jhon bellomi[மார்க்சியப் பொருளியலாளர் ஜான் பெல்லாமி ஃபாஸ்டர் 1999இல் வெளியிட்ட VULNERABLE PLANET நூலின் சாரம்]

இயற்கையைப் புறக்கணிக்கும் விதமான மனிதச் சமூகத்தின் தொடர் செயல்பாடுகள், புவியின் சுற்றுச்சூழலால் தாங்கக்கூடிய எல்லைகளைக் கடந்து விட்டன. இதனால் மனிதர்களின் பிழைத்தலும் பிற உயிரினங்களின் இருத்தலும், அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளன.

ஆனாலும் புவியின் சுற்றுச்சூழல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக முன்னிறுத்தப்படும் பரிந்துரைகளும், சர்வதேச ஒப்பந்தங்களும், அதன் திட்டங்களும் போதுமானவையாக இல்லை. மக்கள்தொகையையும், நுகர்வையும் கட்டுப் படுத்துவதன் மூலமும், சூழலுக்குகந்தவையாக அறியப்படும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலமும் சூழலியல் பிரச்சனைகளுக்கும், உயிர்க்கோளம் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கமுடியுமா என்றால் இயலாது.

புவியில் நாம் எதிர்கொள்ளும் நெருக்கடி இயற்கையாக ஏற்பட்டது அல்ல, உயிரியல் அடிப்படை கொண்டதுமல்ல, அது வரலாற்று அடிப்படையுடன், சமூக உறவால், தொழில்நுட்பக் கட்டமைப்பால் இந்தச் சமூக அமைப்பில் வேரூன்றியுள்ளது என்பதை அங்கீகரிக்க வேண்டும்.

சுற்றுச்சூழல் நெருக்கடியைத் தீர்ப்பதற்கான பெரும்பாலான திட்டங்களில் புறக்கணிக்கப்படுவதும் (அல்லது குறைத்து மதிப்பிடுவதும்) மிக முக்கியமான சவாலாக இருப்பதும் என்னவென்றால், சுற்றுச்சூழல் சீரழிவை ஏற்படுத்தும் இந்தச் சமூகக் கட்டமைப்பை மாற்ற வேண்டுமே தவிர தொழில்நுட்ப அடிப்படையில் மேற்பூச்சை மாற்றுவதன் மூலமே தீர்வுகளைப் பெற முடியாது என்பதே.

நடைமுறையில் உள்ள சமூக உறவுகள் கேள்விக்குள்ளாக்கப்படும் வரை மறுசுழற்சி செய்தல், சூழலுக்குகந்த பசும்பொருட்களை வாங்குதல், சூழலியல் நெருக்கடிகளுக்கு முக்கியக் காரணிகளாக இருக்கும் அரசியல் அமைப்பின் கொள்கையாளர்கள், நிறுவனங்களிடமே கோரிக்கைகளை முன்வைத்தல் போன்ற தனிநபர் பொறுப்பாண்மை அடிப்படையிலான செயல்பாடுகளே சூழலியல் தீர்வுகளுக்கான வாய்ப்புகளாக நம்முன் எஞ்சியிருக்கும்.

சூழலியல் நெருக்கடி சமூக அடிப்படையிலான வேர்களைக் கொண்டிருப்பதால் இயற்கைக்கும் சமூகத்துக்கும் இடையே ஒரு நீடித்த உறவை உருவாக்கும் விதத்தில் வரலாற்று உறவுகளை உலக அளவில் மாற்றியமைப்பதே தீர்வாக அமையும்.

வரலாற்று அடிப்படையில் பார்க்கும் போது இயற்கைக்கும், மனிதனுக்குமான உறவு எப்பொழுதும் ஒரேமாதிரி இருக்கவில்லை, நிறைய மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது. சமூகங்கள் இயற்கையுடன் நீண்ட காலமாகப் போரில் ஈடுபட்டுள்ளன என்பதையே வரலாறு நமக்குக் கற்பித்துள்ளது. வேண்டிய அளவு வளங்களைக் கறப்பதற்கான மூலமாகவும், குப்பைகளைக் கொட்டுவதற்கான இடமாகவுமே சுற்றுச்சூழல் கருதப்பட்டுள்ளது.

சில நேரங்களில் இயற்கையின் மீது இத்தகைய ஒருதலைப்பட்சமான சுரண்டல் பிராந்திய அளவில் சுற்றுச்சூழல் பேரழிவுகளுக்கு வழிவகுத்தது, அவை முழு நாகரிகங்களின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தன – எடுத்துக்காட்டாக சுமேரிய நாகரிகம். உலகளாவிய சூழலுடன் ஒப்புநோக்கும் போது கடந்த சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை மனித சமூகம் மிகச் சிறிய அளவிலே இருந்தது, அதன் தாக்கங்களும் மிகவும் குறைவாகவே இருந்தன.

1400களின் பிற்பகுதியில் ஐரோப்பாவில் தொடங்கிய முதலாளித்துவ உலக அமைப்பின் தோற்றத்துடன் இந்த நிலை மாறத் தொடங்கியது. ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு அட்லாண்டிக் முழுவதும் கொலம்பஸின் பயணம், முதலாளித்துவ உலக அமைப்பின் தோற்றத்தால் ஏற்பட்ட வரலாற்று மாற்றத்தின் தொடக்கத்தையும், அதே நேரத்தில் காலனியாதிக்க நாடுகள், காலனி நாடுகள், வளர்ச்சியடைந்த நாடுகள், வளர்ச்சி குன்றிய நாடுகள் என்ற வரையறையுடன் கூடிய தேசிய அரசுகளின் உலகப் படிநிலைகளின் உருவாக்கத்தையும் குறிக்கிறது.

