உலக சினிமா வரலாறு: மறுமலர்ச்சி யுகம் -18

குலை வெளிவந்த கையோடு வாழை இறந்துபடுவது போல இயற்கையின் சில நியதிகள் பலசமயங்களில் நம் முதுகில் குத்துவதாக இருக்கிறது. நல்ல சிறுகதை எழுதுகிறவர்கள் நாற்பதாவது வயது வரும்போது அவர்களாகவே படுத்துக்கொண்டு கண்ணை மூடி நிம்மதியாய் மண்ணில் புதைந்து விடவேண்டும் என்பதும் அப்படி ஒரு விதி. இந்தவிதிக்கு உட்பட்டு இறந்த பல எழுத்தாளர்களில் ஒருவர் தான் ஜப்பானை சேர்ந்த Rynosuke Akutagawa ரியோன்ஸ§கே அகுட்கவா. ஜப்பானிய சிறுகதை உலகின் தந்தையான இவர் எழுதிய இரண்டு சிறுகதைகள்தான் ரோஷமான் எனும் மகா காவியம் உருப்பெற அடிப்படைக் காரணம்.

அதில் ஒன்றுதான் 1914ல் அகுட்கவாவினால் எழுதப்பட்ட இன் எ குரோவ் எனும் சிறுகதை. இதுகுறித்து பின்னாளில் ஒரு பேட்டி ஒன்றின்போது பதிலளித்த குரசேவா..அகுட்குவாவின் இக்கதை மனித மனங்களை கீறிக் கீறி ஆராய்ந்து கொண்டே செல்கிறது.அது நமக்கு வெளிப்படுத்தும் பயங்கரத்தை என் பார்வையாளனுக்கு சொல்ல நினைத்தேன். ரோஷமான் எனக்குள் பெரும் மனஅவசத்தை உண்டாக்கியதற்கும் இதுவே மூலகாரணம் எனக் கூறியிருந்தார்.

அப்படிப்பட்ட இக்கதையை இவருக்கு முதன் முதலாக எடுத்துச்சொல்லி அதற்கான திரைக்கதையுடன் முதலில் குரசேவாவிடம் கொண்டுவந்தவர். Shinobu Hashimoto ஷினோபு கஷி மொட்டோ .இவர் குரசேவாவின் நண்பர். அவரோடு இகிரு, இடியட் போன்ற படங்களில் இணை திரைக்கதையாளனாக பங்கு வகித்தவர்.அவர் தந்த திரைக்கதை குரசேவாவுக்குள் மெல்ல ஒரு சலனத்தை உண்டாக்கி கொண்டிருந்தது. அடுத்தப்படம் என்ன என்ன என நச்சரித்த தயாரிப்பாளரிடம் இதுதான் கதை என கூறி அனுமதியும் பெற்றுவிட்டார்.

பன்னிரண்டாம் நூற்றாண்டை கதைக்களனாக கொண்ட இக்கதை ஒரு சாமுராய் வீரன், அவனது மனைவி, ஒரு வழிப்பறித்திருடன் மற்றும் ஒரு மரவெட்டி ஆகிய நான்கு கதாபாத்திரங்களையும் உடன் ஒரு கற்பழிப்பு மற்றும் கொலை எனும் இரண்டு சம்பவங்களையும் பின்னணியாகக் கொண்டு கதை கட்டமைக்கப்பட்டிருந்தது. கதைக்குள் ஆழம் பூடகத்தன்மை, நாடகீயம் என அனைத்தும் இருந்தாலும் திரைக்கதையாக குரசேவாவுக்குள் இது முழுதிருப்தி அளிக்கவில்லை.

கதைக்குள் இருக்கும் மர்மத்தை காட்சி ரூபமாக உணர்த்த இன்னும் ஏதாவது சேர்த்தால்தான் திரைக்கதையில் கூடுதல் ஆழமும் பரிணாமமும் கிட்டும் என்பதை உணர்ந்தார். அதன்பிறகு இருவரும் இதற்கான இணைக்கதையை தேடிய போதுதான் அவர்களுக்கு கிடைத்தது மற்றொரு சிறுகதை. அந்த கதையின் தலைப்புதான் ரோஷாமான்.. ரோஷாமான் என்றால் கோட்டை வாயில். பிரம்மாண்டமான அந்த கோட்டைவாயிலில் மழைக்கு ஒதுங்கும் மூன்றுபேர் தங்களுக்குள் சமீபத்தில் நடந்த, தாங்கள் சாட்சிகளாக பங்கேற்ற ஒரு கொலைவழக்கைப் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். இதனூடே பிரம்மாண்டமான அந்த கோட்டை வாயிலும் அதன்மீது பொழிந்து வழியும் பேய் மழையும் இதர இரு பாத்திரங்களாக ஆசிரியரால் வருணிக்கப்பட்டிருந்தன.

இந்தக் கோட்டையும் மழையும் கதையின் உட்பொருளை உணர்த்துவதாக இருக்க இதனை முதல்கதையாகவும் அகுட்கவாவின் முதல்கதையான இன் எ குரோவ் கதையை ப்ளாஷ் பேக்கிலும் வைத்து இருவரும் கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கத் துவங்க குரோசவா எனும் இயக்குனரின் கனவில் பிரம்மாண்டமாக விரியத்துவங்கியது ரோஷாமான்.

