யாஸ்னாயா போல்யானா

மே-08-1910

அன்பு நண்பரே,

நான் தங்களது கடிதத்தையும், இந்திய சுயராஜ்யம் நூலையும் பெற்றேன்.

அதை நான் மிகுந்த ஆர்வத்துடன் படித்தேன். அதில் நீங்கள் எழுப்பியுள்ள அமைதி வழி எதிர்ப்பு பற்றிய கேள்விகள் மிக முக்கியமானவை. இந்தியாவுக்கு மட்டுமல்ல, மனிதகுலம் முழுமைக்கும் தேவை யானவை.

தங்களுடைய முந்திய கடிதங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் யி.தாசின் தங்கள் வாழ்க்கை வரலாறு நூல் கண்டேன். மிகுந்த ஆழத்துடனும், கவனத்துடனும் படித்தேன்.  அது எனக்குத் தங்களைப் பற்றிய புரிதலை அதிகம் தந்தது.

இப்போது எனது உடல்நிலை சரியில்லை. எனவே தங்கள் நூல் பற்றி விரிவாக எழுதுவதைத் தவிர்க்கிறேன். அவற்றை நான் பாராட்டுகிறேன்.  என் உடல்நிலை சரியான பின் விரிவாக எழுதுகிறேன்.

தங்கள் நண்பனும் சகோதரனுமான

டால்ஸ்டாய்

Ghandhi tolstoy 600கடிதம் 2

செப்-7-1910

இனிய நண்பரே,

தங்களது இந்தியன் ஒப்பீனியன் இதழின் பிரதி கிடைக்கப் பெற்றேன். அதில் எதிர்ப்பின்மை பற்றி எழுதியுள்ளது பெரு மகிழ்ச்சி தருகிறது. அந்தக் கட்டுரையை வாசித்தபின் என்னுள் எழும் உணர்வு களை எழுத நினைத்தேன்.

நான் அதிகமான அளவே வாழ்கிறேன். இப் போது மரணத்தை எதிர்கொள்பவனாக உள்ளேன். எனவே என்னை வழிநடத்தும் வலிமைமிக்க கருத்துக் களை எழுதுவது மிக முக்கியமானதெனக் கருது கிறேன். எதிர்ப்பின்மை என்பது பொய்யான கருத்தாக்கத்தால் அன்பு எனும் ஒழுக்கம் கொள்ளுதல் என்று கருதப்படுகிறது. அன்பு என்பது தொடர்பின் வெளிப்பாடு. பிற உயிரினங்களுடன் ஒருமை காண்பது. இத்தகைய உணர்வு புனித நடவடிக்கை களிலிருந்து நம்மை விடுதலை செய்கிறது. அன்பு உன்னதமானது. அது மனித வாழ்வின் தனித்துவம் மிக்க சட்டம்.  இதை ஒவ்வொருவரின் ஆன்மாவின் ஆழத்திலும் புரிந்துகொள்ள முடியும். புனிதமான செயல்களுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொள் வதே அன்பு.  மனித வாழ்வின் உன்னதமான புனித விதி. இது குழந்தைகளிடம் முழுமையாக உள்ளதைக் காண்கிறோம். மனிதர்கள் உலகின் போலித்தனங்களில் வீழ்ந்து மூழ்கும் காலம் வரை இவ்விதமே உள்ளனர்.

அன்பின் விதியை உலக தத்துவங்கள் அனைத்தும் கூறுகின்றன.  இது உலகின் பல மொழிகளில் கூறப் பட்டிருந்த போதும், கிறிஸ்து இதைத் தெளிவாகக் கூறுகிறார். அன்பின் விதி சட்டம், தீர்க்கதரிசிகள் என இருவராலும் கூறப்பட்டிருந்த போதும், சட்டம் பல விதி மாற்றங்கள், திசைதிருப்பலுக்குட்பட்டது எனத் தெளிவாகக் கூறுகிறார்.  உலக ஈடுபாட்டுடன் வாழ்வோர்க்கு இந்தச் சட்டத்தின் வளைவுகள் மிக ஆபத்தான விளைவுகளை உண்டாக்குகிறது என்பதை நேரடியாகச் சுட்டிக் காட்டுகிறது என்றார் ஏசு. 

