பொதுவான திரைப்பட விமர்சனங்களுக்கும், இடதுசாரித் தன்மை வாய்ந்த விமர்சனங்களுக்கும் இடையில் ஒரு பெரிய வேறுபாடு இருக்கிறது. பொதுவான விமர்சனங்களில் ஒவ்வொரு திரைப்படம் குறித்தும் சில நிறைகள்,சிலகுறைகள் முன்வைக்கப்பட்டு ஒட்டுமொத்தத்தில் அத்திரைப்படத்தில் குறைகள் நிறைந்துள்ளனவா அல்லது நிறைகள் அதிகம் உள்ளனவா என்பவை பட்டியிலிடப்படுகின்றன. மேலும் அத்தகைய விமர்சனங்கள் ஒவ்வொரு திரைப்படத்தையும் திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, பாடல்கள், மேலும் பல தொழில்நுட்ப அம்சங்கள் எனக் கூறு போட்டுப் பார்க்கின்றன. ஒட்டுமொத்தத்தில் இவ்வாறு பார்க்கும் முறையில் பல சமயங்களில் விமர்சிக்கப்படும் படத்தின் உள்ளார்ந்த உயிரோட்டமும் ஒருங்கிணைந்த தன்மையும் பறிபோய்விடுகின்றன.
வியாபார ரீதியான விமர்சனங்கள்
இத்தகைய விமர்சன முறை இதனைக் கடைப்பிடிப்பவர்களுக்கு ஒரு வசதியைச் செய்து தருகிறது. அதாவது இவ்வாறு அனைத்துத் திரைப்படங்களையும் விமர்சனம் செய்ய முடியும். அதாவது குப்பையான ஒரு திரைப்படத்தையும் அதில் சில அம்சங்கள் கோபுரம் போல் உள்ளன எனப் பாராட்ட முடியும். அதைப் போல் கோபுரம் போன்ற ஒரு திரைப்படத்திலும் குப்பையாக சில அம்சங்களைக் கண்டுபிடித்து அவற்றையும் கோடிட்டுக் காட்டமுடியும்.
இந்த வகையில் பணம் செலவு செய்து எடுக்கப்படும் அனைத்துத் திரைப்படங்களையும் ஒன்றில்லாவிட்டால் மற்றொரு அம்சத்திற்காக பார்க்கலாம் என்பது போன்றதொரு பரிந்துரையினை ரசிகர்களுக்குச் செய்ய முடியும். அதே சமயத்தில் இந்த விமர்சனங்கள் மூலம் தங்களின் பக்கங்களை நிரப்பி பத்திரிக்கை வியாபாரத்தையும் இலாபகரமாகப் பராமரிக்க முடியும்.
மதிப்பீட்டுத் தன்மை கொண்ட விமர்சனம்
ஆனால் நமது விமர்சனங்கள் இப்போக்கிலிருந்து வேறுபட்டவை. ஒரு திரைப்படம் அது முன்வைக்கும் ஒருங்கிணைந்த உள்ளார்ந்த வாழ்க்கையின் மூலம் சமூகத்தில் பராமரிக்கப்பட வேண்டிய நல்ல மதிப்புகளை கலைநயத்துடன் உயர்த்திப் பிடிக்கிறதா, சமூகத்தின் மையமான பிரச்னையைப் பிரதிபலிக்கிறதா என்பவையே நாம் அவற்றை விமர்சிக்கக் கையாளும் வழிமுறைகள்.
அடிப்படையில் மிகப் பெரும்பான்மையான அம்சங்களில் மேலே குறிப்பிடப்பட்ட அம்சங்களைக் கொண்டதாக ஒரு படம் இருந்தால் அப்படத்தின் தொழில் நுட்ப அம்சங்களில் இருக்கும் சிற்சில குறைகளைப் பூதக்கண்ணாடி போட்டுப் பார்த்து அவற்றைக் கோடிட்டுக் காட்டுவதையோ அதன்மூலம் நமது பாண்டித்யத்தைப் பறை சாற்றுவதையோ நாம் செய்வதில்லை.
நமது விமர்சனத்தின் நோக்கம் சமூகத்தாக்கமுள்ள நல்ல திரைப்படங்களின் உயர்ந்த அம்சங்களை உயர்த்திக்காட்டி அதனை இன்னும் தெளிவாக ரசிகர்கள் முன் கொண்டு செல்ல வேண்டும் என்பதே. அவ்வகையில் நாம் செய்வதை விமர்சனம் என்று கூறுவதைக் காட்டிலும் மதிப்பீடு என்று கூறுவது பொருத்தமுடையதாக இருக்கும்.
புறநிலை யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் எந்தத் திரைப்படமும் அவை உண்மை நிலையைப் பாரபட்சமின்றி வெளிக் கொணரும் விதத்தில் எடுக்கப்பட்டால் நிச்சயமாக தன்னையறியாமலேயே கூட சமூகத்தின் ஏதாவது ஒரு அடிப்படையான பிரச்னையையும் அது சார்ந்த வேதனையையும் பிரதிபலிக்கவே செய்யும்.
திரைப்பட ரசிகர்களின் மேலோட்டமான பார்வைக்குத் தப்பிவிடும் அந்த விசயத்தைப் பார்ப்பவர் முன் நிறுத்த வேண்டும் என்பதே நமது மதிப்பீட்டின் நோக்கம். அந்த அடிப்படையில் நமது மதிப்பீடுகள் அத்தகைய நல்ல திரைப்படங்களின் பங்கும் பகுதியுமானவை. சுருக்கமாகச் சொன்னால் இந்தவகை விமர்சனத்தின் வரையறைக்குள் அனைத்து திரைப்படங்களும் வருவது சாத்தியமல்ல. மேலும் இது முதலாளித்துவ வியாபார யுக்திகளுக்குத் துணை போவதுமல்ல; இதைத் தாங்கி வரும் நமது இதழ் வியாபார யுக்தியுடன் நடத்தப்படுவதுமல்ல.
