ஒரு நண்பரது இல்லத்தில் திருமணம். காதல் திருமணம். பெரும் போராட்டத்திற்குப் பிறகு, இரு குடும்பத்தாரையும் இணங்கச் செய்திருந்தோம். சமூகச் சிக்கல்களில் அனுபவம் வாய்ந்த ஒரு தோழர், இந்தத் திருமணத்தைப் பதிவு செய்துகொள்ளுங்கள், என்று ஆலோசனை கூறியிருந்தார். பதிவு அலுவலகத்திற்குச் சென்றபோது, சாதி கடந்த இந்தத் திருமண ஏற்பாட்டில் பங்கேற்கிற மகிழ்ச்சிகரமான ஒரு பெருமித உணர்வை அப்படியே உறிஞ்சுகிறவர்களாக அங்கிருந்தோர் நடந்துகொண்டார்கள். இது அரசின் கொள்கைப்படியே கூட ஊக்குவிக்கப்பட வேண்டிய ஒரு திருமணம் என்ற உணர்வு மரத்துப்போனவர்களாக இருந்தார்கள். உரிய ஆவணங்கள், புகைப்படங்கள், சான்றுகள் அனைத்தும் தயாராக இருந்தும் பதிவுக் கோரிக்கை விண்ணப்பம் நகரவே இல்லை. அப்புறம், இதற்கென்றே அங்கே பணிபுரிகிற (அரசாங்கத்தால் நியமிக்கப்படாத) ஒரு முகவர், விண்ணப்பததை நகர வைக்கச் செய்ய வேண்டியது என்ன, அதற்குச் செலுத்த வேண்டிய (அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்படாத) கட்டணம் எவ்வளவு என்பதைச் சொன்னார்.

நண்பரது பையில் இருந்த பணம் அந்த முகவரின் கையில் இருந்த கோப்புக்கு இடம் மாறியது. மனு உரிய மேசைகளுக்கு வேகமாக நகர்ந்தது. பதிவுச் சடங்குகள் முறைப்படி நடந்தன. வசூலாகிவிட்டது என்ற உத்தரவாதத்துடன்தான் எல்லா வேலைகளும் நடந்தன என்றாலும், பதிவு அதிகாரி அந்த இளம் காதல் இணையிடம் முறைப்படி விசாரணை நடத்தியது வேடிக்கையாக இருந்தது. அதைவிடவும் வேடிக்கை: முகவரிடம் பணம் கைமாறிய இடத்திற்கு நேர் மேலாக ஒரு அட்டை தொங்கிக்கொண்டிருந்தது; அதிலே லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் சட்டப்படி குற்றம் என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது. கடமை உணர்வு மரத்துப் போனது போலவே இந்த எச்சரிக்கை வாசகமும் மரத்துப்போயிருக்கிறது.

ஊழல் - இது தனி மனிதரின் நேர்மை, பொதுவாழ்வின் தூய்மை ஆகியவை தொடர்பான பிரச்சனை மட்டுமல்ல. நாட்டின் கருவூலத்தைச் சூறையாடுகிற, மக்களின் உழைப்பை உறிஞ்சுகிற, அவர்களது நம்பிக்கைகளைக் கல்லறைக்கு அனுப்புகிற கொலைபாதகக் குற்றமுமாகும். ஊழல் பணம்தான் நாட்டின் ஜனநாயகத்தையும் இழிவுபடுத்தி, தேர்தலில் வாக்காளர்களுக்கான மொய்ப்பணமாகிறது. சில ஆயிரங்களைக் கொடுத்துவிட்டு அடுத்த ஐந்தாண்டுகளுக்கு மக்களின் உழைப்பில் சேரும் செல்வமெல்லாம் மடைமாற்றம் செய்யப்படப் போகிறது என்ற உறுத்தலேயில்லாமல் அந்த ஆயிரங்களைப் பெற்றுக்கொண்டு விசுவாசமாக வாக்களிக்கிறவர்கள் உருவாக்கப்பட்டிருப்பது ஒரு பெரும் அரசியல் பண்பாட்டுச் சரிவு.

