தமிழர்களிடம் மன்னிப்புக் கேள்!
மாவட்ட தலைநகரங்களில் கழகம் ஆர்ப்பாட்டம்


ஈழத்தில் இனப்படுகொலைக்கு துணை நின்ற இந்திய அரசு, தமிழர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி, ஏப். 21 ஆம் தேதி பெரியார் திராவிடர் கழகம் மா வட்ட தலைநகர்களில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. ஒத்தக் கருத்துள்ள அமைப்புகளுக்கும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த 17 ஆம் தேதி கோவையில் கூடிய மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கழகத் தலைவர், துணைத் தலைவர், பொதுச் செயலாளர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். தொடர்ந்து சுவரெழுத்து சுப்பையா, சிந்தனை  பொறிகள் நூல் வெளியீட்டு பொதுக் கூட்டத்தில் இத் தீர்மானத்தை கழகத் தலைவர் அறிவித்தார்.

அடுத்த நாள் 18 ஆம் தேதி கோவையில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்திலும் இத் தீர்மானத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன் ஆகியோர் அறிவித்தனர்.

தீர்மானம்:

ஈழத்தில் தமிழர்கள் மீதான இறுதிக் கட்டப் போரில் இலங்கை அரசு போர்க் குற்றங்களையும், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களையும் நடத்தியிருப்பது உண்மைதான் என்று அய்.நா. பொதுச் செயலாளர் பான்.கி.மூன் அவர்களால் நியமிக்கப்பட்ட குழு தனது அறிக்கையில் உறுதி செய்துள்ளது. ஏற்கனவே அயர்லாந்து நாட்டில் டப்ளின் நகரில் விசாரித்து தீர்ப்பாயமும் இதே கருத்தை வலியுறுத்தியிருந்தது. இலங்கையின் போர்க் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்களை  பாதுகாக்கும் நோக்கத்தோடு இந்தியா உட்பட சில நாடுகள் அய்.நா. மனித உரிமைக் குழுவில் கொண்டு வந்து நிறைவேற்றிய தீர்மானத்தையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அய்.நா.வின் குழு கூறியுள்ளது.

ஈழத்தில் நடந்த இனப் படுகொலைகளை மறைத்து, போர் நிறுத்தம் வேண்டும் என்ற தமிழகத்தின் குரலையும்  நிராகரித்து, அய்.நா. மனித உரிமைக் குழுவிலும் சில மேற்குலக நாடுகள் இலங்கைக்கு எதிராக கொண்டு வந்த தீர்மானத்தையும் முறியடிக்க முழு வீச்சில் செயல்பட்ட இந்திய அரசு, இப்போது அய்.நா. குழுவின் விசாரணை அறிக்கையால் அம்பலப்பட்டு நிற்கிறது.

ஈழத் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் இந்திய அரசு இழைத்த மாபெரும் துரோகத்துக்கு தமிழர்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் என்று பெரியார் திராவிடர் கழகம் வற்புறுத்துகிறது.

இனியும், ஈழத் தமிழர்களுக்கு எதிரான துரோக நடவடிக்கைகளைத் தொடராமல் அய்.நா. குழு சுட்டிக் காட்டியுள்ள இலங்கை அரசின் போர்க் குற்றம் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களை இந்திய அரசு கண்டிக்க வேண்டும்; போர்க் கொடுமைக்கு உள்ளாகியுள்ள ஈழத் தமிழர்களின் நியாயமான உரிமைகளை அங்கீகரிக்க வேண்டும் என்று பெரியார் திராவிடர் கழகம் வலியுறுத்துகிறது.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 21.4.2011 வியாழன் அன்று அனைத்து மாவட்ட தலைநகர்களிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளது.