தன்னிலிருந்து வாழ்க்கையைப் பார்க்கும் சிற்றிலக்கியவாதிகள் குறித்த சித்திரத்தில் சு.ரா. ஒரு எம்.ஜி.ஆர். என்றால் ஜெயமோகனை ரஜினி என்று அழைக்கலாம். ஆக புரட்சித் தலைவருக்கு சூப்பர் ஸ்டார் என்ன அஞ்சலி செலுத்த முடியுமோ அதைத்தான் ஜெயமோகனும் அதிகபட்சமாகச் செய்திருக்கிறார். ரஜினிக்கும், ஜெயமோகனுக்கும் மூப்பனார் பிடிக்கும், பொள்ளாச்சி மகாலிங்கம் பிடிக்கும், பாபா விசிறி சாமியார் சைதன்ய நிதி போன்ற சாமியார்கள் பிடிக்கும், இமயமலைக்கும் அமெரிக்காவுக்கும் யாத்திரை போவது பிடிக்கும் போன்ற ஒப்புமைகளும் உண்மைகளும் தற்செயலாக அமைந்தவை அல்ல. இயல்பின் அவசியம் கருதி அவை அப்படித்தான் இருக்க முடியும். என்ன, அதிகபட்சம் பாபா படத்திற்கு எஸ்.ராமகிருஷ்ணன் வசனம் எழுதியது வேண்டுமானால் ஜெயமோகனுக்கு ஒரு குமைச்சலை ஏற்படுத்தியிருக்கலாம். அதனாலென்ன, தற்போது கஸ்தூரிமான் படத்தில் கிரேசி மோகன் லெவலுக்கு வசனம் எழுதியிருக்கும் ஜெயமோகனுக்கு விரைவிலேயே சூப்பர் ஸ்டாரிடமிருந்தோ, இளைய தளபதியிடமிருந்தோ அழைப்புகள் வரலாம். காத்திருக்கட்டும். நாம் சு.ரா.விடம் திரும்புவோம்.

சு.ரா. தன் எழுத்திற்காகத் தன்னையே மிகவும் நேசித்த ஒரு எழுத்தாளர். இந்தத் தற்காதல் ஜெயலலிதாவின் கட்அவுட் மோகத்தைவிட அதிகமானது. ஆனால் சற்று சூக்குமமானது. வண்ண ஓவியத்தை விட எழுத்தோவியத்தைப் புரிந்து கொள்வதற்குச் சற்று நேரம் பிடிக்கும் என்பதே காரணம். சு.ரா. தன் ஐம்பதாண்டு இலக்கிய வாழ்க்கையில் அதிகம் கவலைப்பட்டு, வருத்தப்பட்டு, எழுதி, பேசி, விவாதித்த ஒரே சமூக விசயம் ‘சாகித்திய அகாடமி விருது’ தான். தனக்குக் கிடைக்காத அந்த விருது தீபம். நா.பார்த்தசாரதிக்கும், அகிலனுக்கும், கோவி. மணிசேகரனுக்கும், தி.க.சி.க்கும், வைரமுத்துவுக்கும், இன்னபிற அனாமதேயங்களுக்கும் கிடைத்தது குறித்து சு.ரா. சொல்லொணாத் துயரடைந்தார் என்றால் அது மிகையல்ல. கிடைத்திராத இந்த விருது கூட அவரது சுவாசப்பை நலிவடைந்ததற்குக் காரணமாக இருந்திருக்கலாம், தெரியவில்லை.

வருடாவருடம் சாகித்ய அகாடமி விருது அறிவித்தவுடன் பீரங்கியில் இருந்து குண்டு பாய்வதைப்போல சு.ரா.விடமிருந்து அதை விமர்சனம் செய்து ஒரு கட்டுரை அச்சில் பாயும். இருப்பினும் சு.ரா. தனக்கு விருது கொடுக்குமாறு எப்போதும் கேட்பதில்லை. என்னதான் ஜெயலலிதாவை விட தற்காதல் அதிகம் இருந்தாலும் சபை நாகரீகம் என்ற ஒரு விவஸ்தையற்ற வஸ்து இருக்கிறதல்லவா! அதன் பொருட்டு வேறு வழியின்றி பந்தியில் தன் கூட இருந்து சாப்பிடும் அசோகமித்திரன், நாஞ்சில் நாடன், ஏன் ஜெயமோகனுக்கும் பாயசம் போடுமாறு எப்போதும் பல்லவி பாடுவார்; மற்றவர்களோ, சு.ரா.வுக்குப் போடுமாறு சரணம் பாடுவார்கள். ஆனாலும் பந்தி பரிமாறும் தேர்வுக் கமிட்டியினர் இவர்களை அவ்வளவாகச் சட்டை செய்வதில்லை. பின்னே, இந்தியா முழுவதும் செப்புமொழி பதினெட்டிலும் பல இலட்சம் எழுத்தாளர்களைச் சலித்துப் புடைத்து உமி நீக்கி சிலருக்கு விருது கொடுப்பது என்பது லேசுப்பட்ட விசயமா என்ன? தமிழ்நாட்டில் ஒரே ஒரு புத்தகம் வெளியிட்ட எழுத்தாளர்கள் பல ஆயிரம் பேர் தேறுவார்களே, இதில் தேர்வுக்குழு என்ன செய்துவிட முடியும்? விருதின் பின்புலத்தில் பலான வேலைகள் பல இருப்பது உண்மையானாலும் நம்மைப் பொறுத்தவரை விருது வாங்கியவர்களுக்கும், வாங்காதவர்களுக்கும் இலக்கியத் தரத்தில் பெரிய வேறுபாடு இல்லை. இந்திய கிரிக்கெட் அணி தேர்வில் கூட அரசியல் இருப்பதாகக் கூறுகிறார்கள், இருந்த போதும் இந்த அணி சில போட்டிகளில் தோற்றாலும் சில போட்டிகளில் வெல்வதில்லையா என்ன?

