1. 'பிளாசிபோ' (PLACEBO) மருந்துகள் என்றால் என்ன?

தமிழ் இணைய பல்கலைகழகம் பிளாசிபோ (PLACEBO) என்பதன் தமிழாக்கத்தை 'ஆறுதல் மருந்து' அல்லது போலி மருந்து என்று குறிப்பிடுகின்றது. இவ்வகை மருந்துகள் அறிவியல் மருத்துவத்தில் இரண்டு விதமாக பயன்படுகின்றன.

 ஒன்று-ஒரு நோயாளி ஒரு சில நோய் அறிகுறிகளோடு அறிவியல் மருத்துவரை அணுகும் போது அந்த அறிவியல் மருத்துவர் அந்த குறிப்பிட்ட நோய் அறிகுறிக்கு எந்தவித 'வேலை செய்யும் மருந்தும்' (Pharmacologically active) தேவையில்லை என்று கருதுகிறார் எனில் அப்போது மருத்துவர் 'Placebo' மருந்துகளை பரிந்துரைப்பார். அது எந்த விதமான வேலையையும் செய்யவில்லை என்றாலும் ஒரு வித மனநிறைவை நோயாளிக்கு வழங்குகிறது. வாகனத்தின் முன்பு எலுமிச்சை பழத்தினை கட்டுவதனால் வாகனம் நன்றாக வேலை செய்யும் என்பது போல Placebo மருந்துகளும் ஒரு வித மனநிறைவை வழங்குகிறது.

இரண்டாவது அறிவியலில் ஒரு புதிய மருந்து கண்டுபிடிக்கப்படும் போது அது வேலை செய்கிறதா? இல்லையா? அதன் பக்க விளைவுகள் என்ன? என்று ஒப்பிட்டு பார்க்க புதிய மருந்தானது ‘பிளாசிபோ’('Placebo’) மருந்துகளோடு ஒப்பிட்டு பார்க்கப்படுகின்றது. எடுத்துக்காட்டாக இரத்த அழுத்தத்திற்கு ஒரு புதிய மருந்து கண்டுபிடிக்கப்படும் போது இரத்த அழுத்தம் அதிகமுள்ள ஒரு குழுவினை தேர்ந்தெடுத்து அதில் ஒரு சிலருக்கு உண்மையான மருந்தினையும் ஒரு சிலருக்கு 'Placebo' மருந்துகளையும் கொடுத்து இரண்டும் ஒப்பிட்டு பார்க்கப்படுகின்றது.

மனிதன் ஒரு விடயத்தை நம்பி விட்டால் அவனுடைய மனது மாற்றங்களை இயல்பாக உருவாக்கும் என்று அடிப்படையில் இவ்வகை 'Placebo' மருந்துகள் வேலை செய்கின்றன. ஆனால் அனைத்து நோய்க்கும் 'பிளாசிபோ' தீர்வாகாது.

2. அலோபதி மருத்துவம் ஆங்கில மருத்துவமா?

அலோபதியை ஆங்கில மருத்துவம் என்று அழைப்பது ஒரு ‘misnomer’ (தவறான பெயர்) ஆகும். இந்தியாவில் ஆங்கிலேயர்கள் இதனை அறிமுகப்படுத்தியதனால் இது ஆங்கில மருத்துவம் என பெயர் பெற்றது. இதனுடைய சரியான பெயர் ‘நவீன அறிவியல் மருத்துவமாகும்’ (Modern scientific medicine).

 அறிவியல் மருத்துவத்திற்கு பல நாட்டு அறிஞர்கள் கூட்டு முயற்சியினை செலுத்தியுள்ளனர். எடுத்துக்காட்டாக வைட்டமின் B1னை கண்டு பிடித்தது டச்சு நாட்டு அறிஞராகும். B2, B6யை இங்கிலாந்து அறிஞர் கண்டுபிடித்தார்.

 வைரஸை கண்டுபிடித்தது டிமிட்ரி இவநோச்கி (Dmitry Ivanovsky) என்று ரஷ்ய நாட்டு அறிஞராகும். எல்லோ சுரத்தின் (Yellow fever) அடிப்படையினை கியூபா நாட்டு விஞ்ஞானியான கார்லோஸ் (Carlos Finlay) கண்டுபிடித்தார்.

 சோசலிச நாடான கியூபா அறிவியல் மருத்துவத்தில் இன்று கொடிகட்டி பறக்கின்றது. கியூபாவின் நவீன மருத்துவர்கள் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் இன்று சேவை புரிந்து வருகின்றனர். மறைந்த வெணிசுலா அதிபர் சாவேஸ் சிகிச்சைக்காக கியூபா சென்றது நினைவில் கொள்ளத்தக்கது. இவ்வாறு முற்போக்கு மற்றும் ஏகாதிபத்திய நாடுகள் அனைத்தும் மூடநம்பிக்கை மருத்துவத்தை ஒழித்து விட்டு நவீன அறிவியல் மருத்துவத்திற்கு மாறிவிட்டன.

3. மருந்து என்றால் என்ன?
 
வெளியிலிருந்து உட்செலுத்தப்படும் ஒரு பொருள் மனித உடலில், மனித உடல் செயல்பாட்டினில், நோய்த்தன்மையில் மாற்றம் உண்டு செய்யுமாயின் அது 'மருந்து' எனப்படுகிறது. இவ்வாறு வரையறுக்கப்படும் மருந்து இயற்கையாக கிடைக்கும் பொருளாகவும் செயற்கையாக தயாரிக்கப்படும் பொருளாகவும் இருக்கலாம்.

4. இயற்கையில் கிடைக்கும் அனைத்தும் மனித உடலுக்கு உகந்ததா?

இல்லவே இல்லை. இந்த உலகில் இயற்கையில் வளரும் தாவர வகைகளில் (மூலிகைகள்) ஆயிரக்கணக்கான தாவரங்கள் விஷத் தன்மை வாய்ந்தததாகும்.

உலகில் ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான மக்களைக் கொல்லும், கோடிக்கணக்கான மனிதர்களை புற்று நோய்க்கு ஆட்படுத்தும் ‘புகையிலை’ இயற்கையில் வளரும் தாவரமாகும்.

