கடல் திரைப்படம் சாத்தானுக்கும், இயேசுவுக்கும் இடையிலான போராட்டத்தை காண்பித்து இறுதியில் நன்மை அதாவது இயேசு வெற்றி பெற்றதாக ஒரு ‘கனமான‘ கருத்தை வலியுறுத்துகிறேன் என்று ரசிகர்களை சிரமப்படுத்திய படம். 

கதைக்களம், ஒரு கடற்கரையோர கிறித்தவக் கிராமம். படத்தின் முதல் காட்சியே சிலுவையை நோக்கி அரவிந்தசாமி செல்லும் காட்சிதான். பாதிரிக்கான படிப்பு சொல்லித் தரும் இடம். அங்கே படித்துக் கொண்டிருக்கும் அர்ஜுன் அவரை ‘ஓ‘ போட்டு வரவேற்கிறார். அவர் அடித்தட்டு வர்க்கத்திலிருந்து சோத்துக்காக பாதிரி படிப்பு படிக்க வந்தவர். அந்நிறுவனத்தின் தலைவர் அரவிந்தசாமியிடம் ‘சௌகரியக் கொறைச்சல் நிறைச்சு உண்டு, சமாளிச்சிக்குவியா என்று கேப்பாரு. ஆனா அர்ஜுன் எப்ப பார்த்தாலும் ஒண்ணாம் அலைமேல பாட்டுப் பாடியும், 'இயேசுவோட அண்ணன் சாத்தான், சாத்தானுக்குத்தான் பைபிள் நல்லாத் தெரியும்',  என்று கூறிக்கொண்டும், ஒரே ஜாலியா  இருப்பாரு. படிக்கிறவர்கள் மொத்தம் பதிமூன்று பேர்  அதில் அரவிந்தசாமி மட்டுந்தான் இயேசுவின் சீடர் போலவும் மற்றவர்களெல்லாம் சாத்தானின் வாரிசுகள் போலவுமே காட்சிப் படுத்தியிருப்பார்கள். ஒரு நாள் அர்ஜுன் ஒரு பெண்ணோடு இருப்பதை கண்டுபிடித்து மேலிடத்தில் சொன்னதால் அர்ஜுனை அப்படிப்பிலிருந்து நீக்கி விடுகிறார்கள். அரவிந்தசாமியை அடித்துக் கொல்லாமல், பின்னாடி பழி வாங்கும் திட்டத்துடன் (??!!!) விட்டுச் செல்கிறார். அதன் பிறகு (நம்மையும் சேர்த்து?!!!) பழி வாங்குவதுதான் கதை.

kadal_460கடற்கரையில் ஒற்றைக் கூரை வீடு, அம்மா மீது படுத்திருக்கும் குழந்தை என்று ஒரு விபச்சாரியின் வீட்டிலிருந்து கதை ஆரம்பமாகிறது. விபச்சாரம் செய்ய வந்த பொன்வண்ணன், குழந்தையை வெளியே மழையில் நிறுத்தி விட்டு உள்ளே போகிறான். அவள் இறந்தது தெரிந்து அனாதைகள் புதைக்கப்படும் தெம்மாடி பகுதியில் புதைக்கிறார்கள். இப்படித்தான் அந்த கிறித்தவ மீனவக் கிராமம் நமக்கு அறிமுகமாகிறது. கிறித்தவ கிராமம் என்றாலும் அங்கு யாருமே சர்ச்சுக்குப் போக மாட்டார்கள்; பாதிரியை மதிக்க மாட்டார்கள்; பாதிரி என்றாலே பெண்களோடு கூத்தடிப்பவன் என் கிண்டல் செய்வார்கள்; உதிரிகள், குடி, கெட்டவார்த்தை, விபச்சாரம் என்று சித்தரிக்கப் பட்டுள்ளது. இறந்து போன விபச்சாரியை புதைக்கும் காட்சியில் அவளது காலை ஒடித்து புதைக்கும் காட்சி. வசனம் எல்லாம் அவ்வளவு ஒரு வக்கிரம், குரூரம். விபச்சாரியின் மகன்தான் படத்தின் கதாநாயகன். அவனது தாய் இறந்த பின்பு 3 அல்லது 4 வயது இருக்கும் அந்தச் சிறுவனை அந்தக் கிராமமே வெறுத்தொதுக்கி ஒரு தெரு நாயைப்போல விரட்டுகிறது. அடிக்கடி போய் வரும் பொன்வண்ணன் குடும்பம் கூட அந்தப் பையனுக்கு ஒரு வேளை சோறு போடாமல் கதற கதற அடித்துத் தள்ளுகிறார்கள் சிலுவையின் பின்னணியில்(??!!!) 

