temple tamilnaduஅந்த அஞ்சுதலை நாகம் நெட்டநெடு நேராக நின்று கொண்டு தான் பேசியது... அவங்க எல்லோரையும் காப்பாத்த முடியல்ல; கொஞ்சம் பேரு நெருப்பில அவிஞ்சு போனாங்க... என்ற ஒரு கதையைப் பாதியிலே ஆரம்பித்து விட்டு பின்னர் தொடக்கத்துக்கு வந்தார் பெரியசாமி.

ஸ்ரீவைகுண்டம் ஊரின் தெற்கே ஓடிய அந்தத் தாமிரபரணி ஆற்றின் கரையில் கொஞ்சமாக இருந்த மணலும் புல்லும் நிறைந்த இடத்தில் இருந்தபோது தான் அந்தக் கதையைச் சொல்ல ஆரம்பித்தார் பெரியசாமி.

என் மாணவனின் அப்பா பெரியசாமி ஸ்ரீவைகுண்டம் ஊரில் பூர்வீகமாய் விவசாயம் செய்து வந்தார். என் நண்பனின் கல்யாணத்துக்கு ஸ்ரீவைகுண்டம் வருகிறேன் என்று என் மாணவன் மூலம் பெரியசாமிக்குச் சொல்லிவிட்டேன்.

அவர் கல்யாணத்திற்கு முந்தின நாளே வரவும் கள்ளபிரான் கோவிலுக்கும் வேறு இடங்களுக்கும் போகலாம் என்று சொல்லி இருந்தார். பெரியசாமியின் மகனுக்கு நான் பலவிதங்களில் உதவியிருந்தேன். அதை எல்லாம் அப்பாவிடம் பெரிதுபடுத்திச் சொல்லியிருக்கலாம். நான் அவரை சந்தித்ததுமே ஸ்ரீவைகுண்ட வரைபடத்தை சுருக்கமாய்ச் சொல்லிவிட்டார்.

நாங்கள் காவலர் குடியிருப்புக் காலனிக்கு அருகே இருந்த குமரகுருபரர் நூலகத்தைப் பார்த்துவிட்டு கள்ளபிரான் கோவிலுக்கு வந்தோம். அங்கிருந்து நிலப்பதிவு அலுவலகத்துக்கு வந்தபோது தான் கோட்டைப் பிள்ளைகள் இருந்த இடத்தைக் காட்டினார். நாங்கள் மேற்கே நடந்து கிழக்கு வாசல்வழி வடக்கே போய் மறுபடியும் சுற்றி வந்தோம். இடையில் பார்த்தவர்களைச் சந்தித்து உரையாடினோம்.

1976ல் முதல் முறையாக ஸ்ரீவைகுண்டம் வேளாளரின் கோட்டையைப் பார்த்தபோது பெருமளவில் சேதப்பட்டிருந்ததைப் பார்த்த ஞாபகம் இருக்கிறது. கோட்டைக்குள் இருந்த மரங்கள் தெரிந்தன. வடக்கு வாசல் மிகவும் பாழடைந்திருந்தது.

ஸ்ரீவைகுண்டம் ஊரில் கிழக்கு மேற்காக ஓடும் தாமிரபரணி ஆற்றின் வடக்கே கிழக்கு மேற்காக இருந்தது அந்தக் கோட்டை. அதைப் பற்றி பெரியசாமியும் வேறு சிலரும் சொன்ன விஷயங்களைத் தொகுப்பதில் சிரமம் இருக்கவில்லை.

கோட்டையைப் பற்றிய செய்திகளை அப்படியும் இப்படியுமாகச் சேகரித்த பின்னர்தான் தாமிரபரணி ஆற்றங்கரைக்குப் போனோம். அங்கே ஆற்றங்கரையில் இருந்த மாரியம்மன் கோவிலையும் பார்க்கலாம் என்றார்.

அந்த மாரியம்மனைப் பற்றிய ஒரு கதைப் பாடல் ஏட்டை கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஆறுமுகப்பெருமாள் நாடாரிடமிருந்து வாங்கினேன்; அதன் இன்னொரு கையெழுத்துப் பிரதியை பெரியசாமி பெற்றுத் தந்தார்.

அவர் மாரியம்மன் என்றது வனந்தாயி அம்மனை, அவன் ஸ்ரீவைகுண்டம் ஊர் பிராமணப் பெண். கணவன் இறந்தபின் அவளைச் சொந்தக்காரர்கள் விரட்டியடிக்க தற்கொலை செய்தாள். அதன் பிறகு மாரியம்மன் ஆனாள்.

எனக்கு தெரிந்த இக்கதையை பெரியசாமி அவர் பாணியில் சொன்னார். பேச்சை பாதியில் திருப்பி கோட்டைப் பிள்ளைகளின் கதையைக் கேட்டேன். சொல்ல ஆரம்பித்தார்.