மோசமான போதைப் பழக்கத்திற்கு ஆளாக்கும் கஞ்சா, ஒபியம் போன்றவைகளும் இயற்கையில் கிடைப்பதாகும். உண்டவுடன் மரணத்தை விளைவிக்கும் அரளிவிதை, குண்டுமணி, ஆமணக்கு, எட்டிக்காய் மற்றும் பல விஷ தாவரங்கள் இயற்கையில் தமிழ்நாட்டிலேயே கிடைக்கின்றன. இந்த கொடியவகை தாவரங்களை தவறுதலாக உண்டு பல விலங்கினங்களும் மனிதர்களும் ஆண்டுதோறும் உயிர் இழக்கின்றனர்.

முழுமையான விபரத்திற்கு கீழ்கண்ட இணைப்பை கொடுக்கவும். http://en.wikipedia.org/wiki/List_of_poisonous_plants

5. செயற்கையில் கிடைக்கும் அனைத்தும் மனிதனுக்கு தீங்கானதா?

   இல்லை. செயற்கையில் தயாரிக்கப்படும் பல்லாயிரக்கணக்கான மருந்துகள் கோடிக்கணக்கான மக்களை உலகம் முழுவதும் காப்பாற்றி வருகின்றன. இவை ஜீரத்தை போக்க வல்ல ‘பாராசிட்டாமால்’ முதல் கேன்சர் நோயை குணப்படுத்தும் ‘இமாப்டினாப்’ வரை நீள்கின்றன.

6. ‘அலோபதி’ செயற்கை மருந்துகளை மட்டுமே பயன்படுத்துகின்றதா?

இல்லை. அலோபதி செயற்கையில் தயாரிக்கப்படும் மருந்துகளை மட்டுமே பயன்படுத்துவதில்லை. அலோபதியில் கணிசமான மருந்துகள் இயற்கை பொருட்களிலிருந்து பெறப்படுபவையாகும். மலேரியாவை குணப்படுத்தும் மருந்துகள் முதலில் ‘சின்கோனா’ மரப்பட்டையிலிருந்து தயாரிக்கப்பட்டன. இயற்கை தாவரங்களிலிருந்து பெறப்படும் அலோபதி மருந்துகளும் கணக்கற்றவையாகும்.

அறிவியல் மருத்துவம் இந்த மருந்து இங்கிருந்து வந்தது, அங்கிருந்து வந்தது என்று பாகுபாடு பார்ப்பதில்லை. அறிவியல் பகுத்தறிவின் உச்சம் ஆகும். எடுத்துக்காட்டாக ஏதேனும் ஒரு பாரம்பரிய மருந்து வேலை செய்வதாக நிரூபிக்கப்படுமாயின் நிரூபிக்கப்பட்ட அடுத்த நாள் முதல் அது அறிவியில் மருந்தாகி விடும்.

7. அலோபதி மருந்துகள் இயற்கையானவையா? அல்லது செய்கையானவையா?

மேற்கண்ட கேள்வியே தவறானதாகும். ஏனெனில் அறிவியலுக்கு இயற்கை, செயற்கை எல்லாம் கிடையாது. இயற்கையில் ஆயிரக்கணக்கான விஷ செடிகள், விஷ மரங்கள், விஷ கொட்டைகள் உள்ளன. செயற்கையில் உடலுக்கு உகந்த நோயை சரிசெய்யக்கூடிய பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன. இன்னும் சற்று கூர்ந்து நோக்கி தத்துவார்த்தமாக பார்ப்போமாயின் பிரபஞ்சத்தில் இயற்கை, செயற்கை என்று தனித்தனியாக ஏதும் இல்லை. ஏனெனில் எல்லாப் பொருட்களும் இங்கிருந்தே எடுத்து இங்கேயே தயாரிக்கப்படுபவை தான். எதுவும் வேறு பிரபஞ்சத்திலிருந்து கொண்டு வரப்பட்டவை அல்ல.

எனவே அறிவியலின் வேலை என்ன எனில் இயற்கையோ செயற்கையோ அது மனித உடலுக்கு உகந்ததா? இல்லையா? ஏதேனும் நோய்களை குணப்படுத்த உதவுமா? என்று ஆராய்ந்து வகைப்படுத்தி, பிரித்தெடுத்து மருந்துகளாக அதனை வழங்குவதே ஆகும்.

8. அறிவியல் மருந்துகள் ‘பக்க விளைவுகள்’ கொண்டதா?

 நியூட்டனின் மூன்றாம் விதிப்படி ஒவ்வொரு விசைக்கும் சமமான எதிர்விசை உண்டு. எந்த மருந்துக்கும் எந்த செயலுக்கும் சில பக்க விளைவுகள் உண்டு. பக்கவிளைவுகளை ஆராய்ந்து அதனை விளைவுகளோடு ஒப்பிட்டு லாப X நட்ட அடிப்படையில் தேர்ந்தெடுப்பதே அறிவியலாகும்.

 ஒரு மருந்தினைக் கொடுப்பதினால் ஏற்படும் பக்கவிளைவுகளை வெளிப்படையாகக் கூறுவது அறிவியல் மருத்துவம் மட்டுமே ஆகும். திருமணம் செய்வதால் ஒவ்வொருவர் வாழ்விலும் பல பயனும், சில தீங்குகளும் நடக்கின்றது. இதில் சில தீங்குகள் உள்ளதனால் திருமணமே செய்ய வேண்டாம் என யாரும் கூறுவதில்லை.

 மேற்கண்ட எடுத்துக்காட்டில் சுளைம அதிகமாகும் போது மண வாழ்க்கை முறிந்து போகின்றது. பயங்கரமாக குற்றம் சாட்டப்படும் அறிவியல் மருந்துகளின் பக்க விளைவுகள் பெரும்பாலும் லேசான தலைவலி, குமட்டல், லேசான வயிறு எரிச்சல் போன்றவையாகத்தான் இருக்கும்.

