rajapaarvai 278வாவ் வாவ் வாவ் என்று கோரஸ் ஆரம்பிக்கும் போதே சாரல் காற்று கழுத்திறங்க ஆரம்பித்து விடுகிறது. இதயத்தில் சொட்டும் இசை வண்ண முத்துக்களில் உள்ளம் நெளிய ஆரம்பிக்கிறது.

வழி எங்கும் வயலின்கள் விளைந்து நிற்க... ஏறி இறங்கும் சந்தங்களின் சன்னதியில் சந்தன வாசம்... வீச வீசவே..

"அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும்
உன் முகம் தெரிகிறது" என்று குரல் வழியே விழா நடத்த துவங்குகிறார் எஸ்பிபி எனும் ஸ்வப்ன கூட்டின் தலைவன்.

"இந்திரன் தோட்டத்து முந்திரியே
மன்மத நாட்டுக்கு மந்திரியே"

வரிகளில் சிலையாவதை உணர்ந்தேன். சிலை ஆகியும் சினுங்குதலில் தவழ்ந்தேன். வைரம் பாய்ந்த எழுத்தை முத்துக்களாக்கி முணங்கவிட்ட கவிப்பேரரசுக்கு காலத்துக்கும் கைகூப்பல்தான்.

இடையே புல்லாங்குழல் இடுப்பசைத்து சில்மிசம் வழக்கம் போல காட்ட.. ஹா..... வென ஆழ்மனதிலிருந்து ஓர் ஒளி குரலென மேலெழும்புகிறது.

ஹா.. ஹா...

அது தூரத்தில் வெகு தூரத்தில் காதலில் தவிக்கும் தனித்த பறவையின் சிறகசைப்பு.

இன்னும் தீரவில்லை தூரம் ஆனாலும் குறைய தொடங்கியிருக்கிறது பாரம்.
ஈரம் சொட்ட நேரம் கிட்ட... ஹா...வில் சற்று இளைப்பாறல்.

"தேனில் வண்டு மூழ்கும்போது"

மீண்டும் ஹா....வில் கூடும் இளமைசாரல்.

"பாவை இன்று வண்டாய் மாற நெஞ்சுக்குள் தீயை வைத்து
மோகம் என்றாய்
தண்ணீரில் முழ்கிக் கொண்டே தாகம் என்றாய்...."

கவிஞன் தனித்து தெரிவதெல்லாம் இப்படித்தான். தன்னையே கரைத்து பூப்பதெல்லாம் கூட இப்படித்தான். கிடைத்த இடைவெளியில் நீந்திப் பார்க்கும் வரிகளில் துளி துளியாய் தன் மொழியை சிந்துகிறான்.

"தனிமையிலே வெறுமையிலே எத்தனை நாளடி இளமையிலே கெட்டது இரவுகள் சுட்டன கனவுகள் இமைகளும் சுமையடி இள மயிலே"

என தாபத்தை பகிரங்கமாய் போட்டுடைக்க
ஆமாம்...ஒப்புக்கொள்கிறேன்... என்பது போல... ஹா....வை பெண் குரல் தன் ரகசிய குரலாக இணைத்திட... கேட்கும் நமக்கே தேன்கூடு தேனீக்கள் அற்று திறக்கிறது.

திரும்பவும் வா வாவ் வாவ் வாவ்...ஒற்றை அடியில் ஒவ்வொரு லயமும் சேர்ந்த நுட்பம்... வயலினின் ரெக்கை பிடித்து ஒரு சம்பவத்திற்கு முன் கூட்டியே திட்டமிடுகிறது.

"தேகம் யாவும் தீயின் தாகம்"

என குரல் கொப்பளித்து விலக

ஹா....

மீண்டும் அசரீரியும் அத்துவானமும் உடல் குலுங்க உற்சவம் நடத்துகிறது.

"தாகம் தீர... நீதான் மேகம் கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது
தண்ணீரில் நிற்கும்போதே வேர்க்கின்றது"

காதலில் இறங்குதல் சாமர்த்தியம். தண்ணீரில் வேர்க்கும் மனதுக்கு காதல் போர்த்திய கவிஞனை கண்கொட்டாமல் நினைக்கின்றேன்.

"நெஞ்சு பொறு கொஞ்சம் இரு தாவணி விசிறிகள் வீசுகிறேன்"

ஜானகி எனும் சாதகம் வெந்நீரில் வெள்ளி முளைக்க செய்கிறது.

பெண் குரலில் கவிவரிகள் வழுக்க வழுக்கவே... ஆண் குரலில் மீண்டும் தூரத்து சிறகு ஆழத்திலிருந்து அசைய ஆரம்பித்து விடுகிறது.

கெட்டித்தயிர் போலதான் சட்டென உவமை வருகிறது. அப்படி உருகி மேல் எழும்புகிறது குரல். சுவை சப்புக் கொட்ட இமை இன்பம் கொட்ட பெருமூச்சு கேட்போருக்கு.

"மன்மத அம்புகள் தைத்த இடங்களில் சந்தனமாய்
எனை பூசுகிறேன்"

முடிவினில் முழுவதுமாய் இணைந்து விடுகிறாள் காதலி. காதலின் உச்சத்தில் காதலர்கள் இல்லாமல் போகிறார்கள். இருளும் ஒளியும் இணையும் இடத்தில் மொழியின் நீச்சல்.

"அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும்
உன் முகம் தெரிகிறது
சிப்பியில் தப்பிய ரத்தினமே
ரகசிய ராத்திரி புத்தகமே" இந்த வரியையை தான் கடக்கவே முடியவில்லை ராத்திரி தீர்ந்தும்.

ராஜா எனும் ஒற்றை கொம்பன் காலத்திற்கும் காதாட்ட வைக்கிறார்.

மாதவி எனும் பேரழகியும்... கமல் எனும் கால கலைஞனும் சேர்த்து நிகழ்த்திய காட்சிப் படிமங்கள் ராஜபார்வையை காலத்துக்கும் காதலாக்கி சொட்ட விட்டிருக்கிறது.

- கவிஜி

Pin It