அந்தக் கிராமத்துக்கு பாதிரியாராக அரவிந்தசாமி சிங்கிளாக பைக்கில் வருகிறார். சந்தையில் ஒரு மீன்விற்கும் பெண்மணி பாதிரி தலையில் வம்படியாக மீனைக் கட்டிவிடுகிறார். ‘சர்ச் எங்க இருக்கு‘ என்று டீக்கடையில் ஒருவனிடம் கேட்டால் ‘நான்தான் எல்லாம், என்ன விசயம்‘ என்று கேட்டு விட்டு, ஜெபம் செய்ய, பேயோட்ட என்று ஒவ்வொன்றுக்கும் ஒரு ரேட் சொல்கிறான். இவர்தான் புதிதாக வந்த பாதிரியார் என்று தெரிந்த பின், பாழடைந்து புழங்காமல் கிடக்கும் சர்ச்சுக்கு அழைத்துச் செல்கிறான். உள்ளேயிருந்து நாய்கள், கதாநாயகன் உட்பட பல சிறுவர்கள் ஓடி வருகிறார்கள். பருப்பும் வெண்ணையும் தின்று, தியானம் செய்வதற்காக பாதிரியாராக ஆனவரில்லையா அவர், அதனால் ரொம்ப பொறுமையாக சர்ச்சை சரிசெய்து, மக்களுக்காக சர்ச்சையே மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து கிராமத்தை திருத்த முயற்சிக்கிறார்.  

ஆனால், அவர் கைக்கு மாட்டுவது அம்மாவை இழந்த கதாநாயகன் மட்டுந்தான். 9, 10 வயதில் உதிரியாக இருக்கும் நம் கதாநாயக சிறுவனுக்குள் ‘அம்மா வேணும்‘ என்கிற தாகம் இருப்பதை கண்டுபிடிக்கிறார். வயதுக்குப் பொருந்தாத காட்சி அது. (அஞ்சலி படத்தில் ‘எனக்கு அந்த பாப்பா வேண்டாம், வேண்டாம், அதை குப்பைத் தொட்டில போடுங்க‘ என்ற காட்சியை நினைவுபடுத்தும் செயற்கையான காட்சி). சிறுவயதுக் கதாநாயகன் சர்ச்சுக்குள் ஒன்னுக்கு அடிக்கிறான் (பின்நவீனத்துவ காட்சி??!!!) பாதிரியின் கவுனை, பர்சை திருடும் நம் கதாநாயகனை, பொறுமையிழந்து அடித்துத் திருத்தி, மீனவர்களோடு மீன் பிடிக்க அனுப்புகிறார் பாதிரி. 

எனக்குத் தெரிந்து நான் வாழ்ந்த கிராமத்தில் இது போன்ற அனாதைகள் இருந்தால் அவர்கள் இந்துவாக இருந்தாலும் கூட அது போன்ற பையன்களுக்கு ஏதாவது ஒரு கைத்தொழில் கற்றுக் கொடுப்பதோடு படிக்கவும் வைப்பார்கள். பெற்றோர் இருக்கும் குழந்தைகளைக் கூட படிப்பிற்காக அங்கு கொண்டு விடுவார்கள். 

பருப்பும் வெண்ணையும் சாப்பிடுபவர்கள் கிறித்தவர்களாக மாறி பாதிரியாரானால் இப்படித்தான் அவா அவா குலத் தொழிலை செய்ய அனுப்புவார்களோ என்னவோ தெரியவில்லை. மீன் பிடித்து, பையன் வளர்ந்து விடுகிறான். பதிமூன்று வருடம் ஓடி விடுகிறது. பாதிரியார் வழக்கம் போல் தியானம் செய்து கொண்டிருக்கும் போது துப்பாக்கி சுடும் சத்தம் கேட்கிறது. அர்ஜுனை யாரோ சுட்டுவிட்டுச் செல்கிறார்கள். அரவிந்த சாமி காப்பாற்றுகிறார். ஆனால் சோத்துக்கு கஸ்டப்படும் சாத்தானில்லையா அவன், அதனால் உயிர் பிழைத்ததும் காப்பாற்றிய அரவிந்தசாமியையே கொலைகாரன் பட்டம் கட்டி சிறைக்கு அனுப்பி விடுகிறான். அதற்கு தன்னைக் காதலித்தவளையே பகடைக் காயாக்குகிறான். சாத்தானான அர்ஜுனைக் காதலிப்பவள் முத்துக் குளிப்பவள். ஒருத்தன் தன்னை திருமணம் செய்துக்கிறேன்னு சொன்னதுக்காக உயிரை விடத் தயாராக இருக்கும் ‘வெள்ளந்தி‘ பெண்.