ஆனாலும் சு.ரா. விடுபவரில்லை. தேர்வுக் கமிட்டியில் அரசியல் இருக்கிறது என்றார். என்ன அளவுகோலை வைத்து தேர்வுக் கமிட்டிக்கு நடுவர்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள் என்று கேள்வி கேட்டார். விருது கிடைப்பதற்கான விதிமுறைகளை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்றார். இறுதியில் தமிழ் எழுத்தாளர்கள் டெல்லி சாகித்திய அகாடமி அலுவலகம் முன்பு ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்று கூட அறைகூவல் விடுத்துப் பார்த்தார். இப்படி எதிர்மறையாக விமரிசனம் செய்வதில் மட்டுமல்ல, நேர்மறையிலும் தேர்வுக் கமிட்டியினர் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதை பலபத்து ஆலோசனைகளாகவும் தெரிவித்திருக்கிறார். சரியாகச் சொல்லப்போனால் இந்த விசயத்தில் ஒரு கலை இலக்கிய மந்திரி எப்படிச் செயல்பட வேண்டுமோ அப்படியும் அதற்கு மேலும் செயல்பட்டார்.

சாகித்ய அகாதமி, ஞானபீடம் குறித்து இதுவரை அவர் எழுதியுள்ள கட்டுரைகளைக் கத்தரித்து ஒட்டினால், அது ஜெயாவின் கட்அவுட்டை விஞ்சுவது உறுதி. இருப்பினும் இறுதி வரை விருது கிடைக்காதபடியால் “அரசு கலாச்சார நிறுவனங்களின் தடித்தனத்தை மாற்ற முடியாது” என்று ஒரு கட்டுரையில் சலித்துக் கொண்டார். இதே தடித்தனம் என்ற வார்த்தைதான் அவரது புகழ் பெற்ற கவிதையான “என் நினைவுச் சின்னத்”தில் நம் கலாச்சாரத் தூண்களின் தடித்தனங்களை எண்ணி மனச்சோவில் ஆழ்ந்து கலங்காதே...” என்று வருகிறது. இந்தக் கவிதையின் அருஞ்சொற்பொருளே விருது கிடைக்காததனால் வரும் சுய பச்சாத்தாபமும் அதனால் நான் ஒன்றும் குறைந்து விடவில்லை என்று போலிப் பகட்டும்தான். வஞ்சப் புகழ்ச்சி அணி போல இது பச்சாத்தாபத்தின் பாவனையில் ஒளிந்து கொள்ளும் தற்புகழ்ச்சி அணி. ஆனால் காலச்சுவடு அரவிந்தன் இதற்குத் தரும் வியாக்கியானம், “ஒரு இலை உதிர்ந்ததற்கு மேல் அதில் ஒன்றுமில்லை எனத் தன் மரணம் பற்றி அறிவிக்கிறது அவரது கவிதை வரி ஒன்று. சுயபடிமம் சார்ந்த உரிமைக்கோரல்களை முற்றாகத் துறந்த ஓர் ஆளுமையால்தான் இப்படிச் சொல்ல முடியும்” என்று சிலாகிக்கிறார். சுய உரிமைக் கோரல்களை முற்றாகத் துறந்த இன்னொரு ஆளுமை தமிழ்நாட்டில் மாதம் ஒரு ரூபாய் சம்பளம் வாங்குகிறது. அதையும் சிலாகிக்க வேண்டியதுதான்.

