இன்றைய சூழ்நிலையில் கால்நடை வளர்ப்பு தொழிலில் அனைவரையும் கவர்ந்து ஈர்க்கும் தொழில் ஆடு வளர்ப்பு தொழில் என்றால் அது மிகையாகாது. ஏனெனில் ஆடு வளர்ப்பு தொழில் அதிக அளவில் லாபம் தரக்கூடியது. காரணம் என்னவென்றால் நாளுக்கு நாள் மக்களின் இறைச்சி உண்ணும் பழக்கவழக்கங்களும் தேவையும் அதிகரித்துக் கொண்டே வருவதனால் ஆட்டு இறைச்சியின் விலையும் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே இருக்கிறது. இதனால் தான் பண்ணையாளர்கள் ஆடு வளர்ப்பு தொழிலில் அதிக அளவு லாபம் பெறலாம். நம் நாட்டில் சிறு, குறு, நிலமற்ற விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் ஆடுவளர்ப்பு பெரும் பங்கு வகிக்கிறது. ஆடு வளர்ப்பு தொழிலை மிக எளிமையாக பண்ணையாளர்கள் மேற்கொள்ளலாம் ஏனெனில் ஆடு வளர்ப்பிற்கு முதலீடு மிகக் குறைவு. அதே மாதிரி கொட்டகை மற்றும் மேலாண்மை பிரச்சினைகளும் மிகவும் குறைவு. மேலும் ஆடு வளர்ப்பதற்கு தனி வேலையாட்கள் இல்லாமால் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களே இத்தொழிலை எளிமையாக செய்யலாம்.
இப்படிப்பட்ட நல்ல குணாதியசங்கள் இருக்கின்ற ஆடுகளை அதாவது செம்மறி மற்றும் வெள்ளாடுகளை வளர்த்து அதிக லாபகரமாக பண்ணையை நடத்த வேண்டுமென்றால் ஆட்டுக் குட்டிகளோட பராமரிப்பு ம்ற்றும் மேலாண்மை மிகவும் முக்கியம். ஆட்டுக் குட்டிகளின் இறப்பு பண்ணையாளருக்கு அதிக அளவில பொருளாதார ரீதியாக இழப்பை ஏற்படுத்தக் கூடியது. ஏனெனில் இளம் குட்டிளின் நோய் தொற்றும் மற்றும் இறப்பு விகிதமும் அதிகமாக இருக்கும். நம் இந்திய நாட்டில் இளம் குட்டிகளின் இறப்பு விகிதம் 9 விழுகாட்டில் இருந்து 47 விழுக்காடாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெரும்பாலான குட்டிகள் பிறந்த முதல் மாதத்திலேயே அதிக அளவில் நோய்வாய்ப்பட்டு இறக்க அதிக வாய்ப்பு இருக்கும். மழை மற்றும் குளிர் காலங்களில் நோய் தொற்று காரணமாக ஏற்படும் இறப்பு மற்றும் ஈ கோலை போன்ற நோய்க்கிருமிகளினால் உயிரிழப்பு அதிகமாக ஏற்படும்.
பொதுவாக இளம் குட்டிகளையே அதிக அளவிலான நோய்க் கிருமிகள் தாக்கும் ஏனெனில் இளம் குட்டிகளில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் சுகாதாரமற்ற இடவசதி, நோய் பாதிப்புக்குள்ளான அல்லது நோய் பரப்பும் மற்ற விலங்குகளிலிருந்தும் நோய்த் தொற்று ஏற்படலாம். அதிகமான குளிர் அல்லது அதிக அளவிலான வெப்ப அயர்ச்சி போன்ற காரணங்களாலயும் குட்டிகளில் நோய்த்தொற்று ஏற்படும். மேலும் தீவனத்தின் மூலமாகவும் காற்றின் மூலமாகவும் நோய் பரவுவதற்கான வாய்ப்புள்ளது. எனவே சரியான முறையில பராமரிக்கும் போது இத்தகைய நோய் தொற்றுகளில் இருந்து ஆட்டுக்குட்டிகளை பாதுகாத்து சிறந்த இனப்பெருக்கத் திறன் மிகுந்த ஆடுகளாக அல்லது அதிக உடல் எடையுடன் ஆரோக்கியமான ஆடுகளாக வளர்த்து இறைச்சிக்காக விற்பனை செய்து அதிக இலாபம் பெறலாம்.