 இந்த சில புறக்கணிக்கக்கூடிய பக்க விளைவுகளுக்காக, மிகுந்த பாதிப்பினை உண்டாக்கும் நோயை குணப்படுத்தாமல் இருக்க இயலாது. அறிவியல் பக்கவிளைவுகளை நேர்மையாக வெளிப்படுத்துகிறது. எனவே விளைவு என்று ஒன்று இருந்தால் பக்கவிளைவு என்று ஒன்று கண்டிப்பாக இருக்கும்.

பாரம்பரிய மருந்துகளில் பக்கவிளைவுகளே இல்லை என்றால் அதன் உண்மையான அர்த்தம் அதற்கு விளைவுகளே இல்லை என்பதாகும். அல்லது விளைவுகள் மற்றும் பக்கவிளைவுகள் குறித்து எந்த ஆய்வும் நிகழ்த்தப்படவில்லை என்று கூறலாம்.

9. அலோபதி மருத்துவம் மற்ற அறிவியலோடு எப்படி தொடர்புடையது?

 அறிவியல் என்பது மனிதன் நெருப்பு, சக்கரம் முதலியவைகளைக் கண்டு பிடித்ததலிருந்து தொடங்கி இன்று வரை நீள்கின்றது. இது ஒரு கூட்டு முயற்சியாகும். தனியொரு கண்டுபிடிப்புகள் தனிமனிதனால் செய்யப்பட்டாலும், அந்த கண்டுபிடிப்பினை நிகழ்த்துவதற்குரிய அடிப்படைகளை பல்வேறு அறிஞர்கள் கண்டுபிடித்திருப்பார்கள்.

 எடுத்துக்காட்டாக ஒரு புதுவகை ‘பாக்டீரியா’வை ஒரு அறிஞர் கண்டுபிடிப்பதாக கருதுவோம். அவர் அதனை செய்வதற்கு ஒளி மைக்ராஸ்கோப், எலெக்ட்ரான் மைக்ராஸ்கோப் மற்றும் பல்வேறு ஆய்வு உபகரணங்களை கண்டுபிடித்தது வேறு சிலராக இருக்கும். அந்த வேறு சிலர் இல்லாமல் புதிய அறிஞர் இந்த கண்டுபிடிப்பினை நிகழ்த்தி இருக்க இயலாது. இவ்வாறு அறிவியல் பலரது கூட்டுமுயற்சியாக வளரும் போது அதன் அளவு அதிகமாகிறது.

ஆரம்ப காலங்களில் அறிவியல் என்பது ஒரே பிரிவாகத்தான் இருந்தது. பின்னர் அறிவியல் வளர்ந்த பொழுது அறிவியலில் பிரிவுகள் தோன்றின.

ஒரு மனிதர் பல்வேறு அறிவியல் பிரிவுகளை கற்றுத் தேற இயலாது என்ற நிலை உருவான பொழுது, மேலும் பிரிவுகள் அறிவியலில் தோன்றி தனித்தனியாகப் பிரிந்தது. இன்று அறிவியல் மிகவும் கற்பனைக்கு எட்டாத அளவு வளர்ந்து விட்டதால் மேலும் மேலும் நுண் பிரிவுகள் தோன்றுகின்றன. (எ.கா) முன்பு ஒரு வைத்தியர் என்பவர் அனைத்து நோய்களுக்கும் மருந்து கொடுத்து வந்தார். ஆனால் இன்று அறிவியல் மருத்துவம் பயில்பவர்கள் பல்வேறு பிரிவுகளிலும் கவனம் செலுத்த இயலாமல் ஒரு குறிப்பிட்ட பிரிவுகளில் மட்டும் தேர்ச்சி பெறுகிறார்கள். இதற்கே குறைந்தபட்சம் 9 முதல் 12 ஆண்டுகள் தேவைப்படுகின்றன.

 இவ்வாறு அறிவியல், இயற்பியல், வேதியல், உயிரியல் மற்றும் பலவாகப் பிரிந்தாலும் இவை ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையவை ஆகும். குறிப்பாக அறிவியல் மருத்துவம் பல்வோறு அறிவியல் பிரிவுகளோடு தொடர்புடையதாக உள்ளது. இன்று பயன்படுத்தபடும் X-Ray. USG, CT, MRI முதல் angiogram வரை இயற்பியல் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டவை.

மேற்கூறிய நெடிய விளக்கத்தின் மூலம் நவீன அறிவியல் மருத்துவம் மற்ற அறிவியல் பிரிவுகளோடு தொடர்புடையது என்பதை நீங்கள் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.

இப்பொழுது அதிர்ச்சிதரும் ஒரு விடயத்திற்கு வருவோம். அது யாதெனில் சித்தா, ஹோமியோபதி, யுனானி, ஆயுர்வேத மற்றம் பல்வேறு பாரம்பரிய மருத்துவமுறைகள் எந்த ஒரு அறிவியல் பிரிவினோடும் தொடர்பற்றவை ஆகும்! இந்த ஒரு விடயத்தை நீங்கள் தெளிவாகப் புரிந்து கொண்டாலே இக்கட்டுரையின் நோக்கம் நிறைவேறிவிடும்.
 
நீங்கள் மருத்துவ அறிவியலை மறுப்பீர்களாயின் இப்போது பயன்படுத்திக் கொண்டிருக்கும் கணினி அறிவியலை மறுப்பதற்குச் சமமாகும்.

10. மூடநம்பிக்கையின் தோற்றம் யாது?

 மனித இனத்தில் மூடநம்பிக்கைகள் நிலை பெற்று வருவதற்கு குறிப்பாக இரு காரணங்கள் உள்ளன.

- நல்ல செல்வம் பெற்று வளமான வாழ்வு வாழ
- நோய்கள் தீர்ந்து உடல்நலம் பெற

மேற்கண்ட இரண்டினை ஒட்டியே பல்வேறு மூடநம்பிக்கைகள் உள்ளன. செல்வவளம் பெறுவதற்கு கொடிய பல மூடநம்பிக்கைகள் இந்தியாவில் உள்ளன. இதன் உச்சமாக புதையல் கிடைப்பதற்காக பெற்ற குழந்தையையே நரபலி கொடுக்கும் வழக்கம் இன்னும் நடந்துகொண்டு உள்ளது. செல்வம் பெறுவதற்காக பல்வேறு மூடநம்பிக்கைகள் தொலைக்காட்சி வழியே (வியாபாரம்) விளம்பரம் செய்யப்படுகின்றன.

