அமெரிக்க நாட்டில் மெக்சிக்கோ வளைகுடாப் பகுதியில் தோன்றிய பார்த்தீனியச் செடியின் கொடிய விளைவுகள் ஆப்பிரிக்கா, ஆஸ்டிரேயா, ஆசியா கண்டங்களில் அதிகமாக உணரப்பட்டது.அமெரிக்காவிலிருந்து கோதுமைத் தானியங்களோடு பார்த்தீனியம் விதைகளும் கலந்து இந்தியாவிற்கு மும்பைத் துறைமுகத்தின் வழியாக 1956 ஆம் ஆண்டு வந்திறங்கின.

பார்த்தீனியம் பூண்டு, சீதேவியார் செங்கழுநீர் , செவ்வந்தி போன்ற தாவரங்களின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு செடி ஆகும். ஒன்றரை மீட்டர் உயரத்துக்கும் மேலாக வளரக் கூடியது. பார்த்தீனியச் செடிகள் காலியிடங்கள், தரிசு நிலங்கள், பயிர் நிலங்கள் , குடியிருப்புப் பகுதிகள், பூங்காக்கள், பழத் தோட்டங்கள் , சாலையோரங்கள், கரையோரங்கள் என அனைத்து இடங்களிலும் வளர்ந்து வருகின்றன.

பார்த்தீனியச் செடிகள் மிகப்பெரும் எண்ணிக்கையில் பரவி,நெருக்கமாக முளைத்து, நிமர்ந்து சடைத்து விரைவிலேயே ‘ பச்சைக் கம்பளம் ’ விரித்தது போல நிலத்தை மூடிவிடுகின்றது.

flower_360பார்த்தீனியச் செடிகள்களைகளுக் கெல்லாம் தலைiயாயக் களையாகும்இதன் தண்டுகள், கிளைகள் மற்றும்இலைகள்உரோமங்களால் மூடப்பட்டிருக்கும். இச்செடியானது அதிக எண்ணிக்கையிலான பூக்களையும்,குறைந்த எடையுடைய விதைகளையும் உற்பத்தி செய்கிறது.அதன் விதைகள் குறைந்த எடை உள்ளதால்காற்றின்மூலம்மற்றஇடங்களுக்கு எளிதில் விரைவாகப் பரவுகிறது.

ஒரு பார்த்தீனியம் செடியானது 2500முதல் 5000வரையிலான விதைகளை உற்பத்தி செய்கிறது. மேலும்,பார்த்தீனிய விதைகள் முளைப்பதற்குத் தேவையான சூழ்நிலைகள் இல்லாத போது, சாதகமான சூழ்நிலை வரும் வரை 20ஆண்டுகள் கூட உறக்கத்தில் கிடந்து முளைக்கக் கூடிய தன்மை வாய்ந்தது.பார்த்தீனியம் செடியானது இந்தியாவில் 35மில்லியன் ஹெக்டேர் நிலங்களில் பரவியுள்ளது.

பார்த்தீனியம் செடிகளின் கீழ் செடி கொடிகள் எதுவும் முளைத்து வளர முடிவதில்லை. தண்ணீருக்காகவும், சூரிய ஒளிக்காகவும், வேர்ப்பிடி மண்ணுக்காகவும் செடிகள் போராடிச் சாகின்றன. இவற்றின் மீது பார்த்தீனியச் செடிகள் நஞ்சூட்டி அழிக்கிறது.

பார்த்தீனியம்- பார்த்தீனியன், அம்புரோசின் போன்ற நச்சு வேதிப்பொருள்களைச் சுரக்கிறது. இந்த நச்சுப் பொருட்களிடம் தாக்குப் பிடிக்க முடியாமல் நமது நாட்டுத் தாவரயினங்கள் அழிந்து விடுகின்றன. ‘எதற்கும் அடங்காமல் எதனையும் அடக்காமல் ’ பல நூறு ஆண்டு காலமாக இயற்கைச் சம நிலையில் பெரும் பங்காற்றி வந்த உள்ளூர் தாவர இனங்களின் சாம்பல் மீது நின்று கொண்டு பார்த்தீனியம் கோலோச்சுகிறது.