சு.ரா.வுக்கு கேரளத்து ஆசான், அமெரிக்க விளக்கு, கனடா இயல் போன்ற குட்டிக் குட்டி விருதுகள் கிடைத்த நேரத்திலும் கூட இவ்விருதுகளைப் பாராட்டும் சாக்கில் சாகித்ய அகாடமி, ஞானபீடத்தைக் கரித்துக் கொட்ட அவர் தவறியதே இல்லை. ஜெயமோகனின் நினைவுகூறல்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில், சு.ரா. தன் வாழ்நாளில் சக தமிழ் எழுத்தாளர்கள் எவரையும் தனக்கு நிகராகவோ, மேலாகவோ கருதியதில்லை என்றாகிறது. அவர்களைப் பற்றி அவர் எழுதியிருக்கும் கட்டுரைகள், விமர்சனங்கள், நூல் அறிமுகங்கள், பாராட்டுக்கள் போன்றவற்றைப் படித்தால் அது உண்மை என்றே படுகிறது. தன் எழுத்தின் மேலாண்மையை நிறுவிக் கொள்ளும் முகாந்தரத்திலேயே அவர் மற்றவர்களைப் பார்த்தார், எழுதினார். தன்னுடைய படைப்பில் தான் கண்டுபிடித்திருந்த இலக்கியத் தரிசனங்களை நினைவு கூறும் பொருட்டே மற்றவர்களை மேலோட்டமாகவேனும் பாராட்டினார். தன்னைத்தாண்டி எவரும் செல்லவில்லை என்பதில் உறுதியான கருத்தைக் கொண்டிருந்தார்.

இதில், தன்னை ஒரு நிறுவனமாக மாற்றிச் செயல்பட்டதில்தான் அவருக்கும் மற்றவர்களுக்குமான வேறுபாடு அடங்கியிருக்கிறது. சிறு பத்திரிக்கை உலகம் குறுகியதாக இருந்தாலும் தன்னைத் தேடி வந்த வாசகர்கள், இளம் எழுத்தாளர்கள், புதியவர்கள் அனைவரோடும் அவர் திட்டமிட்ட உறவைப் பேணினார். அவரது ஐம்பதாண்டு கால இலக்கிய வாழ்க்கையில் வெளிவந்த அநேக சிறுபத்திரிக்கைகளுடனும் இடையறாத தொடர்பைக் கொண்டிருந்தார். அவரே எழுதியிருப்பது போல நண்பர்களுக்கு தினசரி ஐந்து கடிதங்கள் வீதம் ஆயிரக்கணக்கான கடிதங்களை எழுதியிருக்கிறார். அவரது மாலைப் பொழுது ஏதேனும் ஒரு இலக்கிய நண்பருடன் அரட்டையடிக்காமல் கழிந்ததில்லை. பெரும்பான்மையான இலக்கியவாதிகள் அவரது வீட்டில் தங்கியிருக்கின்றனர். சுதர்சன் ஜவுளிக் கடையில் இருந்த அவரது சிறிய அறை, ரிலீசாகும் சினிமாக் கம்பெனி ஆபீசு போல விறுவிறுப்பான இலக்கிய ஆபீசாகச் செயல்பட்டது. அவருக்கு போலி கம்யூனிசத் தலைவர்கள் சிலரிடம் இருந்த நெருக்கம், மற்றும் அவரது தனிப்பட்ட செல்வாக்கினால் உருவாகியிருந்த அகில இந்திய, உலக ஈழத்தமிழ் இலக்கிய உறவுகள் மூலமாக தன் நாவல்களை சில மொழிகளில் மொழிபெயர்த்து ரிலீஸ் செய்திருக்கிறார். அவருக்கு மலையாளம் தெரியும் என்பதால் தனது நூல்களின் மலையாள மொழிபெயர்ப்பை வரிக்குவரி சரிபார்த்து மலையாள மொழிபெயர்ப்பாளர்களைத் திண்டாட வைத்திருக்கிறார். எல்லாம் தன் எழுத்து மனிதகுலத்துக்கு மிகச்சரியாகப் போய்ச் சேரவேண்டுமே என்ற நல்லெண்ணம்தான்.

அவரது நாவல் பிரெஞ்சு மற்றும் ஆங்கிலத்தில் வெளியான போது அவரது அடிமனதில் ஒரு பெருங்கனவு மாபெரும் புயல்மூட்டமாய் மூண்டிருக்க வேண்டும். அது என்னவென்று யூகிக்க முடிந்திருக்குமே, அதுதான்... அதேதான்...! நோபல் பரிசு! அவரது “குழந்தைகள் பெண்கள் ஆண்கள்” நாவலுக்கு நோபல் பரிசு கிடைக்கும் என்று இலக்கியவாதி சிவதாணு (ஆட்டோ ஓட்டுனர்) சு.ரா.வுக்கு கடிதம் எழுதியிருந்தாராம். “அப்படிக் கிடைத்தால் நாமிருவர் மட்டும் பரிசு வாங்க ஸ்டாக்ஹோம் செல்லலாம்” என்று சு.ரா.வும் வேடிக்கையாகப் பதில் கடிதம் எழுதியிருந்தாராம். இருப்பினும் அந்தப் பெருங்கனவு தனது வாசகனிடமும் மூண்டிருப்பது குறித்து அவர் ஒரு சில நாட்கள் மகிழ்ச்சியில் தூங்காமல் புரண்டிருக்கக் கூடும்.

நன்றி: புதிய கலாச்சாரம்
இப்புத்தகம் வாங்க விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
16, முல்லை நகர் வணிக வளாகம் 2வது நிழற்சாலை,
அசோக் நகர்,
சென்னை - 83,
விலை: ரூ.60

Pin It