என்றும் அழியா வேதிப்பொருட்கள் பெண்களின் மலட்டுத் தன்மைக்குக் காரணமாகிறது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பெண்களின் இரத்தத்தில் கலந்திருக்கும் இப்பொருட்கள் குழந்தை பிறப்பிற்கான வாய்ப்பை 40% குறைக்கிறது என்று இது பற்றி முதல்முறையாக நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் ஆய்வுகள்

என்றும் அழியா வேதிப்பொருட்கள் (Forever chemicals) பாலி ப்ளூரோ அல்லது பெர்- &பாலிப்ளூரோ ஆல்கலைல் (per- and polyfluoroalkyl) வகையைச் சேர்ந்தவை. இவை சோதனைக்கு உட்படுத்தப்பட்ட அனைவரிலும் கண்டறியப்பட்டது. அமெரிக்காவில் 99% பெண்களும் இப்பொருட்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். தெளிவான முடிவுகளைப் பெற உலகில் மாசு குறைந்த நாடுகளில் ஒன்றாகக் கருதப்படும் சிங்கப்பூரில் இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன என்றாலும் ஆய்வில் பங்கேற்றவர்களிடம் இந்த நச்சுகள் கலந்திருந்தன.pregnant womanஎன்றும் அழியா வேதிப்பொருட்கள்

என்றும் அழியா வேதிப்பொருட்கள் (PFAS) என்பவை நீர் மற்றும் எண்ணெய்களால் பாதிக்கப்படாத நச்சுப் பொருட்களின் கூட்டம். இவை ஒட்டாத சமையல் பாத்திரங்கள் முதல் ஆடைகள், உணவைப் பொட்டலமிட உதவும் பொருட்கள் மற்றும் இருக்கைகள் உற்பத்தியில் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. நீர், மண்ணை மாசுபடுத்தும் இவை புற்றுநோய், கல்லீரல், சிறுநீரகம் மற்றும் தைராய்டு பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன.

இவற்றில் சிலவற்றின் பயன்பாட்டிற்குத் தடை விதிக்கப்பட்டாலும், இக்குடும்பத்தைச் சேர்ந்த 12,000 பொருட்கள் இன்னமும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த வகை பொருட்களின் பயன்பாடு முழுவதுமாக ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்று விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர்.

குழந்தை பிறப்பிற்கு திட்டமிடும் பெண்களை இவை பாதிக்கின்றன என்பது இந்த ஆய்வுகள் மூலம் வலுவாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால் கருவுறத் தயாராகும் பெண்கள் இது பற்றிய விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இவற்றுடனான தொடர்பைத் தவிர்க்க அவர்கள் முயல வேண்டும் என்று நியூயார்க் மவுண்ட் சைனாய் (Mount Sinai) ஐகான் (Icahn) மருத்துவப் பள்ளியின் நிபுணரும், ஆய்வுக் கட்டுரையின் முன்னணி ஆசிரியருமான டாக்டர் நாதன் கோஹென் (Dr Nathan Cohen) கூறியுள்ளார். உலகில் ஆறு பேரில் ஒருவர் மலட்டுத் தன்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உலக சுகாதார நிறுவனம் ஏப்ரல் 2023ல் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.

முக்கிய சுகாதாரப் பிரச்சனை

உலகம் எதிர்கொள்ளும் முக்கிய மாசுப்பொருட்களாக இவை மாறி வருகின்றன. இவற்றின் உற்பத்தியை முழுவதுமாக தடுப்பது மட்டுமே இதற்கு ஒரே தீர்வு என்று ஐகான் பள்ளியின் உதவிப் பேராசிரியர் டாக்டர் டமஸ்கினி வால்வி (Dr Damaskini Valvi) கூறியுள்ளார். சிறப்பு நீர்வடிகட்டிகளைப் பயன்படுத்துதல், இந்த ரசாயனங்கள் கொண்டு உருவாக்கப்படும் பொருட்களை முற்றிலும் தவிர்த்தல் போன்ற தனிநபர் அளவிலான தடுப்பு முறைகளை மேற்கொள்ள வேண்டும் என்கிறார் வால்வி.

