ஏப்ரல் 11, 1921 இல், சுப்பராயுலு ரெட்டியார் உடல் நலக் குறைவு காரணமாக முதல்வர் பதவியிலிருந்து விலகினார். அவருக்குப் பின் பனங்கன்டி ராமராயநிங்கார் என்னும் இயற்பெயர் கொண்ட பனகல் அரசர் முதல்வராகப் பதவியேற்றார். 1921ஆம் ஆண்டு பனகல் அமைச்சரவையால் இந்து சமய அறநிலையச் சட்டம் கொண்டுவரப்பட்டு ஆலய நிர்வாகங்களில் நிலவிய ஊழலை ஒழிப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டதோடு நீதிக்கட்சிப் பொருளாதார நிதி சீர்திருத்தங்களையும் இந்த அமைச்சரவை அறிமுகப்படுத்தியது. 1929இல் பணியாளர் தேர்வு ஆணையமாக மாற்றப்பட்ட பணியாளர் தேர்வுக் கழகமே பனகல் அமைச்சரவையால் 1924ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது என்க.

va ve su iyer1922ஆம் ஆண்டு சென்னை அரசாங்கத் தொழிற்சாலைகள் உதவிச் சட்டம் கொண்டு வரப்பட்டதன் பயனாக; சிமெண்ட், அலுமினியம் சர்க்கரை மற்றும் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் அதனால் ஏற்பட்ட பொறியாளர் பணிகள் இன்னபிறவெல்லாம் மேற்கண்ட சட்டத்தினால் சாத்தியமாயிற்று. இந்தச் சட்டம் மேலும் நிலம், நீர்ப்பாசன வசதிகள் வழங்கி புதிய தொழிற்சாலைகள் அதனால் உருவாகும் பணிகள் என புதிய வழிவகை செய்தது. 1921 மற்றும் 1922ஆம் ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட இடஒதுக்கீட்டு அரசாணைகள்; மாவட்ட முன்சீப்புகளை நியமிக்கும் அதிகாரம் உயர் நீதிமன்றத்திடமிருந்து பறிக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிலும், கல்வி நிறுவனங்களிலும் பார்ப்பனர் அல்லாதவர்களின் இடஒதுக்கீட்டுக்கு வழிவகுத்தன.

இது மிக முக்கியமான ஒரு நடவடிக்கையாகவே தென்னிந்திய வரலாற்றில் பார்க்கப்படுகிறது. அதாவது சமுக ரீதியில் காலம் காலமாக பின்னுக்குத் தள்ளப்பட்ட மக்களை முன்னுக்கு கொண்டு வருவதற்கு இட ஒதுக்கீடு முறை அவசியம் என்ற ஒரு கோட்பாட்டை இந்தியாவிற்கு அறிமுகம் செய்த பெருமை நீதிக்கட்சி அரசாங்கத்தையே சாரும் என்றால் அது மிகையல்ல. இதனால் தமது கனவான நீதிக்கட்சித் தலைமையிலான ஆட்சிகள் அவர்களது முக்கிய நோக்கமான பிராமணரல்லாதோர் அரசுப் பணிகளுக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தை ஓரளவு நிறைவேற்றிக் கொண்டது நீதிக்கட்சியின் அமைச்சரவை.

பெண்கள் சட்டமன்ற உறுப்பினர் ஆவதற்குத் தடையாக இருந்த ஆங்கிலேய அரசின் சட்டத்தை மாற்றி அவர்கள் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட உறுதிசெய்ததோடன்றி தேவதாசி முறை என்றழைக்கப்பட்டு வந்த பெண்களை இழிவுபடுத்தும் ஒரு வழக்கத்தை முற்றிலும் ஒழித்துக்கட்டியது. நீதிக்கட்சியின் செயற்கரியச் செயல்களைத் தோழமைகள் எந்தவிதமான விருப்பு வெறுப்புமின்றி புரிந்துகொள்ளவேண்டும் என்கிற நோக்கத்தின் அடிப்படையிலேயே உண்மை வரலாற்றைப் பதிவு செய்வது நமது கடமையாகவே கருதவேண்டியுள்ளது என்க.

