பிரான்சு (France) நாட்டுச் செய்திக் குழுவின் அறிக்கை:

தலைவலி, கை, கால், மூட்டுகளில் வலி, உடல் வலி, வறட்சியான தொண்டை, காய்ச்சல் போன்ற அறிகுறிகள், சாதாரண பருவக் காய்ச்சலுக்கு (flu) தோன்றுவதைப் போலவே COVID-19 நோயிற்கும் தோன்றினாலும் சாதாரணப் பருவக் காய்ச்சலுக்கும் COVID-19-ற்கும் அடிப்படையில் வேறுபாடு உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

covid 19கொரொனா நச்சுயிரியின் (virus) மூலம் COVID-19 நோய் தோற்றுவிக்கப்படுகிறது. இந்நோய்த் தாக்குதல் இருப்பதாக உறுதி செய்யப்பட்டவர்களுள் 3.5 சதவீதத்தினர் மரணத்தை தழுவுகின்றனர் என்பது ஆய்வு அடிப்படையில் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நோய்த் தாக்குதலினால் ஏற்படும் இறப்பு விகிதம் குறித்த இந்தப் புள்ளி விவரம் முழுமையானது அன்று. ஏனெனில், பலர் இந்நோயினால் தாம் பாதிக்கப்பட்டிருப்பதை உணராமலே இருக்கக்கூடும். சாதாரண பருவக் காய்ச்சலின்போது ஏற்படும் இறப்பு விகிதம் 0.1% ஆக இருக்க, இந்நோயினால் உண்டாகும் இறப்பு விகிதம் 3.5% என்று குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்து காணப்படுகிறது .

”COVID-19 நோயின் வீரியமும் அதன் தன்மையும் குறித்து இன்னும் நமக்கு முழுதாக விளங்கவில்லை. நோய் தாக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மருத்துவ வசதி ஏற்பாடுகளைப் பொருத்து இந்நோயின் தன்மை வேறுபடுவதே இதற்கு ஒரு காரணம். காட்டாக, நல்ல மருத்துவ வசதி கொண்ட பகுதிகளில் இந்நோய் கணிசமாக மட்டுப்படுத்தப்பட்டு வருகிறது” என்று லண்டன் பல்கலைக்கழகத்தில் உயிரியல் உயராய்வு மையத்தில் (Computational Systems Biology) பணியாற்றும் பேராசிரியர் பிராங்காயிஸ் பேலக்ஸ் (Francois Balloux) கூறுகிறார்.

சாதரண பருவக் காய்ச்சலைவிட 2% அதாவது 20 மடங்கு அதிகமாக இந்நோய் பரவி வருவதாகக் கூறப்படுகிறது.

அபாயக் காரணிகள்:

இந்நோயினால் இறப்பவர்களின் எண்ணிக்கையானது, இந்நோய் பரவும் வேகத்தைவிட மிக அபாயகரமானதாக உள்ளது. நோயிற்கான உடனடி சிகிச்சையும் செயற்கை சுவாசமும் தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்வதால், நம்முடைய மருத்துவ வசதி கட்டுமானங்கள் விரைவிலேயே போதாமையை சந்திக்கின்றன. அதாவது நம்முடைய மருத்துவ வசதிகள் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப இல்லை. மேலும், நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால், அதற்கேற்ப மருத்துவ வசதிகளையும் நாம் தொடர்ந்து பெருக்கிக் கொள்ள வேண்டியுள்ளது. இதுதான் தற்போதைய சூழலில் மிக ஆபத்தான ஒன்றாக மாறியுள்ளது.