ஒரு இடதுசாரி அரசியல் ஊழியன் என்பவன் அடிப்படையான சமூகமாற்றத்தை வலியுறுத்தப் போராடுபவன். அவன் வலியுறுத்தும் சமூக மாற்றம் இந்த அல்லது அந்தவகைச் சீர்திருத்தங்கள் மூலம் சாதிக்கப்பட முடியாதது. அத்தகைய சமூக மாற்றம் ஒரு மகத்தான மக்கள் எழுச்சியின் மூலமே சாதிக்கப்பட முடிந்தது. அந்த எழுச்சிக்கான தேவையினை உணர்ந்து, இன்றுள்ள சமூக நிலையை அப்படியே தக்கவைக்கப் பாடுபடும் அரசியல்வாதிகளின் ஏமாற்று முழக்கங்கள், தந்திரங்கள், சூழ்ச்சிகள், சூதுகள் ஆகியவற்றை புரிந்து சாதாரண மக்களும் கூட அத்தகைய மகத்தான மக்கள் எழுச்சியில் பங்கேற்க இன்றில்லாவிட்டால் நாளை முன்வருவர். முன்வந்தே ஆக வேண்டும். அதைத் தவிர வேறு வழியேயில்லை.
ஆனால் அத்தகைய எழுச்சியை வழிநடத்த வல்ல கருத்துக்களை முன்கூட்டியே அறிந்து அதன் அடிப்படையில் வாழ்ந்து வழிகாட்ட முயலும் ஊழியர்கள் மிகப்பெரும் எண்ணிக்கையில் உடனடியாக சமூகத்தில் உருவாகிவிட மாட்டார்கள். அவ்வாறு உருவாகும் உணர்வுபெற்ற மிகச் சிறு பகுதியினர் அவர்களைப் போன்றவர்கள் மென்மேலும் உருவாகத் தேவைப்படும் சமூக மதிப்புகளை உருவாக்கவல்ல இலக்கியங்களையும், திரைப்படங்களையும் தேடிக் கொண்டிருப்பர். ஏனெனில் நல்ல இலக்கியங்களும் திரைப்படங்களும் சமூக மாற்றக் கருத்துக்களை விதைக்கத் தேவைப்படும் வகையில் சமூகத்தைப் பரந்த அடிப்படையில் பண்படுத்த வல்லவை. அத்தகையவையாகத் தென்படும் திரைப்படங்களை அவற்றில் உள்பொதிந்துள்ள சமூக மாற்றத்திற்குத் தேவைப்படும் கருத்துக்களை வெளிக்கொணர்ந்து ரசிகர்கள் முன் வைப்பது அவர்கள் சிரமேற்கொண்டுள்ள சமுதாயக் கடமைக்கு உகந்ததும் உதவக்கூடியதும் ஆகும்.
அந்த அடிப்படையில் தற்போது வெளிவந்து திரையரங்குகளில் நல்ல வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கும் நட்பு மற்றும் காதலை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள நாடோடிகள் திரைப்படத்தின்மீது நமது பார்வையைச் செலுத்துவோம்.
சுயநலம் கடந்ததாக இருப்பதே நட்பின் சிறப்பு
அப்பா என்றால் அப்பா மட்டும் தான்; அம்மா என்றால் அது மட்டுமே. ஆனால் நண்பன் என்ற உறவிற்குள் அனைத்தும் அடக்கம் என்று இப்படத்தின் கதாநாயகன் தன் நண்பனது காதலியின் தகப்பன் முன் கூறும் வார்த்தைகள் நட்பு குறித்து நம்மை ஆழமாகச் சிந்திக்க வைக்கிறது. அம்மா, அப்பா இவர்கள் இருவருமே குடும்ப உறவுகளில் முதன்மை யானவர்கள். ஆனால் அவர்களைக் காட்டிலும் நட்புரீதியான உறவு மேலான அனைத்தும் என்றால் அதற்கு அத்தனை சிறப்பிருப்பதன் காரணம் என்ன? ஆம் அதன் காரணம் நட்பு என்னும் உறவில், குடும்ப உறவுகளில் இருக்கும் அத்தனை சுயநலம் இல்லாமல் இருப்பதே.
மனிதன்-சமூகம்-நட்பு-காதல் கண்ணோட்டங்கள்
அத்தகைய சுயநலமில்லாத நட்பு என்ற கண்ணோட்டமும் தன்னினப் பெருக்கத்தை அடிப்படையாகக் கொண்ட பாலியல் உணர்வு காதல் உணர்வாக மெருகேறி அதன் விளைவாக உருவான காதல் கண்ணோட்டமும் சமூகத்தின் வளர்ச்சிப் போக்கின் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் தோன்றியவை. அதாவது இயற்கையை எதிர்த்த தனது போராட்டத்தில் மிருகங்களிலிருந்து மாறுபட்டு மனிதன் தன்னை ஒத்த பிற மனிதர்களோடு இணைந்து ஒருவகை உறவினை ஏற்படுத்திக் கொண்டு ஈடுபட்டான். அதன் மூலம் மற்ற விலங்குகளிலிருந்து வேறுபட்ட ஒரு வாழ்க்கை, அதாவது சமூகவாழ்க்கை அவனுக்கு அமைந்தது.
ஆனால் அச்சமூகத்தில் ஒரு காலகட்டத்தில் தனிச்சொத்து தோன்றி அதன் விளைவாக சொத்துடையவர், இல்லாதவர் என்ற ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டன. அந்த சமூக அமைப்பில் சொத்துடைமை வர்க்கங்கள் தங்களது தனியுடைமையைப் பாதுகாப்பதற்காக அடக்குமுறைப் போக்குகளைக் கையாண்டன. மேலும் தாங்கள் பிறரின் உழைப்பால் உருவாக்கி கையகப்படுத்திக் கொண்ட தனிச்சொத்துக்களை முழுக்க முழுக்க தங்கள் வாரிசுகளே ஆண்டு அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒருதார மணத்தையும் ஏற்படுத்தின.