தந்தை பெரியார்

தந்தை பெரியாரின் 1919 முதல் 1925வரையிலான காங்கிரசுடனான அரசியல் வாழ்க்கை மற்றும் இதே காலங்களில் தந்தை பெரியார் நடத்திய கள்ளுக்கடை மறியல்; அதைத்தொடர்ந்த அவரது சிறை வாழ்க்கை, காந்தியுடன் சேர்ந்துகொண்டு போராடியதற்காக ஒத்துழையாமை இயக்கத்திற்காக அனுபவித்த சிறை வாழ்க்கை; 1924இல் கேரளாவில் உள்ள திருவாங்கூர் சமஸ்தானத்தில் இருக்கும் வைக்கம் எனும் ஊரில் தலித் மக்களும் ஈழவர்களும் கோயிலுக்குள் நுழையவும் கோயில் இருக்கும் வீதிகளில் நடக்கவும் தடைவிதிக்கப்பட்டிருந்ததைக் கண்டித்து கருவறை நுழைவுப் போராட்டத்திற்காக மீண்டும் சிறை வாழ்க்கை என ஏறத்தாழ ஒரு ஆறு ஆண்டுகளைத் தற்காலிகமாக விழுங்கிவிட்டு நேரடியாக 1925ற்கு தோழமைகளை அழைத்துவந்துவிட்டேன்.

மக்களை அறிவின்மையினிருந்து மீட்டெடுக்கவும், தெளிவுடையவர்களாக மாற்றவும் சமுதாயத்தின் ஏளனத்திற்கு உரிய மூடப் பழக்க வழக்கங்களையும், பரம்பரை வழக்கங்களையும் பின்பற்றப்படுவதைத் தொடர்ந்து எதிர்க்கும் நிலையை பார்ப்பனரல்லாத மக்களிடையே கொண்டு செல்லும் பரப்புரையாக 1925இல் தந்தை பெரியார் அவர்களால் சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது.

பெண்ணுரிமை பெண்களுக்கான கல்வியுரிமை கைம்பெண் மறுமணம் தேவதாசி முறை ஒழிப்பு, கல்வி வேலைவாய்ப்பில் பார்ப்பனரல்லாதோருக்கு முன்னுரிமை மற்றும் குழந்தை திருமணத்தைத் தடைசெய்தல் போன்ற செயல்முறைகளை முன்னிறுத்தி பல போராட்டங்களை சுயமரியாதை இயக்கம் நடத்தியது. இதை மக்களிடையே எளிமையாகக் கொண்டு செல்ல ஏதுவாக தந்தை பெரியார் உண்மை விளக்கம் பிரஸ் எனும் அச்சகத்தைத் தொடங்கி 2 மே 1925ஆம் ஆண்டு ‘குடி அரசு’ என்கிற பெயரில் புதிய வார இதழைத் தொடங்கினார்!

மெத்த படித்த காந்தியை பார்ப்பனர்கள் எவ்வளவுதான் மீண்டும் மீண்டும் புறக்கணித்தாலும் அவரை அவமதித்து நூறு சதவிகித சூத்திரனுக்குண்டான அனைத்துவிதமான சனாதானங்களையும் அவர்மீது திணித்தாலும்; காந்தி மட்டும் தொடர்ந்து பார்ப்பனிய மன நிலையிலும் பார்ப்பனர்களை ஆதரிப்பதுமாகவே காங்கிரசில் செயல்பட்டுவந்தார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. இந்நிலையில்தான் தந்தை பெரியார் தொடர்ந்து வகுப்புரிமைத் தீர்மானத்தை 1919 முதல் 1925 வரையிலான அனைத்து காங்கிரஸ் மாநாடுகளிலும் முன்வைத்தும்; பார்ப்பனச் சக்திகளாலும் பார்ப்பனர் கைப்பாவையாக இருந்த காந்தியாலும் அது வெற்றிபெறாமல் போனதற்கு காரணம் என்றால் பொய்யல்ல என்பேன்.

இதற்கு சிறந்த உதாரணம் சொல்லவேண்டுமென்றால் சென்னை மாகாணத்தில் சுயமரியாதை இயக்கம் தொடங்கும் முன்பாக அதாவது 1925ஆம் ஆண்டுக்கு முன்பு காந்தி சென்னை வரும்பொழுதெல்லாம் மைலாப்பூரில் உள்ள சீனிவாச அய்யங்கார் வீட்டுத் திண்ணையில்தான் உட்கார்ந்திருப்பார். இங்கிலாந்து சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்றிருந்தாலும், காந்தி ஒரு சூத்திரர் என்பதாலேயே அவரை உள்ளே அனுமதிக்கமாட்டார்கள்!

