யானைகளுக்கும் திமிங்கலங்களுக்கும் ஏன் புற்றுநோய் வருவதில்லை? மருத்துவத்தின் மிகப் பெரிய புதிர்களில் ஒன்றிற்கு விடை காண விஞ்ஞானிகள் முயல்கின்றனர். இது பற்றிய புரிதல் மனித புற்றுநோய் சிகிச்சையில் பெரிதும் உதவும். சில உயிரினங்கள் புற்றுநோய் வராமல் வாழும் போது வேறு சிலவற்றிற்கு புற்றுநோய்க் கட்டிகள் வந்து குறைவான ஆயுளுடன் வாழ்கின்றன.
100 முதல் 200 ஆண்டுகள் வரை வாழும் இயல்புடைய அம்பு தலை திமிங்கலங்கள் (Bowhead whales) உட்பட திமிங்கலங்கள் மிகக் குறைந்த அளவிலேயே புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றன. ஆனால் நாய், பூனைகளில் இதுவே அவற்றின் அகால மரணத்திற்கு முதன்மைக் காரணமாக உள்ளது. நரிகள், சிறுத்தைகள் புற்றுநோயின்றி வாழும்போது ஆடுகளும், மான்களும் இதனால் உயிரிழக்கின்றன. எலி, சுண்டெலிகளுக்கு இந்நோய் வருகிறது.
மனித உயிர் பறிக்கும் புற்றுநோய்
ஆண்டிற்கு 10 மில்லியன் பேரின் உயிர் பறிக்கும் புற்றுநோய் மனித உடல்நலத்திற்கு இன்று பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. பெரிய உடலமைப்புடன் வாழும் திமிங்கலம், யானை போன்றவை எண்ணற்ற உடற்செல்களைப் பெற்றுள்ளன. இந்த செல்கள் ஒவ்வொன்றும் தூண்டப்பட்டு புற்றுநோய்க் கட்டிகளாக மாறலாம். அவ்வாறு நிகழ்ந்தால் இவை உயிருக்கு ஆபத்தான நிலையில் வாழ வேண்டியிருக்கும். ஆனால் இவற்றிற்கு புற்றுநோய் வருவதில்லை.இது பற்றிய கருத்தை முதல்முதலாக இங்கிலாந்து நாட்டின் புள்ளியியல் நிபுணர் ரிச்சர்டு பீட்டோ (Richard Peto) வெளியிட்டார். இதனால் இக்கோட்பாடு பீட்டோவின் முரண்பாடு (Peto’s paradox) என்று அழைக்கப்படுகிறது. இது பற்றி கேம்ப்ரிட்ஜ் வெல்கம் சாங்கர் (Wellcome Sanger) ஆய்வுக்கழக விஞ்ஞானிகள் லண்டன் விலங்கியல் சங்கம் (Zoological Society London ZSL) உள்ளிட்ட பல ஆய்வுக்கழக நிபுணர்களுடன் இணைந்து ஆராய்ந்தனர்.
புற்றுநோய் செல் ஆய்வு
உடல் செல்லில் உள்ள டி.என்.ஏ தொடர்ச்சியாக திடீர் மாற்றங்களுக்கு உட்பட்டு கட்டுக்கடங்காத முறையில் பிளவுபட்டு பெருக்கமடைவதே புற்றுநோய் எனப்படுகிறது. உடலின் எதிர்ப்பாற்றல் இதைக் கட்டுப்படுத்துவதில் தோல்வியடைகிறது என்று ஆய்வுக்குழுவின் தலைவர் அலெக்ஸ் காகன் (Alex Cagan) கூறுகிறார். அதிக செல்களைக் கொண்டுள்ள விலங்குகள் புற்றுநோயால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
நிறமிகளைப் பயன்படுத்தி நுண்ணோக்கியின் மூலம் ஆராய்ந்தபோது புற்றுநோய் செல்கள் இரண்டு பரிமான அளவில் (2d) நீல நிற உட்கருவுடனும், சைட்டோப்ளாசம் சிவப்பு நிறத்திலும், டி என் ஏ லென்ஸ்மீட்டரைப் (foci) பயன்படுத்தி ஆராய்ந்தபோது பச்சை நிறத்திலும் இருப்பது தெரிய வந்தது.
ஜாக்பாட்
செல்களை லாட்டரி சீட்டு போலக் கருதினால் எந்த அளவிற்கு நம்மிடம் அதிக சீட்டுகள் இருக்கின்றனவோ அந்த அளவு நமக்கு ஜாக்பாட் அடிப்பதற்கும் வாய்ப்பு அதிகம். இங்கு ஜாக்பாட் என்பது புற்றுநோய் என்ற பரிசே என்று விலங்கியல் சங்க தொற்றுநோயியலாளர் சைமன் ச்பிரோ (Simon Spiro) கூறுகிறார். இதன்படி பார்த்தால் சில வகை திமிங்கலங்கள் ஒரு வயதிற்கு முன்பே இறந்துவிட வேண்டும்.
ஆனால் அவ்வாறு நிகழ்வதில்லை. மனிதர்கள் டிரில்லியன் செல்களை மட்டுமே பெற்றிருக்கின்றனர். ஆனால் திமிங்கலங்களில் இது போல நான்கு மடங்கு செல்கள் உள்ளன. இதன்படி பார்த்தால் இந்த விலங்குகளுக்கு மனிதர்களை விட புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு பல மடங்கு அதிகம்.
