2004- Dec 26

கடலுள் மறை கழண்டது. அலையின் ஆயுள் சுழண்டது. மனிதன் செத்தொழிந்தான்.

சில மணி நேரத்தில்... மானுட சித்திரத்தை கயமுயவென களைத்து போட்டு வெறியாட்டம் ஆடிய கதைதான் இந்தப்படம். சுனாமியில் சிக்கி ஒரு குடும்பம் பிரிந்து எப்படி சேர்ந்தது என்பது தான் இந்த படத்தின் திரைக்கதை. இத்தனை வருடங்களுக்கு பின்னும் சுனாமி விட்டுச் சென்ற சுவடு அழிச்சாட்டியம் நிறைந்தவை. சாத்தானின் மிக நுட்பமான குறியீடு. சுனாமி குதறிப்போட்ட அதே காட்சிகளை திரையில் காணுகையில்... சினிமாவின் தொழில் நுட்பத்தை வியக்காமல் இருக்க முடியவில்லை. இயற்கைக்கு எதிராக சிறு புல்லெனதான் இந்த மானுடகுலம். எவையெல்லாம் அறுவடையோ அவையெல்லாம் விதைத்து தான்.

the impossibleபடம் நெடுக அல்லாடல் தான். படம் நெடுக பரிதவிப்பு தான். மனிதனை விட்டு மனிதன் தொலைந்து போவது தாங்கொணா துயரம். எத்தனை ஆயுதங்கள் செய்தாலும்... அன்பால் மட்டும் தான் வாழ முடியும்.

குடும்பத்தை விட்டு பிரிந்து போவது என்பதெல்லாம்.... உயிர் பிரிவதை விட கொடுமையானது. அதுவும் அம்மா உயிரோட இருக்கிறாரா இல்லையா..... அப்பா உயிரோடு இருக்கிறாரா இல்லையா...... உடன் பிறந்தோர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா,..... என்று செத்ததுக்கும் வாழ்ந்ததுக்கும் இடையே மாட்டிக் கொண்ட தனி ஒருவனின் காலடி சுவடுகளில் ரத்தமே பூமியை வரையும்.

நொடிகளில் உயிரோடு சாவதையும் நொடிகளில் செத்தும் வாழ்வதையும் இயற்கை பேரழிவுகள் காட்டுகின்றன. வாழ்நாளுக்கான பாவ மூட்டைகளில் பிணங்கள் கட்டி கட்டி படுக்க வைக்கப் பட்டிருக்க....... கேமரா ஒரு பிணத்தின் மேலிருந்து மெல்ல மேல் நோக்கி விரிய விரிய க்ளோஸ் ஷாட்டில் இருந்து மிட் சென்று அப்படியே லாங் ஷாட்டுக்கு சென்று திரை விரிய விரிய பிணங்களில் வரிசை தொடர்ந்து காட்டுப் படும் ஒரு காட்சி.......அந்த ஒரே காட்சி போதும்.... அகால மரணங்களின் வாதையின் குணம் அறிய.

தாய்லாந்து பக்கம் கிறிஸ்துமஸ் கொண்டாத்துக்கு சென்ற ஹென்றி மரியா குடும்பம் சுனாமியால் குதறப்படுகிறது. ஒரு பக்கம் அம்மா மரியாவும் மூத்த பையன் லூகாஸும். மறுபக்கத்தில் அப்பா ஹென்றியும் இரண்டு அடுத்தடுத்து இரு பையன்களும். அன்பின் தேடல்... அரவணைப்பின் தேவை... உயிரின் அச்சம்......நிஜத்தின் வலி... என்று இரு பக்கமும் ஏற்படும் போராட்டங்களில் நாம் இடையே இருதலைகொல்லி எறும்பாய் நசுக்கப்படுகிறோம்.

படம் நெடுக அச்சம் மூட்டினாலும்... மூச்சு முட்டும் மூன்று காட்சிகளை மட்டுமே இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

காட்சி ஒன்று
******************
லூகாஸும் அம்மா மரியாவும் தனியாக ஒரு பக்கம் மாட்டிக் கொள்கிறார்கள். அம்மாவின் மார்பு பகுதியில்.. தொடைப்பகுதியில் பலமாக அடி பட்டிருக்கிறது. தொடையில் சதை பிய்ந்து தொங்குகிறது. அவளால் நடக்க முடிவதில்லை. இழுத்து இழுத்து நடக்கிறாள். சேற்றில் முட்டி வரை புதைந்த சோளக்காட்டு பயணம் அது. ஆனாலும் 12 வயது லூகாஸ் அம்மாவை இழுத்துக் கொண்டு சுனாமி ஏற்படுத்திய அழிவுகளின் மத்தியில் பிணங்களின் மத்தியில் அல்லாடும் இடம்.. அப்பப்பா.. சாவின் விளிம்பு சாவை விட குரூரம்.

