ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ என்ற அன்னை தெரசாவுக்கு கடந்த நான்காம் தேதி வாடிகன் நகரில் புனிதர் பட்டம் அறிவிக்கப்பட்டது. இதை இந்தியாவில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்கள் உணர்ச்சி பெருக்கிட வாழ்த்தி, வரவேற்று உள்ளனர். ஒரிசா கந்தமாலில் 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விஎச்பி தலைவர் லட்சுமானந்த சரஸ்வதி மர்ம நபர்களால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அங்கு கிருஸ்தவர்களுக்கு எதிரான மிகப்பெரிய வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. ஏறக்குறைய ஒரு மாத காலம் நடைபெற்ற இந்த கலவரத்தில் 30க்கும் மேற்பட்ட கிருஸ்தவர்கள் ஆர்.எஸ்.எஸ் காலிகளால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்கள். அப்படிப்பட்ட ஆர்.எஸ்.எஸ் காலிகளின் ஆருயிர் தலைவர் மோடி உட்பட பலர் கிருஸ்தவ அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கியதை மகிழ்ச்சியுடன் வரவேற்று உள்ளனர். புனிதர் பட்டமளிப்பு விழாவில் இந்தியாவின் சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் போன்றவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்துள்ளனர்.
அன்னை தெரசா என்ற பெண்மணி ஒட்டுமொத்த இந்திய மக்களும் கொண்டாடுகின்றனர். ஏன் உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளின் மக்களும் அப்படித்தான் அவரை நேசிக்கின்றார்கள். அப்படி என்ன அவர் இந்த மனித குலத்தின் விடுதலைக்குச் செய்துவிட்டார்? உச்ச நீதிமன்ற முன்னால் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ அவர்கள் அன்னை தெரசாவை ஒரு ஏமாற்றுப் பேர்வழி என்கின்றார். சந்தேகத்துக்கு இடமான நபர்கள் மற்றும் அமைப்புகளிடம் இருந்து அன்னை தெரசாவின் சேவை அமைப்புகள் அதிக அளவில் நிதிபெற்றது என்றும், உலகின் பல்வேறு பகுதிகளில் அவருடைய அமைப்புகள் மூலம் 500க்கும் மேற்பட்ட கல்வி நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் குற்றம் சாட்டுகின்றார் கட்ஜூ அவர்கள். கட்ஜூ சொன்னது எந்தளவிற்கு உண்மை என்பதைப் பார்ப்போம்.
ஏழைய மக்களுக்காகவே தன் வாழ்நாளை அர்பணித்துக் கொண்டதாக கூறிக் கொண்ட தெரசா, தான் நடத்திய பிறர் அன்பின் பணியாளர் சபைக்குத் தேவையான நிதியை எப்படி திரட்டினார் என்றால், எப்படி எல்லாம் திரட்ட முடிமோ அப்படி எல்லாம் திரட்டினார். ஹைட்டியின் சர்வாதிகாரியும், ஊழல் பேர்வழியுமான டியுவேலியேர் குடும்பத்துடன் நெருக்கமான உறவை அவர் வைத்திருந்தார். அவரின் ஊழல் பணத்தில் நன்கொடைகளை பெற்றுக் கொண்டு வெளிப்படையாகவே டியுவேலியேரின் சார்வாதிகார, ஊழல் அரசை புகழ்ந்து தள்ளினார். கிட்டிங்பைவ் ஊழல் என்றழைக்கப்பட்ட ஏமாற்று சுரண்டல் திட்டத்தோடு தொடர்புடைய சார்லஸ் கீட்டிங்கிடமிருந்து 1.4 மில்லியன் டாலர்களை பெற்றுக்கொண்டு அவர் கைதாவதற்கு முன்னும் பின்னும் அவரை ஆதரித்தார். லாஸ் ஏஞ்சல்ஸின் மாவட்ட துணை நீதியரசர் கீட்டிங்கால் திருடப்பட்டவர்களுக்கு அவரிடமிருந்து நன்கொடையாகப் பெற்ற பணத்தை திரும்பக் கொடுக்கக் கோரி அன்னை தெரசாவுக்கு கடிதம் எழுதினார். ஆனால் அவருக்கு தெரசாவிடம் இருந்து எந்த பதிலும் கடைசிவரை கிடைக்கவில்லை.