இதைப் போலவே, உடல் நலம் பெறவும் பல்வேறு மூடநம்பிக்கைகள் மக்களிடம் உள்ளன. இவை தொடர்ந்து பத்திரிக்கை, டிவி வழியே வியாபாரமாக செய்யப்படுகின்றன. எடுத்துக்காட்டாக Numerology, Nameolosy Gemolosy, நாடி சோதிடம், மலையாள மாந்திரீகம், தன‌லெட்சுமி இயந்தரம், அனுமன் தாயத்து போன்றவற்றைக் கூறலாம்.

11. மேற்கண்டவை எதனால் மூடநம்பிக்கை என கூறப்படுகின்றன?

 வாஸ்து, Numerology, Nameology, இதர போன்றவை ஏன் மூடநம்பிக்கை என கூறப்படுகின்றன எனில் அவற்றிற்கு அறிவியல் அடிப்படை ஏதும் இல்லை. அதனை கொடுப்பவர் ஏமாற்று வேலையாகவே இதனை செய்கிறார். ஆனால் பெருவாரியான மக்கள் இது வேலை செய்வதாக நம்புகின்றனர். வேலை செய்யும், பலன் தரும் எனவும் வாதம் செய்கின்றனர். பலன் தந்ததாக தொலைகாட்சியில் வாக்குமூலம் அளிக்கின்றனர். இதைத்தான் நாங்கள் ‘பிளாசிபோ’ என்கிறோம். (படிக்க கேள்வி 1)

 மேற்கண்ட ‘பிளாசிபோ’ (Placebo) வழிமுறையிலேயே பாரம்பரிய மருந்துவமுறைகளும் செயல்படுகின்றன.

12. பாரம்பரிய மருத்துவ மூடநம்பிக்கைகள் யாது?

- சின்னம்மை மாரியம்மன் என்று தெய்வம் மனிதருக்குள் இறங்குவதால் ஏற்படுகிறது
- குழந்தை இல்லாப் பெண்களுக்கு பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை சாப்பிடக் கொடுப்பது
- குழந்தையின் தொப்புள் கொடியில் சாணி வைத்தல் (இதன் மூலம் Tetanus) வரும்
- பாம்பு கடித்தால் தலையில் ஒரு பெரிய கல்லை வைத்தல் (விஷம் மேலே ஏறாமல் இருக்க)
‍ சிட்டுக்குருவி லேகியம் சாப்பிடுதல்
- கருக்கலைப்பு செய்ய எருக்கம் செடியை கருப்பைக்குள் சொருகுதல் (இதனால் மரணம் கூட ஏற்படலாம்)
- பேப்பரை பொசுக்கி காயத்தில் கட்டுதல்
- நாய்கடிக்கு நல்லெண்யை கொடுத்தல் (தடுப்பூசி போடவில்லை எனில் ரேபிஸ் வரலாம்)
- பெண்பிள்ளைகள் வயதுக்கு வரவில்லை எனில் சூடுபோடுதல்
- வலிப்பு நோயை பேய் பிடித்துவிட்டதாக எண்ணி மரத்தில் கட்டி வைத்து அடிப்பது
- குழந்தைக்கு மஞ்சள் காமாலை என்றால் இரும்பை பழுக்க காய்ச்சி சூடு போடுதல்
- எருக்கம்பாலை காதுவலிக்கு ஊத்துதல்
- குழந்தை அழுதால் உரம் எடுப்பதாகக் கூறி குழந்தையை கொடுமைப்படுத்துதல்
- பால்வினை நோய் தீர விலங்குகளோடு உறவு கொள்ளுதல்

இவ்வாறு கணக்கிலடங்கா மூடநம்பிக்கைகள் தமிழ்நாட்டில், இந்தியாவில் உள்ளன.

13. மருத்துவ மூடநம்பிக்கையினால் ஏற்படும் பிரச்சினை என்ன?

 மூடநம்பிக்கையினால் விளைவுகள் ஏதும் இல்லை எனில் பரவாயில்லை. ஆனால் மூடநம்பிக்கைகள் தீங்கு செய்யும் போதும், மக்களை ஏமாற்றப் பயன்படும் போதும் அதை வெளிக்கொணர வேண்டியுள்ளது.

 அறிவியல் பூர்வமற்ற மருத்துவமுறைகள் பல்வேறு பெயர்களில் உலகம் முழுவதும் உள்ளன. பலர் இது பலன் தருவதாக ‘பிளாசிபோ’ (Placebo effect) விளைவின் காரணமாக கூறி வருகின்றனர். பலர் இதனை தொழிலாகக் கொண்டு மக்களை ஏமாற்றிப் பிழைக்கின்றனர்.

 உலகில் எந்தப் பகுதியில் இருந்து இவை தோன்றியது என்பதைப் பொறுத்து இதனுடைய பெயர்களும் மாறுகின்றன. தமிழ்நாட்டில் சித்தர்களினால் தோற்றுவிக்கப்பட்டதாக நம்பப்படும் முறை “சித்தா” எனவும் (சித்தர்கள் என்பவர்கள் யார்? அவர்கள் யாரோடு ஒப்பிடத் தகுந்தவர்கள்? அவர்கள் அறிவியலை பின்பற்றினார்களா? அல்லது அமானுஷய சக்தியினால் இதனை உருவாக்கினார்களா? அல்லது கடவுள் அவர்களின் காதுகளில் வந்து கூறினாரா? சித்த மருத்துவம் வேலை செய்யும் எனில் கடவுள் இருக்கிறாரா?)