 பழிதீர்க்கும் படலத்தில் தன் காதலன் வெற்றி பெற வேண்டுமென்பதற்காக பாதிரியாருடன் உடல் தொடர்பு இருந்ததாக பொய் கூறுகிறாள்.  

உடனே குடி, கூத்தியாள், விபச்சாரம், ஒழுங்கீனம் ஆகியவற்றின் மொத்த உருவமாக இருக்கும் அக்கிராமத்து மக்கள் பொங்கியெழுந்து பாதிரியையும் அவரோடு இருந்த பெண்களையும் அடி அடியென அடிக்கிறார்களாம்.  

பாதிரியால் பதிமூன்று வருடம் நல்வழிப்படுத்தப்பட்ட கதாநாயகன், கண நேரத்தில் அர்ஜுனிடம் அதாவது சாத்தானிடம் ஒட்டிக்கொள்கிறான். அதற்கு அவன் சொல்லும் காரணம், ‘ஊரே எங்கால்ல விழுகணும், சாத்தானுக்குப் பிறந்தவன்னு ஏசினவனெல்லாம்....., சர்ச், சாமி எல்லாரும் எங்கால்ல விழுகணும்‘ என்பதுதான். அதன் பிறகு  சண்டையிடுகிறான், ஓடுறான், கப்பல்ல போறான், எல்லாரையும் சுட்டுச் சுட்டுத் தள்ளுறான். அப்பா என்று தான் நினைத்தவன் கண்முன்னே சாவதைப் பார்க்கிறான். அம்மாவுக்கு கிறித்தவ முறைப்படி ஜெபம் செய்து கல்லறை கட்டி முடிக்கும் போது மீண்டும் பாதிரி சிறைத் தண்டனை முடிந்து வந்து விடுகிறார் திருத்துவதற்கு.

 இந்த முறை கதாநாயகனை பாதிரியோடு கதாநாயகியும் சேர்ந்து திருத்துகிறார். வழக்கமாக மணிரத்னம் படத்தில் வரும் கதாநாயகிகள், ஒரு வித மனவளர்ச்சி குன்றியவர்கள் போலவே (க்யூட்டா இருக்காங்களாமா??!!!) தோன்றுவார்கள். ஆனால் இந்த படத்தில் உண்மையிலேயே அப்படித்தான். ஆனால், கிராமமே அந்தக் கதாநாயகியைத்தான் பிரசவம் பார்க்கக் கூப்பிடுவார்களாம். அப்படி ஒரு பிரசவத்தின் போது பெண்ணின் உற்றம் சுற்றம் எல்லாரையும் விலக்கி வைத்துவிட்டு நம் கதாநாயகனை உதவிக்கு அழைக்கிறாள். அவனும் உதவுகிறான். கையில் ரத்தக் கறை ஆகிறது. தான் கொலைகள் செய்த போது பட்ட ரத்தக் கறைக்கும், இந்த ரத்தத்திற்கும் உள்ள வித்தியாசத்தை உணர உணர(!!!??) திருந்தி விடுகிறார். உடனே கதாநாயகி காதலியாக மாறுகிறாள். அப்புறம், கடைசியாப் பார்த்தால், நம் கதாநாயகன் அடியாளாக வேலைசெய்யும் சாத்தான் அர்ஜுனின் மகள்தான் நம் கதாநாயகி!!!. 

(கதாநாயகியின் அம்மா, அதாவது அர்ஜுனின் மனைவி, வேறொருத்தனுடைய மனைவி. அவளது கணவனைக் கொன்றுவிட்டு அவளைத் தன் மனைவியாக்கிக் கொள்கிறான் அர்ஜுன். பிறகு அவளையும் கொன்று விடுகிறான். சிறுமியாக இருக்கும் போது இதைப் பார்த்த அதிர்ச்சியில்தான், கதாநாயகி அவ்வாறு இருப்பதாக கூறுவார்கள். இதெல்லாம் நடந்தது, அர்ஜுன் பாதிரி படிப்பிலிருந்து நடுவிலேயே துரத்தப்பட்டு வந்த பிறகு.) 

