punishment in ancient indiaஇன்றைய நீதி அமைப்பில் உரிமையியல் (சிவில்), குற்றவியல் (கிரிமினல்) என்ற இரு பெரும் பிரிவுகளின் கீழ் வழக்குகள் ஆராயப்பட்டுத் தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. சொத்துரிமை, கடன்கோடல், மண உறவு, போன்றவை உரிமையியல் சட்டம் சார்ந்தும் களவு, கொள்ளை, வன்முறை, கொலை, பாலியல் என்பவை குற்றவியல் சட்டம் சார்ந்தும் ஆராயப்பட்டுத் தீர்ப்பு வழங்கப்படுகின்றது. மன்னர் ஆட்சிக்காலத்திலும் நீதிவழங்கல் என்ற பெயரில் இவை நடந்துள்ளன. குற்றவிசாரணையும் தீர்ப்பு வழங்கலும் தொன்மையான ஒன்றாக வரலாற்றில் இடம் பெற்றுள்ளன. இன்று நடைமுறையில் இருப்பது போன்று எழுத்துவடிவிலான சட்டங்கள் மன்னர் ஆட்சியிலும் இருந்துள்னன. பாபிலோனை ஆண்ட ஹேமுமுராபி என்ற மன்னன் (கி.மு1792-1750) தான் உருவாக்கிய சட்டங்களைக் கல்வெட்டுகளில் பொறித்து வைத்துள்ளான். இந்தியாவில் ஸ்மிருதிகள் என்ற பெயரிலான வடமொழி நூல்கள் பெரும்பாலும் சட்டநூல்களாகவே உள்ளன. வழக்குகளை ஆராயும் அவையத்தார், அவைக்களத்தார் என்போர் குறித்தும் அவை என்ற பெயரிலான நீதி வழங்கும் அமைப்பு குறித்தும் சங்க இலக்கியங்கள் பதிவிட்டுள்ளன.

இருப்பினும் இன்றைய நீதி அமைப்பு கடந்தகால வரலாற்றில் இடம் பெற்றுள்ள நீதி முறையைவிட வளர்ச்சி பெற்ற ஒன்று. எழுத்து வடிவிலான சட்டங்களாக மட்டுமின்றி மனித மாண்பைச் சிதைக்காத தன்மைத்தாய் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை இவை இன்று கொண்டுள்ளன.(சில நேரங்களில் இவை பொய்த்துப் போவதும் உண்டு).

ஆனால் மன்னர் ஆட்சிக்காலச் சட்டங்கள் மன்னர்களின் விருப்பு வெறுப்பைச் சார்ந்து அமைந்தன. அத்துடன் தனிமனிதனின் மாண்பைச் சிதைக்கும் தன்மையைக் கொண்டிருந்தன. இதில். சோதனை வழி (ordeal) ஓருவன் குற்றமிழைத்தவனா என்பதைக் கண்டறிதலும் குற்றம் இழைத்தவன் என்று உறுதி செய்யப்பட்டவனை சித்திரவதைக்கு (Torture) ஆளாக்குதலும் முக்கிய இடத்தைப் பெற்றிருந்தன. இவை இரண்டும் குற்றச்சாட்டிற்கு ஆளான மனிதனின் உடல் மீதான வன்முறையாக அமைந்ததுடன் அவனை உடல் ஊனமுற்றவனாக்கின. சில நேரங்களில் அவனது உயிரைப் போக்கவும் செய்தன.

சோதனைவழி உண்மையறிதல்:

குற்றச் செயல் ஒன்றைச் செய்ததாக ஐயப்பாட்டிற்கு ஆளாகும் ஒருவரோ ஒருத்தியோ கடுமையான துயரை விளைவிக்கும் உடல் வன்முறைக்கு ஆட்படுதலே சோதனைவழி உண்மையறிதலின் போது நிகழும். இது உலகளாவிய நடைமுறையாக இருந்துள்ளது.தர்மசாஸ்திரங்கள் என்ற பெயரில் வடமொழியில் இடம் பெற்றுள்ள அறநூல்கள் இதைக் குறிப்பிட்டுள்ளன. அர்த்தசாஸ்திரம், மனுதர்மசாஸ்திரம் என்பன இது குறித்த பதிவுகளைக் கொண்டுள்ளன. நெருப்பில் மூழ்கி சீதை தன் கற்பை உறுதிப்படுத்திய நிகழ்வு இராமாயணக் காவியத்தில் இடம் பெற்றுள்ளது. சிக்கலானதும் ஐயப்பாட்டிற்கு உரியதுமான வழக்குகளில் இம்முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. ஸ்மிருதி என்ற பெயரிலான வடமொழிச் சட்ட நூல்களிலும் இது குறிப்பிடப்பட்டுள்ளது. இவை எல்லாம் இதன் தொன்மையைக் குறிப்பிடுகின்றன.

