கழுத்தின் இரண்டுப் பக்கங்களின் வழியாகத் தலைக்குச் செல்லும் கழுத்துத் தமனிகள், இதயத்திலிருந்து மூளைக்கு இரத்தத் தைக் கொண்டு செல்லுகின்றன. பெரிதாக உள்ள இந்த இரண்டு தமனி இரத்தக் குழாய்களும் படிப்படியாக பல கிளைகளாகப் பிரிந்து நுண்ணிய இரத்தக் குழாய்களாக மாறி, மூளையின் எல்லாத் திசுக்களுக்கும், அவை செயல்படத் தேவையான பிராணவாயுவையும், பிற ஊட்டச் சத்துகளையும் வழங்குகின்றன. இதனால் மூளையின் அனைத்து பாகங்களும் முறையாகச் செயல்படுகின்றன.

இப்படி மூளைக்குச் செல்லும் இந்த பெரு மற்றும் சிறு இரத்தக் குழாய்களில் இரத்த ஓட்டம் குறையும் போதோ அல்லது தடைபடும் போதோ, மூளையின் திசுக்களுக்குத் தேவையான பிராண வாயுவும், பிற ஊட்டச் சத்துகளும் கிடைப்பது தடைபடுகிறது. இதனால், அவை செயல் இழக்கத் துவங்குகின்றன. மூளையில் செயல் இழந்த அந்த பகுதியின் தாக்கம், உடல் இயக்கத்தையும் பாதிக்கிறது. இதனால் பக்கவாதம் (Stroke) ஏற்படுகிறது.

“ஸ்ட்ரோக்” என்றால் கிரேக்க மொழியில், “தடைபடுதல்” என்று பொருள். மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தில் தடை ஏற்படுவதால், இப்பாதிப்பை நற்ழ்ர்ந்ங் என்கிறோம். தமிழில் இதை, “பக்க வாதம்” என்கிறோம். ஏனென்றால், மூளை யின் ஒரு பகுதி பாதிக்கப்பட்டு, அதன் காரணமாக உடலின் ஒரு பகுதி செயல்படாமல் போகிறது.

பக்கவாதத்தின் வகைகள் :

பக்கவாதத்தை, அது ஏற்படும் விதத்தை வைத்து மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

1.மூளையிலுள்ள இரத்தக் குழாய்களில் ஏற்படும் “அடைப்பின்” காரணமாக ஏற்படும் பக்க வாதத்தை “அதிரோஸ்கிளீரோசிஸ்”என்கிறார்கள்.

2. மூளையிலுள்ள இரத்தக் குழாய்கள் வெடித்து, மூளையின் உட்புறமோஅல்லது வெளிப்புற மோ “இரத்தக் கசிவு” ஏற்பட்டு, “இரத்தத்தேக்கம்” உண்டாவதன் காரணமாக ஏற்படும் பக்க வாதத்தை “இன்ட்ரா செரிப்ரல்ஹெமரேஜ்” என்கிறார்கள்.

3. ஒருவருக்கு பலவீனமான அல்லது ஒழுங்கற்ற இதயத் துடிப்பு இருந்தால், அது இதயத்தில் “இரத்த உறை பொருட்களை“த் தோற்று வித்து, அது இரத்த ஓட்டத்தின் மூலம் மூளையிலுள்ள இரத்தக் குழாய்களைச் சென்றடைந்து, அங்கு அடைப்பை உண்டாக்கி பக்க வாதத்தை ஏற்படுத்தும். இதை “திராம்போ எம்பாலிக்” என்கிறார்கள்.

80 சதவிகித பக்க வாதம், மூளையிலுள்ள இரத்தக் குழாய்களில் ஏற்படும் “அடைப்பு” காரணமாகவே ஏற்படுகிறது. இது, இரத்தக் குழாயின் உட்பகுதி தடிமனாகுவதாலோ அல்லது கொழுப்பு, கால்சியம், சிகப்பணுக்கள் மற்றும் இரத்த உறை பொருட்கள் போன்றவை இரத்தக் குழாய்களின் உட்சுவர்களில் படிந்து, அதன் குறுக்களவு குறைவதாலோ ஏற்படுகிறது.