உலகளாவிய ஐரோப்பியக் காலனியாதிக்கம் “புதிய உலகம்”  எனப்படும் அமெரிக்காவில் தொடங்கி ஆசிய, ஆஃப்பிரிக்கக் கண்டங்களுக்கு விரிவடைந்தது. உலகெங்கும் விலைமதிப்பற்ற உலோகங்களான தங்கம், வெள்ளி, விவசாய விளைபொருட்கள், சர்க்கரை, வாசனைப் பொருட்கள், காபி, தேயிலை போன்ற எண்ணற்ற வளங்களை வரம்பற்ற முறையில் சுரண்டுவதன் மூலம் காலனி நாடுகளில் சூழலியல் மாற்றத்தை ஏற்படுத்தியது.

புதிய உலகில் கிடைத்த தங்கம், வெள்ளியே ஐரோப்பாவின் ஆற்றலுக்கு மீறிய வாழ்க்கைத் தரநிலைக்கும்,  சேமிப்பைக் காட்டிலும் அதிகம் முதலீடு செய்வதற்கும் வழிவகுத்ததாக ஃபிரெஞ்சு வரலாற்றறிஞர் ஃபெர்னாண்ட் பிராடெல் எழுதியுள்ளார்.

பதினாறாம் நூற்றாண்டு முதல் பதினெட்டாம் நூற்றாண்டு வரை ஐரோப்பியச் சமூகத்தின் தொழில்வணிகப் புரட்சியின் ஒரு முக்கிய ஆற்றலாகக்  காலனியாதிக்கத்தின் தோற்றம் இருந்தது. மக்காச் சோளம், உருளைக் கிழங்கு, பல வகையான பீன்ஸ் போன்ற கூடுதல் உணவு ஆதாரங்கள் -- இவை அனைத்தும் அமெரிக்காவில் தோன்றியவை -- ஐரோப்பாவிற்குக் கொண்டு செல்லப்பட்டு ஐரோப்பிய விவசாயத்திலும் பின்னர் உலகளவிலான விவசாயத்திலும் மாற்றம் ஏற்பட்டது.

இவை அனைத்தும் முதலாளித்துவ வளர்ச்சியில் அடுத்த பெருங் கட்டமான தொழிற்புரட்சிக்கு வழிவகுக்க உதவியது. பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் ஐரோப்பாவில் நிகழ்ந்த தொழிற்புரட்சியின் மூலம் உற்பத்தியின் அளவும், தீவிரமும் அதிகரிப்பதற்கும் விரைவான வளர்ச்சிக்கும் வழி வகுத்ததுடன் இன்றைய நவீன உலகத்தின் பிரிவினைகளையும் ஏற்படுத்தியது.

பொருளாதாரத்திற்கும் இயற்கைக்கும் இடையேயான பிரிவினையையும், மூலதனத்திற்கும் உழைப்புக்கும் இடையேயான பிரிவினையையும், மைய நாடுகள், விளிம்பு நாடுகள் என்ற பிரிவினையையும் ஏற்படுத்தியது.

இத்தகைய வளர்ச்சி புவிக்கோளத்தின் சுற்றுச்சூழலில் ஏற்படுத்திய தாக்கத்தைக் கடந்த நான்கு நூற்றாண்டுகளின் மக்கள்தொகை, எரிஆற்றல், தொழில்மயமாக்கம், நகரமயமாக்கம் ஆகிய நான்கு முக்கியத் துறைகளை ஆய்வதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

மக்கள்தொகை:

1492இல் கொலம்பஸின் முதல் பயணத்தின் போது அமெரிக்கா 10 கோடி  பூர்வகுடி மக்களின் தாயகமாக இருந்தது- 1500இல் ஐரோப்பாவின் மக்கள்தொகை 70 மில்லியனாக இருந்தது. அதிலிருந்து ஒரு நூற்றாண்டிற்குள் அமெரிக்கப் பூர்வக் குடிகளில் 90 விழுக்காட்டினர் ஐரோப்பியர்களின் ஆக்கிரமிப்புப் போரினாலும், கொள்ளை நோயினாலும் அழிந்து போயினர்.

ஐரோப்பியர்கள் உலகின் பெரும் பகுதியை ஆக்கிரமிப்புச் செய்தது. ஐரோப்பிய இன மக்கள்தொகை கணிசமாக அதிகரிக்க ஏதுவானது. ஐரோப்பாவில் பஞ்சம், தொற்றுநோய்த் தாக்கம் ஆகியவை குறைந்து, ஐரோப்பியர்கள் மேம்பட்ட சுகாதார வசதியையும், உணவையும் பெற முடிந்ததால் அங்கே இறப்பு விகிதம் குறைந்தது.

1650இல் உலக மக்கள்தொகையில் ஐரோப்பிய இனத்தவரின் விகிதம் 18 விழுக்காடாக இருந்தது 1900இல் 30 விழுக்காடாக அதிகரித்தது.

பொதுவாகத் தொழில்மயத்திற்கு முந்தைய விவசாயம்சார்ந்த சமூகங்களில் பிறப்புவீதம், இறப்புவீதம் இரண்டுமே அதிகமாகக் காணப்படுகிறது. தொழில்மயத்தால் பொருளாதார வளர்ச்சியடைந்த சமூகங்களில் பிறப்புவிகிதமும், இறப்பு விகிதமும் குறைகிறது.

