பாபு நண்பர்களோடு தோட்டத்தில் இருந்தான். “என்ன செய்யறே அங்கே?'' என்று அப்பா கேட்டபோது, “என் நண்பர்களுக்கெல்லாம் கொய்யாப்பழம் பறிச்சுத் தருவதா கூட்டிக்கிட்டு வந்திருக்கேம்பா'' என்றான்.
“மரமேறும்போது கவனம்!'' என்றார், அம்மா.
“நாங்க யாரும் மரமேறப் போறது இல்லேம்மா. பொன்னனை வரச்சொல்லி இருக்கேன். அவன்தான் மரத்தில் எல்லாக் கொய்யாப்பழங்களையும் பறிக்கப் போறான். நாளைக்கு என் நண்பர்கள் வீட்டிலெல்லாம் நம்ம வீட்டு கொய்யாப்பழம் தான்.''
பொன்னன் பால் வியாபாரம் செய்பவன். அதோடு தோட்ட வேலை, கிணறு தூர் எடுப்பது, மரமேறுவது, வெள்ளை அடிப்பது என்று எல்லா வேலைகளையும்செய்யும் திறமை மிக்கவன்.
“கொய்யாப்பழம் மரத்தில் இருக்கும்போதே இத்தகைய வாசனை அடிக்கிறதே!'' என்று வியந்து கொண்டான், முத்து “பாரேன், ஒவ்வொரு பழமும் சின்னச் சாத்துக்குடி அளவுக்கு இருக்கே!'' என்று ஒத்துப் பாடினான், சேகர்.
அணில் ஏன் விழுவதில்லை?
இதற்குள் பொன்னன் வந்துவிட்டான். வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு கயிற்றில் கட்டிய கூடையோடு மரத்தின் மேலே ஏறினான். “கூடை எதுக்கு, பொன்னா? நீ பறிச்சுப் போடு நாங்க கீழே பிடிக்கிறோம்'' என்றான் பாபு.
“எல்லாம் பழுத்தப் பழங்கள், அமுக்கிப் பிடிச்சா கன்றிப் போயிடும். அதனால கூடையில பக்குவமா போட்டுத் தாரேன்.'' நடுக்கிளையில் கூடையை மாட்டிவிட்டு, பொன்னன் பழங்களைப் பறிக்க ஆரம்பித்தான். அப்பாவும் அம்மாவும் கீழே வந்து நின்று கொண்டனர்.
“அய்யோ! எல்லா பழங்களையும் அணில் கடிச்சிருக்குங்க. பெரிதா பழுத்த பழம் எதையும் விடலேங்க'' என்று கூடையைக் கீழே இறக்கினான், பொன்னன். எல்லோரும் பார்த்தனர். இருபது பழங்கள் இருக்கும். எல்லாம் பெரிய பெரிய பழங்கள். எல்லாமே ஒரு பக்கமாகக் கடிபட்டிருந்தன. கடிபட்ட இடத்தில் "செக்கச் செவேர்' என்று பழம் சிரித்தது.
“அய்யா, எல்லாப் பழங்களுமே இப்படித்தாங்க இருக்கு. காவெட்டா, பழுக்காத பழங்கள் தான் முழுசா இருக்கு'' என்றான் பொன்னன். நண்பர்களை அழைத்து வந்த பாபுவின் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது. “பரவாயில்லை பாபு. உனக்கு நல்ல மனதுதான், அணில் கடித்துவிட்டதற்கு நீ என்ன பண்ணுவே?, என்று நண்பர்கள் சார்பில் சேகர் சமாதானம் கூறினான்.
‘கிக் கிக்'கென்று சத்தம் கேட்டது. இரண்டு அணில்கள் மாடிப்படி மேலிருந்து மரக்கிளைக்குத் தாவி, கிளைகளில் இறங்கி வாலைத் தூக்கிக்கொண்டு ஒன்றை ஒன்று துரத்தி மறைந்தன.
