அண்மையில் நடந்த சில நிகழ்வுகளைத் தொடர்ந்து, மரபுவழி மருத்துவத்திற்கு ஆதரவாக வாதிடும் போக்கு, படித்த, ஓரளவு சம்பாதிக்கிற (மாதச்சம்பளம் வாங்குகிற) நடுத்தர வர்க்கத் தமிழக மக்களிடையே பரவலாகக் காணப்படுகிறது. அவர்கள் கருத்துப்படி, நம் முன்னோர்கள் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்து வந்ததால், அவர்களது வாழ்க்கை இனிமையும் வசந்தமும் நிறைந்ததாகவும் இருந்தது. பசி பட்டினி ஏதுமில்லை. பேறுகாலம் சுகமாகவும் (சுகப்பிரசவம்) இனிமையாகவும் இருந்தது. உண்மையில், இவர்கள், தங்களின் தாத்தா - பாட்டிகளுடன் உரையாடி யிருப்பார்களா என்கிற ஐயமே இந்தக் கட்டுரைக்கான கரு!

pregnant lady 351நமது தாத்தா-பாட்டி காலத்திலேயே (சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு) கூட, பெரும் பண்ணையார் களைத்தவிர மீதியிருந்த அத்தனை சிறு குறு உழவர்களும், மிகக் கடுமையான உடலுழைப்பைக் கொண்டே அன்றாடம் வாழ்க்கையை நடத்தி வந்திருக்கிறார்கள். ஆற்றுப் பாசனம் தவிர்த்த மற்ற எல்லா இடங்களிலும் மழையை நம்பியே பெரும் பாலான விவசாயம் இருந்திருக்கிறது. அதிக உடலுழைப்பு, மிகக்குறைந்த வருவாய், மழை பொய்த்தால் கடும் வறுமை என்று பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில்தான் அனைவரும் வாழ்ந்திருக்கிறார்கள்.

இந்தச் சிறு குறு உழவர்கள் “பெரியவனாகி விவசாயம் பார்த்து ஓகோ ன்னு இருக்கணும்டா!” என்று தங்களுடைய மகன் - பேரன்களுக்குச் சொல்லி எங்காவது கேள்விப்பட்டதுண்டா? “நாங்கதான் இப்படிக் கெடந்து கஷ்டப்படுறோம், நீங்களாவது படிச்சி முன்னேறணும்பா” என்றுதான் அடித்தட்டு வர்க்கத்திலிருந்த நம் தாத்தாவும் பாட்டியும் நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், இன்று படித்து முன்னேறிய, நடுத்தர வர்க்கமாக மாறியுள்ள பலரும் தங்களுக்கு இப்போது இருக்கும் பொருளாதார பலத்தின் நம்பிக்கையால், நிலம் வாங்கி விவசாயம் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்து விடலாம் என்று நினைக்கிறார்கள். நல்லது, அது உங்களது தனிப்பட்ட ஆசையாக இருக்கலாம்.

ஆனால் அதுதான் உங்கள் தாத்தனும் பாட்டியும் விரும்பிய வாழ்க்கை என்பது போல் ‘ஜோடிக்காதீர்கள்’. அவர்கள் விருப்பம் இதுவல்ல! அறிவியல் கண்டுபிடிப்புகள் இல்லாத காலத்தில் அவர்கள் உடலுழைப்பை மட்டுமே நம்பி வாழ வேண்டியிருந்தது. அதனால் அவர்கள் உடல் வலுவுள்ளவர்களாக இருந்திருக்கலாம். உங்கள் உடலை வலுவாக்க வேண்டுமெனில் உடற்பயிற்சி செய்யுங்கள், போதும் !