போராட்ட ஒற்றுமையின் விளைவாகத் தோன்றியதே நட்பு
அடக்குமுறையினைப் பிற உழைக்கும் மக்களுக்கு எதிராகப் பிரயோகிப்பதற்காக உடைமை வர்க்கங்கள் அடக்குமுறைக் கருவியான அரசை ஏற்படுத்தின. இந்நிலையில் அடக்குமுறைகளை எதிர்த்த பாதிக்கப்பட்ட மக்களின் போராட்ட ரீதியிலான ஒற்றுமையின் விளைவாகவே நட்புக் கண்ணோட்டம் தோன்றியது.
அடிமை எழுச்சிக்குத் தலைமை தாங்கியவன் ஸ்பார்டகஸ். அவனுடன் உடைமைவர்க்க சீமாட்டிகளை மகிழ்விப்பதற்காக ஆயுதந்தாங்கிய போட்டியில் ஈடுபட்ட கறுப்பர் இனத்தைச் சேர்ந்த அடிமை டிராபா, போட்டியில் ஸ்பார்ட்டகஸ் தோல்வியுற்று ஆயுதம் இழந்து நிற்கையில் அவன் போட்டியின் நியதிப்படி ஸ்பார்டகஸ்ஸைக் கொன்றிருக்க வேண்டும். ஆனால் அதைச் செய்யாமல் அவன் தன் கைவசம் இருந்த சூலாயுதத்தை வேடிக்கை பார்த்து ரசித்துக் கொண்டிருந்த பிரபுக்கள் மீது வீசினானே - அதனால் தன் உயிரையும் இழந்தானே அப்போது வெளிப்பட்டதே நட்புணர்வின் மிக உயர்ந்த உன்னத வடிவம்.
தனிச் சொத்தும் -ஒரு தார மணமும்
அதைப்போல் காதல் உணர்வின் தொடக்கமும் ஒரு தாரக் கண்ணோட்டத்தோடு தொடர்புடையது. ஒரு தாரமணம் நாம் ஏற்கனவே கூறியதுபோல் மனித சமூகத்தில் தனிச் சொத்துடைமை தோன்றிய பின்னரே தோன்றியது. அதாவது தான் சேர்த்து வைத்துள்ள சொத்தினை முழுக்க முழுக்க தனது வாரிசாக உள்ள பிள்ளைகள் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே ஒரு தார மணம் உடைமை வர்க்கத்தால் உருவாக்கப் பட்டது. அதனால்தான் கற்பு என்பது ஒருதாரமணம் ஆரம்பித்த காலத்தில் பெண்களுக்கு மட்டும் என்பதாக இருந்தது.
உழைக்கும் வர்க்கமே காதலை திருமணத்தின் அடிப்படையாக்கியது
அத்தகைய மோசமான தொடக்கத்தைக் கொண்டிருந்த - சொத்துடைமை வர்க்கத்தால் உருவாக்கப்பட்ட ஒரு தாரமணத்தை, இழப்பதற்குச் சொத்து என்று எதுவுமே இல்லாத உழைக்கும் வர்க்கமே ஒரு உன்னதமான உயரத்திற்குக் கொண்டு சென்றது. அதாவது தனிச்சொத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒருதார மணத்தைப் பரஸ்பர விருப்பத்தை அதாவது காதலை அடிப்படையாகக் கொண்டதொரு உன்னத உறவாக ஆக்கியது உழைக்கும் வர்க்கமே. இந்தவகையில் சமூகத்தின் உன்னதமான கண்ணோட்டங்கள் அனைத்தின் தொடக்கங்களுமே உழைக்கும் வர்க்கத் தொடர்புகளுடனேயே நடந்திருக்கின்றன என்பதை அறிய முடியும்.
இவ்வாறு காதலை அடிப்படையாகக் கொண்ட உன்னத உறவாக உழைக்கும் வர்க்கத்தால் ஆக்கப்பட்ட காதல் கண்ணோட்டம் ஜனநாயக நெறிகள் ஓரளவு நிலை கொண்ட மேலைநாட்டு சமூகங்களில் இயல்பானதாக ஆகிவிட்டது. ஆனால் திருமணபந்தம், நமது சமூகத்தைப் போன்ற சமூகங்களில் இன்னும் பெரும்பாலும் அப்பட்டமான சொத்துடைமை உறவாகவே தொடர்கிறது. குடும்பச் சொத்து வெளியே போய்விடக்கூடாது என்பதற்காக அக்கா, தங்கை இருவரையும் ஒரே ஆண் மணப்பது போன்ற அநாகரீக முறைகளும்கூட நமது சமூகத்தில் ஆங்காங்கே நிலவுகின்றன.
சொத்துடைமை மனநிலை ஊறிப்போன பழைய தலைமுறையினர் காதல் திருமணங்களுக்கு முட்டுக்கட்டை போடுகின்றனர். இளைய தலைமுறையினரில் பெரும்பாலோர் “தாம் தான் காதலிக்கவில்லை இவர்களது காதலாவது கைகூடட்டும் என்ற எண்ணத்தில், தன் காதல்தான் நிறைவேறவில்லை இவர்களது காதலாவது நிறைவேறட்டும் என்ற நோக்கத்தில், தன் காதலைப்போல் இவர்களது காதலும் வெற்றி பெறட்டும் என்ற நல்லெண்ணத்தில், தன் காதலுக்கு இதுபோல் உதவிகள் வரும் என்ற எதிர்பார்ப்பில்” -காதலுக்கு ஆதரவாக நிற்கின்றனர்.