அந்த மக்கள் காஷ்மீரிலிருந்து குடிபெயர்ந்தது ஏன் என்று தெரியாது. கொஞ்சம்பேர் கூட்டமாக பாண்டி நாட்டுக்குள் அடங்கியிருந்த ராமநாதபுரம் பகுதியில் உள்ள செலுகை என்னும் குக்கிராமத்துக்கு வந்தார்கள்.

அப்போது பாண்டி நாட்டின் அரசனாக வனவர்த்த பாண்டியன் என்பவன் இருந்தான். அவன் கனவில் ஐந்துதலை நாகம் வந்து “உன் தேசத்திற்குக் குடிபெயர்ந்தவர்கள் பாரம்பரியம் மிக்கவர்கள். உனக்கு முடிசூட்டி வைக்கும் அளவுக்கு உயர்ந்தவர்கள். அவர்களுக்கு இடம் கொடுத்து உபசரிப்பாய்” என்று சொன்னது.

பாண்டியன் அப்படியே செய்வதாக வாக்களித்தான். தன் கீழ் அடங்கிய சிற்றரசனாய் இருந்த ராமநாதபுரம் மன்னனுக்கு செய்தி அனுப்பினார். அவள் தன் பழைய கோட்டை ஒன்றைப் புதுப்பித்து அதில் அவர்களைக் குடியமர்த்தினான். அப்படிக் குடியேறியவர்கள் தங்களை வேளாளர் சாதியினராகவே சொல்லிக்கொண்டனர்.

கோட்டை வேளாளர்கள் பாண்டிச் சிற்றரசனுக்குப் பலவகையில் உதவி செய்தனர். முக்கியமாக விவசாயத் தொழில்நுட்பம், நீர் மேலாண்மையில் கவனம் செலுத்தினர். அரசனின் அரசியல் ஆலோசகராக இருந்தனர். அரசனின் முடிசூட்டு விழா நிகழ்வில் தலைமை தாங்கினர்.

இப்படியே காலம் கடந்தது. ஒரு சமயம் இவர்களுக்கு ஒரு இக்கட்டு வந்தது. அப்போது அரசனாய் இருந்த தென்னவராயனின் வைப்பாட்டி வடிவில் இவர்களைச் சனி பிடித்தான். தென்னவராயனுக்கு ஒரு மனைவியும் கூத்தி வம்ச வைப்பாட்டி ஒருத்தியும் உண்டு. இரண்டு பேருக்கும் ஆண்பிள்ளைகள் உண்டு. நியாயமாக மூத்த மனைவியின் மகன் இளவரசனாக வரவேண்டும்.

தென்னவராயன் கூத்தியின் மயக்கத்தில் இரண்டாவது மகனுக்கு முடிசூட்ட ஆயத்தமானான். கோட்டை பிள்ளைகளிடம் ஆலோசனை கேட்டான். பிள்ளைகள் காமக்கூத்தியின் மகன் அரசனாக வருவது நியாயமல்ல, நாங்கள் இதற்கு இணங்கமாட்டோம் என்றனர். தென்னவராயன் “யோசித்துப் பாருங்கள். எனக்கு சாதகமாகப் பேசப்போகிறீர்களா மரணத்தைத் தழுவ வேண்டுமா” என்று கேட்டான்.

கோட்டைக்குள் கூடினர். அரசனுக்குப் பதில் சொல்லாமலேயே வந்துவிட்டனர். அவர்கள் எழுபது குடும்பம். விறகைக் குவித்தனர். நெருப்பு வைத்தனர். சிலர் நெருப்பில் குதித்தனர். மற்றவர்கள் யோசித்துக் கொண்டு நின்றனர்.

எஞ்சியவர்கள், பழவூர் நீலியின் கணவன் ஆனந்தனைக் காப்பாற்ற முடியாமல் 70 வேளாளர்கள் இறந்தார்களே! அவர்களைப் போலவே நாங்களும் ஒன்றாக மடிவோம் என்றனர். அப்போது அஞ்சுதலைப் பாம்பு ஒன்று ஆகாயத்திலிருந்து பொத்தென்று தரையில் விழுந்தது. முறம் போன்ற விரிந்த படத்தை தூக்கிக்காட்டி நேராக நின்றது. நிமிர்ந்து நின்ற அதன் உருவம் அச்சத்தை ஊட்டியது. அது பேச ஆரம்பித்தது.

“நல்லவர்களே, நெல்லையப்பர் கோவில் கொண்ட நகரத்தின் அருகே கொற்கை என்ற கடற்கரை கிராமம் உள்ளது. அங்கே பராக்கிரம பாண்டியன் என்ற அரசன் இருக்கிறான். அவன் உங்களுக்குத் தஞ்சமளிப்பான். பாதுகாப்பாகக் கோட்டை கட்டித் தருவான்” என்றது. எஞ்சியவர்கள் இரவோடு இரவாகக் கிடைத்த பொருட்களை மூட்டைகட்டிக் கொண்டு குடிபெயர்ந்தனர்.