பெட்டை மற்றும் கிடா ஆடுகளை வாங்குதல்
- ஆடு வளர்ப்பு தொழில் தொடங்கவும் ஆட்டு குட்டிகளை இறப்பில் இருந்து பாதுகாக்கவும் இனப்பெருக்கத்திற்காக தாய் ஆடுகளை அதாவது ஆரோக்கியமான பெட்டை அல்லது கிடா ஆடுகளை நல்ல விதமாக பராமரிக்கும் பண்ணை அல்லது ஆடு வளர்ப்பவர்களிடமிருந்து நோய் தாக்கம் இல்லாத காலத்தில், நோய் தாக்கம் இல்லாத பகுதி அல்லது ஊர்களில் இருந்து வாங்க வேண்டும். ஏனெனில் நல்ல ஆரோக்கியமான ஆடுகளே ஆரோக்கியமான குட்டிகளை போட முடியும்.
- கிடா ஆடுகளை இனப்பெருக்கத்திற்காக வாங்கும்போது ஒரே உடல் எடை மற்றும் ஒரே வயதில் இருக்கின்ற மாதிரி வாங்கவேண்டும். அதேபோல சரியான எடை மற்றும் விகிதத்தில் அதாவது குறைந்தது 15 கிலோ உடல் எடை உள்ள ஆடுகளை, 20 பெட்டை ஆடுகளுக்கு ஒரு கிடா என்ற விகிதத்தில் வாங்க வேண்டும்.
- வாங்கிய உடனேயே ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம், தடுப்பூசி மற்றும் உண்ணி குளியல் செய்து அதன் பின்னரே நம் பண்ணையில் அனுமதிக்க வேண்டும்.
- ஆடுகள் ஒரு வயதை எட்டியவுடன் அதாவது பருவத்திற்கு வந்தவுடன் சரியான உடல் எடையில் ஆரோக்கியமாக உள்ள ஆடுகளை தேர்வு செய்து இனப்பெருக்கத்திற்காக பயன்படுத்த வேண்டும்.
- ஆடுகளுக்கு இனச்சேர்க்கை நடைபெறும் காலகட்டத்தில் பசுந்தீவனம், அடர்தீவனம், தாது உப்புகள் மற்றும் வைட்டமின்கள் போன்றவற்றை தவறாமல் கொடுக்கவேண்டும்.
- ஒரு கிடா ஆட்டை ஒரே நாளில் ஒன்று அல்லது இரண்டு பெட்டை ஆடுகளுக்கு மேல் இனச்சேர்க்கைக்கு உட்படுத்த கூடாது.
- இனச் சேர்க்கைக்குப் பிறகு பெட்டை ஆடுகளில் சினை அறிகுறி தென்படுகிறதா என்று கவனிக்க வேண்டும்.
- ஆடுகள் சினையாக இருக்கும் பட்சத்தில் சினை ஆடுகளை தனியாக பிரித்து அதிக கவனத்துடன் பராமரிக்க வேண்டும்.
- குட்டி போடுவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பிலிருந்து 200 கிராம் அடர்தீவனத்தை அதிகமாக கொடுக்கும் போது அதிக எடை இருக்கிற குட்டிகளை பண்ணையாளர்கள் பெறலாம்.
- கிடா ஆடுகளையும் நோய் தாக்கம் ஏதுமின்றி பெட்டை ஆடுகளுடன் ஒன்றாக மேய்ச்சலுக்கு அனுப்பி பராமரிக்க வேண்டும். குறைந்தது இரண்டு வருடத்திற்கு ஒரு முறையாவது பண்ணையிலுள்ள கிடா ஆடுகளை சுழற்சிமுறையில் மாற்ற வேண்டும்.
குட்டி ஈனும் பெட்டியை தயார் செய்தல்
- குட்டி ஈனுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே குட்டி ஈனும் பெட்டியை / அறையை தயார் செய்ய வேண்டும். பெரிய ஆடுகளின் கொட்டகையில் பலவிதமான கிருமிகள் தொற்றுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். இந்த கிருமிகள் பெரிய ஆடுகளோட பெருங்குடல் பகுதியில் பொதுவாகவே இருக்கும். அதனால் இந்த கிருமிகள் அவற்றில் நோய் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புகள் குறைவு.
- ஆனால் இந்த கிருமிகள் குட்டிக ளில் பலவிதமான அயர்ச்சியை ஏற்படுத்தும். எனவேதான் சினையாடுகள் குட்டி ஈனுவதற்கு ஒரு மாதம் முன்பாகவே குட்டி போடக்கூடிய பெட்டியில தனியாக வைத்து பராமரிக்க வேண்டும்.