ஆனால் இந்த நிலை 1925ற்குப் பிறகு தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்டு முழுவீச்சில் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில்; அதுவரையில் திண்ணையில் அமர்ந்துவிட்டு போகும் காந்தி, அதே மைலாப்பூரில் சீனிவாசஅய்யங்கார் வீட்டின் உள்ளே அனுமதிக்கப்பட்டார் என்பது சுயமரியாதை இயக்கத்தின் அறுவடையின் ஒரு பகுதியே என்றால் மிகையல்ல.

ஒருபுறம் வருணாசிரம மனு அதர்மத்தை தெரிந்தே ஆதரிப்பது மறுபுறம் அதே சனாதன அமைப்பு முறைகளை அப்படியே பார்ப்பனர்கள் மனம் கோணாமலிருக்க பின்பற்றுவது; எப்போதும் பார்ப்பனர்களை நம்புவது மற்றும் பிரித்தானிய ஆட்சியாளர்களிடம் தம்மைவிட்டால் இந்த மக்களை காக்க யாருமில்லை என்கிற பிம்பத்தை தக்கவைத்துக்கொள்வது என இந்த நான்குவகையான புரிதல்களுடன்தான் காந்தி இந்து முசுலீம் ஒற்றுமைக்குப் பாடுபட்டார்.

தீண்டாமை இருக்கக் கூடாதென்று பார்ப்பனர்களிடமே மன்றாடி கடைசியில் முடியாமல் சரணடைந்தார் என்பதற்கு சரியான சாட்சி திருநெல்வேலி சேரன்மாதேவி குருகுலத்தை நடத்திவந்த வ.வே.சுப்ரமணிய ஐயரிடமே தீண்டாமைக்கு எதிராக வாதாடி தோற்றுப்போனார் காந்தி என்பதைவிட என்ன வேண்டும் சொல்லுங்கள்.

பார்ப்பனர்களின் சுதந்திரப்பற்று என்பதே அவர்களுடைய வேத, சாத்திரங்கள் அப்படியே காப்பாற்றப்பட்டு; அதன்மூலம் சுயராஜ்யம் என்று ஒன்று வருமானால் மனுநீதியை அரசமைப்புச் சட்டமாகவே ஆக்கவேண்டும் என்கிற தன்னுடைய காவிப்பயங்கரவாத மனநிலையை மராட்டிய திலகர்; தான் நடத்திவந்த தன்னுடைய மராத்தி பத்திரிக்கையான கேசரியில் 11 சனவரி 1917இல் எழுதிய தலையங்கத்தையும்; அன்றைய காலங்களில் அதிகம் விற்பனையான பத்திரிகையான இதில், இதே வன்மங்களுடன் தொடர்ந்து எழுதப்பட்டு சுதந்திரப் பற்று தொடர்பாக வெளிவந்த கட்டுரைகளையும் அறியாதவரல்லர் நம்முடைய காந்தி என்றால் வியப்பேதுமுண்டோ சொல்வீர்.

நமது ஆய்வுப் பார்வையில் இந்திய சுதந்திர போராட்டமே பார்ப்பனர்களின் நலனுக்காக, அதாவது இந்து மத சாத்திர, சம்பிரதாயங்களைக் காப்பாற்றவும், ஆங்கிலேய அரசின் கல்வி, வேலைவாய்ப்புகளில், அரசு நிர்வாகங்களில் பார்ப்பனர்கள் தங்களது ஆதிக்கத்தை அப்படியே தொடருவதற்காகவேண்டி; பார்ப்பனிய மனநிலையில் திளைத்து சுரணையற்ற அடிமைகளாக நூறு விழுக்காடு மாறிப்போன பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களை சுதந்திர வேட்கை எனும் மாயையில் மூழ்கடித்து; அவர்களை பிரித்தானிய அரசுக்கு எதிராகப் போராட வைக்க காந்தி போன்றோர்கள் கருவிகளாகத் தேவைப்பட்டார்கள் என்பதை காந்தி எனும் மகாத்மாக்களே உணராதபோது; சாதாரண ஆத்மாக்களுக்கு விஞ்ஞானம் வளராத எழுத்தறிவுப் பெறாத அன்றையச் சூழலில் இது புரிந்திருக்க சாத்தியமில்லை என்பதோடு, அடிமைகள் தொடர்ந்து பார்ப்பனர்களுக்கு அடிமைகளாகவே இருக்கவேண்டி அதே அடிமைகளால் நடத்தப்பட்ட தந்திரமே பிரித்தானியருக்கெதிரான இந்திய சுதந்திரப் போராட்டம்.