நட்பின்றி உண்மையான காதல் இல்லை
பரஸ்பர விருப்பத்தை அடிப்படையாகக் கொண்ட காதல் என்று நாம் கூறும்போது அது உருவப் பொலிவை மட்டும் அடிப்படையாகக் கொண்டு உருவாவதல்ல. உருவப் பொலிவு மட்டும் அடிப்படையானதாக இருந்தால் இத்திரைப்படத்தில் அந்தத்தொழில் முதலாளியின் மகளுக்கும், அரசியல் முதலாளி வர்க்கத்தின் பிரதிநிதியாக வரும் மாஜி எம்.பி.யின் மகனுக்கும் இடையிலான காதலில் பிரச்னையே வந்திருக்கக்கூடாது. உருவப் பொலிவோடு கூட காதலில் நட்புணர்வும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. நல்ல நட்பே தோன்ற இயலாத இருவருக்கிடையில் உயர்ந்த காதல் நிச்சயமாக இருக்கவே முடியாது.
உன்னத உணர்வுகளைப் பராமரிக்கத் திராணியற்ற உடைமை வர்க்கங்கள்
ஆனால் உன்னதமான உணர்வுகளைப் பராமரித்து மென்மேலும் அதி உன்னதத் தன்மை வாய்ந்தவையாக அவற்றை வளர்த்தெடுக்கத் திராணியற்றதாக ஏற்றத்தாழ்வுகள் உள்ள சமூக அமைப்புகள் ஆகிவிடுகின்றன. அதன் விளைவாக திருமணம் என்ற பெயரில் நிறுவனமயமாக்கப்பட்டு விடும் காதல் உணர்வு நெருக்கடி சூழ்ந்த வாழ்க்கை நிலையினாலும், பொறுப்புகளின் தாங்கொண்ணாச் சுமையினாலும் பொலிவிழந்ததாகவும், செக்குமாட்டுத் தன்மை கொண்டதாகவும் ஆக்கப்பட்டுவிடுகிறது. ஆனால் எத்தனை முட்டுக்கட்டைகள் வந்தாலும் உழைக்கும் மக்கட் பகுதியினராலேயே நட்பு, காதல் போன்ற உணர்வுகள் முற்றாக அழிந்துவிடாமல் பாதுகாக்கப் படுகின்றன. பெரும்பான்மையான சமயங்களில் உடைமை வர்க்கத்தைச் சேர்ந்தவர்களால் அவை தரம் தாழ்த்தப் படுகின்றன; பொலிவிழந்தவையாக ஆக்கப்படுகின்றன.
இத்திரைப்படத்திலும்கூட மற்ற அனைத்து நண்பர்களும் எவ்வாறு நிலையானதொரு வாழ்க்கையினை அமைத்துக் கொள்வது என்பதற்காக அயர்வின்றி முயன்று கொண்டிருக்கையில் தன்னை நம்பி வந்தவளைக் காப்பாற்றுவதற்காகத் தொடர்ச்சியாக வேலைக்குக் கூடச் செல்லமுடியாத சோம்பேறியாக அரசியல்வாதிப் பெண்மணியின் மகன் இருக்கிறான். படத்தில் கதாநாயகனால் மாமா என்று அழைக்கப்படுபவர் தன்னை நம்பி வந்தவர்களைப் பராமரிப்பதற்காகத் தன் சம்பளத்தில் பாதியைச் செலவழிக்கிறார். அந்நிலையில்கூட அவர்படும் சிரமம் அறியாது ஒரு ஃபேசியல் செய்வதற்கு கூட பணம் போதவில்லை என்று தொழிலதிபரின் மகள் அலுத்துக் கொள்கிறாள்.
காதலை ஒன்று சேர்க்கச் செல்கிறார்கள் என்றவுடன் தான் சேர்த்து வைத்திருக்கும் பணத்தை டீசல் செலவிற்காவது பயன்படட்டும் என எடுத்துக் கொடுக்கும் கதாநாயகனின் தங்கை பிரதிபலிக்கும் நல்ல உணர்வும், பாதிக்கப்பட்டு நிற்கிறார்கள் என்று அறிந்தவுடன் தாங்கள் அணிந்திருக்கும் நகைகளை முழு மனதோடு கொடுக்கத் தயங்காத கதாநாயகனின் தங்கை மற்றும் அவன் காதலியின் நற்குணங்களும் எங்கே? ஃபேசியலுக்கு பணம் இல்லை என்று பிறரின் எந்த சிரமத்தையும் பொருட்படுத்தாத அந்தப் பணக்காரப் பெண்ணின் தன்னலப் பகட்டு எங்கே?
தங்களது பருவ உணர்வை காதல் என்று கருத வைத்து அதற்காக நட்பைப் பயன்படுத்திவிட்டு அதைக் கைகூடச் செய்வதற்காக தங்களது வாழ்க்கையையே தொலைத்துவிட்டு வந்து நிற்கும் நண்பர்களைப் பார்க்கக்கூடத் தயாராக இல்லாதிருக்கும் அந்தப் பணக்காரப் பையனின் பாத்திரம், உண்மையான நட்புணர்வுடன் ஒத்துப்போகாத மேட்டுக்குடி மக்களின் மேலோட்டமான போக்கின் ஒரு குறியடையாளமாக விளங்குகிறது.