- குட்டி ஈனும் பெட்டியில இருக்கின்ற தண்ணீர் மற்றும் தீவன தொட்டியை கார்பாலிக் அமிலம் ரசாயனத்தை கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். குட்டி ஈனும் பெட்டியில் உள்ள மண் தரையை 10 சென்டி மீட்டர் ஆழத்துக்கு ஆறு மாதத்துக்கு ஒரு தடவை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். இதனால் கிருமிகளின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தலாம். மேலும் கிருமி நாசினி மற்றும் பூச்சிக்கொல்லி தெளிப்பான்கள் மூலம் அவ்வப்போது குட்டி ஈனும் பெட்டியை / அறையை சுத்தம் செய்ய வேண்டும்.
- குட்டி ஈனும் அறையில் சுத்தமாக இருக்கின்ற வைக்கோல் அல்லது காய்ந்த புற்களைப் பரப்பி கதகதப்பான சூழலை ஏற்படுத்த வேண்டும்.
பிறந்த குட்டிகளை பராமரித்தல்
- குட்டிகள் பிறந்தவுடன் முதலில் தாய் ஆட்டின் மடியை சுத்தம் செய்து சீம்பால் ஊட்ட வேண்டும். சீம்பாலில் குட்டிகளுக்கு தேவையான நோய் எதிர்ப்பு திறன் அதிக அளவில் உள்ளதால் தவறாமல் குட்டி பிறந்த அரை மணி நேரத்திற்குள் சீம்பால் ஊட்ட வேண்டும். அது மட்டுமல்லாமல் வைட்டமின் ஏ சத்தும் அதிக அளவில் இருக்கும். சீம்பாலை சரியான நேரத்தில் சரியான அளவு கொடுக்கும் போது ஈக்கோலை நோய்க் கிருமிகளால் ஏற்படும் நோய் பெருவாரியாக கட்டுப்படுத்தப்படும். தாயை இழந்த குட்டிகளுக்கு மற்ற ஆடுகளிலிருந்து பால் எடுத்துக் கொடுக்க வேண்டும்.
- குட்டியை தாயிடமிருந்து பிரித்து நஞ்சுக்கொடியை கிருமிநாசினி அல்லது போவிடன் ஐஓடின் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். பிறகு இரண்டு அங்குல இடைவெளி விட்டு சுத்தமான கத்திரிக்கோலை கொண்டு நஞ்சுக்கொடியை வெட்டி, சுத்தமான நூல் கொண்டு கட்ட வேண்டும். அதன்பிறகு புண்ணின் மேல் போவிடன் ஐஓடின் மருந்து அல்லது கிருமிநாசினி மருத்துகளை தடவி விட வேண்டும்.
- குட்டி ஈன்ற தாய் ஆட்டின் மடியை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும், ஏனென்றால் குட்டி பால் குடித்தவுடன் மடியின் காம்பு மற்றும் மடிக் குழாய்கள் திறந்திருக்கும். இதன் மூலம் கிருமிகள் எளிதாக உள் நுழைந்து நோய் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இதனைத் தவிர்ப்பதற்காகவே பண்ணையாளர்கள் தாயின் மடியை கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும்.
- பிறந்த குட்டிகளின் உடல் எடையை பார்த்து பதிவேடுகளில் பதிவு செய்ய வேண்டும். அது மட்டுமன்றி பிறந்த குட்டிகள்லிருந்து சிறந்த பெட்டை மற்றும் கிடா குட்டிகளை தேர்ந்தெடுத்து அதிக கவனத்துடன் ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டும். அப்போதுதான் இந்த குட்டிகளை பிற்காலத்தில் பண்ணையில் இனப்பெருக்கத்திற்காக பயன்படுத்த முடியும்.
- குட்டி போடுவதற்கு முன்பாகவே பண்ணையை அல்லது கொட்டகைய சுண்ணாம்பு மற்றும் பார்மலின் அதாவது ஒரு லிட்டர் சுண்ணாம்பு தண்ணீரில் ஐந்து மில்லி பார்மலின் கிருமிநாசினி மருந்தை கலந்து வெள்ளை அடிப்பதன் மூலமாக குட்டிகளை நோய் கிருமிகளின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கலாம்.