சோதனை முறைகள் பல திறத்தன. நெருப்பு, நீர், துலாக்கோல், நஞ்சு, கடவுளரின் படிமத்தை நீராட்டிய நீர், தீட்டாத அரிசி, சூடாக்கப்பட்ட துண்டு நாணயம், மற்றும் ஏரின் கொழு, தர்ம அதர்மத்தின் படிமங்கள் என்பனவற்றில் ஒன்றின் துணையுடன் சோதித்தறிதல் நிகழ்த்தப்படும். இது நிகழும் முறை குறித்து நூலசிரியர் விளக்கமாக எழுதியுள்ளார்.இதையடுத்து எத்தகைய சூழல்களில் நீதியைக் கண்டறிய சோதித்தறிதல் முறை பின்பற்றப்படும் என்பதனையும், இதைப் பின்பற்றுவது தொடர்பான வரையறைகளையும் நாரதர், பிரகஸ்பதி,விஷ்ணு பிதாமகர் என்போரின் வடமொழி நூல்களின் துணையுடன் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் இம்முறை வழக்கில் இருந்தமை குறித்து கல்வெட்டுக்கள், அய்ரோப்பிய நாடுகளில் இருந்து இங்கு வந்த கிறித்தவ சமயப் பணியாளர்களின் பதிவுகளின் துணையுடன் சில நிகழ்வுகளை எடுத்துக் காட்டியுள்ளார். இறுதியாக சோதனைவழி உண்மையறிதல் தொடர்பான சில நடைமுறைகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். இவரது மதிப்பீட்டின்படி, கடவுள் ஆற்றல் குறித்த நம்பிக்கையும், சாதிவேறுபாடும் சோதனை முறையில் நீதி வழங்குவதில் முக்கிய பங்கு வகித்துள்ளன. உண்மையைக் கண்டறிவதற்கான ஓரு வகையான சித்திரவதை முறையாகவே சோதனை முறை இருந்துள்ளது.

சித்திரவதை:

குற்றச்சாட்டிற்கு ஆளானவர் குற்றவாளி என்று முடிவு செய்யப்பட்டால் அவருக்கு விதிக்கப்படும் தண்டனை முறைகளில் ஒன்றே சித்திரவதை. இது அவரது உடல்மீது நிகழ்த்தப்படும் வன்முறை ஆகும். பணத் தண்டம் விதித்தல், சொத்துப் பறிமுதல், சிறைத் தண்டனை என்பன உடலை வருத்தாத நிலையில் உடலை வருத்தும் தண்டனையாக சித்திரவதை அமைந்தது. இது குறித்த பதிவுகள் வடமொழி தர்ம சாஸ்திரங்களிலும் அர்த்த சாஸ்திரத்திலும் இடம் பெற்றுள்ளன. சங்க இலக்கியங்களிலும் சில பதிவுகள் காணப்படுகின்றன.

உடல் உறுப்பைத் துண்டித்தல், சாட்டையால் அடித்தல், காய்ச்சிய ஈயம், எண்ணெய் ஆகியனவற்றைக் காதில் அல்லது வாயில் ஊற்றுதல், கல்லைக் கட்டி நீரில் போடுதல், நெருப்பில் போடுதல் என்பன சித்திரவதை சார்ந்த தண்டனை முறைகளாக இருந்துள்ளன. இத் தண்டனை வழங்குவதற்குக் காரணமாக அமைந்த குற்றச் செயல்கள் சில, சாதியை அடிப்படையாகக் கொண்டிருந்தன என்பதையும், மூக்கு, காது, கைவிரல்கள், கை என்பன துண்டிக்கப்படும் உறுப்புகளாக அமைந்தன என்பதையும் வெளிப்படுத்தி உள்ளார்.

நூலும் நூலாசிரியரும்:

சோதனை முறையில் குற்றச் செயலை உறுதிப் படுத்துதல், தண்டனையாக சித்திரவதைக்கு ஆளாக்குதல் என்பன பத்தொன்பதாம் நூற்றாண்டுக் காலத் தமிழகத்தில் ஆங்கிலக் காலனிய ஆட்சியின் போது எவ்வாறு செயற்பட்டன என்பதை இந்நூல் எடுத்துரைக்கிறது, தம் முனைவர் பட்டத்திற்காக இந்நூலாசிரியர் மேற்கொண்ட ஆய்வே தற்போது இந் நூலாக வெளிவந்துள்ளது. இந் நூலின் ஆய்வுக் காலத்தை ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சிபுரிந்த காலம் (1801-1857) இங்கிலாந்து பாராளுமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் இருந்த காலம் (1858-1900) என ஆசிரியர் இரண்டாகப் பகுத்துக் கொண்டுள்ளார்.