குறியடையாளங்களாக படைக்கப்பட்டுள்ள பாத்திரங்கள்
இதைப்போல் பல பாத்திரப் படைப்புகள் அவை சார்ந்துள்ள சமூகப் பின்னணிகளின் குறியடையாளங்களாக உள்ளன. காதல் வயப்பட்ட இருவருமே மேட்டுக்குடி மக்களாக இருந்த போதிலும் அவர்களின் பெற்றோருக்கிடையில் நிலவும் முரண்பாடுகளை அதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். தொழில் முதலாளியாக வரும் பெண்ணின் தந்தை ஒரு தொழிலை அதற்கு தேவையான சிரத்தையினை எடுத்துத் தொடங்கி நிர்வகித்து அதன் மூலம் பொருள் சேர்த்த பின்னணியைக் கொண்டிருப்பதால் அதன் விளைவாகத் தோன்றும் குணங்கள் அவரால் சரியாகப் பிரதிபலிக்கப்படுகின்றன. காதலரைச் சேர்த்து வைக்க வந்த நண்பன் ஒருவன், வீட்டை நோட்டம் பார்க்க வந்து பிடிபட்டு அடி உதை பட்டுக் கெஞ்சும் போது அவன் மேல் அனுதாபப்பட்டுப் பணம் கொடுத்து அனுப்பும் அவரது பாங்கும், தன்னுடன் ஓடிவந்தவனைப் பிரிந்து தன் வீட்டிற்குத் தன்னுடைய பெண் திரும்பிய பின்னர் அவர்கள் பிரிந்ததைக் கேள்வியுற்று வெகுண்டெழுந்து வந்த நண்பர்களை அவளுடன் பேச அனுமதிக்கும் செயலும், அவர் அரசியலை முதலீடாகக் கொண்டு சம்பாதிக்க விரும்பும் பையனின் தாயாரைக் காட்டிலும் மேலான கலாச்சாரத்தைப் பிரதிபலிப்பதை எடுத்துக்காட்டுகிறது.
ஆனால் ஒரு கொலைகார முதலாளித்துவப் போக்கின் பிரதிநிதியாக வரும் அந்த அரசியல்வாதிப் பெண்மணி, பையனின் கருத்துக்களுக்கும் விருப்பங்களுக்கும் ஒரு மரியாதையும் தராத போக்கையும், பதவியிலிருக்கும் அரசியல்வாதிக் குடும்பத்துடன் சம்பந்தம் வைத்துக் கொள்ளத் துடிக்கும் மனநிலையையும், யாரையும் எடுத்தெறிந்து பேசும் அலட்சியப் போக்கையும் தன் மகனின் நண்பர்களாக இருந்தபோதும் பொருளாதார ஏற்றத் தாழ்வை மனதில்கொண்டு “அடுத்த மாதம் 16-ம் தேதி திருமணம் வைத்திருக்கிறேன். வந்து தின்னுவிட்டுப்போங்கள்” என்று கேவலமாக பேசும் கலாச்சாரமற்றத் தன்மையையும் பிரதிபலிக்கிறார். இது மற்றொரு சரியான சமூகக் குறியடையாளமாக விளங்குகிறது.
தலைமைப் பண்புகள்
அரட்டை அடித்துக் கொண்டு திரிவது என்பதைத் தாண்டி உருப்படியாகத் திட்டமிட்டு எதையாவது செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும்போது அவ்வாறு செய்வது நட்பு வட்டமாகவே இருந்தால்கூட அதற்கு ஒரு ஸ்தாபன அணுகுமுறை தேவைப்பட்டு விடுகிறது. அவ்விதத்தில் தன்னலம் இல்லாது நண்பன் ஒருவனின் நலனுக்காக ஒன்றுசேரும் நண்பர்கள் குழுவும் ஒரு ஸ்தாபனமாகவே நடைமுறையில் விளங்குகிறது. எந்த ஒரு ஸ்தாபனத்திற்கும் தலைமை வேண்டும் அந்த நண்பர்கள் குழுவிற்கு இயற்கையான தலைவனாக கதையின் நாயகன் கருணாகரன் விளங்குகிறான்.
சிறு விசயங்களைப் பொருட்படுத்தாமல் நட்பினைப் பராமரிப்பதற்காக வரும் கஷ்டங்களையும் சிரமங்களையும் வெளிக்காட்டாமல் இருக்கும் அவனது பக்குவம் பெற்ற மனநிலை ‘நீ பார்த்தாலும் பார்க்காதது மாதிரி தானடா இருப்பாய், நீ தெரிந்தாலும் தெரியாத மாதிரி தானடா இருப்பாய்’- இது அனைத்திற்கும் சிகரம் வைத்தாற்போல் ‘நீ வலித்தாலும் வலிக்கலை யினுதானடா சொல்லுவாய்’ என்ற வசனங்களின் மூலம் மிகவும் உருக்கமாக முன் வைக்கப்பட்டுள்ளது.
பள்ளிநாட்கள் முதற்கொண்டே அந்த பணக்காரப் பையனுக்காக பலரை அடித்து நட்புக்காக எந்த சிரமத்தையும் எதிர்கொள்பவனாக அவன் சித்தரிக்கப்படுகிறான். ஒரு குழுவிற்குத் தலைவனாக இருப்பவனின் பல குணாம்சங்கள் சிற்சிறு காட்சி அமைப்புகள் மூலம் ஆழமாகப் பார்ப்பவர் மனதில் பதிக்கப்படுகின்றன. தன்னுடைய முறைப் பெண் தன்னை முத்தமிடச் சொல்லும் காட்சியில் ஒரு வகையான மனப்பக்குவம் மற்றும் முதிர்ச்சியுடன் அவன் காட்டும் தயக்கமும் சுயவிருப்பமின்றி அவளின் கட்டாயத்திற்காக அதனைச் செய்ய நேர்வதால் அவன் வெளிப்படுத்தும் செயற்கையான அசைவுகளும் சுவையானவையும், சிரிக்கவைப்பவையும் மட்டுமல்ல ; அவனது மனப் பக்குவத்திற்கு எடுத்துக்காட்டாகவும் உள்ளது.
