"அண்ணே உங்களுக்கு தெரியுது.. என் பொண்டாட்டி நல்லவன்னு... எனக்கு தெரியல... எனக்குத் தெரியட்டும்... அப்புறம் நான் போய் கூட்டிட்டு வர்றேன்..."
ரகுவரன் பேசும் ஒவ்வொரு வசனத்திலும் தான் இந்த படம் பேசப்பட்டது.
"ஹேய்.. புவனா.. என்னாசு... நீ இல்லாம நான் எவ்...ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா...?"
படபடவென இடம் பொருளற்ற நவரச நாயகனின் பேச்சில்... புவனா இன்னொருவரின் மனைவி என்பதெல்லாம் இருக்கட்டுமே என்பது போல மாறி விடும். பேரன்புக்கு தாலி... சொந்தம்... உறவுமுறை எதுவும் தேவை இல்லை.
பாடகர் நவசர நாயகன். பக்கத்து வீட்டில் இட்லி விற்கும் அம்மாவின் மகள் புவனா - ரேவதி. சிறுவயதில் இருந்தே நண்பர்கள்.
ரேவதியின் தம்பி... ரஜினி ரசிகன். விளையாட்டு பையன். ஒரு கட்டத்தில் அம்மா இறந்து விட தாத்தாவின் ஆசைப்படி ரேவதியை பணக்கார மாமா பையன் "தொட்டாசிணுங்கி" ரகுவரன் திருமணம் செய்து கொள்கிறார்.
மனைவிக்கும்... மனைவியோடு சகஜமாக பழகும் பக்கத்து வீட்டுக்காரனுக்குமான உறவு பற்றி சந்தேகம் மெல்ல மெல்ல மேலெழுந்து வருகையில்... இதுவரை இந்த சமூகம் கற்று தந்த அடிப்படைவாத கட்டமைப்புகளின் வழியே ரகுவரனின் எதிர்வினைகள் இருக்கின்றன.
ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை என்றாலும்... தனித்த இயல்பான... தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கும் எதிலும் பற்றில்லாத ஒரு தனித்த மனிதனுக்கு எல்லாமே தன் மனைவிதான் என்றாகும் பட்சத்தில் அந்த மனைவி இன்னொருவர் மீது கொண்டிருக்கும் நட்பு அவனை வாட்டி வதைக்கிறது.
இதற்கிடையே கல்லூரி மாணவியான ரகுவரனின் தங்கை தேவயானி... ஒரு பொறுக்கியிடம் காதலால் ஏமாந்து இன்னபிற சம்பவங்களோடு நிற்க... அதற்கு முன்பே அவளை ஒரு தலையாக காதலிக்கும் ரேவதியின் தம்பி.... என்று அடுத்தடுத்து தெரிந்தே சிக்கிக்கொள்ளும் திரைக்கதையை இயக்குனர் அதியமான் மிகுந்த தன்னம்பிக்கையோடு தான் படமாக்கி இருக்க முடியும்.
இந்த பக்கம் கார்த்திக் என்ற மிக பெரிய தூண் படத்தை நகர்த்தும் வல்லமையோடு.
"யோவ்... உனக்கே தெரிய வேண்டாமா... நேரங்கெட்ட நேரத்தில வீட்டுக்குள்ள வரும் போது வேற வழியில்லாம நான் வாங்கன்னு தான் சொல்வேன்... ஆனா நீ தான் வராம இருக்கணும்... அடுத்தவன் பொண்டாட்டிகிட்ட இவ்ளோ தான் நெருங்கனும்னு சென்ஸ் இல்ல... என் வீட்டு கிச்சன் வரைக்கும் வந்து... அதும் என் தட்டையே புடுங்கி சாப்பிடறனா நீ எவ்ளோ பெரிய கிரிமினல்..." என்று நகம் கடித்துக் கொண்டு கண்களை உருட்டி வாயை குவித்து ரகுவரன் பேசுகையில் நிலை குலைந்து போகும் கார்த்திக்... கண்களில் சோகம் சூழ... வார்த்தைகளற்று உடல் தடுமாறி... "புவ்வனா எனக்கு அம்மாயா..." என்று தவிக்கையில்....
