"பெண் நோயாளி, ஆண் மருத்துவரைப் பார்க்க சம்மதித்தாலும் ஒரு திரைக்குப்பின் அமர்ந்து கையை மட்டும் தெரியும்படி நீட்டியபடி இருக்க, நோயாளியின் நாடி பார்க்கப்பட்டது."

பெண்கள் ஆண்களிடம் மருத்துவம் பார்த்துக்கொள்ள மறுப்பு

இந்து சமூகத்தின் நிலை பிறப்பிலிருந்து இறப்பு வரை 19-ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலம் துன்பமான, வருத்தத்துடன் கூடிய நீண்ட நெடிய கதை.  பெண்கள் பூப்பெய்வதற்கு முன்னரே இளம் வயதில் மிக அரிதான சமயங்களைத் தவிர 5 - 10 வயதுக்குள்ளேயே பெரும்பாலும் திருமணம் நடைபெற்றது.

பெண்களுக்குக் கல்வி அளிக்கப்படவில்லை.  ஏனெனில் படித்தால் விதவையாகி விடுவார்கள் என்ற அக்காலத்திய  குருட்டு மூட நம்பிக்கையே ஆகும்.

19-ஆம் நூற்றாண்டின் முதல் அரைப்பாதியில் சில செல்வந்தர்களின் குடும்பத்தினர் தங்கள் எஸ்டேட்டுகளைப் பராமரிக்க தங்கள் பெண்களை அனுமதித்தனர்.  இது தவிர கிறித்தவ மிஷனரிகள் பெண் கல்வி முன்னேற்றத்திற்குப் பாடுபட்டனர்.  இந்நிலையில் கல்வி கற்ற குடும்பத்தினர் பெண்கள் கல்வி கற்க ஆதரவு அளித்தாலும், பழைமையை நம்புகிறவர்கள் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்தனர்.  19 -ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலம் வரை மிகக் குறைந்த அளவே பெண்கள் கல்வி பயின்றனர்.  கிழக்கிந்திய கம்பெனியின் சமூக முன்னேற்றத்திற்கான செயல்பாடுகளில் பெண் கல்வியும் ஒன்றாக இருந்தாலும் அவர்கள் அதைப் பற்றிக் கவலைப்படாது எந்த நடவடிக்கை களையும் நடைமுறைப்படுத்தவில்லை.

பெண்கள் நோய்வாய்ப்பட்ட பொழுது, பெண் மருத்துவர் இல்லாதபொழுது, நோயின் அறிகுறிகளைத் தங்கள் உறவினர் அல்லது தெரிந்த ஆண் மருத்துவரிடம் எடுத்துச் சொல்லி மருத்துவம் பெறுவர்.  பெண் நோயாளி, ஆண் மருத்துவரைப் பார்க்க சம்மதித்தாலும் ஒரு திரைக்குப்பின் அமர்ந்து கையை மட்டும் தெரியும்படி நீட்டியபடி இருக்க, நோயாளியின் நாடி பார்க்கப்பட்டது.  ஒரு கண் மருத்துவர் புரையை அகற்ற பெண்ணின் உடலை முழுவதுமாகத் துணியால் மறைத்த நிலையில் கண்ணைச் சுற்றி ஓட்டையிட்டு அதன் வழியாகக் கண் புரைக்கான அறுவை புரிந்தார்.

இதைவிட பர்தா முறையில் மிகவும் பரிதாபமானது, கருவுற்ற பெண் பிரசவ நேரத்தில் எவ்வளவு துன்புற்றாலும் ஆண் மருத்துவரால் மருத்துவம் அளிக்க மறுக்கப்பட்டு, கருவுற்றவர் இறந்து போவது நாளும் நடைபெறும் காட்சியாக இருந்தது.

பர்தா வழக்கத்தைத் தாண்டி, மூட நம்பிக்கையும் பெரும் விளைவுகளை ஏற்படுத்தியது.  சான்றாகக், குழந்தை பிறக்கும் காலம் ஒரு பேய்க்கு உடைமையானது என்பதாகும்.  பிரசவத்திற்குப் பிறகு குழந்தை பெற்ற தாய்க்கோ அல்லது சேய்க்கோ நோய் வந்தால் அது துப்புரவு இன்மையாய் இருந்தாலும், அது பேயினால் என்று நினைத்து மருத்துவம் அளிக்கப்படமாட்டாது.  இதனால் அதிக அளவு மரணம் தாய்க்கும் சேய்க்கும் ஏற்பட்டது.

