angamaly diaries

மாட்டுக்கறி உணவுவகைகள் இடம்பெற்றிருந்த கேரள ஹோட்டல் கடையொன்றின் விளம்பரப் பலகையை படம்பிடித்து, "நல்லவேளையாக கேரளம் உத்திரப் பிரதேசத்திலிருந்து ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கிறது" என யாரோ ஒருவர் சில நாட்களுக்கு முன்பு ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். சமீபத்திருக்கும் உணவரசியல் சூழ்நிலையையை கிஞ்சித்தும் மதிக்காது ராஜநடை போடும் கேரள வாழ்வியலை அந்த ட்வீட் ஒரு எளிமையான அவல நகைச்சுவையாக பிரதிபலித்திருந்தது. அதே கெத்தான கேரளத்தின் உணவுக் கலாச்சார வாழ்வியலைத்தான் "அங்கமாலி" திரைப்படம் இன்னும் அதிதீவிரமாக,விரிவாக, உரத்துப் பேசுகிறது.

உணவரசியல்தான் கதைக்களம் என்பதாக இல்லாமல் "அங்கமாலி" பிரதேசத்தில் ஒருகாலத்தில் ஜீவித்திருந்த அசல் மனிதர்களின் வாழ்வியலைப் பற்றிய மையக்கதையினூடே அவர்களுடன் இரண்டறக் கலந்திருந்த உணவுக் கலாசாரத்தை ஒரு கிளைக்கதையாக படம் முன்வைக்கின்றது. பெரும்பான்மை மக்களுக்குப் பிடித்த உணவு வகைகள் என்பது வெறுமனே ஒரு உணவு மட்டுமல்ல, அது எப்படி மக்களில் வாழ்வியலில் ஒர் அங்கமாகி, கொண்டாட்டமாகி, பொருளாதாரமாகி பரவியிருக்கின்றன என்பதை நகைச்சுவையும், தீவிரமும் கலந்துக்கட்டி காட்சிப்படுத்தி, அம்மண் மனிதர்களை, வாசனையை, பார்வையாளனுக்கு சிறப்பாக கடத்துகிற படம்தான் "அங்கமாலி டைரீஸ்".

தமிழகத்தின் தனித்த வட்டார மொழிகள் கொண்ட நெல்லை, கோவை போலவே கேரளத்தின் தனித்த வட்டார மொழிகளையும், மனிதர்களையும் கொண்ட ஒரு பகுதிதான் கேரளத்தின் அங்கமாலி. பெரும்பாலும் மளையாளத் திரைப்படங்களில் நாயர், மேனன் போன்ற உயர்குடி கதைமாந்தர்களின் கதைகளாகவே வெளிவந்து கொண்டிருக்கும் சமயத்தில், அங்கமாலி போன்ற குட்டிப்பகுதிகளில் வசிக்கும் சிறுபான்மை மற்றும் ஒடுக்கப்பட்ட மனிதர்களின் கதையை எந்த சினிமா பூச்சுமின்றி இயல்பாக உலவ விட்ட பெருமைக்குரிய படைப்புகளில், அங்கமாலி டைரீஸூம் ஒன்று என்பதை மட்டுமே ஒரு காரணமாகக் கொண்டு காலரைத் தூக்கிக் கொண்டு திரையரங்கில் அமரலாம். என்றாலும், படம் தொடர்ந்து பல்வேறு சுவாரஸ்யங்களை அளித்து நம்மை கொண்டாடச் செய்கிறது என்பது நிஜத்திலும் நிஜம்.

angamaly diaries 1முதல்காட்சியில் சரக்கும், கையுமாக, மலைப்பாம்புக் கறியும், தெனாவெட்டுமாகத் தோன்றும் தாதா முதற்கொண்டு பாபுஜி, பத்து மில்லி தாமஸ் சேட்டா, மரங்கொத்தி சிஜோ, பன்றிக் கொட்டகை ரவி & ராஜன், காடு பீமன், குஞ்சோட்டி, வர்கி, வின்செண்ட் பெப்பே, சீமா, சகி, லிச்சி, ரவி மைத்துனன், போலீஸ் இன்ஸ்பெக்டர், வக்கீல் என கதை மாந்தர்கள் அத்தனைப் பேரும் மொத்தப் படத்தையும் தாங்கு தாங்கெனத் தாங்கி, படத்தை மிகப் பிரமாதமாக தூக்கிக் சென்று நம்மைக் கொண்டாட வைத்திருக்கிறார்கள். இவர்களில் பெரும்பான்மை நடிகர்கள் "அங்கமாலி" பகுதியின் அசல் மனிதர்கள் என்பது படத்திற்கு வெளியேயான கூடுதல் தகவல்.

