இந்த உடலின் உட்புறத்தே இயங்கிக் கொண்டிருக்கும் இயக்காற்றல்தான் வெளிப்புறமாகத் தெரிகிற உடம்பை வாழச் செய்து கொண்டிருக்கிறது. இதே போல் இந்த பிரபஞ்சத்தில் உடலுக்கு எதிராக நோயை உண்டாக்குகிற ஆற்றலானதும் இயக்காற்றலாகவே இருக்கிறது.
இந்த பிரபஞ்ச இயக்காற்றலானது மனிதனின் உட்புறத்தே உள்ள இயக்காற்றலைத் தாக்கி நோய் பாதிக்கும் தன்மையை ஏற்படுத்தி பின்னர் தொந்தரவுகளை உருவாக்குகிறது. இந்த தொந்தரவுகள் காரணமாக திசுக்களில் மாற்றம் ஏற்பட்டு பின்னர் குறிகளாகப் பிரதிபலிக்கிறது. இந்தக் குறிகள் இரண்டு வகைப்படும். அவைகள் அக உணர்வுக் குறி நிலை, புற உணர்வுக் குறி நிலை.
புற உணர்வுக்குறி நிலையானது மருத்துவப் பரிசோதனைகள் மூலமாக அறியப்படும். ஆனால், அக உணர்வுக் குறி நிலையானது துயரர் மாத்திரமே சொல்லக் கூடியதாக இருக்கும். அக உணர்வுக் குறி நிலையானது எவ்விதமான மருத்துவ ஆய்வின் மூலமாகவும் கண்டறியப்பட இயலாது.
மிருகங்களிடத்தில் மருந்தை அல்லது மருந்துப் பொருளை பரிசோதனைக்காகக் கொடுக்கப்படும் போது, மிருகங்களிடத்தில் தோன்றும் உடல் மாற்றத்தை அதாவது, புற நிலையை மட்டுமே கண்டறிய முடியும். அக உணர்வுக் குறி நிலையை மிருகங்களால் சொல்ல இயலாது என்பதை விட, மிருகங்கள் சொன்னாலும் மனிதர்களால் புரிந்து கொள்ள இயலாது என்பதே உண்மையாகும். ஆனால் நலமான மனிதர்களிடத்தில் மருந்தை அல்லது மருந்துப் பொருளை மெய்ப்பித்தலுக்காகக் கொடுக்கப்படும் போது, மெய்ப்பிப்பாளர்களிடத்தில் தோன்றும் புறநிலை மாற்றத்தையும், அக நிலை மாற்றத்தையும் காணவும், அறியவும் முடியும்.
ஆகவே அக உணர்வுக் குறி நிலை மற்றும் புற உணர்வுக் குறி நிலை ஆகியவைகளைக் கண்டறியும் மருத்துவ மெய்ப்பித்தல் முறையினால் மட்டுமே நலத்தை ஏற்படுத்த முடியும். மாறாக புற நிலைக் குறிகளை மட்டுமே கண்டறியும் மிருக மெய்ப்பித்தல் முறையினால் மனிதர்களிடத்தில் நலத்தைக் கொண்டு வர இயலாது.
ஹோமியோபதியைப் பொருத்தவரை நலமான மனிதர்களிடத்தில் மெய்ப்பித்தல் நடப்பதால், அக உணர்வுக் குறிகளும், புற உணர்வுக் குறிகளும் மெய்ப்பித்தல் மூலமாகத் தெரியவருவதால், அவ்வாறு மருந்துகள் ஏற்படுத்திய செயற்கை நோய்க்குறிகள் முழுமை யைக் கணக்கில் கொண்டுquot;>, அதே போன்ற இயற்கை நோய்க் குறிகளின் முழுமைக்குமாக மருந்து தேர்வு செய்யப்பட்டு கொடுக்கப்படுவதால் முழுமையான நலம் ஏற்படுகிறது.
மருத்துவர்கள் நோயுற்ற மனிதர்களுக்கு மருத்துவம் பார்க்கிறார்கள். மனிதர்கள் எல்லோரும் ஒரே மாதிரியான தோற்றத்தையே கொண்டிருக்கிறார்கள். ஒரே மாதிரியான தோற்றத்தையே கொண்டிருந்தாலும், ஒவ்வொரு நபரும் வேறு வேறு விதமான பாரம்பரியத்தில், வளர்ப்புகளில், வழிகாட்டுதலில், வசதிகளில், வாய்ப்புக்களில், உணவுகளில், பழக்க வழக்கங்களில், கோபங்களில், தாபங்களில், பொறுமைகளில், பிடித்ததில், பிடிக்காததில், வாழும் சூழலில், பொருளாதாரத்தில் வேறுபட்டிருக்கிறார்கள்.
புரிந்து கொள்ளும் திறனில், சிந்தனை செய்யும் ஆற்றலில், நேரத்துக்குத் தக்கவாறும், சூழ்நிலைக்கேற்றவாறும், மாறிக் கொள்ளும் தன்மையைக் கொண்டவனாகவே மனிதன் இருக்கிறான். மனிதனை இயக்குவதற்கு அவனுள்ளே ஒரு ஆற்றல் இருக்கிறது. சக்தி என்றும், சூட்சும சக்தி என்றும், உயிர் ஆற்றல் என்றும் கூடச் சொல்லலாம். அந்த உயிர் ஆற்றலைத் தொட முடியாது. பார்க்க முடியாது.