சுகப்பிரசவம் - வாங்க பூமிதிக்கப் போகலாம்

பலரும் ‘சுகப்பிரசவம்’ என்றவுடனே ‘பூ’ மிதிப்பதற்கு, கவுண்டமணி கிளம்புகிற மாதிரிப் பேச ஆரம்பித்துவிடுகிறார்கள். ஆனால், பேறுகாலம் அப்படி இல்லை. ஒவ்வொரு குழந்தைப்பிறப்பும் ஒரு ‘பேராபத்து’தான்! குழந்தைப் பிறப்பில் என்ன மாதிரியான சிக்கல்கள் ஏற்படும் என்று ஊகிக்க இயலாது. தலை திரும்பவில்லை, நஞ்சுக்கொடி சுற்றல், அளவுக்கதிகமான இரத்தப்போக்கு, குறைப்பிரசவம் என்று, கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலும் குழந்தைப் பிறப்பின்போது ஏற்பட்ட ஏதோ ஒரு உயிரிழப்பாவது கட்டாயம் இருந்திருக்கும். சில இடங்களில் தாய் இறந்திருப்பார்.

அக்காலங்களில் 5- க்கும் மேல் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வது பல குடும்பங்களிலும் நடந்த ஒன்றுதான். அதற்கான உழைப்பும் உடலுறுதியும் இருந்தது என்பதை மறுக்க இயலாது. ஆனால், 10 குழந்தைகள் பெற்றால் 8 குழந்தைகள்தான் மிஞ்சியிருக்கும். இதெல்லாம் இப்போதும் நாம் கேட்டுத் தெரிந்துகொள்ளக்கூடிய செய்திகள்தான். நம் பாட்டிகளிடம் கேட்டால் இப்போதும் சொல்வார்கள், “அப்பெல்லாம் எங்கப்பா ஆஸ்பத்திரி இருந்துச்சு, பக்கத்திலயே ஆஸ்பத்திரி இருந்திருந்தா உசுரக் காப்பாத்தியிருக்கலாம்”. இன்று மருத்துவ முறைகள் வளர்ந்துவிட்டன. மருத்துவமனைகள் பரவிவிட்டன.

தமிழகத்தில் 1,00,000 பிறப்பில் 62 இறப்பு என்கிற, வளர்ச்சியடைந்த உலக நாடுகளோடு போட்டிபோடுகிற MMR (Maternal Mortality Ratio) இருக்கிறதென்றால் அது இந்த அலோபதி மருத்துவத்தினால்தான், பாட்டி காலத்து மரபு வழி வைத்தியத்தால் அல்ல. இதுபோன்ற மருத்துவம் சார்ந்த புள்ளிவிபரங்களெல்லாம் தீவிரத் தமிழ்த்தேசியவாதிகளுக்கும் பிற்போக்கு ஹீலர் வகையறாக்களுக்கும் ஒரு பொருட்டே அல்ல.

ஹீலர் பாஸ்கர் கைதுக்குப் பின்:

யார் இந்த ஹீலர் பாஸ்கர்? தமிழ்த்தேசியர்கள் ஆதரிக்கிற ‘மரபுவழி’ மருத்துவத்திற்கும் இவருக்கும் என்ன தொடர்பு? என்று அவரது இணையதளத்தில் போய்ப் பார்த்தால், யோகா, ஆன்மிகம், பிராணாயாமம், செவிவழித் தொடு சிகிச்சை இப்படி பலவற்றையும் கலந்துகட்டிக் கொடுக்கிற ஒரு ‘Mixer’ தான் இந்த ஹீலர் பாஸ்கர். அவருடைய இணைய தளத்தில், Guru Gallery (http://anatomictherapy.org/guru-gallery.php#) என்று சிலரைப் பட்டியலிட்டு வைத்திருக்கிறார்.

ஐந்தாவது இடத்தில் இருப்பவர் ரவிசங்கர் (‘உலக கலாச்சார விழா’ என்று நடத்தி யமுனை நதிக்கரையை நாசம் செய்த அதே ரவிசங்கர்தான்). ‘யாரையோ காணவில்லையே’ என்று அந்த பன்னிரெண்டு குருக்களின் பட்டியலையும் திரும்பத் திரும்பப் பார்த்தேன். நம்மாழ்வார் - ஹீலர் பாஸ்கருடைய குருக்கள் பட்டியலில் இல்லை. (ஐயகோ! ஹீலர் பாஸ்கரை ஆதரிக்கிற போலித் தமிழ்த்தேசியவாதிகளுக்கு இது தெரியுமா?)