ஐரோப்பாவில், பொருளாதார வளர்ச்சி மேம்பட்டு செல்வச்செழிப்பு அதிகரித்த போது பிறப்பு விகிதம் குறைந்தது. தொழில்மயத்திற்கு முந்தைய ஐரோப்பியச் சமூகத்தில் அதிகமாக இருந்த இறப்பு வீதம், பிறப்பு வீதம் இரண்டுமே படிப்படியாகக் குறைந்து மக்கள்தொகை வளர்ச்சியில் மாற்றம் (demographic transition) ஏற்பட்டு குறைந்த பிறப்பு விகிதத்தையும், குறைந்த இறப்பு விகிதத்தையும் கொண்ட சமூகநிலையை அடைந்தது.

தொழில்மயமாக்கத்தின்தொடக்கத்தில், இந்த மாற்றத்தின் முதல் கட்டமாக, இறப்பு விகிதத்தில் சரிவு ஏற்பட்டது, என்றபோதும்பிறப்புவிகிதம்குறையாமல்அதிகமாகவே இருந்ததால் மக்கள் தொகை மிகவும்அதிகரித்தது.இரண்டாம் கட்டத்தில், பொருளாதார வளர்ச்சி பிறப்பு விகிதத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்ததால் மக்கள் தொகையின் வளர்ச்சி விகிதம் குறைந்தது.

இவ்வாறு வளர்ந்த நாடுகளின் மக்கள் தொகை பதினெட்டாம் நூற்றாண்டிலும், பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் வேகமாக விரிவடைந்து இருபதாம் நூற்றாண்டில் குறைந்துபோனது. செல்வசெழிப்பால்மக்கள்தொகை வளர்ச்சியில் வீழ்ச்சி ஏற்பட்டது, அதன்மூலம் செல்வ செழிப்பு மேலும் வலுப்படுத்தப்பட்டது.

இதற்கு நேர்மாறாக, உலகப் பொருளாதாரத்தில் விளிம்பு நிலையில் உள்ள நாடுகள் (மூன்றாம் உலகநாடுகள்) தொழில்மயத்தின் மூலம் மக்கள் தொகை வளர்ச்சியில் மாற்றத்தை ஏற்படுத்தும் விதமாக வளர்ந்த நாடுகள் கடைபிடித்த அதே பாதையைப் பின்பற்ற முடியவில்லை.

அதற்குப் பதிலாகக் காலனியாதிக்கமும், அதன் கட்டளைக்குட்பட்டு மேம்பட்ட முதலாளித்துவப் பொருளாதாரங்களுடன் போட்டியிட வேண்டிய அவசியமும் அந்நாடுகளின் வளர்ச்சிக்குப் பெரிதும் இடையூறாக அமைந்தது.

விளிம்பு நாடுகளிலிருந்து மைய நாடுகளுக்குத் தொடர்ந்து பொருளாதார உபரிகள் கடத்தப்படுவதால் வளராமையின் வளர்ச்சியே ஏற்பட்டது. இதன் விளைவாக மைய நாடுகளுக்கும், விளிம்பு நாடுகளுக்கும் இடையிலான தனிநபர் வருமானத்தில் ஒரு பெருத்த இடைவெளி ஏற்பட்டது, இரண்டு நூற்றாண்டுகளுக்குள் இந்த இடைவெளி ஏழு மடங்கு அதிகரித்தது.

இறப்பு வீதத்தின் வீழ்ச்சிக்கும், பிறப்பு வீதத்தின் வீழ்ச்சிக்கும் இடையிலான பின்னடைவு விளிம்புநிலை நாடுகளில் நீட்டிக்கப்பட்டது. விளிம்புநிலை நாடுகள் பொருளாதார வளர்ச்சியுடன் மக்கள்தொகை வளர்ச்சியில் மாற்றம் ஏற்படுத்த இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டதால் அவற்றின் மக்கள்தொகை அதிகரிப்பு சூழலியல் பிரச்சனைகள் அதிகரிப்பதற்குக் காரணமானது.

இதனால் மூன்றாம் உலகநாடுகள் "தொழில்மயத்தின்" குறைந்த இறப்பு விகிதத்திற்கும் "விவசாயமயத்தின்" உயர்ந்த பிறப்பு விகிதத்திற்கும் இடையிலான மக்கள்தொகை வலையில் சிக்கின. அதாவது அந்நாடுகளில் இறப்பு விகிதம் குறைந்த போதும், பிறப்பு விகிதம் குறையாததால் மக்கள்தொகை பெரிதும் அதிகரித்தது. அவற்றின் மக்கள்தொகை வளர்ந்த அதே நேரத்தில், அவற்றின் தனிநபர் வருவாய் விகிதம் தேக்கமடைந்து குறைந்தது. இவை இரண்டும் ஒன்றைஒன்று மேலும் வலுப்படுத்தின.

சூழலியலாளர் பாரி காமனர் கருத்தின்படி, ஒருவகையான “மக்கள்தொகை ஒட்டுண்ணித்தனம்” உருவாகியது, இதில் முதலாளித்துவ மையநாடுகளில் “மக்கள்தொகை மாற்றத்தின் இரண்டாவது, சமநிலைக் கட்டம்” வறிய விளிம்பு நாடுகளில் அதே கட்டத்தைத் தடுப்பதன் மூலமே ஏற்படுத்தப்பட்டது.”