20 சதவிகித பக்க வாதம், மூளையில் இரத்தம் கசிந்து தேக்கமடைவதால் ஏற்படுகிறது. இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள்:

1.உயர் இரத்த அழுத்தம் (Hypertension).
 
2. மூளையிலுள்ள இரத்தக் குழாய்கள் வீக்கமடைவது (Aneurysm).

பக்கவாதத்தை, வேறொரு முறையிலும், மூன்றாக வகைப்படுத்தலாம். இவை, பக்க வாதத்தால் ஏற்படும் பாதிப்பை வைத்து வகைப்படுத்தப்படுகிறது.

1. தற்காலிக பக்க வாதம் (Transilent Ischemic Attack).

2. தொடர் பக்க வாதம் (Evolving Stroke).

3. முற்று பெற்ற பக்க வாதம் (Completed Stroke).

தற்காலிக பக்கவாதம் (Transient Ischemic Attack) :

இப்பக்க வாதம் ஒரு சில நிமிடங்களுக்கு மேல் நீடிக்காது. இதனால் இதை “தற்காலிக பக்க வாதம்” என்று அழைக்கிறார்கள். இப்பக்க வாத பாதிப்புக்கு, “இரத்த கசிவு” கண்டிப்பாகக் காரணமாகாது. மூளையிலுள்ள இரத்தக் குழாய்களில் ஏற்படும் “அடைப்பே” காரணமாக இருக்கும். இத்தற்காலிக பக்க வாதத்தில், அடைப்பு முழுமையாக ஏற்படாது. திடீரென அரைகுறையாக “அடைப்பு” ஏற்பட்டுப் பின் உடனேயே அது நீங்கி விடும்.

பெரும்பாலான “தற்காலிக பக்க வாதம்” சில நிமிடங்களுக்கு மட்டுமே நீடிக்கும். எனவே இந் நோயாளருக்கு சில பாதிப்புகள், சில நிமிடங்கள் வரையே ஏற்பட்டுப் பின், உடனேயே நீங்கிவிடும். என்றாலும், இவர்களுக்கு பின்னால் மீண்டும், கடுமையான பக்க வாதம் ஏற்படும் வாய்ப்புகள் நிறையவே உள்ளன.

தொடர் பக்க வாதம் (Evolving Stroke) :
 
இவ்வகை பக்கவாதம், இரத்தக் குழாய்களில் “இரத்த உறை பொருள்” தோன்றுவதாலோ அல்லது “மூளைப் புற்றுக்கட்டி” பாதிப்பினாலோ அல்லது மூளை உறைக்கு அடியில், இரத்தம் கசிந்துப் பின் ஏற்படும் இரத்தத் தேக்கத்தினாலோ ஏற்படலாம்.
 
இவ்வகை பக்க வாதத்தில், இரத்தக் குழாய் அடைப்போ அல்லது இரத்தக் கசிவோ திடீரென ஏற்படாது. கொஞ்சம் கொஞ்சமாக, நாட்கணக்கில் “பாதிப்பு” தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டிருக் கும். இடையில் பாதிப்பு அதிகரித்தோ அல்லது குறைந்தோ காணப்படும்.
 
முற்று பெற்ற பக்க வாதம் (Completed Stroke) :
 
இவ்வகை பக்க வாதத்தில் “பாதிப்புகள்” ஓரிரு மணி நேரத்திலேயே ஏற்பட்டு விடும். மேலும், இப்பாதிப்புகள் எளிதில் குணப்படுத்த இயலாத வகையில் ஏற்படும். இப்பக்கவாதத்தை, மேலும் இரண்டு வகைகளாக வகைப்படுத்துவர்.

1. சிறிய அளவே பாதிப்பை ஏற்படுத்திய, முற்று பெற்ற பக்க வாதம் :

இவ்வகை பக்க வாதத்தில், இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்புகள் சிறிய அளவிலேயே ஏற்படும். எனவே பாதிப்புகளும் சிறிய அளவிலேயே இருக்கும்.

2. பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்திய, முற்று பெற்ற பக்க வாதம் :

இவ்வகை பக்க வாதத்தில் இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்புகளோ அல்லது இரத்தக் கசிவோ பெரிய அளவில் ஏற்படும். எனவே பாதிப்புகளும் கடுமையாக இருக்கும்.

பக்கவாதம் ஏற்படுவதற்கான சில முக்கிய காரணங்கள் :

1. பாரம்பரியம் :

பக்க வாதம் ஏற்பட பல்வேறு காரணங்கள் உள்ளன. இதில் மரபணுவின் பங்கும் கண்டிப்பாக உள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது. பக்க வாத குறைபாடு உள்ள குடும்பங்களில் பிறக்கும் அடுத்த தலைமுறையினருக்கும், பக்க வாத பாதிப்பு ஏற்படும் சாத்தியக் கூறு நிறையவே உள்ளது.
 
2. உயர் இரத்த அழுத்தம் :

வயது கூடக் கூட இரத்த அழுத்தமும் அதிகரிக்கும். ஆனால், கீழ்க்கண்ட காரணங்களாலும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது.

உடல் எடை கூடுதலாக இருப்பது அல்லது உடல் பருமனாக இருப்பது.
 
உணவில் உப்பின் அளவு கூடுவது.
 
அளவுக்கதிகமாக மது அருந்துவது.
 
சிறுநீரகக் கோளாறு ஏற்படுவது.
 
ஒரு சில அலோபதி மருந்துகளின் பக்க விளைவு.
 
மனதில் “பதட்டம்” நிலவுவது.
 
உயர் இரத்த அழுத்தத்தால், மூளையி லுள்ள இரத்தக் குழாய்கள் வெடித்து, மூளைத் திசுக்களில் இரத்தக் கசிவு ஏற்படுவதால் பக்க வாதம் உண்டாகும்.

3.புகைத்தல் மற்றும் புகையிலையை பயன்படுத்துதல் :

இரத்தக் குழாய்களில், கொழுப்புப் படிந்து, “அடைப்பு” தோன்றுவதற்கு புகைத்தல் மற்றும் புகையிலைப் பழக்கமும் ஒரு காரணமாகும். மேலும், புகையிலையைப் பயன்படுத்துவதால், இதயத் துடிப்பும்; மற்றும் இரத்த அழுத்தமும் உயரும் வாய்ப்பு அதிகமுள்ளது. புகைப் பிடிப்பதினால், “கார்பன் மோனாக்ஸைடு” வாயு இரத்தத்தில் கலந்து, இரத்தத்தில் உள்ள பிராணவாயுவின் அளவு குறைகிறது.

4. அதிக உடல் எடை மற்றும் உடற்பருமன் :

“உடல் எடை” மிகுதியாக இருப்பது நமது தினசரி வேலைகளை கவனிப்பதற்கு தடையாக இருப்பதோடன்றி பல்வேறு உடல் பாதிப்புகளையும் ஏற்படுத்திவிடும். இதயத் துடிப்பு அதிகரிக்கும். இரத்த அழுத்தமும் உயரும். நீரிழிவு ஏற்படும். ஆகவே தான் அதிக உடல் எடையும் மற்றும் உடற்பருமனும் உள்ளவர்களுக்கு இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

5. நீரிழிவு நோய் :

இந்நோயால் உடலின் சர்க்கரை அளவு முறைப்படுத்த முடியாமல், இரத்தத்தில் சர்க்கரை யின் அளவு அதிகரித்து, அது உடலை பல வகையிலும் பாதிக்கும். இந்நோயினால் இதய பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு, கண்கள் பாதிப்பு, நரம்புகள் பாதிப்பு என பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதால், உடலின் அமிலத் தன்மை அதிகரித்து, “நினைவிழப்பு” ஏற்படும். மேலும், மூளையிலுள்ள இரத்தக் குழாய்கள் பாதிப் படைந்து பக்க வாதமும் ஏற்படும்.

6.இரத்தக் குழாய்களில் கொழுப்புப் படிதல் :

இரத்தக் குழாய்களில் கொழுப்புப் படிவ தற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன.
 
புகைத்தல் மற்றும் புகையிலைப் பழக்கம்.
 
ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம்.
 