“அப்பா, இந்தச் சனியன் பிடித்த அணில்களுக்கு ஏதாவது ஒரு வழி பண்ணணும்'' என்றான் பாபு.
“மீதிப் பழங்களையாவது காப்பத்தணும்னா ஏதாவது பண்ணத்தான் வேணும். நான் போன வாரமே பார்த்துட்டு சொன்னேன்.
கவட்டு வில்லால் ஓர் அணிலை அடித்து மரக்கிளையில் தலைகீழாத் தொங்கவிட்டா, அதைப் பார்த்து பயந்துக் கிட்டு கொஞ்ச நாளைக்கு எந்த அணிலும் வராதுன்னு சொன்னேன். எல்லாரும் வேண்டாம் வேண்டாம்னீங்க. இப்ப என்னாச்சு?'' - இது பொன்னன்.
“அணிலை அடிக்கிற சமாசாரம் வேண்டாம். வேற வழி இருந்தா சொல்லு'' என்றார் அம்மா.
“காயா இருக்கும்போதே பறிச்சு நாம்பளே பழுக்க வைச்சுக்க வேண்டியதுதான்.''
“சரி, அப்படியே பண்ணு''
பொன்னன் கூடையைக் கட்டிவிட்டுக் காய்களைப் பறிக்கத் தொடங்கினான்.
“இப்ப நான் என்ன பண்றது? ரொம்ப பெருமையா எங்க விலங்கியல் ஆசிரியரிடம். “நீங்க பழம் வாங்காதீங்க, சார் நான் மாலையில் எங்க வீட்டுக் கொய்யாப்பழத்தைத் தருகிறேன்'னு சொல்லிட்டு வந்தேன்'' என்று கலங்கினான் பாபு.
“பரவாயில்லே, போகும்போது மார்க்கெட்டில் நாலு பழத்தை வாங்கிக்கொண்டு போய்க் கொடுத்துவிட்டு, இப்படி ஆனதையும் சொல்லிட்டு வா'' என்றார், அப்பா.
பாபு நண்பர்களோடு கிளம்பினான். ஆசிரியரிடம் விளக்கியபோது அவன் தலை குனிந்துவிட்டது.
“இதனால் என்ன பாபு வந்தது? கொய்யாப்பழத்தை மரத்தில் பழுக்கவிட்டால் அணிலோ, இல்லை, கிளியோ பாழாக்கத்தானே செய்யும்'' என்றார் ஆசிரியர்.
“பழுத்த பழம் ஒன்றைக்கூட விட்டு வைக்கலே, அய்யா. எல்லாத்தையும் கடித்திருக்கு'' என்றான் சேகர்
“பழுத்திருந்தால்தான் அணில் கடிக்கும். கிளி கொத்தும். காயை இவை தொடவே தொடாது. இன்னும் கேட்டால், அணில் கடித்த பழம் அதிகச் சுவையாக இருக்கும்'' என்றார் ஆசிரியர்.
“அய்யா, எங்க வீட்டு மாமரத்தில் ஒரு அணில் கூடு கட்டியிருக்கிறது'' என்றான் சிவா
“அணில் பாலூட்டியாச்சே! எப்படிக் கூடு கட்டும்?'' என்று வியப்புடன் கேட்டான் ஜார்ஜ்.
“அணில் பாலூட்டியானாலும் கூடு கட்டித்தான் குட்டி போடும்'' என்று சிரித்தார் ஆசிரியர்.
“ஓர் அணிலைக் கொன்று மாட்டி வைக்கறேன்னு சொன்னப்ப நான் தான் வேண்டாம்னுட்டேன். "அணிலே அணிலே வா வா, அழகு அணிலே வா வா'ன்னு சின்ன வயதில் பாடிட்டு, இப்ப அதே அணிலைக் கொல்வது என்பதை என்னால் தாங்கவே முடியலே!'' என்றான் பாபு.
