அறிவியல் ஆராய்ச்சியா, காட்டுயிர்களா - எது முக்கியம்? உலகில் உள்ள பல்லுயிரிய முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் நீலகிரி உயிர்மண்டலக் காப்பகமும் (Nilgiri Biosphrere Reserve) ஒன்று. இதன் ஒரு பகுதியாக புலிகளை பாதுகாப்பதற்காக முதுமலை வனவிலங்கு சரணாலயம் அமைக்கப்பட்டுள்ளது. நுண்ணணு துகள்கள் தொடர்பாக நடக்க உள்ள முன்னோடி ஆய்வு திட்டத்துக்காக 'இந்திய நியூட்ரினோ ஆய்வுக்கூடம்' (India based Neutrino Observatory - INO) அமைய தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடம் இந்தச் சரணாலயத்தின் சிங்காரா பகுதியில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது விஞ்ஞானிகள்-சூழலியலாளர்கள் இடையே பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.
'இந்திய நியூட்ரினோ ஆய்வுக்கூடம்' என்ற புதிய திட்டத்தில் நியூட்ரினோ எனப்படும் நுண்ணணு துகள்கள் (sub atomic particles) தொடர்பாக ஆராய்ச்சி நடக்க உள்ளது. உலகில் உள்ள துகள்களிலேயே மிகமிக நுணுக்கமான அளவு கொண்டவை இந்த நியூட்ரினோ நுண்ணணுத் துகள்கள். ஒவ்வொரு நொடியும் கோடிக்கணக்கான நியூட்ரினோக்கள் நமது உடலுக்குள் சென்றாலும், வாழ்நாளில் ஒன்று அல்லது இரண்டு உயர்சக்தி நியூட்ரினோக்கள் மட்டுமே நமது உடலை விட்டு வெளியேறுகின்றனவாம். இது ஆய்வுக்குரியதாகக் கருதப்படுகிறது. அதிகம் வினைபுரியாத, அதிகம் புரிந்துகொள்ளப்படாத இந்த நுண்ணணுத் துகள்கள், எடையற்றவை என்று இவ்வளவு காலம் கருதப்பட்டு வந்தது. இவற்றுக்கு எடை உண்டு என்றும் சமீபத்திய ஆராய்ச்சிகள் கண்டறிந்துள்ளன. பல்வேறு வகை நுண்ணணுத் துகள்கள் பிரபஞ்சத்தில் பயணம் செய்யும்போது ஒன்றுடன் ஒன்று கலக்கின்றன, ஊசலாடுகின்றன. இந்தச் செயல்பாடுகள் தொடர்பான ஆராய்ச்சி அணு, அணு இயற்பியல், வானியல், பிரபஞ்சவியல் போன்ற இயற்பியல் துறைகளில் பல்வேறு மாற்றங்களை உருவாக்கக் கூடும்.
உலகின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள 'நியூட்ரினோ ஆய்வுக்கூடங்கள்' இந்த நுண்ணணுத் துகள்கள் பற்றித் தீவிர ஆராய்ச்சி நடத்தி வருகின்றன. இந்த நுண்ணணுத் துகள்களின் செயல்பாட்டை பற்றி அதிகம் தெரியவில்லை என்பதால், இவற்றைப் பற்றி விரிவாக ஆராய்ச்சி செய்ய வேண்டியது அவசியம் என்றும், அதில் இந்தியா காலடி எடுத்து வைத்திருப்பது சர்வதேச முக்கியத்துவம் கொண்டது என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.
மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையம், கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், மும்பை ஐ.ஐ.டி., சென்னை இந்திய கணிதவியல் நிறுவனம், ஹவாய் பல்கலைக்கழகம், தில்லி மற்றும் கொல்கத்தா பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட 15 முன்னணி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் இத்திட்டத்துக்காக கைகோர்த்துள்ளன. 50க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் ஈடுபட இருக்கிறார்கள். இந்தத் திட்டத்துக்காக தற்போது நடப்பிலுள்ள 11வது ஐந்தாண்டு திட்டத்தில் ரூ. 470 கோடியும், 12வது ஐந்தாண்டுத் திட்டத்தில் ரூ. 450 கோடியும் ஒதுக்கப்பட உள்ளன.