- கொட்டகை அல்லது பண்ணையிலுள்ள புழுக்கை, சிறுநீர், மீதமான அடர் தீவனம், பசுந்தீவனம் போன்ற எச்சங்களை அல்லது கழிவுகளை தினந்தோறும் சுத்தம் செய்து பண்ணைக்கு அருகாமையில் தனியாக குப்பை குழி அமைத்து அவற்றில் கொட்ட வேண்டும்.
- குட்டிகளின் ஆரோக்கியத்திற்கு தேவையான அளவு தாய்ப்பால், வைட்டமின்கள், தாது உப்பு கலவை, தாது உப்புக் கட்டி போன்றவற்றையும் தவறாமல் அளிக்கும் பொழுது ஆரோக்கியமான குட்டிகளை நல்ல உடல் எடையில் பெற முடியும்.
ஆட்டுக்குட்டிகளில் தீவன மேலாண்மை
- குட்டி பிறந்து இரண்டு அல்லது மூன்றாவது வாரத்திலிருந்து அடர் தீவனம் மற்றும் பசுந்தீவனம் கொடுக்க ஆரம்பிக்கலாம்.
- குட்டிகளை இளந்தளிர் அல்லது குளம் குட்டைக்கு பக்கத்தில் உள்ள புல்லை மேய விட கூடாது ஏனெனில் இங்கு உள்ள புற்களில் ஒட்டுண்ணிகளின் இடைநிலை பருவங்கள் அதிக அளவில் ஒட்டிக்கொண்டிருக்கும். ஆட்டுக் குட்டிகள் இத்தகைய இடங்களில் மேயும் பொழுது இந்த இடைநிலை பருவங்களும் ஆடுகளின் வயிற்றுக்குள் சென்று நோய் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
- குட்டிகள் தாய்ப்பாலை மட்டுமே நம்பி இருக்கும் பட்சத்தில் அவற்றிற்கு தேவையான முழுமையான ஊட்டச் சத்துக்கள் கிடைப்பதில்லை. எனவே ஆட்டுக்குட்டிகளுக்கு வைட்டமின்கள், தாது உப்பு கலவை அல்லது தாது உப்பு கட்டி வழங்கும் பொழுது ஆரோக்கியமான குட்டிகளை பெறமுடியும்.
- எடை குறைவாக உள்ள குட்டிகளை தனியாகப் பிரித்து அதிக கவனத்துடன் ஊட்டச்சத்துக்கள் மிகுந்த தீவனம் அளித்து பராமரிக்க வேண்டும்.
- குட்டி பிறந்த பின் மாதம் ஒருமுறை அதன் உடல் எடையைப் பார்த்து பதிவேடுகளில் பதிய வேண்டும்.
- பிறப்பு எடை, மூன்றாவது மாத எடை, ஆறாவது மாத எடை போன்றவற்றைப் பொருத்து பிற்காலத்தில் பண்ணையில் இனப்பெருக்கத்திற்காக குட்டிகளை தேர்ந்தெடுக்க முடியும்.
- தீவனத்தோடு சேர்த்து குட்டிகளுக்கு சுத்தமான தண்ணீர் எல்லா நேரங்களிலும் கிடைக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் சுத்தமாக அல்லது சுகாதாரமாக இல்லாதபோதும் நோய் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஆட்டுக்குட்டிகளில் குடற்புழு நீக்கம் செய்தல்
- குடற்புழு நீக்கம் குறிப்பாக மழை மற்றும் குளிர்காலங்களில் ஆடுகளில் நோய் எதிர்ப்பு திறன் குறையும். இதனால் பலவகையான குடற்புழுக்கள் தாக்குவதற்கான வாய்ப்பு உள்ளது.
- குட்டி பிறந்து இரண்டு மற்றும் நான்காவது வாரத்தில் நாடாப்புழுக்களுக்கு எதிராக குடற்புழு நீக்க மருந்தை அளிக்க வேண்டும்.
- நான்கு மாதத்திற்கு மேற்பட்ட குட்டிகளுக்கு கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி புழுக்கையை ஒட்டுண்ணிகளின் இடைநிலை பருவங்கள் உள்ளதா பரிசோத்தித்து சரியான\ குடற்புழு நீக்க மருந்தை முறையான இடைவெளியில் கொடுக்கவேண்டும். உரிய காலத்தில் வெளி ஒட்டுண்ணி மற்றும் ஒட்டுண்ணிகளை கட்டுப்படுத்த கால்நடை மருத்துவரின் அறிவுரைப்படி தகுந்த குடற்புழு நீக்க மருந்து கொடுத்து குட்டிகளில் ஏற்படும் இழப்பை தவிர்க்கலாம்.
