நாகரிகம்... முன்னேற்றம்... வளர்ச்சி... தொழில்நுட்பம்... இப்படி மானுட வளர்ச்சி நோக்கி மிக வேகமாய் சுழலும் இப்பூமியில் நம்மோடு சேர்ந்து கலப்படம் என்ற பிசாசும் மிக நுட்பமாக வளர்ந்து கொண்டிருப்பதை நாம் கவனிக்கும் நேரம் இது. இவ்வுலக வியாபார தந்திரத்தின் வலையில் சிக்கிக் கொண்ட சுழற்சிதான் நாமும். அதில் கலப்படம் என்பது தவிர்க்க விடாத சூழ்ச்சியின் நகங்களால் சூழப்பட்டிருக்கிறது.
ஒரு பெயிண்டராக டீ கடைக்கு டீ குடிக்க சென்று கடையின் சுத்தம் குறித்து பேசி, சித்தார்த் சண்டை போடத் தொடங்குவதில் "அருவம்" படம் கலப்படமற்ற தனித்துவத்தை காட்டத் தொடங்குகிறது.
சித்தார்த் வரும் போதெல்லாம்.... நம்மை சுற்றி நடக்கும் உணவு தொடர்பான கலப்படங்களும்....சுத்தமின்மையும்.... அங்கீகாரமற்ற விற்பனை முறையும்... எக்ஸ்பைரி தேதியை மறைத்து விட்டு விளையாடும் வியாபார தந்திரமும்... நம் குரல்வளையை நெருக்குகிறது.
முதலில் இப்படி ஒரு கதையை தொட்டதற்கே இயக்குனர் "சாய் சேகர்"- ஐ பாராட்ட வேண்டும். கலப்படம் குறித்தான காட்சிகளில் எங்குமே தன்னை சமரசம் செய்து கொள்ளவில்லை என்று தான் நம்புகிறேன். நாம் நம்மை சுற்றி நடந்து கொண்டிருக்கும் நுட்பமான கலப்படத் திருட்டை கண்டுணராமலே இருக்கிறோம். அல்லது கண்டும் உணராமலே இருக்கிறோம். கிடைத்த சந்தில் எல்லாம் ஏமாற்றுப் பேர் வழிகள் வியாபார தந்திரமென்று டை கட்டி பேசிக் கொண்டிருக்கிறார்கள். தொடை தெரிய லுங்கி கட்டிக் கொண்டும் பஜ்ஜி சுட்டுக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள். விளம்பரத்தின் வாயிலாக ஒரு தலைமுறையின் சிந்தனையையே மாற்றி விட்டார்கள். துளி நீலத்தில் வெண்மையாகும் கூற்றை வைத்து கொண்டு கறை நல்லது என்று சொல்லித் திரியலாம் நாம்.
டீ கடையில் ஆரம்பித்து... பெரிய பெரிய கடைகளில் நாம் அன்றாடம் வாங்கும் அத்தியாவசியப் பொருள்கள்.... கையேந்தி பவன்களில் இருந்து உயர் தர அடுக்குமாடி ஹோட்டல்கள் வரை அவரவர் தகுதிக்கு செல்லும் உணவகங்கள்... என்று எங்கு பார்த்தாலும்... நமக்குத் தெரியாமல்... ஒருவேளை தெரிந்தாலும் தெரியாதது போல நகர்ந்து கொள்ளும் சிறு சிறு தவறுகளில் இருந்து பெரிய பெரிய கலப்படம் வரை.. அப்படி அப்படியே படமாக்கி இருப்பது... படைப்பாளியின் நேர்மையைக் காட்டுகிறது.