ஜக்கி வாசுதேவ், ரவிசங்கர் இவர்கள் 1,000, 5,000 50,000 என்று மேல்தட்டு மக்களுக்கான ழபைா ஊடயளள திட்டத்துடனும் அணுகுமுறையுடனும் இயங்கும் போது, நடுத்தர வர்க்க மக்களை 200, 300, 500 என்று இதே முறையில் வியாபார ரீதியில் அணுகும் ஒரு ஆள்தான் (Mixer) இந்த ஹீலர் பாஸ்கர். இவர் தன்னுடைய குருக்கள் என்று பட்டியலிடுகிற யோகா, ஆன்மிகம், மருத்துவம் (எல்லாம் கலந்துகட்டின சிலபேர்) என அந்தப் பட்டியலைப் பார்த்தாலே இது புரிந்துவிடும்.

போலிகளுக்குப் போலிஅரசியல்களின் ஆதரவு

ஹீலர் பாஸ்கர் கைதைக் கண்டித்து தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் அறிக்கையில், அதன் பொதுச்செயலாளர் பார்ப்பனரான கி.வெங்கட்ராமன் பின்வருமாறு கூறியிருக்கிறார்.

“இதற்கு முன்பு மரபுவழி சுகப்பிரசவத்தில் தாயோ, குழந்தையோ இறந்தது அரிதான நிகழ்வாகும்! ஒரு தலைமுறைக்கு முன்பான எந்தக் குடும்பத்தை விசாரித்தாலும், இந்த உண்மையை உறுதி செய்ய முடியும்”

இவரது தாய் - தகப்பன் வயதில் இருப்பவர்களிடம் எத்தனை பேரிடம் இந்தக் கணக்கை எடுத்தார் என்று தெரியவில்லை.

இப்படி ஒரு அபாண்டமான பொய்யை எந்தக் கூச்சமும் இன்றி எழுதிவிட்டும் பேசிவிட்டும் செல்கின்றனர் தமிழ்த்தேசியவாதிகள். தாங்கள் தூக்கிப் பிடிக்கும் தமிழ்த்தேசியத்தின் மக்களுக்கு சிறிதளவாவது நேர்மையோடு இருப்பார்கள் எனில், தங்கள் பாட்டி - தாத்தன்களுக்கு எத்தனை சுகப்பிரசவம் நிகழ்ந்தது? பிரசவங்களில் எத்தனை தாய் - சேய் இறந்தார்கள்? என்று கணக்கெடுத்துப் பார்க்க வேண்டும். கணக்கெடுக்கவும் வேண்டாம், நான்கைந்து பேரிடம் விசாரித்தாலே போதும். இன்னும் அவர் சொல்கிறார்,

“அறிவியல், பகுத்தறிவு, முற்போக்கு, நவீனம் என்ற பெயரால் திணிக்கப்படும் ‘வளர்ச்சி’ வாதத்தின் (Growthism) ஒரு சீரழிவே இச்செயல்!”

இதேபோல்தான் ‘காவிச்சங்கிகள்’ தங்களுடைய மூடத்தனமான மதவாதங்களுக்கு முட்டுக் கொடுக்கிறார்கள். ·

1,00,000-க்கு 62 இறப்பு விகிதம் கொடுக்குற மருத்துவ முறை வேண்டுமா? அல்லது · 10 பிரவத்துல 1 அல்லது 2 இறப்பு விகிதம் கொடுக்கிற மருத்துவ முறை வேண்டுமா? என்கிற கேள்வியை குழந்தை பெற்றுக் கொள்ளப்போகும் பெண்களிடத்தில் கேட்டுவிட்டு முடிவை அவர்களிடமே விட்டுவிடலாம்.