சோம்பேறித்தனமான வாழ்க்கை முறை.
 
இரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகரிக் கும் போது, அவை இரத்தக் குழாயின் உட்சுவர் களில் கொஞ்சம் கொஞ்சமாக படிய ஆரம்பிக்கும். இதனால், இரத்தக் குழாயின் குறுக்களவு கணிசமாகக் குறைந்து, இரத்த ஓட்ட மும் குறைந்து விடும். இதனால் இதயத்துக்கு வேண்டிய பிராணவாயு குறைந்து, “மாரடைப்பு” (Heart Attack) ஏற்படும். இதே போல, மூளைக்கு அவசியமான பிராண வாயு குறைந்து “பக்க வாதம்”(Stroke) ஏற்படும்.

7. சில வகை அலோபதி மருந்துகள் :

பெண்கள் மாதவிடாய்ப் பிரச்சினை, குழந்தைப்பேறு இன்மை பிரச்சினை, பிள்ளைப் பேறு ஏற்படாமல் இருப்பதற்கு என பல்வேறு பிரச்சினைகளுக்காக, “செயற்கை ஹார்மோன் மருந்துகள்” மற்றும் “கருத்தடை பட்டைகள்” போன்றவற்றை பயன்படுத்தும் போது, இரத்தத் தில் இரத்த உறை பொருட்கள் திரளும் வாய்ப்பு உள்ளது. இவை பக்க வாதத்தை ஏற்படுத்தும். இதே போல, சில மனநலப் பிரச்சினைகளுக்காக மருந்துகளை உட்கொள்ளும் போது, அவைகளில் உள்ள செயற்கை வேதியியல் வினைப் பொருட்கள் மூளையிலுள்ள இரத்தக் குழாய்களில் “சுருக் கத்தை” ஏற்படுத்தி, பக்க வாதத்தை உண்டு பண் ணும் தன்மை வாய்ந்தவை.

8.தலையில் ஏற்படும் காயங்கள் :

தலையில் ஏற்படும் காயங்களாலும் “பக்க வாதம்” ஏற்படலாம். தலையில் அடிபட்டு, இதன் காரணமாக இரத்தக் கசிவு ஏற்பட்டு, மூளையைச் சுற்றி இரத்தம் தேக்கமடையும் போது, அது பக்க வாதத்தை ஏற்படுத்தி விடும்.

9. இதய நோய்கள் :

பல்வேறு இதய நோய்களின் காரணமாக, இரத்தத்தில் “இரத்த உறை பொருட்கள்” தோன்று கின்றன. இவை இரத்த ஓட்டத்தின் மூலம் மூளை யை அடையும் போது பக்கவாதம் ஏற்படுகிறது.

10. சோம்பேறித் தனமான வாழ்க்கை :

உங்கள் உடல் இயக்கம் சுறுசுறுப்பாக இல்லாத போது, உங்களுக்கு பக்க வாத பாதிப்பு ஏற்படும் சாத்தியம் அதிகரிக்கிறது. சுறுசுறுப்பாக நீங்கள் இருக்கும்போது - உங்கள் உடல் எடை சீராக இருக்கும் வகையில், உங்கள் உடலில் சேரும் சர்க்கரையும், கொழுப்பும் பயன்பட்டு விடுகிறது.

இரத்த அழுத்தம் குறைகிறது.
உடலில் உள்ள பிராணவாயுவின் அளவு அதிகரிக்கிறது.
மன அழுத்தம் குறைகிறது.
இதயத் தசைகளும், எலும்புகளும் வலுவடைகின்றன.
இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.
தசைகள் உறுதியடைகின்றன.
 
11. நாட்பட்ட மன அழுத்தம் :

தனிமையாக உணர்வது, எப்போதும் தனித்தே இருப்பது, பதட்டமான மனநிலை, எப்போதும் பிறரைச் சார்ந்திருப்பது, பல்வேறு பொருளாதாரப் பிரச்சினைகள், தாழ்வு மனப்பான்மை, மன வருத்தம், சோர்வு, சமூகத்தில் இயல்பாக பழக இயலாமை போன்றவை எல்லாம் மன அழுத்தத்துக்கு வழி வகுக்கும். இவற்றை, தகுந்த உளவியல் நிபுணரின் ஆலோசனையைப் பெற்று களையப் படவேண்டும். அப்படியின்றி இவற்றைத் தொடரவிட்டால், நாட்பட்ட மன அழுத்தம் ஏற்பட்டு, அது பக்க வாதத்தில் முடியும்.