கால்போன போக்கில் நடந்தார்கள் அவர்கள். அப்போது தாமிரபரணி ஆற்றங்கரையில் மரங்கள் நிறைந்த ஒரு பிரதேசத்தில் வரும்போது கூட்டத்­திலிருந்த முதியவர் நின்றார். சுற்றுமுற்றும் பார்த்தார். தான், கனவில் கண்ட இடம் அது எனத் தெரிந்தது. இதுதான் நாம் தங்கவேண்டிய இடம் என்றார், எல்லோரும் அங்கே கூடாரம் அடித்தனர். இரவு தங்கினர்.

இதற்கிடையில் அஞ்சுதலைப் பாம்பு கொற்கை அரசன் பராக்கிரம பாண்டியனின் கனவில் தன் முழு உருவத்தைக் காட்டியது. தாமிரபரணி ஓடும் இடத்தின் வடக்கே ஸ்ரீவைகுண்டம் ஊரில் கொஞ்சம் பேர் கூடி இருக்கிறார்கள். அவர்களுக்கு இடமும் கொடுத்து கோட்டையும் கட்டிக்கொடு என பாம்பு சொன்னது.

அரசன் தூதனை அனுப்பி அங்கே தங்கி­யிருந்தவர்களை அழைத்தான். அவர்கள் இரவில்தான் நாங்கள் நடப்போம்; பெண்கள் பிறர் முகத்தைப் பார்க்க மாட்டார்கள் அதனால் அரசனை நாங்களே சந்திக்க வருகிறோம் என்றனர். சந்தித்தனர், அவர்களின் பேச்சும் செயல்பாடும் உயர்குடிகளுக்குரியதாய் இருப்பதைக் கண்ட அரசன், அவர்கள் விரும்பியபடி ஸ்ரீவைகுண்டத்தில் கோட்டை கட்ட அனுமதி அளித்தான்.

அவர்களுக்கு எங்கே கோட்டை கட்டுவது; எவ்வளவு இடத்தை எடுப்பது என்பது பற்றிச் சந்தேகம் வந்தது. அப்போது கள்ளபிரான் கோவில் கோபுரத்­திலிருந்து புறப்பட்ட பெரிய கருடன் கோவிலின் வடக்கே தாழ்ந்து பறந்தது. வட்டம் போட்டது. அவர்களில் முதியவர் இது நல்ல சகுனம், என்றார். மற்றவர்களும் ஆமோதித்துக் கூச்சலிட்டனர்.

அரசன் அவர்களுக்குக் கோட்டை கட்டிக் கொடுத்தான். இந்த நிகழ்ச்சி மலையாள வருஷம் 921 சித்திரை மாதம் ஏழாம் நாள் வியாழக்கிழமை நடந்தது. அப்போது கட்டப்பட்டது - தற்காலிகக் கோட்டைதான். இது நடந்து நாற்பது ஆண்டுகள் கழித்து உறுதியான கோட்டை கட்டப்பட்டது.

இந்தக்கதையை சுவாரஸ்யமாகச் சொன்னார்; அதோடு வேறு சில தகவல்களையும் சொன்னார். பெரியசாமி நல்ல தகவலாளி; ஆனால் சொல்ல வந்த விஷயத்தின் நுணியை விட்டு விட்டு எங்கேயோ போய் விடுவார்; மறுபடியும் புறப்பட்ட இடத்துக்கு வந்தும் கொஞ்சும் செய்தியைச் சொல்லுவார். அப்படியாக அவர் சொன்ன செய்திகளை எல்லாம் தொகுத்து வைத்திருந்தேன்.

கோட்டைப் பிள்ளைகள் பற்றி விரிவான ஆழமாக நடந்த ஆய்வுகள் குறைவு. எச்.ஆர். பேட் 1916ல் வெளியிட்ட திருநெல்வேலி மாவட்ட வரலாற்றில் கொஞ்சம் செய்திகளைக் கூறுகிறார். பெரும்பாலும் இது மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கை வழி தயாரிக்கப்பட்டது. முருக தனுஷ்கோடி மணிவிழா சிறப்பு மலரில் மனோகர சிங் என்பவர் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

1981ல் மதுரையில் நடந்த உலகத் தமிழர் மாநாட்டில் கோட்டை பிள்ளைமார் பற்றி கமல் கணேஷ் என்பவர் ஒரு கட்டுரை படித்திருக்கிறார். தாமிரபரணி வரலாறு என்ற பழைய நூலிலும் (1930 திருநெல்வேலி) ஸ்ரீவைகுண்டபதி என்ற நூலிலும் (1926 சென்னை) மிகக் குறைவான தகவல்கள் உள்ளன.