"காலனியாதிக்கம் உலகின் செல்வம், மக்கள்தொகை இரண்டும் பகிரப்படுவதை நிர்ணயித்தது. புவிமையக் கோட்டிற்கு வடக்கே செல்வத்தையும், அதற்குக் கீழே பெரும்பாலான மக்களையும் குவித்தது" என்றுகாமனர் குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பாவில் சமூக மாற்றத்தால் / தொழிற்புரட்சியால் வாழ்வாதாரம், வேலை இழந்த மக்கள் புதிய உலகம் என அழைக்கப்படும் பகுதிகளான வட அமெரிக்கா, தென் அமெரிகாவிற்கும், ஆஸ்திரேலியாவிற்கும் இடம் பெயர்ந்தனர். காலனிநாடுகளான இந்தியா, சீனா, லத்தீன் அமெரிக்க நாடுகளில் எண்ணற்ற மக்கள் வேலைகளையும், வாழ்வாதாரங்களையும் இழந்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் அவர்கள் இடம்பெயர்ந்து செல்வதற்குப் புதிய உலகம் எதுவும் இல்லை. இதுவே மூன்றாம் உலக நாடுகளில் மக்கள்தொகைப் பெருக்கம், மக்கள்தொகை அடர்த்தி வளர்ந்த நாடுகளை விட மிகவும் அதிகரித்ததற்கான முக்கிய வரலாற்றுக் காரணமாக உள்ளது.

மூன்றாம் உலக நாடுகளில் வேலையின்மையும், சேமப் பட்டாளமும் அதிகரித்ததற்கும், மக்கள்தொகை வளர்ச்சியில் மாற்றம் ஏற்படாமல் தடுக்கப்பட்டதற்கும், பொருளாதார வளர்ச்சி தடுக்கப்பட்டதற்கும் மூலகாரணமாக இந்தக் காலனியாதிக்க அமைப்பே இருந்துள்ளது.

அரசியல் பொருளாதாரத்தில் மக்கள்தொகை, வறுமை, சுற்றுச்சூழல் சீரழிவு ஆகியவற்றுக்கு இடையிலான உறவுகள் குறித்த விவாதத்தில் இரண்டு நிலைப்பாடுகள் முன்வைக்கப்பட்டன, ஒன்று தாமஸ் மால்தூஸூடையது. மற்றொன்று கார்ல் மார்க்ஸுடையது.

மால்துஸ் அதிக மக்கள் தொகை, வறுமை, சுற்றுச்சூழலின் சீரழிவு பற்றிய தனது பகுப்பாய்விற்கு உணவு உற்பத்தி, மனித இனத்தின் கருவுறுதலுக்கான "இயற்கை நெறிகளை" அடிப்படையாகக் கொண்டிருந்தார். கார்ல் மார்க்ஸ் இத்தகைய பிரச்சனைகளுக்கு சமூக அடிப்படையே காரணம் என விளக்கினார். மார்க்ஸ் "ஒவ்வொரு குறிப்பிட்ட வரலாற்று உற்பத்தி முறையும் அதற்கே உரித்தான மக்கள்தொகை நெறிகளைக் கொண்டுள்ளது.

அவை அந்தக் குறிப்பிட்ட உற்பத்தி அமைப்புக்கு மட்டுமே வரலாற்று வழியில் செல்லுபடியாகும். இனத்தொகை பற்றிய ஒரு உருவிலிச் சட்டம் தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் மட்டுமே இருக்கும், அதுவும் கூட மனிதனின் வரலாற்றுத் தலையீடு இல்லாத நிலையில் மட்டுமே இருக்கும்” என்று வாதிட்டார்.

"மக்கள்தொகைப் பெருக்கம் என்பது வரலாற்று ரீதியாக நிர்ணயிக்கப்பட்ட உறவு, அது எந்த வகையிலும் வாழ்க்கையின் அவசியத் தேவைகளின் உற்பத்தித் திறனின் முழுமையான வரம்பால் தீர்மானிக்கப்படுவதில்லை, ஆனால் குறிப்பிட்ட உற்பத்தி நிலைமைகளாலும், அதனுடன் மனிதர்களின் இனப்பெருக்க நிலைமைகளின் வரம்புகளாலும் நிர்ணயிக்கப்படுகிறது” என்கிறார் மார்க்ஸ்.

இயந்திரமய முதலாளித்துவத்தின் கீழ் மக்கள்தொகையை நிர்வகிக்கும் மிக முக்கிய நெறியாக, ஒப்பீட்டு மிகை மக்கள்தொகை அல்லது வேலையற்றோரின் சேமப்பட்டாளம் உள்ளது என்று மார்க்ஸ் வாதிட்டார். கூலிகள் (அல்லது வரலாற்று ரீதியாக வரையறுக்கப்பட்ட வாழ்வாதார நிலைகள்) மக்கள் தொகைக்கும், உணவுக்கும் இடையிலான உறவால் தீர்மானிக்கப்படுவதில்லை,  மக்கள்தொகைக்கும் வேலைவாய்ப்புக்கும் இடையேயான உறவே கூலியைத் தீர்மானிக்கிறது.

வேலையற்ற பட்டாளத்தின் இருப்பையே முதலாளித்துவம் உழைப்புச் சக்தியை (ஒரு நபரின் வேலை செய்யும் திறன்) ஒரு சரக்கின் நிலைக்கு தாழ்த்துவதற்கான நெம்புகோலாகப் பயன்படுத்துகிறது. ஆனால் ஒப்பீட்டளவு உபரி மக்கள்தொகையின் இந்த நெறி முதலாளித்துவத்தின் அனைத்து நிலைகளுக்கும் பொருந்தாது: இது இயந்திர உற்பத்திமுறையின் ஆதிக்கத்தில்மட்டுமே நடைமுறையில்உள்ளது.