 வட இந்தியாவில் தோன்றியது ஆயுர்வேதம் எனவும், வெள்ளைக்காரரின் மூடநம்பிக்கை ஹோமியோபதி எனவும், அரேபிய நாடுகளின் மூடநம்பிக்கை யுனானி எனவும், சீனாவில் நிலவி வந்த மூடநம்பிக்கை அக்குபஞ்சர், அக்குபிரஷர் எனவும் பெயர் பெற்றது.

14. மாற்று மருந்துவர்களின் உண்மை நிலை யாது?

 அறிவியல் அடிப்படை இல்லாதவைகளை அறிவியல் துணைகொண்டு பேசுபவர்களே மாற்று மருத்துவர்களாவர். இவர்கள் டெங்கு நோய்க்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக அறிவிப்பார்கள். ஆனால் ஜுரம் வந்த ஒருவ‌ருக்கு டெங்கு நோய் தான் உள்ளது என்று வகைப்படுத்தி கண்டுபிடிக்க அறிவியல் மருத்துவமே தேவைப்படும்.

 பல்வேறு நோய்களுக்கு மருந்துகளை கண்டுபிடிக்கும் இவர்கள் ‘மாப்பிள்ளை அவர்தான் ஆனால் அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது’ என்ற காமெடியுடன் ஒப்பிடத் தக்கவர்கள். ஏனெனில் அந்த நோய்களை வகைப்படுத்தி கண்டுபிடித்ததே அறிவியல் மருத்துவமே ஆகும்.

 அறிவியல் ஜுரத்திற்கான காரணங்களை நூற்றுக்கணக்கில் வகைப்படுத்தியுள்ளது. இந்த வகைப்பாட்டின் அடிப்படையில் மட்டுமே ஜுரத்திற்கான காரணத்தை கண்டுபிடிக்க இயலும். இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் தான் மாற்று மருந்துவர்கள் ‘பப்பாளி இலை சாறு’ எனும் பிளாசிபோவை கொடுக்க இயலும்!!

 மாற்று மருத்துவ படிப்புகள் இந்தியாவில் பல்கலைக்கழகங்களினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது ஒரு வினோதமாகும். ஏனெனில் ஜோதிடத்தை ஒரு அறிவியலாக பல்கலைக்கழகம் மூலம் அரசு அங்கீகாரம் வழங்க முனைந்தபோது பகுத்தறிவாளர்கள் அதனை எதிர்த்தனர். ஏனெனில் அதற்கு அறிவியல் அடிப்படை இல்லை,

ஆனால் அறிவியலில் பலன் தரும் என்று எங்கும் நிறுவப்படாத மாற்று மருத்துவப் பட்டங்களை இந்தியப் பல்கலைகழகங்கள் வழங்கி வருகின்றன. ஆனால் பகுத்தறிவாளர்கள் இதனை எதிர்க்கவில்லை. ஏனெனில் இங்கு “பாரம்பரியம்” என்ற ஒற்றை வார்த்தை ஒரு வித போதையை நமக்கு அளித்துள்ளது.

 சாதி மற்றும் மதம் என்னும் ‘பாரம்பரியத்தை’ வைத்து பலர் வியாபாரம் செய்வது போலவே பாரம்பரிய மருத்துவத்தை வைத்தும் பலர் வியாபாரம் செய்கின்றனர். எனவே இந்தியாவின் பாரம்பரியங்கள் காப்பாற்றபடவேண்டியதா? அழிக்கப்பட வேண்டியதா? என நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

15. மாற்று மருத்துவர்கள் தீராத நோய்களையே எப்போதும் தீர்ப்பதேன்?

 தொலைக்காட்சியில் தொடர்ந்து தோன்றும் இவர்கள், அவர்களுடைய மருந்து ஒரு ரகசியம் என்று கூறுகின்றனர். இது இந்திய மருந்து சட்டம் 1940க்கு எதிரானதாகும். மருந்தினுடைய தன்மை, வேலை செய்யும் விதம் ஆகியவற்றைப் பற்றி இவர்கள் ஏதும் பேசுவதில்லை. ஏனெனில் மருந்து எவ்வாறு வேலை செய்கிறது என்று இவர்களுக்கும் சித்தர்களுக்கும் தெரியாது. (அவை பிளாசிபோவில் வேலை செய்கின்றன)

 ஆனால் அறிவியல் மருத்துவத்தை தொடர்ந்து குற்றம் கூறுவர். இதனைக் கேட்கும் மக்கள் அறிவியலையே குறைகூறும் இவர்கள் பெரும் விஞ்ஞானியாகதான் இருக்கக் கூடும் எனக் கருதுவர். இதனை மூலதனமாக வைத்துதான் இந்த தொலைகாட்சி ஏமாற்று மருத்துவர்கள் தீராத நோயை தீர்ப்பதாக கூறுகின்றனர்.

 ஏன் 'குறிப்பிட்டு' தீராத நோயை தீர்க்கின்றனர் எனில் நோய் தீரவிட்டால் அது தீராத நோய் என தப்பித்துக் கொள்ள முடியும்.

 எடுத்துக்காட்டாக புற்றுநோய் ஒருவருக்கு தோன்றி இனி குணப்படுத்த இயலாது எனும் போது அறிவியல் அவரைக் கைவிடுகிறது. (குறிப்பு: பெரும்பாலான புற்றுநோய்கள் ஆரம்ப நிலையில் கண்டுபிடிக்கப்பட்டால் கட்டுபடுத்தப்படக் கூடியவை)

 இவ்வாறு அறிவியல் மருத்துவம் அவரைக் கைவிடும் போது அங்கு வருகின்றனர் மாற்று மருத்துவர்கள். நோயாளி இறக்கும் வரை ஏதாவது ஒரு இலையை அரைத்துக் கொடுத்து முடிந்தவரை கல்லா கட்டுகின்றனர்.

16. ‘7’ தலைமுறை மருத்துவம் எவ்வாறு வேலை செய்கிறது?