12. ஒழுங்கற்ற வளர்சிதை மாற்றம் :
 
உடலின் வளர்சிதை மாற்றம் ஒழுங்கற்றுப் போனால் இரத்தத்தின் அடர்த்தி அதிகரிக்கிறது. இரத்த ஓட்டம் மந்த நிலை எய்தி, பக்க வாதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
 
13. ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் :
 
புரதம், பொட்டாசியம், கால்சியம், நார்ச்சத்து, “ஒமேகா-3”, என்ற கொழுப்பு அமிலம், வைட்டமின் -சி, வைட்டமின்-ஈ, பீட்டா கரோட்டீன், ஃப்ளேவனால் போன்ற ஆக்சிகரணத் தடுப்பான்கள் உணவுச் சத்தில் குறையும்போது, பக்க வாதம் ஏற்படுகிறது.

உட்கொள்ளும் உணவில் கொழுப் புச் சத்து அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையேல், இரத்தக் குழாய்களின் குறுக்களவு குறைந்து, பக்க வாதம் ஏற்படும்.

14. நாட்பட்ட நோய்த் தொற்று :

நீண்ட காலமாக இருந்துவரும் சில நோய்த் தொற்றுகள் கூட பக்க வாதம் ஏற்பட ஒரு காரண மாகலாம். பல்லில் நீண்ட நாட்களாக இருந்து வரும் நோய்த் தொற்று போன்றவை முக்கியமானவை.

பக்க வாதத்தின் அறிகுறிகள் :

1.பொதுவான அறிகுறிகள் :

பக்க வாதம் ஏற்படுவதற்கு முன் பாக சில அறிகுறிகள் தோன்றும். அப்போதே நாம் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அப்படிப்பட்ட சில முக்கியமான அறிகுறிகளாவன:
 
 1. உடலின் ஒரு பகுதி அல்லது முகம், கை, கால்களில் மரத்துப் போனது போன்ற உணர்வு.
 
 2. திடீரெனப் பார்வை தெளிவில்லாமல் போவது.

 3. நடந்து செல்லும்போது, திடீரென தலைச் சுற்றல், தடுமாற்றம் போன்றவை ஏற்படுவது.

 4. திடீர் குழப்பம், பேச்சுக் குழறல், பிறர் பேசுவதைப் புரிந்துக் கொள்ள  இயலாமை.

 5. கடுமையான திடீர்த் தலைவலி.

 6. தான் எங்கிருக்கிறோம் என்ற உணர்வு இல்லாமல் போவது.

2. பெண்களுக்கான தனி பக்க வாத அறிகுறிகள் :

பக்க வாத அறிகுறிகள் யாரிடமாவது தென்பட்டால், உடனடியாக அவரை அருகில் உள்ள வணிக நோக்கமற்ற, அவசரச் சிகிச்சைப் பிரிவு வசதி கொண்ட மருத்துவமனையில் சேர்த்து விடுங்கள். அல்லது தகுதியுள்ள ஒரு மருத்துவரை அணுகுங்கள். ஏனெனில், பக்கவாத அறிகுறிகள் தென்பட்ட அந்த முதல் 3 மணி நேரம் பொன் னான நேரம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். அந்தக் கால கட்டத்துக்குள் சிகிச்சையைத் துவங்கி விட்டால், அதனால் ஏற்படும் பாதிப்புகள் பெருமளவில் குறையும்.

பக்க வாதம் ஏற்பட்ட பிறகு, சில மணி நேரங்களில் அவர் உயிருக்கு அச்சுறுத்தல் கொடுக்கக் கூடிய பின்வரும் பிரச்சினைகள் ஏற்படக் கூடும்.

 1. மூச்சுப் பாதையில் அடைப்பு ஏற்படுவது.
 
 2. உணவை விழுங்குவதில் தடை உண்டாதல்.