அதைப்போல் அவர்களை ஒன்று சேர்ப்பதற்காக தங்கள் பட்ட கஷ்டங்கள் எதையும் பொருட்படுத்தாது பிரிந்துவிட்ட காதலர்களை தனித்தனியே கடத்திக் கொண்டு வந்து வைத்துள்ள இடத்திலும் காதலனான தனது மாஜி நண்பனைத் தயங்காமல் அடிக்கும் அவனது கரம் அந்தப் பெண்ணை அடிக்கத் தயங்கி ஓங்கிய கை ஓங்கிய படியே நிற்கும் காட்சி அவனது பெண்களுக்கு எதிராக வன்முறையைப் பயன்படுத்துவது தவறு என்ற பண்பு நலனைப் பக்குவமாக எடுத்துரைக்கிறது. தலைமைப் பொறுப்பு ஏற்பதற்குத் தேவைப்படும் அவனது ஓரளவிலான பற்றற்ற தன்மையும் மிக நாசூக்காக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
தனது தங்கைக்கும் நண்பர்களில் ஒருவனுக்கும் காதல் இருப்பதைத் தெரிந்த நிலையிலும் அதை அவ்வளவு துVரம் தெரிந்ததுபோல் காட்டிக் கொள்ளாமல் இருக்கும் போக்கு, சந்தர்ப்பம், விளைவித்த சூழ்நிலையில் தனது வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் போனதை மனதில் நிறுத்தி தனது விருப்பத்தையும் காதலையும் இழந்து சோகத்தை உள்வாங்கி நிற்கும் அவனது மனநிலை பார்ப்பவர் உள்ளத்தை நெருடுவதாக உள்ளது.
தனது வயதினை ஒத்தவர்கள் மீது மட்டுமல்லாது அவன் வைத்திருக்கும் பிற சமூகத் தொடர்புகளும் அவனது பாத்திரத்திற்கு மெருகூட்டுகின்றன. பெரிய மீசை வைத்திருக்கும் சமையல்காரப் பெரியவர், காதலுக்கு என்றவுடன் தயங்காமல் வாடகையின்றி கார் வழங்க முன்வரும் டிராவல்ஸ் நடத்துபவர் போன்றவர்கள் உடனான அவனது மேலோட்டமானது போல் காட்சியளித்தாலும் கூட ஆழமானதும் அழுத்தமானதுமான தொடர்புகள் அதற்கான எடுத்துக்காட்டுகளாக விளங்குகின்றன.
இறுதியில் காதல் என்ற பெயரில் ஏமாற்றிய இருவரையும் கொன்று விடுவோம் என்று தன் நண்பர்களில் ஒருவன் கூறும்போதும், ஏன் நாம் செய்ததற்கு கூலியா என்று கூறி எந்தத் தன்னலமும் கருதாது காதலுக்காகத் தாங்கள் எதிர்கொண்ட பாதிப்புகள் பழிவாங்கும் உணர்வாக மாறிவிடக் கூடாது என்ற விதத்தில் அவனால் பிரதிபலிக்கப்படும் உயர்பண்பு அவனது தலைமைப் பாத்திரத்தை இன்னும் ஒளியுடன் மிளிரச் செய்கிறது. இத்தகைய மனநிலைகள் அனைத்தும் ஒவ்வொரு இடதுசாரி இயக்கத்திலும் இருப்பவர்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டியவை யாகும்.
பொதுவாக இடதுசாரி அமைப்புகளில் வேலைசெய்யும் இளைஞர்களுக்கு அவர்களது குடும்பம் ஒரு பிரச்னையாகவே இருக்கும். ஒருசிறு சுயநலவட்டம் என்ற ரீதியில் ஒவ்வொரு குடும்பத்திலும் பெற்றோர் பணரீதியாக எந்தப் பலனும் தராத பொது வேலைகளில் தங்களது பிள்ளைகள் ஈடுபடும்போது அவர்களைத் திட்டிக்கொண்டும் நோகடித்துக் கொண்டுமே இருப்பர். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்வது பிள்ளைகள் மேல் உள்ள வெறுப்பினால் அல்ல. அவர்களை எப்படியாவது அவர்கள் பாணியில் உருப்படியானவர்களாக ஆக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தான்.
மரியாதை கலந்த அன்பை பெற்றோரிடமிருந்து பெற முடியும்
அவர்களை எவ்வாறு பொதுவாழ்வில் இருப்பவர்களாகிய நாம் சமாளிப்பது என்பது ஒரு பெரும் கேள்வி. அதற்கு ஒரு நடைமுறை எடுத்துக்காட்டு இத்திரைப்படக் கதாநாயகனின் நடைமுறையே. கதாநாயகன் செய்யும் செயல்கள் தந்தைக்கு உருப்படியற்றவையாகத் தோன்றினாலும் அவர் மனதில் அவரால் வெளியில் சொல்லப் படாததொரு பாதிப்பை தலைமுறை இடைவெளியையும் தாண்டி அவை அவரிடம் ஏற்படுத்துகின்றன.
அதன் விளைவாகவே அவர் தனது பிள்ளையின் தன்னலமற்ற போக்கையும் நட்பு பாராட்டும் தன்மையினையும் கருத்திற்கொண்டு ஒரு அபிமானத்தையும் மரியாதையையும் அவன்மீது கொண்டிருக்கிறார். அவன் செய்யும் காரியங்களில் தனக்கு உடன்பாடு இல்லாமல் போனாலும் அவன் நல்லவன் என்ற கருத்து அவரிடம் நிலை கொண்டுள்ளது.
குடும்பமே மிகவும் சோதனை வயப்பட்ட நிலையில் இருக்கும்போது அது அவனது தந்தையிடமிருந்து வெளிப்படுகிறது. காவல் நிலையத்திலிருந்து ஜாமீனில் வெளிவரும் அவனைக் காரில் அழைத்து வரும்போது அதாவது அவன்மேல் மிகுந்த கோபம் அடைந்திருக்க வேண்டிய சூழ்நிலையில் அவர் தன் கையை அவன் கைமேல் பதித்து அழுத்தி தனது பரிவையும் நேசத்தையும் வெளிப்படுத்துகிறார்.
நான் விரும்பிய வாழ்க்கைதான் எனக்கு அமையவில்லை தங்கைக்காவது அவள் விரும்பிய வாழ்க்கை அமையட்டும் என தனது சோகத்தைத் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தி தங்கையின் காதலை நிறைவேற்ற செய்யும் அவனது யுக்தி உணர்வுப் பூர்வ உறவுகளை நல்ல விசயங்களுக்காக இப்படியும் பயன்படுத்தலாம் என்பதற்கோர் எடுத்துக்காட்டு.
