corona siddha"ஒண்ணுமே புரியலே உலகத்திலே, என்னவோ நடக்குது மர்மமா இருக்குது" என்ற ஒரு பழைய பாட்டு இன்றைய சூழலுக்குப் பொருந்தி வருகிறது. நாம் வாழும் உலகம் விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்ப உலகம். வியத்தகு முன்னேற்றம் கண்ட உலகத்தில் வாழ்ந்து வருகின்றோம்.

ஆனால் இந்தக் கிருமி இந்த அறிவியலுக்கு சவால் விட்ட வண்ணம் இருக்கிறது. முதல் அலை வந்தது, எங்கிருந்து, யாரால், எதன் மூலம் வந்தது இன்று வரை விவாதம் மட்டுமே மிஞ்சியது. இப்பொழுதுதான் அமெரிக்க அதிபர் குறைந்த கால அவகாசத்தில் இந்தக் கிருமி எங்கிருந்து வந்தது என்று கண்டுபிடித்துத் தரவேண்டும் என உத்தரவிட்டுள்ளார். முதல் அலை நகரத்தில் தாக்கியது.

தயாரானது அரசு, கட்டுக்குள் வந்தது கிருமி பரவல். நகரத்தில் கட்டுப்பாடுகள் கடுமையாகவே இருந்தன. முதல் அலை குறைந்தவுடன் மார்தட்டி கொரோனாவை வென்று விட்டோம் என்று கொட்டாவி விட்டு நம் அரசியல் சமூகமும் அறிவுச் சமூகமும் உறங்கிவிட்டன என்றே எண்ணத் தோன்றுகின்றது.

இன்றைய சூழலைப் பார்க்கும் போது, முதல் அலையைத் தடுக்க தயாரித்த தயாரிப்புக்களை அவசரமாக கலைத்து விட்டோம். தேர்தல் வந்தது, கிருமியை அழித்து விட்டோம் என்ற ஒரு சிந்தனையை உருவாக்கி, அனைவரையும் இயல்பாக செயல்பட அனுமதித்தோம். திருமணம், கலாச்சார நிகழ்வுகள், கோவில் திருவிழாக்கள் மற்றும் துக்க காரியங்கள் என எல்லா இடங்களிலும் கூட்டங்கள்.

முகக்கவசம், சோப்புப் போட்டு கை கழுவுதல், கிருமி நாசினி உபயோகப்படுத்துதல் இவை அனைத்தையும் சுருட்டி வைத்து விட்டோம். இரண்டாவது அலை வரப்போகிறது என்று அறிவியல் சமூகம் கூறியதா? அப்படிக் கூறியிருந்தால் ஏன் அரசு கேட்கவில்லை? அப்படிக் கூறியிருந்தால் ஏன் தேர்தல் நடத்தியது தேர்தல் ஆணையம்? இதைக் கேட்டது நீதிமன்றம் மட்டுமே. வேறு யாரும் வாய் திறக்கவில்லை.

இரண்டாவது அலை வருவதற்கு முன்பே தடுப்பூசிகள் வந்துவிட்டன. புலி வருகிறது புலி வருகிறது என்று கூறியதுபோல் தடுப்பூசி வந்தும் ஏன் அதை விரைவுபடுத்தி நம் மக்களுக்குப் போடவில்லை. தடுப்பூசி வந்த தருணத்தில் மக்களும் தயாராகவில்லை. தடுப்பூசி போட்டவர்கள் மட்டும்தான் அரசுப்பணிகளுக்கு வர வேண்டும் என ஒரு அரசு ஆணை இருந்தால் அத்தனை அரசுப் பணியாளர்களும் போட்டிருப்பார்களே.