நுண்ணணுத் துகள்களின் செயல்பாடு மிகவும் கூர்உணர்வு கொண்டது என்பதால், நிலத்துக்கு அடியில் சுரங்கம் அமைத்து ஆய்வுக்கூடத்தை கட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதற்காக சிங்காராவில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய வளாகத்தில் 1,300 மீட்டர் ஆழத்தில், 2 கி.மீ. நீளமுள்ள சுரங்கம் தோண்டப்பட உள்ளது. பாதுகாப்பு காரணங்கள், ஆய்வுக்கூடத்தை விரைவாகச் சென்றடைவதற்கான வசதி, கட்டமைக்கும்போது உருவாகும் குறைந்த தொந்தரவுகள் போன்ற அம்சங்கள் காரணமாக இந்த இடம் தேர்வு செய்யபட்டதாக கூறப்படுகிறது. இது போன்ற உலக முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வில் இந்தியா ஈடுபடுவது பெருமைக்குரியதுதானே என்று நமக்குத் தோன்றுவது இயல்புதான். ஆனால் சூழலியல் ஆர்வலர்கள் இதை இயற்கைக்கு எதிரான மிகப் பெரிய அச்சுறுத்தலாகக் கருதுகின்றனர்.
''நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்துக்காக நான்கு ஆண்டுகளுக்கு கட்டுமானப் பணிகள் நடக்கும். இதற்காக ஒரு நாளைக்கு 130 முறை லாரிகள் சென்று வரும். சுரங்கம் அமைத்து ஆய்வுக்கூடம் கட்டுவதற்கு 35,000 டன் கட்டுமானப் பொருட்களும் ஆய்வுக் கருவிகள் அமைப்பதற்கு 1,00,000 டன் இரும்பும் மைசூரில் இருந்து லாரிகள் மூலம் காட்டுக்குள் எடுத்துச் செல்லப்பட வேண்டும். சுரங்கம் தோண்டிய பிறகு 78,000 லாரி அளவுள்ள இடிபாடுகள் வெளியே கொட்டப்பட உள்ளன. இதனால் காட்டுயிர்கள் வாழ்வதற்கு கடும் நெருக்கடி ஏற்படும்'' என்கிறார் சூழலியல் ஆர்வலர் மரி மார்செல்.
இவ்வளவு பெரிய கட்டுமானம் நடக்க உள்ள இந்த ஆய்வுக்கூடம் பற்றி, கடந்த இரண்டு ஆண்டுகளில் எந்தத் தகவலும் பரவலாக வெளியாகவில்லை. திட்டம் தொடர்பான விவரங்கள் ரகசியம் காக்கப்பட்டுள்ளன. எதிர்ப்பு கிளம்பும் என்று அடக்கி வாசித்திருக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுப்பப்பட்டிக்கிறது.
சிங்காரா பகுதி அமைந்துள்ள மசினகுடி கிராமத்தில் 1929ம் ஆண்டு பைக்காரா புனல்மின் திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு முன் நூற்றுகணக்கானோர் மட்டுமே வாழ்ந்தனர். இன்று அங்கு வாழும் மக்களின் எண்ணிக்கை 10,000க்கும் மேல். சிங்காராவில் இருந்து மசினகுடி வரை ஒரு மணி நேரத்துக்கு 5-6 வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் கர்நாடகத்தில் உள்ள பந்திபூரில் இருந்து முதுமலையைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு ஒரு நாளைக்கு 100 வாகனங்கள் காட்டு வழியே சென்று வருகின்றன. இதில் அடிபட்டு கணக்குவழக்கற்ற காட்டுயிர்கள் இறந்து கொண்டிருக்கின்றன.
முதுமலை காட்டில் இருந்து சத்தியமங்கலம் பகுதிக்கு யானைகள் இரைதேடிச் செல்லும் யானை வழித்தடத்தில் (Elephent Corridor) சிங்காரா அமைந்துள்ளது. இந்தியாவில் வாழும் ஆசிய யானை வகையில் 25 சதவிகிதம் சிங்காரா வழித்தடத்தைப் பயன்படுத்துகின்றன. வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் காடுகளை ஆக்கிரமித்துக் கொண்டே போவதால் இந்த வலசை பாதைகளை இழந்து தவிக்கும் யானைகள், மனிதர்களுடன் அடிக்கடி மோத நேரிடுகிறது. மேலும் சுரங்கம் அமைக்கும்போது வெடி வைத்து தகர்ப்பதும் பிரச்சினைகளை ஏற்படுத்தும். வெடியின் அதிர்வு வெளியே கேட்காதவாறு நவீன ஏற்பாடு செய்யப்படும் என்று கூறப்படுகிறது. அப்படிச் செய்யும்போது எழுதும் மிதமான ஒலி, யானைகள் தகவல்தொடர்புக்கு பயன்படுத்தும் வெளியே கேட்காத அகஒலியை (இன்ப்ரா சவுண்ட்) ஒத்திருக்கிறது.
