உடலுக்கு வடிவத்தையும் வலுவையும் தருவது எலும்புகள் கொலாஜென் இழைகள் மற்றும் கால்சியம், பாஸ்பேட் ஆகியவற்றின் உப்புகளால் ஆனவை. எலும்புகள் இயல்பில் கடின தன்மையைத்தான் பெற்றுள்ளன. ஆனால் எலும்பு தேய்வு நோயில் எலும்புகள் தேய்ந்து பஞ்சைப் போன்று மென்மையாக மாறுகின்றன. இந்த நோயை, மருத்துவ உலகம் ஆஸ்டியோ போரோசிஸ் என்று அழைக்கின்றது. 

‘எலும்புத் தேய்வு நோய்’ பிற நோய்களைப் போல அறிகுறிகளை வெளியே காட்டுவதில்லை. எனவேதான் இதை உடனடியாக கண்டறிய முடிவதில்லை. எலும்புகளில் உள்ள கால்சியம் சத்து எந்த விதமான அறிகுறிகளையும் காட்டாது குறைந்துவிடுகின்றது. இயல்பில் எலும்புகள் புதிதாக தோன்றும் பண்பைப் பெற்றுள்ளன. பழைய எலும்புகள் அகற்றப்பட்டு அதற்குப் பதிலாக புது எலும்புகள் உருவாவது நம்முடைய உடலில் தொடர்ந்து நடைபெறுகின்றது. உடல் இயக்கம் மற்றும் ஹார்மோன்கள் ஆகியவை எலும்புகள் தொடர்ந்து வளர்ந்திட உதவுகின்றன. 

எலும்பு தேய்வு நோயினால் பாதிக்கப்பட்ட பின்னர் ஒரு சில அறிகுறிகள் வெளிப்படத் தொடங்கும். அடி முதுகுவலி, லேசாக தவறி விழுந்தால் கூட எலும்பு முறிவு ஏற்படுதல் ஆகியன இதன் அறிகுறியாக வெளிப்படும். எலும்புத் தேய்வை எக்ஸ்ரேக்கள் மற்றும் ஆஸ்டியோ சி.டி. மூலமாக கண்டறியலாம்.

‘ஆஸ்டியோ கம்யூட்டரைஸ்டு மெமோகிராபி’ என்பது எலும்பில் உள்ள சுண்ணாம்புச் சத்தின் அளவை கண்டறியும் கருவியாகும். எலும்பு தேய்வு நோயை குணமாக்க இயலாது. எனினும் இந்த நோயை வராமல் தடுக்கலாம். எலும்பு தேய்வு நோய் ஏற்பட்டோருக்கு மேலும் பரவாமல் தடுக்க அலோபதி மருத்துவம் உதவுகின்றது.

எலும்பு தேய்வு நோய் மரபு ரீதியாக வரும் சாத்தியக்கூறுகள் உள்ளன. சுண்ணாம்புச் சத்து அதிகம் உள்ள பொருட்களை நம்முடைய உணவில் சேர்த்துக் கொண்டால் எலும்பு தேய்வு நோய் வராமல் தடுக்கலாம்.

நன்றி: மீனாட்சி மருத்துவ மலர்

Pin It