உண்மையான வரலாற்றின் மீது ஆர்வம் கொண்டோர் வருத்தத்துடன் குறிப்பிடுவதற்கேற்ப நமது வரலாற்று வரைவுகள் அரசியல் வரலாறாகவே பெரும்பாலும் அமைகின்றன. இருப்பினும் குற்றச் செயல்கள் மற்றும் காவல்துறை சார்ந்த சமூக வரலாற்று நூல்கள் அவ்வப்போது வெளிவருவதும் நிகழ்கிறது. ஆனந்தி எழுதிய பண்டையத் தமிழ்ச் சமூகத்தில் குற்றமும் தண்டனையும், டேவிட் ஆர்னால்டின் காவல்துறையும் காலனிய ஆட்சியும், ஜெகதீசனின் சென்னை மாநிலத்தில் சட்டமும் ஒழுங்கும் (1850-1880) என்ற நூல்கள் இவ் வகையில் குறிப்பிடத் தக்கவை. இவ்வரிசையில் இந்நூலும் இணைந்துள்ளது. மதுரை நகரில் செயல்படும் டோக் பெருமாட்டி மகளிர் கல்லூரியின் வரலாற்றுத் துறையில் உதவிப் பேராசிரியராக இந்நூலாசிரியர் பணியாற்றி வருகிறார். இச் சுருக்கமான அறிமுகத்துடன் நூல் நுவலும் செய்திகளைக் காண்போம்.

சென்னை மாநிலம்:

பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் தொடங்கி பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையிலான காலத்தில் அன்றைய சென்னை மாநிலத்தை ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி உருவாக்கியது. தமிழ் நாட்டின் முன்னாள் பாளையக்காரர்களும் திப்பு சுல்தான், ஹைதராபாத் நிஜாம் ஆகிய மன்னர்களும் ஆட்சி புரிந்த நிலப்பகுதிகள் படிப்படியாக ஒன்றிணைக்கப் பட்டு இம்மாநிலம் உருவானது. இதன் பின்னர் வட்டார ஆட்சியாளர்களாக விளங்கியோரிடமிருந்து காவல் உரிமை, நீதிவழங்கும் உரிமை என்பனவற்றைப் பறித்தது. நிலவரி வாங்குதல், காவல், நீதிவழங்கல் என்பனவற்றை மையமாகக் கொண்ட தனித் தனி துறைகளை உருவக்கியது. இவ்வாறு உருவாக்கப்பட்ட இத்துறைகளில் வருவாய்த் துறையும் காவல்துறையும் ஆ.கி. கம்பெனி அரசின் இன்றியமையாத் துறைகளாக விளங்கின. நிலவுடைமையளர்களிடம் இருந்தும் கைவினைஞர்களிடமிருந்தும் வரி வாங்கும் பணியில் வருவாய்த்துறை ஈடுபட்டது. இப்பணியில் சித்திரவதை முறைகளை வெளிப்படையாக மேற்கொள்ளும் உரிமை அதற்கு வழங்கப்பட்டிருந்தது (நிலவரி செலுத்தாமைக்காக ஒரு குடியானவர் மீதான இத்தகைய சித்திரவதை நிகழ்வை காரல் மார்க்ஸ் On India என்ற தமது நூலில் மேற்கோளாகக் காட்டியுள்ளார்).

காவல்துறை சட்ட ஒழுங்கைப் பராமரிக்கும் பணியில் ஈடுபடும் போது குற்றம் சாட்டப்பட்டவரிடம் இருந்து ஒப்புதல் வாக்குமூலம் பெற சோதனை முறைகளைப் பயன்படுத்தியது. குற்றவாளிகள் என்று முடிவு செய்யப்பட்டவர் மீது வன்முறையான சித்திரவதைகளைப் பயன்படுத்தியது. நீதி மன்றங்களும் சித்திரவதை சார்ந்த உடலை வருத்தும் தண்டனைகளை வழங்கின. அசைய முடியாது கட்டிவைத்து முதுகில் சவுக்கால் அடித்தல், குனியவைத்து முதுகில் கல்லைச் சுமக்கும்படிச் செய்தல், நீண்டநேரம் வெயிலில் நிற்கும்படிச் செய்தல், தனிமைச் சிறையில் அடைத்தல், நாடு கடத்துதல் என்பன பரவலாக அறியப்பட்ட சித்திரவதை சார்ந்த தண்டனைகளாக இருந்தன. இவை தவிர பல்வேறு சித்திரவதை முறைகள் வழக்கில் இருந்தன. தனிப்பட்ட பகை உணர்வைத் தீர்க்கும் வழிமுறையாகவும் இவை பயன்படுத்தப் பட்டன.