அப்பாவும் தம்பிகளும் செத்துவிட்டதாக நம்புகிறான். இனி தான் தான் எல்லாம் என்று அம்மாவை பார்த்து பார்த்து அழைத்துச் செல்லும் இடம் 12 வயது சிறுவன் அப்பாவாகும் தருணம். 12 வயது பையனின் தனித்த தவிப்பு சொல்லில் அடங்காதவை. உடல் பலவீனமான நிலையில்.... கணவனும் இரு பிள்ளைகளும் எங்கிருந்தாவது வந்து விட மாட்டாங்களா என்று ஏங்கும் அம்மா மரியா கண்களில் மரண பயம். அவளின் ஒரே நம்பிக்கை லூகாஸ் மட்டுமே.

அம்மாவை மரத்தில் ஏற்றி விட கீழே குனிந்து தன் தோள்களில் அம்மாவை ஏற சொல்லி மரத்தில் ஏற்றி விடுகையில் இருக்கும் பலமெல்லாம் அன்பின் பாலால் சேர்ந்தவை. வாழ்வின் சுமையை முதன் முதலாக அவன் உணர்கிறான். அவன் மனம் தேடிக் கொண்டேயிருக்கிறது. அங்கே சற்று முன் சுனாமிக்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தையை (டேனியல்) காப்பாற்றி தூக்கி வருகிறான் லூகாஸ்.

அந்த இளைப்பாறலின் நடுவே டேனியல் மரியாவின் கைகளை தடவி பார்க்கிறான். தலையைத் தடவி விடுகையில் ஒரு கடவுளின் ஆறுதல் அங்கே நிரம்புகிறது. குழந்தையின் கண்களில் மிரட்சியும் அரவணைப்புக்கு ஏங்கும் தவிப்பும்.. எல்லாம் தாண்டிய ஒரு ஒன்றுமில்லாததனமும் மரியாவின் கையைத் தொட்டு தொட்டுப் பார்த்துக் கொண்டேயிருக்கிறது. மரியாவும் லூகாஸும் ஒருவரையொருவர் பார்த்து புன்னகைத்துக் கொள்கிறார்கள். மரணத்தின் அருகே ஒரு புன்னகையை பெற்று விடுவது அத்தனை சுலபம் அல்ல.

அவனைத் தன் தோளில் தூக்கிக்கொண்டு அலைகிறான் லூகாஸ். மனிதக்குரல் யார் யாராக இருப்பினும் ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறுகிறது. அணைத்துக் கொள்கிறார்கள். யார் மரணத்துக்கோ யாரோ அழுகிறார்கள். பிரிந்த யாரோ சேர்ந்து கொள்ள பார்த்துக் கொண்டிருப்போர் மகிழ்கிறார்கள். மற்றவர்களுக்காக மற்றவர்கள் அழுகிறார்கள். சிரிக்கிறார்கள். அன்பின் தேவை மிக சுலபமாக பூக்கிறது.

"நீ நல்ல இருக்க.. முடிஞ்சளவுக்கு மற்றவர்களுக்கு உதவி செய்" என்று ஆஸ்பத்தியில் சிகிச்சையில் இருக்கும் அம்மா சொல்ல லூகாஸ் ரத்தம் தெறித்த ஆடையோடு அங்கும் இங்கும் சுற்றி மற்றவர்களுக்கு உதவ கேட்கிறான். ஒருவர் தன் பையன் பேரை சொல்லி தேட முடியுமா என்கிறார். அவனும் அந்த பேரை சொல்லி கத்திக் கொண்டே அங்கும் இங்கும் அந்த மருத்துவமனை முகாமில் தேடுகிறேன். அதைக் கண்ட சிலரும் அவனிடம் தாங்கள் தொலைத்தவர்கள் பெயர்களை சொல்கிறார்கள். ஒரு காப்பாளனைப் போல... அவன் மிக கவனமாக பெயர்களைக் குறித்துக் கொண்டு தேடி அலைவது... ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானா வளரும் கதை தான்.. அன்பின் அடிச்சுவடு அப்படி. தேடலில் முதலில் தேடிய பையன் கிடைத்து விட அவனை கட்டிபிடித்தபடி "உங்கப்பா எனக்குத் தெரியும்.. நீ இங்கயே இரு.. நான் கூட்டிட்டு வர்றேன் " என்று ஆனந்தத்தில் துள்ளி குதித்து ஓடி வந்து அந்த அப்பாவை அழைத்து சென்று சேர்த்து வைக்கும் இடம்.... மானுட தேவையின் மகத்தான இடம். மிக சுலபம் நல்ல மனிதனாக நேர்மையாளனாக அன்பானவனாக மற்றவர்களுக்காக வாழ்வது. லூகாஸ் உணர்ந்து கொள்கிறான். 

