இந்தியாவில் 2014 - 2016 ஆம் ஆண்டுகளில் மட்டும் 1268 மனிதர்கள் சாக்கடையை சுத்தம் செய்யும் பணியின்போது, இறந்துவிட்டனர் என சபாய் காமாச்சாரி அந்தோலன் என்னும் அமைப்பின் கணக்கெடுப்பு மற்றும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றது.

இந்த அமைப்பு மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையை ஒழிக்க பாடுபட்டு வருகிறது.

மனிதக் கழிவுகளை மனிதர்களே சுத்தம் செய்யும் பணிக்கு தடை மற்றும் அவர்களின் மறுவாழ்வுக்கான சட்டம் 2013 -ன் படி, சாக்கடை மற்றும் மனிதக்கழிவுகளை சுத்தம் செய்ய நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துமாறு உள்ளூர் திட்டக்குழும அலுவலர்களுக்கும், மற்ற நிறுவனங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.               

bandicoot engineers திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ‘ஜென்ரோபோட்டிக்ஸ்” என்னும் நிறுவனத்தின் குழு, தற்போது ‘பண்டிகூட்” (Bandicoot) என்னும் சாக்கடை அடைப்புகளை சுத்தம் செய்து கழிவுகளை அகற்றும் இயந்திரத்தை உருவாக்கியுள்ளது.

ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் திரைப்படமான அவதார் -ல் வரும் உயரமான மனிதர்களைப் போன்ற 14 அடி உயரமுள்ள மனிதர்களைப் போன்ற இயக்கத்தை உடையதான இயந்திரமே ‘பண்டிகூட்’.  பண்டிகூட் என்பதற்கு தமிழில் பெருச்சாளி என்று பொருள்.

எந்த விதமான சந்து பொந்துகளிலும் நுழைந்து வந்துவிடும் நம்மூரு பெருச்சாளியைப் போன்ற செயல்பாட்டைக் கொண்டது பண்டிகூட் ரோபோ.

கேரள மாநில அரசின் நிதியுதவி மற்றும் கட்டமைப்பு வசதிகளுடன் பல மாதங்கள் கடுமையான ஆராய்ச்சிக்குப் பின் ஜென்ரோபோட்டிக்ஸ் நிறுவனத்தின் குழு பண்டிகூட் ரோபோவை உருவாக்கியுள்ளது.

தனது இயந்திரக் கால்களை நீட்டி மடக்கக் கூடியதாக இந்த ரோபோ உள்ளது. இந்த இயந்திர ரோபோவை இயக்குபவருக்கு கண்காணிக்க வசதியாக சாக்கடை துவாரம் வழியாக சாக்கடை நீரில் மூழ்கி உள்ளே இருக்கும் அடைப்புகளை படம் எடுத்து காட்சிப்படுத்தும் நவீன கேமரா ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.

கடப்பாரை போன்ற கருவியும், ஜெட் வேகத்தில் தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் வாட்டர் ஜெட் ஒன்றும் இந்த ரோபோவுடன் இணைக்கப்பட்டு, சாக்கடை அடைப்புகளை அகற்றப் பயன்படுகிறது.

இக்கண்டுபிடிப்பின் துவக்க காலத்தில் சாக்கடை நுழைவுகள் வடிவத்திலும், அளவிலும் வெவ்வேறு விதமாக அமைந்துள்ள நடைமுறை உண்மை குறித்து, அதிகளவில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் அதற்கேற்றார்போல் ரோபோவை வடிவமைக்க வேண்டிய அவசியம் உள்ளது. பண்டிகூட் ரோபோ பயன்படுத்துபவருக்கு வசதியாக இருக்கும் பொருட்டு, லேசான கார்பன் இழைகளால் உருவாக்கப்பட்டுள்ளது. துவக்கத்தில் கடினமாக இருந்த அதன் கட்டமைப்பு தற்போது பல கட்ட ஆய்வுக்குப் பின் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.

கேரளாவிலும், தமிழ்நாட்டில் கும்பகோணத்திலும், ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்திலும் பண்டிகூட் ரோபோ சாக்கடை மற்றும் மனிதக் கழிவுகளை அகற்றும் பணிக்கு தயாராக வைக்கப்பட்டுள்ளது.

இந்திய இரயில்வேயில், ரெயில்வே டிராக்குகளில் கைகளால் மனிதக் கழிவுகளை அகற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நாடு முழுவதும் பணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது அதிகப்படியான மனிதக் கழிவுகளை அகற்றும் தொழிலாளர்கள் உள்ள துறை இந்திய இரயில்வே துறை.

நவீன தொழில்நுட்பத்தை சரியாகப் பயன்படுத்தி, புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கினால் கைகளால் மலம் அள்ளும் நிலையைத் தவிர்க்கலாம். ரோபோக்கள் மூலம் கழிவுகளை அகற்றி, இயந்திரங்களை இயக்குபவர்களாக தொழிலாளர்களின் பணிச்சூழலை மேம்படுத்தலாம்.

எத்தனை சட்டங்கள் வந்தாலும், திட்டங்கள் போட்டாலும், சரியான வழியில் தொழில்நுட்பத்தை நாம் கையாளாத காரணத்தால் இன்றளவும், வெறும் கைகளால் மனிதக் கழிவுகளை சுத்தம் செய்யும், சக மனிதர்களை நம் கண்முன்னே காண்கிறோம்.

முறையான கல்வியும், வேலைவாய்ப்பின்மையும் நம் சக மனிதர்களை இவ்வேலைகளில் ஈடுபட வைக்கிறது.

 கேடு விளைவிக்கக்கூடிய, விஷத் தன்மையுள்ள திரவக் கழிவுகள் மற்றும் ஆபத்து நிறைந்த பணிச்சூழலை உள்ளடக்கியது சாக்கடை குழிக்குள் இறங்கி சுத்தம் செய்யும் வேலை.