இத்தகைய சோதித்தறிதல் முறைகளும் சித்திரவதை முறைகளும் கி.கம்பெனி ஆட்சியின் மீது மக்களிடையே வெறுப்பை உருவாக்கின. இது இங்கிலாந்து பாராளுமன்றத்தின் பார்வைக்கும் சென்றது. இதன் விளைவாக அரசு ஊழியர்களால் நிகழ்த்தப்படும் சித்திரவதைகள் குறித்து ஆராய விசாரணை ஆணையம் ஒன்று நிறுவப்பட்டது.

1854 செப்டம்பர் 19 இல் நிறுவப்பட்ட இந்த ஆணையம் (Torture Commission) சென்னை மாநிலத்தில் வருவாய்த்துறையும் காவல் துறையும் மேற்கொண்ட சித்திரவதைகள் குறித்து ஆராய்வதைத் தன் நோக்கமாகக் கொண்டிருந்தது.

ஆணையத்தின் பணி:

ஆணையத்தின் உறுப்பினர்களாகப் பின்வருவோர் நியமிக்கப்பட்டனர்.(1)எட்வர்ட் எஃப் எலியட். இவர் இங்கிலாந்து இராணுவத்தில் அதிகாரியாகவும், சென்னையில் செயல்பட்ட சிறு வழக்கு நீதிமன்றத்தில் (Small-Cause Court) நீதிபதியாகவும் பணியாற்றியவர்.(2)ஜெ.பி.நாரட்டன். இவர் இங்கிலாந்தில் சட்டம் பயின்ற வழக்கறிஞர்(பாரிஸ்டர்). சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞராகவும், உள்ளூர்ப் பத்திரிகைகளின் கட்டுப்பாட்டு அதிகாரியாகவும் செயல்பட்டு வந்தார்.(3)எச்.ஸடோக்ஸ். சென்னை மாநிலத்தில் அறிமுகமான இரயத்துவஈரி நில உரிமை முறையின் தீவிர ஆதரவாளர்.சித்திரவதை தொடர்பான நிகழ்வுகளை ஆராய்வது இவர்களின் பணியாக அமைந்தது.சென்னையில் தற்காலிகமாக அமைந்த இதன் அலுவலகத்தில் வாரம் ஒருநாள் சித்திரவதைக்கு ஆளானோரிடம் இருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டதுடன் விசாரணையும் நடத்தியது.

Ordeal and Tortureவிசாரணையின் போது சித்திரவதைகளுக்கு ஆளான ஆண்களும் பெண்களும் தாம் அடைந்த கொடுமைகளை சாட்சியமாக ஆணையத்திடம், வழங்கினர். இதனால் எத்தகைய கொடூரமான தண்டனை முறைகளுக்கு மக்கள் ஆளாகி வந்துள்ளார்கள் என்ற உண்மை தெரியவந்தது. சித்திரவதை ஆணையம் இவற்றை எல்லாம் 1855 இல் வெளியிட்ட தன் அறிக்கையில் பதிவு செய்துள்ளது. அவற்றுள் சில வருமாறு:

  • செம்மிளகு அல்லது மிளகாயை கண்ணில்,மூக்கில் அல்லது பிறப்புறுப்பில் தேய்த்தல்.
  • தொப்புளில் பூச்சி ஒன்றை துணி அல்லது தேங்காய்ச் சிரட்டையால் மூடிக் கட்டிவைத்தல்.
  • கழுத்தளவு சேற்றில் புதைத்து வைத்தல். கிணற்றில் நீர் இறைக்கப் பயன்படும் துலாவின் முன்பகுதியில் கட்டி மூக்கிற்கு ஒரு அங்குல இடைவெளி இருக்கும்படி கிணற்றில் முக்குதல்.
  • தலை மயிரை அல்லது மீசையில் உள்ள மயிரைக் கையால் பிடுங்கி எடுத்தல்.
  • சூடு போடுதல்.
  • அமிலத் தன்மை கொண்ட முந்திரிப் பழச்சாறை கண்ணில் ஊற்றுதல்.
  • மணல் அல்லது புழுதியின் மீது வெயிலில் நிறுத்திவைத்தல். உணவும் தண்ணீரும் வழங்காமை என்பன வரி செலுத்தாதவர் மீதான தண்டனைகளாக இருந்தன.

இவை தவிர தமிழகத்தில் நிலவிய சாதிவேறுபாட்டையும் உளவியல் சார்ந்த துன்புறுத்தலுக்கு பயன்படுத்தியுள்ளார்கள். இதன்படி உயர்சாதியாகக் கருதப்படும் மனிதனைக் குனியவைத்து அவன் முதுகில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவராகக் கருதப்பட்ட ஒருவரை அமரச்செய்வது, அல்லது ஒரே அறையில் அடைத்து வைப்பது என்பதைக் கடைப்பிடித்துள்ளார்கள்.