 7 தலைமுறையாக பல குடும்பங்கள் மக்களை ஏமாற்றிவருவது பாராட்டத்தக்கதே! இவர்களின் பிரதான சிகிச்சை ஆண்மைக்குறைவு ஆகும். சுய இன்பம் மனிதன் மற்றும் விலங்குகளின் இயல்பான பழக்கம் ஆகும். இந்த சுய இன்பத்தை ஏதோ ஒரு பெரிய கஞ்சா குடிப்பது போன்ற மோசமான பழக்கம் என்று இவர்கள் பத்திரிக்கை, டிவி வழியே மக்களை முதலில் நம்ப வைக்கின்றனர். இதனை ஒருவர் நம்பி விட்டார் எனில் அவர் 7 தலைமுறை வைத்தியருக்கு ‘கப்பம்’ கட்டத் தொடங்கிவிடுவார். ஏதாவது ஒரு லேகியத்தை செய்து 5000- 10000- பார்சல் கட்டனம் எக்ஸ்ட்ரா என விற்று பணம் பார்க்க தங்களது ‘தாத்தா’ காலத்து டெக்னிக்காக பயன்படுத்துகின்றனர்.

 பத்துவருடங்களுக்கு முன்பு திருச்சியில் மத்திய பேருந்து நிலையம் அருகே ஹோட்டலில் தங்கி மாதமாதம் வைத்தியம் பார்க்கும் ஒருவர் ஒரு கொடுரமான வித்தையை செய்து வந்தார். அவர் ‘சுய இன்ப’ பழக்கம் தவறானது, ஆண்மைக் குறைவு ஏற்படும் என்று பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்வார். இதனைப் பார்த்து பயந்து வரும் இளைஞர்களை சோதனை செய்யப் போவதாக கூறி கீழ்கண்டவாறு செய்வார்.

குறைந்த அழுத்தத்தில் வரும் ஒரு மின்சாரத் தகட்டினை முதலில் கை கால்களில் வைப்பார். அப்போது லேசாக ‘சுர்’ என்று தெரியும், பிறகு அந்த மின்சார தகட்டுக்கு வரும் மின்சாரத்தை நோயாளிக்கு(!) தெரியாமல் நிறுத்திவிட்டு அந்த மின்சாரக் கம்பியினை ஆண் உறுப்பில் வைப்பார். நோயாளிக்கு ‘சுர்’ என ஷாக் அடிக்காது. இப்பொழுது நோயாளிக்கு பயம் கவ்விக் கொள்ளும். பிறகு அந்த மருத்துவர் அவரின் ‘உறுப்பு இறந்துவிட்டதாக’ அறிவிப்பார். இதனைக் கேட்ட நோயாளிக்கு உண்மையிலேயே ஆண்மைக் குறைவு வந்துவிடும். அதன் பின்னர் ‘நமக்கு ஒரு அடிமை சிக்கிவிட்டான்’ என்று பாரம்பரிய மருத்துவர் கல்லாவை நிரப்ப ஆரம்பித்துவிடுவார்.

 இவர்களுடைய ஏமாற்று வேலைகள் பெரும்பாலும் பிறப்பு உறுப்பு, ஆசனவாய் போன்ற ரகசிய இடங்களைச் சுற்றியே இருக்கும். ஏனெனில் அதனை மக்கள் வெளிப்படையாக பேச மாட்டார்கள். (எ.கா) மூலம், விரைவீக்கம் பிறப்பு உறுப்பு புண்கள், விரைவில் விந்து வெளியேறுதல்.

17. குடிபோதையை நீக்கும் மருந்துகள் என ஒரு கும்பல் விற்பனையை ஆரம்பித்துள்ளதே?

 ஆங்கில மருத்துகளை இலைகளுடன் அரைத்து விற்பது என்பது பாரம்பரிய மருத்துவர்களின் ஒரு பழமையான வழிமுறையாகும். சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களுக்கு Frusemide என்ற மருந்தை அரைத்துத் தருவது. ஆண்மைக்குறைவு உள்ளவர்களுக்கு Sildenafil என்னும் மருந்தை அரைத்துத் தருவது. ஜுரத்திற்கு Paracetamol மருத்தை அரைத்துத் தருவது என்று இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிற‌து.

 தற்போது அதிகரித்துவரும் குடிப்பழக்கத்தை நிறுத்த Disulfurim என்ற மருந்தை அரைத்துத் தருகின்றனர். இது மனநல மருத்துவரின் கவனிப்பில் பல்வேறு முன்னேற்பாடுகளோடு தரவேண்டிய ஒரு மருந்து ஆகும். இதனை முறை தவறி பயன்படுத்துவதால் பலர் மனநிலை பாதிக்கப்பட்டு Delerium என்னும் மோசமான நிலையில் கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்திற்கு வந்து சேருவதாக‌ மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.

18. சித்த மருத்துவ மருந்துகளால் பக்கவிளைவு ஏற்படுமா?

 சித்த மருத்துவ மருத்துகள் எவ்வித ஆராய்ச்சிக்கும் உட்படுத்தப்படாதவை. ஆயிரக்கணக்கான விஷச் செடிகள் இந்த உலகில் உள்ளபோது, இதனால் பாதிப்பு ஏற்படும் என்பது தெளிவாகத் தெரிகின்றது. மேலும் குறிப்பிட்டு கூறுவோமாயின் மூலிகை மருந்துகளால் சிறுநீரக பாதிப்பு ஏற்படுவதாக தற்போது ஆய்வில் தெரியவருகிறது. மேலும் தங்கம், வெள்ளி, ஈயம், பாதரஸம் போன்ற கடின உலோகங்கள் பஸ்பமாக சில மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. இவை கடின உலேகங்கள் ஆகும். (Heavy metals) இவைகளினால் உங்கள் சிறுநீரகம் பாதிக்கப்படலாம்.

 சிறுநீரக மருத்துவர்கள் நோயாளியின் நோய்க் குறிப்பில் H/O alternate medicine present என்று எழுதுவதை வழக்கமாகக் கொள்ளும் அளவிற்கு இந்தப் பிரச்சினை பெருகி வருகிறது. மேலும் விபரங்களுக்கு இணைப்பை காணவும். http://articles.timesofindia.indiatimes.com/2013-03-19/science/37842412_1_herbal-medicines-aristolochic-bladder-cancer

19. ஹோமியோபதி?