ஆறுமுகநயினார் என்பவர் எழுதிய நற்குடி வேளாளர் வரலாறும் பாண்டியர் வரலாறு குடிமரபும் என்னும் கவிதை நூலில் 1035 பாடல்கள் உள்ளன. 200க்கு மேற்பட்ட பாண்டிய மன்னர்களின் பெயர்கள் உள்ளன. இந்நூல் 1920ல் வெளியானது. ஒருவகையில் கற்பனை கலந்த புனைவுடைய இந்நூலில் கோட்டை பிள்ளைகளைப் பற்றிய தகவல்கள் உள்ளன.

இந்நூலில் வரும் கொற்கை பாண்டியன் ஒருவன் கோட்டைப் பிள்ளைகளுக்கு ஆதரவாய் இருக்கிறான். கோட்டைப் பிள்ளைகளை நங்குடிப் பிள்ளையின் ஒரு பிரிவினர் என இக்கவிதை நூல் கூறும். மேலும் ஆரம்ப காலத்திலேயே நங்குடி வேளாளர்களின் ஒரு பிரிவினரான சிவகலைப் பிள்ளைகளுடன் இவர்கள் மணஉறவு கொண்டிருந்தனர் என்பதும் இந்நூல் தரும் செய்தி.

கோட்டைப் பிள்ளைகள் பற்றி உத்திரகுமாரி என்பவர் மதுரைப் பல்கலைக்கழகம் வழி எம்.பில் பட்டத்திற்காக ஒரு ஆய்வு நடத்தியிருக்கிறார்(1984-85). ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் நங்குடி வேளாளர் அதிகம் வாழ்கின்றனர். இவர்கள் முடிச்சான் ஏந்தல் என்ற ஊரிலிருந்து கொற்கை வந்தவர்கள் என்று சொல்லுகின்றனர்.

அப்படி வரும் வழியில் இவர்களுக்குள் மனவேறுபாடு வந்தது. சண்டையும் வந்தது. ஒரு பிரிவினர் கோட்டை கட்டி தங்களைத் தனிமைப்படுத்தி வாழ்ந்தனர். இவர்கள் கோட்டை வேளாளர் என்றும் மற்றவர்கள் நங்குடி வேளாளர் என்றும் அழைக்கப்பட்டனர்.

திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூருக்கு செல்லும் வழியில் 30 கி.மீ. தொலைவில் ஸ்ரீவைகுண்டம் உள்ளது. இது 108 திவ்விய தேசங்களில் ஒன்று. இங்கே கள்ளபிரான் கோவில் கொண்டுள்ளார். நவ திருப்பதிகளில் முதலாவது தலம்; நவக்கிரகங்களில் சூரியனுக்குரிய ஊர் இது என்பது ஐதீகம். குமரகுருபரர் பிறந்த ஊர்.

இவ்வூரில் கோட்டை பிள்ளைகளின் கோட்டை கிழக்கு மேற்காக இருக்கிறது. இது 18ஆம் நூற்றாண்டில் பராக்கிரம பாண்டியனால் முதலில் கட்டப்பட்டு பின் புதுப்பிக்கப்பட்டது. இதைப் புதுப்பிப்பதற்கென்றே பாண்டியர்கள் மானியம் கொடுத்திருக்கிறார்கள். இக்கோட்டை 19ஆம் நூற்றாண்டில் முழுவடிவம் அடைந்தது.

1985க்கு சற்று முன் கூட இதன் வடிவம் மாறவில்லை. எச்.ஆர். பேட்டின் கணக்குப்படி இக்கோட்டை 1839ல் கட்டப்பட்டிருக்க வேண்டும் - என்றும் இதன் பராமரிப்பை பழைய அரசு கொடுப்பது என்ற வழக்கம் 1843ல் கூட இருந்தது என்றும் தெரிகிறது.

இந்தக் கோட்டையின் உள்பகுதி 22 ஏக்கர் பரப்புடையது. கோட்டைச் சுவர் மூன்றரை மீட்டர் உயரம்; அகலம் ஒன்றரை மீட்டர். மண்கோட்டை; பதனீர் சுண்ணாம்பு கலந்த பூச்சு. மேற்கே ஒன்று கிழக்கே இரண்டு தெற்கே ஒன்று என நான்கு வாசல்கள் இருந்தன. கோட்டையினுள் இருந்த ஆண்களின் பொது அவசியத்திற்கு உரியது மேற்கு வாசல். இங்கே ஒரு நெற்களஞ்சியம் உண்டு.

கிழக்கில் உள்ள இரண்டு வாசல்களில் ஒன்று எப்போதும் அடைக்கப்பட்டிருக்கும். கோட்டைக்குள்ளே வாழ்ந்து இறந்த பெண்ணின் உடலை வெளியே கொண்டு செல்லும் போது மட்டும் இது திறக்கப்படும். மற்ற நேரங்களில் நிரந்தரமாய் அடைக்கப்பட்டிருக்கும். இங்குள்ள இன்னொரு வாசல் வழி கோட்டைக்குள்ளிருக்கும் ஆண்கள் நடந்து வெளியே வரப் பயன்பட்டது.