“கிறித்தபர் ஃகின்சின்சு மற்றும் ஜெர்மானிய சஞ்சிகையான ஸ்டோர்ன் போன்றவை அன்னை தெரசா நன்கொடைப் பணத்தை வறுமையை ஒழிப்பதற்கும், தனது நல்வாழ்வு மையங்களின் நிலைமையை உயர்த்துவதற்கும் பயன்படுத்தாமல் புதிய கன்னியர் மடங்களைத் திறப்பதற்கும், மதப்பிரச்சாரத்திற்கும் மட்டுமே பயன்படுத்தியதாக குற்றம் சாட்டுகின்றனர்.” (நன்றி: விக்கிப்பீடியா)
பிறர் அன்பின் பணியாளர் சபையில் இருப்பவர்கள் மதச்சார்பற்ற புத்தகங்கள் மற்றும் பத்திரிக்கைகளைப் படிப்பதற்கு அன்னை தெரசா தடை விதித்து இருந்தார். இதன் மூலம் அவர்களை சிந்திக்கும் திராணியற்ற அடிமைகளாக வளர்த்தெடுத்தார். மேலும் அன்னை தெரசா கருக்கலைப்புக்கு எதிராக தீவிரமான நிலைப்பட்டை வைத்திருந்தார். “கருக்கலைப்பு அமைதியை அழிக்கும் மிகப்பெரிய சக்தியாகும் என்று பேசினார். நடைமுறையை விட்டு விலகிய கோணல் பார்வையுள்ளவர்களின் இப்படிப்பட்ட கருத்து எந்த விசயத்தில் கவனமான பரிசீலனைக்கு உரியதாக இருக்க முடியும்? நோபல் பரிசுக்கு உரியவர் என இவரை எப்படி எண்ண முடியும்?”( கடவுள்- ஒரு பொய் நம்பிக்கை: ரிச்சர்டு டாகின்ஸ்,ப.எண்:450).
மேலும் அன்னை தெரசா எப்படிப்பட்ட கடைந்தெடுத்த பிற்போக்குவாதி என்பதற்கு இன்னொரு சிறந்த உதாரணம், அவர் இதயக் கோளாறால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவர் இது ஏதாவது பேய்களின் செயலாக இருக்கலாம் என்று எண்ணியதால், அவரின் அனுமதியுடன் அவருக்கு பேயோட்டும்படி ஒரு குருவை பணித்ததாக கல்கத்தாவைச் சேர்ந்த பேராயர் ஹெண்றி செபாஸ்டியன் டிசோவா கூறுகின்றார்.
இதுதான் அன்னை தெரசாவின் உண்மையான சித்திரம். இப்போதுகூட அவரின் சேவையைப் பாராட்டி எல்லாம் இந்தப் புனிதர் பட்டம் அவருக்கு வழங்கப்படவில்லை. ஏன் என்றால் புனிதர் பட்டம் வழங்குவதற்கு சேவை எல்லாம் ஒரு பொருட்டே அல்ல. அவர் ஏதாவது இரண்டு அற்புதங்களை தன் வாழ்நாளில் செய்திருக்க வேண்டும். அப்படி செய்திருப்பவர்களுக்கு மட்டுமே புனிதர் பட்டம் வழங்கப்படும். அந்த வகையில் அன்னை தெரசா இரண்டு அற்புதங்களைச் செய்ததாக ஏற்கப்பட்டே அவருக்கு இந்தப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. அந்த இரண்டு அற்புதங்கள் என்னவென்றால் மோனிகா என்ற கொல்கத்தாவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு அவர் வயிற்றில் இருந்த புற்று நோயை அன்னை தெரசா குணப்படுத்தினாராம். அடுத்து பிரேசில் நாட்டில் மூளை பாதிக்கப்பட்டு கோமாவில் இருந்த மார்சிலோ ஹதாத் ஆன்டிரினோ என்ற இளைஞனை அவர் குணப்படுத்தினாராம். இந்த இரண்டு அற்புதங்களையும் பல்வேறு வகைகளில் ஆய்வு செய்து(?) உறுதி செய்த பின்னர் தான் அவருக்குப் புனிதர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
மோனிகா என்ற பெண்ணின் புற்றுநோயை குணப்படுத்தியதற்கான எந்த ஆதாரத்தையும் இதுவரை தெரசாவின் ஆதரவாளர்களோ, இல்லை அவருக்குப் புனிதர் பட்டம் வழங்கிய வாட்டிகனோ பொதுமக்கள் பார்வைக்கு வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் பெண் ஏற்கெனவே தன்னுடைய புற்று நோய்க்குப் பாலர்காட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அதன் மூலமே அந்தப் பெண் குணமும் அடைந்திருக்கின்றார். ஆனால் அன்னை தெரசாவின் அற்புதத்தால் தான் அந்தப் பெண் குணமடைந்தார் என்று அறிவிக்கக் கோரி பிறர் அன்பின் பணியாளர் சபையினர் தங்களுக்கு நெருக்கடி கொடுப்பதாக பாலர்காட் மருத்துவமனை அதிகாரிகளே கூறியிருக்கின்றார்கள். இது எல்லாம் ஒரு பிழைப்பா என்று சாதாரணமாக நீங்கள் எண்ணிவிடாதீர்கள். இதற்குப் பின்னால் அல்லேலூயாக்களின் அரசியல் இருக்கின்றது.