சேரன்மாதேவி குருகுல கொடுமைகள்

வெறும் ஆசிரியர் பணியில் இருந்து காங்கிரசிற்குள் வந்த திரு.வி.க. மற்றும் சாதாரண நிலையில் இருந்து வந்த சித்த மருத்துவர் வரதராசுலு போன்றோர்களுடன் அன்றையச் சூழலில் மிகுந்த செல்வச் செழிப்புடன் இருந்து காங்கிரசு இயக்கத்தில் சேர்ந்த தந்தை பெரியார்; அவ்வியக்கத்திற்கு மிகுந்த உண்மையுடனும் விசுவாசத்துடனும் நடந்துகொண்டதோடு, காந்தியாருக்கும் இராசாசிக்கும் உண்மையாக இருந்தார் எனினும், அதில் இருந்த பார்ப்பன மற்றும் பார்ப்பனரல்லாதோருக்கான சதிகளையும் பாகுபாடுகளையும் கண்டு கொதித்தெழலானார்.

தொடர் தோல்விகளைச் சந்தித்த வகுப்புவாத பிரநிதித்துவப் பிரச்சினை, கதர்போர்டு சம்பந்தமான உத்தியோக நியமனம் நாயக்கர் கையில் இருக்கட்டும் என்று காந்தி சொல்லியும் அதைக் கேளாமல் கதர் ஆதிக்கம் முழுவதும் பார்ப்பனர்கள் அவர்கள் வசமே இருக்கும்படி பார்த்துக்கொண்டதினால் ஏற்பட்ட கதர் நிறுவனப்பிரச்சனையால் உருவான கசப்பான அனுபவங்கள், சனாதன பார்ப்பனிய அடிமை நிலை என காரணங்கள் நிறைய இருந்தாலும்; காங்கிரசில் இருந்து வெளியேறியதற்கு மிக முக்கிய காரணமாக சேரன்மாதேவி குருகுலக் கொடுமைகள் மட்டுமே என்கிறார் தந்தை பெரியார்.

வரகனேரி வேங்கடேச சுப்ரமணிய ஐயர் அவர்களால் ஆசிரமம் என்கிறபெயரில் முதலில் கல்லிடைக்குறிச்சியில் அமைக்கப்பெற்று, பின்னர் சுமார் முப்பது ஏக்கர் நிலப்பரப்பில் திருநெல்வேலியை அடுத்த சேரன்மாதேவியில் 8 டிசம்பர்-1922இல் பார்ப்பனரல்லாதாரின் பொது நிதியில் உருவாகி; பள்ளியாக நடத்தப்பட்டு புது வடிவம் பெற்றதுதான், வருணாசிரம சனாதன அமைப்புகளை அப்படியே முறைப்படுத்தப்பட்டு மனு அதர்ம பயிற்சியுடன் கையாளப்பட்ட பரத்துவாஜ ஆசிரமம் எனும் குருகுலம்.