யானைகள் முதல் எலிகள் வரை
யானைகள் சராசரியாக 70 ஆண்டுகள் வாழ்கின்றன. ஆனால் ஏராளமான திடீர் மாற்றங்களுக்கு ஆளாக்கப்பட வாய்ப்புள்ள அவை புற்றுநோயால் பாதிக்கப்படுவதில்லை.
இப்புதிருக்கு விடை காண விஞ்ஞானிகள் லண்டன் விலங்குக் காட்சி சாலையில் இயற்கையாக உயிரிழந்த சிங்கங்கள், புலிகள், ஒட்டகச்சிவிங்கிகள், வரி வால் லிமர் வகைக் குரங்குகள் (ring tailed lemurs), மரநாய்கள் (ferrets) மற்றும் வேறு ஒரு மையத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட இறைச்சியை உண்ணும் அளவு வலுவுள்ள பல் அமைப்பை உடைய 30 ஆண்டுகள் வரை வாழும் மோல் எலிகள் (naked mole rats) போன்ற விலங்குகளை ஆராய்ந்தனர். ஆனால் இவை நோயால் பாதிக்கப்படுவதில்லை.
திடீர் மாற்றங்களின் எண்ணிக்கை
ஒவ்வொரு விலங்கின் உடலில் இருந்தும் விஞ்ஞானிகள் குடல் க்ரிப்ட் (intestinal crypt) செல்களைப் பிரித்து அவற்றின் மரபணு வரிசையை ஆராய்ந்தனர். இவை குருத்தணு செல்களால் நிரந்தரமாக மாற்றமடைபவை. இவை மரபணு வரிசையை ஒப்பிட உதவுகின்றன. இதைப் பயன்படுத்தி ஒவ்வொரு ஆண்டும் நிகழும் திடீர்மாற்றங்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டது.
இந்த எண்ணிக்கை விலங்கினத்திற்கு ஏற்ப மாறியது. நீண்டநாள் வாழும் விலங்குகளில் இந்த எண்ணிக்கை குறைவாக இருந்தது. குறைந்த நாள் வாழும் உயிரினங்களில் திடீர் மாற்றங்கள் வேகமாக நடைபெறுகின்றன. மனிதர்களில் ஆண்டிற்கு 47 திடீர் மாற்றங்கள் நிகழ்கின்றன. எலிகளில் இது 800. மனிதனின் சராசரி ஆயுட்காலம் 83.6 ஆண்டுகள். எலியின் ஆயுட்காலம் 4 ஆண்டுகள்.
திடீர் மாற்றங்களின் வேகம்
ஆனால் இவ்விலங்குகளின் ஆயுட்காலம் முடிந்தபின் 3200 திடீர் மாற்றங்கள் நடைபெற்றன. இது எல்லா விலங்குகளிலும் ஒரே அளவாக இருந்தது விஞ்ஞானிகளை வியப்படையச் செய்தது. இதற்கு முதுமையடைதல் ஒரு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. டி.என்.ஏ. மரபணுவில் நடைபெறும் திடீர் மாற்றங்களை நீண்ட நாள் வாழும் விலங்குகள் எவ்வாறு மெதுவாக நடத்துகின்றன என்பது பற்றி ஆழமாக ஆராயப்பட வேண்டும் என்று காகன் கூறுகிறார்.
வேலைக்கார எறும்புகளும் ராணி எறும்புகளும்
ஆயுட்காலத்திற்கும் திடீர் மாற்றங்களுக்கும் இடையில் இருக்கும் தொடர்பு பற்றி குறைந்த மற்றும் நடுத்தர வாழ்நாள் உள்ள விலங்குகளில் குறிப்பாக பாலூட்டிகளில் மட்டுமே இதுவரை நடத்தப்பட்டுள்ளது. இவை தாவரங்கள், பூச்சிகள் மற்றும் ஊர்வனவற்றில் நடத்தப்படவுள்ளது. சமூக வாழ்க்கை நடத்தும் எறும்புகளில் வேலைக்கார எறும்புகள் மற்றும் ராணி எறும்புகள் ஒரே மாதிரியான மரபணு வரிசையைப் பெற்றுள்ளன.
ஆனால் ராணி எறும்புகள் 30 ஆண்டுகள் உயிர் வாழ்கின்றன. வேலைக்கார எறும்புகள் ஒன்றிரண்டு ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ்கின்றன. வேலைக்கார எறும்புகளை விட ராணி எறும்புகள் டி.என்.ஏ. பழுதுகளை திறம்பட செயல்படுத்துவது இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
புதிய மாற்றங்கள் ஏற்படுமா?
புற்றுநோய் ஆய்வுகளில் குறைந்த ஆண்டுகள் மட்டுமே வாழும் எலிகள் மற்றும் அவற்றின் மாதிரிகளே பொதுவாக அதிகம் பயன்படுத்தப்படுகின்றன என்பதால் அதன் முடிவுகள் சிறந்தவையாக இருக்காது. இனி வருங்காலத்தில் நீண்ட ஆயுட்காலம் உடைய விலங்குகளைப் பயன்படுத்துவதால் புற்றுநோய் எதிர்ப்பாற்றல் பற்றி நன்றாகப் புரிந்து கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திடீர் மாற்றங்கள் நடைபெறும் வேகம், முதுமை மற்றும் கட்டிகள் இவற்றிற்கு இடையில் உள்ள தொடர்பு புற்றுநோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. முதுமையால் உருவாகும் மோசமான பாதிப்புகளைக் குறைப்பதற்கும் இந்த ஆய்வுகள் உதவும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
** ** **
- சிதம்பரம் இரவிச்சந்திரன்