குழந்தைப் பேற்றுக்குத் தயாராகும் 1000 சிங்கப்பூர் பெண்களிடம் இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன என்று முழு சூழலிற்கான அறிவியல் (Journal Science of the total environment) என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வுக்கட்டுரை கூறுகிறது. கர்ப்ப காலத்தின் ஒவ்வொரு மூன்று மாதத்திலும் இப்பொருட்களுக்கு அதிக மற்றும் குறைவான அளவில் தொடர்பு கொண்ட பெண்கள் இந்த ஆய்வில் பங்கு பெற்றனர்.

இந்த நச்சுகளுடன் அதிகம் தொடர்பில் இருந்த பெண்கள் அவர்கள் கருவுற்ற காலத்தில் இருந்து ஒரு ஆண்டிற்குள் குறைவான தொடர்பு கொண்டவர்களைக் காட்டிலும் சுகமாகக் குழந்தை பெறும் வாய்ப்புகள் 40% குறைகிறது. இவர்கள் இயற்கையாகக் குழந்தை பெறும் வாய்ப்பும் 34% குறைவாகவே உள்ளது. இப்பொருட்கள் தனியாக ஏற்படுத்தும் மாசை விட கலவையாக இருக்கும்போது அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன. நச்சுப்பொருட்கள் ஒன்றாக சேர்ந்திருக்கும்போது அவற்றால் ஏற்படும் பாதிப்பும் அதிகமாக இருக்கும்.

நோய்களின் நீண்ட பட்டியல்

இவை ஹார்மோன் கோளாறுகள், முட்டை உற்பத்தி மற்றும் அதன் செயல்பாடுகள், தாமதமான நரம்பு வளர்ச்சி, கர்ப்பப்பை குறைபாடு (polycystic Oovarian syndrome) போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. பெண்களின் வயது, கல்வித்தரம், புகை பிடிக்கும் பழக்கம், முன்பு பிறந்துள்ள குழந்தைகளின் எண்ணிக்கை போன்றவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு ஆய்வுகள் நடந்தன. ஆண்களின் மலட்டுத் தன்மைக்கும் இவை காரணமாக உள்ளன.

இப்பொருட்கள் தாய்மாரின் நஞ்சுக்கொடிக்கு செல்லும் ரத்தம், நஞ்சுக்கொடி, தாய்ப்பாலில் கலந்துள்ளன. இதே நச்சுப் பொருட்களைப் பயன்படுத்தி ஜனவரி 2023ல் நடந்த 13 ஆய்வுகளும் இதே முடிவையே கூறின என்றாலும் தனித்தனியான வேதிப்பொருட்களை மையமாகக் கொண்டே அந்த ஆய்வுகள் நடந்தன. பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு இப்பொருட்கள் தவிர்க்கப்பட வேண்டியது முக்கியம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ஒட்டுமொத்த தடை

பெண்களின் குழந்தைப் பேறு குறைய இதுவும் ஒரு முக்கிய காரணம் என்று சீனா நாந்ஜிங் (Nanjing) தென்மேற்குப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 10,000 வேதிப்பொருட்களுக்கு தடை விதிக்க ஐந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் முடிவு செய்துள்ளன. யு எஸ் மற்றும் யு கே சில நச்சுப் பொருட்களுக்கு தடை விதிக்கத் திட்டமிட்டுள்ளன. ஆனால் இவை ஒட்டுமொத்தமாக தடை செய்யப்படுவதே இப்பிரச்சனைக்கு ஒரே வழி என்று விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர்.

** ** **

மேற்கோள்: https://www.theguardian.com/environment/2023/apr/06/forever-chemicals-infertility-women-pfas-blood?CMP=Share_AndroidApp_Other

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It