சொர்ணமால்யா தேவதாசி முறையை ஒழித்திருக்கக் கூடாது என்று சொன்னாராம். அதற்கு பலர் கொந்தளிக்கிறார்கள்.
ஆனால் விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று பல அறிவுஜீவிகள், சனநாயக சக்திகள், சமூக நலன் விரும்பிகள் கருத்து கூறிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு ஒரு கொந்தளிப்பையும் காணோம்.
இதைத்தானே சொர்ணமால்யாவும் சொல்றாங்க. அதுக்கு ஏன் இந்தக் கொந்தளிப்பு?
தேவதாசி முறையும், விபச்சாரமும் அடிப்படையில் வேறு வேறானதா என்ன? தேவதாசி முறைதான் பெண்ணைச் சுரண்டும். ஆனால், விபச்சாரம் பெண்ணை சமத்துவமாகப் பாவித்து சுதந்திரமாக வாழவைக்குமாக்கும்?!!?
தேவதாசி முறை என்பது நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையிலிருந்த பார்ப்பனியத்தின் பெண்ணடிமை வடிவம், பெண்ணை ஒரு பாலியல் பொருளாக கருதும் பாலியல் சுரண்டல் வடிவம். அதே காலத்தில் விபச்சாரமும் இருந்திருக்கலாம், ஆனால் தேவதாசி பெண்கள் கடவுளின் சேவகிகள் என்பதால், பார்ப்பனரும், பணம் படைத்தவனும் தவிர வேறு யாரும் அங்கு செல்ல முடியாது என்பதால், அடுத்த கட்ட இடைநிலைசாதியினருக்கு இந்த விபச்சார முறை இருந்திருக்கும். ஆண் படிநிலையில் எந்த இடத்தில் இருந்தாலும் அவர்களை திருப்திப் படுத்துவதில் கவனம் செலுத்துவதுதானே ஆணாதிக்க, சாதிச் சமூகம்.
பால்ய விவாகம், பெண்கள் படிப்பதற்கு தடை, வெளியே வரத் தடை, சதி, கைம்பெண் கோலம் பூணச்செய்தல், விதவை மறுமணத்தை தடுத்தல் போன்ற பல்வேறு விதமான கொடூரமான பெண்ணடிமைத்தன வடிவங்களைக் கொண்டிருந்த பழம் சமூகத்தின் வடிவம் அது. அந்தச் சமூகத்தில் தீண்டாமையும், சாதி வெறியும், சாணிப்பாலும், சவுக்கடியும், அக்ரஹாரத்தில் யாரும் நுழைய முடியா நிலையும், இன்னும் பல சமூகக் கொடுமைகளும் முழுவீச்சோடு நிலவின.
ஆனால் இன்றைய சமூக நிலைமை வேறு. இவை எல்லாம் ஒழிந்து மண்ணோடு மண்ணாகிப் போகவில்லையெனினும், அளவில் தன்மையில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. சதி ஒழிக்கப்பட்டு விட்டது. பெண்கல்வி, பால்ய விவாகம், இவற்றில் மாற்றங்கள் வந்துள்ளது. இந்த மாறிய, நவீன சமூகத்தின் பெண் மீதான பாலியல் சுரண்டல் வடிவம்தான் இந்த விபச்சாரம். இந்த சமூக நிலைக்கேற்ப தேவதாசி முறை தன்னை விபச்சாரமாகத் தகவமைத்து நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.
ஒரு குறிப்பிட்ட சமூகத்துப் பெண்களை மட்டும் தாசித் தொழில் செய்ய வற்புறுத்திய காலம் மாறி இன்று அனைத்துப் பெண்களுக்கும் அந்த வசதியைத் திறந்து விட்டுள்ளது இந்த சமூகம். அவ்வளவுதான்.
அது எந்த வகையிலும் பெண்ணின் சுயமரியாதைக்கு பெருமை சேர்க்கப் போவதில்லை. பெண் மீதான ஆணின் பார்வையை, பெண் என்பவள் பணம் கொடுத்தால் தன் பாலியல் இச்சையைத் தீர்க்கும் ஒரு பாலியல் அடிமை, இயந்திரம் என்று ஆண் கருதுவதை மாற்றப் போவதில்லை.