காட்சி இரண்டு
*********************
தாங்கள் இருக்கும் முகாமில்... அப்பாவை பார்த்து விடும் லூகாஸ்...." அப்பா...... அப்பா......." என்று கத்திக் கொண்டு பின்னாலேயே ஓடுகிறான். அது தெரியாமல் அவர் வேறு பக்கம் தேடிக் கொண்டே சென்று வண்டியில் ஏறி விடுகிறார். அவர் கண்ணில் அப்போது தன் குழந்தைகள் விளையாடிய பந்தை முகாமில் மற்ற சிறுவர்கள் உதைத்து விளையாடிக் கொண்டிருப்பது விழுகிறது. இந்த பந்து சுனாமியில்... ஒரு காட்டுக்குள் ஒரு குறியீடாய் ஒரு காட்சியில் சேற்றுக்குள் புதைந்து கிடக்கும். இப்போது தானே பார்த்தோம்... எங்கே போனார் என்று செய்வதறியாது அப்பா அப்பா என்று கத்துகிறான் லூகாஸ். நாலா பாக்கமும் மாயம் செய்யும் கேமரா நமக்குள் மிக பெரிய அச்சத்தை விதைக்கிறது.

அவன் குரல் வழியே அடையாளம் பரவுகிறது. அதே நேரம் இன்னொரு வண்டியில் இருக்கும் அவன் இரு குட்டி சகோதரர்கள்......" அங்க பாரு லூகாஸ்..." என்று ஒருவன் பின் ஒருவனாக வண்டியில் இருந்து எட்டி குதித்து......" லூகாஸ்..... லூகாஸ்..... லூகாஸ்...... லூகாஸ்......" என்று கத்தி அண்ணனை கூப்பிட்டுக் கொண்டே ஓடி வருகையில்.... கண்களில் ரத்தமே வந்து விடும் நமக்கு. சத்தம் கேட்டு தன் தம்பிகளைக் கண்டதும் ஒரு தகப்பனை போல ஓடி தாவி லூகாஸ் அவர்களை வாரிக் கொள்ளும் இடம் உறவுகளின் வரம் பெற்றவை. சகோதரத்துவத்தின் ஆழத்தை பிரிவு காட்டிக் கொடுத்து விடுகிறது. அணைத்துக் கொண்டு மாறி மாறி முத்தமிட்டுக் கொள்கிறார்கள் சகோதார்கள். 12 ,6,5 வயது என மூன்று சிறுவர்களின் உலகம் ஒரு ஆயுதத்தை போல தங்களை சேர்த்துக் கொள்ளும் இடம் கிளாசிக். 

காட்சி மூன்று
********************
அம்மாவுக்கு சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது. அப்பாவும் தம்பிகளும் கிடைத்து விட்டார்கள். அம்மாவுக்கு எப்படியும் சரி ஆகிவிடும். குடும்பம் சேர்ந்து விட்டது என்ற நம்பிக்கை அவனுள் பொங்குகிறது. இரண்டு நாட்களாக அலைந்து கொண்டேயிருந்த 12 வயது லூகாஸ் அருகே இருக்கும் கட்டிலில் யாரிடமும் எதுவும் பேசாமல் படுத்து கண் அயர்கிறான். இந்தப் படத்தில் இருக்கும் காட்சிக் கவிதை இது. மரணத்தின் சூதிலிருந்து தப்பித்த பரமபதத்தின் ஓய்வு அசையாமல் இருக்கும் இலையிலிருக்கும் எறும்புக்கு தேவையாய் இருக்கிறது.

கிறிஸ்துமஸ் கொண்டாடத்துக்கு வருகையில் அவர்கள் விமானத்தில் இருந்து பார்த்த கடல் வேறு. இப்போது பதபதைப்போடு மருத்துவத்துக்காக அவர்கள் செல்லும் விமானத்தில் இருந்து அவர்கள் பார்க்கும் கடல் வேறு. இந்த உலகம் மாயத்தின் விளிம்பில் சுற்றிக் கொண்டிருக்கிறது. தான் என்ற வேலிகள் நிறைய நிறைய இயற்கை அதை பிடுங்கி எறியும். இயற்கைக்கு வாழ்வு மரணம் எல்லாம் ஒன்று தான்.

செத்தவர்கள் நிம்மதியின்மையை விட தப்பித்தவர்களின் நிம்மதி அச்சத்தின் சுவடுகள் நிறைந்தவை.

பின் படம் முடிகையில்.. படத்தில் ஆரம்பத்தில் சுனாமியில் இருந்து தன்னால் காப்பாற்ற பற்ற அந்த சிறுவன்(டேனியல்) அவன் அப்பாவிடம் சேர்ந்து விட்டதை லூகாஸ் சொல்கையில் அம்மாவின் முகத்தில் ஆன்ம திருப்தி.

Film : The Impossible
Director :J. A. Bayona
Language : English
Year : 2013

- கவிஜி