அதை நியாயப்படுத்த அவர்கள் வன்முறையை ஏற்கின்றனர். அறைக்கு அறை என்பதை அவர் சுட்டிக்காட்டினார். நம்மிடமிருந்து எடுக்கப்பட்டன வற்றை அதே வன்முறையும் திரும்ப எடுப்பதை நியாயப்படுத்தினர். அனைத்து சிந்தனை உள்ள மனிதரைப் போலவும், கிறிஸ்துவும் அறிவார், வன்முறை அன்புக்கு ஈடாக முடியாது என்பதையும், அதுவே வாழ்வின் அடித்தள உண்மை என்பதையும் அறிவார்.  வன்முறையை ஒருமுறை அனுமதித்து விட்டால், அன்பு தன் தன்மையை இழந்துவிடும். அன்பின் விதி பொருளற்றதாகப் பின் மாறிவிடும். வெளித் தோற்றத்தில் அற்புதமானதாகத் தெரியும் கிறிஸ்துவ நாகரிகம், இத்தகைய வினோதமான முரண்பாடு கொண்ட தவறான புரிதலிலும், முரண் பாட்டிலும் சில வேளைகளில் தெரிந்தும், பல வேளைகளில் அறியாமலும் விழுந்து விடுகிறது.

எதிர்ப்பு என்பது அன்பினால் ஏற்றுக்கொள்ளப் பட்டால், போதும், பின் அன்புக்கு அங்கு இடமின்றிப் போய்விடும். விதிகளின் படியும் அன்பு வாழ்வது இயலாததாகி விடும். பின் வன்முறையே சட்டமாகி விடும். வலிமையே நியாயமானதாகிவிடும். இவ்வாறுதான் 19 ஆம் நூற்றாண்டு கிறிஸ்துவம் இருந்தது. உண்மையில் பல கால கட்டங்களில் மக்கள் வன்முறையையே சமூகத்தை முறைப்படுத்தப் பயன்படுமென நம்பினர். கிறிஸ்துவ லட்சியமும், பிறநாடுகளின் இடையேயான வேறுபாடுகளும்

இதில் தான் காணப்படுகிறது. கிறிஸ்துவத்தில் அன்பின் விதி பிற மதங்களை விடவும் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. கிறிஸ்துவர்கள் அவ்விதி களைப் பணிவுடன் ஏற்க வேண்டும்.  அதே வேளையில் அது வன்முறையை அனுமதித்த போதும், அதன் மீது தான் தன் வாழ்வு முழுவதையும் உருவாக்கியது. எனவே, கிறிஸ்துவர்கள் வாழ்வு அவர்களது தொழிலுக்கும், வாழ்வுக்கும் முரண்பட்டதாக உள்ளது.  அன்பையே வாழ்வின் விதி என்றும், மறுபுறம் வன்முறை வாழ்வில் தவிர்க்க முடியாதது என்றும், அரசு சட்டம், ராணுவம் ஆகியவற்றில் அனுமதித்து, மதிக்கப்பட்டது. இந்த முரண்பாடு கிறிஸ்துவ உலகின் உள்ளேயே நிகழ்ந்தது. அதன் உச்சத்தை இன்று காண்கிறோம்.

நாம் எந்த ஒழுங்குமுறைகளையும் அனுசரிக்க வில்லை, மத, அற வழிகளில் வாழ்க்கையை அமைக்கவில்லை, சட்டமும், வன்முறையும் வரியும் தான் நம்மை ஓட்டுகின்றன என்பதை நம் வாழ்வில் காண்கிறோம். சட்டம், ராணுவம், போலீஸ் போன்றவை ஒழிக்கப்பட்ட சமூகமே சரியான மாற்றாக இருக்க முடியும்.

இந்த வசந்த காலத்தில் மாஸ்கோ பள்ளியில் நடந்த மதத் தேர்வில், பிஷப், இளம் பெண்களிடம் கூறிய பத்துக் கட்டளைகளில் ஆறாவது "நாம் கொலை செய்யாதிருப்போமாக" என்பது. இது ஏற்புடையதா என்று கேட்ட போது, கொலை புனித நூல்களால் எப்போதும் தடை செய்யப்பட்டுள்ளது. இது எல்லா இடங்களிலும் நடக்கிறதா? இதற்கு ஓர் இளம் பெண் எழுந்து, "இல்லை. எப்போதும் இல்லை. போரில் கொலை அனுமதிக்கப்படுகிறது. குற்றவாளிகள் சட்டப்படிக் கொலை செய்யப்படு கின்றனர்" என்றார்.  மற்றொரு பெண்ணிடமும்

அதே கேள்வி கேட்கப்பட்டது.  "கொலை செய்வது குற்றமா?" அவள் உறுதியுடன் "ஆம், குற்றமே" என்றார். கொலை பழைய ஏற்பாட்டிலும், ஏசுவின் வாசகத்தில் தடைசெய்யப்பட்டுள்ளது.  நமது அண்டையாருக்குப் பாவம் இழைப்பதும் குற்றம் எனப்பட்டுள்ளது. இத்தனை பேச்சுத் திறத்தாலும் பிஷப் தோற்கடிக்கப்பட்டார். அந்த உண்மையான அறவழியைக் கூறிய இளம் பெண்கள் வென்றனர்.