தொடக்கத்தில் பார்ப்பனர் மற்றும் பார்ப்பனரல்லாதார் என எல்லோரும் இருபது வயதிற்குட்பட்ட சுமார் முப்பதுக்கும் குறைவான மாணவர்கள் இந்த குருகுலத்தில் பயின்றனர். இவ்வளவு பெரிய நிலப்பரப்பில் தொடங்கப்பட்ட குருகுலத்தில் மத துவேசம் கருதி பார்ப்பனர்களுக்கு மற்றும் சூத்திரர்களுக்கு என்று இருவேறு உணவு பரிமாறும் பந்திகள் தனித்தனியே நடத்தப்பட்டதோடு; சூத்திர மாணவர்களுக்கு பழைய சோறும் பார்ப்பன மாணவர்களுக்கு உப்புமாவும் வழங்கப்பட்டது. இதற்கு இடவசதி போதாமையால் இரண்டு பந்திமுறை என்று சமாளிக்கிறார் வரகனேரி வேங்கடேச சுப்ரமணியம் எனும் வ.வே.சு. அய்யர். அதோடு விட்டால் பரவாயில்லை பார்ப்பன மாணவர்களுக்கு வேத உபநிடதங்களும் சூத்திரர்களுக்கு தேவாரத்தையும் திருவாசகத்தையும் பாடங்களாகக் கற்பிக்கப்பட்டன.

தம்முடைய மலேயா நண்பரின் அய்யத்தைப் போக்க வேண்டியும் உண்மையில் என்னதான் அங்கே நடக்கிறது என்பதையறிய வரதராசுலு அவர்கள் குருகுலத்திற்கு சென்றபோது; அவர் கண்டதெல்லாம் அக்மார்க் வருணாசிரம மனு அதர்ம கொடுமைகளே. இதை மாற்றிக்கொள்ளுமாறும் இளமையிலேயே இப்படிப்பட்ட மத வேற்றுமை எனும் நச்சை மாணவர்களிடையே விதைப்பதால் நாட்டிற்கு கேடு எனவே இதை தாமாகவே முன்வந்து சரிசெய்துவிடுமாறு நேராகவே வ.வே.சு.விடம் சொல்லிப்பார்த்தார். இதற்கிடையில் இந்த விடயம் மெல்ல மெல்ல பொதுவெளியில் கசியத்தொடங்கியது. ஆனால் அய்யர் எதையும் கேட்காத நிலையில்; இதே கருத்தை வலியுறுத்தியும் சேரன்மாதேவியிலேயே ஒரு சிறிய மாநாடு ஏற்பாடு செய்து எல்லோரின் கருத்துக்களையும் கேட்டு நல்ல முடிவிற்கு வருமாறு 17 அக்டோபர் 1924இல் திரு.வி.க நவசக்தியில் எழுதுகிறார்.

பிரித்தானிய கல்விமுறைகளால் இந்திய சுதந்திரத்திற்கோ அல்லது தேசியத்திற்கோ பயன்படாது மாறாக தேசியப் பள்ளிகள் மட்டுமே விடுதலைப்போராட்டத்திற்கு பயன்தரும் என்கிற காந்தியின் கொள்கையை ஏற்றதன் விளைவாக; வ.வே.சு. அய்யர் சேரன்மாதேவி ஆசிரமம் தொடங்க காரணமாயிற்று. அதற்கு பலம் சேர்க்கும் வகையில் அப்பொழுது எல்லோரும் காந்தியுடன் ஒன்றாகச் செயல்பட்டதால் அன்றைக்கு இருந்த பலம் வாய்ந்த பத்திரிகைகளான இந்து, குமரன், சுதேசமித்திரன், தமிழ்நாடு, நவசக்தி ஆகிய இதழ்கள் குருகுலத்துக்கு உதவுமாறு கட்டுரைகளையும் அது தொடர்பான முக்கிய செய்திகளையும் பிரசுரித்து வந்தன.

இதனால் இந்த செயல்வடிவத் திட்டத்திற்கு முதலாண்டு தேவையாக பத்தாயிரத்து இருநூறு ருபாய் தேவையாக இருந்ததால், காங்கிரசு கமிட்டிக்கு அய்யர் விண்ணப்பித்திருந்தார். காங்கிரசின் தேசிய நிதி ஆதாரத்தின் மூலம் இந்த பெருந்தொகையை இரண்டு தவணைகளாக தலா ஐயாயிரம் வீதம் கொடுக்க ஒப்புக்கொண்டதோடு, அதன் முதல் தவணையாக ஐயாயிரம் ரூபாயை அய்யரிடம் வழங்கியது. ஆசிரமத்திற்கு தேவையான முப்பது ஏக்கர் நிலமும் வை.சு.சண்முகம் செட்டியார் அவர்களின் நிதியின் பங்களிப்பினால் வாங்கியாயிற்று. பார்ப்பனரல்லாதோரும் கல்வி கற்க வேண்டும் சமுதாயத்தில் எல்லோரும் பார்ப்பனருக்குச் சமமாக உயர வேண்டும் மற்றும் சனாதான அமைப்புமுறை முற்றிலும் ஒழிய வேண்டும் என்கிற உயர்ந்த இலட்சியம் கொண்ட தமிழ்நாடு காங்கிரசுத் தலைவராக தந்தை பெரியார் அப்பொழுது இருந்ததினால், மேற்சொன்ன முதல் தவணையான ஐயாயிரம் ரூபாயும் சாத்தியமாயிற்று.