உலகளாவியதாக நீக்கமறப் பரவியிருக்கும் ஊழல் குறித்த விசனங்களைப் பகிர்ந்துகொள்கிறவர்கள் ஒன்றைச் சுட்டிக்காட்டுவதுண்டு: மற்ற நாடுகளிலெல்லாம் சட்டத்திற்குப் புறம்பான ஒன்றைச் செய்துகொடுப்பதற்குத்தான் லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கும். இங்கோ, சட்டப்படி செய்தாக வேண்டிய வேலையைச் செய்ய வைப்பதற்கே பணத்தை அழ வேண்டியிருக்கிறது. மக்கள் இப்படி நேருக்கு நேர் சந்திக்கிற கீழ்மட்ட ஊழல்களில் ஈடுபடுவோரிடம் கேட்டால், மேல்மட்டத்தில் லட்சம்... கோடி... லட்சம் கோடி என்பதாக நடக்கிற இமாலயத் திருவிளையாடல்களைக் கைகாட்டுகிறார்கள். தடுக்க வேண்டியவர்களே அவரவர் அதிகார உச்சத்துக்கு ஏற்ப இவ்வாறு லட்சங்கோடிகளில் புரள்கிறபோது, சவ்வூடு பரவலாக அனைத்து மட்டங்களிலும் அந்தந்த அதிகார வரம்புக்கேற்ப வசூல் நாயகம் நடக்கிறது. ஊழல் என்ற இந்த நச்சுச் சங்கிலி பற்றிய ஆத்திரம் பொதுவாக மக்களுக்கு இருக்கிறது. அதே நேரத்தில் தங்களது வேலைகளைப் பணம் கொடுத்தாவது முடித்துக்கொள்ள வேண்டிய அவலமும் அவர்களுக்கு இருக்கிறது. இதற்கு முடிவு கட்டுவது எப்படி? முடிவு கட்ட முடியாவிட்டாலும் இயன்ற அளவுக்குக் கட்டுப்படுத்தவாவது செய்யலாமே, அதைத் தொடங்குவது எப்படி?

அதற்கான ஒரு சிறு வாய்ப்புதான் மக்கள் மன்றம் என்று பொருள்படும் லோக் பால். அமைச்சகம் முதல் அரசாங்க அலுவலகங்கள் வரையில் அரசின் எந்த மட்டத்திலும் நிகழக்கூடிய ஊழல்கள் தொடர்பாகத் தானே நேரடியாகத் தலையிட்டு விசாரிப்பதற்கும், தண்டனை அளிப்பதற்கும் அதிகாரம் கொண்ட, (தேர்தல் ஆணையம், தலைமைக் கணக்குத் தணிக்கை ஆணையம், உச்சநீதிமன்றம் போன்ற) அரசமைப்பு சாசன அங்கீகாரம் பெற்ற, சுயேச்சையாகச் செயல்படக்கூடியதாக  லோக் பால் அமைக்கப்பட வேண்டும், அதற்கான சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று நெடுங்காலமாகக் கோரப்பட்டு வந்திருக்கிறது. நாடாளுமன்றத்தில் இதனை இடதுசாரிக் கட்சிகள் திரும்பத்திரும்ப வலியுறுத்தி வந்திருக்கின்றன. மாநாடுகள், பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் மூலமாகவும் இக்கோரிக்கையை அழுத்தமாக முன்வைத்துள்ளன.

இன்றைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசும் சரி, முந்தைய பாஜக அரசும் சரி இக்கோரிக்கை எழுந்தபோதெல்லாம் விரைவில் கொண்டுவரப்படும் என்று வாய்ச்சேவை செய்துகொண்டிருந்தார்களே தவிர, அப்படியொரு சட்டத்திற்கான முன்வரைவைக் கொண்டு வர எந்த முன்முயற்சியும் எடுத்ததில்லை. லோக் பால் விசாரணையிலிருந்து பிரதமருக்கும், பாதுகாப்புத் துறைக்கும், வெளியுறவுத்துறை உடன்பாடுகளுக்கும் விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று கூறி இழுத்தடித்து வந்தார்கள். பிரதமரை இதிலே இழுக்கக்கூடாது என்ற வாதம் தொடங்கியதே அன்றைய வாஜ்பாய் ஆட்சியில்தான். தண்டனை அளிக்கிற அதிகாரம் இல்லாமல், தண்டனை தரலாம் என்று அரசுக்கு ஆலோசனை கூறுகிற பல்லில்லாத பற்சக்கரமாக இந்த மன்றத்தை ஏற்படுத்துவதற்கு மன்மோகன் அமைச்சரவை உருவாக்கிய சட்டமுன்வரைவுக்கான தயாரிப்பு ஆவணத்தில் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. பல் உள்ள சக்கரமாகச் சட்டத்தைக் கொண்டுவந்து தங்கள் தலையில் (கூட்டாளிகள் தலையிலும்) மண்ணைப் போட்டுக்கொள்ள அவர்கள் ஒன்றும் கேணை இல்லைதான்.