கற்றுக்குட்டித்தனத்திற்காகக் காவு கொடுக்கப்படும் காதல்
கதையின் மிகவும் மையமான சோகமே ஒரு மேலோட்டமான எந்தவகைக் கருத்தொருமைப்பாடும் இல்லாத பருவக்கவர்ச்சி ஒன்றையே அடிப்படையாகக் கொண்ட கற்றுக்குட்டி காதலுக்காக ஒரு வகையில் தேவதாஸ் - பார்வதியின் காதலை ஒத்த கருணாகரன் -நல்லம்மாள் காதல் நிறைவேறாமல் போவதுதான். தேவதாஸில் தேவதாஸின் தந்தை மணமகள் ஜமீன்தார் குடும்பத்துப் பெண்ணாக இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். ஆனால் இக்கதையிலோ மணமகளின் தந்தை தனக்கு மருமகனாக வரப்போகிறவன் அரசாங்கச் சம்பளம் பெறுபவனாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். தேவதாஸில் இக்காதல் நிறைவேறாது என்பதை உணர்ந்த பார்வதி தனது உல்லாசம் சல்லாபம் நிறைந்த இளமை வாழ்க்கை ஏறக்குறைய முடிந்துவிட்டது என்ற உணர்வுடன் ஒரு கிழட்டு ஜமீன்தாரை மணந்து அவரது குடும்ப பொறுப்புகளில் மனதை ஈடுபடுத்தி தன் வாழ்நாளைக் கழிக்க முற்படுகிறாள்.
அதுபோல் இப்படத்திலும் தந்தை தனது விருப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக தனது உயிரையே மாய்த்துக்கொள்ள என்று துணிந்தாரோ, எந்த வேளை தனது தாய் தாலிப் பிச்சை கேட்டு மகளென்றும் பாராது தனது காலில் விழத் தலைப்பட்டாளோ அந்த நிமிடத்தில் தனது இளமைத் துடிப்பும் துள்ளலும் ஆசைகளும் கனவுகளும் நிரம்பித் ததும்பும் கல்யாண வாழ்க்கை குறித்த எண்ணங்களை குழிதோண்டிப் புதைத்துவிட்டு நல்லம்மாள் நடைப்பிணமாகிறாள். அவளது பழைய துடிப்பும் ஜீவனும் நிரம்பிய குணநலன்களின் துVரத்துச் சுவடுகளைக் கூட அதன் பின்னர் பார்க்க முடியாமல் போகிறது.
தேவதாசுக்கும் இந்தப் படத்திற்கும் உள்ள ஒரே வேறுபாடு தேவதாஸில் தேவதாஸ் பார்வதியின் ஆழமான காதலே முழுக்கதையாக இருந்தது. நட்பின் உயர்வினை உயர்த்திப் பிடிப்பதை மையக் கருத்தாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் கருணாகரன் நல்லம்மாவின் ஆடம்பரமில்லாத அழுத்தமானதாக ஆவதற்கு அனைத்துத் தகுதிகளையும் கொண்ட காதல் ஒரு உபகதையாக மாறுகிறது.
இயல்பும், தத்ருபமுமான நடிப்புகள்
நடிப்பைப் பொறுத்தவரையில் படத்தில் வரும் பெரும்பாலோர் நடிப்பதாகவே தெரியவில்லை. வாழ்க்கையை அப்படியே முன் நிறுத்துகிறார்கள். மிக நீண்ட நாட்களுக்குப்பின் சாவித்திரியின் நடிப்பை நினைவுபடுத்தும் விதத்தில் நல்லம்மா பாத்திரத்தில் நடித்திருக்கும் புது நடிகை அவர் நடிப்பிற்கு புதியவர் என்று கூற முடியாத விதத்தில் ‘நான் நீங்கள் சொல்லுகிறபடி கேட்கிறேன்’ என்று தனது மரண வேதனையை மனதில் புதைத்துக் கொண்டு ஒருமுறைக்கு இருமுறை தன் தந்தையிடம் கூறி அழும் காட்சி ஒரு சகாப்தத்தின் வேதனையை பார்ப்பவர் மனதில் பாய்ச்சுகிறது.
அதைப்போல் பாண்டி எனும் பாத்திரத்தில் நடிக்கும் நண்பர்களில் ஒருவன் கட்டிட வேலைக்குப் பயன்படும் கம்பால் அடிபட்டு கேட்கும்திறன் இழந்த நிலையில் அவனது நடிப்பும், சிக்கலில் மாட்டிக் கொண்டபின் வீட்டிற்கு வரும் வேளையில் அவனது தந்தை அங்கு கிடந்த வாழைமட்டைகளினால் அவனைத் திட்டிக் கொண்டே அடிக்க நீங்கள் பேசுவது ஒன்றும் எனக்கு கேட்கவில்லை என்று கூறிவிட்டு அக்குடும்பத்திலிருந்து பிரியும் நிலை வந்துவிட்டது போன்ற உணர்வில் தன்னால் அத்தருணத்தில் நினைவுகூர முடிந்த ஒரே உறவான இறந்துவிட்ட தன் தாயை நினைத்து அம்மா என்று கூறும் இடத்திலும், சந்திரன் பாத்திரத்தில் நடிப்பவர் கால்வலியால் அரற்றும், துடிக்கும் இடங்களிலும் அவர்களது நடிப்பு அற்புதம்.
சிறுசிறு பாத்திரங்களில் வந்தாலும் கூட சிலர் பார்ப்பவர் மனதில் நிரந்தரமாக நிலை கொண்டுவிடுகின்றனர். அப்படிப்பட்ட பாத்திரம் தான் வசனம் எதுவும் பேசாத கருணாகரனின் நண்பனாக மோட்டார் சைக்கிளில் வரும் வாலிபனின் பாத்திரம். அவனது மெளனம் வார்த்தைகளில் வெளிப்படுத்திக் கொச்சைப்படுத்தாமல் உள்ளார்ந்த நட்பின் மேன்மையைப் பக்கம் பக்கமாக பட்டியலிடுகிறது. கருணாகரனின் பாட்டியாக வரும் வயதான பெண்மணியின் கபடமற்ற சிரிப்பு, கதாநாயகனை மட்டுமல்ல படம் பார்க்கும் நம்மையும் அவர் இறந்தபின் அவர் முன்னர் படுத்திருந்த இடத்தில் அவரைத் தேடச் செய்கிறது.