 •  பார்த்தீனியச் செடியானது கால்நடை தீவனங்களுக்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்துகிறது.
 •  வேளாண்மைப் பயிர்களின் வளர்ச்சியைப் பாதிக்கிறது. வேளாண்மை உற்பத்தியில் 30% ஐ குறைக்கிறது.
 •  மண்ணில் கசிய விடும் நச்சுப் பொருட்களின் மூலம் பயிர்களின் வளர்ச்சியைத் தாக்குகிறது.
 • உளுந்து,பயறு போன்ற பயிர்களின் அருகாமையில் பார்த்தீனியம் செடிகள் வளரும் போது பயிர்களின் வளர்ச்சியை வெகுவாகப் பாதிக்கிறது.
 • அவரையினப் பயிர்களின்,சிறப்பாக அவற்றின் வேர்களில் ‘இரைசோபியம் ’ பாக்டீரியாக்களைக் கொண்ட வேர் முடிச்சுகள் காணப்படுகின்றன. இவை, நைட்ரஜன் வாயுவைத் தாவரங்கள் உறிஞ்சக் கூடிய அயனிநிலைக்கு மாற்றித் தருவதுடன், வளி மண்டபத்தில் நைட்ரஐனின் சமநிலையைப் பேணியும் வருகின்றன.பார்த்தீனியச் செடிகளின் நஞ்சுகள் இந்த வேர் முடிச்சுகளையும் விட்டு வைப்பதில்லை என தாவரவியல் அறிவியலாளர்கள் எச்சரிக்கின்றனர்.
 •  பார்த்தீனியச் செடிகள் மனிதர்களுக்கும் ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது.
 • பார்த்தீனியம் செடிகள் பரவியுள்ள இடங்களில் காற்றில் மிதக்கும் மகரந்தங்களில், பார்த்தீனியச் செடிகளின் மகரந்தங்கள் தான் அதிகம் உள்ளது. இம்மகரந்தங்களும் தம்மீது நச்சுப் பொருட்களை பூசி வைத்துள்ளன. இதனைச் சுவாசிப்பவர்கள் ‘ஆஸ்த்மா' நோயால் பாதிக்கப் படுகின்றனர்.
 •  பார்த்தீனியம் செடியைத் தொடர்ச்சியாகத் தொடுபவர்களுக்கு தோலில் அரிப்பு, தடிப்பு ஏற்படுகிறது.
 • பார்த்தீனியம் செடிகளால் ஏற்படும் நோய்கள் எவ்வித மருத்துவ சிகிச்சைகளுக்கும் கட்டுப்படுவதில்லை.
 • பார்த்தீனியம் செடிகள் கலந்த பசுந்தீவனங்களை உண்ணும் கால்நடைகளின் பால் கசப்புத் தன்மை பெறுகிறது.
 • பார்த்தீனியச் செடிகள் கரியமில வாயுவை அதிகமாக வெளிவிடுவதால் சுற்றுச் சூழலுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
 • பார்த்தீனியம் செடிகள் பல்லுயிர் பெருக்கத்தை அச்சுறுத்துகிறது.

இவ்வளவு தீமைகளை ஏற்படுத்தும் பார்த்தீனியம் செடிகளை இந்தியா முழுவதும் அழித்திட உடனடியாக நடுவண் அரசும்,மாநில அரசுகளும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பார்த்தீனியம் செடிகள் அழிப்பை இயக்கமாக நடத்திட வேண்டும். வேளாண்மைத்துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித் துறை வருவாய்த்துறை, சுகாதாரத்துறை முதலிய அரசுத்துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு பார்த்தீனியம் செடிகள் அழிப்பில் ஈடுபடவேண்டும்.

enviromnent_360பார்த்தீனியம் செடிகளை வேருடன் பிடுங்கி மண்ணுக்குள் புதைப்பதால் அவை மக்குரமாகிவிடுகிறது. உயிரியல் முறையில் பார்த்தீனியச் செடிகளின் இலைகளை விரும்பி உண்ணும் பூச்சிகளை விட்டும் கட்டுப்படுத்தலாம். பார்த்தீனியச் செடிகள் அதிகம் உள்ள இடங்களில் கேசியா இனத்தைச் சார்ந்த எதிரிச் செடிகளை வளரவிட்டும் இவை பரவாமல் தடுக்கலாம்.

நிலத்தை நன்கு உழுது களைகளின்றி பண்படுத்தும் போதும் பார்த்தீனியம் செடிகள் வளரவாய்ப்பு இல்லாமல் செய்யலாம். பார்த்தீனியம்  செடிகளை கட்டுப் படுத்தும் எளிய வழி, சிக்கனமான வழி, அனைவரும் உடனடியாக செய்யக்கூடிய வழிமுறை என்ன வெனில் ஒரு கிலோ உப்பையும்,ஒரு லிட்டர் சோப்பு எண்ணைய்யும் 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிப்பதாகும். இதனால் மூன்று தினங்களுக்குள் பார்த்தீனியச் செடிகள் வாடி வதங்கி கரிந்து அழிந்து போகும்.

மக்களிடம் மார்த்தீனியச் செடிகளின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவற்றை அழிக்கும் பணியில் ஈடுபட்டு, பயிர்களையும், கால் நடைகளையும், மனிதர்களையும், சுற்றுச் சூழலையும் பாதுகாத்திட வேண்டும்.

- பி.தயாளன்

Pin It