கிட்டியும் அண்ணாந்தாளும்:

கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியில் பரவலாக நடைமுறையில் இருந்த சித்திரவதை முறைகள் கிட்டி(கிட்டி போடுதல்) அண்ணாந்தாள் (அண்ணாந்தாள் போடுதல்) என்பனவாகும்.

கிட்டி போடும் தண்டனைக்கு ஒருவரை ஆட்படுத்துவது துணைக் குற்றவியல் நீதிபதியின் ஆணைக்கு உட்பட்டே நிகழும். அவர் ஆணை பிறப்பித்த பின்னர் பணியாற்றும் குற்றவியல் நீதிபதியால் அது உறுதி செய்யப்படவேண்டும். ஏன் எனில் வருவாய்த்துறையில் பணிபுரியும் கீழ்நிலை அதிகாரிகள் முன் அனுமதி பெறாது கிட்டிபோடுதல் வாயிலாக வரி வாங்குதலை மேற்கொள்வதுண்டு. எனவே குரூரமான, மனிதத் தன்மையற்ற இத் தண்டனையை குற்றவியல் நீதிபதிகள் ஆராயவேண்டிய அவசியம் இருந்தது.

கிட்டி என்பது மரத்தால் செய்யப்பட்ட இடுக்கி போன்ற ஒரு தண்டனைக் கருவி. எலுமிச்சையில் இருந்து சாறு பிழியப் பயன்படுத்தும் கருவியை ஒத்தது. முறுக்குக்கோல் என்றும் சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ் லெக்சிகன் ((volume ll part l)) குறிப்பிடுகிறது. ‘Clamps used to press hands feet , etc in torture’ என்றும் விளக்கம் தருகிறது. அத்துடன் ‘கையுந் தாள்களும் கிட்டியார்த்தார்' என்ற திருவிளையாடல் புராண வரிகளையும் மேற்கோளாகச் (நரிபரியாக்கிய படலம் செய்யுள்: 9) சுட்டுகிறது. எனவே ஆங்கிலேயர் வருகைக்கு முன்பே வழக்கில் இருந்த கருவி என்று கருதமுடியும். இத்தண்டனை முறையானது தஞ்சை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பெரிதும் வழக்கில் இருந்ததாக இவ் ஆணையத்தின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

இதை வருவாய்த்துறையின் கடைநிலை ஊழியர்கள் கையாள்வர். இக் கருவியின் துணையால் கைவிரல்கள் பின்னோக்கி வளைக்கப்படும். காவிரிச் சமவெளியின் பெருநிலக்கிழார்கள் தம்மிடம் பணிபுரியும் பெண் பண்ணையாட்களின் மார்பகங்களை இக் கருவியால் நசுக்கும் தண்டனையை வழங்கியுள்ளார்கள்.

தமிழ்நாட்டின் பாரம்பரியச் சித்திரவதைகளில் ஓன்று அண்ணாந்தாள். இதை ஆங்கிலேயர்களும் பின்பற்றியுள்ளனர். இத் தண்டனை வழங்க கயிறு மட்டும் போதும். மேலே குறிப்பிட்ட சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ் லெக்சிகனில் இது குறித்தக் குறிப்பு இடம் பெற்றுள்ளது. தண்டனைக்கு ஆட்படுபவரைக் குனியவைத்து அவரது கழுத்தைக் கயிறால் தளர்ச்சியாகச் சுற்றி கயிறின் இரு முனைகளில் ஒரு முனையை ஒருகாலின் கட்டை விரலிலும் மற்றொரு முனையை மற்றொரு காலின் கட்டைவிரலிலும் கட்டிவிடுவர். இதனால் அவரால் நிமிரமுடியாது. குனிந்த நிலையிலேயே இருக்க வேண்டும். நிமிர முயன்றால் கழுத்தைச் சுற்றியுள்ள கயிறு கழுத்தை இறுக்கும். குனிந்த நிலையில் இருக்கும் அவரது முதுகில் ஒரு கல் வைக்கப்படும் என்று உ.வே.சாமிநாதையர்(1991:146) தமது கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விரு தண்டனை முறைகளையும் குறிப்பிடும் நூலாசிரியர் மரத்தால் செய்யப்பட்ட சட்டகத்திற்குள் கால், கை ஆகிய உறுப்புக்களை வைத்து சட்டகத்தை இறுக்குதல் என்ற தண்டனை முறை இருந்ததையும் குறிப்பிட்டுள்ளார் (மதுரை நாயக்கர் ஆட்சிக் காலத்தில் இது ‘குட்டையில் போடுதல்’ என்ற பெயரில் வழக்கில் இருந்துள்ளதை முக்கூடற் பள்ளு என்ற சிற்றிலக்கியம் குறிப்பிடுகிறது). அத்துடன் பல்வேறு வகையான சித்திரவதைகளுக்கு ஆளானவர்கள் அளித்த வாக்குமூலங்களையும் எடுத்துக் காட்டியுள்ளார்.