தனிப்பட்ட முறையில் நடிப்பென்று பார்த்தால் அரசியல் வர்க்கத்தின் பிரதிநிதியாக வரும் கன்னியாகுமாரி மாஜி எம்.பி. பாத்திரமேற்று நடிக்கும் நடிகை பெண்தன்மைகள் பலவும் அற்றுப்போன ஒரு சீரழிந்த பெண் அரசியல்வாதியைத் தத்ருபமாகப் பிரதிபலிக்கிறார். அவரது பழனிவேல் ராமன் என்ற குரல் திரையரங்கை விட்டு வெளிவந்த பின்னரும் காதுகளில் இடைவிடாது ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
நாம் வாழும் இந்த சமூகம் எவ்வளவு துVரம் எதிர்காலப் பாதுகாப்பினை எவருக்கும் உறுதி செய்ய முடியாததாக இருக்கிறது என்பது மிக இயல்பான காட்சிகள் மூலம் திரைப்படம் முழுவதும் வெளிப்படுத்தப்படுகிறது. தாங்கள் எவ்வாறு ஒரு நிலையான வாழ்க்கையினைத் தங்களுக்கென அமைத்துக் கொள்வது என்பது குறித்தே பேசிக்கொண்டிருக்கும் நண்பர்கள்; அரசாங்க வேலை, அரசாங்க வேலை என்று அரைப் பைத்தியமாக தன் மகளின் எதிர்கால உத்திரவாதம் கருதி அலையும் கதாநாயகனின் மாமன்; தனக்கு மருமகளாக வரவேண்டும் என தான் விரும்பும் கதாநாயகனின் தங்கையிடம் வீட்டுப் பத்திரம், பயோடேட்டா, வங்கிக் கணக்கு உட்பட அனைத்தையும் காட்டி, தன் மகனால் ஒரு பாதுகாப்பான வாழ்க்கையை அவளுக்கு வழங்க முடியும் எனச் சிரத்தை எடுத்துக் காட்ட முயலும் கதாநாயகனின் நண்பனது முன்னாள் இராணுவ வீரரான தந்தை என இப்பாத்திரங்கள் அனைவருமே இந்தச் சமூகம் எத்தனை பாதுகாப்பற்றதாக உள்ளது என்பதை மிக இயல்பாக வெளிப்படுத்துகின்றன. அதாவது சமூகத்தில் இல்லாத பாதுகாப்பைத் தேடி மக்கள் எவ்வாறு வீணாக ஓடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைப் புலப்படுத்துகின்றன.
நண்பனின் காதல் கைகூட உதவுவது என்பதை ஒரு நல்ல சமூகம் எந்த வகையிலும் தவறென்று கூறாது. ஆனால் நாம் வாழும் சமூகத்தில் அதனைச் செய்வதற்காக நண்பர்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகள்தான் எத்தனை. பாசமிகு பாட்டியின் உயிர், உடல் ரீதியான ஊனங்கள், திசைமாறிப் போன எதிர்காலம் என்று பாதிப்புகள் பல ஏற்படுகின்றன. அதைப்போல் நண்பர்களால் சேர்த்து வைக்கப்பட்ட காதலர்கள் தான் தோன்றித்தனமாக எந்த அவசியமும் இன்றிப் பிரிகின்றனர். காதலர்களை ஒன்று சேர்ப்பதற்கு எதிராக சம்பந்தப்பட்ட தாய் தந்தையரின் நேரடித்தாக்குதல் இருந்தது. காதலர்கள் பிரிவதில் அவர்கள் சார்ந்திருக்கும் மேட்டுக் குடித்தனத்தின் மேலோட்டத் தன்மையின் உள்ளார்ந்த சொகுசும், ஆடம்பரம் தேடும் போக்கும் இருக்கிறது. இவை அனைத்தும் இனம் புரியாத விதத்தில் பார்ப்பவர் அனைவருக்கும் இந்தச் சமூகம் நன்றாக இல்லை; அதில் ஏதோ கோளாறு இருக்கிறது என்பதை பூடகமாக உணர்த்துகின்றன.
அந்த வகையில் பரந்த அளவில் பார்ப்பவர் மனதை இத்திரைப்படம் பாதிக்கிறது; ஒருவகை வேதனையில் ஆழ்த்துகிறது. இன்றைய தேவை இதுபோல் பார்ப்பவர் மனதை வேதனைக்கு ஆளாக்கும், சங்கடப்படுத்தும் படங்களே. ஏனெனில் அவற்றில் ஒரு சமூக நோக்கு உள்ளது. அவை பார்ப்பவர் மனதில் உருவாக்கும் சிந்தனை ஏன் இப்படி நடக்கிறது என்ற எளிமையான எண்ணத்தில் தொடங்கி, படிப்படியாக அதற்கான காரணங்களை சிந்தித்து அறிய முற்படுகையில் முறையான வழியில் சிந்திக்கும் ஒரு சிலரிடமாவது இந்த சமூகத்தை சரியானதாக மாற்ற வேண்டும் என்ற உறுத்தலை உண்டாக்கும். அதைச் செய்வதன் மூலம் ஒரு முற்போக்கான சமூகப் பார்வையை அப்படம் பிரதிபலிக்கிறது. அந்த வகையில் இத்திரைப்படம் கலைநயத்துடன் ஒரு சமூகக் கடமையினை ஆற்றும் பணியினை நயமும் சுவையும் குன்றாமல் செய்கிறது.