அருவி சும்மா கொட்டினாலே அழகுதான். அதிலும் காதலோடு கொட்டினால்.... ஒவ்வொரு துளியிலும் பேரழகு இல்லையா?!

காதலோடு ஆர்ப்பரிக்கும் அருவியை ஒற்றைக்கண் மூடி தலை சாய்த்துப் பார்க்கும் அவள் அப்போது தான் செதுக்கி முடிந்து எழுந்து வந்த சிலை. மஞ்சள் புடவையில்.... வட்ட முகத்தை கிட்ட காட்டும் கேமரா... திட்டம் போட்டு கொள்ளை அடிக்கும் மெட்டுக்குள் மொட்டாகிறாள்.

saritha"மேகத்த தூது விட்டா திசை மாறிப் போகுமோன்னு

தாகம் உள்ள மச்சானே தண்ணிய நான் தூது விட்டேன்" 

வரி முடிய தண்ணீரில் முத்தமிடும் அவளை அவள் நிழலும் தண்ணீரில் இருந்து முத்தமிடும். நீருக்கு முத்தமிடும் பாத்திரம்....... வழிந்தோடும் காதலில் தான் சாத்தியம்.

"தண்ணிக்கு இந்த கன்னி தந்தனுப்பும் முத்தமெல்லாம்

எண்ணிக்கை குறையாம எப்ப வந்து தரப் போற"

நீருக்கு நடுவில் இருக்கும் பாறையில்.... தேருக்கு நடுவே இருக்கும் சாமி சிலையென அவள். எண்ணிக்கை குறையாம எப்ப வந்து தரப் போற என்று மீண்டும் ரகசியமாய் கேட்கையில்... வலது இடதாக நகரும் கேமரா இதயம் வரைந்தே செல்கிறது. நெற்றி குங்குமத்தில் குட்டி சூரியன். வட்ட முக சங்கமத்தில்... .சித்திரம் தான் மூக்கு முழி. மூக்குத்தி வெளிச்சத்தில் முழுநிலவும் துளியாய் தெரிய.... தூயவளின் புன்னகையில்.... தூரி ஆடும் தெறிக்கும் சாரல்.

"ஓடுகிற தண்ணியில உரசி விட்டேன் சந்தனத்தை

சேர்ந்திச்சோ சேரலயோ செவத்த மச்சான் நெத்தியில"

நீரோடும் உச்சிப் பாறை நடுவே சந்தனத்தை உரசி விடும் அவளின் செய்கையில் இருக்கும் ரசனையை எந்த வார்த்தையில் உரசி எடுக்க…? சந்தனத்தின் வாசம் கீழே குளித்துக் கொண்டிருக்கும் அவன் மேல் நீராய் கொட்டுவதில்.... காதலின் வடிவத்துக்கு தான் எத்தனை ரகசியம். காதல் சின்ன சின்ன கிறுக்குத்தனங்களால் ஆன கவிதையின் பிள்ளை. உரசி அனுப்பிய சந்தனம் மச்சான் நெற்றியை சேர்ந்து விட்டதா என்று எட்டி எட்டிப் பார்க்கும் அவளை... புன்னகையோடு நாமும் பார்க்கிறோம். வெட்கம் மீறும் ஆசைக்கு அணையாகுமா நீர்? அவள் உதடு தொட்டுப் போன துளியெல்லாம் அவனைச் சேருமா இனி?   