1855 செப்டம்பரில் வெளியான இந்த அறிக்கை சித்திரவதைகளைக் குறிப்பிட்டாலும் இதற்குக் காரணமான வரிக் கொடுமை குறித்தும் அதைத் தடுப்பது குறித்தும் குறிப்பிடவில்லை. சென்னை மாநிலத்தின் ஆளுநராக இருந்த ஹாரிஸ் சித்திரவதைகள் குறித்த கவலையை வெளிப்படுத்தினார். வருவாய்த் துறையின் அதிகாரத்தையும் காவல் துறையின் அதிகாரத்தையும் தனித் தனியாகப் பிரிக்கவேண்டும் என்ற ஆணையத்தின் பரிந்துரையை மாநில அரசு ஏற்றுக் கொண்டது. வேலைப்பளு போதுமான கண்காணிப்பு இல்லாமை என்பன இதற்குக் காரணம் என்ற முடிவுக்கு கம்பெனியின் இயக்குநர் குழு வந்தது.

கிளர்ச்சிகளை அடக்குதலும், வரி செலுத்துதலை முறைப்படுத்தலும் கம்பெனியின் நோக்கமாக இருந்தமையால் சோதித்தறிதல் வழிக் குற்றங்களைக் கண்டறிதல், சித்திரவதைகள் என்பனவற்றின் துணையுடன் அதை நிறைவேற்றிக் கொண்டார்கள் என்பது நூலாசிரியரின் கருத்தாக உள்ளது. இவற்றை நடைமுறைப்படுத்துவதில் சாதி ஒரு தடையாக இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில் அப்பாவிகள் மீதான துன்புறுத்தலில் கீழ் நிலை மக்களுடன் ஒப்பிடும் போது மேல்நிலை சாதியினர் மீதான பாதிப்பு குறைவானது என்றும் குறிப்பிடுகிறார்.வரி வாங்குதல் அவர்கள் கையில் இருந்ததே இதற்குக் காரணம் என்பது அவரது கருத்தாக உள்ளது.அத்துடன் கல்வியறிவு பெற்றவர்களாகவும் சமூகத்தில் முக்கிய இடத்தைப் பெற்றவர்களாக இருந்ததையும் அவர் சுட்டிக் காட்டுகிறார்.

இங்கிலாந்தின் நேரடி ஆட்சி:

1857 இல் வட இந்தியாவில் நிகழ்ந்த சிப்பாய் எழுச்சியை அடுத்து கிழக்கிந்தியக் கம்பெனியின் பொறுப்பில் இருந்த இந்திய ஆட்சி உரிமை பறிக்கப்பட்டு இங்கிலாந்து பாராளுமன்றத்தின் கட்டுப்பாட்டிற்குள் சென்றது. 1858 நவம்பர் ஒன்றாம் நாளன்று அப்போதைய இங்கிலாந்தின் பேரரசியாக இருந்த விக்டோரியா ராணி அறிக்கை ஒன்றின் வழி இதை வெளிப்படுத்தினார். இந்திய அரசுச் சட்டம் என்ற பெயரில் சட்டம் ஒன்று இங்கிலாந்தின் பாராளுமன்றத்தில் இதன் பொருட்டு நிறைவேற்றப்பட்டது. இந் நிகழ்வில் இருந்து தொடங்கி இந் நூற்றாண்டு முடிவு வரையிலான காலத்தில்(1858-1900) சோதித்தறிதல் முறையில் குற்றம் கண்டறிதலும், சித்திரவதை முறையும் இந்தியாவில் எவ்வாறு செயல்பட்டன என்பதையும் அடுத்து ஆராய்ந்துள்ளார்.

புதிய ஆட்சியில் குற்றத்தடுப்பை நோக்கமாகக் கொண்டு சில சட்டங்கள் அறிமுகமாயின. இவற்றை உருவாக்கும் போது சித்திரவதை தொடர்பான முந்தைய ஆணையத்தின் கருத்துக்கள் உள்வாங்கிக் கொள்ளப்பட்டன. இந்திய காவல் துறைச் சட்டம் ஒன்றும் 1861 இல் உருவானது. இதன்படி நிர்வாகப் பொறுப்புகளில் இருந்து இந்தியர்கள் விடுவிக்கப்பட்டு ஐரோப்பிய அதிகாரிகளின் மேற்பார்வை வலுப்பெற்றது.