இந்தப் பின்னணியில்தான், இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவரான சமூகப் பணியாளர் அன்னா ஹசாரே, முழு அதிகாரம் உள்ள லோக் பால் அமைப்பை ஏற்படுத்துவதற்கான சட்ட முன்வரைவை உடனடியாகக் கொண்டுவராவிட்டால் சாகும்வரை பட்டினி என்று அறிவித்து காலவரையற்ற போராட்டத்தை இம்மாதம் 5ல் தொடங்கினார். மராட்டிய மாநிலத்தில் தமது கிராமத்தில் விவசாய நிலங்களுக்கான நீர்ப்பாசனத்திற்கு வழிவகுக்கும் எளியதொரு திட்டத்தைச் செயல்படுத்தி, அதற்காக மத்திய அரசின் பத்மபூஷன் விருது பெற்றவர் அன்னா ஹசாரே. இதற்கு முன்பும் இதே கோரிக்கைக்காக பட்டினிப் போராட்டம் நடத்தியிருக்கிறார். அப்போது அரசுத்தரப்பினர் அளித்த வாக்குறுதியை ஏற்று அந்தப் போராட்டத்தை விலக்கிக்கொண்டார். தகவல் உரிமைச் சட்டம் கொண்டுவருவதற்கான போராட்டத்தையும் நடத்தியவர் அவர்.

அன்னா ஹசாரே இம்முறை மேற்கொண்ட போராட்டத்தின் மீது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஊடக வெளிச்சம் பாய்ந்தது. ஏராளமான தொண்டு நிறுவனங்கள் அவரோடு இணைந்துகொண்டன.

அன்னா ஹசாரே முன்வைத்த ஆலோசனைகள் ஒரு போட்டி அரசாங்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கின்றன என்று தொடக்கத்தில் வாய்த்துடுக்கு வக்கீல் கபில் சிபில் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கிண்டலடித்தார்கள். உரிய சட்டம் கொண்டு வருகிறோம், போராட்டத்தைப் கைவிடுங்கள் என்று, ஊழல் பேர்வழிகளை முடிந்த வரையில் காப்பாற்றுவதில் கை தேர்ந்தவரான மன்மோகன் கெஞ்சினார். அசரவில்லை ஹசாரே. இறுதியில் சட்ட முன்வரைவில் என்னென்ன விதிகள் இருக்கலாம் என்பதை விவாதிக்க ஒரு குழு அமைக்கவும், அதில் ஹசாரே, வழக்கறிஞர் சாந்தி பூஷன் உள்ளிட்ட பொது அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உறுப்பினர்களாக நியமிக்கவும், வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரிலேயே சட்ட முன்வரைவைத் தாக்கல் செய்யவும் அரசு முன்வந்தது. ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தை மேற்கொண்டிருப்போரின் உற்சாகப் பாராட்டுகள் வந்து குவிய, வெற்றி வீரராகப் போராட்டத்தை 9ம் தேதி நிறுத்திக்கொண்டார் ஹசாரே.

இந்தியா போன்றதொரு நாட்டில் மக்கள் பணம் விழுங்கப்படுவதை ஓரளவுக்காவது தடுத்து நிறுத்த லோக்பால் அமைப்பு உதவ முடியும். ஊழல் வழக்குகள் ஆண்டுக்கணக்காக இழுத்தடிக்கப்பட்டு மக்கள் நினைவிலிருந்தே அழிக்கடுகிற சூழலில், ஹசாரேயின் போராட்டம் அரசாங்கத்தை இறங்கிவர வைத்தது என்பதில் ஐயமில்லை. அந்த வகையில் ஹசாரேயின் போராட்டம் வரவேற்கத்தக்கதொரு வெற்றியே.