 3. எளிதில் நோய்த் தொற்று ஏற்படுதல்.

 4. வலிப்புகள் ஏற்படுவது.

பக்க வாதத்திற்கான பரிசோதனை :

பக்க வாதத்திற்கான அறிகுறிகள் கண்டறியப் பட்ட பிறகு, அதை உறுதிப்படுத்த சில பரிசோதனைகள் செய்துப் பார்க்கவேண்டும். அவற்றில் மிக முக்கியமானது. கணிணி வழி உடல் உறுப்பு ஊடுகதிர் படப் பரிசோதனை (C.T.Scan). மருத்துவத் தொழில்நுட்பம் மிகவும் வளர்ச்சி யடைந்த இன்றைய கால கட்டத்தில் மிக முக்கியமான நவீன பரிசோதனை, “கணிணி வழி உடல் உறுப்பு ஊடுகதிர் படப் பரிசோதனை”(C.T.Scan) யாகும்.

இரத்தக் குழாய் அடைபட்டிருந்தால், பாதிக்கப்பட்ட மூளைப் பகுதிக்கு இரத்த ஓட்டம் சென்றிருக்காது. இதனால் அப்பகுதி “கறுப்பாக”த் தெரியும். மேலும், இரத்தக் கசிவினால் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், இரத்தம் தேங்கிய மூளைப் பகுதி “வெண்மையாக”த் தெரியும். மேலும், அப்பகுதியைச் சுற்றி மூளையில் வீக்கம் ஏற்பட்டிருப்பதையும் அறிய முடியும். மேலும், மூளை மற்றும் நரம்புகளில் என்னென்ன மாறுதல் கள் ஏற்பட்டுள்ளன என்பதையும் அறியலாம்.

ஆணுக்கும், பெண்ணுக்கும் உள்ள வேறுபாடுகள் :

பக்க வாத பாதிப்பு என்பது ஆணுக்கும், பெண்ணுக்கும் ஒரே மாதிரியாக இருக்காது. ஏனெனில், அவர்களின் மூளை அமைப்பில் சில வேறுபாடுகள் உள்ளன.

பெண்களின் மூளையை விட ஆண்களின் மூளை சற்றுப் பெரியது. ஆணின் மூளையை விட, பெண்ணின் மூளை சர்க்கரை சத்தை அதிக அளவில் பயன்படுத்துவதால், அதிக வெப்ப நிலையில் இயங்குகிறது. மேலும், சிந்திக்கும் போது பெண்கள் அதிக அளவில், மூளைத் திறனைப் பயன்படுத்துகின்றனர்.

பெண்களின் மூளையில், மகிழ்ச்சி உணர்வை ஏற்படுத்தும் நரம்புகள், அவர்கள் உரையாட நேரி டும் போது, அதிக அளவில் தூண்டப் படுகிறது. சிறிய அளவு ஓசையைக் கூட பெண்களின் மூளையால், ஆண்களை விட அதிக அளவில் உணர முடிகிறது. பெண்களின் மூளையில் அன்பு உணர்ச்சியைத் தூண்டிவிடும், “ஆக்ஸிடாஸின்” என்ற வேதியியல் பொருள் அதிக அளவில் சுரக்கிறது.

பெண்களின் மூளையின் முன்பகுதியான “செரிபெரல் கார்டெக்ஸ்”ஸில் ஆண்களை விட குறைந்த அளவே நரம்புத் திசுக்கள் இருக்கின்றன. இதனால் பெண்களுக்கு பக்கவாத பாதிப்பு, ஆண்களை விடக் குறைவாகவே ஏற்படுகிறது. மேலும், பெண்களின் உடம்பில் சுரக்கும் “ஈஸ்ட்ரோஜன்” என்ற ஹார்மோன் சுரப்பு அதிக அளவில் சுரப்பதும் ஒரு காரணமாகும்.

வாழ்க்கை முறை மாற்றங்கள் :

ஒரு முறை பக்க வாதம் வந்த பிறகு, மறு முறையும் பக்க வாதம் ஏற்பட்டுவிடுமோ என்ற பயத்திலேயே காலம் தள்ள வேண்டிய அவசியம் இல்லை. நமது வாழ்க்கை முறையில், சில மாற்றங்களைச் செய்துக் கொள்வதன் மூலம் கண்டிப்பாக, பக்க வாதம் மறுபடியும் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.
 
உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், நிம்மதியான உறக்கத்தைப் பெறவும், உங்கள் மன நிலையை மேம்படுத்தவும் நீங்கள் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கவேண்டியது அவசியமாகும்.

நடத்தல், வீட்டு வேலைகளைச் செய்தல், குழந்தைகளுடன் விளையாடுதல் போன்ற உங்கள் தினசரிக் கடமைகளை ஒழுங்காகச் செய்யவும். உங்கள் வயது என்னவாக இருந்தாலும், தினசரி சுறுசுறுப்பாக இயங்கினாலே, உங்கள் ஆரோக் கியத்திலும், மன நலனிலும் மேம்பாடு ஏற்படும்.

உங்கள் தினசரி வாழ்க்கையில் சில சிறு மாற்றங்களைச் செய்தாலே போதும். மாடிக்குச் செல்ல மின் தூக்கிகளைப் பயன்படுத்தாமல், படியேறிச் செல்லலாம். அருகில் உள்ள இடங்களுக்கு, வாகனத்தில் செல்லாமல் நடந்தே செல்லலாம். எல்லாவற்றையும்விட மிக முக்கியம், நீண்ட நேரம் நீங்கள் தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன் அமராதீர்கள்.

அதிக அளவில் உணவைச் சாப்பிட்டு விட்டால், அதனால் உருவாகும் சத்துகளைச் செலவிடும் அளவுக்கு நீங்கள் சுறுசுறுப்பாக இயங்கவேண்டும். இல்லாவிட்டால் உடற்பருமன், அதிக உடல் எடை, இதன் காரணமாக நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இரத்தத்தில் அதிக அளவு கொழுப்பு போன்ற பலப் பிரச்சினைகள் ஏற்படலாம்.

பக்கவாதம் ஏற்பட உள்ள பிற காரணங்கள்:

1.வயது முதிர்வதால் இரத்தக் குழாய்கள் தடிமனாவது.

2. ஒற்றைத் தலைவலி.

3. பல்வேறு “இணைப்புத் திசு” நோய்கள்.
 
4. மூளையிலிருந்து அசுத்த இரத்தத்தை இதயத்திற்கு எடுத்துச் செல்லும் சிரை நாளங்களில் பாதிப்பு.

பக்க வாதத்தால் ஏற்படும் உடல் பாதிப்புகள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அவை, பக்க வாதத்தின் வகையைப் பொருத்தும், அது மூளையின் எந்தப் பகுதியைப் பாதித்திருக் கிறது என்பதைப் பொருத்தும், அது யாரை பாதித்திருக்கிறது என்பதைப் பொருத்தும் நபருக்கு நபர் மாறுபடும்.

பக்க வாதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டவருக்கு பேச்சுச் சிகிச்சையாளர், உடல் இயக்கச் சிகிச்சையாளர், தொழில் வழி சிகிச்சையாளர், மன நல ஆலோசகர், ஊட்டச்சத்து நிபுணர் ஆகியவர்களின் உதவி பாதிப்புக்குத் தகுந்தாற் போலத் தேவைப்படும். இவர்கள் அனைவரும் இணைந்து நோயாளருக்குச் சிகிச்சை மற்றும் பயிற்சி அளிக்கும்போது, நோயாளர் பாதிப்பி லிருந்து வெகுவிரைவில் நலம் பெறுவார்.
 
பக்க வாத பாதிப்பைக் குணப்படுத்தும் சில ஹோமியோ மருந்துகள்:

அகோனைட், அனகார்டியம், ஆர்னிகா, பாரிடா கார்பானிகம், பெல்லடோனா, பிரையோனியா, கோகுலஸ், ஜெல்சிமியம், ஹைட்ரோ சயனிக் ஆசிட், இபிகாக், லாக்கசிஸ், நக்ஸ்வாமிகா மற்றும் ஓபியம்.

(மாற்று மருத்துவம் இதழில் வெளியானது)

Pin It