ஒரு வணிக நிறுவனம் திறக்க வேண்டும் என்றால் அங்குப் பணிபுரிவோர் அனைவரும் தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே வளாகம் திறக்க அனுமதி என்றால் அனைவரும் போட்டிருப்பார்களே? இன்று கிராமப் புறங்களில் தடுப்பூசி போடுவதற்கு மக்களைத் தயார்படுத்தும் பணியைப் பஞ்சாயத்துக்குக் கொடுத்துள்ளது அரசு. எத்தனை பஞ்சாயத்துத் தலைவர்கள் தடுப்பூசி போட்டிருக்கிறார்கள். இவற்றையெல்லாம் அரசு செய்யத் தவறியது. காரணம் தடுப்பூசிக்கான கொள்கையை முறையாக உருவாக்கவில்லை.

சமூக ஊடகம் என்ற பெயரில் அள்ளிக் கொட்டுகிறார்கள் செய்திகளை. அவைகளெல்லாம் செய்திகள் அல்ல; அபத்தங்கள். இந்த ஊடகங்கள் இந்த மாதிரி அசாதாரணச் சூழலில் அறிவியல் பூர்வமான செய்திகளை யார் தரவேண்டும் என்பதற்கு ஏன் எந்தக் கட்டுப்பாடும் இன்றி வதந்திகளையும் நிரூபிக்கப்படாத செய்திகளையும் தந்து மக்களை அச்சப்பட வைக்கின்றார்கள் என்று நமக்குப் புரியவில்லை. இந்த அச்சமூட்டும் செயல்பாடுகளால் விளைந்த ஒரே நன்மை மக்கள் தடுப்பூசி தேடி அலைகின்றார்கள். ஆனால் அதற்கும் இப்போது தட்டுப்பாடு வந்துவிட்டது.

பொதுவாக ஒரு ஆளுகை, நிர்வாகம் எப்படி உறுதியாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதை எப்பொழுது தெரிந்து கொள்ளலாம் என்றால், ஒரு சிக்கல் வருகின்ற நேரத்தில்தான். அது பலமாக இருக்கிறதா பலவீனமாக இருக்கிறதா என்பதை அப்பொழுது நாம் மிக எளிதாகக் கண்டுபிடித்து விடலாம்.

உடலும் அப்படித்தான், உடலும் மனமும் எவருக்கு உறுதியாக இருக்கிறதோ அவர்களால் எந்த வியாதியையும் வெல்ல முடியும். பேரிடர்கள் முன்பெல்லாம் எப்போதாவது தான் தாக்கும். ஆனால் இன்று அடிக்கடி தாக்குகின்றது. அதில் இயற்கைப் பேரிடரும் உண்டு, மனிதர்கள் உருவாக்கிய பேரிடரும் உண்டு.

ஒவ்வொரு பேரிடரும் பல படிப்பினைகளை நமக்குத் தந்து விட்டுத்தான் செல்கிறது. அதிலிருந்து நாம் எதாவது பாடம் கற்றுக் கொள்கின்றோமா என்பதுதான் கேள்வி. எது நிகழ்ந்தாலும் அதை எப்படி அணுகுகின்றோம் என்பதை வைத்தே நாம் எப்படிப்பட்டவர்கள் என்பது நமக்குப் புலப்பட்டு விடும். எந்த நிகழ்வையும் தீயணைப்பைச் செய்வது போல் செய்கின்றோமேயழிய, ஒரு நெறிப்படுத்தப்பட்ட முறைமையும் கொள்கை சார்ந்து விஞ்ஞான அடிப்படையில் செயல்படும் தன்மையை வளர்த்துக் கொள்ளாமல் செயல்படுவது என்பதுதான் இன்று அனைவரும் குழப்பத்தில் ஆழ்ந்து யார் என்னை காக்கப் போகிறார் என்று ஓலமிடும் சூழலில் மக்களை வாழ வைத்து விட்டோம்.

கடந்த 30 ஆண்டுகளாக நம் அரசாங்கம், அரசியல், கொள்கைகள், ஆளுகை, நிர்வாகம் அனைத்தும் மாறிய விதம் நம்மை எங்குக் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது என்பதைப் பார்த்தால் நாம் எங்கே வழி தவறி இருக்கின்றோம் என்ற உண்மை நமக்குப் புரியும்.