ரோபோட்டிக்ஸ் என்ற நவீன தொழில்நுட்பத்தின் மீது உள்ள பொதுவான ஆர்வத்தினால், கல்லூரிக்கால நண்பர்கள் ஒன்றுசேர்ந்து 2015 -ல் நிறுவியதே ‘ஜென்ரோபோட்டிக்ஸ்” (Genrobotics) நிறுவனம்.

கோழிக்கோடு மாவட்டத்தில், சாக்கடைக் கழிவுகளை சுத்தம் செய்யும்போது, 3 மனிதர்கள் குழிக்குள் இறங்கிய நிலையில், விஷவாயு தாக்கி மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் இந்த இளைஞர்களை இயந்திரங்கள் மூலம் மனிதக் கழிவுகளை அகற்றும் ஆராய்ச்சிக்கு இட்டுச் சென்றுள்ளது.

2016 ஆம் ஆண்டில் ஜென்ரோபோட்டிக்ஸ் நிறுவனத்தின் குழுவினர் கேரளாவின் அரசு அலுவலர்களைச் சந்தித்து, பல்வேறு விதமான தூய்மைப் பணிகளில் உள்ள பிரச்சனைகளையும் அதற்குரிய சாத்தியமுள்ள தீர்வுகள் குறித்தும் விவாதித்தனர்.

கேரளா ஸ்டார்ட் அப் மிஷன் மற்றும் கேரளா வாட்டர் அத்தாரிட்டி ஆகியவை அளித்த நிதியுதவி மற்றும் கட்டமைப்பு வசதிகளால், மனிதக் கழிவுகளை அகற்றும் ரோபோ உருவாக்கும் திட்டம் துரிதமடைந்தது.

கேரளத்தின் நகரங்களில் சாக்கடை நுழைவுகள், வடிகால்கள், அதன் பரிமாணங்கள், உட்புற சூழல் மற்றும் அதை சுத்தம் செய்வதிலுள்ள நடைமுறை அபாயங்கள் குறித்த புள்ளிவிபரங்களை அரசிடமிருந்து பெற்று, ஆழமான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுக்குப் பின் பண்டிகூட் ரோபோவை உருவாக்கும் பணியைத் துவங்கினர்.

பிப்ரவரி - 2018 -ல் முதல் வணிக ரீதியிலான பண்டிகூட் ரோபோ மாடல் அறிமுகப்படுத்தப்பட்டது.

bandicootசெயல்படும் தொழில்நுட்பம்:

பண்டிகூட் ரோபோவானது மனிதர்களைப் போன்றே, சாக்கடை குழிக்குள் இறங்கி, அடைப்புகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுமாறு இயக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோவில் இரண்டு முக்கிய பகுதிகள் உள்ளன.

ஒரு இயந்திரக் கை, நான்கு இயந்திரக் கால்களுடன் சுத்தம் செய்யும் பணியை கையாள்கிறது பண்டிகூட் ரோபோ. இந்த இயந்திரக் கை, கால்களை உள்ளடக்கிய பகுதி இயந்திரப் பகுதி எனப்படுகிறது.

இந்த ரோபோவை இயக்கும் பகுதி (control panel) சாக்கடை குழி மற்றும் நுழைவு இருக்கும் பகுதிக்கு வெளியே வைக்கப்பட்டு, பண்டிகூட் ரோபோவின் செயல்பாடுகள் சிறிய கணினித் திரையில் கண்காணிக்கப்படுகிறது.

இயந்திரப் பகுதி நிலையானதாகவும், தண்ணீரால் சேதம் அடையாத வகையிலும், இரவில் படம் பிடிக்கும் கேமராவை உடையதாகவும் உள்ளது. இந்த ரோபோவில் உள்ள கேமரா சாக்கடை தண்ணீருக்குள்ளும் ஊடுருவி படம் பிடிக்கும் தன்மை உடையது.

பல்வேறு விதமான சென்சார்களும் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த சென்சார் எனப்படும் உணர்வான்கள் சாக்கடை குழிக்குள் உள்ள ஈரப்பதம், வெப்பநிலை, வேதிக்கழிவுகள், நச்சுவாயுக்கள் குறித்து அளவீடு செய்து தகவல் தரக் கூடியவை. இயந்திரத்தின் கைப்பகுதியானது, 360 டிகிரி கோண அளவில் நகரக் கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ரோபோவுடன் இணைக்கப்பட்டுள்ள வாளியானது 18 லிட்டர் அளவுள்ள கழிவுகளை சேகரிக்கும் கொள்ளளவு கொண்டது.

‘ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜென்ஸ்” (Artificial Intelligence) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இந்த இயந்திர வேலைப்பாட்டில் முக்கிய பங்காற்றுகிறது.

பண்டிகூட் ரோபோவானது முழுவதும் தானியங்கி (automatic) மற்றும் இயக்கப்படுவது (semi automatic) ஆகிய இரு முறைகளில் செயல்படுகிறது. இரண்டாவது முறையில் அதாவது சிக்கலான இடங்களில் மட்டுமே பண்டிகூட் ரோபோவை இயக்குவதற்கு தொழிலாளர்கள் தேவை.

பண்டிகூட் ரோபோ என்ற டிஜிட்டல் பெருச்சாளியை பற்றிய விழிப்புணர்வு நம் நாட்டு மக்களுக்கும், இளம் அறிவியலாளர்களுக்கும் சென்று சேர வேண்டிய முக்கிய செய்தி அதாவது FLASH NEWS...

- பவித்ரா பாலகணேஷ், மாதவன்குறிச்சி – 628206, திருச்செந்தூர் - தாலுகா

Pin It