‘நாம் தமிழர்’ தம்பிகளின் அண்ணன் சீமானும் இதேமாதிரி எந்தப் புள்ளவிபரங்களும் இல்லாமல் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

“அலோபதி மருத்துவத்தில் சிசேரியன் செய்யும்போது நிகழும் மரணங்களை வைத்து எவரும் ஆங்கில மருத்துவமே தவறென வாதிட முன்வருவதில்லை”

அடுத்து வணிகநோக்கம் பற்றிப் பேசுகிறார்,

“இதனை அடிப்படையாக வைத்து மரபுவழி மருத்துவத்தையே அடிப்படை வாதமாகவும், அறிவற்ற செயலாகவும் நிறுவ முற்படுவோரின் செயலானது மகப்பேறினைப் பெரும் வணிகமாக்கி அதன்மூலம் இலாபமீட்டத் துடிக்கும் தனியார் முதலாளிகளின் இலாப வேட்டைக்குத் துணைபோகிற கொடுஞ்செயலாகும்”

(சீமான் அண்ணே, அப்படியெனில் நீங்கள் உங்கள் தம்பிகளைப் போகச் சொல்ல வேண்டிய இடம் அரசு மருத்துவமனைகளுக்கு) இயற்கை மருத்துவம், மரபுவழி மருத்துவம் என்று ஹீலர் பாஸ்கரின் கைதைக் கண்டித்து அறிக்கை விடுபவர்கள் மறந்தும் எந்தப் புள்ளிவிபரங்களையும் கொடுப்பது கிடையாது. மரபுவழி மருத்துவத்தை ஆதரிப்பதற்காக இவர்கள் வைக்கும் மிக முக்கியமான காரணம் ‘அலோபதி மருத்துவம் வணிகமயமாகிவிட்டது, இலாபமீட்டும் நோக்குடன் மரபுவழி மருத்துவத்திற்கு எதிராகச் செயல்படுகிறார்கள்’ என்பது.

இதுதான் இவர்களின் ஆதங்கம் எனில், இவர்கள் அரசு மருத்துவமனைகளுக்கு அல்லவா செல்ல வேண்டும்? அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு பார்ப்பதற்கு எந்தப் பணமும் வாங்குவ தில்லை. அதோடு, அரசு மருத்துவமனைகளில் கருவுற்ற காலத்திலிருந்தே பதிவுசெய்து மகப்பேறும் பார்ப்பவர்களுக்கு அரசு உதவித்தொகையும் வழங்குகிறது!

ஆனால், ‘மிடில் கிளாஸ்’ மாதவன்கள், தங்கள் ‘கெளரவம்’ என்று எதையோ நினைத்துக் கொண்டு, அரசு மருத்துவமனைகளுக்குச் செல்லாமல் இருப்பது தான் இன்றைய நிலை! ஒருபுறம் ‘அதிகக் கட்டணம்’ என்று வாதிட்டுவிட்டு, மறுபுறம் ‘மரபுவழி மருத்துவம்’ சிறந்தது என்றும் வாதிடுவது முன்னுக்குப் பின் முரணானது. அலோபதி வணிகமாகிவிட்டது என்பவர்கள், மருத்துவமுறை சரி என்று ஏற்றுக் கொண்டு, இலவசமாக மருத்துவம் பார்க்கும் அரசு மருத்துவமனைகளுக்குச் செல்லவேண்டும். அலோபதி மருத்துவமே மோசமானது என்பவர்கள் அதற்கு ஆதாரமாக ஏதேனும் புள்ளிவிபரங்களைக் கொடுக்க வேண்டும்.

ஹீலர் பாஸ்கர் கைது நிகழ்வுகளுக்குப் பின்னான விவாதங்களின் போது, பல்வேறு அரசு மருத்துவமனைகளின் தரம்வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகள் படங்களாகப் பகிரப்பட்டுவருகின்றன. தனியார் மருத்துவமனைகளில் அதிகக் கட்டணம் என்று வாதாடுகிறவர்கள், இலவசச் சிகிச்சையளிக்கும் இந்த நவீன அரசு மருத்துவமனைகளை எட்டிக் கூடப் பார்த்திருப்பார்களா என்பது கேள்விக்குறிதான்!

மரபுவழி மருத்துவத்தை ஆதரிக்கிறவர்களிடம் வைக்கிற ஒரே கேள்வி இதுதான். நீங்கள் உங்கள் தாத்தா-பாட்டியிடம் அந்தக் காலத்துச் சிகிச்சை முறைகளையும், பிள்ளைப்பேறுகால இறப்பு குறித்தும் எப்போதாவது பேசியிருக்கிறீர்களா? பேசுங்கள்.

Pin It