நம் நாட்டில் இன்னும் ஏழைகள் தான் அதிகம். அரசாங்கத்தின் உணவுப் பாதுகாப்பில் 80 கோடி மக்கள் இருக்கின்றார்கள். இந்த எண்ணிக்கையில் ஏழைகளை வைத்துக் கொண்டு மக்கள் பிரச்சினைகளுக்கு சந்தையில் தீர்வு தேடுவது என்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும்.

ஒரு கார்ப்பரேட் மருத்துவமனை ஒரு 7 நாள் மருத்துவத்திற்கு ஒரு கொரோனா பாதித்த நபருக்கு 22 லட்ச ரூபாய் கட்டணமாக வசூலித்துள்ளது. அந்த மருத்துவமனை அதை ஏமாற்றி வாங்கவில்லை. அந்த மருத்துவக் கட்டமைப்பு என்பது அப்படி கட்டி எழுப்பப்பட்டுள்ளது.

ஏழைகள் வாழும் நாட்டில் கல்வி, மருத்துவம், உணவு, பிரயாணம், தங்குமிடம், அனைத்தும் எளிமைப் படுத்தப்படவில்லை என்றால், இவை அனைத்தும் ஏழைகளைப் பாதுகாக்காது, ஏழைகளுக்கு உதவாது. காந்தி மகான் இதை நன்கு உணர்ந்த காரணத்தால்தான் இந்திய மரபுமுறை அறிவை வளர்த்தெடுத்து ஏழைகளுக்கு உதவக்கூடிய கட்டமைப்பை உருவாக்க எண்ணினார்.

அரசாங்கம் அனைத்தும் செய்யும் என்ற வாக்குறுதியும் இன்று சாத்தியமில்லை என்பதையே பறைசாற்றுகிறது. காந்தி அதிகம் சிந்தித்தது மானுட மேம்பாடு பற்றித் தான். இன்னும் குறிப்பாகச் சொன்னால் ஏழைகளைப் பற்றித்தான். இவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்றால் ஆரோக்யமான வாழ்க்கைக்கு மக்களைத் தயாரிப்புச் செய்ய வேண்டும்.

நோய் வராமல் தடுக்கும் முறைமைகள்தான் மிக முக்கியமான செயல்பாடுகளாக அரசுக்கு இருக்க வேண்டும். அதில் பெருமளவு மக்கள் பங்கேற்க வேண்டும். இன்று வரை அந்தத் தயாரிப்பு இந்தியாவில் நடைபெறவில்லை.

அப்படி நடந்திருக்குமேயானால் நம் உடல் நம் பொறுப்பு, நம் சுத்தம் நம் பொறுப்பு, நம் சுற்றுப்புறத் தூய்மை நம் பொறுப்பு என்ற சிந்தனைப்போக்கு நம் மக்களுக்கு வந்திருக்கும். கழிப்பறையைப் அவர்களே கட்டிக் கொண்டிருப்பார்கள், அரசு கட்டத் தேவையில்லை.

ஏழைகளால் கட்ட முடியவில்லை என்றால் அரசு கட்டி வைத்த கழிப்பறையைப் பயன்படுத்தியிருப்பார்கள், பாதுகாத்து அவைகளை எப்படிச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டுமோ அப்படி வைத்திருப்பார்கள். இந்த அடிப்படைத் தயாரிப்பு இல்லாததன் விளைவுதான் கைகழுவ சொல்லித் தரவேண்டியுள்ளது. ஆரோக்யமாக வாழ்வதுதான் வாழ்க்கை என்பது புரியாமல் வாழும் சூழலில் மக்களை வாழ வைத்துள்ளோம்.