திரைப்படம் பேய் மழையிலிருந்து துவங்குகிறது.ரோஷாமான் எனும் பிரமாண்டமான நுழைவாயிலில் மழை கொட்டுகிறது.அதன் இண்டு இடுக்குகளில் மழை சீறிப்பாய்கிறது. நுழைவாயிலை ஒட்டிய மண்டபத்தில் நான்கைந்து குடியானவர்கள் தஞ்சம் புகுந்து பேசிக்கொள்கின்றனர். அப்போது இருவர் தாங்கள் நேரில்கண்ட விசாரணையை வியப்புடன் இன்னொருவனுக்கு சொல்லத் துவங்குகின்றனர்.. விசாரணைக்கூடம் காண்பிக்கப்படுகிறது. வழிப்பறித்திருடன் ஒருவன், கொல்லப்பட்ட சாமுராய், சாமுராய் வீரனின் மனைவி , வழிப்போக்கனாக இவை அனைத்தையும் கண்ட மரவெட்டி ஆகியோரின் சாட்சியங்களின் வழி அவரவர் கொலையை பற்றி விவரிக்கின்றனர். இதில் கொலையுண்ட சாமுராய் வீரனின் சாட்சியம் ஆவி உருவில் அவனது மனைவியின் வாயிலாக காண்பிக்கபடுகிறது. ஒரு சம்பவத்துக்கு ஓர் உண்மைதான் இருக்க முடியும் ஆனால் இங்கோ அவரவர் கொலையை அவரவர் கோணத்தில் விவரிக்கின்றனர். நால்வர் சொல்வதும் நம்பக்கூடியதாகத்தான் இருக்கிறது.ஆனால் ஒருவர் சொல்வதற்கு முற்றிலும் தலைகீழான உண்மையாகவும் இருக்கிறது. இறுதியில் யார் சொல்வது உண்மை என கடைசி வரை தெரிந்து கொள்ள முடியாமல் படமும் முடிகிறது. ரோஷாமான் எனும் பிரம்மாண்ட கட்டிடமும் மழையும் அனைத்திற்கும் சாட்சிகளாக நடந்த சம்பவங்களை கேட்டும் கேளாமல் நின்று கொண்டிருக்கிறது.

அதுவரை ஜப்பானிய சினிமாவில் இல்லாத உள்ளழுத்தமும் பூடகமும் வெளிப்பாடாற்ற தன்மையுமாக அகிராகுரோசாவா இப்படத்தை இயக்கிருந்தார். இதனாலேயே ஜப்பனிய திரைப்பட உலகம் இத்திரைப்படத்தை அதன் ஆரம்ப நிலையிலிருந்தே நிராகரித்து வந்தது. தயாரிப்பாளர்கள் கதையில் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது தெளிவாக இல்லை என குறைகூறினர். அகிராவிடம் உதவி இயக்குனராக இருந்தவர்கள் கூட திரைக்கதையின் பலம் குறித்து போதிய புரிதல் இல்லாமல் படப்பிடிப்பிலிருந்தே விலகிக்கொண்டனர்.இப்படி பலராலும் ரோஷாமான் வெறுக்கப்பட்டதற்கு காரணம் படத்தில் திட்டமான ஒருவரிக்கதையில்லை. கதை பார்வையாளனின் யோசனைக்கு தள்ளப்படுகிறது. இதற்குமுன் இப்படியான திரைக்கதைகள் அவர்களது அனுபவ உலகத்தில் இல்லாததால்தான். இதெல்லாம் ஒரு கதையா என சுண்டு விரலால் அதனை ஒதுக்கித்தள்ளினர்.

ஆனால் குரசேவா திடமாக இத்திரைக்கதையை நம்பினார்.கதையின் ரகசியம்தான் திரைக்கதையின் வெற்றி. அது பார்வையாளனுக்கு தெளிவாக கூற வேண்டிய அவசியமில்லை. காட்சிகளின் மூலம் அவனது ஆழ்மனத்தில் உணர்த்தினால் போதுமானது என குரசேவா நம்பினார்.இதனாலேயே படத்தில் இடம்பெறும் பிரம்மாண்டமான நுழை வாயிலுக்காக குரசேவா மிகவும் மெனக்கெட்டார்.தனது கற்பனையை விட அது பிரம்மண்டமானதாக இருக்கவேண்டும் என விரும்பினார்.

பல புத்தர் கோவில்களுக்கு சென்று இறுதியில் ஒன்றைத் தேர்வு செய்தார்.புராதன நகரமான கியோட்டோவின் வடக்கு மூலையிலிருந்த நுழைவாயில் அவரை மிகவும் கிளர்ச்சியுறசெய்தது. பின் அது போன்ற ஒன்றை நிர்மாணிக்கும் படி தன் கலை இயக்குனர்களுக்கு அவர் கட்டளையிட அது அத்தனையும் விட பிரம்மாண்டமானாதாக அமைந்து காட்சிக்குள் ஒரு புதிர்தன்மையை இயல்பாக வடித்து தந்தது.