“நாம்ம அதிகம் நேசிக்கும் கிளியும் அணிலும் விவசாயிகளுக்குத் தீங்கு பண்ற மாதிரி நாம நேசிக்கும் வேறு எந்த உயிரினமும் பண்ணுவதில்லை''
“எப்படி அய்யா அணில் கொஞ்சம்கூடக் கீழே விழாமல் தாவுது?''
“எதையும் விழாது அழுந்தப் பற்றிக் கொள்ளும்படி அதன் விரல் நகங்கள் கூர்மையா வளைஞ்சிருக்கும். அதோடு, தாவும் போது பேலன்ஸ் பண்ண ஏத்தபடி அதன் அடர்ந்த வால் அமைஞ்சிருக்கு. பாராசூட் மாதிரி இது அணிலுக்குப் பயன்படுகிறது. அணில்னு சொன்னதும், அதன் அழகான வால்தானே நமக்கு நினைப்பு வருது. இது தன் கூட்டைக் கட்டியதும், குஞ்சுகளுக்கு மெத்மெத்தென்று கதகதப்பாக இருக்க, அழகான வாலில் இருந்து முடிகளை வாயால் கடித்து எடுத்துப் போட்டுத் தயார் பண்ணும்.''
“அதிசயமா இருக்கே!''
“பிறந்த உடனே குட்டிகள் அழகாக இருக்காது, காதுகள் மடிஞ்சு, கண்கள் மூடியபடி பார்க்கவே அசிங்கமாய் இருக்கும். ஒன்றரை மாதமான பிறகுதான் குட்டி அணில் மாதிரி ஆகும். அம்மாதான் எல்லாவற்றையும் கவனித்துப் பண்ணும்.''
ஆசிரியர் தொடர்ந்தார்.
“இதன் வாயின் முன்பக்கத்தில் மேலும் கீழுமா இரண்டிரண்டு உளிப்பற்கள் இருக்கும். இவை தினமும் வளரும். அதனால் கடின ஓடுகள், மரக் கிளைகள் இவைகளை எலிகளைப் போலவே துருவும். எதுவும் கிடைக்கலேன்னா, மேலும் கீழுமா தாங்களே பற்களை அரைத்துக் கரைத்துக் கொள்ளும். இப்படிப் பண்ணலேன்னா, உளிப்பற்கள், நீளமா வளர்ந்து எதுவும் சாப்பிட முடியாம இவை இறந்து விடும்.''
“அணிலின் முதுகில் உள்ள கோடுகள் அணை கட்ட உதவியதற்காக ராமர் போட்டவை என்கிறார்களே!''
ஆசிரியர் சிரித்தார். “இது அறியாமை, ராமருக்கு அணில் போன்ற உயிரினங்களும் உதவின என்பதைக் காட்ட எழுந்த கற்பனைக் கதை. ஆனால் அது உண்மையல்ல. ராமாயண காலத்திற்கு முன்பே அணில்களின் முதுகில் கோடுகள் இருந்திருக்கின்றன.''
அறிவியல் உண்மைகள்
அணில்கள் கொறிக்கும் பாலூட்டி இனத்தைச் சேர்ந்தவை. பழங்களுக்குப் பெரும் சேதம் விளைவிப்பவை.
கொறிக்காவிட்டால், முன்பற்களை அரைக்காவிட்டால் இவை வளர்ந்து வாயை அசைக்க முடியாதபடி செய்துவிடும். அதனால் அணில் பட்டினியால் இறந்து விடும்.
தாவும்போது வால் இதற்குப் பாராசூட்டைப் போல் பேலன்ஸ் செய்து கொள்ள உதவுகிறது.
கைகளில் உள்ள வளைந்த நகங்கள் விழாமல் இருக்க உதவுகின்றன.
பறக்கும் அணில்களும் உண்டு. அவை நம் நாட்டில் இல்லை.
- ரேவதி
(நன்றி : தலித் முரசு அக்டோபர் 2008)