ஆனால் ஆங்கில மருத்துவ முறைக்கான கட்டமைப்புக்களை அரசு முன்னெடுப்புச் செய்தது. வெள்ளையர்கள் ஆண்ட இடங்களில் மரபுவழி மருத்துவம், சித்த மருத்துவம் மற்றும் இன்ன பிற மருத்துவ முறைகளை ஒழித்துக் கட்டி மக்களை ஆங்கில மருத்துவ முறைக்கு மாற்றினார்கள். ஆனால் அதிர்ஷ்டவசமாக சமஸ்தானங்களில் இந்திய முறை மக்கள் பயன்பாட்டில் இருந்தது.

ஆனால் சுதந்திரம் அடைந்த பிறகு நம் மருத்துவ முறைகளை மீட்டெடுக்க முனைப்புக்கள் அரசு காட்டவில்லை என்பது நம் பெரும் சோகம். இந்திய மரபில் இருந்த இயற்கை மருத்துவம், சித்த மருத்துவம், ஆயூர்வேத மருத்துவம் போன்ற பல்வேறு முறைகள் பற்றி எந்த முன்னெடுப்பும் செய்யவில்லை என்பதைப் பற்றிய எந்தப் புரிதலும் நம் அரசியல் கட்சிகளுக்குப் புலப்படவில்லை.

அதை மீட்டெடுப்பது என்பது மூடத்தனம் என்ற பார்வையும் நம்மிடம் இருந்தது என்பதை எவரும் மறுக்க இயலாது. இந்த முறைகள் மண்ணுக்கான முறைகள் மட்டுமல்ல. இந்த மண்ணில் பிறந்த மக்களுக்கானவை. அது மட்டுமல்ல, இந்த மண், இந்த மண்ணில் வளரும் மூலிகைகளை வைத்து மக்களின் ஆரோக்யத்தைப் பேண தேவையான ஆய்வுகளை பெருமளவில் முன்னெடுத்து, அவைகளை ஆங்கில முறை மருத்துவத்துடன் இணைத்துச் செயல்பட்டிருந்தால் இவ்வளவு பெரிய இழப்பு ஏழைகளுக்கு நிகழ்ந்திருக்காது இன்றைய சூழலில். நம் நாட்டு மருத்துவ முறைகளுக்கு இவ்வளவு பெரிய கட்டமைப்புக்கள் தேவையில்லை.

நம் மருத்துவ முறைகள் சந்தைக்கானவை அல்ல; அது சமூகத்திற்கானவை. நவீன ஆங்கில மருத்துவ முறைகளில் அதிகம் மருந்தும், அறுவைச் சிகிச்சையும் அத்துடன் நோய் கண்டுபிடிப்புக் கருவிகளும் தேவைப்படுகின்றன. நம் நாட்டு மருத்துவ முறைமைகளில் நோயைக் கண்டுபிடிப்பதும் அதன் வேரை அறுப்பதும் தான் மருத்துவரின் திறன்.

நம் நாட்டு மருத்துவ முறைகளில் வணிகம் என்பதற்கான பார்வை இல்லை. சேவை என்பது தான் மையப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் மேற்கத்திய முறை நவீன மருத்துவம் தொழில் துறையாக மாற்றப்பட்டு வணிகமாக பங்குச் சந்தைக்குள் பயணிக்க ஆரம்பித்தபின், அது மக்களுக்கு சேவை செய்யும் என்றோ, ஏழைகளுக்கும் அது உதவும் என்றோ எண்ணுவது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும். இதை நம் அரசியல் ஆழ்ந்து சிந்திக்க மறந்துவிட்டது.

இன்றைய சூழலில் மக்கள் வாழ்க்கைச் சூழலை சந்தைக்குள் புகுத்தி பெரும்பகுதி நுகர்வு வாழ்க்கைக்கு இழுத்துச் சென்றதன் விளைவு, எவருக்கும் தன் உடல் நலம் பற்றி எந்தப் பார்வையும் அற்று, எது வந்தாலும் மருந்து இருக்கிறது என்ற சிந்தனை ஓட்டத்தில் வாழ பழக்கிவிட்டது நம் சந்தைப் பொருளாதாரம்.

