சர்க்கரை நோயால், கண், இருதயம், சிறுநீரகம், பாதங்கள் உள்ளிட்ட உடலில் வெவ்வேறு பாகங்கள் பிரச்னைக்கு உள்ளாகின்றன.

உலகில் வாழும் 25 சதவீத சர்க்கரை நோயாளிகளின் பாதங்களில் பிரச்னைகள் உள்ளன. ஆகவே, சர்க்கரை நோயாளிகள், தங்கள் பாதங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதுதான் இந்த ஆண்டு பிரச்சாரத்தின் நோக்கம்.

5 முதல் 15 சதவீத சர்க்கரை நோயாளிகள் தங்கள் வாழ்நாளில் ஏதாவது ஒரு காலகட்டத்தில், கால்களில் ஏதாவது ஒரு பாகத்தை இழக்க வேண்டிய அபாயத்தில் உள்ளனர். ஒவ்வொரு முப்பது வினாடிக்கும் ஒருவரது காலை சர்க்கரை நோய் பறித்துக்கொள்கிறது என்றும் புள்ளி விபரங்கள் பயமுறுத்துகின்றன.

சர்க்கரை நோயாளிகளின் கால்களில் வரும் சாதாரண புண்கள் கவனிக்கப்படாமல் விடுவதால் தான் அவை, கால்களை நீக்கும் அளவுக்கு முற்றிவிடுகின்றன. உலகில் கால்களை இழப்போரில் 70 சதவீதத்தினர் சர்க்கரை நோயாளிகள் என்பது வருத்தத்துக்கு உரிய விஷயம். வளர்ந்த நாடுகளில் உள்ள நோயாளிகளில் 5 சதவீதம் பேருக்கு கால்களை இழப்போர் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கிறது.

வளரும் நாடுகளில் உள்ள சர்க்கரை நோயாளிகளில் 40 சதவீதம் பேர் கால்கள் தொடர்பான பிரச்னைக்கு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். இவர்களில் கவனக்குறைவுடன் நடந்து கொள்வோர் கால்களை இழக்கும் அபாயம் ஏற்படுகிறது.

சர்க்கரை நோயாளிகளுக்கு கால்கள் இழப்பு என்பது ஒரே நாளில் நடந்துவிடுவது அல்ல. முதலில் சாதாரண புண்களாக இருக்கும்போதே அவர்கள் உரிய கவனம் செலுத்தினாலே, வரவிருக்கும் ஆபத்திலிருந்து அவர்கள் தப்பிவிட முடியும்.

ஆறு சர்க்கரை நோயாளிகளில் ஒருவருக்கு வாழ்வில் ஏதாவது ஒரு கட்டத்தில் கால்களில் புண்கள் ஏற்படுகின்றன. இது சரியான நேரத்தில் கவனிக்கப்படும் பட்சத்தில் 49 முதல் 85 சதவீத கால்கள் நீக்கப்படுவதை தவிர்த்துவிடலாம். சரியான நேரத்தில் மருத்துவம் பார்த்த பல நோயாளிகள் தங்கள் கால்களை பாதுகாத்திருக்கின்றனர்.

2003 கணக்கின்படி உலகம் முழுவதும் இந்த நாட்பட்ட நோயால் அவதிப்படுவோர் எண்ணிக்கை ஏறத்தாழ 20 கோடியை எட்டியது. 2020ல் இந்த எண்ணிக்கை 33 கோடியாக உயரும் என்று கணக்கிடப் பட்டுள்ளது. ஆண்டுதோறும் 30 லட்சம் பேர் சர்க்கரை நோய்க்கு பலியாகி வருகின்றனர். இந்தியாவில் 3.2 கோடிப்பேர் சர்க்கரை நோயாளிகள்.

சர்க்கரை நோயாளிகளில் பலர் தங்களுக்கு சர்க்கரை இருப்பது தெரியாமலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். எளிய பரிசோதனை மூலம் தங்களுக்கு சர்க்கரை இருக்கிறதா இல்லையா என்பதை அவர்களால் தெரிந்துகொள்ள முடியும்.

செய்ய வேண்டியது... செய்யக்கூடாதது...

1. கால் மரத்துப் போன உணர்வு தென்பட்டால் உடனே டாக்டரை அணுக வேண்டும். உணர்ச்சியற்ற நிலையில் சிறிய புண்கள் ஏற்பட்டால் அதன் வலி தெரியாது.

2. கால்களை சோப்புப் போட்டு சுத்தம் செய்ய வேண்டும். உலர்ந்த நிலையில் பார்த்துக்கொள்ள வேண்டும்.

3. நகங்களை வெட்டி சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும்.

4. உங்கள் பாதங்களை டாக்டரிடம் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். அவரது ஆலோசனைப்படி, கால்களுக்கான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

5. சரியான அளவுள்ள செருப்பு, ஷீ அணிய வேண்டும். இறுக்கமான சாக்ஸ் அணியக்கூடாது.

6. உங்கள் கால்களை சூடான தண்ணீர் உள்ள பாட்டில் மூலம் வெதுவெதுப்பாகக் முயற்சிக்க வேண்டாம்.

7. வெறும் கால்களுடன் நடப்பதை தவிர்த்து விடுங்கள். சூடான தரைமீது வெறுங்கால்களுடன் நடப்பதை அறவே தவிர்த்துவிடுங்கள்.

8. உங்கள் கால்களில் உள்ள புண்களை குணப்படுத்த நீங்களாகவே ஏதும் முயற்சி செய்ய வேண்டாம்.

9. உடல் பருமனைத் தவிர்த்துவிடுங்கள். புகைப்பிடிப்பதை தவிர்த்து விடுங்கள். கால்களுக்கு ரத்தம் செல்வதை இது தடுக்கும்.

10. சர்க்கரை நோய் உள்ள பெண்கள், கால் ஆபரணங்களை முடிந்தளவில் தவிர்த்துவிடுவது நல்லது.


நன்றி: மீனாட்சி மருத்துவ மலர்

Pin It