சீனாவில், இந்நோய் இருப்பதாக உறுதி செய்யப்பட்ட 45,000 நோயாளிகளில், நோயினால் இறந்தவர்களின் இறப்பு விகிதத்தை ஒப்புநோக்கும்போது 14.8%-ற்கும் மேற்பட்டோர் 80 வயதைக் கடந்தவர்களாக உள்ளனர். மிக அதிகமான இறப்பு இந்த வயதை அடைந்தவர்களிடமே நிகழ்ந்துள்ளதாக ஓர் ஆய்வறிக்கை கூறுகிறது. ஆனால், மற்றொரு ஆய்வறிக்கையோ தீவிர நோய்த் தாக்குதலுக்கு ஆளானவர்களில் 27% நபர்கள் 65 வயதுகளைச் சார்ந்தவர்கள் என்றும் 41% நபர்கள் 50 வயதுகளைச் சார்ந்தவர்கள் என்றும் கூறுகிறது.

”அதிக வயதானவர்களே இந்நோயின் தீவிரத் தாக்குதலுக்கு அதிகம் ஆளாகிறார்கள் என்ற போதிலும்கூட, வரன்முறையின்றி, இளம் வயதுடைய நபர்களும் இந்நோயின் தீவிர தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பது தான் உண்மை” என்று பிரான்சு நாட்டின் துணை சுகாதாரத் துறை அமைச்சர் செரோம் சாலமன் (Jerome Salomon) குறிப்பிடுகிறார்.

நோயின் தொற்றுத்தன்மை:

COVID-19 நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து, 2 முதல் 3 வரை என்ற அளவில் பிறருக்கு இந்நோய்த் தொற்று பரவுகிறது. சாதாரண பருவக்காய்ச்சலினால் (flu) பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து 1.3 என்ற அளவில் தான் பிறருக்கு நோய்த்தொற்று பரவும். ஆனால், இந்நோயோ அதைவிட இரண்டு மடங்கு அதிகமாக நோய்த்தொற்றை ஏற்படுத்துகிறது.

தடுப்பூசிகளும் சிகிச்சை முறைகளும்:

”இன்ஃபூளூயன்சா (Influenza) எனும் நோய் நம்மிடையே ஒரு நூற்றாண்டு காலமாக இருந்து வருகிறது. புதிதாக வந்துள்ள COVID-19 நோயானது, கிட்டதட்ட இன்ஃபூளூயன்சா நோயின் அறிகுறிகளையே கொண்டிருந்தாலும் அதற்கும் இதற்கும் பெருத்த வேறுபாடுகள் காணப்படுகின்றன. நாங்கள் மிகக் கூர்மையாக அவற்றை ஆய்வு செய்து கொண்டிருக்கின்றோம்” என்று கூறும் சாலமன், COVID-19 நோயினைக் குணப்படுத்தக்கூடிய ஒரு முழுமையான தடுப்பு மருந்தோ (vaccine) அல்லது முறையான சிகிச்சை முறையோ இதுவரை நம்மிடம் இல்லாதது ஒரு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறுகிறார்.

சோதனை அடிப்படையில் தீவிர நோயாளிகளுக்கு அளிக்கப்பட்ட சில எதிர் நச்சுயிர் மருந்துகளும் (Anti-retroviral drugs) ஆய்வுமூலம் மெய்ப்பிக்கப்பட்ட சில சிகிச்சை முறைகளும் ஓரளவிற்கு நமக்கு நம்பிக்கையை அளித்திருக்கின்றன என்றாலும், அதை பெரும்பான்மை நோயாளிகளிடம் கொண்டு போய்ச் சேர்க்கும் அளவிற்கு விரிவடையவில்லை. இந்நோயிற்கு உரிய தடுப்பு மருந்துகளை கண்டறிவதற்கான ஆய்வுகள் உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கில் நடைப்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இருப்பினும் அவை முழுமையான வடிவம் பெறுவதற்கும் இன்னும் சில மாதங்கள் கூட ஆகலாம். அவ்வாறு கண்டறியப்பட்டாலும் தற்போது உள்ள சூழலில் அம்மருந்துகள் மூலம் நோயின் தீவிரத்தன்மையை குறைப்பதற்கு அதைவிட அதிக காலம் தேவைப்படலாம்.