தெற்கு கோட்டை வாசல்வழி வாகனங்கள் செல்லும். இதுவும் பெரும்பாலும் அடைத்தே இருக்கும். கிழக்கு கோட்டை வாசல் பொதுவானது, இங்குக் காவல் உண்டு. இந்த வாசல் நல்ல செயல்பாட்டில் இருந்தது.

50க்களில் கூட கோட்டையைச் சுற்றி வந்து காவல் காத்தவர்கள் இருந்தார்கள். நடு இரவில் அரிக்கன் லாம்ப் உடன் தடி ஏந்திய காவல்காரர்கள் உஷார் உஷார் என்று சப்தமிட்டுக் கொண்டு கோட்டையைச் சுற்றிவந்த நிகழ்ச்சியை அறிந்தவர்களை 2000ல் கூட சந்தித்தேன்.

ஒருமுறை ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் நிலையத்துக்குச் சென்றபோது (1979 மார்ச் மாதம் 11 ஆம் தேதி) கோட்டையினுள் இருந்த பெண்ணின் திருமணம் நடந்தது. மணப்பெண், கோட்டை கே.எஸ். சண்முக சுந்தரம் அவர்களின் மகள். மாப்பிள்ளை வாலை சண்முகம். இத்திருமணம் கோட்டைக்குள்ளே நடந்தது. ஆனால் வரவேற்பு மேலக்கோட்டை வாசல் தெருவில் நெற்களஞ்சியத்தின் முன் அமைக்கப்பட்ட பந்தலில் நடந்தது.

எச்.ஆர். பேட்டின் குறிப்பின்படி (1913) கோட்டையினுள் வருவாய் அதிகாரிகளோ காவலரோ பொது சுகாதாரப் பணியாளர்களோ சென்றதில்லை. அதற்குரிய சூழ்நிலை அப்போது இல்லை. கோட்டைக்குள்ளே நடத்திப் பெற வேண்டிய செய்திகளை கோட்டைப் பிள்ளைகளின் தலைவரே கொடுத்துவிடுவார்.

கோட்டைப் பிள்ளைகள் எல்லோரும் வசதியுடையவர்கள். ஸ்ரீவைகுண்டத்தில் அவர்களுக்கு நிலங்களும் தோட்டங்களும் இருந்தன.

(1911 மக்கள் கணக்கெடுப்பு அறிக்கை) கோட்டைக்குள் ஆண்களும் பெண்களும் 400 பேர்கள் இருக்கிறார்கள். இவர்களில் விதவைப் பெண்கள் 17 பேர்கள். மறுமணம் கிடையாது.

இவர்களிடம் இளவயதுத் திருமணம் நடைமுறையில் இருந்தது. 1911 மக்கள் கணக்கெடுப்பின்படி உள்ள அறிக்கை, இவர்கள் ராமநாதபுரத்திலிருந்து குடிபெயர்ந்தவர்கள். இதை பேட் மேற்கோள் காட்டுகிறார்.

பேட்டின் குறிப்பின்படி - கோட்டை­யினுள் இருக்கும் பெண்களை அந்நியர் பார்க்கக்கூடாது. கோட்டையில் ஒரு பெண் இறந்தால் கோட்டைக்குள்ளேயே இறுதிச்சடங்குகளை நடத்தி முடிப்பர். இறந்த பெண்ணின் பிணத்தைக் கோணிப்பையில் போட்டு, பிணம் தெரியாதபடி கட்டி பாடையில் வைத்து சுமந்து வடக்கு வாசல்வழி வெளியே - கொண்டு வந்து அவர்களுக்கே உரிய சுடுகாட்டில் எரிப்பார்கள். சுடுகாட்டில் சடங்குகள் கிடையாது. நாவிதர்கள் கூட அந்தப் பிணத்தைப் பார்க்க முடியாது என்கிறார் பேட்.

1979-ல் நான் ஸ்ரீவைகுண்டம் ஊரில் கதைப்பாடல் ஒன்றைத் தேடிச்சென்ற போது 300 பேர்கள் கோட்டைக்குள் இருப்பதாகச் சொன்னார்கள். அது 1971 மக்கள் கணக்கெடுப்பு தகவலாக இருக்கலாம். உத்திரகுமாரி என்பவர் 1985ல் நடத்திய களஆய்வில் கோட்டைக்குள் 34 பேர்களே - இருந்ததாகக் குறிப்பிடுகிறார். இவருடைய சேகரிப்பு தகவலின்படி கோட்டைக்குள் இருந்த வீடுகள் 1985க்கு முன்பே பாழடைய ஆரம்பித்துவிட்டன.