ஆற்றல்:

மனித சமூகம் பல தொழில்நுட்பப் புரட்சிகளைக் கண்டுள்ளது. தொழில்நுட்பப் பயன்பாட்டின் அடிப்படையில் சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் வெவ்வேறு காலகட்டங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. மனித சமூகத்தில் முதலில் ஆற்றல் பயன்பாட்டிற்கு மரப்பொருட்கள், காற்று, நீர் ஆகியவையே பயன்படுத்தப்பட்டன. இக்காலகட்டம் “சூழல் தொழில்நுட்ப கட்டம்” (ecotechnic phase) எனப்படுகிறது.

இதற்கடுத்த படியாக நிலக்கரியும் இரும்பும் பயன்பாட்டிற்கு வந்தன. இக்காலகட்டம் “பழைய தொழில்நுட்பக் கட்டம்” (paleotechnic phase) எனப்படுகிறது. அதன் பிறகு மின்சாரமும் பெட்ரோலியமும் பயன்பாட்டிற்கு வந்த காலகட்டம் புதிய தொழில்நுட்பக் கட்டம் (neotechnic phase) எனப்படுகிறது.

உலகளவில் ஆற்றல் நுகர்விலும் மைய நாடுகளுக்கும் விளிம்பு நாடுகளுக்கும் இடையே பெரும் ஏற்றத்தாழ்வு காணப்படுகிறது. ஒரு சராசரி அமெரிக்கர் மூன்றாம் உலக நாடுகளில் சராசரியாக ஒரு நபர் பயன்படுத்துவதைப் போல் 40 மடங்கு அதிக ஆற்றலைப் பயன்படுத்துகிறார். வளர்ந்த முதலாளித்துவ நாடுகளில் ஆஃப்ரிக்காவின் சஹாரா பகுதிகளைப் போல் 80 மடங்கு அதிக ஆற்றல் பயன்படுத்தப்படுகிறது.

எரிசக்திப் பயன்பாட்டிலும், உற்பத்தி அமைப்பிலும் ஏற்பட்ட மாற்றத்தால் தொழில்மயமாக்கம் ஏற்பட்டு, முதலாளித்துவம் வளர்ச்சி அடைந்தது. தொழிற்புரட்சியின் ஆரம்பக் கட்டத்தில் (1760-1840) பிரிட்டனில் அதிக எண்ணிக்கையில் பருத்தி ஆலைகள் உருவெடுத்தன.

அதன் இரண்டாம் கட்டத்திலும் (1840-1875) நீராவி இயந்திரத்தின் பயன்பாட்டிலும், ரயில்வே துறையிலும் வளர்ச்சி ஏற்பட்டது. அடுத்த கட்டத்தில்1800களின் பிற்பகுதியில் ஏற்பட்ட அறிவியல் - தொழில்நுட்ப்ப் புரட்சியால் எஃகு, வேதியியல், மின்சாரத் தொழில்நுட்பம் வளர்ச்சி பெற்றது.

அதைத் தொடர்ந்து இருபதாம் நூற்றாண்டில் தானியங்கி எந்திரங்களின் தோற்றத்தாலும், இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் பெட்ரோ வேதிப் பொருட்கள், ஜெட் விமானங்கள், கணினிகளின் தோற்றத்தாலும் வளர்ச்சி பெற்றது. உற்பத்தி அமைப்பில் ஏற்பட்ட இத்தகைய மாற்றங்களால் உற்பத்திப் பொருட்களின் அளவிலும் பெரும் மாற்றம் ஏற்பட்டது.

1750க்கும் 1980க்கும் இடையிலான காலக்கட்டத்தில் உற்பத்திப் பொருட்களின் அளவு 80 மடங்கிற்கு மேலாக அதிகரித்தது.1970களில் இருந்து, உலகப் பொருளாதார வளர்ச்சியின் அளவு குறைந்த போதும் உற்பத்தியானது தொடர்ந்து பெருக்குவிகிதத்தில் விரிவடைகிறது. உலகத் தொழில்துறை உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 3.3 விழுக்காடாக இருந்த போது உற்பத்திப் பொருட்களின் அளவு இரு மடங்காவதற்கு 1970 முதல் 1990 வரை என இரண்டு பத்தாண்டுகள் மட்டுமே ஆயின.

இத்தகைய அதிவேக வளர்ச்சியுடன் மைய நாடுகளுக்கும், விளிம்பு நாடுகளுக்கும் இடையிலான விநியோகத்திலான ஏற்றத்தாழ்வுகளும் அதிகரித்தன.

1750இல், தனிநபர் வருமானம் வளர்ந்த மைய நாடுகளிலும், வளர்ச்சி குறைந்த விளிம்பு நாடுகளிலும் கிட்டத்தட்ட சமமாகவே காணப்பட்டது. வளர்ந்த நாடுகளில் தனிநபர் வருமானம் 180 டாலராகவும், வளர்ச்சி குறைந்த நாடுகளில் 180 முதல் 190 டாலர் வரையிலும் காணப்பட்டது.