இதுதவிர மலேயா நிதியாக பெருந்தொகையும் கிட்டியது. ஆனால் எல்லாமே விழலுக்கு இறைத்த நீராகப் போனதை நினைத்து தாம் பார்ப்பனரல்லாதாருக்கு பெரும் தவற்றை செய்துவிட்டதாக நினைத்து வரதராசுலு நாயுடு மனம் வருந்தினார். இந்நிலையில் பலமுறை தந்தை பெரியார் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டியும், தொடர்ந்து ஆசிரமத்தில் நடந்த வர்ணாசிரம மனு அதர்மங்களையும் சனாதனப் பாகுபாடுகளை எதிர்த்தும்; அய்யரின் காவி வெறிபிடித்த அடாவடித்தனத்தையும் பார்ப்பனரல்லாதோரின் மீதான வன்மங்களைக் கண்டித்தும், பலமுறை போர்தொடுத்ததையும் மீறிய செயலாக இருந்த அய்யரின் அடாவடிப்போக்கிற்கு பெருங்காரணமாகிப்போனது எதுவெனில், அய்யரின் மீதிருந்த டாக்டர் நாயுடுவின் அதீத நம்பிக்கையும் கண்மூடித்தனமான ஆதரவுமே ஆகும்.

தாம் எவ்வளவு சொல்லியும் கேக்காத அய்யரை சுதேசமித்ரன் தவிர ஏனைய பத்திரிக்கைகள் எதிர்த்தன. இந்த செய்தி காந்தியின் செவிக்குச் செல்லவே அவரும் தம் பங்கிற்கு சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார் அவ்வளவே. சனாதன அட்டூழியம் மட்டும் வெற்றிகரமாக அந்த குருகுலத்தில் தொடர்ந்தது என்பது உண்மை. இதைத்தான் வரதராசுலு நாயுடு குருகுலம் கிளைவிட்டு வளரத் தொடங்கி இருக்கிறது; ஆனால், அதன் வேர் அழுகத் தொடங்கியிருக்கிறது என்று தன்னுடைய பிரசுரமான தமிழ்நாடு இதழில் எழுதினார்.

பார்ப்பனர்கள் தீண்டாமையையோ தேசிய ஒருமையையோ பேசுகிறார்கள் அல்லது அதன்மூலம் எல்லோரும் சமமாகத் தேசியத்தை ஆதரிக்கும்பொருட்டு ஏதேனும் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்றால்; அதில் ஒருபோதும் பார்ப்பனரல்லாதோருக்கான நலன் இருக்கமுடியாது. எனவே பார்ப்பனர்கள் பேசும் தீண்டாமையோ தேசியமோ எதுவாயினும் வீண் என்று தொடர்ந்து களமாடிய தந்தை பெரியாரின் இச்செயல்; தமிழ்நாட்டில் எல்லோரிடத்திலும் ஒரு அதிர்வை உருவாக்கியது என்பது உண்மை. அய்யரின் இத்தகைய குருகுலக் கொடுமைகளை ஒழிக்கவேண்டுமானால் நிதி ஆதாரத்தை நிறுத்தவேண்டும் என்று எண்ணியதன் விளைவால், பார்ப்பனரல்லாதார்களின் நிதி ஆதாரங்கள் முற்றிலும் நின்றுபோனது மட்டுமன்றி ஆசிரமும் ஒரு முடிவிற்கு வந்தது.