கோட்டைக்குள் யாரும் செல்ல முடியாது. மரபுவழியே அறிந்த செய்தி; காவலை விட மரபை ஊர் மக்கள் அறிந்திருந்தனர். ஆண்கள் வெளியே வருவர்; விவசாயம் படிப்பு என எல்லா காரியங்களுக்காகவும் வெளியே வந்தனர். இவர்களிடம் ஆண் பெண் என்ற இடைவெளி அதிகம். பொதுவாக சைவ வேளாளர்கள் பெண்களுக்கு உரிமை இல்லை என்னும் பொதுவிதி இவர்களுக்கும் பொருந்தும்.

கோட்டை பிள்ளைகளிடம் - பெண் எண்ணிக்கை அதிகம். சிலர் இரண்டு மனைவிகளை வைத்திருந்தனர். அறுபதுகளில் இது நடைமுறையிலிருந்தது. இவர்கள் முழுநேர விவசாயிகள். ஒவ்வொரு வீட்டிலும் குதிர் உண்டு. விவசாயக் கருவிகள் உண்டு. 80-க்குப் பின் நிலை மாறியிருக்கிறது.

கோட்டைக்கு வெளியே உள்ள விநாயகர் கோவிலின் கல்வெட்டு ஒன்று இவர்களின் சொத்து தொடர்பான செய்திகளைச் சொல்கிறது என்று கேட்டேன். இந்தக் கல்வெட்டு வெளியானதா என்று தெரியவில்லை. கோட்டைப் பிள்ளைகளில் திருமணம் ஆகாத ஆண் குழந்தையில்லாத விதவை ஆகியோரின் சொத்துகள் கோட்டை மக்களின் பொதுச் சொத்தாகக் கருதப்படும்.

கோட்டைப் பிள்ளைகள் பாண்டிய மன்னர்களின் ஆலோசனையாளர்களாக முடிசூட்டும் நிகழ்வில் பங்குகொண்டவர்களாக இருந்த காலம் ஒன்று இருந்தது. அக்காலத்தில் இவர்களுக்கு நெல்லையப்பர் கோவிலில் சில உரிமைகள் இருந்தன. இக்கோவிலின் உத்திர நட்சத்திரத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடத்த இவர்களுக்கு மான்யம் உண்டு.

அனந்தவர்ம பாண்டியன் என்ற அரசனுக்கு மரியாதை செய்வதாக இது அமைந்தது. இவர் திருநெல்லையப்பர் கோவிலில் ரூ 4ம், 18 பொற்காசுகளும் கூட 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பெற்றிருக்கின்றான்.

கோட்டைக்குள் இருப்பவர்களின் உள் வேலைகளையும் வெளி வேலைகளையும் கவனிப்பதற்காக மரபுவழியாகச் சிலர் இருந்தார்கள். அவர்களில் முக்கியமானவர்கள் கொத்துப்பிள்ளைகள். பொதுவாக குறிப்பிட்ட சில சாதியினருக்கு இன்னொரு சாதியினர் அடிமையாகப் பணிபுரிவது என்ற வழக்கம் இந்திய மரபில் இருந்திருக்கிறது.

ஒரே சாதியில் சில கிளையினர் விலக்கப்பட்டவராகக் கருதப்படுவர், இப்படி விலக்கப்பட்டவர்கள் ‘புழுக்க’ என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுவர். இவர்கள் ஒருவகையில் அடிமைகளே. தங்களுடன் தொடர்புள்ள சாதியினருடன் மணஉறவு வைக்கமுடியாது. ஆனால் பிற தொடர்பை நிலை நாட்டலாம்; உறவு என்று சொல்லிக் கொள்ளலாம்.

கோட்டைப் பிள்ளைமார்களுக்கு குற்றேவல் புரிந்த கொத்துப்பிள்ளைகள் வேளாளரின் ஒரு பிரி­வினர்தாம். இவர்களில் ஆண்கள் கொத்தனார் என்றும் பெண்கள் கொத்தச்சி என்றும் அழைக்கப்பட்டனர்.

இவர்கள் இந்தக் கோட்டையில் நுழையும் உரிமை உடையவர்கள். கோட்டைப் பிள்ளைமார்களின் வாழ்க்கை வட்டச் சடங்குகளில் நல்லது, துக்க நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு பணிபுரிந்தனர். இவர்கள் கோட்டைக்கு வெளியே - மேற்கு பகுதியில் உள்ள இடத்தில் வாழ்ந்தனர். இந்த இடம் 70களில் கூட சுந்தர ராஜ நகர் எனப்பட்டது. இவர்களுக்குக் கூலியாக நெல்லும் பிற பொருட்களும் கொடுக்கப்பட்டன.

ஸ்ரீவைகுண்டத்தில் வாழ்ந்த ஆசாரிக் குடும்பங்களில் சிலர் - கோட்டைக்குள் பணி செய்தனர். இவர்கள் கோட்டைக் கதவு பராமரிப்பு, வீட்டு மராமத்துப்பணி, திருமணத்தன்று கோட்டை கால் நாட்டுதல் ஆகியவற்றைச் செய்தனர். இவர்களைப் போல கட்டுமானத் தொழிலாளர்கள் சிலர் கோட்டை பராமரிப்பையும், கோட்டையினுள் வீட்டுப் பராமரிப்பையும் நிரந்தரமாகச் செய்தனர்.