இந்த நாட்டு மக்களை இன்று வியாதிகள் ரீதியாகப் பிரித்து மருத்துவச் சந்தைக்குள் அவர்களின் இறுதிவரை பயணிக்க தயார்படுத்தி விட்டன. இதைவிட மிக முக்கியமாக எல்லாத் தரப்பு மக்களிடமும் ஆங்கில மருத்துவ முறை உயிரைக் காப்பாற்றி விடும் என்று திடமாக நம்ப வைத்து விட்டது ஆங்கில மருத்துவ முறைக்கான சந்தை விளம்பரங்கள்.

இந்தச் சூழல் நமக்குக் கூறும் செய்திகள் என்ன? ஆங்கில மருத்துவ முறையால் மட்டுமே நம் நாட்டு மக்களின் நலத்தைப் பேண இயலாது. ஆனால் அரசாங்கம் அதைத்தான் நம்பி இருக்கின்றது. அரசு நடத்தும் மருத்துவமனைகளும் சந்தைப்படுத்தப் பட்டவையகவே அவற்றின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.

அதன் மூலமாகவே மிகப் பெரும் அளவில் ஊழல் என்ற நோய் அரசாங்கத்தையும் அரசியலையும் வாட்டி வதைக்கின்றன. நம்மிடம் நம் பாரம்பரிய மருத்துவ முறை, சித்த மருத்துவ முறை போன்ற முறைகளை ஏன் தேவைக்கேற்ப ஆங்கில மருத்துவ முறையுடன் இணைத்து செயல்பட வைக்க முடியவில்லை என்பதைப் பற்றிய எந்தப் புரிதலும் நம் ஆட்சியாளர்களுக்குக் கிடையாது.

அறிவியல் அறிவுக்கு சான்றளிக்கும் மேற்கத்திய முறைக்குள் நம் மருத்துவ முறைகளைக் கொண்டு வரமுடியவில்லை. அதுதான் மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மிகப் பெரிய ஆயுதமாக இருக்கிறது. அது மட்டுமல்ல, மருந்துச் சந்தை என்பது மிகப்பெரிய சக்தி கொண்டதாகும். அரசியலை இயக்கும் சக்தி கொண்ட மாபெரும் பணபலமிக்க இயக்கம்.

அந்த இயக்கம் உள்ளூரிலிருந்து உலக சுகாதார அமைப்புவரை அரசாங்கத்துடன் பின்னிப் பிணைந்து செயல்பட்டுக் கொண்டுள்ளது. எப்படி நம் உள்ளூரில் உள்ள தேவாலயம் ரோமாபுரியில் உள்ள அமைப்புடன் ஒரு உயிரோட்டத் தொடர்பை வைத்திருக்கிறதோ அதே போன்றுதான் இந்த மருந்து தயாரிக்கும் நிறுவனம்.

அத்துடன் மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனம். இவை இரண்டும் சந்தை சக்தியில் பெரும் பங்கு ஆற்றுவதால், அவை அரசியல், ஊடகம் இரண்டையும் தம்வயப்படுத்தி வைத்துக் கொண்டுள்ளன. இந்தச் சூழல் மக்களைத் தொடர்ந்து ஊடகங்கள் மூலம் மூளைச் சலவையும் செய்து வைத்துக் கொண்டுள்ளன. இதில் இன்னொரு பரிதாபமும் இருக்கிறது.

அதாவது, மருத்துவத் துறைக்கான நியதிகள் அனைத்தும் தகர்க்கப்பட்ட நிலையில் பெரும் பணம் பார்க்கும் பார்வை கொண்டதாகச் செயல்படுகிறது இந்தத் துறை. இதற்கு மருத்துவக் கல்வியையும் பணம் சம்பாதிக்க என்ற சிந்தனைப் போக்கில் கொண்டுவந்து விட்டனர். ஆரோக்கியமாக வாழும் விழிப்புணர்வை மக்கள் பெற்றுவிட்டால் இந்த மருத்துவக் கட்டமைப்பு இவ்வளவுக்குத் தேவையில்லை.