ஒருவேளை, நல்வாய்ப்பாக இந்நோயிற்கு உரிய முறிமருந்து ஏதோவொரு ஆய்வில் கண்டறியப்பட்டு விட்டாலும் கூட, அதை நடைமுறையில் கொண்டு போய் சேர்ப்பது அவ்வளவு எளிய காரியமாயிராது. இன்ஃபுளூயன்சாவிற்கு எதிராக போடப்படும் தடுப்பூசி, அதன் மூலம் பெறப்பட வேண்டிய நோய் எதிர்ப்பு ஆற்றல், அதைக்கூட மக்கள் போதுமான அளவில் இன்னும் பெறவில்லை என்று பல்வேறு சுகாதார அமைப்புகள் புகார் தெரிவிக்கின்றன.

இரண்டு நோயிற்கும் இடையேயுள்ள ஒற்றுமைகள்:

இன்ஃபுளூயன்சா நோயோடு ஒப்பிடும்போது, COVID-19 நோய் பரப்பும் நச்சுயிரிகள் சில சிறப்பியல்புகளைக் கொண்டிருக்கின்றன. அவற்றைப் புரிந்து கொண்டு நோய்த்தொற்றிலிருந்து தப்பிக்கும் நடைமுறைகளை நாம் ஒவ்வொருவரும் கடைப்பிடித்தால், இந்நோயின் தீவிரத்தன்மையை வெகுவாகக் குறைக்கலாம்:

  1. உறவினர்கள், நண்பர்கள், அலுவல் நிமித்தமான சந்திப்புகளின் போது பிறரோடு கைகுலுக்குவதை தவிர்த்திடுங்கள்.
  2. கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுங்கள்.
  3. கைகளினால் முகத்தையோ, கண், வாய் போன்ற உறுப்புகளையோ தொடுவதை முடிந்த அளவிற்கு தவிர்க்க முயற்சியுங்கள்.
  4. ஒருவேளை நீங்கள் நோய் அறிகுறிகளோடு காணப்பட்டால், முகக்கவசம் (MASK) அணிந்து கொள்வதன் மூலம், நோய்த்தொற்று பிறருக்குப் பரவாமல் தடுக்க முடியும்.
  5. பொதுவிடங்களில் கூடுவதையும், ரயில், பேருந்து பயணங்களையும் முடிந்த அளவு தவிர்த்திடுங்கள்.
  6. பிறரிடமிருந்து குறிப்பிட்ட தொலைவு விலகி இருப்பது நலம்.

இதுபோன்ற சுகாதார அணுகுமுறைகளின் மூலம் இந்நோய் பரவுவதையும், நோய்த்தொற்று ஏற்படுவதிலிருந்தும் நம்மை ஓரளவிற்கு தற்காத்துக் கொள்ளவும் முடியும்.

”பத்தில் இருவர் மட்டுமே கழிப்பறைக்கு சென்ற வந்த பிறகு கைகளை சோப்பினால் தூய்மை செய்கிறார்கள்; அதைப்போல 42% மட்டுமே தும்மும்போதும் இருமும்போதும் தங்கள் முகத்தினை துணியினால் மூடிக் கொள்கிறார்கள்; இது ஆரோக்கியமான அணுகுமுறையல்ல” என்று பிரான்சு நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் எச்சரிக்கின்றார்.

தூய்மையோடும் முன்னெச்சரிக்கையோடும் சமூகம் விழிப்புற்றால் கொரொனாவை ஒரு பகுதிக்குள்ளே சிறை செய்து அழித்து விட முடியும். விழிப்புறுவோம்…!!

மூலம்: https://www.sciencealert.com/the-new-coronavirus-isn-t-like-the-flu-but-they-have-one-big-thing-in-common

தமிழில்: ப.பிரபாகரன்

Pin It