"ஓலை ஒன்னு நான் எழுதி ஓட விட்டேன் தண்ணியில

சேர்ந்திச்சோ சேரலயோ செவத்த மச்சான் கைகளிலே"

அவள் விடும் மஞ்சள் பூக்கள் நீரில் நீந்தும் அவளின் காதல் கனவுகள். காதலின் தகிப்பு..... தாகம் அடங்காத நீரில் வனப்பாகிறது. ஒவ்வொரு பூவிலும் இதயத்தின் நிறம் இசை சேர்த்துப் போகிறது. பூக்களை விட்டு விட்டு.... ஆசைகள் நிரம்பி நீர் நடுவே பாறையில் குப்புறப் படுத்து அவள் காலாட்டும் நேர்த்தியில் தான் பிறந்திருக்க வேண்டும் ஹைக்கூ வடிவம். அவள் உலகில் நீரும் அவனும் தான். அவளுள் ஒரு சிறுமி அநியாயத்துக்கு அழகு சேர்த்திருக்கிறாள். அவளுள் ஒரு கன்னி அன்னியோன்மாய் வெட்கம் பூசுகிறாள்.

அருவியின் சலசலப்பு பாறைகளின் மேல் பளிங்கூற்றிப் போகிறது. நீரில் கண்ணாடி காண்கையில் நீரும் கண்ணாடியாகிறது. அவன் தலை தொட்ட பூவெல்லாம் அவள் வாசம் அறிகிறான். அவள் வெட்கம் பூத்து பாறையின் மேல் நின்று காண.... கீழே முதுகு துடைத்துக் கொண்டே முகம் மலர்ந்த அவன் பாடுகிறான்.

"அடி கிராமத்துக் கிளியே என் கிழியாத தாவணியே

குளிரெடுக்கும் சாரலுக்கு குடை பிடிக்க வா மயிலே"

கீழே நின்று அவன் அவசிய கண்கள் திறக்கிறான். இடையே நீரோட அவன் இதயத்தில் தேரோடுகிறது.

"கொடையும் இல்ல படையும் இல்ல கூடலுக்கு ஆதரவா

தாவணியை நீ புழிய தலை துவட்ட நான் வரவா..." 

பெண்ணின் சொத்து வெட்கம். வெட்கத்தில் நிகழுவதெல்லாம்... வேகத்தில் கடந்து போகும் மனம். உள்ளே பூரிக்கும் பேரழகை வெட்கம் கொண்டே வியாக்யானம் காட்டுதல் ஓரழகு. பெண்ணின் குணத்தில் வெட்கங்கள் கூடு கட்டி புருவங்கள் மீசையாகும். தலை துவட்ட நான் வரவா என்று கேட்டு வாயில் விரல் கடித்து வீணை வாசித்தல் வியப்பு.

"நீ நனைச்ச ஆடையெல்லாம் நீ புழிஞ்சா நீர் வடியும்

அயித்த மகன் நான் புழிஞ்சா அத்தனையும் தேன் வடியும்" 

காதலே வராதவன் கூட காதலிக்க ஆரம்பித்து விடுவான். காதலின் பொருட்டே சாதலும் தள்ளிப் போகிறது. எத்தனை ரசனை. எத்தனை குறும்பு. எத்தனை சூட்சுமம். காதலனுக்கும் காதலிக்குமிடையே ரகசிய பாஷைகள் தான் எத்தனை எத்தனை. வம்பிழுத்து கேலி பேசி... வாய் பிடித்து வகை பிடித்து.... வண்ணங்கள் கொப்பளிக்கும் ஆசைகளில் தான் அவனும் அவளும்..... அதி மதுரம் பூக்கிறார்கள்.

"அயித்த மகன் நான் புழிஞ்சா அத்தனையும் தேன் வடியும்"

அருவி விழுந்தெழும் பாறையில்.... நீரில் விளைந்த மஞ்சள் என படுத்திருக்கும் அவள் ஒரு காதல் ஓவியத்தை நிகழ்த்துகிறாள். விழும் சாரலும்.... உருளும் குரலுமென மனதுக்குள் கொட்டும் அருவியில் மரணித்தாலும் மனம் ஒப்பும் காட்சி. திரை தாண்டி தெறிக்கும் காட்சியில்.... வடிவமைத்தவனின் வித்தை விருட்சமாகிறது. அந்த அருவி தான் அவர்களுக்கு தூது புறா. அந்த அருவி தான் அவர்களுக்கு வழித்தடம். அந்த அருவி தான் அவர்களுக்கு காதல் பொங்கும் பாத்திரம்.