மகளிர் மரணம் மூட நம்பிக்கையுடன், கருவுற்றவர் வாழும் நிலையையும் அவர் பழக்க வழக்கங்களையும் சார்ந்தும் இருந்தது.  எடுத்துக்காட்டாக, உடற்பயிற்சி இன்மை, சத்துணவு இன்மை, சூரிய ஒளியின்றி வாழும் இல்லம், சுத்தமற்ற காற்று இல்லா சூழ்நிலை ஆகியவைகளினால் உடலில் இரத்த சோகை, வைட்டமின் குறைபாடுகளினால் அதுவும் குறிப்பாக வைட்டமின் ‘டி’ குறைபாடுகளினால், எலும்பு நலிவு, கருவுற்ற காலங்களில் ஏற்பட்டது.  சில நேரங்களில் வலிப்பு, கை, கால்களில் வீக்கம், இரத்தக் கொதிப்புடன் சன்னி கண்டு இறக்க நேரிட்டது.

மேலும், பிரசவ நேரத்தில் அப்பெண் வீட்டின் ஒரு தூய்மையற்ற மோசமான மூலையில் யாரும் அவருக்குப் பணிவிடை செய்யாது, தனிமையில் கிடத்தப்படுவார். யாராவது பணிவிடை செய்ய முன்வந்தாலும், அவர் தூய்மையற்றுக் காணப்படுவார்.  இந்நிலையில் கருவுற்றவரும் குளிக்காது,  தன் உடைகளைக் குழந்தை பிறக்கும் வரை மாற்றாது இருப்பதென்பது வழக்கமாக இருந்தது.

கருவுற்றவர் பிரசவிக்க அரசு அல்லது நகராட்சி மருத்துவமனைகளில் எந்தவிதத் தடையும் இல்லாதபொழுதும், அங்கு பிரசவம் பார்க்க பெண் மருத்துவ உதவியாளர் இல்லாமையால் கருவுற்றவர்கள் செல்வது கிடையாது.  மேலும் இவர்கள் பெண் தாதி, மருத்துவர்களைவிட தங்கள் வீட்டிற்கு வரும் உள்ளூர் மருத்துவச்சிகளிடம் பெரும் நம்பிக்கை வைத்திருந்தனர்.

கருவுற்றவர் இறப்புக்குக் காரணம்

கருவுற்ற பெண்களுக்கான இறப்பு ஏற்படக் காரணங்கள்:

1) பிரசவ காலங்களில் தகுதியுள்ள உதவியாளர் இல்லாமை.

2) மருத்துவச்சிகளுக்கு எந்தவித கண்காணிப்பும் இல்லா நிலை மற்றும் அவர்களுக்குத் திறமைகளுக்கான தகுதிகள் இல்லாமை.

3) மகளிர் மருத்துவமனையில் குறைவான பெண் மருத்துவர்கள் மற்றும் கருவுற்ற காலங்களில் பெண்ணுக்கு மிக அதிகமாகக் காணப்படும் இரத்தசோகை, பிரசவ கால ஜன்னி, வைட்டமின் ‘டி’ குறைபாடு ஆகியவைகள்.

குற்றக் கருக் கலைப்பு:

மருத்துவச்சிகள் பிரசவம் பார்ப்பதோடு கருக்கலைப்பையும் தேவைப்பட்டுக் கேட்கும்பொழுதில் செய்தனர்.  செய்த பிறகு காய்ச்சல் வந்தால் மலேரியா எனச் சொல்லப்பட்டது.  இதனால் கருவுற்ற பெண்களுக்கு அதிக அளவில் மரணம் ஏற்பட்டது.  ஆனால் இவைகள் வீட்டாரின் ஒத்துழைப்புடனே மறைக்கப்பட்டது.