பிறகு என்ன, அர்ஜுன் தன் மகளையே கொல்லச் சொல்கிறான். மறுக்கவுமே, சாத்தானான அர்ஜுன், பாதிரி அரவிந்தசாமி, கதாநாயகன், தன் மகள் மூன்று பேரையுமே கொலைசெய்யப் பார்க்கிறான். மகளைக் கொல்ல முடியாமல் தந்தைப் பாசத்தால் தவிக்கிறான், சாத்தான் அர்ஜுன். அப்பொழுது எல்லாரும் வழக்கம் போல நடுக்கடலில், கப்பலில், கதாநாயகன் Vs வில்லன், நன்மை Vs தீமை, சாத்தான் Vs இயேசு கிளைமாக்ஸ சண்டை நடைபெறுகிறது. தம்பி இயேசு, நன்மை ஜெயிக்கிறது. அர்விந்தசாமியே, அதாவது இயேசுவே ஒரு நிமிசம் சாத்தானக மாறி அர்ஜுனை கொல்ல நினைக்கிறார். ஆனால் நம் கதாநாயகன் தடுத்து விடுகிறார். சுபம்.

இதில் ஜெயமோகனின் சில சொற்கள், சொற்றொடர்கள், வசனங்களுக்குப் ‘பாராட்டியே‘ தீரணும்.!!! கடுந்தேயிலை, முக ஐஸ்வர்யம், மனசு வளராம சின்னப்புள்ளயா இருக்கும் கதாநாயகி ‘மனசுக்குள்ள சூரியன் உதிக்கிற மாதிரி இருக்கும்‘ என்று சொல்வது, கதாநாயகி பற்றி கதாநாயகனிடம் சொல்லும் போது இது ஸைக்கலாஜிக்கல் பிரச்சினை, ‘ஆழ்மனசு செய்யிற தந்திரம்‘, இயேசுவோட ஆசை மகனே, கடலுக்குப் போறவங்கள சுட்டுக் கொல்றதே இந்த வெளியூர்காரங்க வேலையாப் போச்சு, பைபிளும் தெரியும் பசியும் தெரியும், பதிமூன்று வருசம், பதிமூன்று நாள், பாதிரிக்குப் படிப்பவர்கள் பதிமூன்று பேர்   என்று இப்படி பலபல. 

படத்தில் மணிரத்னத்திற்கு மிகப் பிடித்தமான நடிகன் அரவிந்தசாமி, தேசபக்த கதாநாயகன் அர்ஜுன், கார்த்திக்கின் மகன், ராதாவின் மகள், பொண்வண்ணன், பாதிரியோடு இருந்தவர்கள் என அடிவாங்கும் இரண்டு பெண்கள், சிறுவன் என எல்லாருமே நல்லாத்தான் நடித்திருக்கிறார்கள். பின்னணி இசை, கேமரா எல்லாம் சரிதான். ஆனா கதைதான் இல்ல. படத்தின் சித்தரிப்பில் காலம் தெளிவாக இல்லை. பாதிரியார், சிறுவனைச் சந்திக்கும் போது அவன் வயது 10 ஆக இருக்கலாம். 13 வருசம் வளர்க்கிறார். அதன் பிறகு கொலைக்குற்றம் சாட்டப்பட்டு சிறைக்குப் போகிறார். எத்தனை வருடம் சிறையிலிருந்து வருகிறார் என்று தெரியவில்லை. 

இனி கதையின் மையக்கருவுக்கு வருவோம். 

பருப்பும் வெண்ணையும் சாப்பிட்டவன்தான் இயேசுமாதிரி கடைசி வரைக்கும் மக்களைக் காக்க, நல்ல மனசோட, ஒழுக்கத்துடன் இருக்க முடியும். சோத்துக்கு கஸ்டப்படறவங்க இயல்பிலேயே கொடூர சாத்தான் குணத்தோடு இருப்பார்கள். நல்ல வாய்ப்பும் வசதியும் கிடைத்தால் கூட அப்படித்தான் இருப்பார்கள். அதனால்தான் பதிமூன்று வருடங்கள் நல்லவனாக வளர்ந்தவன், பாதிரியார் சிறைக்குச் சென்றவுடனே, பதிமூன்று நாட்களிலே அர்ஜுனுடன் சேர்ந்து கொள்கிறான். ஏனெனில் விபச்சாரியின் மகன் அவன். வேறெப்படி இருக்க முடியும்? 