பார் ஒன்றில், இயேசு கிறிஸ்து, அனுமார், கன்னியாஸ்திரி, ரோமானிய வீரர், நடிகை, வேடமிட்டு ஒற்றைச் சிகரெட்டைப் பங்கிட்டு சரக்கடித்துக் கொண்டிருக்கும் பள்ளியங்காடு டீம் பாய்ஸைக் காட்டியவாறு படம் துவங்குகிறது, எதிரி குழாமைச் சேர்ந்தவன் வேறு டீம் ஆட்கள், வேடமிட்டு இருக்கும் இவர்களைச் சீண்ட நடிகை வேடமிட்டவரிடம் முத்தம் கேட்க கொடுக்கப்படுகிறது. கன்னியாஸ்திரியிடம் கேட்கப்பட்டு மறுக்கப்படும் பட்சத்தில், வலுக்கட்டாயமாக பெற எத்தனிக்கும் போது, முதல் உதை தரும் இயேசு கிறிஸ்துவிடம் இருந்து படம் அதகளப் பாய்ச்சலில் பாய்கிறது.

பொருளாதார மேன்மையை அடைய நினையும் இளைஞர்களின் வாழ்வியலில், உள்ளூர் குழுக்களால் அவர்கள் எதிர்கொள்ளும் தடைகளையும், தடைகளின் பொருட்டு அவர்கள் பாவித்துக் கொள்கிற சமூகவிரோத நடவடிக்கைகளையும், படம் தெளிவாகக் கடத்துவதோடு கேரள உள்ளூர்களின் அரசியல் பொருளாதார சூழ்நிலையையும், வழியின்மையையும், மிகச்சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறது. எதையும் பிரசாரத் தொனியில் இல்லாமல், நிலவி இருந்த வாழ்வியல் சூழ்நிலையாகவே முன்வைத்தது இங்கே குறிப்பிடத்தக்கது. எர்ணாகுளம் பகுதியின் ஒடுக்கப்பட்ட மனிதர்களின் கதையான "கம்மாட்டிபாடம்" படத்தை "அங்கமாலி" ஓரளவு நினைவு கூர்ந்தாலும், அப்படம் பேசும் தீவிர அரசியலைப் போலல்லாமல், உள்ளூர் வன்மங்களை அரசியல் நோக்கித் திருப்பாது, உள்ளூர் குழுக்களுக்குள்ளாகவே முடித்துக் கொள்வதைப்போல முடித்துக்கொண்டது மட்டுமே இப்படத்தை "கம்மாட்டிப்பாடம்" திரைப்படம் தந்த அனுபவத்திலிருந்து கீழாக இறக்கி வைத்துப் பார்கச் செய்கிறது. மற்றபடி திரைப்பட ரசிகர்கள் அனைவரும் கொண்டாடத்தக்க திரைப்படம் "அங்கமாலி டைரீஸ்" என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. ஏனெனில், தொழில்நுட்ப ரீதியாக "அங்கமாலி" இந்திய சினிமாவில் ஒரு பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறது. உதாரணமாக இடைவேளை சமயத்துக் காட்சிகளாகட்டும், சென்ற வருட ஹாலிவுட்டின் ஆஸ்கர் திரைப்படமான "பேர்ட்மேன்" படத்தைப் போன்று ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்ட கிளைமாக்ஸ் காட்சிகளாகட்டும், கடைசி ஒற்றை ஷாட்டில் விரியும் துபாய் நாட்டின் பெருநிலக் காட்சிகளாகட்டும், திரைப்பட பிரியர்கள் தவறவிடக்கூடாத உன்னத அனுபவமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

மத்தியில் ஆளும் பாஜக அரசின் உணவரசியல் அடாவடித்தனங்களுக்கெதிராக, உணவுக் கலாச்சாரமும், அசல் வாழ்வியலும் இரண்டறக் கலந்த இதுபோன்ற கதைகளை இந்திய தேசம் முழுக்க பல்வேறு மொழிகளில், கலைகளின் வாயிலாக அதிதீவிரமாக முன்னெடுப்பது என்பது தற்போதைய அத்தியாவசியத் தேவையாக இருக்கின்ற அதேசமயம், அக்கதைகள், அங்கமாலியின் பன்றிக்கறி பின்புல வரலாற்றைப்போலவே மாட்டுக்கறி பின்னணியிலமைந்த நிஜ/புனைவு/அபுனைவுக் கதைகளாக பரிமாணிக்க வேண்டும் என்பதும் பெரும் ஆசையாக இருக்கிறது.

- கர்ணாசக்தி

Pin It