'மலர் தோட்டத்துக் குயிலே இது உமக்காக பாடுதுங்க

ஆசைய நான் தூது விட அருவி ஒரு பாலமுங்க"

காதலி காதலனை வாங்க போங்க என்று கூப்புடுவதில் ஒரு வகை ஈர்ப்பு இருப்பதை மிக அருகே இந்த வரிகளில் உணர முடிந்தது. ஏங்க என்பதில் எல்லாம் அடங்கி விடுகிறது. அவள் அருவியைத் தூது விட்ட கதையை மெல்லிய கோட்டில் மெய்மறக்கச் சொல்கிறாள்.

"அருவி போல அழுகிறேனே அறிந்து கொண்டால் ஆகாதா

முந்தானையில் ஓரம் என்னை முடிந்து கொண்டால் ஆகாதோ...."

ஆணின் ஆசை எப்போதும் ரகசியம் காக்காது. அவன் பகிரங்கப்படுத்துகிறான். அதுவும்.... முந்தானையில் ஓரம் என்னை முடிந்து கொண்டால் ஆகாதோ.... என்பது காதலின் வெளியில் நீர் சொட்டி நிற்கும் தாகம். நீருக்குள் தலைக்கு கை கொடுத்து படுத்தபடி ஞானம் பூக்கும் பெண்மை முந்தானையில் அவன் நினைப்பூறிய நீர் மூடுவதை எந்த உலக சினிமாவும் காட்டி இருக்காது. காதலின் உச்சம் இந்த காட்சி.

"வக்கனையா தாலி வாங்கி வாசலுக்கு வாரதெப்போ" என்று கேட்டுக்கொண்டே வெட்கப்படும் அவள் காலத்துக்கும் அழகி என்றே கண்டேன். அடுத்த வரி ஆழ் மனதை கீறி போட்டு காதல் நட்டு விட்டது.

"உங்க காலு பட்ட மண்ணெடுத்து நான் பல்லு விலக்க போவதெப்போ....." என்று கேட்டு பாதி முகத்தை மூடி ஓரமாய் பார்த்து வெட்கி சிரிக்கும் அவளில் என் வெயிலியின் சாயலைக் கண்டேன். உடைந்து நொறுங்கும் நீர் மொழிக்கு பிதற்றித் திரிய ஒரு வாய்ப்பு அது.

பொதுவாக நெற்றியில் வைத்துக் கொள்வது என்பதாகத்தான் காதலின் காலடி மண் பயன்பாட்டில் இருந்திருக்கிறது. வைரமுத்து என்ற வண்ணமுத்து நிகழ்த்தி இருப்பது நிச்சலனத்தில் உடையாத நீர்குமிழியின் நிழற்படம். அத்தனை நுட்பம். அப்பப்பா அத்தனை வெப்பம். 

நாளெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கும் பேரழகி இந்த சரிதா. என்ன மாதிரி வடிவம் இது. என்ன மாதிரி பிறப்பு இது. வெட்கம் விட்டு காதல் சொல்லத் தோன்றுகிறது.

இசை.... V.S நரசிம்மன் - திசை அறிந்து பறக்கும் பறவை

இயக்கம்.... K. பாலசந்தர் - நிகழ்த்துக்கலை

படம்....அச்சமில்லை அச்சமில்லை.... பார்க்க வேண்டும்.

மலேசியா வாசுதேவனின் குரலில்.... நீரோடிய நினைப்பு

சுசீலாவின் குரலில் நீராடிய நினைப்பு

"உங்க காலு பட்ட மண்ணெடுத்து நான் பல்லு விலக்க போவதெப்போ...." ஓயாது ஒலிக்கும் இந்த வரிக்கு தான் இந்த நாள்.

- கவிஜி

Pin It