ஆனால் 1930களில், வளர்ந்த நாடுகளில் தனிநபர் வருவாய்780டாலராக உயர்ந்தது, வளர்ச்சி குன்றிய நாடுகளில் தனிநபர் வருமானம் 190 டாலராக 1750 அளவிலேயே இருந்தது. எனவே, முதலாளித்துவத்தின் முழு வளர்ச்சிக் காலத்திலும், மைய நாடுகளுக்கும் விளிம்பு நாடுகளுக்கும் இடையிலான இடைவெளி 1750இல் 1:1 ஆக இருந்தது 1930இல் 4:1 ஆகவும் 1980இல் 7: 1 ஆகவும் வளர்ந்தது. உலக உற்பத்தியில் 75 விழுக்காடு உலக மக்கள்தொகையில் 25 விழுக்காட்டினரால் நுகரப்படுகிறது.

நகரமயமாக்கம்:

1800க்கு முன் உலகின் மிகப் பெரும்பாலான பகுதிகள் கிராமப்புறங்களாகத்தான் இருந்துள்ளன, மக்கள்தொகையில் 2.5 விழுக்காட்டிற்கு மேல் யாரும் நகரங்களில் வசிக்கவில்லை. பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 10 விழுக்காட்டிற்கு மேல் நகரமயமான முதல் நாடு நெதர்லாந்து. அடுத்தது பிரிட்டன்.

1800இல் லண்டன் ஐரோப்பாவின் மிகப் பெரிய நகரமாக 850,000க்கும் அதிகமான மக்கள்தொகையைக் கொண்டிருந்தது. 1985ல் உலக மக்கள் தொகையில் 43 விழுக்காடு நகரமயமாக்கப்பட்டிருந்த்து.

நகரமயமாக்கம் மூன்று நிலைகளில் உள்ளூர் அளவிலும், பிராந்திய அளவிலும், உலக அளவிலும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. உள்ளூர் அளவில், அதிக செங்கல், கான்கிரீட், கண்ணாடி, உலோகத்தின் பயன்பாட்டினால் நிலங்களின் இட அமைப்பில் மாற்றம் ஏற்படுகிறது. வட்டார அளவில் "நகரவெப்பத் தீவு விளைவு" தூண்டப்படுகிறது.

சுற்றியுள்ள கிராமப்புறங்களை விட நகர்ப்புறங்கள் குறைந்தபட்சம் 4° F –ஐ விட அதிக வெப்பநிலையைக் கொண்டுள்ளது. உலகளவில், நகர்ப்புறங்களால் கந்தக உமிழ்வு, கார்பன்-டை-ஆக்சைடு-உமிழ்வு அதிகரிப்பதால் வளிமண்டல சீர்கேட்டிலும், புவி வெப்பமாதலிலும் பங்கு வகிக்கின்றன.

சுற்றுச்சூழல் சீரழிவின் காரணிகள்:

சுற்றுச் சூழலியாளர்கள், சுற்றுச்சூழல் சீரழிவுக்கு மிக முக்கியக் காரணிகளைக் கொண்டு சூழலியல் தாக்கத்தை அளவிடுவதற்கான ஒரு சூத்திரத்தை உருவாக்கியுள்ளனர். இது ‘பேட்’ சூத்திரம் (PAT) என்றும் அழைக்கப்படுகிறது.

I = P X A X T

இதில் I - Impact சுற்றுச்சூழல் தாக்கத்தைக் குறிக்கும்.

P - Population - மக்கள்தொகை

A - Affluence - செல்வச் செழிப்பிற்கான உற்பத்திப் பொருட்களின் அளவு. இதைத் தனிநபரின் மூலதனப் பங்கு என்று வரையறுக்க முடியும்.

T – Technology – தொழில்நுட்பம் - உற்பத்திச் செயல்பாட்டிற்குப் பயன்படுத்தப்படும் ஒரு அலகுஆற்றலால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு.

சூத்திரத்தை இன்னும் துல்லியமாகப் பின்வருமாறு குறிப்பிடலாம்.

சுற்றுச்சூழல் தாக்கம் = மக்கள்தொகை x (ஒரு நபருக்கான மூலதனப் பங்கு x உற்பத்திப் பொருட்களின் அளவு / மூலதனப் பங்கு) x (ஆற்றல் / உற்பத்திப்பொருட்களின் அளவு x சுற்றுச்சூழல் தாக்கம் / ஆற்றல்)

இந்த மூன்று மாறிகளிலும் மேம்பாட்டை ஏற்படுத்துவதன் மூலம் நேர்நிறையான சூழலியல் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். பொதுவாக மக்கள்தொகையே சுற்றுச்சூழல் தாக்கத்திற்கான முக்கியக் காரணியாகக் கருதப்படுகிறது. ஆனால் இச்சூத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மற்ற இரண்டு காரணிகளான ‘AT’ ஒன்றுசேர்ந்து சமூகப் பொருளாதார நிலையைக் குறிக்கும் ‘AT’ ஏற்படுத்தும் தாக்கம், மக்கள்தொகையால் ஏற்படும் தாக்கத்தைக் காட்டிலும் அதிகமாகவே இருக்கும்.

ஆனால் இந்தச் சூத்திரம் சுற்றுச்சூழல் தாக்கத்திற்கான உடனடிக் காரணிகளைக் குறிப்பிடுகிறதே ஒழிய, அதற்கு அடிப்படையான மூல காரணியைச் சுட்டிக்காட்டவில்லை. அதை அறிய உலகப் பொருளாதார அமைப்பின் மையத்தில் நடைபெறும் மூலதனத் திரட்டலுக்குத் திரும்புவது அவசியம்.