ஏன் என்றால் தெரசா நிகழ்த்தியதாக சொல்லப்படும் அற்புதத்தை விட பல மடங்கு அதி தீவிரமான அற்புதங்களை இங்குள்ள அல்லேலூயா கும்பல்கள் செய்துவருகின்றன. பல ஜெப ஆராதனைக் கூட்டங்களில் கை கால் முடமானவர்களை குணமாக்குதல், குருடனுக்குப் பார்வையை வரவழைப்பது, ஊமையை பேச வைப்பது, பேய் பிடித்தவனை குணமாக்குவது என்று எல்லா வகையான சித்துவேலைகளையும் பல ஆயிரம் பேர் கூடி இருக்கும் பொது இடத்தில் நிகழ்த்திக் காட்டுகின்றார்கள். இதை எல்லாம் கருத்தில் கொண்டால் தெரசாவின் அற்புதங்கள் அற்பத்தனமானவை. ஆனால் உலகம் முழுவதும் இது போன்ற மோசடிக் கும்பல்கள் மூலம் சாமானிய ஏழை எளிய மக்களை ஏமாற்றி அவர்களிடம் இருந்து பெரும் செல்வத்தை உறிஞ்சி கொட்டமடித்துக் கொண்டிருக்கின்றார்கள். இதன் மூலம் வாடிகன் இரண்டுவழிகளில் பயன் அடைந்து கொள்கின்றது. ஒன்று அழிந்து கொண்டிருக்கும் கிருஸ்தவ மதத்தின் மீதான தனது பிடியை இறுக்கிக் கொள்கின்றது. மற்றொன்று மக்களை முட்டாள் தனத்திலேயே ஆழ்த்தி, அவர்கள் தங்கள் பிரச்சினைக்கான உண்மையான மூலத்தை தேடிப் போகாமல் செய்வதற்குப் பிரதிபலனாக கிருஸ்தவ பெரும் பணக்காரர்களிடம் இருந்து பெரும் நிதியை அது கறந்து கொள்கின்றது.
எப்படி வெளிநாடுகளில் வாழும் வளர்ச்சி பெற்ற பார்ப்பன- பனியா கும்பல்கள் அனுப்பும் பணம் மூலம் இங்கிருக்கும் ஆர்.எஸ்.எஸ், பழங்குடியின மக்களை மதம் மாற்றவும், வெடிகுண்டுகள் செய்யவும், மதக்கலவரங்களை தூண்டிவிடவும் அந்தப் பணத்தை பயன்படுத்திக் கொள்கின்றதோ அதே போலத்தான் அன்னை தெரசாவும் தனக்கு வந்த அத்தனை பாவப்பட்ட பணத்தின் பெரும்பகுதியை மதப்பரப்புரைக்கும் ஏழைகளின் மீதான கிருஸ்தவ சபையின் போலி அக்கறையைக் காட்ட சிறிய அளவிலான தொகையையும் பயன்படுத்திக்கொண்டார். இதே போன்று இந்தியாவில் இருக்கும் பல இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளுக்கு வளைகுடா நாடுகளில் இருந்து பெரும் அளவில் பணம் வருவது நம்மில் எல்லோருக்கும் தெரியும்.