பெரும்பாலான மக்கள் தன் தேகம் பேணும் பார்வையோ, அதற்கான விழிப்புணர்வோ பெற்றவர்களாக வாழ தயாரிக்கத் தேவையான வாழ்வியல் கல்வியைத் தரவில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால் படித்தவர்கள் கூட தன் ஆரோக்கியம் தன் பொறுப்பு என்ற உணர்வோ பொறுப்போ இருப்பவர்களாக தயார் செய்து கொள்ளவில்லை.

இதன் விளைவு நம் நடுத்தர வர்க்கமும் ஏன் மருத்துவர்களும் கூட நோயுற்ற நிலையில் வாழ்வதுதான் நாம் பார்க்கும் இன்னொரு பரிதாபகரமான சூழல்.

இதைவிட மற்றுமொரு வியாதி நம் நடுத்தர வர்க்கத்தை ஆட்டிப்படைக்கிறது. நம்முடைய அரசு மருத்துவமனைகளில் நல்ல மருத்துவர்கள் இருந்தும், வசதிகள் இருந்தும், அவையெல்லாம் ஏழைகளுக்கு, எனவே தரம் தாழ்ந்ததாக இருக்கும் எனக்கு, நாம் அங்குச் செல்வது நம் தரத்திற்குக் குறைவு என்று எண்ணி, கார்ப்பரேட் மருத்துவமனையில் நான் மருத்துவம் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறுவதில் ஒரு பெரிய பெருமை இருப்பதாக நினைத்து செயல்படுவது அடுத்த ஒரு மன வியாதி.

இவர்களைத் தொடர்ந்து ஏழைகளுக்கும் அரசு தருகின்ற உடல்நலம் பேணும் அட்டையைக் கொண்டு வந்து அந்தக் கார்ப்பரேட் மருத்துவமனைகளில் நோயாளிகளைச் சேர்த்து தங்கள் பணத்தையும் இழந்து, அந்த மருத்துவமனையில் மருத்துவம் பார்த்ததை ஒரு ஸ்டேட்டஸ்ஸாக பேசும் மனநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்தச் சூழலில் இந்தியாவில் முதல் அலையில் கொரோனா நகரங்களைப் பாதித்தது. நகரங்களில் நம் ஊடகங்களால் ஊடுருவ முடிந்தது. எனவே நகரங்களில் நிலை என்ன என்பதைப் படம் பிடித்துக் காண்பித்தது. இரண்டாவது அலை கிராமங்களுக்குள் புகுந்து விட்டது.

நகரங்களிலேயே கொரோனா பாதித்தவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு வருவது மிகப் பெரிய சவாலாக இருந்தது. இப்பொழுது கிராமங்களில் என்ன நடக்கின்றது என்பது பலருக்குத் தெரிவது கிடையாது.

தமிழகம் மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் ஓரளவுக்கு ஊடகங்கள் புக முடியும். வட இந்தியாவில் பாவம் ஆஷாவாக பணிபுரிவோர் கிராமத்தில் எப்படி கொரனா பாதித்தவரைக் கண்டுபிடித்து மருத்துவமனைக்குக் கொண்டு வருவார்.

உங்களுக்குத் தொற்று இருக்கிறது என்று ஒரு ஆஷாவால் கூறமுடியுமா? அப்படிக் கூறினால் அவர் உயிருடன் திரும்ப முடியுமா? உண்மை நிலை கொரனா நோயாளிகளுக்கு மருத்துவம் என்பது தலைநகரங்களில் நிகழ்கிறது. கிராமங்கள் மாவட்டத் தலைநகரம் அல்லது அடுத்த பெரு நகரம் நோக்கி ஓலமிட்டு ஓடுகின்றனர். ஆங்காங்கே இருந்த சிறிய மருத்துவமனைகள் மூடப்பட்டு விட்டன.