நாம் விமானப் பயணம் போன்ற புதிய கண்டு பிடிப்புகளைப் பற்றியும், சிக்கலான அரசு உறவுகள் பற்றியும், பல அமைப்புகள், கலைகள் பற்றி விவாதிக்கிறோம். ஆனால் அந்த இளம் பெண் உறுதியுடன் கூறியதைத் துணிவுடன் விவாதிக்கத் தயாராக இல்லை. இத்தகைய மௌனம் கோழைத் தனமானது. ஏனெனில் கிறிஸ்துவ உலகின் ஒவ்வொரு நபரும் இவ்விதமே சிந்திக்கிறார். அந்தப் பெண் போல மேம்போக்காகச் சிந்திக்கின்றனர்.  சோசலிசம், கம்யூனிசம், காட்டுமிராண்டித்தனம், விடுதலைப் படை என குற்றக் குழுக்கள் நீள்கின்றன. வேலையின்மை வளர்கிறது. கேவலமான ஆடம்பரம் பணக் காரர்களால் வெட்கமின்றிக் காட்டப்படுகிறது. ஏழை களின் துயர வாழ்க்கை தொடர்கிறது. தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இவையாவும் நமது மனதின் உள் முரண்பாடுகளின் வெளிப்பாடே. இவற்றிற்குத் தீர்வு காண முடியாது. இவற்றை அன்பால் மட்டுமே சரிசெய்ய முடியும். அனைத்து வன்முறைகளையும் கைவிடுவதே தீர்வு.  திரான்ஸ் வாலில் தங்களது சேவை, மிகவும் அடிப்படையான தேவை. எனினும் அடிப்படை உண்மையை உணர்த்தும் மிக முக்கியப் பணி அது.  கனமான செயல்முறை விளக்கம் அது, அதை உலகமே பகிர்ந்து கொள்ள வேண்டும். இதைக் கிறிஸ்துவர்கள் மட்டுமல்ல. உலக மக்கள் அனைவருமே பின்பற்ற வேண்டியது.

ருஷ்யாவிலும் இத்தகைய அகிம்சை அமைப்பு வளர்ந்து வருகிறது, ராணுவ அதிகரிப்பை எதிர்க்கிறது, என்பதை அறிய நீங்கள் மகிழ்ச்சி கொள்வீர்கள். நம்முடன் பங்கு பெறுபவர் எண்ணிக்கை எவ்வளவு குறைவு, ராணுவப் பணியை மறுப்பவர் எத்தனை பேர் என்பதல்ல பெரியது. இவை "நமது நியாய மான நிலையை, கடவுள் நம்முடன் உள்ளார் மனித வலிமையை விடக் கடவுளின் வலிமை பெரியது" என்பதையே உணர்த்துகின்றன.

கிறிஸ்துவர்களிடையே எத்தனை குழப்பமிருந்த போதும், எத்தனை குறைவாகப் புரிந்துகொள்ளப் பட்ட போதும், ராணுவத்தின் கொலைகள் அதிகரித்தே வருகிறது. இந்த முரண்பாடு மிக விரைவில் அப்பட்டமாகத் தெரியவரும். இதன் விளைவாக அரசு அதிகாரத்தை, வன்முறைகளை விடுவதா, ராணுவத்தை முற்றாகக் கலைப்பதா, அனைத்து வகை வன்முறைகளையும் கைவிடுவதா, அதிகாரத்தைக் காக்க நடக்கும் வன்முறைக் கொலைகளை மறுப்பதா, அல்லது கிறிஸ்துவ மதத்தையே கைவிடுவதா என்பதை முடிவு செய்தாக வேண்டிய சூழல் உருவாகி வருகிறது. இதனை உலகின் அனைத்து அரசுகளும், பிரிட்டிஷ், ருஷ்ய அரசுகளும் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. பழமை வாதம் அரசுகள் மீது மேலாதிக்கம் செலுத்தலாம். தங்கள் கடிதத்தில் உள்ளது போலவே ருஷ்யாவிலும் அரசுக்கு எதிரான இந்தப் போராட்டத்தை நடத்துகிறோம்.

எவ்வகையில் வன்முறை, ஆபத்து வருகிறது என்பதையும், அதை எப்படித் தடுப்பது என்பதையும் அரசு நன்கு அறியும். ஆனால் தமது பேராசையைக் காத்துக் கொள்ளவும், தமது நலன்களைக் காத்துக் கொள்ளவும், தமது இருப்பைக் காத்துக் கொள்ளவும் முயல்கின்றன.

என் உன்னத மரியாதையுடன்,

லியோ டால்ஸ்டாய்

Pin It