யப்பா... ஒருவரையொருவர் போட்டு தாக்கி முன்னேறும் மகா நடிகன்கள் இருவருமே.
ஒரு பக்கம் அன்பான மரியாதையான கணவர். ஒரு பக்கம் சிறுவயது முதலே பேரன்பு பூத்த மரியாதையான நண்பர். இந்த வறுமை சூழ்ந்த வாழ்வில்... அன்புக்கு பஞ்சமில்லாமல் பார்த்துக் கொண்ட நண்பரை... கல்யாணம் ஆகி விட்டது என்பதற்காக எப்படி விட்டு விட முடியும். இருபக்கமும் நுனி முனையில் இலையென படபடக்கும்... பதபதைக்கும் வாழ்வு புவனாவுக்கு.
இந்த படத்தில் வில்லன் என்று யாருமே இல்லை. சமூகம் கற்றுத் தந்த சந்தேகம் என்ற ஒரு பழக்க வழக்கம் தான் வில்லன். அதீத அன்பினால் கொண்ட பொசஸிவ்னெஸ் மூலமாக எழும் சுய கழிவிரக்கம் தான்... வில்லங்கம்.
தூக்கம் வராமல்... தவித்து எழுந்தமர்ந்து ஜன்னல் வழியே வெளியைக் காணும் ரகுவரனுக்குள்... சொல்ல ஆயிரம் வார்த்தைகள். தனக்கு தானே கேட்கும் முனங்கல்- ஐ வார்த்தையில் வடிப்பதற்கு முன்பே மௌனத்தில் கொன்று விடுதல் சுலபமாக இருக்கிறது.
"என்னாச்சு என்று எழுந்து ஏன் இன்னும் தூங்கல...?" என்று கேட்கும் மனைவியிடம்... தூக்கம் வரல... என்று ஆரம்பித்து உள்ளத்தை கொட்டி குவிக்கையில்... உள்ளதை கொட்டி குவிக்கையில்... நள்ளிரவு ஜன்னலில் தாறுமாறு நிலவு.
"எனக்கு உன்ன தான் பிடிக்கும்... அப்போ உனக்கும் என்னதான பிடிக்கணும்... ஆனா உனக்கு... அந்த பாட்டுக்காரனத்தான் பிடிச்சிருக்கு... அப்பறம் எதுக்கு என்ன கல்யாணம் பண்ணின..." என்று கேட்டு தாழ்வு மனப்பான்மையில்... இயலாமையை தன்னுடலில் போர்த்திக் கொண்டு நிற்கையில்... செய்வதறியாமல் குமுறும் ரேவதிக்கு சிறகிருந்தும் வலி.
இருளடைந்த வானம். ஒரு பக்கம் தம்பி மீது உயிரையே வைத்திருக்கும் புவனா.. இன்னோர் பக்கம் கார்த்திக் மீது அன்பின் தூய்மையை வைத்திருக்கிறாள். வாழ்வு கொடுத்த கணவன் என்றொரு வள்ளலிடம் உலகத்தை வைத்திருந்தாலும்... அவன் நம்புவதற்கு தயாராக இல்லை.
அலுவலகத்தில் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சிக்கும் பெண்ணிற்கு புத்திமதி சொல்லி அது தப்பு... என்று பேசும் ரகுவரன் கதாபாத்திரம் உண்மையில்... உண்மைக்கு நெருக்கமான பாத்திரம்.
அன்பும் பேரன்பும் கூடிய நட்பின் சிறகடிப்பில் ஒரு காட்சியில் ட்ராபிக்கில் காரை நிறுத்தி விட்டு வந்து ரேவதியோடு பேசும் கார்த்திக்கிற்கு ரேவதியோடு பேச வேண்டும் அவ்வளவு தான்.
"தம்பி மூக்குத்தி வாங்கி குடுத்ததை ட்ராபிக்ல பார்த்த கொஞ்ச நேரத்துல அவன்கிட்ட சொல்ல தோணுச்சுல்ல... ஏன்... கூடயே இருக்கற என்கிட்டே சொல்ல தோணல" என்று ரகுவரன் கேட்கையில்... ரேவதியிடம் பதில் இல்லை. கணவனை நண்பனாக ரேவதி பார்க்கவில்லை. மனைவியிடம் ஒரு தோழியை தேடும் ரகுவரனுக்கு முன் பின் தோழிகள் இல்லை. தாய் தான் புவனா எனும் கார்த்திக்கிற்கு அதை நிரூபிக்க மொழி இல்லை.