டீ கடைகளில் சுடப்படும் வடை போண்டா பஜ்ஜி என்று அதன் தரத்தை அது செய்யப்படும் கிச்சன்களில் எட்டிப் பார்க்கையில் குமட்டிக் கொண்டு வருவதை படத்தில் காணுகையில் பகீரென்கிறது. நிஜத்துக்கு மிக அருகில் தான் பொய் இருக்கிறது. கவனம் என்கிறது டீ கடைகள். சாலையோரம் இருக்கும் கடைகளில் திறந்தே இருக்கும் இது போன்ற பலகாரங்களை அப்படியே வாங்கி சாப்பிடும் நாம் கண்டிப்பாக மாதம் இரு முறை மருத்துவரை காணத்தான் வேண்டும். உணவுமுறையில் மாற்றம் நிகழ்த்தி தன் வியாபாரத்துக்கான உணவு புரட்சி செய்யும் வளர்ந்த நாடுகளுக்கு நாம் இன்னமும் வலைகளில் சிக்கிய மீன்கள் தான்.
ஒரு முறை உபயோகப் படுத்தப்படும் எண்ணெய் அடுத்தடுத்து வேறு வேறு கடைகளில் இடத்துக்கு தகுந்தாற் போல தகுதிக்கு தகுந்தாற் போல மீண்டும் மீண்டும் உபயோகப்படுத்தும் வழக்கத்தை நாம் காண நேர்கையில்... ஐயோவென இருக்கிறது. நாக்கு மறுக்கும் உவ்வே அது. காசுக்கு தகுந்த பொருளை கொடுக்காத இதுபோன்ற எண்ணற்ற வியாபார தந்திரங்கள் தான் நம்மை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறது என்ற உண்மையை படம் நெடுக, சரியாக கழுவாத டம்ளரில் தரமில்லாத பழைய தூளைக் கொண்டு தயாரிக்கும் டீயை பிடித்து, முகத்தில் ஊற்றுவது போல சொல்லப்படுகிறது.
கலப்பட முட்டைகளால் பள்ளியில் குழந்தைகள் சாவது குறித்த காட்சியில் உண்மை எத்தனை இலகுவாக மறைக்கப்படுகிறது என்ற உண்மை சாவுக்கும் மேல் நடுக்கத்துக்குரியவை. அதிகார வர்க்கத்தின் எதிர்முனை இன்னமும் அப்பாவியாகவே தான் இருக்கிறது என்பது எத்தனை ஆபத்தான வாழ்வுமுறை.
பழங்கள் ஊசி போட்டு பழுக்க வைக்கப் படுகின்றன. காபி கொட்டையில் அபின் போன்ற போதை பொருட்கள் கலக்கப்படுகிறது. (சமீபத்தில் மளமளவென வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு காப்பி கடையில் அப்படி ஒரு அடிக்சன் சுவை இருப்பதை பொதுவாக, பரவலாக எல்லாருமே விவாதித்துக் கொண்டிருக்கிறோம்) எல்லாமே குறிப்பிட்ட ரேசியோவில் சாதாரண மக்கள் கண்டுணர முடியாத வகையில் திட்டமிட்டு அறிவுப்பூர்வமாக கலக்கப்படுவதை பார்க்கையில் மிக கொடூரமான வியாபாரத்துக்குள் இச்சமூகம் மாட்டிக் கொண்டிருப்பது புரிகிறது.
பால் கெட்டு போகாமல் இருக்க, கலக்கும் கலவைகள் நம்மை அச்சுறுத்துகின்றன. அதன் பின்னணியில்தான் தயிரும்.
கெட்டுப்போன ரொட்டியை விற்பனை செய்யும் மருத்துவ வளாகம் தனக்கான நோயை தானே அறுவடை செய்து கொள்கிறது. பேருந்து நிலையங்களில்.... .ரயில் நிலையங்களில்.... நாம் அவசரத்துக்கு வாங்கும் தண்ணீர் பாட்டில்களின் தரம் சுவை குணம்... அக்கடைகளின் புழக்கடையில் அதன் தயாரிப்பைக் காணுகையில் அதிர வைக்கிறது.
நீரின்றி அமையாது சாவு என்றும் சொல்லலாம்.
ஒருமுறை வாங்கி உபயோகப்படுத்தி விட்டு கசக்காமல் அப்படியே வீசி எறியும்... கசக்கி எறிந்தாலும் அதையும் நீவி கசங்கள் நீக்கி விட்டு மீண்டும் பிளாஸ்டிக் பாட்டில்களில் நீர் நிரப்பி மறு விற்பனைக்கு வரும் உண்மை.... .... கலாச்சாரம் கண்றாவியையெல்லாம் காரி உமிழ்கிறது. மாட்டுக் கொழுப்பை நெய் என்று பயன்படுத்தும் பாங்கு... முதிர்ந்த ஏமாற்றுத்தனத்தின் உச்சம்.
கதாநாயகி "தெரசா"வுக்கு வாசனை நுகர முடியாத குறை கொண்ட கதாபாத்திரம்.(இக்கதையில் இது எதற்கு என்று தெரியவில்லை) ஒரு பேரன்பு மிக்க டீச்சர். நன்றாக நடித்தும் இருக்கிறார். நடை தான்... கிழக்கும் மேற்குமாக அதனதன் வழியில் தானாக இருக்கிறது. ஜோதிகாவுக்கு.. சிம்ரனுக்கு.. லைலாவுக்கு... இன்ன பிற ஹீரோயின்களுக்கு கொடுக்கப்பட்ட அதே கொஞ்சி கொஞ்சி மூக்கில் பேசும் குரல். இந்தக் குரலை இனி தவிர்க்கலாம் தமிழ் சினிமா. வேண்டுமென்றே பரிதாபத்தை கொண்டு வரும் குரலுக்கும் தெரசா கதாபாத்திரத்துக்கும் தொடர்பில்லாமல் இருக்கிறது.
கலப்படம் இருக்கும் வரை நான் திரும்ப திரும்ப வந்து கொண்டேயிருப்பேன் என்று ஒரு உணவு பாதுகாப்பு அதிகாரியான சித்தார்த் கதாபாத்திரத்தின் நேர்மை சாவுக்கும் பயப்படாதது. சித்தார்த்தின் உடல்மொழி குரல்மொழி இரண்டுமே ஒரு கலகக்குரலின் அடையாளம். சித்தார்த் என்ற அற்புதமான நடிகனை இன்னும் நாம் சரியாக உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும். இத்தனை உண்மையான, வாழ்வுக்கு நெருக்கமான கதைக்களத்தை வைத்துக் கொண்டு அருவம் டீம், எதற்கு பேய் திரைக்கதைக்குள் சென்றார்கள் என்று தெரியவில்லை.
வியாபார தந்திரம் என்ற போர்வையில் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் பெரும் குற்றங்களை பொருள் மறைவில் நிகழ்த்திக் கொண்டிருக்கும் அதிகார வர்க்கமும் அதற்கு துணை நிற்கும் ஆளும் வர்க்கமும் நின்று நிதானமாக அடித்தாடுகிறது. வாய் கிழிய அறிவுரை சொல்லிக் கொண்டே இருக்கும் பொதுமக்கள் கூட்டம் வேக வேகமாய் செத்துக் கொண்டிருக்கிறது.
ஒரு சாதாரண வாழ்வை இன்றைய நவீன தத்துவங்கள் வாழ விடாமல் செய்வதை எங்கனம் எதிர் கொள்வது. சாமானியனின் தினசரி வாழ்வு முறை கேள்விக்குள்ளாக்கப்படுவதை எப்படி புரிந்து கொள்வது.... போன்ற நிதர்சனமான கேள்விகள் படம் நெடுக. பதில், அருவம் அடுத்த பார்ட்டில் எல்லாம் இல்லை. உங்கள் தெரு முக்கு டீ கடையில் நின்று உள்ளே எட்டிப்பாருங்கள். அங்கிருந்து தொடங்கட்டும்.... ... இனியாவது நம் விழிப்புணர்வு.
உண்மைக்கு எதிரே அருவம் தேவை இல்லை. நிஜம் தான் தேவை.
- கவிஜி