படப்பிடிப்பு முழுவதும் முடிந்து திரைப்படம் 1950ல் வெளியானபோது ஜப்பனில் பலரும் கடுமையாக எதிர்த்தனர். ஜப்பானியர்கள் தத்துவங்களை காட்டிலும், வாழ்க்கையையும் உறவுகளையுமே அதிகம் நேசிக்கின்றனர். ஆனால் யாருக்கும் புரியாத இத்திரைப்படம் குரசேவாவுக்கு மேற்கு நாடுகளின் கலாசாராத்தின் மீதான ஈடுபாட்டையே காண்பிக்கிறது என பொறிந்து தள்ளினர். ஆனால் படத்தை பார்த்த ஒரு இத்தாலிய ஆசிரியர் ஒருவர் இப்படத்தை இத்தாலியின் வெனிஸ் திரைப்படவிழாவுக்கு பரிந்துரை செய்தார்.ஆனால் ஜப்பான் அரசாங்கமோ குரசேவாவை விட எங்களின் இயக்குனரான ஓசு தான் எங்கள் வாழ்க்கையை திறம்பட சொல்கிறார் அவரது படத்தை வேண்டுமானால் அனுப்புகிறோம் என முரண்டு பிடித்தது.

இப்படியாக பல பிரச்சனைகளை கடந்து இப்படம் இறுதியாக போட்டியில் கலந்து கொள்ள, இறுதியில் விழாவின் சிறந்த படத்துக்கான தங்கச் சிங்கம் விருது இப்படத்துக்கு வழங்கப்பட்டது. அன்று அரங்கில் எழுந்த பலத்த கைதட்டலுடன் மேடையில் உயர்ந்தது குரசேவா எனும் பெயர் மட்டுமல்ல போரினால் உருக்குலைந்த ஜப்பானியர்களின் மனோதிடமும் உறுதியும் தன்னம்பிக்கையும் தான். அதே போல ரோஷாமானுக்கு பிறகுதான் உலக அரங்கில் ஜப்பான் சினிமாவுக்கு முக்கியத்துவம் கிடைக்கத் துவங்கியது.

தொடர்ந்து அமெரிக்காவிலும் இன்னும் பல படவிழாக்களிலும் கலந்து கொண்டு இத்திரைப்படம் பரிசுகளை அள்ளிக் குவித்துக்கொண்டே இருக்க குரசேவா உலகின் தலை சிறந்த இயக்குனர்களில் ஒருவராக குறுகிய காலத்தில் அறியப்பட்டார்.

ரோஷாமான் திரைப்படத்திற்கு கிடைத்த பெருமைகளுக்கு அதன் திரைக்கதை மட்டுமே காரணமல்ல. மாறாக அதன் ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் சப்த ஒருங்கிணைப்பும் கதாபாத்திரங்களின் நடிப்பும் மிக முக்கியக் காரணிகளாகும். குறிப்பாக ஒளிப்பதிவில் ரசம் பூசப்பட்ட கண்ணாடிமூலம் வெளிச்சத்தை நடிகர்களின் முகங்களில் பிரதிபலிக்கச்செய்யும் உத்தி முதன் முதலாக இப்படத்தில்தான் அறிமுகப் படுத்தப்பட்டது. அதே போல சூரியனை நேரடியாக காமிராமூலம் படம்பிடித்ததும் இப்படத்தில்தான் முதல்முறை.

படத்தில் வழிப்பறி திருடனாக நடித்த மிஃபுனே குரசேவாவின் நிரந்தர நாயகனாக தொடர்ந்து நடித்து வந்தார். ஒரு முறை படப்பிடிப்பினூடே குரசேவா குழுவினருடன் மார்டின் மற்றும் ஓசா ஜான்சன் ஆகியோர் இயக்கிய ஆப்பிரிக்கா எனும் படத்தை பார்த்துக்கொண்டிருந்தார். அதில் ஒரு காட்சியில் சிங்கம் ஒன்று நடந்து போக உடனே மிஃபுனே எனக் கத்தினார் குரசேவா. மிஃபுனே குரசேவாவை திரும்பிப்பார்க்க அதோ திரையில் நடக்கும் சிங்கத்தை பார். நம் படத்தில் நீ இது போலதான் நடக்க வேண்டும் என உத்தரவிட மிஃபுனேவுக்கு அந்த நிமிடமே மூக்கின் கீழ் மீசை சிலுப்பிக்கொண்டு உருவெடுக்க துவங்கியது. படத்தில் மிஃபுனேவின் உடலில் கட்டுதெறிக்கும் அசாத்திய முறுக்குக்கெல்லாம் பின்னணியாக குரசேவாவின் இந்த கட்டளைதான் இயங்கியது. ஒரு நடிகனுக்குள் இயக்குனர் எவ்வளவு ஆழமாய் ஊடுருவ முடியும் என்பதற்கு இச்சம்பவம் ஒரு சிறந்த உதாரணம்.

அடுத்த இதழில் : மாகலைஞன் மகத்தான மேதை : அகிராகுரசேவா