 அடுத்து திட்டமிட்ட ஒரு ஒழுங்குக்குள், கன கச்சிதமாக ஆண், பெண் வேலை பிரிவினைகளோடு ஒரு வருடத்திற்கு மேலாக அணு உலை எதிர்ப்புப் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. அப்போராட்டம் நடக்கும் இடங்கள் யாவும் கிறித்தவ மீனவக் கிராமங்கள். கிறித்தவ ஆலயங்களுக்கும், பாதிரியார்களுக்கும் அவர்கள் அளிக்கும் மதிப்பும், அதற்கு அவர்கள் கட்டுப்படுவதும் மற்றவர்களால் புரிந்துகொள்ள முடியாதது. இவையனைத்தையும் உடைக்கும் வண்ணமாக இந்தப் படத்தின் கிறித்தவ மீனவக் கிராம சித்தரிப்பு உள்ளது. அவர்கள் பேசும் தமிழ் கூட அப்படியே உள்ளது. இந்த திட்டமிட்ட சித்தரிப்பு கண்டிக்கப்பட வேண்டியது. ஆனால் பல கிறித்தவர்கள் அதை விமர்சிக்கக் கூட தயாரில்லை.

காரணம், பொதுவாகவே நம் சமூகத்தில் மீனவர்கள் ஒரு வகையில் ஒதுக்கப்பட்ட நிலையில் கையாளப்படுகிறவர்கள். கூடங்குளம் போராட்டம் கூட ஏதோ அந்த மீனவர்களின் சொந்தப் பிரச்சினைக்காக போராடுவது போலவும், நவீனத்தை, சமூக தொழில் வளர்ச்சியை புரிந்து கொள்ளத் தெரியாமல் போராடுவதைப் போலவும் நமது அறிவு வளர்ந்த பொது ஜனங்களால் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. ஆனால் அப்போராட்டம் ஒட்டு மொத்த மனிதகுல நலனுக்கான போராட்டம். 

இந்த ரீதியில் யாரும் புரிந்து கொள்ளப் போவதில்லை, என்று நீங்கள் சொல்லலாம். ஆனால், ஏற்கனவே ஆதிவாசிகள், குப்பத்து மீனவர்கள் பற்றிய மனப்பதிவு சினிமா மூலம் நமக்கு கிடைத்தது போல, கட்டபொம்மன் என்றதுமே சிவாஜி நினைவுக்கு வருவது போல, கிறித்தவ மீனவக் கிராமம் குறித்த எந்த அறிவும் இல்லாத பார்வையாளர்களுக்கு கிறித்தவ மீனவக் கிராமம் குறித்த ஒரு மனப்பதிவை இது போன்ற படங்கள் நிச்சயம் உருவாக்கும். அதனால் இதை அவ்வளவு எளிதாகப் புறந்தள்ள முடியாது.  

அதேபோல் படத்தில் வரும் ஒரு விசமத்தனமான வசனம். நிலவுலக தாதாவாக இயங்கும் சாத்தான் அர்ஜுன் பேசுவது போல வரும். பொண்வண்ணனைச் சுட்டு விட்டு ‘கடலுக்குப் போறவங்கள சுட்டுக் கொல்றதே இந்த வெளியூர்காரங்க வேலையாப் போச்சு ‘ என்று. தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை சுட்டுக் கொல்கிறது; அதற்கு அரசு சரியான முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை என்று வாழ்வாதாரப் பிரச்சினை நடந்து கொண்டிருக்கும் போது, இலங்கைக் கடற்படையையும் காப்பாற்றி, மீனவர்கள் ஒருவருக்கொருவர் கடத்தல் பிரச்சினையால் சுட்டுக் கொண்டு சாகிறார்கள், அதற்கு போய் போராட்டம் வேறு நடத்துகிறார்கள் என்ற பொருளில் வசனம் வைப்பது எவ்வளவு கயமை நிறைந்தது?  

முத்தாய்ப்பாக ஒன்று வில்லன் அர்ஜுன், அதாவது சாத்தான் பெயர் படத்தில் பெர்க்மென். இதே பெயரில் ஒரு பாதிரியார் மிக சிரத்தையாக கிறித்தவத்தை பரப்பித் தொண்டாற்றி வருபவர். கிறித்தவ கீதங்களை இயற்றி இசையமைத்து மக்கள் மத்தியில் பிரபலமானவர்.

Pin It