இன்றைய தலைமுறை அறியாத ஒன்று - பெரியம்மையால் பாதிக்கப்பட்டு மறைந்த உயிர்களும், தழும்புகளோடு காலம் முழுவதும் வாழ்ந்த முகங்களும்!
சில ஆண்டுகளுக்கு முன் வரையில் அறியப்பட்ட ஒன்று - போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாத நோயினால் பாதிக்கப்பட்டுத் தத்தித் தவழ்ந்து நடந்த நம் உடன்பிறந்தவர்களின் வாழ்க்கை!
இன்று அந்த இரண்டு நோய்களும் உலகில் இல்லை. எப்படி? நவீன மருத்துவத்தின் சாதனை அது! தடுப்பு மருந்துகளால் அந்தத் துயரம் விரட்டியடிக்கப்பட்டது.
1876 ஆம் ஆண்டு எட்வர்ட் ஜென்னர் பெரியம்மைக்கு எதிரான ஒரு மருந்தைக் கண்டுபிடித்தார். தொடர் ஆய்வுகளுக்குப் பிறகு, 1958 தொடங்கி உலகம் முழுவதும் தடுப்பு முறைகள் பின்பற்றப்பட்டன. 1975 ஆம் ஆண்டின் இறுதியில், எத்தியோப்பியா, சோமாலியா போன்ற ஓரிரு நாடுகளில் மட்டுமே அந்த நோய் காணப்பட்டது. நவீன மருத்துவம் அங்கிருந்தும் அந்த நோயினை மறையச் செய்தது. 1979 டிசம்பர் 9 ஆம் நாள் உலகை விட்டே அந்தப் பெரியம்மை போய்விட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது!
அதே போன்றுதான், தடுப்பு மருந்துகளால் போலியோ நோய் அகற்றப்பட்டது. 1988 இல் தொடங்கப்பட்ட முயற்சி, இப்போது முழுமையான வெற்றியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. 2012 இல் போலியோ மீதமிருக்கும் நாடுகளின் பெயர்கள், சுருக்கமாக, PAIN என்று ஆங்கிலத்தில் சொல்லப்பட்டது. அதாவது, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இந்தியா, நைஜீரியா ஆகிய நான்கு நாடுகளில் மட்டுமே அந்நோய் அப்போது இருந்தது. இப்போது இந்தியா, நைஜீரியா ஆகிய நாடுகளும், போலியோவிலிருந்து விடுதலை பெற்று விட்டன. 2021 இல் நைஜீரியாவில் ஒருவருக்கும், ஆப்கானிஸ்தானில் நால்வருக்கும் மட்டும் அந்நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அனைத்தும் நவீன மருத்துவ வளர்ச்சியால் நிகழ்ந்த சாதனைகள். இந்நிலையில், இப்போது கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. அதனைப் பாசிசம் என்று சிலர் கூறத் தொடங்கியுள்ளனர். தடுப்பூசிகளைத் தடுப்பதற்காக நேற்று (07.01.2022) சிதம்பரத்தில் ஒரு கூட்டமே நடந்துள்ளது.
யார் அந்தக் கூட்டத்தை நடத்தியது? தமிழ்த் தேசியப் பேரியக்கம் என்று துண்டறிக்கை கூறுகின்றது. அவர்கள் யார்? தங்களைத் தமிழ் இந்துக்கள் என்று அறிவித்துக் கொண்டவர்கள். ஓ..சரி, அறிவியலுக்கும், மானுட முன்னேற்றத்திற்கும் மதவாதிகள் எப்போதும் எதிராகத்தானே இருப்பார்கள்!
- சுப.வீரபாண்டியன்