அடிப்படையில் இந்தப் பிரச்சினையை எப்படி புரிந்து கொள்வதென்றால் எல்லா மத அடிப்படைவாத அமைப்புகளும், திட்டமிட்ட முறையில் மக்களைத் தொடர்ந்து முட்டாள் தனத்திலும், பிற்போக்குத் தனத்திலும் நிரந்தரமாக வைத்திருப்பதற்குச் செயல்படுகின்றன என்பதுதான். இதற்காக அது கையில் எடுக்கும் ஆயுதம் தான் ஆன்மீகம் என்பது. அது மற்ற ஆயுதங்களைக் காட்டிலும் சக்தி வாய்ந்ததாக உள்ளது. பல துப்பாக்கிகளால் செய்ய முடியாததை ஒரு அல்லேலூயா கோசமோ, அரோகரா கோசமோ மிகச் சாதாரணமாக செய்து விடுகின்றது என்பதுதான் உண்மை.
அதனால் இது போன்ற பிற்போக்குவாதிகளை ஆளும் வர்க்கம் ஆதரிப்பது ஒன்றும் பெரிய வியப்பில்லைதான். இதற்கு முற்போக்கு, பிற்போக்கு என்ற பாகுபாடு எல்லாம் கிடையாது. கருணாநிதிக்கும் அன்னை தெரசாவைப் பிடிக்கும், ஜெயலலிதாவுக்கும் அன்னை தெரசாவைப் பிடிக்கும். அதுபோல சோனியா காந்திக்கும் தெரசாவைப் பிடிக்கும், மோடிக்கும் தெரசாவைப் பிடிக்கும். அதனால் தான் அனைவரும் அவர் புனிதர் பட்டம் வாங்கியதை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர். அப்படி என்றால் மோடிக்கும், கருணாநிதிக்கும் இந்த விசயத்தில் கொள்கை வேறுபாடுகள் கிடையாதா என்று நீங்கள் கேட்கலாம். அது எல்லாம் ஒரு வெங்காயமும் கிடையாது. தெரசாவின் அற்புதங்களை உண்மை என்று ஏற்றுக்கொண்டே வாடிகன் அவருக்கு புனிதர் பட்டம் கொடுத்ததை நாம் பார்த்தோம். இது போன்ற அற்புதங்களைச் செய்பவர்களை மோடிக்கு மட்டும் அல்ல கருணாநிதிக்கும் பிடிக்கும். மோடி எப்படி தன்னளவில் உத்திரகாண்ட் வெள்ளத்தின் போது ஆயிரக்கணக்கான குஜராத்திகளைக் காப்பாற்றி புனிதருக்கெல்லாம் புனிதர் பட்டம் பெற தகுதியானவராக உள்ளாரோ, அதே போல கருணாநிதி அவரது மகன் ஸ்டாலின் போன்றோரும் புனிதர் பட்டம் பெற எல்லா வகையிலும் தகுதியானவர்கள். புட்டபதி சாய்பாபாவிற்கே மேடை அமைத்துக் கொடுத்தவர் நம் அரசியல் சாணக்கியர் கருணாநிதி என்பதை நாம் மறந்துவிட முடியாது. ஏன் நீங்கள் ஜெயலலிதாவைப் பற்றி பேசவில்லை என்று கேட்கமுடியாது. ஏனென்றால் அவர் எப்போதுமே தன்னை முற்போக்குவாதியாக காட்டிக்கொண்டது கிடையாது. காட்டிக்கொள்ளவும் முடியாது.
அன்னை தெரசா எவ்வளவு ஆபத்தானவரோ அதைவிட பல மடங்கு ஆபத்தானவர்கள் அவரை ஆதரிக்கும் முற்போக்குவாதிகள் என்று தங்களை சொல்லிக் கொண்டு திரிபவர்கள் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். சக மனிதனுக்கு ஏற்படும் துன்பத்தை தன்னுடைய துன்பமாகப் பார்ப்பதும், அதைத் தீர்க்க முயற்சிப்பதுதான் மனிதாபிமானம். அதை யாரும் தவறு என்று சொல்ல மாட்டார்கள். ஆனால் அந்த உதவி மதவெறியையும், சாதிவெறியையும் ஆண்டாண்டு காலமாக நீடித்து நிலைப்பதற்கு என்றே திட்டமிட்ட முறையில் செய்யப்படுகின்றது என்றால், அதை நாம் கண்டிப்பாக எதிர்த்துத்தான் ஆக வேண்டும். அது போன்ற பிற்போக்குச் சக்திகளுக்கு ஆதரவாக இருக்கும் புல்லுறுவிகளையும் நாம் அம்பலப்படுத்தித்தான் ஆக வேண்டும்.
- செ.கார்கி