அதே நேரத்தில், சில கேள்விகளையும் எழுப்பியாக வேண்டியிருக்கிறது. பதில்கள் கிடைத்தால் நல்லது.

அரசு அமைத்திருக்கிற குழுவின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டிருப்பவர் மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி. மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் (சிவிசி) தலைவராக, ஊழல் கறை படிந்த பி.ஜே. தாமஸ் நியமிக்கப்பட்டாரே, அதற்கு நிர்ப்பந்தித்தவர் இவர்தான் என்று கூறப்படுகிறது. பல்லாயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்புப் பணத்தை வெளிநாடுகளுக்குக் கடத்திய ஹசன் அலி மீது முறையான வழக்குத் தொடராமல் இழுத்தடிக்கப்பட்டதற்கும் இவர்தான் பொறுப்பு. இரண்டு விவகாரங்களிலுமே உச்சநீதிமன்றம் தலையிட்டது. குழுவின் ஒரு உறுப்பினர் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி. தொழிலாளர் ஓய்வூதிய நிதியை பங்குச்சந்தை சூதாட்டப்பணமாக மாற்றும் சட்டத்தைத் தயாரித்தவர் இவர். இன்னொரு உறுப்பினரான உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், முன்பு நிதியமைச்சராக இருந்தபோதுதான் இவ்வளவு பெரும் ஊழல்களுக்கான ஊற்றுக் கண்கள் திறக்கப்பட்டன. கடந்த மக்களவைத் தேர்தலில் இவர் போட்டியிட்ட சிவகங்கை தொகுதியில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டது உண்மைதான் என்று இவரது புதல்வர் கார்த்திக் சிதம்பரம் வாக்குமூலம் அளித்தது விக்கி லீக்ஸ் அளவுக்குப் புகழ்பெற்றுவிட்டது. இவர்களெல்லாம் சேர்ந்து வரையவிருக்கிற சட்டம் எப்படிப்பட்டதாக இருக்கும்?

நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இடதுசாரி கட்சிகள் இதே கோரிக்கைக்காகப் போராடியபோதெல்லாம் கண்டுகொள்ளாத பிரதமர் மன்மோகன் சிங், இப்போது ஹசாரே போராட்டத்துக்கு மட்டும் இறங்கிவந்தது ஏன்? முன்பு தகவல் உரிமைச் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு, நாடாளுமன்றத்தில் இடதுசாரிகளை முதல் தவணை மன்மோகன் சிங் அரசு சார்ந்திருக்க வேண்டியிருந்த நிலையில், அவர்கள் செயல்முனைப்புடன் வற்புறுத்தியதும் முக்கியக் காரணமாக அமைந்தது. தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம், குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் போன்ற பல நடவடிக்கைகள் இடதுசாரிகள் பங்களிப்பின்றி வந்திருக்கவே முடியாது.

ஹசாரே போராட்டம் நடந்த இடத்தில் அவருக்கு ஆதரவு தெரிவிக்க வந்த சில அரசியல் தலைவர்கள் அவரை நெருங்க விடாமல் தடுக்கப்பட்டனர். அப்படித் தடுத்தவர்கள் தொண்டுநிறுவனங்களைச் சேர்ந்தவர்கள். அரசியல் தலைவர்கள் தடுக்கப்பட்டதை மிகப்பெரிய விழிப்புணர்வாகப் பல பெரும் ஊடகங்கள் வரைந்துகாட்டின. முதலாளித்துவ அரசியல் கட்சிகளுக்கும் இடதுசாரிகளுக்கும் உள்ள அடிப்படை வேறுபாடுகளை மறைத்து, எல்லா அரசியல்வாதிகளும் ஒன்றுதான் எனபதாகக் கருத்துப்பதிவு செய்வதில் - மக்களுக்கு அரசியல் பங்கேற்பு உணர்வு வரவிடாமல் தடுக்கிற ஏற்பாடு இல்லையா?

