உலக சுகாதார நிறுவனம் தனிமையைப் பெரியதொரு சுகாதாரப் பிரச்சினையாக (Global health concern) அறிவித்துள்ளது. இது குறித்து ஆராய அது ஒரு பன்னாட்டு ஆய்வுவட்டத்தை/ஆய்வுக்குழுவை அமைத்துள்ளது. நாள்தோறும் பதினைந்து சிகரெட்டுகளைப் புகைப்பதால் உண்டாகக்கூடிய பாதிப்பிற்குச் சமமான பாதிப்பைத் தனிமை ஏற்படுத்துகிறது. மாறும் உலகச்சூழல், பொருளாதார நிலை, வாழ்க்கைப் பிரச்சினைகள், சமூகச் சீர்கேடுகளுக்கு இடையில் தனிமை மனித உடல் மற்றும் மன நலத்தைப் பாதிக்கிறது.
உயிர் கொல்லும் தனிமை
தினமும் பதினைந்து சிகரெட்டுகளைப் புகைப்பதால் உயிரிழப்பவர்களுக்குச் சமமான எண்ணிக்கையில் மனிதர்கள் உலகில் தனிமையால் உயிரிழக்கின்றனர் என்று உலக சுகாதார நிறுவனம் இது குறித்து ஆராய அமைத்துள்ள பன்னாட்டு நிபுணர் குழுவின் தலைவரும், யு.எஸ். சர்ஜன் ஜெனரலுமான டாக்டர் விவேக் மூர்த்தி (Surgeon General Dr. Vivek Murthy) கூறுகிறார். இந்தக் குழுவில் ஆப்பிரிக்க யூனியன் இளைஞர் பிரதிநிதி சிடோ எம்பம்பா (Chido Mpemba) உள்ளிட்ட பதினோரு அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் ஆய்வாளர்கள் உள்ளனர்.
புவி வெப்ப உயர்வு காரணமாகக் கடல் நீர்மட்டம் உயர்வதால் மூழ்கிக் கொண்டிருக்கும் பசுபிக் பெருங்கடலில் உள்ள சிறிய தீவு நாடான வனவாட்டுவின் (Vanuatu) காலநிலை மாற்றம் பற்றிய துறையின் அமைச்சர் ரால்ஃப் ரீஜன்வானு (Ralph Regenvanu) மற்றும் ஜப்பானின் தனிமையில் வாடுபவர்களுக்கான நலவாழ்வுத் துறை அமைச்சர் அயுகோ காடோ (Ayuko Kato) ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ள வேறு சிலர் ஆவர்.
கொரோனா பாதிப்பினால் மனிதர்களின் சமூகச் செயல்பாடுகள், பொருளாதார நிலை போன்றவை வெகுவாகப் பாதிக்கப்பட்ட துடன் தனிமையும் அதிகரித்தது. இந்தக் குழு மூன்றாண்டுகள் தன் ஆய்வுகளை மேற்கொள்ளும். தனிமை ஆரோக்கியத்தின் எல்லா நிலைகளையும் பாதிப்பதுடன், தனிமனித நலம் மற்றும் வளர்ச்சியைப் பாதிக்கிறது என்றும் எம்பம்பா கூறுகிறார். சமூகத்தினால் ஏற்படும் தனிமைப்படுத்தலுக்கு எல்லைகள் ஏதும் இல்லை; மொழி வரையறைகளும் இல்லை.
தனிமை, உடற்பருமன் மற்றும் உடற்பயிற்சி இல்லாததால் ஏற்படும் ஆரோக்கியப் பிரச்சினைகளை விடவும் அதிகமான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று விவேக் மூர்த்தி கூறுகிறார். மேற்கத்திய நாடுகளிலேயே தனிமையால் அதிகமானவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்று கருதப்படும் நிலையில், உலகில் எல்லா இடங்களிலும் நான்கில் ஒரு முதியவர் தனிமையால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
தனிமை, டிமென்சியா (மறதி நோய்) நோய்க்கான வாய்ப்பை 50 சதவிகிதமும், இரத்தக்குழாய் கோளாறுகள் மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பை 30 சதவிகிதமும் அதிகரிக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. இளம் வயதினரையும் தனிமை பாதிக்கிறது. உலகில் 5 முதல் 15 விழுக்காடு வரையிலான விடலைப்பருவத்தினர் தனிமையில் வாடுகின்றனர். ஆப்பிரிக்காவில் 12.7 விழுக்காடு விடலைப்பருவத்தினரும், ஐரோப்பாவில் 5.3 விழுக்காட்டினரும் தனிமையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு
பள்ளியில் தனிமையால் அதிகம் பாதிக்கப்படும் குழந்தைகள் பிற்காலத்தில் கல்லூரிப் படிப்பைத் தொடராமல் பாதியிலேயே இடைநிற்கின்றனர் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இது மோசமான பொருளாதாரச் சூழலை ஏற்படுத்துகிறது. மேலும், இளம் தலைமுறையினரிடையே சமூகத்துடன் தொடர்பற்ற நிலையை உருவாக்குகிறது; பணிபுரியும் இடத்தில் ஆதரவற்ற நிலையை உண்டாக்குகிறது. ஆப்பிரிக்காவில் இளைஞர்களின் விழுக்காடு அதிகமாக இருப்பதால், அங்கு தனிமையானது சமாதானமற்ற சூழல், வேலையில்லாத் திண்டாட்டம், பாதுகாப்பின்மை, காலநிலைச் சீர்கேடு போன்ற சமூகப் பிரச்சினைகளின் தீவிரத்தை அதிகப்படுத்துகிறது.
தனிமை ஒரு நாட்டை மட்டும் பாதிப்பதில்லை. இதன் முக்கியத்துவம் இதுவரை குறைவாகவே மதிப்பிடப்பட்டுள்ளது; இந்த நிலை மாற வேண்டும் என்று விவேக் மூர்த்தி கூறுகிறார். மனித மனநலத்திற்குச் சமூக வாழ்வு அவசியம். தனிமை, மனிதகுலத்தைப் பாதிக்கும் பிரச்சினையாக அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்று பல ஆய்வாளர்கள் கருதுகின்றனர். வருங்கால உலகில் சமூக ஒற்றுமையை நிலைநாட்டவும், மனதால் உலக மக்களை ஒன்றிணைக்கவும் புதிய ஆய்வு முடிவுகள் உதவும் என்று நம்பப்படுகிறது.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்