ஆட்டுக்குட்டிகளில் நோய் மேலாண்மை
- நோய் கிருமிகள் முக்கியமாக தீவனம் மற்றும் காற்றின் மூலாமாகவே பரவுகின்றது. குறிப்பாக ரோட்டா வைரசு, சால்மோனெல்லா, துள்ளுமாரி நோய் மற்றும் மைக்கோ பிளாஸ்மா, இரத்த கழிச்சல் போன்ற நோய்களிலிருந்து ஆட்டுக்கு குட்டிகளை பாதுக்காக்க தடுப்பூசி அளித்த்தும், சுகாதாரமான மேலாண்மை முறைகளை பின்பற்றுவதன் மூலமாகவும் ஆட்டுக்குட்டிகளை இறப்பிலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்.
தடுப்பூசி அளித்தல்
- பொருளாதார ரீதியாக இழப்பை ஏற்படுத்தும் முக்கியமான நோய்களுக்கு உண்டான தடுப்பூசிகளை உரிய காலகட்டத்தில் கால்நடை மருத்துவரின் ஆலோசனையைப்படி போட வேண்டும்.
- ஆட்டு அம்மை நோய்க்கு எதிராக 3 லிருந்து 6 மாத வயதில் முதல் தடுப்பு ஊசியும் அதன் பிறகு ஆண்டிற்கு ஒருமுறையும் போட வேண்டும்.
- நான்கு மாத வயதில் கோமாரி நோய்க்கு எதிரான தடுப்பு ஊசியும் அதன் பிறகு ஆண்டிற்கு ஒரு முறையும் போட வேண்டும்.
- 6 மாத வயதில் துள்ளுமாரி நோய்க்கு எதிரான தடுப்பு ஊசியும் அதன் பிறகு ஆறு மாதங்களுக்கு ஒரு முறையும் போட வேண்டும்.
- சினை ஆட்டிற்கு குட்டி ஈனுவதற்கு 2 மாதங்களுக்கு முன்பு ரணஜன்னி நோய்க்கு எதிரான தடுப்பூசி போட வேண்டும். பிறந்த குட்டிகளுக்கு பிறந்த 24 மணி நேரத்தில இந்த தடுப்பூசி கொடுக்க வேண்டும்.
- மற்ற நோய்களுக்கு நோய்த்தாக்கம் உள்ள பகுதிகளில் அல்லது கிளர்ச்சி ஏற்படும் போது அதற்கு ஏற்றார்போல் கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி தடுப்பூசி அளிக்க வேண்டும்.
- குட்டிகளை தாக்கக்கூடிய இரத்தக்கழிச்சல் மற்றும் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு தடுப்பு மற்றும் சுகாதாரமான பராமரிப்பு முறைகளை பின்பற்றுவதன் மூலம் குட்டிகளில் இறப்பைத் தடுக்கலாம்.
ஆட்டுக்குட்டிகளில் மருந்து குளியல் அளித்தல்
- ஆட்டுக்குட்டிகளில் மருந்து குளியல் மிகவும் அவசியமான ஒன்றாகும். ஏனெனில் ஆட்டுக்குட்டிகளில் அக மற்றும் புற ஒட்டுண்ணிகளின் தாக்கம் அதிக அளவில் இருக்கும். குறிப்பாக செம்மறி ஆடுகளில் மிக அதிக அளவில் இருக்கும். இதன் காரணமாகவே நாம் ஆட்டுக்குட்டிகளுக்கு மாதம் ஒரு முறையாவது மருந்து குளியல் கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி அளிக்க வேண்டும்.
- குட்டிகளுக்கு மருந்து குளியல் கொடுத்ததோடு அல்லாமல் ஆட்டுக் கொட்டகையில் உள்ள மூலை மற்றும் முடுக்குகளிலும் மருந்து கரைசல் தெளிக்க வேண்டும். உண்ணிகள் அல்லது அக மற்றும் புற ஒட்டுண்ணிகளின் முட்டை மற்றும் இடைநிலை பருவங்கள் கொட்டகையின் மூலை முடுக்குகளில் ஓழிந்து கொண்டிருக்கும்.
- மருந்து குளியல் முடித்தவுடன் கொட்டையில் உள்ள மண் மற்றும் வைக்கோல் படுக்கையை மாற்ற வேண்டும். இந்த மருந்து குளியல் மழை பெய்யும் பொழுது செய்ய கூடாது. வெளியில் நன்றாக வெயில் அடிக்கும் நாட்களில் உலர்வான நிலப்பரப்பில் வைத்து கொடுக்க வேண்டும்.