மக்களின் போராட்டங்களே திட்டவட்டமான மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என்பது மார்க்சிய நிலைபாடு. மக்களுக்கு எதையும் கேள்வி கேட்கிற மனப்போக்கு வளர்ந்துவிடக்கூடாது என்பது இன்றைய இந்திய - அந்நிய கார்ப்பரேட் பகவான்களின் கோட்பாடு. மக்கள் அரசியல் விழிப்புணர்வு கொள்வது இவர்களது கூட்டுக்கொள்ளைகளுக்கும் சுரண்டல்களுக்கும் இடைஞ்சல் என்பதால் இந்த தடுப்புக்கோடு. மக்களின் அரசியல் உணர்வை அழித்தாக வேண்டும் என்ற உலகமயவாதிகளின் லட்சியத்தை நிறைவேற்றுவதாகத்தானே ஹசாரே போராட்டமும், மன்மோகன் பெருந்தன்மையும் இருக்கின்றன? மன்மோகன் சிங்கே மக்களிடையே போராட்டங்கள் நடத்தி வளர்ந்த அரசியல் தலைவர் அல்ல, கார்ப்பரேட்டுகள், பங்குச் சந்தைச் சூதாடிகள் போன்றோரின் விருப்பத்திற்கு இணங்க நியமிக்கப்பட்டவர்தான், உலக வங்கியின் இந்த முன்னாள் அதிகாரி என்பதை மறந்துவிட முடியுமா?

இப்படிப்பட்ட ஊழல்களின் தலையூற்றாக இருப்பவை தாராளமய, தனியார்மய, உலகமய பொருளாதாரக்கொள்கைகள்தான். இதை ஹசாரேக்களும், அரசியல் தலைவர்களைத் தடுத்த தொண்டு நிறுவனங்களும் ஓங்கி எதிர்ப்பதில்லையே ஏன்?

ஹசாரேயின் பின்னணியில் இப்படிப்பட்ட அரசியல் அசூயைப் பேர்வழிகள் மட்டுமல்லாமல், ராம்தேவ் போன்ற ஆர்எஸ்எஸ் படையினரும் இருந்தது எப்படி? ஹசாரே தனது பட்டினிப்போராட்டம் முடிந்த மறுநாளே, சிறுபான்மையினரை ஒடுக்கிப்பார்ப்பதற்கான சோதனைக்கூடமாக குஜராத் மாநிலத்தை மாற்றிய முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு நற்சான்று அளித்துப் பேசியது எதற்கு? ஹசாரேக்கு ஆதரவாக வந்த சில தொண்டு நிறுவனங்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததும், வகுப்புவாதத்தை நான் எந்த வடிவிலும் எதிர்க்கிறேன்... மோடியின் வளர்ச்சித்திட்டத்தை மட்டுமே ஆதரிக்கிறேன், என்று பூசி மெழுகினார். இதற்கு முன் இவர், சிவசேனா வகையறாக்களின் இனப்பகைமை முழக்கத்தை ஆதரித்தவர் என்பதை மறந்துவிட முடியுமா? வன்முறையை எதிர்ப்பதாகச் சொல்லிக்கொண்டே இப்படிச் சொன்னார். கருத்து வன்முறை மிகவும் கொடூரமானது என்ற புரிதல் இவரிடம் இல்லாமல் போனது எவ்வாறு?

இப்படிப்பட்ட கேள்விகள் எழ விடாமல் கார்ப்பரேட் ஊடகங்கள் திட்டமிட்டே திசைதிருப்புகின்றன. இதையெல்லாம் மீறி, மக்களிடம் உண்மைகளை எடுத்துரைத்தாக வேண்டும். ஊழல் தாண்டவத்தை மெய்யாகவே நிறுத்த வேண்டும் என்றால், அது மக்களின் முழுமையான அரசியல் எழுச்சியாலேயே சாத்தியம். அந்த எழுச்சியை ஏற்படுத்துவது இடதுசாரிகள், ஜனநாயக சக்திகள், மக்களைத் தனிமைப்படுத்த விரும்பாத தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றின் வரலாற்றுக் கடமையும் கூட. மக்களை நேரடியாகத் தாக்குகிற ஊழல்கள் முதல், அதையெல்லாம் அற்பமானதாக்குகிற மேலிடத்து ஊழல்கள் வரையில் எதிர்க்கிற போராட்டங்கள் அந்தக் கடமைச் சக்கரத்தின் ஆரக்கால்களாய் அமையும்.

Pin It