ஹோமியோபதி ஹானிமன் (Samuel Hahnemann) என்ற ஒரு வெள்ளைக்காரரின் மூடநம்பிக்கையாகும் (விரிவான கட்டுரை விரைவில்)

இந்த அறிவியல் பூர்வமற்ற கோட்பாடு ஹானிமனால் முன்மொழியப்பட்டது. இந்த கோட்பாட்டினை சுருங்கக் கூறின் "ஒரு மருந்து நோயற்ற ஒருவருக்கு கொடுக்கப்படும் போது ஒரு பாதிப்பை விளைவை ஏற்படுத்துகிறது. ஒரு வேளை அதே மேற்கண்ட பாதிப்பு ஒருவருக்கு ஏற்படுமாயின் அந்த மேற்கண்ட மருந்தைக் கொடுத்தால் அந்த நோய் நீரும் என்பது அந்த கோட்பாடாகும் ((similia similibus curentur) (substance that cause the symptom of a disease in hearth people will cure similar symptom in sick people)

மேற்கண்ட கோட்பாடு 1796ல் முன்மொழியப்பட்டது. 1796ல் அறிவியில் வளர்ச்சி மற்றும் மூடநம்பிக்கையின் அளவு எவ்வாறு இருந்திருக்கும் என்பதை உங்கள் கணிப்புக்கே விட்டு விடுகிறோம்.

மேற்கண்ட similar கோட்பாடு தவறானது என்பதற்கு ஒரு சிறு எடுத்துக்காட்டு.

நோயற்ற ஒருவரை ஒரு மாடு முட்டினால் அவருக்கு நோய் ஏற்படுகிறது. இவ்வாறு மாடு முட்டி காயம் அடைந்த ஒருவருக்கு சிகிச்சை ஹானிமன் என்ற வெள்ளைக்காரரின் மூடநம்பிக்கையின்படி அவரை அதோ மாட்டினை கொண்டு சிறு சிறு அளவாக மீண்டும் முட்ட வைப்பதே ஆகும். மேற்கு உலகம் இந்த மூடநம்பிக்கையிலிருந்து மீண்டு வெகுநாளாகிறது. பிரிட்டிஷ் மருத்துவ கவுன்சில், ஹோமியோபதியினை பில்லி சூனியத்திற்கு ஒப்பான மூடநம்பிக்கை என்று கூறுகிறது.

ஹோமியோபதியின் மருந்துகள் எந்த ஒரு ஆராய்ச்சியிலும் வேலை செய்வதாக நிரூபிக்கப் படவில்லை. முற்றிலும் பிளசிபோ தத்துவத்தின் அடிப்படையில் மட்டுமே ஹோமியோபதி இயங்குகிறது .

 ஹோமியோபதி மருந்துகளை பரிந்துரை செய்வதற்கு ஒழுங்குபடுத்தப்பட்ட கோட்பாடுகள் (Protocol) ஏதும் இல்லை. இந்த மருத்துவர்கள் தங்களின் சொந்த அனுபவத்தின் அடிப்படையிலே இதனை வழங்குகின்றனர். ஒரே நோய்க்கு வெவ்வேறு ஹோமியோபதி மருத்துவர்கள் வெவ்வேறு மருந்துகளை வழங்குகின்றனர்.

ஒரு வேளை ஹோமியோபதி மருந்துகள் வேலை செய்கிறது என்று ஆய்வில் நிரூபிக்கப் படுமாயின், நிரூபிக்கபடும் அந்த நாளே அது அறிவியில் (அலோபதி) மருந்தாகிவிடும்!

20. மக்களை முடமாக்கும் புத்தூர் கட்டு?

மனிதனின் எலும்பு உடைந்தால் அதனை சேர்த்து வைத்து அந்த உடைந்த இணைப்பு விலகாமல் பாதுகாத்தால் அது இயல்பாக சேர்ந்துவிடும் என்பது இயற்கையாகும்.

எடுத்துக்காட்டாக நாய்களுக்கு எலும்பு உடைந்தால் அது தன் கால்களை தூக்கிக் கொண்டே சில காலம் நடப்பதை கண்டிருப்பீர்கள். சில மாதங்கள் அவ்வாறு நடக்கும் நாய்க்கு அந்த உடைந்த எலும்பு ஒட்டிக் கொள்கிறது. ஏனெனில் நாய்கள் எலும்பு உடைந்தால் அந்தக் காலை பயன்படுத்தாமல் வைக்கிறது. இவ்வாறு மனிதனின் எலும்பும் உடையும் போது அதனை அசையாமல் வைத்தால் இணைந்து விடும் இந்த தத்துவம் தான் நுட வைத்திய சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது.

 இதில் என்ன பிரச்சினை என்று நீங்கள் கேட்பது எங்கள் காதில் விழுகிறது. மேற்கண்ட விதி ஒரு எலும்பு இரு அல்லது மூன்று துண்டாக உடைந்து அதே இடத்தில் இருந்தால் மட்டுமே (Undisplaced) பொருந்தும். ஒரு வேலை எலும்பு விலகி இருந்தால் (Displace) அல்லது நொறுங்கி இருந்தால் இவ்விதி பொருந்தாது. இவ்வாறு நொறுங்கி இடம்மாறி உடைந்து கிடைக்கும் எலும்புத் துண்டுகளை புத்தூர் கட்டு மருத்துவர்கள் தெய்வீக மூலிகைகளைக் கொண்டு அசையாமல் வைக்கின்றனர். இதனால் அந்த எலும்பு எவ்வாறு கிடக்கிறதோ அதே மாதிரி கோணலாக சேர்ந்து விடுகிறது. இதனால் ஏற்படுவதே முடமாகும். (Deformity)

ஒரு உடைந்த கையோ, காலே ஒன்றிணையும் போது அது உடையும் முன்பு இருந்த மாதிரியே சேர வேண்டும். மற்றும் மூட்டு இயக்கங்கள் உடையும் முன்பு இருந்த மாதிரியே இருக்க வேண்டும். இவ்வாறு இல்லை எனில் அதுவே முடமாகும்.