சித்த வைத்திய சாலைகள் மூடப்பட்டு அனைவரும் அரசின் மையங்களுக்கு வந்தாக வேண்டும். அல்லது தனியார் மருத்துவமனைக்குத்தான் செல்ல வேண்டும். தனியார் மருத்துவமனைகளை பல கோடிகளைக் கொட்டி உருவாக்கியிருக்கிறார்கள்.

தற்போது அவர்களுக்கு ஒரு வசந்த காலம். அவர்கள் அரசின் வேண்டுகோளுக்கு செவி சாய்ப்பது மாதிரித் தெரியவில்லை. அதிலும் ஒரு வேடிக்கை, நோயாளிக்கு கடுமையாக இருக்கிறது என்றால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விடுகிறார்கள்.

இத்தனை ஆண்டுகளிலும் நம் அரசாங்கமும் அரசியலும் மக்களை ஆரோக்கியம் பேணுவதில் பொறுப்பு மிக்கவராக செயல்படத் தேவையான விழிப்புணர்வை, புரிதலைக் கொடுக்க முடியவில்லை என்பது நம் தோல்வி. முதல் அலை ஆரம்பித்த நாளிலிருந்து இன்று வரை கணக்கிட்டால் ஓராண்டு ஆகின்றது.

பொதுமக்கள் முகக் கவசம் அணிய வேண்டும், கை கழுவ வேண்டும், சோப்புப் போட்டு, கிருமி நாசினியைப் பயன்படுத்துங்கள், மனித இடைவெளியைக் கடைப்பிடியுங்கள் என்ற அனைத்துச் செயல்பாடுகளையும் தொடர்ந்து ஊடகங்கள் மூலம் வலியுறுத்தி வந்தும், பெரும் மாற்றம் கிராமங்களில் வரவில்லை. அங்கு ஒரு அரசாங்கம் இருக்கிறது. அதற்கு ஒரு பரிவாரம் அங்கு இருக்கிறது.

அவர்கள் அனைவருக்கும் பொறுப்புக்கள், கடமைகள் உள்ளன. அவர்களின் பொறுப்பு பெரிய அளவில் தூய்மைப் பணி நடைபெற்று அது கிராமக் கலாச்சாரமாக மாற வேண்டும். அதேபோல் பொதுமக்களின் நடத்தையில் மாற்றங்கள் வர வேண்டும். முகக்கவசம் முண்டாசு கட்டுவதுபோல் அணிய வேண்டும். சோப்புப் போட்டு கை கழுவுவது அவர்கள் சிந்தனையில் ஒன்றிக் கிடக்க வேண்டும்.

எங்குச் சென்றாலும் கூட்டமாகக் குவியாமல் வரிசையில் நிற்க பழகிக் கொண்டிருக்க வேண்டும். எல்லாத் தேநீர்க் கடைகளிலும் கபசுரக் குடிநீர் வழங்கும் பழக்கத்துக்கு வந்திருக்க வேண்டும். 100 நாள் வேலை செய்யும் இடங்களில் அரசு கொடுத்த அத்தனை வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.

இவையெல்லாம் பின்பற்றப்பட்டிருந்தால் மக்களுக்கு சிந்தனையில் மாற்றம் வந்துவிட்டது என்று நாம் கருத முடியும். கிராமங்களின் நிலைமை அப்படி இல்லை. கிராமங்களில் மக்கள் அறிவியல் சிந்தனையுடன் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவில்லை என்றாலும், சந்தை தரும் தொழில் நுட்பங்கள் அனைத்தும் அவர்களின் உபயோகத்தில் உள்ளன.