குற்றப்பரம்பரையினர் பட்டியல் உருவாக்கம்

குற்றச் செயல்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில் ஆங்கிலேயர்கள் மேற்கொண்ட முயற்சியில் ஒன்றாக குற்றப்பரம்பரையினர் பட்டியல் ஒன்றை உருவாக்கி அதில் மக்கள் பிரிவினர் சிலரை இணைத்தமை அமைந்தது. அரசின் புள்ளிவிவரக்கணக்கின் அடிப்படையில் அப்போதைய தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்கள் குற்றச் செயல்கள் அதிகமாக நிகழும் மாவட்டங்களாகக் கருதப்பட்டன. காட்டுப் பகுதியில் வாழும் சில சாதியினர், வீடுகளை உடைத்தல், கொள்ளை, கால்நடைகளைக் கவர்தல், திருட்டு, வழிப்பறி அகிய குற்றச் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபடுவோராக இருந்தனர். இவர்கள் மீது தவறான எண்ணம் கொண்டிருந்த ஆதிக்கசாதி நிலக்கிழார்களும் ஆங்கிலேயர்களும் குற்றச் செயல்களில் ஈடுபடுதலே இவர்களின் தொழில் என்ற தவறான முடிவுக்கு வந்தனர். இச்செயல்களில் இவர்கள் ஈடுபடுவதற்கான சமூகக்காரணங்களைக் கண்டறிவதில் அவர்கள் அக்கறை காட்டவில்லை. இச் சமூகங்களின் பின்னடைவுக்கான உண்மையான சமூக வரலாற்றுக் காரணங்களை இந்நூலாசிரியர் விரிவாகப் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத் தக்கது. ஆனால் ஆங்கில அரசோ இவற்றைப் பற்றியெல்லாம் ஆராயாது குற்றச்செயல் இவர்களது பிறவிக்குணம் என்று அடையாளப்படுத்தியதுடன் கடுமையாக நடத்தியது.

பிற தண்டனைகள்

ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சி மறைந்தாலும் அவர்கள் ஆட்சியில் நிலவிய தண்டனை முறைகள் புதிய ஆட்சியிலும் தொடர்ந்தன. சான்றாக பிரம்படி அல்லது சவுக்கடி எத்தகைய சூழல்களில் ஒருவருக்குத் தரப்பட வேண்டும் என்ற விதிமுறைகள் நடைமுறையில் இருந்தன. காவல் துறையின் உயர் அதிகாரிகள் சவுக்கடியை ஆதரிப்பவர்களாகவே விளங்கினர். இத்தண்டனை வழங்கப்பட்டது தொடர்பான பத்திரிகைச் செய்திகளையும் ஆவணப் பதிவுகளையும் நூலாசிரியர் எடுத்துக்காட்டாகத் தந்துள்ளார்.

சிறைச் சாலைகளில் கடின உழைப்பிற்கு ஆளாகும் தண்டனைகள் கைதிகளுக்கு வழங்கப்பட்டன. இதன்படி மரம் அறுத்தல், தேங்காய் நார் உரித்தல், கேழ்வரகு, கோதுமை மாவு திரித்தல், சிறிய அளவிலான கொத்து வேலைகள் செய்தல், தண்ணீர் இறைத்தல், சமையல் செய்தல் போன்ற வேலைகளைச் சிறைக்குள் செய்யவேண்டும். சிறைக்கு வெளியே கல்லுடைத்தல், மண்தோண்டுதல். எண்ணெய் பிழிதல் போன்ற கடின வேலைகளை மேற்கொள்ளவேண்டும். இவை எல்லாம் ஆண்களுக்குரியன. பெண் கைதிகளுக்கென்றும் சில தண்டனைகள் உண்டு. அவற்றையும் இந்நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். மொத்தத்தில் சிறைவாசிகள் மேற்கொள்ளவேண்டிய வேலைகள் அனைத்தையும் விரிவாகப் பட்டியலிட்டுள்ளார்.

இவற்றின் தொடர்ச்சியாக காவல் துறையின் ஒடுக்குமுறைகள் குறித்த விரிவான செய்திகள் இடம் பெற்றுள்ளன. வழிப்போக்கர்களிடம் கொள்ளையடித்தல். அவர்களுடன் வரும் பெண் பயணிகள் மீது நடத்தும் பாலியல் வல்லுறவு, கொலை, ஆட்கடத்தல், கையூட்டு, உடல் மீதான வன்முறை, பொய்வழக்குப் போடுதல் எனப் பல்வேறு குற்றச் செயல்களுடன் காவல் துறையினரைத் தொடர்பு படுத்தும் செய்திகளை அரசு ஆவணங்களில் இருந்தும் அக்காலத்தியப் பத்திரிகைச் செய்திகளில் இருந்தும் நூலாசிரியர் சேகரித்துள்ளார்(பக்:135-139).இச் செய்திகளின் அடிப்படையில் ஆங்கில மன்னராட்சியில் காவல் நிலையக் கொடுமைகளும் சிறை வாழ்வும் கடினமானவையாக இருந்துள்ளன என்ற முடிவுக்கு வந்துள்ளார். மொத்தத்தில் கி.கம்பெனியிடம் இருந்து இங்கிலாந்துப் பேரரசுக்கு ஆட்சி மாறினாலும் தமிழ்நாட்டில் நிகழ்ந்துவந்த உடல் மீதான தண்டனைகளில் மாற்றம் எதையும் அது ஏற்படுத்தவில்லை என்பதே நூலாசிரியரின் கருத்தாகவுள்ளது.