ஒப்பீட்டு மிகை மக்கள்தொகையின் நெறியை முழுமையான முதலாளித்துவத் திரட்டலின் பொதுநெறியாகக் குறிப்பிட்டார் மார்க்ஸ். ஏனெனில் இது ஒரு துருவத்தில்  செல்வத்தையும் மறு துருவத்தில் வறுமையையும் குவிப்பதற்கான "நெம்புகோல்" ஆகும். தொழில்துறைப் புரட்சியால் உருவான புதிய நிலைமைகளின் விளைவாக உழைப்பு மட்டுமல்ல, இயற்கையும் பெருமளவில் மூலதனத்திற்கு அடிமைப்படுத்தப்படுவதாக மார்க்ஸ் குறிப்பிட்டார். நகரம், கிராமம் என்ற பிரிவினையின் மூலமும், கிராமப்புறத்திலும் தொழில்துறை நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலமும், முதலாளித்துவம் மனித இருப்புக்கான சுற்றுச்சூழல் அடிப்படையைச் சீர்குலைத்ததாக மார்க்ஸ் குறிப்பிடுகிறார்.

முதலாளித்துவத்திற்கு முந்தைய காலக்கட்டத்தை இயற்கையோடு இயைந்து வாழ்ந்த பொற்காலமாகக் கருத முடியுமா? சுமேரியன், சிந்து சமவெளி, கிரேக்கம், ஃபீனீசியன், ரோமன், மாயன் நாகரிகங்கள் அனைத்தும் சுற்றுச்சூழல் காரணிகளால் வீழ்ச்சியடைந்த்தாக வரலாற்று மற்றும் தொல்பொருள் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

தொழிற்புரட்சிக்கு முன்னர் உலக மக்கள் தொகையில் பெரும்பான்மையாக இருந்த விவசாயிகளின் வாழ்நிலை, அதிக குழந்தை இறப்புவீதம், குறைந்த ஆயுட்காலம், கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடு, பஞ்சம், தொற்றுநோய்களின் அச்சுறுத்தல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்தது.

பதினெட்டாம் நூற்றாண்டில் சுற்றுச்சூழல் அடிப்படையில் முதலாளித்துவத்தை அதற்கு முன்பிருந்த காலத்திலிருந்து வேறுபடுத்துவது சுற்றுச்சூழல் சீரழிவோ அல்லது சுற்றுச்சூழல் நெருக்கடிக்கான அச்சுறுத்தலோ அல்ல - இவை இரண்டும் இதற்கு முன்னர் குறைந்தபட்சம் ஒரு பிராந்திய அளவிலாவது இருந்தன - ஆனால் குறிப்பிட்ட இரு பண்புகள் முதலாளித்துவத்திற்கே பிரத்தியேகமானவை.

முதலாவதாக, முதலாளித்துவம் புவியையே கைப்பற்றியதால் அதன் அழிவுகரச் செயல்பாடுகள் பிராந்திய அளவிலிருந்து புவிக்கோள அளவிற்கு விரிவடைந்தன. இரண்டாவதாக, இயற்கையின் மீதான சுரண்டல் மேலும் மேலும் உலகமயமாக்கப் பட்டுள்ளது, ஏனென்றால் இயற்கையின் அனைத்துக் கூறுகளும், மனித சமூக வாழ்நிலை என அனைத்துமே லாபத்திற்கான சுற்றோட்ட எல்லைக்குள் கொண்டுவரப்பட்டன.

பிரான்ஸில் மட்டுமே நாடு முழுவதும் பதினாறு பஞ்சங்கள் ஏற்பட்டன. அமெரிக்கா கண்டுபிடிக்கப்பட்டுப் பதினாறாம் முதல் பதினெட்டாம் நூற்றாண்டு வரை ஏற்பட்ட வர்த்தகப் புரட்சியின் போது ஐரோப்பாவை வந்தடைந்த புதிய உலகின் விவசாய விளைபொருட்களே ஐரோப்பாவைப் படிப்படியாகப் பஞ்சத்திலிருந்து விடுவித்தன.

சுற்றுச்சூழல் ஏகாதிபத்தியம்:

ஐரோப்பிய தாவரவியல் வெப்பமண்டல விவசாயத்தைச் சுரண்டும் வகையில் கட்டமைக்கப்பட்டது என்பதிலிருந்து விளிம்பு நாடுகளின் சூழலியல் எந்த அளவிற்கு மாற்றப்பட்டது என்பதை அறிந்து கொள்ளலாம். காலனியாதிக்கத்தின் தொடக்கத்திலிருந்து ஐரோப்பியர்கள் சர்க்கரை, காபி, தேநீர், பின்னர் பருத்தி, ஆஃப்ரிக்காவின் சஹாரா பகுதிகளைக் காட்டிலும் குயினைன், ரப்பர் போன்ற வெப்ப மண்டலப் பொருட்களைப் வாங்குவதிலேயே நாட்டம் கொண்டிருந்தனர்.

விளிம்பு நாடுகளில் நிலப் பயன்பாடு மாற்றப்பட்டு தற்சார்பு விவசாயம் அழிக்கப்பட்டுப் பெருமளவில் மைய நாடுகளுக்குத் தேவையான பணப் பயிர்களை விவசாயம் செய்யும் முறை ஏற்படுத்தப்பட்டது. விளிம்பு நாடுகளில் சுற்றுச்சூழலை மாற்றும் விதமாக அறிமுகம் செய்யப்பட்ட முதல் பணப்பயிர் கரும்பு ஆகும். கரும்பு விவசாயத்திற்கு அடிமைகளே பயன்படுத்தப்பட்டனர்.

