம்தார் சொன்னபடி இந்த இந்திய சிறைக்கூடத்திலிருந்து விடுபட்டுச்செல்லுங்கள். உங்கள் போர் உலக பாட்டாளிவர்க்கத்தின் ஒரு பகுதியே. நீங்கள் உலக பாட்டாளி வர்க்கத்தின் ஒரு கிளையே. தோழர் பரூவாவின் தலைமையில் வெற்றிகரமாக களம் கண்டு நமது பொது எதிரியான இந்த இந்திய மேலாதிக்க அரசை வீழ்த்துங்கள். சமரசமற்று போராடும் தோழர் பரூவாவின் தலைமையில் அணிதிரளுங்கள். அசோமியர்களே துவண்டுவிடாதீர்கள் போராடுங்கள். உங்கள் தேசியத்தலைவன் பரேசு பரூவாவின் துப்பாக்கிக் குழலிருந்து உங்கள் தேசிய இனத்தின் அரசியல் அதிகாரம் பிறக்கும்.

- சார்லசு அன்ரனி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It