புத்தூர் கட்டு என்பது இவ்வாறு மூட்டு மற்றும் எலும்பினைப் பற்றி எந்த அறிவும் இல்லாமல் செய்யப்படும் ஒரு ஏமாற்று வேலையாகும். இந்த அறிவியல் அடிப்படை இல்லாத நுட வைத்திய சாலைகளினால் பலர் மாற்றுத் திறனாளியாகி விடுகின்றனர் என்பது வருத்தத்திற்குரியது. (குறிப்பு: முடம் என்ற சொல்லை பயன்படுத்தியதற்காக வருந்துகிறேன்) விரிவான கட்டுரை விரைவில்

19. ஆங்கில மருத்துவத்தின் குறைபாடு என்ன?

 ஆங்கில மருத்துவத்தின் குறைபாடு அதனுடைய விலை ஆகும். சாதாரண வியாதிகளுக்கு கூட ஆயிரக்கணக்கில் பணம் செலவாகின்றது. இதற்குக் காரணம் மக்களுக்கு மருத்துவத்தை வழங்கும் பொறுப்பிலிருந்து அரசு விலகி தனியாரிடம் அதனை விட்டததே ஆகும்.

 உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5% அல்லது அதற்கு மேல் சுகாதாரத்திற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆனால் இந்திய அரசு 2%க்கும் குறைவாகவே ஒதுக்கீடு செய்கிறது. எனவே மக்கள் சுகாதாரத்திற்காக சொந்தமாக செலவு செய்ய வேண்டியுள்ளது. இது பலரின் வறுமை நிலைக்கு காரணமாக உள்ளது. எனவே அனைவருக்கும் சுகாதாரம் என்ற கோரிக்கையை அரசை நோக்கி வைக்க வேண்டும் என்பதே இறுதித் தீர்வாக இருக்க முடியும்.

20. தற்காலிகத் தீர்வு ஏதும் உண்டா?

 தற்காலிகமாக ‘Health Insurance’ என்பது குறைந்தபட்ச தீர்வாக இருக்க இயலும். விபத்து, இதய அடைப்பு போன்ற எதிர்பாராத மருத்துவ செலவுகளுக்கு Health Insurance ஒரு தீர்வாக இருக்கும். உங்களுடைய தேவையைப் பொறுத்து அரசு காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும் சுகாதாரக் காப்பீட்டை நீங்கள் பெற்று வைத்துக் கொள்ளலாம்.

21. அறிவியல் மருத்துவ‌த்தின் சாதனை யாது?

 அறிவியல் மருத்துவத்தின் சாதனை கணக்கிலடங்காதது ஆகும். 1900 புள்ளிவிபரப்படி 1000 தாய்மார்கள் கருவுறும் போது அதில் 120க்கும் அதிகமானோர் பிள்ளைப் பேறின் போது உயிர் இழந்தனர். ஆனால் தற்போதைய புள்ளி விபரப்படி ஒரு லட்சம் பெண்கள் கருவுறும்போது அதில் பத்துக்கும் குறைவானவர்களே குழந்தை பிறக்கும் போது உயிர் இழக்கின்றனர்.

மேலும் முறையற்ற பாரம்பரிய பிரசவ முறைகளால் பெண்கள் மோசமான முறையில் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சினிமாவில் கர்ப்பிணி ஒருவரை காட்டினால் அவர் அநேகமாக இறந்து விடுவதாகத் தான் திரைப்படம் அமைந்திருக்கும். ஆனால் இன்று குழந்தைப் பேறு என்பது பெரும்பாலான படங்களில் ஒரே பாடலில் முடிந்து வடுகிறது.

 மேலும் பெரியம்மை நோயை ஒழித்தது, போலியோவை ஒழித்தது, தொழுநோயை ஒழித்தது, பாம்புகடிக்கு மருந்து, பெரும்பாலான நோய்களுக்கு தீர்வுகள், வலிநீக்கிகள் போன்றவை ஆங்கில மருத்துவத்தின் சாதனையாகும்.

 100 ஆண்டுகளுக்கு முன்னர் ஒருவருக்கு குடல்வால் பாதிக்கப்பட்டால் அவர் வலியால் துடித்து இறப்பதைத் தவிர வேறு வழிஇல்லை. ஆனால் இன்று 3 நாள் மருத்துவ கவனிப்பில் வலி இல்லாமல் அறுவை சிகிச்சை செய்து நலமாகி வருகின்றனர்.

 இவ்வாறு இந்தப் பட்டியல் மிக நீண்டதாகும். நீங்கள் கண்ணாடி அணிந்து இதனை படித்துக் கொண்டிருந்தால் அதனை கழட்டி விட்டு இந்த ஸ்கிரினை சற்று நேரம் வாசிக்கவும், இயல்பாக அறிவியலின் அற்புதம் உங்களுக்குப் புரிந்து விடும்.

குறிப்பு : இந்த கட்டுரைக்கு மறுப்பு எழுத முனைபவர்கள் மருத்துவமனைகளின் கொள்ளைகளை விளக்கி அதனால் முழுமையாக அறிவியலை ஒழித்துக் கட்டுவோம் என்று எழுத முனைய வேண்டாம். ஏனெனில் ‘உலக மயத்தில் அனைத்தும் விற்பனைக்கே’ என்ற அடிப்படையில் மருத்துவமும் வியாபாரமயமாகி உள்ளது. எடுத்துக்காட்டாக எண்ணெய் நிறுவனங்கள் கடுமையான அரசியல் செய்து மக்களை சுரண்டுகின்றன என்பதால் எல்லோரும் வாகனங்களைப் புறக்கணித்து நடந்து செல்ல முடியாது. உலக அரசியலும் அறிவியல் வளர்ச்சியும் ஒன்றோடு ஒன்று இணைந்தது. அதனால் மாற்று அரசியல் தேடுவோர் அறிவியலைப் புறக்கணித்து மூடநம்பிக்கையை ஆதரிக்க வேண்டிய அவசியம் இல்லை.

- மருத்துவர் ஜானகிராமன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
www.facebook.com/wisdomram

Pin It