தாயின் உயிர் பிரிந்த நிலையில் யாரும் யாரைப் பற்றியும் குற்றம் சாட்டாது, பிணம் எரிக்கப்பட்டது அல்லது ஆற்றில் தூக்கி எறியப்பட்டது.

குற்றக் கருக் கலைப்புக்குப் பயன்படும் பொருட்கள்:

குற்றக் கருக் கலைப்பு செய்யும் முறை கருப்பையில் உறுத்தலை உண்டாக்கும் இரசாயனப் பொருட்கள் அல்லது தாவரங்கள்.  தாவரங்களில் மஞ்சள் அரளி, அலரி, சித்ரா ஆகியவை.  இதன் சிறு குச்சிகளில் பெருங்காயம், அபின், வெண் பாஷாணம், சுத்திகரிக்காத கார்பனேட் ஆப் சோடா, மிளகு, பாதரசம், கள்ளிப்பால், குரோடான் செடிச்சாறு, மஞ்சள் ஆர்சினிக், சுண்ணாம்பு ஆகியவைகள் தடவப்படும்.  சில சமயம் ஆர்சீனியஸ் அமிலம் கருப்பையின் வாயில் பூசப்படும்.  இது தவிர மிக அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட கருக்கலைப்புக்கான பொருள் துணியில் குறி போடும் மை,  பலவித மலமிளக்கிகளும் பயன்படுத்தப்பட்டன.  கருப்பை சுருங்கி விரிய வயிற்றைப் பிசைந்து அமுக்கிவிடுவதும் உண்டு.

இவைகளினால் வயிற்றினுள் அழற்சி ஏற்பட்டு, இரத்தம் நஞ்சாகி மரணம் ஏற்படும் அல்லது சில சமயம் பயன்படுத்தப்படும் நச்சினாலும் நேரடியாக மரணம் சம்பவிக்கும்.  வயிற்றைப் பிசைந்து  அமுக்கி விடும்போது, கருப்பை தெரிப்பினால் இரத்தக் கசிவு ஏற்பட்டு சாவு ஏற்படும்.  ஆனால், இந்தச் சாவு தானாகவே கருக் கலைந்ததால் ஏற்பட்டது என்று கூறப்பட்டு பிணம் அகற்றப்படுவதோடு, இதற்குப் பயன்படுத்தப்பட்ட அத்தனை உறுத்தலைக் கொடுக்கும் பொருட்களும் சுவடுகள் தெரியாமல் அப்புறப்படுத்தப்பட்டுவிடும்.

சிசு மரணம்

கருவுற்றதால் எவ்வளவு மோசமாகத் தாய்மார்கள் நடத்தப்பட்டார்களோ அதைவிட மோசமாக அவர்களுக்குப் பிறக்கும் சிசுக்களும் கவனிக்கப்பட்டார்கள்.  அதுவும் பெண் குழந்தையாய் இருப்பின், பிறந்ததிலிருந்தே புறக்கணிக்கப்பட்டது.  18, 19 - ஆம் நூற்றாண்டில் பெண் சிசுவைக் கொலை செய்வது என்பது சாதாரண நிகழ்ச்சியாக இருந்தது.  இது ஏனெனில் அவர்கள் திருமணத்திற்கு அதிகமாகப் பணம் தேவைப்பட்டதாலும், சில நேரங்களில் திருமணமாகாத நிலையில் அவர்கள் சமூகத்தினரால் கேலி பேசப்படுவதைத் தடுப்பதற்காகவும் ஆகும்.

எப்படி சிசு கொலை செய்யப்பட்டது?

