Hacksaw Ridgeஇயக்குனர் மெல் கிப்சன். இதைவிட இந்தப் படத்தை பார்க்க வேறெதுவும் காரணம் தேவையில்லை. இதுவரை வெறும் நான்கு படங்கள் மட்டுமே இயக்கியிருக்கிறார். முதல் படமான The man without face(1993)-ஐப் பற்றி எதுவும் கேள்விப்பட்டதில்லை. இரண்டாவது Braveheart(1995). அடுத்து The Passion of the Christ(2004). பின்னர் Apocalypto(2006).

இப்பொழுது பத்து வருடங்கள் கழித்து Hacksaw Ridge(2016) திரைப்படத்தை ஐந்தாவது படமாக இயக்கியிருக்கிறார். தி அமேசிங் ஸ்பைடர் மேன் சீரிஸில் நடித்த Andrew Garfield தான் கதாநாயகன்.

இது ஒரு உண்மைக் கதையை தழுவி எடுக்கப்பட்ட படம். டெஸ்மான்ட் டாஸ் என்ற ஒரு முன்னாள் ராணுவ வீரரின் கதை. கிறிஸ்துவ மதத்தின் ஒரு பிரிவான 7th Day Adventist-ஐ சேர்ந்தவர் அவர். தன்னுடைய மதக்கோட்பாட்டின் படி வாழும் மனிதர் டாஸ். ராணுவத்தில் சேர்ந்து மருத்துவ முதலுதவி சேவைகள் செய்யும் Army Medic-ஆக பணியாற்ற விரும்புகிறார். அதன்படி ராணுவப் பயிற்சி முகாமில் சேர்ந்து அங்கே தரப்படும் மற்ற பயிற்சிகளை மேற்கொண்டாலும் ஆயுதப் பயிற்சிகளை மேற்கொள்ள மறுக்கிறார். தான் ஆயுதம் ஏந்துவது தன் மதத்திற்கு எதிரானது என நினைக்கிறார். அந்த முடிவில் உறுதியாக நிற்கிறார். "ஆயுதம் ஏந்தாத ஒருவனை ராணுவத்தில் வைத்துக் கொண்டு என்ன செய்வது" என அவரை வெளியேற்ற கடும் முயற்சிகள் எடுக்கப்படுகிறது. பின்னர் அவர் ஆயுதம் ஏந்தாமல் மருத்துவ முதலுதவிப் பணிகளை மட்டும் செய்ய சட்டப்படி அனுமதி கிடைக்கிறது.

இரண்டாம் உலகப்போர் நடைபெறும் காலகட்டம் அது. அவரின் டிவிசனைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் ஜப்பானின் ஒரு பகுதியான Okinawa-ல் Hacksaw Ridge எனும் புனைப்பெயர் கொண்ட இடத்தில் அமைந்திருக்கும் ஜப்பானிய முகாமை அழிக்கப் பணிக்கப்படுகிறார்கள். . அந்த ரத்தக்களத்தில் Desmond Doss செய்யும் செயல்கள் ஆனந்தக் கண்ணீரை வரவழைக்கும் சாகசங்கள். காயம்பட்ட வீரர்களை தோளில் சுமந்து இரண்டு மணிநேரப் படத்தையும் தோளில் சுமக்கிறார் Andrew Garfield.

போர்க்காட்சிகள் அபாரம். வெடிகுண்டுகளில் சிதறும் உடல்களையெல்லாம் அபாரமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். படம் முடிந்தவுடன் வரலாற்றில் இப்படியெல்லாம் நடந்திருக்கிறதே என்ற வியப்பு அகல சிறிது நேரமாகும்.

சிறந்த படம், இயக்குனர் மற்றும் சிறந்த நடிகர் உட்பட ஆறு ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டு, இரண்டு விருதுகளைப் பெற்றிருக்கிறது. கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். வன்முறை அழகியல் இந்த "Hacksaw Ridge".

- சாண்டில்யன் ராஜூ

Pin It