கோட்டைப்பிள்ளைகளின் வயல்களையும் தோட்டங்களையும் கவனித்த ஆண், பெண் எனச் சிலரும் கோட்டைக்குள் செல்லலாம். இவர்கள் மரபுவழி தொழிலாளர்கள், கோட்டை மக்களுடன் பல காலம் தொழில் ரீதியாய் தொடர்பு வைத்திருந்தவர்கள். குறிப்பிட்ட வண்ணார், நாவிதர் குடும்பத்தினரும் கோட்டைக்குள் சென்றனர். இவர்கள் எல்லோருமே நெல்லும் தேங்காய் என விளைபொருட்களைக் கூலியாகப் பெற்றனர்.

கோட்டைக்குள்ளே இருந்த அழகர் கோவிலில் பூசை செய்த ஒரு பிராமணரும் கோட்டைக்கு வெளியே உள்ள கரிய பெருமாள் கோவிலில் பூசை செய்த பிராமணர் ஒருவரும் கோட்டைக்குள் செல்ல உரிமை உண்டு. இவர்களே கோட்டைப் பிள்ளைகளின் திருமணத்தை நடத்தினர். இவர்களில் கடைசியாகப் புரோகிதம் செய்தவரின் மனைவியின் தங்கை சரஸ்வதியை (வயது 75) 2020ல் சந்தித்து உறவாடியபோது அறுபதுகளில் இறுதியில் கோட்டைக்குள் தன் அத்தானுடன் சென்ற அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டாள்.

கோட்டைப் பிள்ளைமார்களை சைவப்பிள்ளைகளின் உட்பிரிவினர் என்று கூறப்பட்டாலும் இவர்கள் முழுக்கவும் சிவவழிபாடு சார்ந்தவர் அல்லர். இவர்கள் சிவன், விஷ்ணு என இருதெய்வங்களையும் வழிபட்டனர். கோட்டைக்குள் இருந்த அடிகள் கோவில், கோட்டையின் வெளியே உள்ள கரியமாணிக்க பெருமாள் கோவில், கோட்டையை அடுத்த சாகைப் பகுதியில் உள்ள விநாயகர் கோவில் ஆகியவை கோட்டை மக்களுடன் தொடர்புடையவை.

இவர்களிடம் நாட்டார் தெய்வ வழிபாடும் உண்டு. திருமணம் ஆகும் முன் அகால மரணமடைந்த கன்னிக்கு வழிபாடு நடத்துவது என்ற நடைமுறை பிற சமூகங்களிடம் இருப்பது போலவே கோட்டைப் பிள்ளைகளிடமும் உள்ளது.

கோட்டைக்கு வெளியே உள்ள சாகை என்ற இடத்தில் கோட்டைப் பிள்ளைகளின் குருவின் சமாதி உள்ளது. இதைச் சாவடி என்கின்றனர். ஒருகாலத்தில் பயணிகள் தங்குமிடம் இங்கே இருந்திருக்கலாம். இந்தச் சமாதிக்கு சுவாதி நட்சத்திரத்தில் வழிபாடு நடக்கிறது. இந்த வழிபாடுகள் தவிர நல்லாப்பிள்ளை பெத்த அம்மன் என்றும் பெண் தெய்வம் கோட்டை மேல்புற வாசலில் உள்ளது. பத்திரகாளி, உலகம்மன் என்னும் தெய்வங்களின் கோவில்களும் கோட்டைக்கு வெளியே உள்ளன.

கோட்டைக்குள் இருப்பவருக்கு ஒரு தலைவர் உண்டு. முந்திய காலங்களில் தலைவரின் தேர்வு தேர்தல்வழி நடந்தது. 1970க்குப் பின் இந்த முறை நின்றது. பின்னர் வயதில் - மூத்தவர் தலைவராக அங்கீகரிக்கப்பட்டார். நிர்வாக வேலைகளைக் கவனிப்பதற்கு தனியான பொதுக் கட்டிடம் உண்டு.

தலைவராயிருப்பவர் கோட்டை மதிலைப் பராமரிப்பது, கோட்டைக் காவலர்களுக்குச் சம்பளம் கொடுப்பது, வேலை எடுப்பிப்பது, கோட்டையினருக்குச் சொந்தமாக உள்ள கோவில்களை மேற்பார்வை செய்வது போன்ற வேலைகளைக் கவனித்தனர்.

கோட்டைப் பிள்ளைகளின் வாழ்க்கை வட்டச் சடங்குகள் பெரும்பாலும் பிற சைவ வேளாளர்களின் சடங்குகளைப் போலவே நடந்தது. பெண் கோட்டைக்கு வெளியே வருவதில்லை. அதனால், மகப்பேறு கோட்டையிலே நடந்தது. திருமணத்திற்குப் பின் மாப்பிள்ளை பெண் வீட்டிலேயே தங்குவது என்ற ஒரு வழக்கம் இருந்தது. இது 70-களில் மாற ஆரம்பித்தது.