இந்த உயிராற்றலானது நம்மைவிட்டு நீங்கிவிடுமானால் உடல் உணர்வற்று, அசைவற்றுப் போய் விடுகிறது. இவ்வாறு நிகழ்வதை மரணம் என்று அறிவிக்கிறோம். இந்த நிலையில் உடலை சவம் அல்லது பிணம் என்று சொல்கிறோம். உடல் இருக்கிறது, பார்வைக்குத் தெரிகிறது. உள்ளே இருக்கும் உறுப்புகளும் அங்கேயே இருக்கிறது, வெளியேறவில்லை. இந்நிலையில் பிணம் என்று செய்ய வேண்டியதைச் செய்து விடுகிறோம். இந்த உயிராற்றல்தான் உயிரணு, சதை மற்றும் உறுப்பு ஆகியவைகளுக்கு உயிரூட்டி உடலை இயங்கச் செய்கிறது. ஆகவே துயரரை நல நிலைக்குக் கொண்டுவர வேண்டுமென்றால், துயரரின் அக உணர்வு நிலை மற்றும் புற உணர்வு நிலை ஆகிய இரண்டு நிலைகளையும், அதன் பாதிப்பு களையும் சீர் தூக்கி ஆராய்ந்து மருந்தளிக்க வேண்டும்.
இவ்வாறு மருந்தளிக்கும் போது தான் உயிர் ஆற்றல் தூண்டப்பட்டு, அதன் பின்பு அதுவே நலத்தை விரைந்து கொண்டுவருகிறது. இதைத்தான் மாமேதை ஹானெமன் அவர்கள் கீழ்க்கண்டவாறு சொல்கிறார்கள்.
உடலினுள்ளே குடியிருந்து உயிரூட்டும் சூட்சுமமான உயிர்ப்புச் சக்தியை பீடித்துள்ள நோயும், அச்சக்தியினால் உடலின் வெளிப் புறத்திலே புலப்படும்படியாகத் தோற்றுவிக்கப்படும் நோய்க்குறிகளும் ஒன்றே. வெவ்வேறானவை அல்ல. உடல் உயிருக்கு உருவத்தை அளிக்கிறது. உயிர்ப்புச் சக்தி உடலுக்கு உயிரை அளிக்கிறது. ஆகவே இந்த இரண்டும் தனித்தனியே பிரிக்க முடியாத ஒரே பொருளாகும். குழப்பம் இல்லாமல் எளிதில் புரிந்து கொள்வதற்காகவே இவ்வாறு இரண்டாகப் பிரித்துச் சொல்லப்படுகிறது. (மணி மொழி- 15)
நம் உயிர்ப்புச்சக்தி ஒரு சூட்சுமமான பொருள்; ஆதலால் உயிருக்குத் தீங்கு செய்யும் நோய்ப் பொருள்கள் சூட்சுமமான வழியில் தான் அதைத் தாக்கவோ, பீடிக்கவோ முடியும், இதைப் போலவே நோய்க்கு ஏற்றதான மருந்துகளிலுள்ள சூட்சுமமான சக்தியினால் தான் நோய்ப் பொருள்களை நீக்கவும் முடியும். நோயாளியின் நல நிலைமையில் ஏற்பட்டுள்ள மாறுதல்களைக் கவனமாக ஆராய்ந்து, அதற்கேற்ப கொடுக்கப்படும் மருந்துகளிலுள்ள சூட்சும சக்தியை, உடலெங்கும் பரவி இருக்கும் உணர்ச்சி மிக்க நரம்புகளின் மூலம் உயிர்ப்புச் சக்தி கிரகித்துக் கொள்கிறது. இவ்வாறு கிரகிக்கப்படும் மருந்துச் சக்தியினாலேயே நல நிலைமை திரும்ப ஏற்படக்கூடும்; ஏற்படுகிறது. (மணி மொழி- 16).
ஐம்புலன்களாலும் அறியப் பட்ட எல்லா நோய்க்குறிகளும் நீங்கிக் குணம் ஏற்படும்போது, அக்குறிகள் தோன்றுவதற்குக் காரணமாயிருந்த உயிர்ப்புச் சக்தியின் நோயும் நீக்கப்படுகிறது. உள்ளே உள்ள நோயைப் (உயிர்ப்பு சக்தியின் நோயை) போக்க, உடலின் வெளிப்புறத்தே தென்படும் நோய்க் குறிகளை நீக்கினால் போதும் என்பது இப்போது விளங்கும். தன்னுடைய உண்மையான உயர்ந்த கடமை நோய் உள்ளவர்களை நல நிலைக்குத் திரும்பக் கொண்டு வருவதேயன்றி, எல்லாம் தெரிந்தவர் போல் நடித்துப் பிதற்றுவதல்ல என்பதை மருத்துவர் அறிய வேண்டும். (மணி மொழி;17).
ஆக, ஹோமியோபதியைப் பொருத்தவரை சீர் செய்ய வேண்டியது உயிராற்றலே தவிர உடல் அல்ல. உயிராற்றல் சீர் செய்யப்பட்டுவிட்டால் அதுவே உடலை சீர் செய்து விடும்.
(ஹோமியோமுரசு அக்டோபர் 2009 இதழில் வெளியான கட்டுரை)