அமெரிக்காவிற்குச் சென்று, தமிழை பிறமொழியினருக்கு அறிமுகம் செய்து உலக அளவில் தமிழ் இலக்கியம் பரவக் காரணமாக இருந்தவர் அ. கி. இராமானுசன்.

இராமானுசன் கர்நாடகா மாநிலம் மைசூரில் 16.03.1929 ஆம் நாள் பிறந்தார். பெற்றோர் கிருட்டினசாமி – சேசம்மா ஆவர். இவரது தந்தை சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். பின்னர், மைசூருக்கு பேராசிரியராகப் பணிபுரியச் சென்றார். மைசூரில் இராமானுசன் பிறந்ததால் கன்னட மொழியை நன்கு பேசவும் எழுதவும் கற்றார்.

A K RAMANUJANமைசூரில் உள்ள மரிமல்லப்பா பள்ளியில் இராமானுசன் பள்ளியிறுதி வகுப்புவரை பயின்றார். பின்னர், யுவராசா கல்லூரியில் சேர்ந்து இண்டர்மீடியட் படிப்பை முடித்தார். தமது இளங்கலை (ஆனர்ஸ்), முதுகலை (ஆங்கில இலக்கியம்) படிப்புகளை மைசூர் மகாராசா கல்லூரியிலும் பயின்றார்.

ஆங்கில விரிவுரையாளராக கொல்லம் கல்லூரியிலும், மதுரை தியாகராயர் கல்லூரியிலும் பணியாற்றினார். பின்னர், பெல்காம் கல்லூரியிலும் சிலகாலம் பணிபுரிந்தார். பரோடா பல்கலைக் கழகத்திலும் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.

இண்டர்மீடியட் படிக்கும் பொழுதே இவர் ஆங்கிலத்திலும், கன்னடத்திலும் கவிதைகளை எழுதினார். ‘இல்லஸ்டிரேட் வீக்கிலி’ உள்ளிட்ட ஆங்கில இதழ்களில் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளன. ஆறு (RIVER) என்னும் தலைப்பில் இவர் எழுதிய பாடல் வகை, ஆற்றைப் பற்றிய அழகியப் படப்பிடிப்பு என இலக்கிய விமர்சகர்கள் கருத்துரைத்துள்ளனர்.

பூனாவில் உள்ள தக்காணப் பல்கலைக் கழகத்தில் மொழியியல் பட்டயம் பெற்றார். பின்னர், 1956 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்குச் சென்றார். ‘புல்பிரைட் ’ நிதி நல்கை வழியாக நிதியுதவி பெற்று அமெரிக்கா சென்றவர், 1963 ஆம் ஆண்டு இந்தியானா பல்கலைக் கழகத்தில் மொழியியலில் முனைவர் பட்டம் பெற்றார். சிக்காக்கோ பல்கலைக் கழகத்தில் 1962 ஆம் ஆண்டு துணைப் பேராசிரியராக பணியில் சேர்ந்தார்.

இராமானுசனின் இலக்கியப் பணியையும், இந்திய நாட்டிற்கு அவர் ஆற்றிய பெருமை மிக்க செயல்களையும் அங்கீகரித்தும், பாராட்டியும் இந்திய அரசு அவருக்கு 1983 ஆம் ஆண்டு ‘தாமரைத்திரு’ (பத்மஸ்ரீ) விருது வழங்கிச் சிறப்பித்தது. ‘ மெக் ஆர்தர் பரிசு‘ பெற்றவர் இவர். ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் கல்லூரிகளுக்கான ‘இராதாகிருட்டினன் நினைவு விருது’ 1988 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

இராமானுசன் கலை மற்றும் அறிவியலுக்கான அமெரிக்க கல்விக் குழுவிற்கு 1990 ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார்.

‘தி. கலெக்ஷன் ஆப் போயம்ஸ்‘ (The Collection of Poems) என்ற இவரது ஆங்கில மொழி பெயர்ப்பு நூலுக்கு 1999 ஆம் ஆண்டு ‘ சாகித்திய அகாதமி விருதி‘ வழங்கப்பட்டது. இந்த விருதை பெற்றுக் கொண்ட அவரது மனைவி முனைவர் மாலிடேனியல்சு பரிசுத் தொகையில் இருபத்தைந்தாயிரம் ரூபாயை, சென்னையில் இயங்கி வரும் ‘ரோசா முத்தையா நூலகத்திற்கு‘ வளர்ச்சி நிதியாக வழங்கினார். மேலும் இராமானுசன் பயன்படுத்திய 2000க்கும் மேற்பட்ட அரிய நூல்களையும் அந்த நூலகத்திற்கு அளித்தார்.

இராமானுசன் ஆங்கில மொழியில் நல்ல பயிற்சியுடையவர். இயல்பிலேயே கவிதை உள்ளம் படைத்தவர். மேலும், மொழிபெயர்ப்பு, மொழியியல், நாட்டுப்புறவியல் உள்ளிட்ட துறைகளிலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர், நமது நாட்டுப்புறவியலை மேல்நாட்டவர்களுக்கு அறிமுகப்படுத்திய பெருமை அ.கி. இராமானுசத்தையேச் சாரும்.

இவரது ஆங்கிலக் கவிதைகள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இருபது இந்திய மொழிகளிலிருந்து நாட்டுப்புறக் கதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வழங்கியுள்ளார்.

'குறுந்தொகை'யிலிருந்து பதினைந்து பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து கல்கத்தாவில் 1965 ஆம் ஆண்டு நடை பெற்ற எழுத்தாளர்கள் பயிலரங்கில் வெளியிட்டார். மேலும், 76 குறுந்தொகைப் பாடல்களை மொழி பெயர்த்து ‘அக உணர்வுக் காட்சிகள்)' (The Interior Landscape) என்னும் தலைப்பில் 1967 ஆம் ஆண்டு வெளியிட்டார். இவரது மொழிபெயர்ப்புகள் தமிழ் இலக்கியச் செழுமையை மேல்நாட்டவர்களுக்கு அறிமுகபடுத்தியது. இராமானுசன், தமது மொழி பெயர்ப்பில் தமிழ்மரபை உள்வாங்கிக் கொண்டு, ஆங்கில மரபைச் சரியாக உணர்த்தி கற்பவர்கள் உள்ளத்தில் காட்சிகளைப் பதிய வைப்பதில் மிகச்சிறந்த ஆற்றல் பெற்றவராகத் திகழ்ந்தார்.

புறநானூற்றில் சில பாடல்களை, ‘Poem of love and war’ என்னும் ஆங்கிலத் தலைப்பில், ஒரு மொழி பெயர்ப்புத் தொகுதியும் வெளியிட்டுள்ளார். மேலும், ஆழ்வார்களின் பாடல்களையும் ஆங்கிலத்தில் ‘Hymns for the Drawing’ என்றும் பெயரில் மிகச் சிறப்பாக மொழி பெயர்த்தளித்துள்ளார்.

புறநானூற்றில் உள்ள ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்‘என்ற தொடர் ஆங்கிலம் வழியாக அயல்நாட்டில் பரவிட இவரது மொழி பெயர்ப்பு உதவியது.

தமிழ் இலக்கியங்களை உலகம் முழுவதும் பரவிட அயராது பாடுபட்ட அ.கி. இராமானுசன் உடல் நலிவுற்று, தமது அறுபத்து நான்காவது வயதில், 14.07.1993 ஆம் நாள் இயற்கை எய்தினார். அவர் மறைந்தாலும், அவரது தமிழ்த் தொண்டு என்றும் மறையாது!.

- பி.தயாளன்

Pin It