இப்படிப்பட்ட கீழ்த்தரமான விசயத்தை தடை செய்ய வேண்டும் என்று குரல் கொடுக்காமல், விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று கோரிக்கை வைப்பது எவ்வளவு மோசமான ஆணாதிக்கப் பார்வை என்பதை அறியாமலேயே பலர் விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்கக் கோரி வருகின்றனர்.
பார்ப்பனியம் தன் முழுவீச்சோடு இயங்கிய காலத்தில் நிலவிய முறை தேவதாசி முறையெனில், பார்ப்பனிய எதிர்ப்பை வலியுறுத்திய இடைநிலைச் சாதியினர் ஆதிக்கத்தில் விபச்சாரம் நிலை பெற்று விட்டது . இன்று உலகமயமாக்கலினால் ஏற்பட்ட சமூக விளைவில் அது பாலியல் தொழிலாக மாற்றப் பட்டுள்ளது.
அதென்ன மருத்துவர், வழக்கறிஞர், ஆசிரியர், பத்திரிகையாளர் என்பது போன்ற தொழிலா பாலியல் தொழில் என்று சொல்வதற்கு? இதற்கு ஒரு இயக்குனர், விபச்சாரம் என்பது வெறும் பாலியல் சார்ந்த விசயமல்ல, அது உளவியல் சார்ந்தது என்றும், உளவியல் ஆற்றுப்படுத்தலுக்கு விபச்சாரம் இருக்க வேண்டும், அதை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்றும் விழிப்புணர்வு கொடுக்க படம் எடுக்கிறார்.
அப்படியென்றால், விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்கச் சொல்லும் அனைத்து ஆண்களும், தங்கள் வீட்டுப் பெண்களை அந்த பவித்திரமான தொழிலுக்கு அனுப்ப வேண்டியதுதானே? லஞ்சம் கொடுத்தாவது அந்த உளவியல் ஆலோசகர் தொழிலுக்கு சேர்த்து விடவேண்டியது தானே?
எப்படிப் பார்த்தாலும், பெண்ணை தன் இச்சை தீர்க்கும் ஒரு பாலியல் ஜந்துவாக, விற்பனைப் பண்டமாக நடத்துவதுதான் இதன் அடிப்படை. பெண்ணை, ஆணைப் போன்ற சக மனுசியாக, அறிவும், சுயமரியாதையும், உணர்வும் உள்ள மனுசியாக கருத முடியாத ஆணாதிக்கப் பார்வைதான் இது.
தேவதாசி முறையின் நீட்சியாக உள்ள விபச்சாரம் ஒழிக்கப் படவேண்டும். விபச்சாரத் தடைச் சட்டம் கொண்டுவரப் பட வேண்டும் என்று அறிவுஜீவிகள், பெண்விடுதலைப் போராளிகள், சனநாயக சக்திகள், இடதுசாரிகள், பகுத்தறிவாளர்கள், கல்வியாளர்கள், சமூக நலன் விரும்பிகள் என எல்லாத் தரப்பும் போராடியிருக்க வேண்டும். ஆனால் இவர்கள் அனைவரும் விபச்சாரத்திற்கு, தேவதாசி முறைக்கு, பாலியல் தொழில் என்றொரு புதுநாமம் சூட்டி அதை சட்டப் பூர்வமாக்க சொல்கிறார்கள்.
ஒழிக்கப்பட வேண்டிய ஒரு கேவலமான ஆணாதிக்க வழக்கத்தை, சட்டப்பூர்வமாக்கச் சொல்வது சரியானது என்றால், தேவதாசி முறையை ஒழிக்காமல் தொடர்ந்து கடைபிடித்திருக்கலாம் என்று சொர்ணமால்யா சொல்வதும் சரியானதுதான்.
நாம் செய்த தவறுக்கு இதையும் கேட்டுத்தான் ஆக வேண்டும்.