நம்மவர்களின் மீதான இழிவான எண்ணமும் கூட ஆங்கிலேயர்களின் வன்முறைச் செயல்களுக்குக் காரணமாக இருந்துள்ளது என்ற கருத்து இந் நூலில் இடம்பெற்றுள்ளது. ஓர் ஆட்டை விடக் கீழானவர்களாகவே அவர்கள் நம்மவர்களைக் கருதி உள்ளார்கள். பிரிட்டிஷ் படைவீர்களால் தமிழர்கள் கொல்லப்படுவதென்பது இயல்பான ஒன்றாகத் தமிழ்நாட்டில் இருந்துள்ளது.தமிழ்நாட்டின் குடிமக்கள் குரூரமானவர்கள் என்றும் எனவே குரூரமான தண்டனைகளால் அவர்களை ஒடுக்கவேண்டும் என்றும் அவர்கள் கருதியுள்ளார்கள். சமூகத்தில் கண்ணியமான மனிதனாக வாழும் எந்த ஒரு மனிதனின் நெஞ்சைப் பிளக்கச் செய்யும் சித்திரவதைத் தண்டனைகளை அவர்கள் தமிழர்களுக்கு வழங்கினார்கள். இதற்குச் சான்றாக எடுத்துக்காட்டுகள் சிலவும் நூலில் இடம் பெற்றுள்ளன. அவை வருமாறு:

‘சல்யூட்’ அடிக்காமைக்காக ஆங்கில அதிகாரிகள் ஒருவரை அடித்துக் கொன்று விட்டார்கள். இச் செயலுக்காக சிறிதளவு பணத் தண்டம் மட்டுமே விதிக்கப்பட்டது. (8 மாரச்1900)

கிருஷ்ணரின் லீலைகளைப் படமாக வரைந்த ஒரு ஓவியருக்குக் குரூரமான தண்டனை ஆங்கில நீதிபதியால் வழங்கப்பட்டது. (15 ஏப்ரல் 1892).

இறுதியாக இத்தகைய தண்டனை முறைகளுக்கு ஆளானவர்கள் தமிழ்ச் சமூகத்தின் எப்பிரிவைச் சார்ந்தவர்கள் என்று அடையாளம் காண முயற்சி செய்துள்ளார். பக்கம் 110 இல் சாதிப் பாகுபாடு இன்றி அனைத்துச் சாதியினரும் கி.கம்பெனியின் உடல் சார்ந்த துன்புறுத்தலுக்கு ஆளாயினர் என்று கூறியுள்ளார் (Caste was not a barrier for infliction of Ordeal and Torture under the rule of the English East India Company,Without discrimination, members of all Caste suffered at the hands of the Company rule in Tamilnadu’.)  நூலின் இறுதிப் பகுதியில் (பக்கம்162) சாதியப் படிநிலையில் அல்லது பொருளியல் நிலையில் கீழ் நிலையில் இருப்போர் மீதே இது நிகழ்த்தப்பட்டது என்கிறார்.

அவர் பயன்படுத்தியுள்ள சான்றுகளின் அடிப்படையில் பார்க்கும்போது கையூட்டும் இதில் பங்கு வகித்துள்ளது என்பதை அறிய முடிகிறது. இதைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் சாதி. பொருளாதாரம் என்ற இரண்டின் தாக்கமும் இதில் இருந்துள்ளமை வெளிப்படுகிறது. எந்த சாதியினர் என்றாலும் கையூட்டு வழங்கி தப்பித்துள்னனர் அல்லது வழங்க இயலாமையால் சித்திரவதைக்கு ஆட்பட்டுள்ளனர் என்ற முடிவுக்கு வர இயலும்.

இந்நூலில் இடம்பெற்றுள்ள சித்திரவதை முறைகள் ஆ.கி. கம்பெனி புதிதாக அறிமுகம் செய்தவை அல்ல. இங்கு அவர்களின் வருகைக்கு முன்னர் ஆட்சி புரிந்தோரால் நடைமுறைப்படுத்தப்பட்டவை என்பதை ஆசிரியர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

சோதனை வழி உண்மை அறிதலும் சித்திரவதை முறைகளும் (19ஆவது நூற்றாண்டுத் தமிழ்நாட்டை முன்வைத்து)

தெ.துர்கா தேவி (2019)

T.Durga Devi (2019) Ordeal and Torture (With Special Reference to Nineteenth Century Tamilnadu)

New Century Book House (P) Ltd Chennai 600 050

- ஆ.சிவசுப்பிரமணியன்