ஆப்பிரிக்கர்கள் கப்பல்களில் அடைக்கப்பட்டு அட்லாண்டிக் கடலின் வழியாக அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அடிமைகளாக விற்கப்பட்டனர். அதனால் அட்லாண்டிக் கடல் ஆஃபிரிக்காவின் வதை முகாம் என்றும் அழைக்கப்படுகிறது.

ஏற்றுமதிக்கான விவசாயத்தில் நிலமும் அடிமையாக்கப்பட்டது. பணப்பயிர் முறைக்காக மரங்கள் பெருமளவில் வெட்டப்பட்டதால் மண்ணரிப்பும், வறட்சியும் ஏற்பட்டன. கரும்பு பிரேசிலின் வடகிழக்குப் பகுதியை அழித்தது, வெப்பமண்டலக் காடுகள் சவானாவாக மாற்றப்பட்டதாக உருகுவேயின் எழுத்தாளர் எட்வர்டோ கலேனோ எழுதியுள்ளார். அவ்வாறே கரீபியப் பகுதி முழுவதும் அழிக்கப்பட்டது.

கரும்பு என்ற ஒற்றைப் பயிர் சாகுபாடி பல்லுயிர்களையும் தாவர இனங்களையும் அழிக்கும் பலிபீடமாக்கப்பட்டது. கரும்புச் சாகுபடியால், லத்தீன் அமெரிக்க நாடுகளிலும், கியூபாவிலும் விவசாயமும், சுற்றுச்சூழலும் சீரழிந்தன. உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்திருந்த ஹைட்டி ஏகாதிபத்திய ஒடுக்குமுறையால் உணவுக்கு இறக்குமதியைச் சார்ந்திருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.

ஏற்றுமதி சார்ந்த விவசாய முறைகளும், ஒற்றைப் பயிர் முறையும் பன்மைத்துவத்தை அழித்துள்ளன. மனிதர்கள் வரலாற்று ரீதியாக 3,000க்கு மேற்பட்ட தாவர வகைகளை உணவுக்காகப் பயிரிட்டுள்ளனர். ஆனால் மனிதர்களுக்குத் தேவையான ஆற்றல் 85-90 விழுக்காடு இன்று பதினைந்து வகைத் தாவரங்களிலிருந்தே பெறப்படுகிறது. இவற்றில் அரிசி, சோளம், கோதுமை மூன்றிலிருந்து மட்டுமே 66 விழுக்காடு ஆற்றல் பெறப்படுகின்றது என்பதன் மூலம் எந்த அளவுக்குப் பன்மைத்துவத்தை இழந்துள்ளோம் என்பதை அறிய முடியும்.

வளர்ந்த முதலாளித்துவ நாடுகளில் தொழில்மய உற்பத்தியையும்,விளிம்பு நாடுகளில் ஏற்றுமதிக்கான வேளாண் உற்பத்தியையும், மூலப் பொருட்களைப் பிரித்தெடுக்கும் தொழில்களையும் குறித்த சர்வதேச உழைப்புப் பிரிவினை மூன்றாம் உலக நாடுகளின் சுற்றுச்சூழல் விரைவாகச் சீரழிவதற்கு வழிவகுத்தது.

பிரேசில், எகிப்து, காம்பியா, கோல்ட் கோஸ்ட், செனகல் ஆகிய நாடுகளில் ஏற்றுமதி விவசாயத்தால் மண்வளம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது, அப்பகுதிகளில் காணப்பட்ட தற்சார்பு விவசாயம் முற்றிலுமாக அழிக்கப்பட்டதால் பஞ்சம், பட்டினியாலும், ஊட்டச்சத்துக் குறைபாட்டாலும், கடுமையாக பாதிக்கப்பட்டன. ஏற்றுமதி சார்ந்த விவசாயம், மூன்றாம் உலக நாடுகளில் பொருளாதாரத் தற்சார்பையும், சுற்றுச்சூழல் சீரழிவையும் ஏற்படுத்தியது.

உலகளவில் சுற்றுச்சூழல் சீரழிவை ஏற்படுத்தி உயிர்க் கோளத்தையே அச்சுறுத்தியுள்ள முதலாளித்துவத்தைச் சீரமைக்க முடியுமா? சுற்றுச்சூழலியர்களின் கோரிக்கைகளுக்கிணங்கி வளங்குன்றா வளர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக முதலாளித்துவத்தை மறுசீரமைக்க முடியுமா?.

முடியாது என்றால் எப்படித்தான் தீர்வைப் பெற முடியும்? இயற்கையையும், மனித வாழ்நிலைகளையும் மேலும் மேலும் தனியார்மயமாக்குவதன் மூலம் சூழலியல் தீர்வை ஒருபோதும் பெற முடியாது. வருங்கால சந்ததியினரின் மீதும், பல்லுயிர்கள் மீதும் அக்கறையோடு இயற்கை வளங்களையும், உற்பத்தியையும் பொதுமயமாக்கி, ஜனநாயகப்படுத்துவதன் மூலமே சரியான தீர்வைப் பெற முடியும்.

உலக அளவில் உற்பத்தி, விநியோகம், தொழில்நுட்பம், வளர்ச்சி ஆகியவற்றிலுள்ள மூலப் பிரச்சனைகளை முன்னெடுப்பதன் மூலமே புவியின், சுற்றுச்சூழலின் விரைவான அழிவிற்குத் தீர்வு காணும் திறனுள்ள சுற்றுச்சூழல் இயக்கத்தைக் கட்டமைக்க முடியும்.

- சமந்தா