தேசிய விலங்கு என்ற பெருமையைக் கொண்டிருந்தும், புலிகளை பாதுகாப்பதற்கென்றே அமைக்கப்பட்ட ஒரு சில சரணாலயங்களில் அவை முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டன. சமீப காலத்தில் ஒரே ஆறுதலாக நாட்டிலேயே முதுமலையில் மட்டும்தான் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. முதுமலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் 21 புலிகளே இருந்தன. அது கிட்டத்தட்ட இரட்டிப்பாகி தற்போது 37 புலிகளாக அதிகரித்துள்ளது.
சிங்காரா பகுதி முதுமலை வனவிலங்கு சரணாலயத்தின் இதயப் பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. புலி, யானை, சிறுத்தை வாழும் இந்தக் காடுதான் ஆய்வுக்கூடம் அமைக்க ஒரே இடமா? ஏற்கெனவே வாழிடம் அழிதல், கள்ள வேட்டைக்காரர்களின் தாக்குதல், இரை எண்ணிக்கை குறைதல் போன்ற பல்வேறு பிரச்சினைகளால் புலியும்; வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு, மின்வேலி-இருப்புப் பாதை தடங்கல்கள், மனிதர்களுடன் மோதல் போன்ற காரணங்களால் யானையும் அழிவைச் சந்தித்து வருகின்றன. இத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியில் முதுமலை காட்டின் முக்கிய பகுதியில் ஆராய்ச்சி மையம் அமைப்பது, காட்டுயிர்களின் அழிவை விரைவுபடுத்தும் என்பது சுற்றுசூழல் ஆர்வலர்கள் வாதம்.
மனிதர்களே வாழ வழியின்றித் தவிக்கும்போது புலிகள், யானைகளைப் பற்றி கவலைப்பட வேண்டுமா என்று கேட்டால், 'மனிதர்கள் நலமாய் வாழ்வதற்கும் புலிகள் அவசியம்' என்கிறார்கள் சூழலியலாளர்கள். தென்னிந்தியாவில் ஓடும் முக்கிய நதிகள் அனைத்தும் மேற்குத் தொடர்ச்சி மலையில்தான் உருவாகின்றன. அதற்குக் காரணம் அங்குள்ள வளமான காடுகள். ஒரு காட்டின் வளத்துக்கு அடையாளமாகவும், உயிர்நாடியாக புலிகள் இருக்கின்றன. புலிகள்-மான்கள்-புல்- இலைதழை என்ற வகையில் உணவுசுழற்சி அமைந்திருக்கிறது. புலிகள் குறைந்துவிட்டால், மான்கள் எண்ணிக்கை அதிகரிக்கும், தாவரங்கள் அழியும். காட்டின் வளம் குறையும். ஆகவே, ஒரு காட்டில் நிறைய புலிகள் இருக்கின்றன என்பது காட்டின் வளத்துக்கான அடையாளம்.
நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைப்பதற்கு மேற்கொள்ளப்படும் கட்டுமான நடவடிக்கைகள் நமது பாரம்பரியத்தின் பிரிக்க முடியாத பகுதியாக உள்ள புலி மற்றும் யானைகளுக்கு பெரும் ஆபத்தாக முடியும். அவற்றின் அழிவு அத்துடன் நின்று போகாது, சங்கிலித் தொடராக நம்மையும் வந்தடையும். அவை சங்கிலியின் முதல் கண்ணிகள், நாம் கடைசி கண்ணியில் உள்ளோம். நம்மை நாமே அழித்துக் கொள்ள அச்சாரம் இட வேண்டுமா என்று கேள்வி எழுப்புகிறார்கள் சூழலியலாளர்கள்.
70களில் மௌன பள்ளத்தாக்கில் அணை கட்ட முயற்சித்தபோது, கேரளா, தமிழகத்தில் பெரும் எதிர்ப்பலை உருவாகி திட்டம் கைவிடப்பட்டது. காட்டுயிர்கள் காப்பாற்றப்பட்டன. 35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு புதிய போராட்டம் தொடங்கியுள்ளது.
புவி வெப்பமடைதல், காலநிலை மாற்றம் தொடர்பான அச்சுறுத்தல் உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் அக்கறைகள், விவாதங்களை பரவலாக்கி வரும் நிலையில், வளர்ச்சிக்கான எந்த ஒரு ஆய்வும், செயல்பாடும் இவற்றைத் தவிர்த்துவிட்டு செயல்படுத்துவது சாத்தியமில்லை. அறிவியல் ஆராய்ச்சி மனித குல வளர்ச்சிக்கு அவசியம் என்றாலும், சூழலியல் வளமே மனித குலம் வாழ்வதற்கு உயிர்நாடி. இதுபோன்ற ஆராய்ச்சிகள் சூழலியலை பாதுகாக்கும் தன்மையோடு பயணிக்கவேண்டும்.
- ஆதி