இந்த சேரன்மாதேவி குருகுல அட்டகாசங்களும் அதன் பின்னணியும் தந்தை பெரியாரை வேறொரு புதிய பாதையை தேர்வு செய்ய ஏதுவாகத் தூண்டியது. இதற்கடுத்து 1925ஆம் ஆண்டு நவம்பர் திங்களில் காஞ்சிபுரத்தில் கூட்டப்பட்ட திரு.வி.க.தலைமையிலான தமிழ் மாகாண மாநாட்டில், இருபத்தைந்து பிரிதிநிதிகளின் கையொப்பத்தை பெற்று வகுப்புவாரித் தீர்மானத்தைக் கொண்டுவந்தார் தந்தை பெரியார். ஆனால் அதை ஒழுங்கற்றத் தீர்மானம் என்று மாநாட்டுத் தலைவர் திரு.வி.க. அனுமதி மறுத்துவிட்டார்.

இதனால் கோபமடைந்த தந்தை பெரியார் முழுவதும் பார்ப்பனமயமாகிப்போன பார்ப்பனரல்லாதார் நலனுக்காக ஒன்றுக்கும் உதவாத இந்த காங்கிரசில் தொடர்ந்து இருப்பதில் எந்த நன்மையும் ஏற்படாது என்பதால் நான் இப்பொழுதே காங்கிரசை விட்டு வெளியேறுகிறேன் என்று மாநாட்டுத் தலைவரிடம் சொல்லிவிட்டு; இனி காங்கிரசை ஒழித்துக்கட்டுவதே எனது முழுமுதல்பணி என்று மாநாட்டு பந்தலில் இருந்து வெளியேறினார் தந்தை பெரியார்.

அவருக்கு ஆதரவாக அப்பொழுதே மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், கோவை டி.ஏ.ராமலிங்க செட்டியார், மணப்பாறை திருமலைச்சாமி, சர்க்கரைச்செட்டியார், எஸ் இராமநாதன் போன்றோர்களும் அவருடன் மாநாட்டுப் பந்தலிலிருந்து வெளியேறினர். காஞ்சி மாநாட்டின்போது அப்பொழுதே அங்கேயே தந்தை பெரியாரின் முயற்சியால் பார்ப்பனரல்லாதார் மாநாடு ஒன்று கூட்டப்பெற்று; தந்தை பெரியாரின் வேண்டுகோளுக்கிணங்க கோவை டி.ஏ.ராமலிங்க செட்டியார் தலைமையில் வெற்றிகரமாக நடந்தேறியது.

இம்மாநாட்டில் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் பிரிவினை இல்லையென்பது உடலில் உள்ள புண்ணை இல்லை என்று மறைத்து அழுகவிடுவதற்கு ஒப்பாகும். அதற்கேற்ற மருத்துவம் செய்து புண்ணை குணமாக்க முயல்வதே சமூக பொதுநோக்குடைய அறிஞர் கடமையாகும் என்று பேசிய தந்தை பெரியாரின் தொடர் பலப்பல முயற்சிகளாலும் போராட்டங்களாலும்தான்; அதுவரையில் சூத்திரர்களின் இடுப்பிலிருந்த துண்டு தோளுக்கு ஏறியது! கும்பிடுறேன் சாமி என்ற சொல் வணக்கம் என்றானது! சலவைக்காரர் வீடு பானை செய்கிறவர் வீடு, செருப்பு தைப்பவர் வீடு என்றிருந்த நிலை மாறி, மருத்துவர் வீடு, ஆசிரியர் வீடு, மாவட்ட ஆட்சியர் வீடு, பொறியாளர் வீடு, வழக்கறிஞர் வீடு என்று மாறியது!

ஆனால் இந்த மாற்றங்கள் கண்மூடிக் கண் திறப்பதற்குள் நிகழ்ந்தவைகள் அல்ல! அதற்காக தந்தை பெரியாரும் அவருடைய தோழர்களும் பட்ட துன்பங்கள் அனுபவித்த கொடுமைகளுக்கு விலைகொடுக்கமுடியாது என்க. அவைகளை ஒவ்வொன்றாக வரும் தொடர்களில் பார்க்கலாமே தோழமைகளே......!

அதுவரையில் உங்களுடன் நானும் சேர்ந்து ஒரு தேநீர் அருந்திவிட்டு மீண்டும் தொடர் ஐந்தில் வருகிறேனே!

- ஆய்வு தொடரும்

Pin It