சீமந்தச் சடங்குகளில் அத்திக்காய் ஆலங்காய் பிழிதல் என்ற ஒரு சடங்கு உண்டு. இது வித்தியாசமானது. அத்திக்காய் ஆலங்காய் இரண்டையும் கன்னிப்பெண்கள் கல்லால் நசுக்குவர். அப்போ ஆண்பிள்ளை ஆண் பிள்ளை எனச் சப்தமிடுவர். பின் நசுக்கிய காய்களை மாப்பிள்ளையின் கையில் கொடுப்பர். அவர் கர்ப்பிணி மனைவியின் - கழுத்து மார்பு என்றும் உறுப்புகளில் பிழிந்து விடுவர்.

பெற்ற குழந்தைக்குக் கருப்புக்கட்டி, விளக்கெண்ணெய் இரண்டையும் கலந்து (சேனை) நாக்கில் தடவுவது வழக்கம். குழந்தையைப் பார்க்க வருகின்றவர்கள் சிறிய ஓலைப் பெட்டியில் நெல்லை நிறைத்துக் கொண்டு வருவர். இவர்களிடம் உருமாக்கட்டு என்ற சடங்கு உண்டு; ஆனால் மாப்பிள்ளையின் அம்மா மட்டும் கட்டுவார்.

என் நண்பன் ஈஸ்வரனின் மனைவி சரஸ்வதி ஸ்ரீவைகுண்டம் ஊரைச் சார்ந்தவர், கோட்டைப் பிள்ளைகளுக்குப் புரோகிதம் செய்த கடைசித் தலைமுறையினர் என்பவரின் மைத்துனி. சரஸ்வதி பி.எஸ்.ஸி வேதியியல் படித்தவர். அஞ்சல் அலுவலக தலைமை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். அவர் 60களின் இறுதியில் கோட்டைப் பிள்ளைமார்களின் பெண்களுக்குப் பாடம் நடத்தியவர். இவரது அக்காவுடன் சென்றிருக்கிறார். அக்கா பள்ளி ஆசிரியை.

கோட்டையிலிருந்த பெண்கள் முறைப்படி பள்ளியில் படிக்கவில்லையே தவிர தமிழ், ஆங்கிலம், கணக்கு என தேவையான அளவுக்கு அறிந்திருக்கின்றனர். சரஸ்வதி பழைய நினைவுகளைக் கிளறும்போது “கோட்டைப் பிள்ளைகளின் பெண்கள் பெருந்தன்மையானவர்கள் அன்பானவர்கள். தயாள குணமுடையவர்கள்” என்றார்.

கோட்டையின் வீழ்ச்சி ஒரு கொலையின் காரணமாக ஆரம்பமானது. 1972-73ல் இந்த நிகழ்ச்சி நடந்திருக்கலாம். கோட்டை பிள்ளைகளில் சண்முக சுந்தர ராஜா என்பவர் அப்போது ஒரு அரசியல் கட்சியில் முக்கிய பிரமுகராக செல்வாக்குடையவராக விளங்கினார். அவர் பிரபலமாயிருந்தது கட்சி வட்டாரங்களில் சிலருக்கு அதிருப்தியாக இருந்தது.

ஒரு நாள் கோட்டைக்கு வெளியே ஜாகை பகுதியில் விநாயகர் கோவிலில் தனியே அமர்ந்து இருந்தபோது அடையாளம் தெரியாத சிலரால் கொலை செய்யப்பட்டார். அது காலை நேரம். செய்தி பரவியது. சுந்தர ராஜாவின் பங்காளிகளே இதற்குக் காரணம் என்று - சந்தேகித்த போலீஸ் கோட்டைக்குள் புகுந்தனர். ஒன்று ரெண்டு பேரை கைது செய்தனர். இந்த நேரத்தில் ஊர் மக்களில் பலர் வேடிக்கை பார்க்க கோட்டைக்குள் நுழைந்து விட்டனர்.

முன்னூறு ஆண்டுகளாகக் கட்டிக்காக்கப்பட்ட மரபும் மரியாதையும் உடைந்தது. கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டபின்பு யாரும் கோட்டைக்குள் இருக்க விரும்பவில்லை. படிப்படியாக எல்லோரும் வெளியேறினர்.

1985க்குப்பின் கோட்டைக்குள்ளிருந்தவர் எல்லோரும் வெளியேறி விட்டனர். திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் குடியேறினர். அவர்களின் அடையாளம் வேளாளர்களின் சாதியுடன் மட்டுமே இணைந்தது. கோட்டை அரசுப் பேருந்து டிப்போவாக, பிஎஸ்என்எல் அலுவலகமாக இன்னும் பலவாக மாறிவிட்டது.

- அ.கா.பெருமாள்