அதில் ஒன்று தகவல் தொலைத் தொடர்பு. தொலைக்காட்சிப் பெட்டியும், கைபேசியும் இல்லாத வீடு இருக்க முடியாது. கழிப்பறை இல்லாமல் வீடுகளை நாம் காணமுடியும். அந்த வகையில் அவர்களுக்கு ஊடகங்கள் கொண்டு வந்து கொட்டும் செய்திகள், சமூக ஊடகங்கள் தரும் செய்திகள் அவர்களின் அச்சத்தை, குழப்பத்தைப் போக்குவதற்குப் பதில் அச்சத்தின் உச்சிக்கே கொண்டு செல்வதை நாம் பார்க்க முடிகிறது.

இதற்குத் தீர்வுதான் என்ன என்று யோசிக்கும் போது, நம் சித்த வைத்தியம் போல் அரசால் அங்கீகரிக்கப் பட்ட நம் பாரம்பரிய மருத்துவ முறைகளைக் நெறிப்படுத்தி அந்த முறைகளில் படித்தவர்களை களத்தில் இறக்கி செயல்பட வைக்க வேண்டும். இந்த நேரத்தில் ஆரம்ப நிலையில் இருக்கும் கொரோனா நோயாளிகளைக் கவனிக்க அவர்களையும் முறைப்படுத்தி அனுமதிக்க வேண்டும்.

அவர்களுடைய மருத்துவமனைகள் திறக்கப்பட வேண்டும். இன்று பிராணவாயு தேவைதான் பிரச்சினையாக இருக்கிறது, அதற்கான மாற்று அவர்களிடம் இருக்கும் போது அதைப் பயன்படுத்த நம் அரசு முனைய வேண்டும். களத்திற்கு ஆட்கள் தேவை. அவர்கள் தயாரிப்புடன் இருக்கிறார்கள்.

அவர்களைப் பயன்படுத்த நமக்குத் தேவை ஒரு வழிகாட்டி நெறிமுறை வகுப்பது. அதைச் செய்தால் அரசின் பாரமும் குறையும்; மக்களின் தேவையும் பூர்த்தியாகும். அத்துடன் சித்த மருத்துவம் என்பதை முறைமைப்படுத்தவும் வேண்டும், தரப்படுத்தலும் வேண்டும். அதற்கான ஆய்வுகள் என்பது பெருமளவு நடைபெற வேண்டும். அதற்கான கவனம் செலுத்தப்படல் வேண்டும்.

சித்த மருத்துவம் போல் உள்ள நம் பாரம்பரிய மருத்துவங்கள் கிராமங்களில் முறைப்படி செயல்பட அனுமதிக்கப்பட்டால் அதுவே மிகப் பெரிய சமூகத்திற்கு சேவையாக இருக்கும். இந்த முறைகள் நம் ஆங்கில முறைகளுடன் இணைந்தும் செயல்பட அனுமதிக்கப்பட்டால் இன்றைய அரசின் பாரமும் குறையும், மக்களின் பாரமும் குறையும். இன்று நம் மக்களுக்குத் தேவை தன் உடல் பற்றிய ஒரு புரிதல் மற்றும் பார்வை.

தன் ஆரோக்கியம் பற்றிய புரிதல் மற்றும் ஆரோக்கியமாக உடலை வைத்துக் கொள்ளும் வழிமுறைகள். இவைகள் நம் பாரம்பரிய நம் நாட்டு சித்தர் மரபில் நிறைய இருக்கின்றன. அவற்றை ஆய்வின் மூலம் வெளிக் கொணர்ந்து ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு நம் மக்களுக்குத் தேவையான விழிப்புணர்வை உருவாக்க வேண்டும்.

இதைப்பற்றி அறிவு சார்ந்த விவாதம் முன்னெடுக்கப்படுவது இன்றைய காலச் சூழலில் தேவையாக இருக்கிறது. அதை நம் தமிழக அரசு செய்ய முன்வர வேண்டும்.

- க.பழனித்துரை

Pin It