- மருந்து கரைசல் வாய் மற்றும் மூக்கின் உல் நுழையாமல் பார்த்ததுக் கொள்ள வேண்டும். குட்டிகளில் கொட்டகையில இருக்கின்ற மண் தரையை ஒன்றிலிருந்து ஒன்றரை அடி ஆழத்திற்கு மண்ணை சுரண்டி எடுத்து அதை மாற்ற வேண்டும். அவ்வப்போது இந்தமாதிரி மண்ணை மாற்றும்போது கிருமிகளின் பெருக்கத்தை ஓரளவு குறைக்கலாம்.
பண்ணைகளில் இருந்து குட்டிகளை கழித்தல் அதாவது கல்லிங்
- குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த ஆடுகளாக இருப்பின் அந்தந்த இனங்களுக்கான நிறத்தில் அல்லாமல் மாறுபட்ட நிறங்களுடன் பிறந்த குட்டிகளை நீக்கிவிடவேண்டும் எக்காரணத்தைக் கொண்டும் இவ்வாறான ஆடுகளை இனவிருத்திக்கு / இனச்சேர்க்கைக்கு பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால் ஏனென்றால் இந்த ஆட்டு குட்டிகள் மற்ற ஆடுகளை காட்டிலும் குறைவான வளர்ச்சி திறன் மற்றும் உற்பத்தித் திறனுடன் காணப்படும்.
- பிறவிக் கோளாறுகள் உள்ள குட்டிகள் உதாரணமாக நீளமான அல்லது குட்டையான தாடைகள், ஒன்றோடொன்று பொருந்திய தாடைகள் இவ்வாறான குட்டிகளையும் பண்ணையிலிருந்து நீக்கி விட வேண்டும்.
- நிரந்தர அல்லது தீர்க்க முடியாத நோய் வாய்ப்பட்ட குட்டிகளையும் பண்ணையில் இருந்து கழித்து விட வேண்டும்.
- மற்ற ஆலோசனைகள்
- சில ஆடுகளை தனிமைப்படுத்தல் மிகவும் முக்கியம். அதாவது சினையுற்ற ஆடுகள், நோயுற்ற ஆடுகள் புதிதாக வந்த ஆடுகள் இவற்றை தனிமைப்படுத்த வேண்டும் தனிமை படுத்தும் போது ஏதாவது நோய் தாக்கம் இருக்கிறதா என்று எளிமையாக கண்டுபிடித்துவிடலாம். பிறகு தகுந்த பரிசோதனைகள் செய்து தகுந்த மருந்து கொடுத்து அந்த ஆடுகளை பாதுகாக்கலாம்
- மழை மற்றும் குளிர் காலங்களில் மழை மற்றும் குளிர் காலங்களில் இரத்த கழிச்சல் நோய் ஆட்டு குட்டிகளை அதிகளவில் தாக்கக் கூடியது. குறிப்பாக நீர்த்தேக்கம் அல்லது சகதியோடு இருக்கிற பகுதிகளில் இந்த நோய் தாக்கத்தின் அளவு அதிகமாக இருக்கும். எனவே மழைக் காலத்துக்கு முன்பு கண்காணித்து சரியான முறையில் பராமரிக்க வேண்டும்
- .பெரும்பாலும் குட்டிகளுக்கு வாய் மூலமாக நோய் தொற்று அதிகமாக பரவ வாய்ப்பு உள்ள்து. அதனால் அவ்வப்போது கொட்டகை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் கிருமிநாசினி போட்டு சுத்தம் செய்ய வேண்டும். அதோடு தண்ணீர் தொட்டி, தீவனத் தொட்டியை சுத்தமாக வைப்பதன் மூலமாக குட்டிகளுக்கு நோய்த்தாக்கம் ஏற்படுவதை தடுக்கலாம்.
பண்ணையாளர்கள் இத்தகைய பராமரிப்பு முறைகளை பின்பற்றி குட்டிகளை பராமரிக்கும் போது குட்டிகளின் இறப்பு விகிதம் குறைந்து வருமானம் அதிகரிக்கும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை.
- முனைவர். வெ. சசிகலா, மரு. கொ. ப. சரவணன் மற்றும் முனைவர். அ. மணிவண்ணன்
கால்நடை விரிவாக்கக் கல்வித் துறை,
கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒரத்தநாடு