இதற்காகக் குழந்தையைக் கொல்ல, பால் கொடுக்காமல் இருப்பது அல்லது மார்பகத்தில் நச்சுப்பொருளைப் பொதுவாக அபினைத் தடவி குழந்தையைப் பால் குடிக்க வைப்பதும் ஆகும்.  இது தவிர நேரடியாகவே சில முறைகள் கையாளப்பட்டன.  எடுத்துக்காட்டாக, ராஜா ரஞ்சித் சிங்கின் மகன் மகாராஜா தலீப் சிங்.  இவர் லாகூரில் குழந்தையாய் இருக்கும்பொழுது அவருடைய சகோதரியைச் சாக்கில் போட்டு ஆற்றில் தூக்கி எறியப்பட்டதாகக் கூறுகிறார்.  இதுபோன்ற சம்பவங்கள் அரிது என்றாலும், வங்காளத்தில் 1802-இல் குழந்தைகளை அது ஆணோ பெண்ணோ எதுவானாலும் கங்கை நதியில் தூக்கி எறிவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

எளிதில் கொலையைக் கண்டுபிடிக்க முடியாது

1884 அசிஸ்டண்ட் சர்ஜனாக வேலை பார்த்த ராம் கிஷன் விவரிப்பின்படி, பிறந்த குழந்தையைச் சாகடிக்க, பிறந்தவுடன் அதன் தொப்புள் கொடியைக் கட்டுவது இல்லை அல்லது குழந்தைக்கு அபின் கொடுப்பது.  இது தவிர மிக அதிகமாக மேற்கொள்ளப்பட்ட செயல்,  குழந்தையின் வாயின் உள்ளே அன்னத்தில் கடுகு எண்ணெய் தெளித்த பஞ்சை வைத்து குழந்தை மூச்சு நின்ற பிறகு பஞ்சை எடுத்துவிடுவது ஆகும்.

டாக்டர் சென்னின் கணக்குப்படி 1904 - இல் சரியாகப் பராமரிக்காததாலும், மருத்துவச்சிகளால் சுகாதாரமாகச் செய்யப்படாத பிரசவத்தாலும் டெட்டனஸ், எரிசிபிலஸ் போன்ற நோய்களினால் 34.40 சதவீத சிசு மரணங்கள் ஏற்பட்டன.  உணவுப் பற்றாக்குறை, தவறுதலான மருத்துவம், இரைப்பை குடல் நோய்களினால் 36.33 சதவீதம் மரணமும், 18.14 சதவீதம் மருத்துவச்சிகள் தவறுதலான முறையில் பிரசவம் பார்த்ததினாலேயும் மரணம் ஏற்பட்டது.  மேற்சொன்ன சுகாதாரமற்ற தவறுதலான பிரசவம் பார்க்கும் முறைகள் நகரத்திலும், கிராமத்திலும் நடைபெற்றன.

மிக அதிகமாக ஏற்படும் சிசு இறப்பிற்கு, தாதிகளின் சுத்தமற்ற, முரட்டுத்தனமான செயல்களும் காரணங்கள்.

பிரசவம் ஆனபின் நச்சுக்கொடியைச் சிசுவிடமிருந்து துண்டிக்க தாதிகள் கிடைத்த பொருளைக் கொண்டு பெரும்பாலும் துண்டிப்பார்கள்.  பெரும்பாலும் தான் கொண்டு வந்த பழைய சவரப் பிளேடுகளைப் பயன்படுத்துவார்கள்.  சில சமயங்களில் வீட்டில் உள்ள அரிவாள்மனையைக் கூடப் பயன்படுத்துவார்கள்.  இதனால் தொப்புள்கொடி சீழ்பிடித்து, புண் ஆறுவதிலிருந்து நோய் வந்தால் பிழைக்க வைக்க முடியாத டெட்டனஸ் நோய்வரை ஏற்பட்டு சிசு மரணம் ஏற்படும். வெட்டிய நச்சுக்கொடியிலிருந்து இரத்தம் வெளிவராது தடுக்க கொடியைக் கட்ட கருவுற்ற தாயின் முடி அல்லது அருகில் கிடைத்த நூல் பயன்படுத்தப்பட்டது.

இதுபோன்ற மூடப் பழக்கங்களுடன் கொஞ்சம்கூட மாசு நீக்கி செய்யப்படாத மருத்துவத்தைத் தாதிகள் கடைப்பிடிக்கும் முறைகளைக் கண்ணுற்ற காலனி அரசு, மேலை மருத்துவ தாதி முறையைப் பெண்களுக்கு முறைப்படி மருத்துவமனைகளிலும், மருத்துவப் பள்ளி, கல்லூரிகளிலும் கற்றுத்தர முன்வந்தது.

Pin It