இப்படியெல்லாம் பிரச்னை வருமா என்று நினைக்காத கார்த்திக்... தன்னளவில் தடுமாறினாலும் புவனா மீது கொண்ட நட்பில் ஒருபோதும் களங்கம் இல்லை... என்பதில் உறுதியாய் நிற்கிறார். தூய நதியின் நெடுந்தூர பயணம் அது... என்று புரிய வைக்க எவ்வளவோ முயல்கிறார்.
நான் நல்லவனா கெட்டவனான்னு தெரியல என்று தங்கையிடம் புலம்பும் ரகுவரன் கண்களில்... படம் முழுக்க அன்புக்கு எங்கும் பரிதவிப்பு தான். உறவுச்சிக்கல் அவர்களை பிரித்து வைக்கிறது.
இனி இங்க வராதீங்க... என் கூட பேசாதீங்க என்று ரேவதி சொல்லி விட... ஒதுக்கி விடப்பட்ட அன்பின் தவிப்போடு கதவு பக்கம் நிற்கும் கார்த்திக் பார்வையாலே கெஞ்சுவதெல்லாம்.. மானுட கிளாசிக். ரகுவரன் அதன் பிறகு என்ன செய்தார் என்பது தான் கிளைமாக்ஸ். மூன்று திசைகளின் ஆயுதம் அன்பென்னும் கோணத்தில் சுழலுவது தான் தொட்டாசிணுங்கி.
படம் முழுக்க மறைத்து வைக்கப்பட்ட ஒரு கதாபாத்திரம்... இறுதிக்காட்சிக்கு முன்பாக ரகுவரனைத் தேடி வந்து பேசுகையில்... சந்தேகம்... பொறாமை... என்று மனித கீழ்தரங்கள் எல்லாம் ஒன்றுமில்லாமல் போய் விடுகின்றன.
படபடவென மனதில் மிக உயரத்தில்... நவரச நாயகன் பாத்திரம் உயர்ந்து நிற்க... மனைவிக்குள் இருக்கும் தாய்மையை உணர்ந்தவாறே... தன்னை தானே நொந்து கொள்ளும் ரகுவரனுக்கு அழுகை முட்டிக்கொண்டு வரும்.
ரகுவரன் அழுதால் நமக்கும் அழுகை வந்து விடும். கவனித்தோர்களுக்கு புரியும்.
ஆண் பெண் உறவில் நட்பு அல்லது காதல் அல்லது சகோதரத்துவம் என்று தான் முடிவுக்கு வரும் பொதுவில் இவர்களின் அன்பை வார்த்தைகளில் கோடிட்டு காட்டாமல்... வாழ்ந்து காட்ட வைத்த இயக்குனருக்கு பேரன்பின் வெளிப்பாட்டுக்கு உறவு முறை தேவை இல்லை என்பதில் மிகுந்த நம்பிக்கை இருந்திருக்கிறது. மிக நுட்பமான புள்ளியில் மன மாற்றம் நிகழ்த்தி இருக்கிறார். மனிதர்கள் பலவிதம்.
ஆனால் உள்ளே மனதின் ஆழத்தில் எல்லா மனிதனும் ஏங்குவது அன்பென்ற கைப்பிடிக்கு தான். அது தொட்டாசிணுங்கியென... தொடும் இடத்திலெல்லாம் தூய சிறகுகளை விசிறி கொண்டே இருக்கிறது.
அன்பின் வெளியில்... ரகுவரன்களும்... கார்த்திக்குகளும் புவனா என்றொரு தாய்க்கு தான் ஏங்கிக் கிடக்கிறார்கள். அந்த வகையில் எல்லோருக்குள்ளும் ஒரு தொட்டாசிணுங்கி பூத்திருக்கிறது.
படம் : தொட்டாசிணுங்கி
இயக்குனர்: அதியமான்
மொழி : தமிழ்
வருடம் :1995
- கவிஜி